குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்

This entry is part 6 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன்

டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் கனடா, மிஸசாகாவில் இப்பொழுது நடைபெறும் கண்காட்சிச் சாலைக்குச் சென்றால் அங்கு பார்க்க முடியும். ((At Square One in Mississauga, located at 199 Rathburn Rd. W. Canada.) நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனஸோக்களை அவை எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு கற்பனையில் கணித்து ரோபோக்கள் வடிவில் உருவாக்கியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கும் இப்படி ஒரு காட்சியைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஏற்கனவே லண்டன், பாரிஸ், மட்ரிட், அமெரிக்காவில் டென்வர், ரெக்ஸாஸ், கொலராடோ, டலஸ் போன்ற இடங்களில் பல பார்வையாளர்கனைக் கவர்ந்த கண்காட்சியாக இது இருக்கின்றது.

டைனஸோக்கள் 233 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்கள். கடைசி டைனஸோக்கள் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. பூமியில் புதைந்திருந்த எலும்புக் கூடுகளை ஆராய்ந்து அவற்றில் எத்தனை இனங்கள் இருந்திருக்கின்றன என்பன போன்ற தகவல்களையும் ஆய்வாளர் தந்திருக்கிறார்கள். அவற்றில் சில பெயர்களை ஆங்கிலத்தில் தருகின்றேன். Tyrannosaurus Rex, Stegosaurus, Triceratops. Velociraptor, Diplodocus.  கிரோக்க, லத்தீன் மொழிப்பெயர்கள்தான் இவற்றுக்குச் சூட்டப்பட்டன. இவற்றில் இரண்டு வகைகள் இருந்தன, அதில் ஒன்று பறவை இனங்கள் மற்றது மிருக இனங்கள். இப்போது இருக்கும் சில பறவை இனங்கள் முன்பிருந்த டைனஸோக்களின் பரம்பரையே என்று ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். தரையில் நடமாடிய சில டைனஸோக்கள் 120 அடி நீளமானதாகவும் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போது, திமிங்கிலம் பெரிய மிருகமாக இருந்தாலும், தரையில் நடமாடும் மிருகங்களில் இப்போது யானைதான் பெரிய மிருகமாக இருக்கின்றது.

இந்தக் காட்சியில் அசையும் டைனஸோ பறவை இனங்களைக் காணமுடியவில்லை. அவற்றையும் உருவாக்கியிருந்தால் காட்சி இன்னும் நன்றாக அமைந்திருக்கும். ஆனால் டைனஸோ முட்டைகள், குட்டிகள் போன்றவற்றையும் அங்கே காணமுடிந்தது. சிறுவர்களுக்குப் பொழுது போக்குவதற்கும், அறிவியல் சார்ந்து கேள்விகள் கேட்பதற்கும் ஏற்ற வழிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சிறுவர்களின் கேள்விகளுக்கு அங்கு பொறுப்பாக நிற்பவர்கள் உடனுக்குடன் அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதை அவதானிக்க முடிந்தது.

யுரசிக்பாக் படம் பார்த்தவர்களுக்கு டைனஸோக்கள் எப்படி இருக்கும் என்று ஓரளவு ஞாபகம் இருக்கலாம். ஆனால் அவற்றை இந்தக் காட்சியில் life-sized Velociraptors, a Brachiosaurus, and the most fearsome dinosaur of all, the mighty Tyrannosaurus rex போன்றவற்றைப் பார்க்க முடியும்.  இப்பொழுது அவை எப்படி இருந்திருக்கும் என்பதை நேரடியாகவே பார்க்கக்கூடிய வசதிகளை மிஸசாகாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். நான் ஹவாய்க்குச் சென்ற போது, ஒருநாள் கௌலா ரேஞ் என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். (Kualoa Ranch, on the Hawaiian island of Oahu) நீண்ட காலத்தின் முன் அழிந்து போய்விட்டதாகச் சொல்லப்பட்ட டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அங்கே காணமுடிந்தது. எப்படி என்று நினைக்கிறீர்களா? யுராசிக்பாக் என்ற பதாகை வாசலில் இருந்தது. அங்கிருந்த உயரமான குன்றுகளில் உள்ள காட்டுப் பகுதியில்தான் ஸ் ரீவன் ஸ்பில்பேர்க்கின் நெறியாள்கையில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த யுராசிக்பார்க் ((Jurassic Park) படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் இடம் பெற்ற வாசல் கதவு, டைனஸோவின் நகக்கீறலுடன் கூடிய மதில் எல்லாம் அப்படியே அங்கே இருக்கின்றன. டைனஸோவின் பெரியதொரு எலும்புக்கூட்டையும் பெரிதாக அங்கே வைத்திருந்தார்கள். ஏற்கனவே நான் படத்தைப் பார்த்திருந்ததால் எனக்கு அந்த இடங்கள் பழக்கமானதாக இருந்தன.

சமீபத்தில் நாசா நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பற்றியும், அது பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பின்நோக்கிச் சென்று அறியப் போவதாகவும் எழுதியிருந்தார்கள். ‘பின்நோக்கிப் பார்ப்பதா?’ இது எப்படிச் சாத்தியமாகும்? என்று ஆச்சரியப்பட்டேன். எனது சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் பின்நோக்கிப் பார்ப்பது என்பதற்கும் நல்லதொரு விளக்கம் கொடுத்திருந்தார்கள். அதாவது, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த டையனஸோக்களை 66 கோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மிகச்சக்திவாய்ந்த தொலைநோக்கியால் பார்த்தால், பூமியிலே டைனஸோக்கள் உயிரோடு நடமாடுவதை இப்பொழுதும் காணமுடியும் என்று எழுதி இருந்தார்கள். நாங்கள் நினைத்தும் பார்க்காத, ‘பின்நோக்கிப் பார்ப்பதில்’ உள்ள அறிவியல் வளர்ச்சியை ஜேம்ஸ்வெப் விண்வெளித் தொலைநோக்கியின் செயற்பாடுகள் மூலம் அறிந்து கொண்டபோது, அறிவியல் வளர்ச்சியின் வேகம் புரிந்தது.

இந்த டைனஸோக்கள் பற்றிய காட்சியை அவசரப்படாமல் பார்ப்பதானால் சுமார் 45 நிமிடங்கள் தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரை எடுக்கின்றது. பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரும் 3 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்குக் காட்சி  இலவசம். தினசரி காலை 10 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை காட்சி நடக்கின்றது. வர்த்தக நோக்கம் இல்லாமல், சாதாரண கமெராக்களால் உள்ளே படங்கள் எடுக்க அனுமதிக்கிறார்கள். 30 பேருக்குமேல் ஒன்றாகப் போவதானால் முற்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது. சிலசமயங்களில் காட்சி நேரங்களில் மாற்றம் ஏற்படலாம், அதனால் போவதற்கு முன் எதற்கும் அவர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வது நல்லது. வாகனத்தரிப்பிடங்களும் போதிய அளவு இருக்கின்றன.

பல நாடுகளில் நடந்த இந்தக் கண்காட்சியை இதுவரை சுமார் 5 மில்லியன் மக்கள் வரை பார்த்திருக்கிறார்கள். வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் உங்கள் குழந்தைகளையும் இது போன்ற அறிவியல் காட்சிகளுக்கு அழைத்துச் சென்று காட்டுங்கள். அவர்களின் சிந்தனைகள் பரந்து விரிந்து விருத்தியடைய வேண்டும். தாயகத்தில் கிடைக்காத பல வசதிகள் உங்கள் குழந்தைகளுக்கு இங்கே கிடைத்திருக்கின்றன. இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது, எனவே கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் உங்கள் குழந்தைகளை அறிவியல் சார்ந்த சிந்தனை கொண்டவர்களாக இந்த நாட்டில் வளர்த்து எடுப்பது உங்கள் கடமையாகும். குழந்தைகளுக்காகவும் உங்கள் நேரத்தைக் கொஞ்சம் செலவிடுவதால், அவர்களை மனதளவில் ஆரோக்கியமான பிள்ளைகளாக இந்த நாட்டில் உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் ஆசைகளை அவர்களிடம் திணிக்காமல், அவர்களை மகிழ்வோடு வைத்திருங்கள், காரணம் அவர்களின் எதிர்காலம் உங்கள் வளர்ப்பில்தான் இருக்கின்றது.

—-

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம் பதினெட்டு      CE 300இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட் -3 மின்வடத்துடன் சேர்க்கப் பட்டது.
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *