ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு

This entry is part 14 of 15 in the series 5 ஜூன் 2016

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் ‘தீராநதி’ இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.

 

மாத இதழ் இது. ஜூன் 2016 முதல் இதழ். பிரபஞ்சனின் நேர்காணலில் அவருடைய தனித்தன்மையான ஒரு கவனத்தை மறுபடி காண்கிறோம். பெண் படைப்பாளிகளை கவனிப்பதோ பாராட்டுவதோ மூத்த எழுத்தாளர்கள் தவிர்ப்பது. பிரபஞ்சன் எப்போதுமே அதில் விதிவிலக்கானவர். நேர்காணலிலும் தீவிர பெண் படைப்பாளிகளைப் பாராட்ட மறக்கவில்லை. எழுத்தைத் தாண்டி ப்ரேமா ரேவதி, பாப்லோ அறிவுக்குயில், சுகிர்தராணி, ம.காமுத்துரை, சந்திரா, சரவணன் சந்திரன் ஆகியோரின் ஆர்வங்கள், தொழில் பற்றிய பதிவுகள், ஆளுமைகளில் விக்கிரமாதித்தியனின் படைப்பு மற்றும் ஆளுமை பற்றிய அலசல்கள் அடுத்தவை. யமுனா ராஜேந்திரன் நூல் மதிப்புரைக்கு தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலை எடுத்து, இலங்கையின் போர்கள் குடும்பம் மற்றும் பெண்களின் மணவாழ்வின் மீது கொண்ட தாக்கத்தை நாவல் கூர்மையாய் வெளிப்படுத்துவதைச் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதையின் வழிகள் என்னும் கட்டுரையில் ஜெயமோகன் புதுமைப்பித்தன் முதல் போகன் சங்கர் வரையான பல ஆளுமைகளின் படைப்புலக வழி தமிழ் சிறுகதையின் பயணத்தைப் பார்வையிடுகிறார்.  ‘மாணவப் பருவம் – போராடும் காலம்” என்னும் கட்டுரையில் இந்தியாவில் மாணவர்கள் அந்தக் காலம் முதல் தற்காலம் ஜேஎன்யூ போராட்டம் வரை களம் இறங்கியதை மையப்படுத்தி சமகால அரசியலில் அவரது நிலைப்பாட்டை முன்வைக்கிறார். இந்தக் கட்டுரை நேரடியாக அரசியல் பேசுகிறது. மிகவும் எதிர்ப்பார்ப்புடன் நான் வாசித்த ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ‘நாட்டிலொரு நாடகம் நடக்குது’ நவீனத்துவத்தின் மௌனம் நுட்பமான கதைசொல்முறைகளைக் கைவிட்டு அரசியல் பிரசாரத்தையே நேரடையாகத் தந்து அயர்ச்சி தருகிறது. கட்டுரைகளில் தேருவது சுகுணா திவாகரின் ‘ நூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் -தொடரும் சமகால சாதியச் சிக்கல்கள்’. சமூக நீதி என்னும் மாபெரும் கனவு அம்பேத்கர் கண்டது. அது நீர்க்கடிக்கப்பட்டதை. பிற்காலத்தில் அவர் பெயரில் சமூக நீதிகான குரல்கள் ஜாதி அரசியல் பேசுவதை, அந்த அரசியலுக்காக ஜாதி அடையாளங்களை அழுந்தப் பிடித்திருக்கும் சமகால அரசியலை விமர்சிக்கிறது. சுபகுணராஜன் வடிவேலுவையும் சாப்ளினையும் ஒப்பிடும் அதீதமான முயற்சியில் தோற்று விடுகிறார். சு.தமிழ்ச்செல்வி புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து பகுதியில் நம்பிக்கை தரும் பல சமகால பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார். பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய முக்கிய காலகட்டம் இது.  புதுமைப்பித்தனின் நாற்காலி, மேசை மற்றும் வெற்றிலைச் செல்லத்தின் புகைப்படத்தை அன்புடன் பகிர்கிறார் ட்ராஸ்கி மருது. நீச்சல் தொடர்பான அனுபவ நினைவு கூர்தலில் மகுடேசுவரன் தற்காலக் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டவற்றை வருத்தத்துடன் நினைவு படுத்துகிறார். சயந்தன் ‘புலம் பெயர் வாழ்வு- அகம் புறம் துயரம்’ என அனுபவம் பகுதியில் பகிர்பவை ஈழத்தை விட்டு நீங்கி பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கலாசார அன்றாட வாழ்க்கைச் சவால்களை நமக்குத் தெளிவு படுத்துகின்றன. போர் ஒரு இனத்தை பல தலைமுறைகளுக்குச் சூறையாடி விடுகிறது. ‘மன்னிப்பின் விலை என்ன?’ என ஒரு ஆவணப்படத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் நடந்த ஆணவக் கொலைகளை விமர்சிக்கும் கட்டுரை பாலு சத்யாவின் சம்பவம். ஆவணப் படங்கள் வழி ஒரு அதிர்வலை மட்டுமே நிகழும். ஒரு சமூகம் விவாதங்கள் மற்றும் சுயவிமர்சனம் வழி மட்டுமே தேக்கத்தைத் தாண்ட முடியும். யுவன் சந்திரசேகர் ‘சிங்கம் புணரி’ என்னும் சிறுகதையில் நவீனத்துவத்தின் வீச்சை அழகாகக் கையாண்டிருக்கிறார். தனது ஆண் என ஒரு பெண் ஒருவனை வரிக்கும் பிணைப்பு மிகவும் ஆழமானது. பெண்மையின் மிக முக்கியமான அம்சம் வெளிப்படுவது. அதை சிங்கத்தைக் குறியீடாக்கி மாய யதார்த்தத்தால் ஒரு பெண்ணின் வெளிக்கு வாசகனை இட்டுச் செல்கிறார். மாய யதார்த்தத்தைக் கையாள்வது சிக்கலானது. அதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்.

 

எந்த ஒரு இலக்கிய இதழும் இலக்கியத்துக்குச் செய்யும் பங்களிப்பில் விவாதங்கள் மற்றும் சமகால இலக்கியங்கள் பற்றிய விமர்சனங்கள் முக்கியமானவை. ஆளுமை வழி இலக்கியத்தை அணுகிய காலம் நவீன இலக்கியத்தைத் தேக்க நிலைக்குத் தள்ளியது. படைப்புக்கள் வழி -வடிவத்தையும் உள்ளடக்கதையும் மீறிச்செல்லும் தீவிரமான படைப்புக்களை கவனப்படுத்துவதன் வழி- ஒரு இலக்கியப் பத்திரிக்கை தமிழ் இலக்கியத்தை மேலெடுத்துச் செல்ல இயலும்.  சமகால இலக்கியம் பெறும் கவனம் வருங்கால வாசிக்கும் சந்ததி உருவாகவும் அசலான படைப்பாளிகள் தீவிரமாக இயங்கவும் வழி வகுக்கும். இந்த எதிர்பார்ப்பு தடம் பத்திரிக்கையிடமும் உண்டு.

Series Navigationகுறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *