ஸிந்துஜா
அம்புஜம் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பதரை அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. வீட்டை விட்டுக்
கிளம்பும் போது அன்று நிச்சயம் பஸ் கிடைக்காது. ஒன்று தாமதமாகப் போய்த் திட்டு வாங்க வேண்டும் அல்லது ஆட்டோவுக்குத்
தண்டம் அழுது போக வேண்டும் என்று நினைத்துதான் விறுவிறுவென்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். காலில் போட்டிருந்த செருப்பு பல விழுப்புண்களைக் கொண்டிருந்ததால் ரொம்பவும் வேகமாகவும் நடக்க முடியவில்லை. ஆனால் அன்று கடவுளுக்கு அவள் மீது பிரியம் வந்திருக்க வேண்டும். சற்றுத் தாமதமாக வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு வந்து விட்டாள்.
பஸ் ஸ்டாப்பிலிருந்து ஐந்து நிமிஷ நடையில் பள்ளியை அடைந்து விடலாம். கையில் கனமாக இருந்த பைகள் எரிச்சலைத் தந்தன. ஒன்றில் அவள் உயிர் வாழ்வதற்குத் தேவையான மதிய உணவு இருந்தது. இன்னொன்றில் நாற்பத்தி ஐந்து மூளைகளைத் தாங்கியிருந்த
காகிதங்கள் சிறைப்பட்டிருந்தன. பள்ளி நேரத்தில் திருத்த முடியாமல் முந்தா நாள் அவள் வகுப்பு மாணவச் செல்வங்களின் விடைத்தாள்களை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது. வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று வருடங்களில் வேலை இரண்டு மடங்கு அதிகமாகி விட்டது. ஆனால் சம்பளம் என்று எறும்புக்குப் போடும் பருக்கை அளவுதான். கவர்மெண்டு பள்ளிக்கூடம் என்றால் கதையே வேறு. முழு சாப்பாடே
கிடைக்கும். ஆனால் உள்ளேயே நுழைய முடியாத இடத்தைப் பற்றி ஏங்கி என்ன பயன்? அவள் அப்பாவும் தாத்தாவும் கொள்ளுத் தாத்தாவும் அணிந்திருந்த நூல்களை வைத்து அவள் கால்களைக் கட்டிப் போட்டு
விட்ட சமூகத்தை வேண்டுமானால் காரியுமிழ்ந்து மகிழ முயற்சிக்கலாம். ஆனால் மாதாந்திர அரிசி பருப்பு காய்கறிகளை இந்தக் காரியுமிழ்தல்
கொண்டு வந்து தர முடியாது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
அவள் பள்ளிக்குள் சென்று வருகைப் பதிவேட்டில் தன் பிரசன்னத்தைக்
குறித்து விட்டு ஸ்டாஃப் ரூமில் கையிலிருந்த பைகளை வைத்தாள். இரண்டாம் பீரியடுக்குத்தான் அவள் பாடம் எடுக்க வேண்டும். அதனால் அறையை விட்டு வெளியே வந்து வராந்தாவில் நடந்தாள். பள்ளிக்குள் சுற்றி வளர்த்திருந்த மரங்களிலிருந்து வந்த காற்று முகத்தை வருடிச் சென்றது. அன்று மாலை அவள் ஒரு மணி நேரம் அனுமதி பெற்றுக் கொண்டு முன்னதாகப் பள்ளியை விட்டுச் செல்ல வேண்டும். அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்று முதல் நாள் இரவு அம்மாவும் அப்பாவும் சொன்னார்கள்..பெண் பார்க்க வருபவர்களைப் பற்றிய ஆர்வமும் உற்சாகமும் ஒரு காலத்தில் அவள் மனதில் கனவுப் பூக்களை விதைத்து மகிழ்ச்சியைப் பூக்க வைத்தன. ஆனால் அவை இப்போது ஒரு மாதிரியாக வாடி விடும் நிலையில் இருக்கின்றன. அவள் வருபவர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள விரும்பாததால் அவர்களைப் பற்றி – போட்டோ, ஜாதகப் பொருத்தம் இத்யாதிகளை – அவளது பெற்றோர்கள் எடுத்துச் சொல்லவும் அனுமதிக்கவில்லை..நேற்றிரவும் அவளை மறுநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு கெஞ்சினார்கள். இதற்கு முன்பு ஐந்து தடவைகள் விடுமுறை எடுத்துத் தினச் சம்பளங்களை இழந்துதான் மிச்சம் என்று ஆறாவது தடவை லீவுக்கு அவள் மறுத்து விட்டாள். மறுநாள் லீவு எடுக்க வேண்டுமானால் பெண் பார்க்க வருகிற கூட்டம் அவளுடைய
விடுமுறைத் தினச் சம்பளத்தைக் கொடுக்கட்டும் என்றாள். ஆனாலும்
உனக்கு ரொம்பக் குசும்புடி என்றாள் அம்மா. அவள் குரலில் இருந்தது
நிராசையா அல்லது பெருமிதமா என்று அம்புஜத்தால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவளது பார்வை வராந்தாவின் முழு நீளத்தையும் அளவெடுத்துச் சென்றது. அப்போது வராந்தாவின் முடிவிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு வருவதைப் பார்த்தாள். அங்குதான் தலைமை ஆசிரியையின் அறை இருந்தது. யாராவது அட்மிஷன் கேட்டு அல்லது டொனேஷன் கொடுக்கத் தயாராயிருந்து வந்தவனாக இருக்கும் என்று நினைத்தாள். பெரும்பான்மையான அட்மிஷன்கள் முடிந்து விட்டாலும் சில இடங்களைக் காலியாக நிர்வாகம் வைத்திருந்தது. தயவு தேவைப்படும் அரசு இயந்திரத்தின் முக்கிய ஆணிகள், அரசியல்வாதிகள் ஆகியவர்களின் கடைசி நிமிடக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அவன் வெளி வந்த இடத்திலிருந்து அவள் இருந்த இடத்துக்கு வருவதற்கு முன்னால் நடுவில் படிகளுடன் கூடிய இரண்டு பாதைகள் இருந்தன. அவன் அவற்றை உபயோகிக்காமல் அவளை நோக்கி வந்தான். அவன் பார்வை தன்னை நோக்கிக் குவிந்தி
ருப்பதை அவள் கவனித்தாள். யாராவது மாணவியின் தந்தையோ என்று அவளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவன் அவளருகில் நெருங்கிய போது அது ஒரு அப்பா முகமாக தெரியவில்லை.
அவளைப் பார்த்து அவன் வணக்கம் செலுத்தினான். அவள் பதிலுக்கு வணக்கம் செலுத்தும் போதே ஒருக்கால் இவனை நான் எப்போதாவது சந்தித்திருக்கிறேனா என்ற சந்தேகம் எழுந்து அடங்கியது.
“மேடம், குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டான் அவளருகில் வந்ததும்.
.”ஷ்யூர். ஸ்டாஃப் ரூமுக்குப் போகணும்” என்று வந்த வழியே திரும்பினாள்.
அப்போது அவர்களுக்கு எதிரே வந்த ஒரு நடுத்தர வயது மனிதர் “வணக்கம் டீச்சர்” என்றார்
அம்புஜம் அவரைப் பார்த்து “வணக்கம் சார். வழக்கமா ஈவினிங்தானே நீங்க வருவீங்க துணியெல்லாம் எடுத்துப் போட்டுக் காமிக்க?” என்று சிரித்தபடி கேட்டாள்.
“ஆமா. ஆனா இன்னிக்கி ரஞ்சிதம் டீச்சர் கூப்பிட்டனுப்பிச்சு முழுப்
பணத்தையும் குடுத்தாங்க. அவங்க எப்பவுமே இன்ஸடால்மெண்ட்லே
வாங்க மாட்டாங்க இல்லே?” என்றார்.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் தலையை அசைத்தாள்.
“அப்புறம் அந்த ரெண்டு குழந்தைகளுக்கும் ஸ்போர்ட்ஸ் டிரஸ் தச்சுக் கொடுத்துட்டேன். அவங்க போட்டுக்கிட்டு வந்தாங்கன்னா அப்படியே அசந்துடுவீங்க. அதுங்க வீட்டிலேதான் கொண்டு போய்க் கொடுத்தேன். அந்த அம்மா அழுதுட்டாங்க. என் கையைப் பிடிச்சு நன்றி நன்றின்னு சொல்லிகிட்டே அழுதாங்க. டீச்சருக்கில்லே நீங்க நன்றி சொல்லணும்னு சொல்லிட்டு வந்தேன்” என்றார் புன்னகையுடன்.
அம்புஜம் “சரி. இந்த மாசத்திலேந்தே நான் உங்களுக்கு முதல் இன்ஸ்டால்
மென்டை ஆரமிச்சிடறேன்”என்றாள்.
அவர் வேகமாகத் தலை அசைத்து “ஒண்ணும் அவசரமில்லே. அடுத்த மாசத்திலேந்து நீங்க கொடுத்தா போறும். அதுலயும் செலவிலே பாதி என் பங்கு. பாதி உங்க பங்கு” என்றார்.
“நீங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பீங்க. நீங்க நல்ல துணியா கொடுக்கறீங்க. வெலையும் நல்ல காரியத்துக்கு ஆச்சேன்னு குறைச்சுத் தரீங்க. அப்புறம் அதுக்கு மேலே பாதிப் பங்கு கொடுக்கறேன்னு என்ன பேச்சு? நீங்க ஒண்ணும் கொடுக்க வேண்டாம். சரியா? அப்புறம் பாக்கலாமா?” என்று அவருக்கு விடை கொடுத்து விட்டு நடந்தாள்.
அவன் அவளிடம் “நா அனாவசியமா மூக்கை நுழைக்கிறேன்னு தப்பா நினைச்சிடாதீங்க” என்று ஆரம்பித்தான்..
“அனாவசியமாவா இல்லையான்னு நா சொல்ல மாட்டேன். ஆனா நீங்க மூக்கை நுழைக்கப் பாக்கறது மட்டும் உண்மைதான்” என்று அவள் அவனைப் பார்த்தாள்.
அவள் அவனது கேள்வி எதுவாக இருந்தாலும் பதில் சொல்லத் தயாராக இல்லை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறாள் என்று அவன் நினைத்துப் பேசாமல் உடன் சென்றான்.
அவர்கள் ஸ்டாஃப் ரூமை அடைந்தார்கள். அவனை அங்கிருந்த ஓர் இருக்கையில் அமரச் சொல்லி விட்டுத் தண்ணீர் பாட்டிலையும் டம்ளரையும் தந்தாள்.
“ரொம்ப தாங்க்ஸ் மேடம்.i. ஒரு அட்மிஷனுக்குத் தான் வந்தேன். ‘ஹெச்.எம். மீட்டிங்கில் இருக்காங்க, கொஞ்சம் வெயிட்பண்ணனும்’னு
அவங்க ஆபீஸ்லே சொன்னாங்க. சரின்னு வெளியே வந்தேன். உங்களைப் பாத்தா டீச்சர்னு தெரிஞ்சுது.”
“அப்படி நெத்தியிலே டீச்சர்னு எழுதி ஒட்டி வச்சிருக்கா என்ன?” என்றாள் அம்புஜம்.
“நெத்தியிலே இல்லே. கழுத்திலே” என்றான் அவன் புன்னகையோடு.
அவள் திடுக்கிட்டுக் குனிந்து கழுத்தைப் பார்த்தாள். டீச்சர்களுக்கான அடையாள அட்டை மாலை அவள் கழுத்திலிருந்து தொங்கிற்று. அவள் சற்று வெட்கத்துடன் “ஓ, இதுவா?” என்று சிரித்தாள்.
“ஆனா நீங்க வழக்கமான டீச்சர்ங்க மாதிரி இல்லே” என்றான் அவன்.
அவளுக்குப் புரியவில்லை. “அப்படீன்னா?”
“கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் சந்தேகப் பார்வை…
இது ஒண்ணையும் காமிக்காம…”
அவன் தன்னைச் சந்தித்துச் சில நிமிஷங்களுக்குள் இம்மாதிரிப் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவள் எதுவும் சொல்வதற்குள் “நா மனசிலே பட்டதைச் சொல்லிடுவேன். உங்களைப் பாத்தா நீங்க என்னோட இந்தக் குணத்தை எதிர்க்கிறவங்க மாதிரி இல்லே” என்றான்.
“சரி, அப்ப நானும் என் மனசிலே பட்டதைச் சொல்லிடட்டுமா?” என்றாள் அம்புஜம்.
அவன் பதில் எதுவும் சொல்லாது அவளைப் பார்த்தான்.
“என்னதான் நீங்க மறைச்சு மறைச்சு ஐஸ் வைக்கப் பாத்தாலும் அது ஒர்க் அவுட் ஆகாது.”
அவன் சிரித்தபடி “நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்” என்றான்.
அவள் நிஜமாகவே ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். அவனைமடக்கி
விட்டோம் என்று நினைத்தால்….
“மொதல்லயே நா சொல்லிட்டேனே, நீங்க மத்த டீச்சர்ங்க மாதிரி இல்லேன்னு!”
அவன் பேசும் விதம் அவளுக்குப் பிடித்திருந்தது.
“யாருக்கு அட்மிஷன் கேக்க வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.
“என் பொண்ணுக்குதான்” என்றான் அவன்.
“பொண்ணா?” அவள் எவ்வளவு அடக்கிக் கொள்ள முயற்சித்தாலும் அதிர்ச்சியின் சிறிய ரேகை தன் குரலில் பதிந்து விட்டது என்று நினைத்தாள்.
“ஆமா. எங்கண்ணா பொண்ணு எனக்கும் பொண்ணுதானே?”
“ஒரு நிமிஷம் நான்தான் தப்பா அப்சர்வ் பண்ணிட்டேனோன்னு எனக்கு அதிர்ச்சியா இருந்தது.”
“புரியலே.”
“முதல்ல நீங்க அங்கேர்ந்து வரப்போ பாத்துட்டு யாரோ குழந்தையோட அப்பான்னு நினைச்சேன். பக்கத்திலே வந்ததுக்கு அப்புறம் இது இனிமேதான் அப்பா ஆக வேண்டிய முகம்னு எனக்குத் தோணினது!”
“எனக்கு உங்களோட ஓப்பன்னஸ் ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க இப்ப சொன்னதை சொல்லாமலே விட்டிருக்கலாம். ஆனா சொன்னீங்க பாருங்க அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான்.
அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். “இன்னும் இருபது நிமிஷம் கழிச்சு வரச் சொல்லியிருக்காங்க. அதுவரைக்கும் நான் இங்கேயே உக்காரலாமா?” என்று கேட்டான்..
வெளியிலிருந்து வருபவர்கள் தங்குவதற்குத் தனியாக இருக்கைகள் போடப்பட்ட ஒரு ஹால் இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த கட்டிடத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு போன பின்பு சற்றுக் கழித்து அவன் இந்த வழியாகத்தான் போக வேண்டும். எதற்காக இவன் வீணே அலைய வேண்டும் என்று அவள் நினைத்தாள்.
அவளுக்கும் அவள் செல்ல வேண்டிய வகுப்புக்கு இருபது நிமிடங்கள் இருந்தன.
“நீங்க தாராளமா இங்க இருக்கலாம். கொஞ்ச நேரத்துக்குத் தானே?” என்றாள் அம்புஜம்.
“நா இந்த ஸ்கூலைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். படிப்பு, விளையாட்டு, ஹாபீஸ்ன்னு ஸ்டூடண்ட்ஸுக்கு சொல்லிக் கொடுக்க நல்ல வசதியா கட்டிடங்கள், லாப்ஸ், பிளே கிரவுண்டு எல்லாம் இருக்கற கேம்பஸா இந்த ஸ்கூல் இருக்கு, ஆனா ஸ்கூல் பீஸ் மாத்திரம் கொஞ்சம் ஜாஸ்தின்னு சொல்லுவாங்க” என்று சிரித்தான்.
“நல்ல காப்பி வேணும்னா “பில்டர் காஃபி”க்குதான் போகணும். காப்பித் தண்ணி போதும்னா முக்குக் கடையிலேயே கிடைக்கும்.”
அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து “அடேயப்பா!” என்றான்.
“ஓ ஐம் சாரி” என்றாள்.
“உண்மையைச் சொல்றத்துக்கு எதுக்கு சாரி? நீங்க இப்போ சொன்னதுக்கு அப்புறந்தான் இந்த ஸ்கூலுக்கு எப்படி இவ்வளவு நல்ல பேர் கிடைச்சி
ருக்குன்னு எனக்குத் தெரியுது” என்றான் அவன்.
சில மணி நேரத்துக்கு முன்னால் தனக்குச் சம்பளம் தரும் இந்த நிர்வாகத்தைப் பற்றித் தனக்கு என்ன எண்ணம் தோன்றியது என்று அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவன் திடீரென்று “வழக்கமா நா இந்த டயத்துக்கு ஒரு காப்பி சாப்பிடுவேன். இங்க பக்கத்தில காப்பி கிடைக்குமா?” என்று கேட்டான்.
அவள் சற்றுத் தூரத்தில் நின்ற மஞ்சள் நிறக் கட்டிடத்தைக் காண்பித்து “அதான் கான்டீன். அங்க காப்பி கிடைக்கும்” என்றாள்.
அவன் அவளிடம் தயக்கத்துடன் “நீங்களும் வாங்க. ஐ ஹோப் யூ டோன்ட் மைண்ட்” என்றான்.
“நா வழக்கமா மத்தியானம் ஒரு டீ குடிப்பேன்” என்றாள்.
“ஒரு கம்பனிக்காக வாங்க. உங்களை வற்புறுத்தற உரிமையோ அதிகாரமோ எனக்கு கிடையாதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றான்.
அவள் மேலும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சென்றாள். காற்றில் படர்ந்திருந்த குளிர்ச்சி உடம்பைக் குசலம் விசாரித்தது.
“இன்னிக்கிக் கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. மே மாசமா இருந்தாலும் சூரியன் இன்னிக்கி அடக்கி வாசிக்கிற மாதிரி இருக்கில்லே?” என்றான் அவன்.
சூரியனை ஏதோ மனிதப் பிறவியைப் போல அவன் பார்ப்பதை அவள் ஆச்சரியத்துடன் கவனித்தாள்.
அப்போது எதிரே வந்த ஒரு பெண்மணி அம்புஜத்தைப் பார்த்து “குட் மார்னிங் மாம்” என்றவள் கூட வந்தவனைப் பார்த்து அவளிடம்
“கெஸ்ட்டா?” என்று கேட்டாள்.
“ஆமா டீச்சர்” என்றாள் அம்புஜம்.
“இன்னிக்கி என்ன மார்னிங் ஷோவா?” என்றாள் அந்த டீச்சர். அவன் பக்கம் திரும்பி “தப்பா நினைச்சுக்காதீங்க. காலையிலே க்ளாஸெஸ் இல்லேன்னா கேக்கற கேள்வி” என்று சிரித்தாள்.
“இல்லே. அடுத்த பீரியட் டென்த் பி” என்றாள் அம்புஜம். அந்தப் பெண்மணி அவளிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.
“கெஸ்ட்டான்னு கேட்டா ஆமான்னுட்டீங்க” என்றான் அவன் அவளிடம்.
“பின்னே? ஒரு வார்த்தையிலே கதையை முடிக்க முடியும்னா எதுக்குத் தொடர்கதை எழுதணும்?”
அவன் வாயைத் திறந்து மூடிக் கொண்டு விட்டான்.
அதைக் கவனித்த அவள் “என்ன?” என்றாள்.
“இன்னொரு தடவை அடேயப்பாவைச் சொல்ல வாய் வந்து விட்டது. எதுக்கு வம்புன்னு அடக்கிக் கிட்டேன்.”
காப்பி குடிக்கும் போது “நல்லா இருக்கு. “பில்டர் காஃபி” ஓட்டல் தரத்துக்குத்தான் இருக்கு!” என்றான் புன்னகை செய்தபடி..
“இதை ஸ்டூடண்ட்ஸ்க்காக மானேஜ்மென்ட் நடத்தறாங்க. விலையெல்லாம் கம்மி அவங்களுக்கு” என்றாள் அவள்.
கான்டீன் பில்லை அவன் கொடுத்தான். அவள் தான் கொடுப்பதாகச் சொல்லவில்லை.
அவர்கள் காண்டீனிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.அவன் ஸ்டாஃப் ரூமில் விட்டு விட்டு வந்திருந்த தன் கைப்பையை எடுக்க அவளுடன் சென்றான்.
அவன் அவளிடம் விடைபெற வாயெடுத்த போது அறைக்குள் நுழைந்த ஒரு பெண் “அம்புஜம், இன்னிக்கி நீயும் லஞ்சுக்கு கபூர் கஃபேக்கு வரேல்ல? என்று கேட்டாள்.
“என்ன விசேஷம் நித்யா?” என்று கேட்டாள்.
“சும்மாதான். மாசம் ஒரு தடவை நாம எல்லாரும் போய்ச் சேர்ந்து சாப்பிடலாம்னு போன மாசம் ஆரமிச்சோமே. நீதான் வரலேன்னு அன்னிக்கி சொல்லிட்டே.”
“இன்னிக்கும் அதேதான்” என்றாள் அம்புஜம். “லுக். நா வீட்டிலேந்து சாப்பாடு கொண்டு வந்திர்றேன். ஓட்டலுக்குப் போயி சாப்பிடறதுலே பாதி வயிறு சாப்பிடறப்போ மீதி வயிறு பில்லை நினைச்சு ரொம்பிடுது. ஐம் நாட் ஃபார் திஸ் கேம்” என்று சிரித்தபடி சொன்னாள்.
“சரி, நா உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று அவள் பொய்க் கோபக் குரலில் சொல்லி விட்டுத் திரும்பிச் சென்றாள்.
அப்போது அவளுடைய கைபேசி ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்து விட்டு “என்னப்பா திடீர்னு போனு ?”
எதிர்முனைக் குரல் கரகரவென்றது.
“ஆமா. இன்னிக்கிக் காலையிலே சொன்னீங்க. பென்ஷன் வாங்கறதுக்குப் போகணும்னு.”
மறுமுனையிலிருந்து மறுபடியும் கரகர.
“இன்னிக்கிக் கொடுத்திடறாங்க இல்லே. கொஞ்சம் டயம் ஆனா என்ன பண்ண முடியும்? என்னமோ வயசானவங்க பென்ஷனை நம்பி இருக்கறவங்கன்னு அந்த ஆபீஸ்லே இருக்கறவங்க நம்ம நல்ல காலத்துக்குத் தொந்தரவு எதுவும் கொடுக்காம ஜென்டிலா நடந்துக்கிறாங்க. நீங்க பணம் வாங்கினதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணுங்க. கையிலே பணத்தை வச்சுக்கிட்டு நீங்க தனியாப் போக வேண்டாம். எனக்குக் க்ளாஸ் முடிஞ்சிருச்சின்னா நானே வந்து கூட்டிட்டுப் போறேன். இல்லாட்டி அட்டெண்டர் ரெண்டு பேர்லே யாரவது ஒருத்தர் வந்து உங்களைக் கொண்டு போய் விட்டுடுவாங்க. வச்சிரவா” என்று போனைக் கைப்பைக்குள் போட்டாள்.
“இப்பல்லாம் ஆன்லைன்லேயே பென்சன் பணம் கொடுத்துடறாங்களே” என்றான் அவன்.
“ஆமா. ஆனா அவர் அங்க போறதுக்கு முக்கிய காரணம் அவரோட பழைய பிரெண்ட்சை எல்லாம் பாக்கணும்னுதான். நானும் என் சிஸ்டரும் கூட எதுக்கு அலையணும்னு மொதல்லே சொன்னோம். ஆனா எங்கம்மாதான் பழகின மனுஷங்க எப்பவும் முக்கியம். அந்த பிரெண்ட்ஷிப்புக்கு முன்னாலே இந்த சிரமம் எல்லாம் பெரிய விஷயமே இல்லேன்னுட்டாங்க” என்றாள் அவள்.
“உண்மைதான்” என்றான் அவன்.
அவள் கடியாரத்தைப் பார்த்து “நான் க்ளாசுக்குப் போகணும். நீங்களும் போயிட்டு வாங்க. உங்க பொண்ணுக்கு அட்மிஷன் கிடைக்க ஆல் தி பெஸ்ட்” என்றாள் அம்புஜம்.
“நீங்க மறக்க முடியாத கேரக்டர்” என்றான் அவன்.
அவள் தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
அவளுக்குத் தொடர்ந்து இரண்டு வகுப்புகள் இருந்தன. ஒரு வகுப்பு முடிந்ததும் அப்பாவுக்குப் போன் செய்தாள் . இன்னும் ஐந்து பத்து நிமிடங்களில் வேலை முடிந்து விடும் என்றார். அவள் அட்டெண்டர் முத்துவைப் பார்த்து அவரிடம் அனுப்பி விட்டு அடுத்த வகுப்புக்குச் சென்றாள். அதை முடித்து விட்டு அறைக்கு வந்து டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு காண்டீனுக்குச் சென்றாள். அவள் உள்ளே நுழையும் சமயம் வெளியே வந்து கொண்டிருந்த ஸ்டெல்லா எதிர்ப்பட்டாள்
“அம்பு, உன்னைத் தேடிகிட்டு யாரோ வந்தாங்களே?” என்றாள் ஸ்டெல்லா. அவள் பள்ளி அலுவலகத்தில் ஸ்டெனோவாக இருந்தாள்.
“என்னையா? எப்போ?”
“டயம் எப்போன்னு தெரியலே. காலையிலேயே ஹெச். எம்மோட செகரட்டரி மீட்டிங். டிக்டேஷன் எடுக்கப் போயிட்டு நா வெளியே வந்தப்போ ராஜி சொல்லிச்சு. இந்த மாதிரி உன்னைத் தேடிகிட்டு யாரோ வந்தாங்கன்னு. உனக்குத் தெரிஞ்சவங்கதான் போலிருக்கு. உன் பேர் சொல்லிக் கேட்டாங்கன்னு. இருங்க ஸ்டெல்லா மேடம் வந்ததும் நீங்க அவங்க கிட்டே கேக்கலாமினு அது சொல்லியிருக்கு. நான் வரப்போ வந்தவரு இல்லே. போயிட்டாரு போல.”
கடந்த இரண்டு மணி நேரமாக அவள் வகுப்பறைகளில் குடியிருந்தாள். அப்போது யார் வந்திருப்பார்கள்?
“அவரு பேரு ஏதாச்சும் சொன்னாரா?”
அவள் இல்லையென்று தலையசைத்தாள். “ராஜிக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் கிடையாதே. நாள்னிக்கி இன்ஸ்பெக்சனுக்கு வராங்க: அதுக்கு ரெடி பண்ணுன்னு இப்போ ஒரு கத்தை ஸ்டேட்மென்ட்சைத் தலையிலே கட்டிஇருக்காங்க. நா போறேன். மூச்சு விட நேரம் இல்லே. தலையைப் பிச்சிகிட்டு ஓடிற மாட்டமான்னு இருக்கு. இப்பக் கூடப் பாரு, ஒரு டீயக் குடிச்சிட்டுப் போறேன். வேலை முடிஞ்சப்பறம்தான் சாப்பாடு. வரட்டா?” என்று அவளுடைய அலுவலகத்தை நோக்கி ஓடினாள்.
அவள் சாப்பிடும் போதும் சாப்பிட்டு முடித்து விட்டு ஸ்டாஃப் ரூமுக்குத் திரும்பிப் போகும் போதும் யாராயிருக்கும் என்று நினைத்துக் கொண்டே போனாள்.
அன்று மாலை அவள் பள்ளி முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பு வீட்டுக்குச் செல்லப் பெர்மிஷன் எடுக்கவில்லை. .
.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்
- நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்
- பாவண்ணனின் நயனக்கொள்ளை
- சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்
- உனக்குள் உறங்கும் இரவு
- யாதுமாகி
- அவனை அடைதல்
- வேவு
- யாக்கை
- புத்தகக் கொள்ளையும், பாலஸ்தீனக்குழந்தைகளும்
- நாவல் தினை அத்தியாயம் பதினாறு CE 300
- வீட்டுச் சிறை
- இடம்
- காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023