மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்

This entry is part 33 of 41 in the series 25 செப்டம்பர் 2011

முனைவர்.மு.முருகேசன்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி,
வடசென்னிமலை,ஆத்தூர்.

வகுப்பறைகளை விவாத களங்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனைத் தாக்கத்தை கல்வியாளர் பாவோலோ ப்ரையரிடமிருந்தும், பேராசிரியர் மாடசாமி இடமிருந்தும் நான் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது அதை செயல்படுத்துவதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கூறப்படும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை 21 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட இருக்கும் சூழல் என் மனத்தை கனமாக்கியது. அந்த நினைவோட்டத்தின் ஒரு கட்டமாக மரண தண்டனை கொடுப்பது சரியா? தவறா?என்ற விவாதத்தை வகுப்பறையில் தொடங்க முடிவு செய்தேன்.

முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களிடம் விவாத பொருளை முன்வைத்த போது நான் அதை சொல்லி முடிப்பதற்குள். “சரிதான்’’ என்று பலக்குரல்கள் ஒலித்தன. அவர்கள் சொன்ன விதம் இது என்ன? முட்டாள் தனமான கேள்வி என்று என்னை கேட்பதுபோல் இருந்தது நான் அவர்கள் சொன்னது காதில் விழாதது போல் நீங்கள் யோசியுங்கள் அதற்குள் நான் ஒரு கதை சொல்கிறேன் என்று சொல்லி ஒரு சிறிய ஜென் கதையை சொன்னேன். அது விவாத பொருளுடன் தொடர்பில்லாத கதைதான் ஆனாலும் அவர்களுக்கு சிந்திப்பதற்கு நேரம் கொடுப்பதற்காக அந்த கதையை சொன்னேன்.

கதை முடிந்ததும் மரண தண்டனை கொடுப்பது சரிதான் என்று சொல்கிரீர்கள் அதற்கு காரணம் என்ன? என்று கேட்டேன். “குற்றங்களை தடுப்பதற்காக’’ என்று தொடங்கினார் ஒருவர். “குற்றவாளிகளை தண்டிப்பது தானே முறை’’ என்று தொடர்ந்தார் இன்னொருவர். “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான வழி’’ என்றார் அடுத்தவர். “பத்துக்கொலை செய்தவரை தூக்கிலிடாமல் விட்டால் அவர் இன்னும் பத்துக்கொலை செய்யமாட்டாரா?’’ என்று கேட்டார் ஒருவர். “தற்காப்பிற்காக கொலை செய்பவர்களை மன்னிக்கலாம்’’ திட்டமிட்டு அதை செய்பவர்களை விடக்கூடாது’’ என்று வாதத்திற்கு வழு சேர்த்தார் இன்னொருவர்.

சலசலப்புக்கிடையே “ஒருத்தன் குற்றம் செஞ்சா அதுக்கு அவமட்டுமா காரணம் எத்தனையோ பேர்காரணமா இருக்காங்க’’ என்று மெலிதாக ஒரு குரல் கேட்டது. அவர் சொன்னதை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர் அருகே சென்று “நீங்கள் என்ன சொல்கிரீர்கள் என்றேன்’’ அவர் ஒரு தப்பு நடந்தா அத ஒருத்தர் மட்டும் செய்யரது இல்ல அதுக்கு எத்தனையோபேர் துணையாவும் தூண்டுகோலாவும் இருக்காங்க. கடைசியில் அவர் மட்டும் தான் குற்றவாளியா ஆயிராரு என்றார், “ஆமாம்’’ என்று ஒன்று இரண்டு குரல்கள் கேட்டன. பெரிய பெரிய குற்றம் செய்யறவங்களாம் தப்பிச்சிக்கிறாங்க, சின்ன குற்றம் செய்யறவங்களாம் மாட்டிக்கிறாங்க’’ என்று ஒருவர் தனக்கு தெரிந்த வகையில் மரண தண்டனைக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்தார். “குற்றமே செய்யாதவர்கள் கூட தவறான விசாரணையால் தண்டனை பெறுகிறார்களே அவர்களின் உயிரை பறித்தப் பிறகு உண்மை தெரிந்தால் அவர்களின் உயிரை திருப்பித்தர முடியுமா’’ என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார் ஒருவர். “தனி மனிதனே கொலை செய்யக்கூடாது என்னும் போது அரசாங்கம் மட்டும் சட்டத்தின் பெயரால் அதை செய்யலாமா’’ என்று கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தார் ஒருவர். “பழிக்கு பழிக்கு வாங்கரது சரியில்லையே’’ என்று இதே கருத்தை தன்மொழியில் சொன்னார் இன்னொருவர். “தவறு செய்பவர் திருந்த வாய்பளிக்கப்பட வேண்டும் அல்லவா இதற்கு மரண தண்டனை எதிராக இருக்கிறதே’’ என்றார் ஒருவர்.

ஒரு மனிதன் குற்றவாளியாக மாறுவதற்கு அவன் மட்டும் காரணம் இல்லை சமூக பின்புலம்தான் காரணமாக இருக்கிறது என்பதை நான் கொஞ்சம் விளக்கமாக சொல்ல விரும்பினேன். “என்னை எடுத்துக்கொள்ளுங்கள் நான் ஒரு கல்லூரி ஆசிரியராக உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் மட்டும் அல்ல என்குடும்பம் நான் படித்த பள்ளி, கல்லூரி எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் என்னுடன் பழகிய நண்பர்கள் உதவி செய்த மற்றவர்கள் எல்லோரின் துணையோடுதான் நான் இந்த பணிக்கு வந்து இருக்கிறேன்’’ என்று சொன்னேன். இதை மாணவர்கள் ஒப்புக்கொண்டார்கள். “அப்படியானல் ஒரு மனிதன் நல்ல நிலைக்கு வருவதற்கு சமூகம் காரணமாக இருக்கிறது என்றால் அவன் குற்றவாளியாக மாறுவதற்கும் சமூகம் தானே காரணமாக இருக்க முடியும்’’ என்றேன். இதை யாரும் மறுக்க வில்லை.

விவாதம் தொடர்ந்தது கருத்துகள் வந்தன, கேள்விகள் எழுந்தன, விடைகளும் கிடைத்தன. “அப்ப நீங்க சொல்றத பார்த்த குற்றவாளிகள தண்டிக்க வேண்டியது இல்ல இங்கிறீங்களா’’ என்றார் ஒருவர். “அப்படி இல்லை அவர்கள் குற்றத்தை உணரும் வகையிலும் திருந்தி வாழ வழி செய்யும் வகையிலும் தண்டனைகள் அமைய வேண்டும்’’ என்று மாணவர்கள் முன்பு சொன்னதையே நான் மீண்டும் சொன்னேன். “மிக தெளிவாக திட்டமிட்டு கொலை செய்பவர்கள் மிக குறைவாகத்தான் தண்டனை பெறுகிறார்கள்’’ என்றார் ஒருவர். எப்படி சொல்கிறீர்கள் என்றேன். “விபத்து என்ற பெயரில் வாகனங்களால் மோதி கொலை செய்பவர்களுக்கு வெறும் 500 ரூபாய் தான் அபராதம், வேறு எந்த தண்டனையும் இல்லை’’ என்றார் அவர்.

“காவல்துறையின் நடவடிக்கைகளும், மக்களின் செயல்பாடுகளும், குற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன் அமைவது இல்லை. குற்றம் நடந்த பிறகு தான் காவல் செய்கிறார்கள்’’ என்றார் ஒருவர். மரண தண்டனை கொடுப்பது சரிதான் என்று தொடர்ந்து வாதாடிக்கொண்டிருந்த ஒருவர், “குற்றம் செய்வதை விட அதை தடுக்காமல் இருப்பது பெரும் தவறா’’ என்று கேட்டார். “கண்டிப்பாக அது தான் பெரும் தவறு’’ என்று மற்றவர்களும் நானும் சொன்னோம். “அப்படியானல் அரசாங்கத்தை தான் முதலில் தண்டிக்க வேண்டும்’’ என்றார் அவர். அனைவரும் சிரித்தார்கள் .

ஒரு பெண் மாணவர் விவாதத்தை வேறொரு தளத்தில் இருந்து அணுகினார். பள்ளி, கல்லூரிகளிலும் பிற இடங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை என்ன செய்வது என்று அவர் கேட்டார். இதை தொடர்ந்து தர்மபுரி பேருந்து எரிப்பு, கும்பகோணம் தீ விபத்து, சென்னையில் சிறுவன் ராணுவ அதிகாரியால் சுட்டுக்கொன்ற நிகழ்வு போன்றவற்றை மாணவர்கள் ஒவ்வொருவராக நினைவு படுத்தினார்கள். இந்த கேள்விகளுக்கு நான் நேரடியாக பதில் சொல்லவில்லை. உண்மையை சொன்னால் எனக்கு சொல்ல தெரியவில்லை. “பொதுவாகவே நடைமுறையில் உள்ள மரண தண்டனை, சிறை தண்டனை, தண்டம் விதித்தல் முதலிய தண்டனை முறைகளை மாற்றி நாகரீக வளர்ச்சிக்கு ஏற்பவும், குற்றவாளிகளை சிந்திக்க வைக்கும் வகையிலும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடையும் வகையிலுமான புதிய தண்டனை முறைகளை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குற்றங்களை தடுக்க வாய்ப்பு ஏற்படும்’’ என்று சொன்னேன்.

விவாதத்தின் இறுதியில் நான் பட்டிமன்ற நடுவராகவோ வழக்குமன்ற நீதிபதியாகவோ மாறி தீர்ப்பு எதையும் சொல்லவில்லை. இது பற்றி மேலும் சிந்தியுங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது படியுங்கள் என்று மட்டும் சொன்னேன்.

நான் வாதத்தை மாணவர்களின் முன்பு கொண்டு செல்ல நினைத்தபோது அவர்கள் மரண தண்டனை கொடுப்பது சரி என்று மட்டும் தான் பேசுவார்கள். அவர்களுக்கு மாற்றுச் சிந்தனையை உருவாக்குதற்காக உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிர்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை தடைசெய்யப்பட்டுவிட்டது. இந்திய அரசியல் அமைப்பிலும் நான்கு காரணங்களுக்காக மட்டுமே மரண தண்டனை கொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்களை சொல்லி அவர்களின் சிந்தனையை தூண்டலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அவர்கள் விவாதத்தை கூர்மைப்படுத்தினார்கள்.

மாணவர்கள் தங்களின் விவாதத்தில் “உயிர்களை கொல்லுவது பாவம்’’ என்ற மத கொள்கைக்குள் நுழையவில்லை. “மனித நேயத்தின் படி மரண தண்டனை தவறு’’ என்று கூட சொல்லவில்லை. சமூகவியல் பிண்ணனியிலே தான் விவாதங்களை முன் வைத்தார்கள்.

இது கிராமப்புற கல்லூரி எனவே இவர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற விவாதத்தில் பங்கேற்று இருக்க வாய்ப்பு குறைவு அதே போல் இது தொடர்பான நூல்களை படித்து இருக்கவும் வாய்ப்பு இல்லை. ஆனாலும் அவர்களுடைய கருத்துக்கள் சட்ட வல்லுநர்களுக்கு இணையாகவும், அறிஞர்களுக்கும் இணையாகவும், மக்கள் உரிமை இயக்க தவறுக்கு இணையாகவும் இருப்பதை காண முடிந்தது.

இந்த விவாதம் இரண்டு அடிப்படைகளில் முழுமை அடையவில்லை.

ஓன்று வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் விவாதத்தில் பங்கு ஏற்கவில்லை. சில பெண் மாணவர்கள் விவாதத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது போல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னொன்று விவாதம் நடந்த மொத்த நேரத்தில் பாதி நேரத்திற்கு மேல் நான் தான் பேசியிருக்கிறேன்.

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)தற்காலப் பார்வையில் திருக்குறள்
author

முனைவர்.மு.முருகேசன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Varatharaajan. R says:

    The discussion about the execution of death sentence to the murderers of Rajiv Gandhi is most unfortunate. In fact there is a conspiracy to protect Afzal Guru and similar terrorists, which is probably master-minded by senior most politicians of the UPA government. Showing mercy for those who executed the brutal murder of our PM and many more innocent people is to be condemned with strongest possible words.

  2. Avatar
    விருட்சம் says:

    இந்தக் கட்டுரை எனக்கு என் கல்லூரியில் நடந்த இது போன்ற ஒரு விவாதத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. பழிவாங்குதல் என்பதன் பின்னணியில் ஒரு துணைப்பாடம். அதை வைத்து ஆசிரியர் மாணவர்களை உங்களைப் போல் விவாதம் செய்ய ஊக்குவித்தார்.

    இதில் ஒருவித உளவியல் இருப்பதாக எனக்குத் தோன்றும். மன்னித்து விடுவது என்ற கருத்தை பலமாக முன்வைப்பவர்களை பொதுவாகப் பார்த்தால் பிரச்சனையின் பாதிப்பு அடுத்தவருக்கு எனும் போது இவர்கள் முன் வந்து மன்னிப்பு வழங்குவார்கள். ஆனால் அது போன்ற என்றில்லாமல் அதில் ஒரு பங்கு கூட இல்லாத ஆனால் பாதிப்பு தனக்கு எனும் போது அணுகுமுறை முற்றிலுமாக மாறிவிடும்.

    இதை எல்லாத் தளத்திலும் பார்க்க முடியும்.

  3. Avatar
    காவ்யா says:

    ஆசிரியரின் பணி மாணவர்களின் சுதந்திரச்சிந்தனையை வளர்ப்பது, அல்லது வளர்க்கும் சூழலை உருவாக்குவது. மாணவர்கள் சமூகத்திலிருந்து வருவதால் அதன் எண்ணத்தை தம் எண்ணமாக முதலில் கொள்வார்கள். அவர்களை அவ்வெண்ணத்தையும் காயதல் உவத்தலின்றி ஆராயும் திறனும் தைரியமும் உருவாக்க வைப்பது ஆசிரியரின் கடமை. இதை ஒரு நாளில் செய்து விட முடியாது. மேலும், ஒரு பெரிய சர்ச்சைக்குள்ளான கருவை விவாதிக்க முதலிலேயே கொடுப்பது குருவித்தலையில் பனங்காயை வைப்பது போலாகும். அப்படியே வைக்கும்போது அவர்கள் சமூகச்சிந்தனையையே பிரதிபலிப்பார்கள். பின்னர் அங்கலாய்த்து என்பயன்?

    உங்கள் வகுப்பறையிலும் நடந்தது அதே. மாறாக சில்லாண்டுகள் அவர்களின் சிந்தனைத் திறத்தை மெருகூட்டிக்கொண்டு வந்து அவர்கள் பக்குவமடைந்த நிலையில் இப்படிப்பட்டத் தலைப்புக்களை விவாதம் பண்ணுவதே மாணவர் வளர்ச்சிக்கு நல்லது.

    தமிழ் இலக்கியத்துக்குள்ளேயே விவாதக்களங்கள் நிறைய உண்டு. சங்க இலக்கியம் சங்க காலத்தை எப்படிக் காட்டுகிறது ? என்பது பெரிய சர்ச்சைக்குரிய கேள்வி. (ஒருதலையாக, மன்னர்களின் கைப்பாவைகளாக என்றெல்லாம் சொல்கிறர்கள், மாணவர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கலள் ?) களப்பிரர் காலத்தில் ஏன் இலக்கியம் வளர்ச்சியடையவில்லை ? அவர்கள் பவுத்தத்தையும் அல்லது சமணத்தை திணித்தனரா? அவர்கள் தாய்மொழி தமிழா ? திணித்தனர் என்றால், பன்னிரு திருமுறைகள் பல அவர்கள் காலத்தில் எப்படி எழுதப்பட்டன ? தொல்காப்பியம் காட்டும் தமிழகம் எப்படிப்பட்டது ? நம் இலக்கியம் காட்டும் பெண்மை இன்று ஒத்துவருமா ? தமிழ்ச்சமூகத்தின் அடித்தள மக்களின் ஆசாபாசங்களை பண்டைத்தமிழ் இலக்கியம் எடுத்துக்காட்டியதா ? முக்கூடற்பள்ளு தலித்துகளால் பாடப்பட்டதா? அதையொட்டியே அவ்வாசிரியர் எழுதினாரா ? இக்கால தலித்தியத்திறுக்கென இலக்கியம் வந்துவிட்டதா ? அது வாதிக்க, பேசப்படுகிறதா ? திருக்குறளுக்குரையெழுதியோர் ஏன் மாறுபடுகிறார்கள் ? பரிமேழலகர் தன் பார்ப்பனீய சிந்தனையை அடிநாதமாக வைத்து உரையெழுதினாரா ? அவர் குறளின் பொருள்களைச் சிதைத்தாரா ? திராவிடத்தலைவர்கள் எனப்படுவோர் எழுதியவைகள் ஒரு சிறந்த இலக்கியமென அழைக்கமுடியுமா ? (இல்லையென்கிறா ஜெயமோகன். மாணவர்களே உங்கள் கருத்துகளைச்சொல்லுங்கள்) என்றெல்லாம் ஏராளமாக விவாதக் களங்களை தமிழ் இலக்கியத்துக்குள்ளேயே தேடி வகுப்பறைகளில் உரையாடலாம். அதன் பின்னர் இக்கால அரசியல் நிகழ்வை எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *