நான் மனிதன் அல்ல

நான் மனிதன் அல்ல
This entry is part 3 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வசந்ததீபன்


ஒன்று
___________

நான் மனிதன் அல்ல ஐயா
மிருகமாக இருக்கிறேன்
இரு கால் மிருகம்
அதைப் பேச்சு வார்த்தையில்
மனு புத்ரன் _ அம்மாவைப் புணர்பவன் _ அக்காவைப் புணர்பவன் _
இழி சமூகம் எனச் சொல்கிறான்.

எல்லா நாட்கள் _
மாடுகளைப் போல  உழுகிறதற்கு
கை நிரம்ப பார்லி
கூலியாகக் கொடுக்கிறான்.

வாய் திறந்தால்
கோபமாய் பார்க்கிறான்
பழமொழியை உருவாக்குகிறான்
எறும்பு எப்போது இறக்கிறதோ
சிறகுகள் வளர்கின்றன அதற்கு என்று
இறப்பதற்காகத்தான் முண்டம்
கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்தது என்று
ஹு…ஆ…ஹு… ஆ…செய்கிறான்.

பஞ்சாயத்து தலைவன் என்று
வட்டாரத்தின் போலீஸ்
என்னுடைய உறவின சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று
பைத்தியம் என்று  _
பொதுவான மற்றும் சிறப்பான ஒவ்வொரு பாதை
எனது நாற்சந்தியில் வந்து முடிகிறது என்று…

இரண்டு
______________

நான் மனிதன் அல்ல ஐயா
மிருகமாக இருக்கிறேன்
இரு கால் மிருகம்
அதன் முதுகு நிர்வாணமாக இருக்கிறது.

தோள்களின் மீது…
சேறும் சகதியும் இருக்கிறது
பெரிய மூட்டை இருக்கிறது
கால்நடைகளின் முனகல்களாக இருக்கிறது
கைகளில்…
ரான்பீ _ ஸுதாரீ இருக்கிறது
தட்டு _மேசன் கரண்டி இருக்கிறது
அச்சு இருக்கிறது _ அல்லது
மீன் பிடிப்பதற்கான தூண்டில் இருக்கிறது.

பக்கத்தில்…
மூஞ்ஜ் இருக்கிறது _ சோளம் இருக்கிறது
தஸ்லா இருக்கிறது _ குர்பி இருக்கிறது
உளி இருக்கிறது _ சுத்தியல் இருக்கிறது
விளக்குமாறு இருக்கிறது _ இழைப்புளி இருக்கிறது _ அல்லது
பூட் பாலிஷ் தொழில் இருக்கிறது
சாப்பிடுவதற்கு எச்சில் இருக்கிறது
குளத்துத் தண்ணீர் இருக்கிறது
வைக்கோல் படுக்கை இருக்கிறது
முகத்தின் மேல்
சுடுகாட்டின் அழுகை இருக்கிறது
கண்களில் பயம்
வாயில் கடிவாளம்
கழுத்தில் கயிறு இருக்கிறது
அதை நாங்கள் அறுக்கிறோம்
வாய் வெடிக்கிறது மற்றும்
கட்டப்பட்டு வாழும் போது
மூச்சு திணறுகிறது.

🦀

(1) ரான்பி :
_____________


தோல் செதுக்க, உரிக்க அல்லது சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இரும்புக் கருவி.


(2) ஸுதாரீ :
_________________


தோலைத் தைப்பதற்காக செருப்பு தைப்பவர்கள பயன்படுத்தும் கூர்மையான முனை கொண்ட மரக்கட்டையில் குத்தியிருக்கும் ஊசியாலானகருவி. அது நுட்பமாக குத்தி நூலை தோலின் கீழிருந்து மேல் இழுக்கும்.


3.மூஞ்ஜ் :
___________


கடினமான  ஆசிய  புல், இதிலிருந்து உறுதியான கயிறுகள் தயாரிக்கப்படுகிறது.


4.குர்பி :
_________


சிறிய தோட்டங்களில் அல்லது காய்கறிப் பண்ணைகளில் மண்ணைத் தோண்டுவதற்கும் களையெடுப்பதற்கும்  பயன்படும் கருவி.

🦀

ஹிந்தியில் :  மல்கான் சிங்
தமிழில் : வசநததீபன்

🦀

மல்கான் சிங்

________________________

தலித்திய கருத்தாடல்களின் சிறந்த கவிஞரான மல்கான் சிங். ஹிந்திக் கவிதைகளில் தலித்துகளின் குரலாக இருந்தவர் கவிஞர் மல்கான் சிங். ‘கேள் பிராமணா’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் தலித் கவிதைகளின் மொழிக்கும், கலைக்கும், சொல்லுக்கும் புதிய நடையைக் கொடுத்தார்.

1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில் பிறந்தார். 04 ஜூன் 2019 மரணமடைந்தார். 

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் வலுவான குரலாக அவர் இருந்தார்.

அவரது முக்கிய படைப்புகளில் சில வெள்ளை யானை, பிராமணனே, முழு யுகமும், ஒரு நாள் கழிச்சல், சுதந்திரம் மற்றும் எரிமலையின் வாய்.

Series Navigationவேலிசுழலும் பூ கோளம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *