வீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம் குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில் ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.. பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட குழந்தையொன்றைக் கைப்பிடித்து நடத்திவருவதைப் போலிருக்கிறது நான் இழுத்துவரும் ட்ராலி, என் நடையின் நேர்கோட்டுக்குப் பின்னால் உருண்டுவந்தபடி.. “செல்போன் சார்ஜர் எடுத்து வச்சியா?” “பனியா இருக்கு, ஸ்வெட்டர் போட்டு போ” அக்கறைக்குரல்கள் துரத்தல்களாய்க் கேட்க பிரியாவிடைபெற்று நடக்கிறேன், விடிந்தால் விரியும் மீண்டுமொரு விடுதி நாள்..
ஒளி அமிழ்ந்த ஓர் இரவு, நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்.. வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம் விண்மீன்களைக் காணவில்லையென்று! கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்! யாருமிலா எனதறையின் உட்சுவர்களும் இருளை உமிழ்ந்து கொண்டிருக்க, ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்.. என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்!
மீண்டும் ஒரு முறை வேண்டும் எனக்கேட்கிறது உயிர், அந்த சிலிர்ப்பை.. உடல், அந்த பறத்தலை.. மனம், அந்த புல்லரிப்பை.. நீ கேட்ட அந்த நொடி “என்னோடு வருவாயா வாழ்வு முழவதும்?” பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட வாக்குவாதங்களுக்கிடையே.. “பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!” என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது! “அழகாய் இருக்கிறாய்!” என்று நீ ரசித்த தருணங்கள்தான் என் முகப்புத்தக முகப்பைப் பிடித்தன அன்று.. முகப்புத்தகப் படங்களில் பார்த்து கூட உனக்கு ரசிக்கத் தோன்றுவதில்லை […]
‘பாவம் காகம், பசிக்குமென்று ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’ என்று தொடங்கிற்று உன் காக்கா கதை! பார்த்துப் பிடிக்கவில்லை, பழகிப்பார்த்துப் பிடித்தது, சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு! ‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும் ‘நிலா நிலா பறந்து வரேன்’ என்றும் பாடப்பட்டன உன் நர்சரி ரைம்ஸ்! இவை மட்டுமல்ல அழகாய் உன் தனித்துவத்தோடு செதுக்கப்படுகிறது குழந்தையும் தான்!
எதிர்பார்த்துக் காத்திருந்து படிக்கும் ஒரு தொடர்கதையின் கனத்த கடைசி அத்தியாயமாய், நீண்டு கொண்டே இருந்த என் நாட்குறிப்பிற்கு “முற்றும்” போட்டு விட்டேன்.. நாளை, அடுத்த வாரம் என்று கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன.. ஏளனமும் அலட்சியமும் வந்த இடங்களிலிருந்து மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம், சில பல துளிக்கண்ணீரும்! பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை.. எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம் வேடிக்கையாய்த் தோன்றுகின்றன.. கனவுகளும் அவற்றை நோக்கிய பயணங்களும், தடைகளும் அது குறித்த போராட்டங்களும் அர்த்தமற்றுப் போன வெளி […]
சவ்வூடு பரவலின் விதிப்படி பரவுகிறது கோபமும் வெறுப்பும், அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து குறைந்திருக்கும் இடத்திற்கு, விழிக்குப் புலப்படா ஒரு படலத்தில் ஊடுருவி.. விதிமீறி கிழிகிறது அப்படலம் சில பரிமாற்றங்களில்.. பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி முன்னேறுகிறேன்.. மனம்மாறி தீர்த்துப்பேசிடத் தோன்றுகிறது! ஒன்றுமில்லை இன்னும், தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது எல்லாம்.. இல்லை! தீர்ந்துபோவதற்கு ஒன்றுமே இருந்திருக்கவில்லையோ என்று கூடத்தோன்றுகிறது!!
அந்த ஒரு விநாடியைத்தான் தேடுகிறேன்.. உன் நாட்குறிப்பிலும் என் நாட்குறிப்பிலும், நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை என் விழிகளைப் போல்.. ஏதோ ஒரு கடிகாரம் அந்த நொடியோடு நின்றிருக்கும் என்றெண்ணி கண்பதிக்கிறேன், எந்த கடிகாரமும் துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை, என் இதயத்தைப்போல்.. சிவந்த கண்களோடும் கனத்த இதயத்தோடும் தேடுகிறேன், பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான நம் நட்பில் சந்தேக விஷத்துளி வீழ்ந்த அந்த நொடியை, நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக அழிக்க எண்ணி… -கயல்விழி(kayalkarthik91@gmail.com)
ஒரு பொன்மாலைப்போழுதிலான பேருந்துப்பயணம்,தோழியுடன்.. வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும் முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும் சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று! இங்கிதம் தெரிந்தும் எங்கும் நகர முடியாத தவிப்பு.. மூடிகளில்லா காதுகளைப்படைத்த இயற்கையை நொந்தபடி கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை.. கிடைத்துவிட்டது செயற்கை மூடி.. என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது, ‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’ -களிலிருந்து அவளையும் ‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும் பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!
வெள்ளையர் வேட்டி சேலையிலும் நம்மவர் ஜீன்சிலுமாய் நீறு மணமும் மக்களின் வேண்டுதல்களும் கமழும் நம் ஊர் கோவில்.. ஊர்களின் பெயர்களும் விற்கப்படும் பொருட்களும் ஒலித்துக்கொண்டிருக்கும் முகம் தெரியா மக்கள் நிறை பேருந்து நிறுத்தம்.. அதிகபட்ச அலங்கோலத்தில் வீசப்பட்ட புத்தகங்கள், துவைத்த துவைக்காத துணிகளின் அணிவகுப்பு கொண்ட விடுதி அறை.. என்று எங்கும் பிறப்பெடுக்கின்றன என் கவிதைகள்.. என் கண்கள் நோக்கும் உன் கண்கள் பார்க்கும் போது மட்டும் மௌனமே தவழ்கிறது சுற்றிலும்.. பேச […]
உலக உருண்டையின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் அழகிப்போட்டி.. மட்டைப்பந்து போட்டியில் நெட்டை வீரர் ஒருவரின் ரெட்டை சதம்.. அரைகுறை ஆடை நடிகையின் ரகசியதிருமணமும் தொடரும் விவாகரத்தும்.. தெற்கில் எங்கோ ஒரு வாய்க்கால் தகராறில் நிகழ்ந்த குரூரக் கொலை.. நம்ப வைக்க முயற்சிக்கும் தேர்தல் அறிக்கைகளும் அது குறித்த ஆட்சி மாற்றங்களும்.. எத்தனை முறை வாய் பிளந்து பார்த்தாலும் திருந்தாத மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் உண்மை மகான்களும்.. என எதுவும் கிடைக்காத அன்று மீண்டும் தூசி […]