கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்

This entry is part 34 of 45 in the series 26 பிப்ரவரி 2012

புதுக்கவிதையில் சமுதாய சிந்தனைகளைத் தூண்டிய தொகுப்பு “நெருஞ்சி”. இதன் ஆசிரியர் கால காலன். எல்லாந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் படைத்திருக்கும் இவர் தனது சொந்தப் பதிப்பகத்திலேயே இதை வெளியிட்டிருக்கிறார். விலை ரூ 75.

75 கவிதை கொண்ட இந்த கவிதைத் தொகுப்பு சமுதாயத்தின் அவலங்களைச் சுட்டி நெருஞ்சி முள்ளாய்த் தைக்கிறது. இதன் முன்னுரையில் கவிப்பேரரசு வைரமுத்து இதைக் குறிஞ்சிப் பூக்கள் எனக் குறிப்பிட்டது தகுமே.. ஏனெனில் சமுதாய நோக்கோடு படைக்கப்படும் கவிதைகள் அரிதான காலகட்டத்தில் இந்தத் தொகுப்பு நம் வாழ்வியல், அரசியல், நடப்பியல், சூழலியல் குறித்த கேள்விகளைக் கேட்டபடி செல்கிறது.

கருவுற்ற மேகத்தைக் கலைத்துக் கொண்டிருக்கும் காற்றில் தொடங்கும் கவிதை இந்தச் சமுதாயத்தின் தவறாக கருத்துக் சிதைவுகளைப் படம் பிடிக்கிறது. இன்னும் அரசுத் தொட்டில், படம்பார்த்து வாக்களிப்பது, ஆமாம் போடுவது, ஏமாளியாவது, காக்கை பிடிப்பது என மனிதர்களின் செயல்களைக் கிண்டலடிக்கும் கவிதைகள் அரசியல்வாதிகளையும் அதில் இழுக்கிறது. கடன் பட்டியலில் கொஞ்சம் மனிதத்தையும் சேர்க்கச் சொல்லும் அது, காந்தி சிலை தடியுடனிருப்பது, உணவுப் பொட்டலம் வழங்கும்போது பலர் நசுங்கிச் சாவது, மரம் நடும்போது மற்றவை மரிப்பது, கண்டன ஊர்வலம் செல்வது காவல் நிலையத்தில் கற்பு களவாடப்படுவது என.சாடுகிறது.

என்னை அதிர வைத்த கவிதை இது.. ஆனால் நிஜமும் கூட..

/// களைப்பு..:-
*******************

பகலெல்லாம்
கல்லுடைத்து வீடு
திரும்பினாள்
கர்ப்பிணி-
காத்திருந்த களைப்பில்
மதுக்கடை நோக்கி
கணவன். ///

பள்ளிக் கூரை பற்றியெரியும்படியான அஜாக்கிரதைத்தனமும், பெண் குழந்தை வேண்டாத பொது ஜனத்தின் மனோபாவமும், குப்பையில் விழுந்த துணி எடுத்து புதுத்துணியாய் உடுத்தும் சேரிச் சிறுமியும், குப்பையில் விழுந்த எச்சில் இலையை போட்டியின்றி நாயும் மனிதனும் உண்பதும், குழந்தை விபசாரம் , சோறும் சுகமும், சட்டம், வரதட்சணை, ஆகிய நம் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடிக்கின்றன.

///அவர்கள் உடலைச்
சுற்றிய கிழிசல்களுக்கு
நடுவே கொஞ்சம்
துணியும்
இருந்தது.///

வறுமையுற்றவர்களின் கனவுகள் கூட கறுப்பு வெள்ளையில்தான் என்றும், கள்ளிப்பால் கொண்டுவரச் சென்ற அம்மாவின் கையில் முள் தைத்ததால் அழும் குழந்தையும், பிழைக்கத்தெரியாதவனும்,கயிறு காந்தாரி, வாக்குச் சீட்டுச் சின்னங்கள் பற்றிய விஞ்ஞானம், தொலைவு, கடமை, கவிதைகளும் வித்யாசம்.

காந்தி ஜெயந்தி, பெண் சிசு வதை, தீவிரவாதம் குண்டு வெடித்துச் சிதறுதல், உயிர் விலையும், போன்ற கவிதைகளூடே, அன்னை தெரசா, டயானா பற்றிய கவிதைகளும், சுனாமி, தீ அணைப்பு, சா தீ, மனைத் தகராறு, மதம், சாதிப் பன்றி, சாதிகள் வாழ்க, ஆகிய சமூகத் தீமைகளைப் பட்டியலிடும் கவிதைகளும் அநேகம்.

/// சந்தையிலெல்லாம்
விலை கொடுத்து
வாங்கப்படும்
மாட்டிற்குத்தானே
தாம்புக்கயிறு-
கல்யாணச் சந்தையில்
மட்டும்
ஏன்
வாங்குபவர்க்கு.///

எனவும்,

///ஒரு வகையில்
யானையும், மனிதனும்
ஒன்றுதான் –
அது யாருக்குப்
பிடித்தாலும்
அழிவு
நிச்சயம். ///

எனவும் உள்ள கவிதைகள் மிகவும் சிந்திக்க வைத்தன.

ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பக்கத்தை ஒதுக்கி உள்ள காலகாலன் இன்னும் இரண்டிரண்டாக கூட போட்டு இருக்கலாம். அதிகபட்சம் 7 லில் இருந்து 10 வரிகளுக்குள் நச் சென்று சொல்ல வந்த விஷயங்களைச் சொல்லிச் செல்லும் கவிதைகளில் மனிதநேயம் மக்கள் மனோபாவம் சமூகச் சாடல் நிறைந்து இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் சமூக நடப்பியல்புகளை இத்தனை சமூக அக்கறையோடு பதிவு செய்திருக்கும் இவர் ஒரு சட்ட வல்லுனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே லா பாயிண்டுகள் போல கவிதைகள் நம்மை யதாஸ்தானத்தில் அறைகின்றன. இது இவரின் 5 வது புத்தகமாகும். இன்னும் இதுபோல சமூக அக்கறையோடு கூடிய கவிதைகளை எழுதி மக்கள் மனங்களில் சிந்தனையைத் தூண்ட இவரின் கவிப்பணியும் அதில் அர்ப்பணிப்பும் துணைகோலட்டும்.

Series Navigationகவிதைஆலமும் போதிக்கும்….!
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    கவிதையின் பாடுபொருள் இவற்றை எல்லாம் எப்போதோ தாண்டிவிட்டது. இதுபோன்ற “கவிதை”-கள் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் படித்த நினைவு.

    இவை போன்றவை “நெம்புகோல் கவிதைகள்” எனப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *