ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்

This entry is part 24 of 30 in the series 22 ஜனவரி 2012

ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய வீ ர விளையாட்டு என்ற குரல் ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலை ஒட்டி ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது ..
இந்த ஆண்டு என் மதிப்பிற்குரிய தோழி மாலதி மைத்ரி அவர்களும் ஒரு கருத்தை வைத்திருப்பாதாக அறிந்தேன்.
அதாவது பார்முலா 1, ஃபார்முலா 3 போன்ற மேல்தட்டு மக்களின் வீர விளையாட்டுகளுக்கு
ஆதரவளிக்கும் அரசு கிராமப்புற மக்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது? இக்கேள்வி மிகவும் சரியானதாகவே மேம்போக்காக இப்பிரச்சனையை அணுகுபவர்களுக்கு தோன்றலாம். இம்மாதிரியான பார்வை சமூகப் பிரச்சனைகளை எப்போதும் வர்க்கப்பிரச்சனையாக மட்டுமே அணுகும் ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்தியச் சமூகச் சூழல் என்றைக்குமே இந்த வட்டத்துக்குள் சிக்குவதில்லை என்பது தான் சாதியத்தின் அடிப்படை வெற்றியாக இருப்பதை ஏனோ அறிவு  ஜீவிகளும் எடுத்துச் சொல்ல முன்வருவதில்லை. வர்க்கம் தாண்டிய சமூகத்தின் அடித்தளம் வரை
கெட்டிப்பட்டிருக்கும் சாதியத்தின் ஆணிவேரை , பிரச்சனைகளின் மையமாக காட்டுவதைக் கூட அறிவுஜீவிகள் வேண்டுமென்றே தவிர்க்கின்றார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

சமூகப்பிரச்சனைகளின் மையமாக எப்போதும் பிசகாத நூலிழையாக இருக்கும் சாதிப்படிநிலையை எடுத்துச் சொன்னால் கூட முகம் சுளிப்பதும் ‘இவர்களுக்கு வேறு வேலையில்லை’ என்று ஒதுக்கி வைப்பதும் இன்றும் தோழமை வட்டங்களில் கூடத் தொடரத்தான் செய்கிறது.

இந்தியாவில் டில்லிக்கு அருகில் உ.பி மாநில எல்லையில் நொய்டாவில் இரண்டாயிரத்து ஐநூறு ௦௦ ஏக்கர் பரப்பில்இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கார் பந்தய சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதை அனுமதிக்கும் அரசு நடுத்தர வர்க்க , கிராமப்புற மக்களின் ஜல்லிக்கட்டை மட்டும் விமர்சிப்பதும் கோர்ட் வாசல் வரை இழுத்திருப்பதும் சரியா ? என்ற கேள்வியின் ஊடாக நாம் எதை எதிர்பார்க்கிறோம்? பார்முலா ஒன கார் பந்தயங்கள் போல ஜல்லிக்கட்டும் ஆக வேண்டும் என்றா?
அப்படி ஆக வேண்டும் என்பது தான் அரசின் விருப்பமும். அதாவது ஜல்லிக்கட்டும் இனிமேல் மல்லையா ஜல்லிக்கட்டு. ஜெபி குருப் ஜல்லிக்கட்டு, டாட்டா ஜல்லிக்கட்டு என்று முதலாளிதுவமாகி அதன் பின் உலக மயமாக வேண்டும் என்பதே அரசின் நேக்கமும் ஆகும்.

ஜல்லிக்கட்டு ஒரு மிருகவதை என்று பேசும் கருணா மூர்த்திகளும் சரி, ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்று பேசும் நாகரிக தலைமுறையும் சரி, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக எப்போதும் கள்ளமவுனமே சாதித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை நாகரிகமாகவும் மனிதாபிமானம் மிக்கதாகவும் மாற்ற நினைப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டு, தமிழர் பண்பாடு என்ற தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் வீர வசனங்கள் இன்னொரு பக்கம்.

உரக்கச் சொல்லும் பொய்யும் உண்மையாகிவிடும் என்ற யதார்த்தநிலையை நன்குத் தெரிந்தக் கொண்டவர்களே மேற்சொன்ன தமிழ் பண்பாட்டுக் காவலர்கள்! ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் வீர விளையாட்டு என்றும் பலரும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பரவியதே நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தான் என்பதே வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கி.மு. 1500 காலத்தில் ”மஞ்சு விரட்டு” அல்லது “”எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.

நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “”மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்( புதிய ஜனநாயகம் 2008)

இன்றைக்கு தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலின் போது எங்கள் தென்மாவட்டங்களில் (நெல்லை)  இப்போதும் மஞ்சு விரட்டு நிகழ்வு மட்டுமே நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கின்ற தமிழகப் பகுதிகளில் அந்த விளையாட்டு ஆதிக்கச் சாதியின் அடையாளமாகவும் நிலவுடமை சமூகத்தின் முகமாகவுமே இருப்பதையும் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தங்கள் பாரம்பரியமாக கொண்டாடுபவர்களும் அந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்துடனேயே இருப்பதையும் அடையாளம் காண முடிகிறது.

இந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்தை வளர்த்தெடுத்ததில் நம் தமிழ் திரைப்படங்களுக்கு மிக முக்கியமானப் பங்குண்டு. ஜல்லிக்கட்டு காளை எப்போதுமே அந்த ஊர்ப் பண்ணையாரின் காளையாகவே இருக்கும்.

பாரம்பரியம், பண்பாட்டு  அடையாளம் என்று கொண்டாடுவதையும் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டி இருக்கிறது. எது தமிழனின் பாரம்பரியம்? எது தமிழனின் பண்பாடு? ஊர் என்றும் சேரி என்றும் தமிழன் பிரிந்திருப்பது தமிழனின் பாரம்பரியமா? தமிழனின் பண்பாடா? என்று கேட்டால் அந்தக் கேள்வி கூட தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. இக்கேள்விகளைத் தொடுப்பவர்கள், தமிழினத் துரோகிகள், தமிழ்த் தேசிய விரோதிகள் என்று பார்க்கும் பார்வையும் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது கவலைத் தருவதாகவே இருக்கிறது.

உங்கள் மொழி , சாதிக் காப்பாற்றும் மொழி உங்கள் மதம் சாதிக் காப்பாற்றும் மதம் உங்கள் அரசு சாதிக் காப்பாற்றும் அரசு என்று தந்தை பெரியார் தமிழ் மொழியையும் அதன் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் கண்டு மருண்டு விடாமல் வெகுண்டெழுந்த அறச்சீற்றம் அணையாமல் அக்னிக்குஞ்சாக எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது ஜல்லிக்கட்டு காளைகளின் சீவிவிடப்பட்டிருக்கும் கூரிய கொம்புகளுக்குப் பயப்படாமல்.

Series Navigationதிருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் மு வ நூற்றாண்டு விழாதனி ஒருவனுக்கு
author

புதிய மாதவி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Malathi Maithri says:

    தோழி புதிய மாதவி சுட்டிக்காட்ட விரும்பும் சாதிய ஒதுக்குதல் மற்றும் தீண்டாமை கொண்டதாக தமிழ் என்ற பொது அடையாளம் செயல்பட்டுகொண்டிருகிறது என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தற்போது தமிழ் என்ற பொது அடையாளமோ தமிழ் நாடு முழுமைக்கான ஒரு சடங்கு முறையோ கேள்விக்கு உட்பட வில்லை. ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தம் மரபின் அடையாளமாக ஒரு விளையாட்டினை நடத்த உரிமை உள்ளதா என்பதுதான் கேள்வி.
    இந்த ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு ஒரு வீர விளையாட்டா, அன்றி தமிழர்களின் 3000 ஆண்டு அல்லது 300 ஆண்டு கால வரலாற்று தொடர்ச்சி கொண்ட விளையாட்டா என்பதும் கூட முக்கியமான கேள்வி இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் இனக்குழு தன் மரபு என நம்புவதை தொடர உரிமை உள்ளதா இல்லையா என்பதுதான் கேள்வி. இந்த கேள்வியைத் தொடர்ந்து மிக முக்கியமான இரு கேள்விகள் எழும்.
    தீண்டாமை என்பது மரபான ஒரு நம்பிக்கை அதனால் அதைத் தொடர உரிமை உள்ளதா? பெண் ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனம் இந்திய மரபின் அடிப்படையான நம்பிக்கைகளால் நியாயப்படுத்தப் படுகிறது. இதில் ஒரு சமூகத்தின் நம்பிக்கை என்ற வாதம் முறையானதா? இந்த இரண்டிலும் ஒரு அடிப்படையான உண்மை உள்ளது . தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களும் ஜனநாயகத்தை நமது நாட்டின் அடிப்படை என நம்பும் மக்களும் சேர்ந்து தீண்டாமைக்கு ஆதரவான அனைத்து கருத்துகள் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து நிற்கும் போது அதை திணிக்க எந்த ஆதிக்க இடைநிலை சாதிகளுக்கும் உரிமை இல்லை. பெண் ஒடுக்குமுறை, பெண்களின் மீதான வன்முறை என்பதை எந்த நம்பிக்கை அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது ஏன் எனில் அதில் ஒரு சமூகம் மற்றும் இனக்குழுவின் சரிபாதி ஆக உள்ள பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சமூகம் என்றால் பெண்களும் அதில் முழு உரிமை உள்ளவர்கள் என்ற அளவில் அதில் உள்ள நம்பிக்கைகளை கேள்வி கேட்க பெண்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இந்த இரு காரணங்களை வைத்து வெளியில் உள்ள ஒரு மேலாதிக்க நம்பிக்கையோ, சக்தியோ அந்த சமூகத்தின் நம்பிக்கைகளை, சுய நிர்ணய உரிமைகளை கேள்விகேட்கவோ அவமதிக்கவோ இன்று உள்ள பன்மை அரசியலில் உரிமை கோர முடியாது. மசூதியில் பெண்களுக்கு உரிமை இல்லை அதனால் இஸ்லாமியர்களின் மதம் தடை செய்யப்பட வேண்டும் என்று வேற்று மத வாதிகள் சொல்வதும் இந்தியா தீண்டாமை உள்ள நாடு அதனால் இங்கு அரசியல் விடுதலை என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்பதோ எந்த அளவுக்கு ஆதிக்க வாதமோ அதே ஆதிக்க- ஒதுக்குதல் வாதத் தன்மை கொண்டது இந்த வகை தடைகள் மற்றும் நீக்கங்கள். மலையின- மற்றும் பழங்குடிகள் தம் சடங்குகளை கடைபிடிப்பதை தடை செய்யும் அரசு சட்டங்கள் அவர்களின் நிலம் மற்றும் வாழ்வுரிமைகளையே அழிக்க ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்கின்றன, அதே வாதம் இந்திய விவசாய மரபின் மீதும் தாக்குதலை தொடுக்கிறது. தலித்துகளுக்கு நில உரிமை இல்லை, விளைச்சலில் இன்று வரை உரிய பங்கு இல்லை என்ற காரணத்தால் இந்திய விவசாயத்தை அழிக்க எந்த ஒடுக்கப்பட்ட மக்களும் முன்வர மாட்டார்கள். என்னெனில் இங்கு வேண்டியது நில உரிமை போராட்டம் மற்றும் விவசாயத்தில் சம உரிமையே தவிர விவசாயத்தை அழித்து நிலங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளித்துவிட்டு வேலையில் இட ஒதுக்க்கீடு கிடைக்கும் என்று கனவு காண்பதல்ல. உலக அளவில் இது போன்ற இன, சிறு சமூக நம்பிக்கைகளை அழித்து விட இது போன்ற ‘சீர்திருத்த’ மனிதாபிமான வாதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் இன்று நமது அக்கரையில் முன் நிற்கிறது. அது மட்டும் இன்றி ஜல்லிக்கட்டில் ஈடுபடும் ஒரு சாதி மக்கள் தீண்டாமையை ஏற்கவோ கடைபிடிக்கவோ கூடாது என்பதுதான் கோரிக்கை மற்றும் சீர்திருத்த வழிமுறையே தவிர , அவர்கள் தீண்டாமையை கடைபிடிப்பதால் அவர்களுக்கான நம்பிக்கைகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று சொல்வது எந்த வித குடிமை மற்றும் மனித உரிமை சார்ந்தது. அத்துடன் இந்த விளையாட்டை தடை செய்து தீண்டாமையை நீக்குவதாக அரசோ, தடை விதிப்பவர்களோ சொல்லிகொள்ளவில்லை. இடை நிலை சாதியினரின் அரசியல் இப்போது தீண்டாமையை நியாயப்படுத்தி செயல்பட முடியாது என்னும் போது அவர்களுக்கான் மாற்றங்கள் பற்றிய உரையாடல் அவர்களுக்குள் நடந்து கொண்டிருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். தலித்துகள் பெண்கள் இடம் பெறாத தமிழ் தேசியமோ தமிழ் அரசியலோ இனி சத்தியமும் இல்லை நியாயமும் இல்லை. அதே சமயம் மனித உரிமை அடிப்படையில் சமூக நம்பிக்கைகளை பரிசீலனை செய்யாமல் நாம் உள்ளடக்கும் அரசியலும் பேச முடியாது. இந்த பின் புலத்தில்தான் எனது வாதம் முன்வைக்கபடுகிறது. நாயக்கர் காலத்தில் அறிமுகமானால் சுத்த பழந்தமிழர் அதனை ஏற்க வேண்டிய தேவை இல்லை என்பது பயங்கரமான தனித்தமிழ் தூய்மை இனவாதமாகிவிடும் என்பதை தோழியர் புரிந்துகொண்டால் நல்லது. தமிழகத்தில் வேட்டைச்சமூகம் கால்நடைச்சமூகமாக மாறிய காலத்திலிருந்து இந்த காளை விளையாட்டு இருந்திருக்க வேண்டும். அது ஒரு குறியீட்டு விளையாட்டு என்பதுடன் வாழ்வியல் சடங்காகவும் இருந்திருக்கும் என்பதற்கு ‘தாது எரு மன்றத்து அயர்வர் தழூவு கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் (கலித்தொகை -103) என்பது போன்ற ஏறுதழுவுதல் தொடர்பான முல்லைக்கலி முழுமையும் காணப்படும் வரிகள் சான்றாக இருக்கின்றன. அது இல்லை என்றாலும் 500 ஆண்டுகளுக்கு முன் உருவானது என்றாலும் ஒரு மரபு என்ற வகையில் இதனை ஒரு சமூகம் கையாண்டு வருவதில் என்ன சிக்கல் உள்ளது. இது போன்ற மரபு சார்ந்த கேள்விகளை இந்திய சட்டங்கள் கையாளும் போது சிறு மரபுகளின் இடத்தை கணக்கில் கொள்ளவேண்டும் என்பதுதான் இப்போது நாம் முன் வைக்கும் கோரிக்கை. இந்த விளையாட்டை வைத்து சுற்றுலா தொழில் பெருகும் என்றால் அதற்கு பன்னாட்டு முதலீடுகள் கிடைக்க எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கலாம். இவை காலம் சார்ந்த மாற்றங்கள்.
    காடு அழிவதை பற்றி அக்கறை காட்டி பெண்களுக்கு இடமற்ற அயப்பன் கோவில் இன்பச்சுற்றுலாவைத் தடை செய்யவோ , கங்கை மாசடைவதை காரணம் காட்டி கும்பமேள போன்றவற்றை தடை செய்யவோ இந்திய நம்பிக்கை இடம் தருமா? இவை பெரிய இடங்கள் . காளை விளையாட்டு இப்போதுவரை சிறிய ஒன்று. சிறியவற்றிற்கு நம் ஆதரவு என்பதில் பெரிய சதித்திட்டம் என்ன இருக்க முடியும்… காளைகள் வனவிலங்கு பட்டியலில் என்றால் யானைகள் வீட்டு விலங்கு பட்டியலில் இருக்கிறதா….

    – மாலதி மைத்ரி

  2. Avatar
    aakaash says:

    எப்போதுமே மாலதி மைத்ரியின் எழுத்துக்களில் அரசியல் பார்வை இருப்பதே இல்லை. உளவியல் ரீதியான அணுகுமுறையும் இல்லை .. மட்டுமல்ல அவரின் இயற்கையை குறித்தான அவதானிப்பும் சுற்றுசூழல் குறித்தான கருத்தும் மற்று உயிரினங்களின் மீதான பார்வையும் ஐயோ பாவம் என்று சொல்ல கூடிய அளவிற்குள்ளது ..இதை புரிந்து கொள்ளும் தன்மை மாலதி மைத்ரியை பாராட்டி பெரிய கவிஞை என்று சொல்லும் சில சிறு பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர்களை தேர்வு செய்யும் ஆணாதிக்க பண்டிதர்களுக்கும் இல்லை . அவரின் எந்த கவிதை எடுத்தாலும் சரி கட்டுரை எடுத்தாலும் சரி வெறும் மாபெரும் உணர்ச்சிகளால் வசப்பட்டு கொந்தளித்து எழுதியதாக தான் இருக்கிறது. சமூக பிரச்சினைகளின் அடிப்படை அரசியலும் தீர்வுகளின் ப்ராக்டிகல் அரசியலும் அவருக்கு இதுவரைக்கும் தெரியவில்லை .இதற்கு நிறைய வாசித்தல் வேண்டும் ..
    …அத்தகைய அணுகு முறை வரும் வரைக்கும் இப்படிப்பட்ட அபத்தங்களை படிக்க நேரும்…. //ஒரு சிறு வர்க்கம் அவர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் அதுவும் தலித்துக்களுக்கு எதிரான (இந்தியாவின் 70 % வரும் விவசாயிகளில் பெரும் பகுதி தலித்துக்கள் தான்) விளையாட்டை எல்லோரும் சேர்ந்து சிறு வீர விளையாட்டாக மானித்து அதை ஆதரிக்கவேண்டும்//.

    அவர்கள் விளையாடட்டுமே.. கிரிக்கட் விளையாட்டை என்ன நாம் கொண்டாடவில்லையா? அதில் என்ன தலித்துக்களுக்கு இடமா கொடுத்தோம். ? பிராமணர்களின் ,ஆதிக்க ஜாதிக்களின் விளையாட்டை நாமெல்லாம் ஆற அமர்ந்து பார்த்ததில்லையா?. அவர்களுக்கெல்லாம் பாரத ரத்னா விருது அளித்து பெருமைப்படுத்த வேண்டுமென்று போராடவில்லையா? அப்புறம் என்ன ? தமிழ் தொலை காட்சி அலைவரிசைகளில் இப்போதெல்லாம் வட இந்தியர்களின் கலாசாரத்தை குறிக்கும் நெடும் தொடர்கள் ஹிந்தியிலிருந்தும் தமிழுக்கு டப்பிங் செய்து வரவில்லையா? இல்லை நாம தான் அதை பார்க்கலையா? நம்ம கலைஞர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது என்பது யாரை தான் உறுத்தியது? இப்படியெல்லாம் பார்த்தால் மாலதி மைத்ரியின் வாதம் சரியாக தான் இருக்கிறது.

    …..too abstract thoughts from the denser and concrete human sufferings……

  3. Avatar
    puthiyamaadhavi says:

    தோழி மாலதி மைத்ரி அவர்களின் பின்னூட்டுக்கு நான் எந்தப் பதிலும் எழுத விரும்பவில்லை.
    நான் எழுதியதை வாசித்தால் அதில் எல்லா பதிலும் இருப்பதாகவே நினைக்கிறேன். தோழியைப்
    போலவே இனக்குழு உரிமை பேசுபவர்களுக்கு நினைவூட்ட விரும்புவதெல்லாம் :
    இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதியான
    மார்கண்டேய கட்ஜு அவர்கள் சொல்லியிருப்பதைத்தான்.

    ” எந்த சுதந்திரமும் முழுமையானது அல்ல. ஒவ்வொரு சுதந்திரமும் சில நியாமான கட்டுப்பாடுகளுக்கு
    உட்பட்டவையே.”

    ஆகாஷ் என்பவரின் விமர்சனம் நான் எழுதியுள்ளதைப் பற்றி நேரிடையாக எதுவும் பேசவில்லை.
    எனக்கு ஆகாஷ் பற்றியோ அவர் எழுத்துகள் பற்றியோ எதுவும் தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *