ஏகாந்தம்

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2023

உஷாதீபன்                    

                                                    

மணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா?  தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ?

      ஏம்ப்பா இப்டித் தனிக்கட்டையா உட்கார்ந்திருக்கே? எங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கலையா? எங்களோட பேசப் பிடிக்கலையா? பேசவே மாட்டேங்கிறியே?

      யாரும் இந்நாள் வரை கேட்கவில்லை. கேட்க வேண்டும் என்று என் மனம் விழைகிறதா? பொருட்படுத்தவில்லையே என்கிற வருத்தம் எழுகிறதா? அப்படியானால் அந்தத் தனிமைக்கு ஏது பெருமை? அதன் மகத்துவம்தான் என்ன? தனிமை என்பது விரும்பி ஏற்றுக் கொள்வதல்லவா? தனிமையை, அமைதியை அனுபவிப்பது என்பது ஒரு யோக மனநிலையல்லவா? அலைபாயும் மனதை வைத்துக் கொண்டு தனிமையில் இருந்தென்ன பயன்? எல்லா இக பர இயக்கங்களிலிருந்து, சராசரிகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு மோன நிலையை எட்டுவதற்கான முயற்சியல்லவா அது? அந்த முயற்சிகளை மேற்கொள்வதும், அதில் தனித்துப் பயணிப்பதுமே ஒரு தனி சுகமல்லவா? இந்த லௌகீக எண்ணங்களிலிருந்து எப்படி விடுபடுவது? என்று விடுபடுவது? அதன் ஆரம்பப் படிநிலை அமைதியை, தனிமையை எட்டுவதல்லவா?

      அறைக் கதவை யாரோ மெல்லத் தயங்கித் தயங்கித் திறக்கும் சத்தம். தன் இருப்பு அறிந்து சுவடின்றி மறைதல்.  இதுவே ஒரு தொந்தரவுதான். தனிமை என்பது என்ன? அமைதி என்பதும்தான் என்ன? குறுக்கு நெடுக்கே யாரும் வராத, எந்தச் சத்தமும் எழாத அமைதி, தனிமை. அது கிடைக்க வேண்டாமா? ஒருங்கிணைந்த அல்லது ஒருங்கிணைக்க முயற்சிக்கும் தியானத்தைக் கலைக்க ஸ்தூல வடிவுத் தொந்தரவுகள்!

      தனியே உட்கார்ந்திருந்தால், தனிமைப் படுத்திக் கொண்டால், யாரையும் கண்கொண்டு பார்க்காதிருந்தால், யாருடனும் ஏறெடுத்து ஒரு வார்த்தை பேசாதிருந்தால் எல்லாம் கிட்டிவிட்டதாக ஆகுமா? அது எதன் மீதும், எவை மீதும், யார் மீதும் எந்த ஒட்டுதலும், பகைமையும் கொள்ளாத தன்மையல்லவா? எல்லாமும் சமநிலை. ஏற்ற இறக்கங்கள் என்பதற்கு அங்கே இடம் ஏது? தனிமையும், அதற்கான பயிற்சியும் தரும் மோனநிலை எத்தகைய மகத்துவமான ஒரு விலகல்?

யாரை யார் தனிமைப்படுத்துவது? அவரவர் சுதந்திரம் அவரவருக்கு. அந்தந்த வயசிற்கேற்றாற்போல் மனம் நாடும் சுதந்திரத்தை ஒருவன் மேற்கொள்ளக் கூடாதா? கடைசிவரை லௌகீகமாய் இருந்து கழித்துதான் மண்டையைப் போட வேண்டுமா? வெவ்வேறு படி நிலைகள் என்று பிறகு ஏன் வைத்திருக்கிறார்கள்? அந்தந்த வயதிற்கு அந்தந்த மனநிலை ஏற்படும் என்பதைக் கணித்துத்தானே? அந்த மனநிலையைப் பக்குவமாய் எய்துபவன் அதை நோக்கி நகர்வதில், நகர்த்திக் கொள்வதில், தன்னை நிறுத்திக் கொள்வதில் என்ன தவறு? மனம் ஒரு சீரான பயணத்தில் இருந்து கடந்து வந்திருந்தால்தானே உரிய காலத்திலான அந்த இடம் வந்து சேர்ந்திருக்கும்? தானே வந்து சேர்ந்த அந்த இடத்தை ஒருவன் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்வதில் என்ன முறைமை கெடுகிறது? அது காலம்வரை கடந்து வந்த தூரத்தை விட, அந்த இடம் ஒருவனை அதீதமாய் ஈர்க்கும்போது, ஆகர்ஷிக்கும்போது அவன் அங்கே நிலைப்பதில் யார் எதைச் சுட்ட முடியும்? என்ன குறைகாண முடியும்?

பக்குவமற்றவர்கள் ஒருவனைத் தனிமைப் படுத்தி விட முடியுமா? தனிமை என்பதும், தனிமைப்படுத்திக் கொள்தல் என்பதும் அத்தனை சராசரியாய் உணரப்பட வேண்டியவைகளா? இன்னொருவன் தன்னைத் தனிமைப்படுத்தி அதில் அவன் வெற்றி கண்டுவிட முடியுமா? சில  எளிய முடிவுகளுக்கு ஒரு மதிப்பார்ந்த விலை உண்டா என்ன? தோன்றி மறையும் சில, வந்து போகும் பல காலத்தால் காணாமல் போகும் மின் மினிகள். அதையெல்லாம் நினைந்து ஒருவன் தன்னை இளக்கிக் கொள்ள இயலுமா?

      தனிமை ஒரு தனி இன்பம். அங்கே எதிர்ப்பு என்பது இல்லை. இணக்கம் என்பதும் இல்லை. எதிர்ப்பைத் தானே உருவாக்கிக் கொண்டால்தான். அதற்கான எதிர்வினைகளை ஏற்படுத்தி அதில் இன்பமுறுவதும், திருப்தியடைவதும் தனி சுகம். தனிமைக்கு ஒரு நியாயம் வேண்டும். அந்த நியாயத்திற்கு ஒரு அர்த்தம் வேண்டும். அந்த நியாயம் தனக்கு மட்டுமே ஆனது. மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்த நியாயத்தின் அர்த்தம் மற்றவர்களால் உணரப்பட வேண்டும் என்கிற தேவையுமில்லை. அது தனக்கானது. தன்னால் உருவாக்கப்பட்டது. தனக்குத்தானே இன்பம் காணுவது. அதன் மதிப்பை எதிராளி அறிவதற்கில்லை. அறிந்து மதிக்கப்பட வேண்டும் என்கிற அவசியமுமில்லை.

      ஆனாலும் நான்கு பேரோடு சேர்ந்து ஜீவிக்கும்போது அந்தத் தனிமை அநியாயமாய்ப் பழிக்கப்படுகிறது. வெவ்வேறு காரணங்களால் அலட்சியப்படுத்தப்படுகிறது.  உருத் தெரியாமல் அலைக்கழிக்கப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அதன் இருப்பு மற்றவர்களால் உறுதி செய்யப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது. அழிக்க முடியாமல் சீண்டச் செய்கிறது. அல்லது கண்ணிலிருந்து மறைக்கச் செய்கிறது. கேலி கொள்கிறது. எள்ளி நகையாடப்படுகிறது.

      தான் ஆரம்பித்து வைத்தது, இப்போது தனக்கே எதிராகப் பாய்கிறதோ?. தனிமை பகையாக உருமாறுகிறதோ என்ற சந்தேகம் கிளர்ந்தது. தனிமையை யாரும் விரும்புவதில்லை. தனியாய் இருப்பவன் உட்பட. ஆனால் ஒருவனைத் தள்ளுகிறது அது. ஒதுங்கு என்று விரட்டுகிறது. ஏதோ ஒரு சூழல் அவனைக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. இணக்கம் காண்பிக்கிறது.  யார் கண்ணிலும் படாதே என்று மறைய வைக்கிறது.  தனியாய் இருப்பவனைக் காண விருப்பமில்லை எவருக்கும். அதற்கான அவசியம் இல்லை என்று கருதப்படுகிறது. தனியாய் இருப்பவன் தண்டச் சோறு என்ற கருத்து நிலவுகிறது. சிலாக்கியமான தொடுதல் கூட இல்லாதவன் இருந்தென்ன போயென்ன என்ற கருத்து பரவலாகிறது. சுற்றிலும் எளிய மக்கள், உறவுகள்…சராசரிகள்…பலரும் அப்படி இருக்கவே விரும்புகிறார்கள்.

      தனிமையே எதிராளிக்கு உபத்திரவமாய் இல்லாது இருப்பதுதான் என்பதற்கு எதிராக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நேரம் தவிர்த்து இருப்பின் தொலையட்டும் என்று ஏற்கப்படுகிறது.  .  தனிமையும் அமைதியும் விலையற்றுப் போய்க் கிடக்கிறது. அதன் மகத்துவம் உணரப்படுவதில்லை. சராசரியாய் இருந்து தொலைப்பதுதான் எல்லோர்க்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையை அலட்சியப்படுத்துதலிலும், தனித்திருப்பவனும் அலட்சியப்படுத்தப்படுகிறான். ஆனால் அது அவனால் பொருட்படுத்தப்படுவதில்லை. அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை. ஏனெனில் அவன் உலகம் தனி உலகம். அங்கே அவனை உணர்ந்தவர்கள் மட்டுமே காலடி வைக்க முடியும். அவனுக்கு ஒத்துழைக்க நினைப்பவர்கள் மட்டுமே அருகில் செல்ல முடியும். யாருமே இல்லையாயினும் தனித்திருப்பவன் எந்தவித மனத்தாங்கலுக்கும் ஆளாவதில்லை. எவரையும் நினைந்து நோவதில்லை. எதையும் நினைத்துக் குறைபட்டுக் கொள்வதில்லை. அவனியக்கம் அவன் உணர, தடையின்றி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

      தனிமைப் படுத்திக் கொள்வதும், தனிமையாய்க் கழிப்பதும் என்னுடைய முழு சுதந்திரத்தின்பாற்பட்டது. அதற்குள் யாரும் உள் நுழைய முடியாது. அந்தக் கோட்டையில், பரந்த உலகத்தில் நான் மட்டுமே இருக்கிறேன். அதை யாரும் சீர் குலைக்க முடியாது. அதை விமர்சிக்க முடியாது. அதன் மேன்மையை உணருவதற்குத் தனிப் பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் இருந்தால்தான் அதை மதிக்க இயலும். அதன் மகத்துவத்தை உணர இயலும்.

      என்னை விட்டு விடுங்கள். என் தனிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோர்க்கும் ஒரு நிலை உண்டு. அந்த நிலையை அவன் எய்துவதை உணருங்கள். அதன் மகத்துவத்தை அவன் தன் இருப்பின் மூலம் பிறருக்கு உணர்த்துகிறான். அதை ஆத்மார்த்தமாய் உணரப் பழகிக் கொள்ளுங்கள். அவன் தனிமையில், அதன் மோனத்தில் யாரும் இம்சிக்கப்படுவதில்லை. யாரும் எள்ளி நகையாடப் படுவதில்லை. எவரும் குறைத்து மதிப்பிடப் படுவதில்லை. எவரும் நெருக்கமோ, விலகலோ இல்லை. எதுவும் அங்கே சமம். எல்லாமும் அங்கே பரம். இல்லாதிருப்பதை நோக்கிச் செல்லும் ஏகாந்தம்.

      அவனை அவனாக இருக்க விடுங்கள். அந்த முயற்சியைக் குலைக்காதீர்கள். அந்த அமைதிக்குப் பங்கம் விளைவிக்காதீர்கள். அந்தப் பயணத்தைத் தடுக்காதீர்கள். அவன் போகட்டும். எதுவரை முடியுமோ அதுவரை போய்ப் பார்க்கட்டும். எங்கே நிலைக்குமோ அங்கே நின்று நிலைக்கட்டும். எந்த நிலை அவனை அடையாளப்படுத்துமோ அந்த நிலையை அவனாகவே எய்தட்டும். அங்கே பரிபூர்ணம் பிறக்கட்டும். அந்த முழுமையில் அவன் தன்னைக் கரைத்துக் கொள்ளட்டும்.

      ரமணன் தன் அமைதியை, தனிமையை, தியானத்தைத் தொடர்கிறான். அது அவனை இந்த இக பர இயக்கங்களிலிருந்து கைகோர்த்து, எங்கோ அழைத்துச் செல்கிறது. அங்கே அவன் தனியனாகிறான். எடையற்ற, இலகுவான, கண்ணுக்குத் தெரியாத, காதால் உணர முடியாத இயக்கமாகித் தன்னை அந்தக் ககனவெளியில் கரைத்துக் கொள்கிறான்.

      கதவு  மீண்டும் திறக்கிறது. தட்டில் பரிமாறப்பட்ட சாப்பாடு முன்னே வைக்கப்படுகிறது. அவர்கள் அவனை, அவன் தனிமையை, அமைதியை மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

                                    ——————————–

(ushaadeepan@gmail.com)

Series Navigationகனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்மௌனம் – 2 கவிதைகள்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *