”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]

 

 

ஒரு பயண நூல் எழுதுவது என்பது எளிதான செயலன்று. அதை விட அதனை வாசிப்பது என்பதும் சாதாரண செயலன்று. ஏனெனில் பயண நூல் படிக்கும் போது அதை எழுதிய பயணியுடன்  சேர்ந்து நாமும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லக் கூடிய மனப் பாங்கினைப் பெற வேண்டும். அதற்கு ஏற்றபடி அப்பயண நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏதோ போனோம் வந்தோம் என்றிராமல் தான் சென்ற இடங்களில் பார்த்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, அவர்களின் மொழி, பண்பாடு, நாகரிகம், அந்த இடங்களின் தட்ப வெப்பம், அங்கே இருந்த அரசியல், போன்றவற்றையெல்லாம் பக்கத்தில் உட்கார்ந்து சொல்லி நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதே நல்ல பயண நூலின் இலக்கணமாகும்.

அப்படிப்பட்ட  நல்ல பயண நூல்களில் ஒன்றுதான் மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக் குறிப்புகள்’ எனும் நூலாகும்.

பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்நூல் ஆங்கிலத்தில் பலமுறை மொழிபெயர்க்கப்பட்டிருப்பதே இதன் பெருமைக்குச் சான்றாகும்.

பெர்னியர் 1620 செப்டம்பர் 26 ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் கோனார்ட் அருகே உள்ள ‘ஜோ’ என்னும் ஊரில் பிறந்தார். 1652 மே 5 ஆம் நாளில் மெட்ரிகுலேஷன் தேறிய அவர் அதே ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

அவர் பல நாடுகளுக்குச் சென்றபின் கி.பி. 1656 முதல் கி.பி. 1668 வரை வட இந்தியாவில் பன்னிரண்டாண்டுகள் தங்கி இருந்தார். மொகலாய அரசர்களுக்கு அரண்மனை மருத்துவராகப் பணியாற்றி இருந்திருக்கிறார். தான் பார்த்தகாட்சிகளையும் பெற்ற மற்றும் கேட்ட அனுபவங்களையும் அவர்பயண நூலாக வடித்துள்ளார்.

1688 செப்டம்பரில் அளவுக்கு அதிகமாகக் கேலி பேசி சிரித்து அதன் காரணமாக வலிப்பு நோய்க்கு ஆளாகி இறந்தார் என்று கூறப்படுகிறது. தன் செல்வத்தைப் பெர்னியர் உறவினருக்குப் பங்கிட்டுக் கொடுத்ததோடு அவருடைய இரு பெண் பணியாளருக்கும் அளித்தது அவரின் கருணைக் குணத்தையே காட்டுகிறது.

பிரெஞ்சுக் குடிமக்கள் தம் மன்னர் மீது மிகவும் மரியாதை வைத்திருந்தனர். அதனாலேயே பெர்னியர் தம் கட்டுரைகளை தம் அரசருக்கு அர்ப்பணிப்பு செய்கிறார்.

”நான் நீண்ட தூரத்தில் இருந்தபோதும் மாண்புமிகு மன்னர் அவர்களை நினைவில் கொண்டும், அவருக்குக் கடமைப்பட்டும் இருந்திருக்கிறேன்”

என்று அவர் தன் அர்ப்பணிப்புச் சரியான காரணத்தைக் கூறுகிறார்.

மொகலாய இளவரசர் தாரா சூரத்திலிருந்து ஆக்ரா செல்ல இருந்த பெர்னியரை அகமதாபாத் அருகில் தடுத்து நிறுத்துகிறார். அவரைத் தனது மருத்துவராக உடன் வருமாறு இளவரசர் அழைத்துச் செல்கிறார்  பின்னல் அவர் தாராவை விட்டுப் பிரிந்தாலும் ஔரங்கசீப் அர்சராகிக் காஷ்மீர் செல்லும் பயணத்திலும் கலந்து கொள்கிறார்.

ஆனால் அவரால் தாராவை நடத்திய விதத்தை மறக்க முடியவில்லை. தாரா கைதியாக்கப் பட்டு சீழ்பிடித்த அழுக்கான யானை மீது அவருடைய மகனோடு அமர வைக்கப்பட்டு நகர்வலம் விடப்படும் காட்சியை உருக்கமாக வர்ணிக்கிறார். அப்போது பெர்னியர் கடை வீதியில் ஒரு முக்கியமான இடத்தில் குதிரை மீது  அமர்ந்து கொண்டு இதைப் பார்க்கிறார்.

பொதுமக்கள் கண்ணீர் விடுவதையும் அவர்கள் தாராவுக்காக அனுதாபப்பட்டுப்  பேசிய உருக்கமான வார்த்தைகளையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் பயண நூலில் நாம் அறியாத பல செய்திகள் உள்ளன.

நாம் பள்ளியில் படித்த  பாடப் புத்தகங்களில் சிவாஜி ஔரங்கசீப்பால் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு கைதியாக்கப்பட்டுப் பின் தப்பித்தார் என்று படித்திருக்கிறோம்.

இந்நூல் வேறுவிதமாகக் கூறுகிறது.

’தில்லிக்கு வந்தவுடன் சிவாஜியைக் கைது செய்து கொன்றுவிட வேண்டும் என ஷாயிஸ்தாகானின் மனைவி ஔரங்கசீப்பைக் கேட்டுக் கொண்டாள். இதனால் சிவாஜியின் கூடாரங்கள் கண்காணிக்கப்படுகின்றன இருளைச் சாதகமாக்கி சிவாஜி தப்பித்தார். அதை அறிந்த பலர் ஔரங்கசீப்பின் உதவி இல்லாமல் சிவாஜி தப்பிச் சென்றிருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர்’

என்று பெர்னியர் எழுதுகிறார்.

ப்ரையர் எனும் சரித்திர ஆசிரியர் கருத்தாக பின் குறிப்பில்  கூறப்படுவதும் கவனிக்கத்தக்கது.

“ஔரங்கசீப் சிவாஜியை அன்புடன் நடத்தி வழிக்குக் கொண்டுவர நினைத்தார். ஆனால் அரண்மனை மகளிர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அரண்மனையை விட்டு கூலியாட்களின் முதுகின் மீது செல்லும் சுமையுடன் சுமையாக சிவாஜியை ஔரங்கசீப் வெளியே அனுப்பி விட்டார்.”

சில இடங்களில் பெர்னியர் பிரான்ஸ் தேசத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். காதலைப் பற்றி அவர் ஒப்பிடுவது கவனிக்கத்தக்கது.

”பிரான்ஸ் தேசத்தைப் பொருத்தவரை காதல் லீலை என்பது விளையாட்டாகவே எடுத்துக் கொள்ளப்படும். அது ஒரு நகைப்புக்குரிய விஷயம் மட்டுமே;

ஆனால் இந்தியா போன்ற இடங்களில் காதல் என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு நிகழ்வு. காதல் தொடர்பான சம்பவங்கள் மிகப் பயங்கரமான விளைவுகளைக் கூட ஏற்படுத்தக் கூடும்.’

என்ற அவர் கூற்று அவர் மொகலாயப் பேரரசில் நிலவிய பல்வேறு காதல் நிகழ்வுகளை எப்படி உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

பெர்னியர் வாசகனோடு நேராகவே பேசுகிறார்.

”காதல் லீலைகளை விவரிப்பவன் என என்னைத் தவறாக நினைத்து விட வேண்டாம். நான் சொல்வது வரலாறு. மக்களின் வாழ்க்கை முறை பற்றி விவரிக்கவே நான் விரும்புகிறேன்.”

”பின்னால் நடக்கவிருக்கும் சம்பவங்களைப் புரிந்து கொள்ள முடியும் என நினைத்தே இந்தச் செய்திகளைச் சொல்கிறேன். மேலும் இந்தச் செய்திகளை என்னால் விட்டுவிட இயலாது.’

”இரு படைகளும் சந்தித்த உடனேயே உக்கிரமான போர் தொடங்கி விட்டது. இந்தப் போரை வர்ணித்து வாசகர்களைத் தாமதப்படுத்த நான் விரும்பவில்லை. இரு தரப்பிலும் போர் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.’

என்றெல்லாம் பெர்னியர் எழுதிச் செல்வது வரலாற்று நிகழ்வுகளை ஒரு புதினத்தைப் படிப்பது போல உணரச் செய்கிறது.

ஔரங்கசீப்பிடம் தோற்று ஜஸ்வந்த்சிங் தன் இருப்பிடம் வருகிறார். ஆனால் அவர் மனைவியோ அவரை உள்ளேநுழைய அனுமதிக்காமல் கோட்டைக் கதவுகளை மூடச் சொல்கிறாள்.

”அவமானத்தோடு கௌரவம் மிக்க இந்த அரண்மனையில் அவர் நுழையக் கூடாது. போரில் வெற்றிபெற வேண்டும் அல்லது வீர மரணம் அடைய வேண்டும்.” என்று கூறிய அவள்,

 

‘எனது கணவர் இறந்துவிட்டார். சிதை மூட்டுங்கள்’

எனப்புலம்புகிறாள். இந்நிலை எட்டு அல்லது ஒன்பது நாள்கள் நீடிக்க அவளை அவளது தாயார்  கடைசியில் சமாதானம் செய்கிறாள்.

இதைப் படிக்கும்போது புறநானூற்று வீரப் பெண்மணிதான் நினைவுக்கு வருகிறாள்.

பெர்னியர் போகிற போக்கில் எத்தியோபியா மன்னரின் அந்தப்புரம் பற்றிய ஒரு செய்தியைக் கூறுகிறார்.

அதாவது எத்தியோப்பியா மன்னருக்கு எண்பது குழந்தைகள் உண்டாம். அவர்கள் அந்தப்புரத்தில் கண்டபடி திரிந்து கொண்டிருப்பார்களாம். அவர்கள் கையில் வார்னிஷ் தடவப்பட்ட ஒரு தடி இருக்குமாம். அது எதற்கு என்றால் அடிமைகளின் குழந்தைகளிலிருந்தும் மற்றவர்கள் குழந்தைகளிலிருந்தும் பிரித்தறிவதற்கான ஏற்பாடாம்.

ஔரங்கசீப் தன் ஆசிரியர் முல்லாசாலி என்பவரிடம் கேட்ட சில கேள்விகளைப் பெர்னியரின் நண்பர் டானிஷ்மன்டகான் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டுவந்து பெர்னியரின் கூற அவர் அதைப் பதிவு செய்திருக்கிறார். அவை  மிகவும் முக்கியமானவையாகும்.

” நீங்கள் ஓர் அற்புதமான புவியியல் வல்லுனர்! மெத்தப் படித்த வரலாற்று ஆசிரியர்! ஒவ்வொரு நாட்டின் முக்கியமான விஷயங்கள் பற்றி எனது ஆசிரியர் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு நாட்டின் வளம் மற்றும் பலம் பற்றிச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? அந்த நாட்டின் போர்முறை, அரசாங்க அமைப்பு போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? நாடுகளின் அக்கறை அரசுகளின் தோற்றம், வளர்ச்சி, அழிவு, போன்றவற்றை பற்றிப் போதித்திருக்க வேண்டாமா? முக்கியமான நிகழ்வுகள், விபத்துகள், தவறுகள், மிகப் பெரிய மாற்றங்கள், பலம் வாய்ந்த மாற்றங்கள், புரட்சிகள் எப்படி நேர்ந்தன என்பதை விளக்கியிருக்க வேண்டாமா? ஒர் அரசனுக்குத் தேவையான ஏதவது ஒன்றையாவது எனக்குக் கற்றுத் தந்தீரா? எப்படி ஓர் ஊரை முற்றுகையிடுவது, போரில் எப்படி வியூகம் அமைப்பது, என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு நீர் கற்றுத் தந்தீரா?’

இப்படி கேட்கும் கேள்விகள் மூலம் ஔரங்கசீப் ஒர் அரசகுமாரன் கற்க வேண்டிய கல்வி முறை பற்றி ஒரு வரையறை வைத்திருந்தார் என்பதை உணர முடிகிறது.

கண்ணகி பாண்டியனிடம் நீதி கேட்டதுபோல ஒரு விதவைப் பெண் ஷாஜஹான் அரச சபையில் துணிவாகப் பேசி வென்றதையும் பெர்னியர் பக்கம் 151—இல் பதிவு செய்துள்ளார்.

ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மிக கவனிக்கத் தக்கவை. அவைபதிப்பாசிரியருடையவை.

அவற்றில் சில பெர்னியரின் எழுத்திலிருந்து மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு ”‘ஜீலம்’ நதி பற்றிப் பெர்னியர் சரியான தகவலைச் சொல்லவில்லை. அது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாரமுல்லாவை விட்டு வெளியேறி சீனாப் நதியில் விழுகிறது” என்று குறிப்பு கூறுகிறது.

ஔரங்கசீப் காஷ்மீரில் முகாமிட்டிருந்தபோது, எம்.டீ. மெர்வில்லிஸ் என்பவருக்கு பெர்னியர் எழுதிய ஒன்பது கடிதங்கள் முக்கியமானவை. அவற்றில் ஔரங்கசீப் பயணம் மேற்கொண்டபோது இருந்த புவியியல் சூழல், காஷ்மீரின் வருணனை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. அதேபோல நூலின் இறுதிப் பகுதியில் உள்ள 5 கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் 4 பிற்சேர்க்கைப் பகுதிகளும் பல புதிய செய்திகளைச் சொல்கின்றன.

அவற்றைக் கட்டுரையின் விரிவஞ்சி இங்கே ,குறிப்பிட முடியவில்லை.

மொத்தத்தில்  வரலாற்றின் பல புதிய செய்திகளை நாம் அறிந்து கொள்ள பெர்னியரின் குறிப்புகள் உதவுவதோடு, வாசிக்கவும் களைப்பு ஏற்படுத்தாமல் சுவாரசியமாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்புபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிகொலுநீங்காத நினைவுகள் – 36