[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++
அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2
++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]
சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு
இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்
நேரம் : பகல் வேளை
பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள், காஸ்ஸியோ.
[படகிலிருந்து இறங்கி வருகிறாள் மோனிகா, தோழியர், எமிலியோ, ஷைலக் சூழ]
காஸ்ஸியோ: பாருங்கள் ! வருகிறாள் வெனிஸ் கப்பல் கோமகள் மோனிகா, அனைவர் பார்வையும் அவள் பக்கம் தான். அடுத்து அருகில் தோழி எமிலியோ, புருனோவின் மனைவி. [மற்றவரைப் பார்த்து] மோனிகா முன் மண்டியிட்டு வந்தனம் செய்வீர். [மோனிகா அருகில் போய் ] வருக, வருக எழில் மாதரசி, புது மண மாதரசி. வானுலக வீனஸ் ஒளிமயம் உனக்கு முன்னும், பின்னும் , உன்னைச் சுற்றியும் மிளிர்கிறது.
மோனிகா : மிக்க நன்றி, மாவீரர் காஸ்ஸியோ. என்னருமை கணவர் எங்கிருக்கிறார் சொல்ல முடியுமா ?
காஸ்ஸியோ : இங்கு இன்னும் வரவில்லை ஒத்தல்லோ ஜெனரல். சீக்கிரம் இங்கு வந்து விடுவார் . நலமுடன் உள்ளார்.
மோனிகா : ஆனால் எனக்கு பயமாக இருக்குது. [கலக்கமுடன்] நீ இங்கே. அவர் எங்கோ ? எப்படி நீ தனித்து இங்கே அவரைப் பிரிந்து நிற்கிறாய் ?
காஸ்ஸியோ : கொந்தளிக்கும் கடலும், கோரப் புயல் காற்றும் எங்களைப் பிரித்து விட்டன மோனிகா. அதோ ஒரு படகு வருகுது. வரவேற்பு வெடி வெடிக்குது. [காவலன் ஒருவனிடம்] வருவது யாரெனத் தெரிந்து வா. [ போகிறான்]. [புருனோவை நோக்கி] கோபப் படாதீர் கோமானே , உமது மனைவியை நான் புகழ்வதற்கு. [எமிலியோ கையைப் பற்றி முத்தம் தருகிறான்.]
புருனோ: என்னோடு என் மனைவி உரையாடும் சொல் எண்ணிக்கை குறைவு. அந்த அளவு நீங்கள் முத்தமிட்டால் தான் , உங்களுக்கு மன நிறைவு உண்டாகும்.
மோனிகா: [புன்னகை செய்கிறாள் புருனோவைப் பார்த்து]
புருனோ: என் மனைவி மிகையாகப் புலம்பி பேசுவாள், நான் படுக்கையில் தூங்க முயலும் போது. [எமிலியாவுக்கு கோபம் வருகிறது] [மோனிகாவை நோக்கி] மேடம் மோனிகா ! நான் ஒப்புக் கொள்கிறேன். என்ன பேசுகிறாள் என் மனைவி என்று கவலை இல்லை எனக்கு. வாயைத் திறந்தால் அவள் வசை புராண மொழிகள் தான் கொட்டும் எதைப் பற்றியும் !
எமிலியோ: [சினங்கொண்டு] அப்படி என்னைப் பழிப்பது தகாத செயல் புருனோ.
புருனோ: இல்லை, இல்லை இனியவளே ! வெளியே பிறர் முன்பாக மாதர் ஓவியப் படம் போல் ஊமையாய் நிற்பர் ! ஆனால் வீட்டில் பெருத்த வாயாடியாய் இருப்பர் காட்டுப் பூனையைப் போல்.! [புருனோ பேசப் பேச எமிலியோ சினம் மிகுந்து வேதனை அடைகிறாள்] தெய்வீக மாதர் போல் நடிப்பீர், மற்ற மாதரை இகழும் போது. வீட்டுக்குள் நடப்பது எல்லாம் நிஜக் கடிப்பு.
மோனிகா: போடா போ வெட்கம் இல்லாதவனே.
புருனோ: நான் முரட்டு துருக்கி நாட்டவன் அல்லன். மாதர் காலையில் எழுந்ததும் படுக்கையில் என் மீது காதல் வயப்படுவார். ஆனால் எனக்கு மாதர் மீது காதல் எழாது.
எமிலியோ: [கனிவுடன்] நீ எனக்கொரு காதல் பாடல் எழுதுவாயா ?
புருனோ: உனக்கு நிச்சயம் எழுத மாட்டேன் .
மோனிகா: [புன்னகையுடன்] என்னைப் புகழ்ந்து ஒரு காதல் பாடல் நீ புனைந்தால் அது எப்படி எழுதுவாய் ?
புருனோ: என்னைக் கேட்காதே. ஜெனரல் ஒத்தல்லோ என்னைக் கொன்று விடுவார். எனக்கு குறை கூறத்தான் தெரியும்.
மோனிகா: முயன்று பார் புருனோ. சொல் எப்படி என்னை நீ பாட்டில் புகழ்வாய் ?
புருனோ: முயல்கிறேன், ஆனால் என் கற்பனை வேலை செய்ய மறுக்கிறது. பொன்னிறக் கூந்தல் அழகி, திறமையுடன் இருந்தால் புகழலாம். வெறும் திறமை மட்டும் இருந்து அதையே அழகாகக் காட்டினால் அது ஏற்புடமை ஆகாது.
மோனிகா: மெச்சுகிறேன் புருனோ, பொன்னிறக் கூந்தல் அழகி தனித்துவ கலைத் திறமை கொண்டிருந்தால் ?
புருனோ: பொன்னிறக் கூந்தல் அழகி திறமைசாலியாக இருந்தால் அவள் பெரிய மேதை ஒருவனைக் கவர்ந்து விடுவாள்.
மோனிகா: அப்படி எல்லாம் சொல்ல முடியாது புருனோ.
எமிலியோ: பொன்னிறக் கூந்தல் அழகி முட்டாளாக இருந்தால் ?
புருனோ: முட்டாள் பொன்னிறக் கூந்தல் அழகி பல ஆடவரை கவர்வாள். அவள் முட்டாள்தனமே கவர்ச்சி தருகிறது. [டிரம்பெட் முரசம் கேட்கிறது] அதோ ஜெனரல் ஒத்தல்லோ வருகிறார்.
[ரகசியமாக, ஆனால் கேட்கும் படி காஸ்ஸியஸ் காதில்] மோனிகா அருகில் நில் ! அவள் கையைப் பற்றி முத்தம் கொடு ! நல்ல தருணம் நழுவ விடாதே !
மோனிகா: [ அதிர்ச்சி அடைந்து விழிக்கிறாள். ] என்ன சொன்னாய் அயோக்கியனே !
[தொடரும்]
- கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்
- ஏகாந்தம்
- மௌனம் – 2 கவிதைகள்
- நேர்மையான மௌனம்
- இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!
- எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி
- சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3
- இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு
- ஆறுதல்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2
- முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்
- நாவல் தினை – அத்தியாயம் எட்டு CE 5000 CE 1800