அமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 23 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஓவியக் கவிஞர் என அறியப்படும் அமுதோன் என்கிற அமுதபாரதியை நான் சந்தித்த நாட்கள் இன்னமும் பசுமையாக என் நெஞ்சில் குடி கொண்டிருக்கின்றன.
சிறகு இதழ் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் என் நெஞ்சில் விதைக்கப்பட்ட உடன் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு கவிஞர் வானவனின் “ மகரந்த தூள்கள் “ எனும் ஹைக்கூ கவிதை நூல். கலை மணிமுடி, வண்ணை சிவா, கல்வெட்டு சொர்ணபாரதி, செல்லம்மாள் கண்ணன், கவிஞர் நந்தா என இப்போது நான் சகஜமாகப் பழகும் பல வட சென்னை இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது.
ஹைக்கூ குறித்து எனக்கு ஒரு வகுப்பாக அமைந்தது அந்த நிகழ்வு. அதில் நூலினை வெளியிட்டு பேசியவர் அமுதபாரதி அவர்கள். மொத்தமே முப்பது நபர்கள் கலந்து கொண்ட தேவநேயப்பாவாணர் நூலக சிற்றரங்கில் நடைபெற்ற கூட்டம் அது.
அடுத்ததாக வண்ணை சிவா தனது ஒற்றைக்கல் சிற்பம் நூல் வெளியீட்டிற்கு புது வண்ணைக்கு என்னை அழைத்தார். அதற்குள் சிறகினை வடிவமைத்து ஒரு பிரதி கணிணியில் அச்சிட்டு கையோடு எடுத்துக் கொண்டு பேருந்து நிற்குமிடத்தில் காத்திருந்தேன். அருகில் ஒரு வயதானவர் வெள்ளை சட்டை வேட்டியில் தும்பைப் பூவாய் சிரித்தார்.
“ எங்கேயோ பாத்திருக்கேன். எங்கேன்னு தெரியல “
அவர்தான் பேச்சை ஆரம்பித்தார். பிறிதொரு பேருந்து பயணத்தில் அவரே என்னிடம் சொன்னது :
“ அருகில் இருக்கும் மனிதனிடம் மூன்று நிமிடங்களூக்குள் பேசாவிட்டால் நீங்கள் முரடன் என்று பொருள் “
அதை அவரே கடைபிடித்தது பின்னர் எனக்குப் புரிந்தது. நான் சிறகினைப் பற்றியும், நிகழ்வுக்குச் செல்வது பற்றியும் சொன்னேன்.
“ நானும் அங்கதான் போறேன். வாங்க சேர்ந்தே போகலாம். “
வயதானவர் என்பதால் நான் முதலில் ஏறி அவருக்குமாகச் சேர்த்து இருக்கை பிடித்துக் கொண்டேன். பிரயாணம் முழுக்க பல செய்திகள். ஒரு சிற்றிதழ் ஆரம்பிப்பவனுக்கு கிடைக்காத அரிய செய்திகள். என்னால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டிய முதல் சந்திப்பு அது.
நிகழ்வில்தான் தெரிந்தது அவர் தான் சிறப்புப் பேச்சாளர் என்பது. பல குறுங்கவிதைகளை நினைவிலிருந்து அவர் மேற்கோள் காட்டிய விதம் எனக்கு வியப்பைத் தந்தது.
நிகழ்வு முடிந்து அவரைச் சுற்றி ஒரே கூட்டம். என்னால் நெருங்க முடியவில்லை. சைகையால் சொன்னார். ‘ எனக்கு நேரமாகும். நீங்க கெளம்புங்க ‘
அப்புறம் அவரை மறந்தே போனேன். அடுத்த சந்திப்பு இலக்கிய சிந்தனைக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாற்ற வந்த போது. அப்போதுதான் தன் வீட்டு முகவரி தந்தார். பட்டினப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. என் வீட்டிற்கு மிக அருகாமையில்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் நான் காலை அவருடைய வீட்டிற்குச் சென்று இலக்கியம் பேசுவதை வழக்கமாக கொண்டேன். இதழ் குறித்த நுணுக்கமான தகவல்கள். கணையாழி கால நினைவுகள். கண்ணதாசன் இதழ் நடத்தியபோது ஓவியராக அவர் பணியாற்றியது என்று ஏகப்பட்ட நினைவுகளை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
பல சமயங்களில் வீட்டில் யாராவது விருந்தினர் இருந்தாலும் என்னைப் போகவிடாமல் வாசல் பால்கனியில் உட்கார வைத்து இயற்கைக் காற்று வீசும் சூழலில் சுவையாக பேசுவார்.
பேச்சு மூச்சு எல்லாமே ஹைக்கூ என்பதாக இருந்தது அவருடைய தற்கால வாழ்வு. ஆனாலும் எதிலும் பெருமை இருக்காது. அவர் சொல்வார் :

“ ஒரு ஓவியன் சொல்வான். எனக்கே புரியல அந்த ஸ்ட்ரோக் எப்படி இவ்வளவு அற்புதமாக வந்து விழுந்ததுன்னு. அப்படித்தான் கவிதையும். வெளியில சுத்திக்கிட்டிருக்கு உனக்கான வரிகள். நேரம் பாத்து அது உன் மனசுல வந்து விழுது. ஏதோ ஒரு சக்தி அதக் கொண்டு வந்து கொட்டுது “

ஹைக்கூ என்றதும் அமுதோனும் அவரது நினைவில் நீங்காத வரிகளும் தான் எல்லோருக்கும் சட்டென்று ஞாபகத்துக்கு வரும். அதுதான்:

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
ஆனால் அதையும் தாண்டி அவர் பல அற்புதக் ஹைக்கூக்களை எழுதி இருக்கிறார். ஆனாலும் கல்கி என்றால் பொன்னியின் செல்வனைச் சொல்வது போல, ஜெயகாந்தன் என்றால் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று சொல்வதைப் போல, நா. பா. என்றால் குறிஞ்சிமலரைச் சொல்வது போல இதைமட்டும்தான் அமுதோனுடன் தொடர்பு படுத்துகிறார்கள். அவருடைய இன்னொரு ஹைக்கு மிக அற்புதமானது:

தின்ற பழங்கள்
மிஞ்சிய கொட்டைகள்
ஓ! எத்தனை மரங்கள்!
அடிக்கடி தொலைபேசுவார். நிகழ்வுக்கு சேர்ந்து போகலாமா என்று கேட்பார். விடாப்பிடியாக கொறிக்க ஏதாவது வாங்கித் தந்து விடுவார். அது தேவையில்லை என்று நான் எண்ணிக் கொள்வேன். கொறிக்கவும் அசை போடவும் தான் அந்தப் பிரயாணத்தில் பல செய்திகளை அவர் தரப்போகிறாரே!
மறைந்த வல்லிக்கண்ணனைப் பற்றிச் சொல்வார்கள். புதிதாக யார் சிற்றிதழ் ஆரம்பித்தாலும் உடனே பாராட்டி ஊக்குவித்து கடிதம் போட்டு விடுவார் என்று.
புதிதாக யாரும் ஹைக்கூ கவிதை நூல் வெளியிட்டாலும் சிறப்பு பேச்சாளர்கள் பட்டியலில் நிச்சயம் அமுதபாரதி அவர்களின் பெயர் இருக்கும். அவரது பாராட்டைப் பெறும் அந்தக் கவிஞன் அருவி போல அடுத்தடுத்து கவிதைகளாக எழுதிக் குவிப்பான்.
மூன்று வரிக்கவிதை ஹைக்கூ. அவரது பிரபலமான வரிகளை ஒட்டிச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்.
இந்த நாட்டில் / எந்த மனிதன் / அடுத்த அமுதோன்

சிறகு இரவிச்சந்திரன்.

Series Navigationஓய்வும் பயணமும்.உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *