கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா

This entry is part 9 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஆரம்பகால உறுப்பினரும், தற்போதைய செயலாளருமான எழுத்தாளர்; அ. முத்துலிங்கம் அவர்கள் நேரடியாக இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அமைப்புத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த நிகழ்வுக்காக எனக்கு அவர் வருடாவருடம் அழைப்பிதழ் அனுப்பிவிட்டுத் தொலைபேசியிலும் அழைத்துச் சொல்லுவார். இம்முறை அவர் அழைத்த போது நான் குறோசியாவில் இருந்தேன், அழைப்பிதழ் கிடைத்ததை அவருக்கு உறுதிபப்படுத்தி, விழாவிற்கு வருவதையும் உறுதிப்படுத்தி இருந்தேன். நான் கனடாவில் ‘தமிழாரம்’ சிறுவர் பாடல்களை ஒளித்தட்டில் வெளியிட்டபோது அ.முத்துலிங்கமும், எஸ். ராமகிருஷ்ணனும் அதைப் புகழ்ந்து பாராட்டி எழுதி இருந்தார்கள். எனது சிறுவர் பாடல்கள் பற்றி,  ‘மூன்று குருட்டு எலி’ என்ற ஒரு குட்டிக்கதையும் திரு அ. முத்துலிங்கம் அவர்கள் அப்போது எழுதியிருந்தார்கள்.

‘ஐஸ்கிரீம் சாப்பிடும்போது ஒர் பதற்றம் இருக்கும், சாப்பிட்டால் முடிந்துபோகும். சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்துவிடும். சுவை இன்பத்தை நீடிக்க முடியாது. அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும். எனக்குக் கிடைத்த குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்தபோது எனக்கும் இந்த அனுபவம் கிடைத்தது, அதாவது  முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்துவிடும், ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பியிருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரத்தை அவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன.’ மூத்த எழுத்தாளரும், இந்த விழாவின் ஏற்பாட்டாளருமான ஒருவரிடம் இருந்து வாழ்த்துப் பெறுவதற்குக் கொடுத்து வைக்க வேண்டும். 25 வருட இலக்கிய சேவைப் பாராட்டு விழாவில் அ.முத்துலிங்கம் அவர்களிடம் இருந்து எனக்கு அந்தக் கொடுப்பனவு கிடைத்திருந்தது.

இந்த விழாவில் இலக்கிய நண்பர்களான திரு. வ.ந.கிரிதரன், திரு லெ. முருகபூபதி ஆகியோர் கௌரவிக்கப்பட்டதால் முக்கியமாக நான் அங்கு சென்றிருந்தேன். நண்பர் முருகபூபதி அவர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து இதற்காக வந்திருந்தார். இதைவிட எழுத்தாளர் திருமதி சிவசங்கரியும் விருது பெற்றதால், தமிழகத்தில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய எழுத்துக்களின் வாசகன் என்ற வகையில் அவரைச் சந்திப்பதற்கும் ஆவலாக இருந்தேன். இதற்கு இன்னுமொரு காரணம் இருந்தது, அது என்னவென்றால் 2022 ஆம் ஆண்டு தமிழக இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளாக 69 சிறுகதைகளைத் தெரிவு செய்து அதில் சிறந்தகதையாக ‘தாயகக் கனவுடன்’ என்ற எனது சிறுகதைக்குத் ‘தகவம்’ சார்பாக நவம்பர் மாதத்தில் தெரிவு செய்து முதற்பரிசு தந்து அந்தக் கதையையும் வெளியிட்டிருந்தார்கள். இதற்கு திருமதி சிவசங்கரி அவர்கள் முதன்மை நடுவராகப் பணியாற்றியிருந்தார்.

எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் இலக்கியம் சார்ந்து உரையாடியதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். போட்டிக்கு எடுத்துக் கொண்ட கதைகளில் தனக்கு மிகவும் பிடித்த கதையாகத் ‘தாயகக் கனவுடன்’ என்ற கதை இருந்தாகக் குறிப்பிட்டு, எழுத்துப் பணியைத் தொடருங்கள் என்று வாழ்த்திப் பாராட்டினார். பாரபட்சமின்றி எனது கதையைத் தெரிவு செய்ததற்காக அவருக்கு நன்றியும் கூறியிருந்தேன். இதே போன்றதொரு பாராட்டை 2002 ஆம் ஆண்டு சுமார் 20 வருடங்களுக்குமுன் ‘தாய்மொழியை நேசித்து, சிறுகதைகள் மூலம் தமிழகத்து வாசகர்களுக்கும் புலம்பெயர்ந்த கனடாவுக்கும் இலக்கியப் பாலம் போட, குரு அரவிந்தன் எடுத்துக் கொண்ட முயற்சி என்னைச் சந்தோஷப்பட வைக்கிறது’ என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் வாழ்த்தியதையும் நினைத்துப் பார்த்தேன்.

இந்த விழாவில் ஊடகவியலாளர்களான உதயன் ஆசிரியர் ஆர்.என். லோகேந்திரலிங்கம், தமிழர் தகவல் ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம், தாய்வீடு ஆசிரியர் டிலிப்குமார், விளம்பரம் ஆசிரியர் ராஜமகேந்திரன், காலம் இதழ் ஆசிரியர் காலம் செல்வம், பதிவுகள் மின்னிதழ் ஆசிரியர் கிரிதரன் ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. இவர்கள் எல்லாம் எனது எழுத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்துப் பல வாசகர்களை உருவாக்கித் தந்தவர்கள். இதைவிட இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது, எழுத்தாளர் கடல்புத்திரன் அவர்களின் கதைகளைப் பதிவு மின்னிதழில் வாசித்திருக்கின்றேன், ஆனால் ரொறன்ரோவில் அவர் இருந்தும் நேரடியாக அவரைச் சந்தித்ததில்லை. இந்த விழாவில் அவரையும் கிரிதரன் எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். கடல்புத்தின் என்ற புனைப்பெயரில் எழுதும் பாலமுரளி தனது சிறுகதைத் தொகுப்பான வேலிகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலையும் தந்திருந்தார். 1998 ஆம் ஆண்டு குமரன் பப்பிளிஷரால் வெளியிடப்பட்ட இந்த நூலில் வேலிகள், வெகுண்ட உள்ளங்கள், செல்லாச்சியம்மா, பெண், ஏழை என்ற தலைப்புகளில் குறுநாவல்களும், சிறுகதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதைவிட நண்பர் கிரிதரனிடம் இருந்தும் அமெரிக்கா என்ற நாவலும், கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும் அன்பளிப்பாக எனக்குக் கிடைத்தன.

கோவிட்காரணமாக இதுவரை ஒதுங்கியிருந்த பல எழுத்தாளர்களையும், இலக்கிய நண்பர்களையும் இந்த விழாவில் சந்திக்க முடிந்தது. தமிழகத்தில் இருந்து விருது பெறுவதற்காகப் பாவண்ணன் மற்றும் சாம்ராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள். அவர்களையும் சந்தித்து இலக்கியம் சார்ந்த உரையாடல்களை மேற்கொள்ள முடிந்தது. இவர்களைவிட வேல்முருகன் இளங்கோ மற்றும் சுகிர்தராணி ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தாலும் அவர்களால் நேரடியாக வந்து  கலந்து கொள்ள முடியவில்லை. விருது பெற்றவர்களைக் கனடாவில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்கள். தங்களால் முடிந்தளவு தமிழ் உச்சரிப்பை சரியாகச் செய்தார்கள். தினமும் வீட்டிலே தமிழ் மொழியைக் கதைத்துக் கொண்டு வந்தால், தமிழ் மொழிபோல இலகுவான மொழி ஒன்றுமில்லை என்பதை இவர்களும் புரிந்து கொள்வார்கள்.

தோமஸ் புறுஸ்க்மா நன்றாகத் தமிழில் உரையாடினார். இரவு விருந்துபசாரத்துடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது. உலகெங்குமுள்ள எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்த கனடா நாட்டில் கௌரவிக்கப்படுவது எமக்கும் பெருமையே. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Series Navigationசூட்டு யுகப் பிரளயம் !மாந்தர் பிழைப்ப தெப்படி ?சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *