ஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….

This entry is part 33 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பூஜைக்கு கியூ பிடித்து நின்றவர்களில் சிவசங்கரன் முதலாவதாக நின்றார். அவர் கோயில் தலைவர். ஆகவே ஐயனார் பூஜையில் அவருக்குத்தான் முதல் மரியாதை.
அந்த விசேஷங்கள் ஒன்றுமில்லாத நாளிலும் ஒரு பத்து பேர் கோயிலுக்கு வந்திருந்தது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலோர் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ஐயனார் கோயில் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஐயனாருக்கு விசுவாசமாகவும் பக்தியுடனும் இருப்பவர்கள் சிலர். ஐயனாரின் மகிமை தெரிந்து வெளியிலிருந்து புதிதாக வந்தவர்கள் சிலர்.

இது நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள இடம். கிட்டத்தட்ட புறம்போக்கு. பலர் இந்த வட்டாரத்தை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் நகர மத்தியில் நல்ல வேலைகள் பெற்றதும் புது வீடுகள் வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் காலி செய்து போன வீடுகளில் புதிதாக வாடகைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். அருகிலிருந்த ரப்பர் தோட்டத்தில் வாழ்க்கை செழிக்காது என்று புரிந்துகொண்டு நகர்ப்புறம் வந்தவர்களுக்கு இந்தப் பிரதேசம் முதல் புகலிடமாக இருந்தது. அவர்களிலும் பலர் ஐயனார் பக்தர் ஆனார்கள்.

ஐயனார் பெரிய தலைப்பா கட்டி கம்பீரமாகத்தான் இருந்தார். ஏந்திப் பிடித்த வாள் என்னாளும் தாழ்ந்ததில்லை. அவருடைய இரண்டு மனைவிகளும் பதிபக்தி குறையாமல் பக்கத்தில் நின்றபடி இருந்தார்கள். குதிரை ஒன்று இருந்தாலும் அது எலிபோலச் சிறுத்து அவர் காலடியில் இருந்தது.

களிமண்ணால் செய்யப்பட்ட இந்தச் சிலைகள் சிவசங்கரனின் சொந்தச் செலவில் செய்யப்பட்டவை. ஐயனார் அவருடைய குலதெய்வம். அவருடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தபோது தங்கள் கிராமக் காவல் தேவதையை மறவாமல் அவர்கள் குடியேறிய இடத்தில் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார்கள்.

காலம் மாறி சிவசங்கரன் இந்தப் பகுதிக்குக் குடிவந்தபோது ஒதுக்குப்புறமாக ஒரு ஐயனார் கோயில் இருப்பதைக் கேள்விப்பட்டு ஓடிவந்து வணங்கித் தன் தெய்வமாக ஏற்றுக்கொண்டார். உடனே தன் குடும்பத்தின் சார்பில் ஒரு ஆடு வெட்டி பூஜை வைத்து ஐயனாரைக் கவுரவப்படுத்தினார். பலகாலமாக ஐயனாரை அலட்சியப்படுத்தியிருந்த சுற்றியிருந்த ஜனங்கள் மிக ஆர்வமாக வந்து கலந்துகொண்டு ஐயனாரை வணங்கி ஆட்டுக்கறி தின்று மீண்டும் பக்தியில் திளைத்தார்கள். சிவசங்கரன் மேல் உள்ள மதிப்பும் அதிகமாயிற்று.

காலப்போக்கில் சிவசங்கரனின் வாழ்க்கையும் மிக மாறியிருந்தது. எல்லாம் முன்னேற்றம்தான். பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்குப் போனார்கள். இந்தப் பிரதேசத்தில் வாழப் பிடிக்காமல் அவர்கள் நகரத்துக்குப் போய்விட்டாலும் பெற்றோர் இருந்த பழைய வீட்டைப் புதுப்பித்து விரிவு படுத்திக் கொடுத்தார்கள்.

இதெல்லாம் ஐயனாரின் அருட்கொடை என்று நம்பிய சிவசங்கரன் அதற்குக் கைமாறாக ஒரு உள்ளூர் கோயில் சிற்பியைப் பிடித்து ஐயனாரின் உருவச்சிலைகளைப் புதுப்பித்து வண்ணம் பூசச் செய்தார். அந்தச் சிற்பிதான் குதிரையை எலி மாதிரி ஆக்கியவர். குதிரை பெரிசாக இருந்தால் ஐயனாருக்குச் சக்தி குறைந்துவிடும் என்று காரணம் கூறினார். என்னவோ தெரிந்தவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள்.

சிவசங்கரன் கூரையைப் பழுது பார்த்துக் கொடுத்தார். மீண்டும் ஆடு வெட்டி சிறிய திருவிழா நடத்தினார். அதே சூட்டில் பழைய ஆலய நிலத்தை நில அலுவலகத்தில் பதிவு செய்து கோயிலின் இருப்பை உறுதி செய்துகொண்டார் சிவசங்கரன்.
பிரதேச மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிவசங்கரனை அந்தக் கோயில் தலைவராக முழு மனதுடன் நியமித்தார்கள்.

ஆனால் சிவசங்கரனுக்கு மனதில் தீராக் கவலையொன்று இருந்தது. காரணம், ஓர் இரவில் ஐயனார் அவருடைய கனவில் வந்தார். நெருப்புப் போல தகதகவென்று இருந்தார். கையில் சூலம் வைத்திருந்தார். தலையில் ஜரிகை வைத்த பட்டுத் தலைப்பாகை.

“சாமி, நீங்களா? கும்பிட்றேன்!” என்று உணர்ச்சி வசப்பட்டார் சிவசங்கரன்.

“சிவசங்கரா! உனக்கு நான் குறை வச்சிருக்கேனா?” என்று கேட்டார் ஐயனார்.

“ஐயோ சாமி! அப்படிச் சொல்லலாமா? எனக்கு எல்லா செல்வமும் நீங்க கொடுத்ததுதானே!”

“அப்புறம் ஏன் சிவசங்கரா, என்ன ஒரு குடிசையில வச்சிருக்க? உனக்கு புது வீடு கட்டிக்கிட்டியே, எனக்கு புது வீடு வேணாமா?”

“சாமி…”

“எனக்கு ஒரு மாளிகை கட்டிக்கொடு சிவசங்கரா! எனக்கு எலி மாதிரி குதிர செஞ்சவன் யாரு? எனக்கு சீறிப்பாயிற குதிர வேணும்! என் தேவியருக்கு தங்க ஆபரணம் வேணும். செய்வியா சிவசங்கரா?”

“செய்றேன் சாமி, செய்றேன். என் வீட்டை வித்தாவது செய்றேன்!”

“செய்லன்னா தெய்வக் குத்தம் சிவசங்கரா! உனக்கு மாத்திரமில்ல. இந்த வட்டாரத்து ஜனங்களுக்கே தெய்வக் குத்தம்!”

“சாமி…” கதறி எழுந்தார். கனவு கலைந்தது.

இந்தக் கனவை மற்றவரிடம் விவரிக்கும் போதெல்லாம் அவர் மேலும் உணர்ச்சி வசப்படுவார். ஐயனாரின் வருணனை கொஞ்சம் மாறிக் கொண்டேயிருக்கும். சொல்லச் சொல்லக் கனவுக்கு வண்ணங்களும் மெருகும் ஏறும்.

ஆனால் கோயிலை விரிவு படுத்திக் கட்டுவதில் பெரிய சிக்கல்கள் இருந்தன. அவருடைய கனவு நிறைவேறாமலேயே இருந்தது. ஐயானாருக்குத் தீபம் காட்டும்போதெல்லாம் அவர் தம்மைப் பார்க்கும் போர்வையில் கோபக்கனல் தெறிப்பது போலத் தோன்றும். ஐயனாரிடம் மானசீகமாக மன்னிப்பு எப்போதும் கேட்டுக்கொள்வார். விரைவில் முடிக்கிறேன் என்று தவணை கூறிக்கொண்டே இருப்பார்.

பூஜை முடிந்து தீபம் வந்தது. சிவசங்கரன் தொட்டுக் கும்பிட்டு விபூதி பூசிக்கொண்டு வெளியே வந்தார்.

*** *** ***

கோயில் மிகச் சிறிய நிலத்தில்தான் அமைந்திருந்தது. குறுகலான இடம். ரெண்டாயிரம் சதுர அடிகள் இருக்கலாம். இடது பக்க பெரிய நிலம் சீனருடையது. அவர் காய்கறித் தோட்டம் போட்டிருந்தார். தோட்டத்தின் மூலையில் சின்னதாக ஒரு சீனர் கோயிலும் கட்டி வைத்திருந்தார். வலது பக்க நிலம் கிட்டத்தட்ட இருபதாயிரம் சதுர அடி. அது பெருமாள் அண்ணாச்சிக்குச் சொந்தமானது. அதில் ஒரு வீடும் சிறிய தோட்டமும் இருந்தன. வேலியடைத்து வைத்திருந்தார்.

வீடு பழையது. அதை சொற்ப வாடகைக்கு விட்டிருந்தார். நிலம் சும்மாதான் கிடந்தது. சில தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் இருந்தன. கவனிக்காமல் விட்டுக் காடாகக் கிடந்தது. அதை வாங்கிப் போட்டால் ஐயனார் கோயிலை விரிவு படுத்தலாம். நிலத்தை வாங்கப் பணம் திரட்டலாம். ஐயனார் பக்தர்களில் சிலர் வசதி படைத்தவர்கள். கொடுப்பார்கள். சிவசங்கரனும் தன் வீட்டை விற்றுப் பணம் திரட்டத் தயாராக இருந்தார். ஆனால் பெருமாள் அதை விற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. முதலில் அந்தப் பேச்சையே தட்டிக் கழித்து விட்டார்.

பின்னொரு நாள் ஐயனார் கோயிலை விரிவு படுத்த பெருமாளின் நிலத்தைக் கேட்டு சிவசங்கரன் அவர் வீட்டுக்கே வந்தபோதும் பெருமாள் பிடிகொடுத்துப் பேசவில்லை. “கோயில் கட்டுறது நல்ல காரியந்தான், இல்லைங்கில! ஆனா இப்போதைக்கு என் நிலத்தக் கொடுக்க முடியாது. நீங்க வேற ஏற்பாடு பண்ணிக்கிங்க!” என்றார்.

சிவசங்கரனின் கமிட்டி கூடி ஆலோசித்தது. “கோயில் கட்டுறது நல்லதுங்கிறாரு! ஆனா இப்போதைக்கு குடுக்க முடியாதுங்கிறாரு. வெளங்கிலிய!” என்றார் ராஜண்ணன்.

பெரியசாமி கமிட்டி உறுப்பினர்களில் மிக மூத்தவர். அவருக்கு 75 வயதாகிறது. பெருமாளை அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் சொன்னார்: “ அதெல்லாம் ஒண்ணுமில்ல தலைவர! உங்களுக்கு நிலம் ரொம்ப அவசியமாத் தேவைப்படுதுன்னு அவருக்குத் தெரிஞ்சி போச்சி! ஆகவே கொஞ்சம் கூடப் பணம் கறக்கலாமேன்னு அடி போட்றாரு! எனக்கு அந்த ஆள நல்லாத் தெரியுமே! பணம் பணம்னு அலையிற ஆளு!”

ஆறுமுகம் செயலாளர். அவர் சொன்னார்: “அப்படி இல்ல தலைவர! அவருக்கு நல்ல பணமும் செல்வாக்கும் இருக்கு! ஆனா உங்களப் போல ஒரு கண்ணியமான பதவி இல்ல! ஒரு வேள புதிசா நாம கட்டப்போற கோயிலுக்கு தலைவரா வர ஆசைப்படலாம். அதுக்குத்தான் அடிபோட்றாருன்னு நெனைக்கிறேன்!”

சிவசங்கரனுக்குத் திக்கென்றது. “அப்படியா சொல்ற ஆறுமுகம்? ஆனா அவரு நம்ப கோயில் பக்கமே வர்ரதில்லியே! அப்புறம் எப்படி…?”

“இது என்னா ஒரு 50, 60 பேர் வர்ர குட்டிக்கோயிலு! ஆனா பெரிசாக்கின பின்ன ராஜகோபுரம், விமானம் எல்லாம் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணும்போது ஆயிரக்கணக்கில ஜனம் வருமா இல்லையா? அதுக்குத் தலைவரா இருந்து பரிவட்டம் கட்டிக்க யாருக்கு ஆசையிருக்காது சொல்லுங்க?”

ஆறுமுகம் தெரிந்துதான் சொல்லுகிறாரா, அல்லது கற்பனையாக ஏதும் அளக்கிறாரா என சிவசங்கரனால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அவர் சொல்வது உண்மையானால் தன் பதவிக்கு ஆபத்துக் காத்திருக்கிறது என அவருக்கு விளங்கியது. ஒரு கணம் திகீல் என்றது.

ஆனால் அடுத்த கணம் அவருடைய பரந்த மனம் வேறுமாதிரி யோசித்தது. பதவி போனால் என்ன? அது ஐயனார் சித்தமாயிருந்தால் போகட்டும். பெருமாள் மனசு வைத்து நிலத்தைக் கொடுத்தாரானால் ஐயனாருக்கு மாளிகையே கட்டிவிடலாம். பெருமாளே தலைவராக இருக்கட்டும். தனது பதவி போனால் பரவாயில்லை. தன் மனதுக்குள் மானசீகமாக அவர் ஐயனாருக்கு எழுப்பி வைத்திருக்கும் கோயிலிலிருந்து அவரை யாரும் அகற்ற முடியாது.

“ஆறுமுகம்! நீ சொல்றது உண்மையானா என்னுடைய பதவிய விட்டுக் குடுக்க நான் தயார். நானே போய் தனியா அவர்கிட்ட இதச் சொல்லிப் பேசிறேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்!”

*** *** ***

பெருமாள் அண்ணாச்சி அந்த வட்டாரத்தில் மிகப் பசையுள்ளவர். இரண்டு நகைக் கடைகள் வைத்திருந்தார். சில வீடுகளும் வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். அவர் பிள்ளைகளும் வியாபாரத்தில் இருந்தார்கள்.

அவர் கடையில் ஓய்வாக இருக்கும் ஒரு நாளில் சிவசங்கரன்அவரைப் போய்ப் பார்த்தார். பெருமாள் அவரை வரவேற்று கடையில் உள்ளே தன் தனி அறைக்கு அழைத்துச் சென்றார். சுகமான குளிர்பதனம் செய்யப்பட்ட அறை. அறையில் அவருக்கென ஒரு லெதர் நாற்காலி இருந்தது. அதன் பின்னால் ஒரு பெரிய வெங்கடாசலபதி படம் இருந்தது. அவர் கடவுள் பக்தராக இருப்பது தனக்கு சாதகம்தான் என சிவசங்கரன் எண்ணிக்கொண்டார்.

“என்ன விஷயம் சிவசங்கரன்? இவ்வளவு தூரம் என்னத் தேடி வந்திருக்கீங்க!” என்று விசாரித்தார்.

“எல்லாம் தெரிந்த விஷயந்தான் அண்ணாச்சி! மிந்தியே பேசியிருக்கோமே! நம்ம கோயில் பக்கத்தில இருக்கிற உங்க நெலம் விஷயம்தான்…!”

பெருமாள் சிரித்தார். “ஓ அதுவா? அதுதான் சரிப்பட்டு வராதுன்னு நான் மிந்தியே உங்களுக்கு சொல்லிட்டேனே….” என்றார்.

“பெருமாள் அண்ணாச்சி அப்படிச் சொல்லக்கூடாது. இது சாமி காரியம். நாம் எல்லாம் சேர்ந்து செய்யவேண்டியது. புண்ணியம்!”

“ஆமா, ஆமா! நான் இல்லைங்கில. ஆனா நெலத்தக் குடுக்கிறதில பல சிக்கல் இருக்கு…”

“என்ன சிக்கல் இருந்தாலும் தீத்துக்கலாம் அண்ணாச்சி. வெலயப்பத்திக் கவலப்படாதீங்க. சந்தை விலை என்ன இருக்கோ அத நாங்க எப்பாடுபட்டாவது கொடுத்திடுரோம்!”

பெருமாள் சிவசங்கரனைக் கூர்ந்து பார்த்தார். “பாருங்க சிவசங்கரன். வெல ஒரு பிரச்சினையில்ல! நானும் சாமி பக்தன்தான். பாத்தீங்கள்ள..!” பின்னால் திரும்பி வெங்கடாசலபதி படத்தை நோக்கிக் கும்பிட்டார். சிவசங்கரனும் நாற்காலியை விட்டு ஓரங்குலம் எழுந்து மரியாதையோடு ஒரு கும்பிடு போட்டு அமர்ந்தார்.

“சரியான கடவுள் கைங்கரியத்துக்கு நான் நெலத்த சும்மா கூடக் குடுத்திடுவேன். ஆனா என் மனசில ஒரு ஆசை இருக்கு. அத உங்ககிட்ட சொல்லத் தயக்கமும் இருக்கு!” என்றார்.

சிவசங்கரனுக்குப் புரிந்துவிட்டது. ஆறுமுகம் சொன்னது இட்டுக் கட்டியது அல்ல. உண்மைதான். அண்ணாச்சிக்கு கோயில் தலைவராகும் ஆசை வந்துவிட்டது. ஆனால் பெருமாள் வாயிலேயே அந்த ஆசை வெளிப்படட்டும் எனக் காத்திருந்தார். பெருமாள் தொடர்ந்து பேசினார்.

“நானே அந்த நெலத்த ஒரு கோயில் கட்டத்தான் விட்டு வச்சிருக்கேன். ஆனா என் எண்ணமும் நெறவேறாமலேயே கெடக்குது!”

சிவசங்கரனுக்கு பட்டென்று உறுதிப்பட்டுவிட்டது. உற்சாகமாகப் பேசினார்.

“அப்புறம் என்ன அண்ணாச்சி? இதுக்கு ஏன் தயக்கம்? நாம் ரெண்டு பேருமே கோயில் கட்டுற விஷயத்தில ஒரே லட்சியத்திலதான் இருக்கோம். சேந்தே கட்டிடுவோம்!”

பெருமாள் பேசாமல் இருந்தார். சிவசங்கரன் அவருடைய மௌனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

“சரி, சரி! எனக்கு விளங்குது அண்ணாச்சி. அப்படி கோயிலப் பெரிசாக்கிட்டா யாரு அந்தக் கோயிலுக்குத் தலமை வகிக்கிறது அப்படின்னு நெனைக்கிறீங்க. ஐயனார் எனக்குக் கனவில கோயில் கட்டிக் குடுன்னு சொன்னாரு. ஆனா கோயிலுக்கு நீதான் தலமைன்னு சொல்லல. இதில என்ன அண்ணாச்சி! உங்க தலைமையிலேயே கோயில் கட்டடக் குழு அமைச்சிடலாம். பின்னால கோயிலுக்கும் நீங்களே தலைவரா வாங்க! என்னுடைய முழு ஆதரவு உண்டு. ஐயனாரோட எண்ணமும் அப்படித்தான் இருக்குன்னு நெனைக்கிறேன்!” என்றார்.

“அப்படியா! ரொம்ப சரி. நீங்க இவ்வளவு சுலபமா விட்டுக் குடுத்தது பெரிய விஷயம். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஜாம்ஜாம்னு கோயில் எழுப்பிடலாம். ஆனா…”

“ஆனா…?”

“அது வெங்கடாசலபதி கோயிலாத்தான் இருக்கணும்!”

சிவசங்கரன் திகைத்தார். அப்புறம் கேட்டார்: “வெங்கடாசலபதி கோயிலா? அப்ப ஐயனார்?”

“ஐயோ! அதெல்லாம் வேணாம் சிவசங்கரன். நம்ம முழுமுதல் தெய்வம் வெங்கடாசலபதி இருக்கும்போது ஏன் இந்த சிறு தெய்வங்களெல்லாம்?”

இதயம் மறத்துப்போய் எழுந்திருக்கவும் முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே சோர்ந்திருந்தார் சிவசங்கரன். அப்புறம் பெருமாள் அண்ணாச்சி தொடர்ந்து என்ன பேசினார் என்பது சரியாகக் காதில் விழவில்லை.

*** *** ***

கோயில் தலைவராக இருக்கும் தன் பதவி புதிய கோயில் கட்டுவதில் பறிபோவதில் சிவசங்கரனுக்குக் கொஞ்சமும் கவலையில்லை. ஆனால் அதனால் ஐயனாரின் பதவியே பறிபோகும் என்றால்? அவரால் அதனை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

பெருமாள் அண்ணாச்சியிடமிருந்து தான் பெற்ற தகவல்களைக் கமிட்டியோடு பகிர்ந்து கொண்டார் சிவசங்கரன்.

“ஆளுக்கு உள்ளுக்குள்ள என்ன ஆசை பார்த்தீங்களா ஐயா? ஐயனார் இருக்கிற இடத்தில வெங்கடாசலபதியக் கொண்டு வந்து உட்கார வைக்கணும்னு பாக்கிறாரு!”

“ஆமா! ஏழைகள் தெய்வம் உள்ள எடத்தில பணக்கார தெய்வத்தக் கொண்டு வந்து வைக்கப் பாக்கிறாங்க! இப்ப இந்த ஏரியாவில்தான் பாக்கறோமே! இங்கிருந்து டவுனுக்குக் குடிமாறிப்போற ஜனங்களோட நெலத்தயெல்லாம் எங்கோ இருந்து வர்ர பணக்காரங்க சுலபமா, சீப்பா வாங்கிப் போட்டுக்கிறாங்க. பின்னால வெலவந்தவொண்ண விப்பாங்க! அவங்களுக்கு எல்லாமே பணமும் வியாபாரமும்தான்” என்றார் பெரியசாமி.

ராஜண்ணன் கேட்டார்: “ஏன் தலைவர! பெருமாள் அண்ணாச்சிக்கிட்டதான் அவ்வளவு பெரிய நெலம் இருக்கே! அப்ப அவரு தன் இஷ்டத்துக்கு ஒரு கோயிலக் கட்டிக்கவேண்டியதுதான?”

சிவசங்கரன் சிரித்தார்.” அங்கதான் சூட்சுமம் இருக்குது ராஜண்ணன்! அதுவும் ஐயனார் மகிமைன்னுதான் சொல்லணும்.”

“எப்படி ஐயனார் மகிமை? ஐயனார் என்ன செஞ்சாரு?”

“என்ன செஞ்சாருன்னா, தன்னுடைய சின்ன இருப்பிடத்துக்கு நம்ப மூலியமா அரசாங்கத்தக் கேட்டு கோயிலுக்கின்னு தனிப் பட்டா வாங்கிட்டாரு!”

“ஆமா. அதினால?”

“அதினால பக்கத்திலேயே இன்னொரு புதிய கோயிலுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்க முடியாதுன்னு சொல்லிடிச்சி! அதெல்லாம் பெருமாள்அண்ணாச்சி முட்டி மோதி பாத்திட்டுதான் இப்படி அசந்து உக்காந்திட்டாரு. இப்ப அவரு கோயில் கட்டணும்னா நம்ம கோயிலோட இணைச்சுக்கிறதுதான் வழி!”

“அப்ப ஐயனார் ஒரு பிரேக் போட்டு வச்சிருக்காருன்னு சொல்லுங்க!” என்று சிரித்தார் ராஜண்ணன்.

“ஆமா! ஆனா அதினால என்ன பிரயோஜனம்? பெருமாள் அண்ணாச்சி நிலத்தக் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டா நாம அவர வற்புறுத்த முடியாது. கோயில விரிவு படுத்த வழியே இல்ல!” சிவசங்கரன் சோர்ந்து பேசினார்.

பெரியசாமி சொன்னார்: “அது எப்படி வழி இல்லன்னு நீங்க சொல்ல முடியும்? மொதல்ல பாழடைஞ்ச கோயில்ல ஐயனார் இருந்தாரு. கோயில சுத்தப்படுத்தவும் வெளக்கேத்தவும் கூட ஆள் இல்ல. அப்படிக் கிடந்தப்போதான் நீங்க இந்த இடத்துக்குக் குடிவந்தீங்க! ஐயனார்தான் உங்கள இங்க கொண்டுவந்து தன்னோட கோயிலச் சீர்படுத்திச் செழிப்பாக்கிட்டாரு. அப்படி செஞ்சவரு தேவையானா இப்பக் கோயிலப் பெரிசாக்க ஒரு வழி காட்டாம இருக்க மாட்டாரு!”

“ஆமா, ஆமா! நீங்க சொல்றது ரொம்பச் சரி!” சிவசங்கரன் பெருமிதப் புன்னகை புரிந்தார். மௌனமாக கோயிலை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்.

அப்போதுதான் கோயிலின் வாசலில் ஒரு சீனர் நிற்பதைப் பார்த்தார். அவர் பக்கத்துக் காய்கறித் தோட்டத்தின் சொந்தக்காரர் போலத் தெரிந்தது.

*** *** ***

“எங்க தாவ் சமயத்தில பல கடவுள்கள் இருக்கிறாங்க. ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுள். எல்லாரையும் நாங்க வணங்குவோம். நீங்க இந்துக்களும் பல கடவுள் உருவங்கள வச்சிருக்கீங்க. ஆகவே அந்தக் கடவுள்களையும் நாங்க எங்க கடவுள்களாகவே நெனச்சி வணங்குவோம்! அதில நாங்க வேறுபாடு பாக்கிறதில்ல” என்றார் லீ. கொஞ்சம் உடைந்த மலாய் பேசினார். ஆங்கிலம் சுத்தமாகத் தெரியவில்லை.

“ரொம்ப சந்தோஷம் திரு லீ. இவர் எங்க குல தெய்வம். ஐயனார்னு பேர். எங்க பூர்வீகக் கிராமத்துக் காவல் தெய்வம்” என்று விளக்கினார் சிவசங்கரன்.

“தெரியும். எங்களுக்கும் காவல் தெய்வங்கள் உண்டு. குவான் குங் அப்படின்னு ஒரு கடவுள். எங்க புராணத்தின்படி எல்லா தீய சக்திகளையும் அண்ட விடாம காக்கிற கடவுள் குவான் குங்.”

“நீங்க இங்க வர்ரதப் பாத்திருக்கேன். ஆனா பேச சந்தர்ப்பம் கிடைக்கல. பக்கத்தில உள்ள நிலம் உங்களுடையதா? ஒரு கோயில் கூட இருக்கு போல இருக்கே?”
“ஒரு சின்னக் குடிசையில மூணு தெய்வங்களக் குடி வச்சிருக்கேன். யூ ஹுவாங், அவர் சொர்க்கத்துக்கு அதிபதி. யுவான் ஷி தியன் சுன் – இவரு அவருக்கும் பெரியவர்; சான் ச்சிங் – மூணு பரிசுத்த தேவர்கள்.”
“அடடே, எங்க மும்மூர்த்திகள் மாதிரி இருக்கே!”

“அவங்களுக்கெல்லாம் என் நெலத்திலேயே பெரிய அளவில கோயில் கட்டி சீரும் சிறப்பும் செய்யணும்னு எனக்கு ஆசை. ஆனா இங்க உங்க கோயிலுக்கு அனுமதி கொடுத்திட்டதினால இன்னொரு கோயில் இந்தப் பிரதேசத்தில கட்ட முடியாதுன்னு அரசாங்கத்தில சொல்லிட்டாங்க! என்ன செய்றது?”

“மிஸ்டர் லீ, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே!” என்றார் சிவசங்கரன்.

“பேசலாமே!” என்றார் லீ.

*** *** ***

ஐயனாரின் அருளோடும் யூ ஹுவாங்கின் ஆசியோடும் எழுந்திருக்கும் புதிய கோயிலுக்கு “அருள்மிகு ஐயனார் – வினைதீர்க்கும் யு ஹுவாங் சமரச சன்மார்க்க ஆலயம்” என்று பெயர் சூட்டப்பட்டு விரைவில் இந்து முறைப்படி கும்பாபிஷேகமும் சீன முறைப்படி புனிதச் சடங்கும் ஒரே நாளில் நடைபெறவிருக்கின்றன.

(முடிந்தது)

(ரெ.கார்த்திகேசு)

Series Navigationசிதைவிலும் மலரும்பழமொழிகளில் மனம்
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *