அமர்நாத்
அன்புமணிக்கு வாரக்கடைசி என்றால் வேலையில் கெடுபிடி. அத்துடன், அந்தத் திங்கள்கிழமைக்கு முந்தைய தினம் ப்ரபாகர் இல்லத்தில் ஒரு பெரிய விருந்து. சமையலறையின் பின்கதவுடன் நின்றுவிட்ட வீட்டை நீட்டிப் பெரிதாக்கியதற்காக. கொண்டாட்டம் முடிய பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அவனுக்கு அதிகப்படி ஓய்வு அவசியம் என யாமினி ஓசைப்படாமல் தனக்கும் அனிதாவுக்கும் மதிய உணவு தயார்செய்து பைகளில் வைத்தபோது அவன் எழுந்துவந்தான்.
‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே’ என்று சொல்ல வந்தவள் அவன் முகத்தின் அதிருப்தி கலந்த ஏமாற்றத்தைக் கவனித்து,
“இரண்டு டோஸ்ட்?”
உடன்பாடாகத் தலையசைத்தான்.
எல்லா மதங்களையும் வரலாற்று நோக்கில் பார்ப்பது பேராசிரியர் யாமினியின் கடமை. விசுவாச குடும்பத்தில் வளர்ந்தவன் அன்புமணி. ஆனாலும் முந்தைய மாலை அவன் மனதின் சமனநிலையைப் பாதித்திருந்திருந்தால்…
“கடவுளின் பத்தாவது கட்டளை”யை நினைவூட்டினாள்.
சிறு யோசனைக்குப் பிறகு அவன்,
“பிரபாகர் கிட்ட ஆண் அடிமைகள், பெண் அடிமைகள் கிடையாது. எருது கழுதையும் இல்ல. ஒரு நாய். அதுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. வேலைக்குப் போக வர அவனோட ‘போர்ஷா’வும் எனக்கு வேண்டாம். அவன் மனைவி அழகுதான். உனக்கே தெரியும், தவறான எண்ணம் என் அகராதியில் பாவம். அவன் அடுத்த வீட்டுக்காரன் மட்டுமில்ல, ஐந்து வருஷமா மனம்விட்டுப் பழகிய நெருங்கிய நண்பன்.”
“அவன் வீடு?”
அதன் பின்னால் இப்போது ஒரு நீண்ட நடைவழி. அதன் ஒரு பக்கம் பெரிய கூடம் – கும்பலாக சினிமா பார்க்கலாம், மாதாந்திர பஜனை நடத்தலாம். இன்னொரு பக்கம் குழந்தைகள் விடியோ விளையாட பெரிய திரை, கச்சிதமான ஒலி அமைப்பு. நாய்க்கும் ஒரு தனி இடம்.
அவர்கள் வீட்டின் சமையலறையைப் புதுப்பிக்க எட்டாயிரம் டாலர் ஆகும் என்பதால்…
“அவன் சுத்திக் காட்டினப்ப இதுக்கெல்லாம் நூறாயிரமாவது ஆகி இருக்குமேன்னு சொன்னேன். அதுக்கு அவனே அந்தப் பணத்தை பாங்க்ல கடன் வாங்கறதா இருந்தேன். வேலையில ஒரு போனஸ். அதில வீட்டுக்கடனும் அடைச்சு கான்ட்ராக்டர் கணக்கையும் தீர்த்திட்டேன்னு பெருமையா சொன்னான்.”
“அதாவது கிட்டத்தட்ட அரை மில்லியன் டாலர். அதனால…”
“அவன்மேல பொறாமைன்னு சொல்ல முடியாது.”
“ஒவ்வொரு தொழில் ஒவ்வொரு மாதிரி. எனக்கு அடுத்த செமிஸ்டர் அப்பாய்ன்ட்மென்ட் இருந்தா அதுவே பெரிய போனஸ். சூப் ஆறிப்போய் இருந்தது, இல்ல புளியோதரைக்குப் பதிலா பிலாஃப் ரைஸ் கொடுத்து ஏமாத்திட்டாங்கன்னு யாராவது ‘யெல்ப்’ல குறைசொல்லி உன் ரெஸ்டாரன்டுக்கு ஒரு நட்சத்திரம் கொடுக்காம இருந்தா உனக்கு போனஸ். வால் ஸ்ட்ரீட் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில மார்கெட் அலுங்காம இருந்தா கொஞ்சம் போனஸ், மேல போனா பெரிய போனஸ். ப்ரபாகர்னால அவன் கம்பெனிக்கு பல மில்லியன் வரவு இருக்கும்.”
“இப்படி தீர யோசிக்கறதுக்கு முன்னாடி, ‘சே! என்ன உலகம்டா’ என்கிற அலுப்பு. அவ்வளவுதான்.”
காலை உணவு முடியும் வரை ஆறுதல் மௌனம். யாமினி முதலில் எழுந்து அனிதாவை எழுப்பப் போனாள். அவளைத் தயார்செய்து கின்டர்கார்டனுக்கு முந்தைய குழந்தைகள் இல்லத்தில் இறக்கிவிடுவது அவள் பொறுப்பு.
அவர்கள் கிளம்பிப்போனதும் அன்புமணி அவனால் முடிந்த வீட்டுவேலைகளைச் செய்யத் தொடங்கினான். முதலில் தூசி துடைப்பு – தொலைக்காட்சி, சதுர மேஜை, நாற்காலிகள்… கைகளும் கால்களும் அசைந்தாலும் ஆழ்மனம் அரை மில்லியனில் ஆழ்ந்தது.
டிங். டிங். டிங். அடுத்தடுத்து தகவல்கள். வாசிக்காமல் குப்பையில் தள்ளும் வழக்கத்துக்கு மாறாக அன்று அவற்றை மதித்து, பிரித்து…
– வேலை வாய்ப்பு. லிங்க்ட்-இன்னில் இருந்து இல்லை. நான் ‘இன்-என்-அவுட்’டின் நிஜமான ஏஜென்ட். உறி அடிப்பது போன்ற குருட்டு அழைப்பும் இல்லை இது. பெல்வியு விடுதியை நீ சிறப்பாக நடத்துவதை நேரில் கவனித்த பிறகு தான் உன்னை அழைக்கிறேன். மேற்கு மாநிலங்களில் மட்டுமே கொடி கட்டிப் பறக்கும் பர்கர் சங்கிலி கிழக்கே பரவப்போகிறது. அதற்கு முதல் படி டென்னஸியில் நான்கு புதிய விடுதிகள். ஃப்ராங்க்லின் விடுதியின் மேலாளர் பதவி உனக்காகக் காத்திருக்கிறது.
வீட்டிற்குப் பக்கத்தில் என்பதைத் தவிர பலதரப்பட்ட உணவுகளை வழங்கும் விடுதியை விட்டுவிட்டு வேக உணவு ரெஸ்டாரன்ட்டுக்கு மாற வேண்டுமா? எதற்கும் இருக்கட்டும் என,
– யோசிக்கிறேன்.
அடுத்த தகவல் அவர்கள் சமையலறையைப் புதுப்பிக்க எட்டாயிரம் டாலர் கடன் வழங்க வங்கிக்கு சம்மதம்.
அதைக் கொண்டாட காரியத்தை நிறுத்திவிட்டு ஒரு கோப்பை தேநீர். கெட்டிலில் நீர் கொதித்தபோது…
– இது தான் என் கடைசி இலவச அறிவுரை
என்ற எச்சரிக்கையுடன் ‘சில்வர்மன் வெல்த்’தின் ஐபிஓ (இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்) பகுதியின் ஆலோசகர் கேரன்.
– இரண்டு மாதங்களுக்கு முன் ‘சர்க்ல்’ பங்குகளை வாங்க அறிவுரை கொடுத்தேன். முப்பத்தியோரு டாலர் பங்கின் விலை சந்தையில் நுழைந்தபோதே அறுபத்தியொன்பதுக்குப் பறந்தது. நாள் நடுவில் நூறுக்கு மேல். என் வார்த்தையைக் கேட்டிருந்தால் உன் ஆயிரம் டாலர் மும்மடங்கு ஆகியிருக்கும். சென்ற மாதம் ‘ஃபிக்மா’வின் முதல் தினம் இன்னும் பிரமாதம். நாள் நடுவில் நூற்றிஇருபத்தைந்து வரை உயர்ந்து கடைசியில் நூற்றுப்பதினைந்தில் நின்றது. அந்த வாய்ப்பையும் நீ தவறவிட்டுவிட்டாய். இப்போது எலிப்டெக்ஸ். இன்னும் ஒரு மணி நேரத்தில் அதன் அரங்கேற்றம். டிக் டிக் டிக்…
தேநீரை அருந்தியபோது வயிற்றுக்கும் மனதுக்கும் சூடு பரவியது. எட்டாயிரம் இரட்டித்தால், சமையலறையைப் புதுப்பிப்பதுடன் அதைப் பெரிதாகவும் ஆக்கலாம்.
அவன் அழைப்புக்குக் காத்திருந்தது போல,
“அருமைநாயகம்! இதுவரை நாள் எப்படி?”
அவன் பெயரை அருமையாகவே உச்சரித்தாள்.
“ஒன்றும் சுகமில்லை, கேரன்!”
“அதை அதிருஷ்ட தினமாக மாற்றிவிடுகிறேன். சுருக்கமாக… எலிப்டெக்ஸ் மூன்று ஆண்டுகளாக தனியார் கட்டுப்பாட்டில் லாபகரமாக நடந்துவருகிறது. அதைப் பொது மக்களின் முதலீட்டிற்கு வைத்து அதன் சேவையைப் பெருக்க இது சரியான தருணம் என சில்வர்மன் மற்றும் இன்னும் சில நிதி நிறுவனங்கள் கணித்ததால் அதன் பங்குகள் இன்று சந்தையில் நுழைகின்றன.”
அவன் விவரம் கேட்பதற்கு முன்பே,
“எலிப்டெக்ஸின் வியாபாரம் கரவுக்காசுகள் என்றதும் நீங்கள் தயங்கலாம். காசுப் பரிமாற்றங்களில் தான் அதன் பிரதான வருமானம். கரவுக்காசுகளின் மதிப்பில் தூக்கத்தை விரட்டும் ஏற்ற இறக்கம் என நீங்களும் நானும் விலகி இருக்கலாம். அதற்காகவே அவற்றில் பணத்தை முடக்க எத்தனையோ பேர். அவர்கள் காசுகளை வாங்கி விற்பதையும், ஒரு காசில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதையும் வலைத்தளத்தில் எளிதாகச் செய்ய எலிப்டெக்ஸ்.”
“அதைப்போல?”
குறிப்பிட்டுச் சொல்ல ‘காய்ன்பேஸ்’ ஒன்று தான்.
“அப்படியென்றால் ஒரு பங்கு?”
“போட்ட விலை முப்பது டாலர். விற்பனை திறந்ததும் ஐம்பதுக்குமேல் ஆரம்பிக்கும். மொத்தப் பங்குகளில் பதினைந்து சதம் தான் இன்று வெளியிடப்படும் என்பதால் நாள் முடியும்போது நூறு நிச்சயம். ஐயாயிரம் டாலர் எப்படி?”
“எட்டாயிரம் டாலர் ஒதுக்கலாம் என நினைக்கிறேன்.” சமையலறையைப் புதுப்பிக்கும்போது ரெஃப்ரிஜெரேட்டர், அடுப்பு – இவற்றையும் மாற்றிவிடலாம்.
“இன்னும் நல்லது.”
மின்னணுக்கள் கண் சிமிட்டின.
ஏன் பேராசைப்பட்டு வாங்கித் தொலைத்தேன்? கேரனைத் திரும்ப அழைத்து-
ஆர்பர் மான்டிஸோரியில் இருந்து அவசரத் தகவல்.
– அனிதாவை அழைத்துக்கொண்டு போக முடியுமா? அவளுக்கு விளையாட்டில் விருப்பம் இல்லை.
முந்தைய தினம் ப்ரபாகர் இல்லத்தில் மற்ற குழந்தைகளை ஓடித்துரத்திய களைப்பின் அசதியாக இருக்கலாம். விடுதியின் அலுவலகத்தில் அவளுக்கென ஒரு குட்டி மெத்தை. அத்துடன் காகிதங்கள், வண்ணக்குச்சிகள், அவ்வப்போது கொரிக்க அன்றைக்கே பொரித்த வாழைக்காய் வறுவல். வாடிக்கைகளைத் திருப்தி செய்யும் பரபரப்பில் அன்புமணி கேரனை மறந்து போனான்.
மறுநாள் காலை யாமினியும் அனிதாவும் வெளியே போனபிறகு, மின்னஞ்சலைப் பிரித்து ‘சில்வர்மன் வெல்த்’தில் இருந்து வந்த கணக்கைப் பார்த்தபோது தான் அவள் நினைவு வந்தது. ஒரு பங்குக்கு எண்பது டாலர் என அவனுக்கு நூறு எலிப்டெக்ஸ் பங்குகள் சொந்தம். ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் சிஎன்பிஸி பக்கம் போனபோது இரண்டாம் நாளே மீதிப் பங்குகளை வெளியிட்டதால் புதுமோகம் கரைந்து அதன் விலை நாற்பது டாலராகச் சரிந்ததற்கு ஒரு நீண்ட விவாதம். கரவுக்காசுகளின் மதிப்பை மக்கள் இன்னும் உணரவில்லை என ஒரு புலம்பல். அவற்றை மாற்ற ஜெமினி, க்ராக்கன், ராபின்வுட் இருக்கும்போது இன்னொன்று எதற்கு என்று அதற்கு எதிர்ப்பக்கம்.
நிலைமையை ஏன் இன்னும் மோசமாக்கிக்கொண்டேன் என்ற வருத்தம் கலந்த குற்ற உணர்வு. மனம் அலைபாயும்போது எல்லாம் அமைதி பெற அருள் ஆனந்தத்தை அழைத்துப் பேசுவது வழக்கம். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டாலும் பரஸ்பர மதிப்பினால் உருவான நட்பு. குழப்பத்தில் முந்தைய தினம் அருளை மறந்துவிட்டான். இப்போதாவது…
க்ரானைட் இன்வெஸ்ட்மென்ட்டின் உதவித்தலைவர் ஹின்ட்மன் பணத்தை என்ன செய்வது என்று தவித்தார். பொதுவாக வணிகக் கட்டடங்களில் முதலீடு செய்வது வழக்கம். அண்மையில் அவை வேகமாக மதிப்பிழப்பதால் உணவுச் சங்கிலிகள். எதை முற்றுகை இடலாம்?
ப்ரபாகர் அவரை நேரிலேயே சந்திக்க வந்தான்.
“நல்ல முதலீட்டிற்கு நீ ஒரு குறி பார்த்திருக்கிறாய்?”
அவர் குரலின் அவநம்பிக்கையில், ‘எல்லா விவரங்களையும் கூட்டிக்கழித்து எனக்கு அறிவுரை வழங்க ஒரு கமிட்டியே இருக்கிறது. நீ புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?’
“யெஸ்.”
“இதற்காகவே நீ நாஷ்வில்லில் இருந்து நியு ஜெர்ஸிக்குப் பறந்து வந்தாய்.”
ஒளிந்திருந்த கேலி ப்ரபாகரை அசைக்கவில்லை.
“ரகசிய திட்டங்கள் பேச அலைபேசியையும் மின்னஞ்சலையும் நம்புவதற்கு இல்லை.”
“உண்மைதான். நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிப்பதற்குள், ‘ட்ராபிகல் ஸ்மூதி கஃபே’, ‘ஜெர்ஸி மைக் சப் சான்ட்விச்’ இரண்டையும் யாரோ தட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ‘இன்-என்-அவுட் பர்கர்’?”
“நினைக்கக் கூட வேண்டாம். அதன் முழு அதிகாரமும் லின்ஸி ஸ்னைடர் கையில். எந்த விலைக்கும் அவள் விற்பதாக இல்லை.”
“ம்ம்ம்… அதன் மதிப்பை ஒரே ஆண்டில் இரட்டித்து இருக்கலாம்.”
“‘இன்-என்-அவுட் பர்கர்’ மாதிரி இன்னொரு சங்கிலி. பலமான நிதி நிலைமை. தற்போது தென் மாநிலங்களில் மட்டுமே அதன் விடுதிகள் என்பதால் உங்களுக்கு அதைப்பற்றித் தெரிந்திராவிட்டால் ஆச்சரியம் இல்லை.”
“நான் அங்கே பயணிக்கும்போது ‘ஸாக்ஸ்பி‘யில் சாப்பிடுவது வழக்கம்.”
“அதில் சிக்கன் தான் பிரதானம். இது அதைவிட மேல் மட்டத்தில். இதன் பல விடுதிகளில் பல முறை சாப்பிட்டிருக்கிறேன். எப்போதும் தரமான உணவு. தனித்துநிற்கும் அலங்காரங்கள்.”
“அது?”
“மார்கோ போலோ.”
“பல கிழக்கு நாடுகளுக்குப் பயணித்த இத்தாலிய வணிகர்.”
“கரெக்ட். அவர் வருகை தந்த நாடுகளின் உணவுவகைகள் ஒரே இடத்தில். ஒவ்வொரு கலாசாரத்தின் சாப்பாட்டைத் தனியே வாங்கலாம். இல்லை பலதரப்பட்ட கலவையைச் சுவைக்கலாம். குடும்பத்துடன் போனாலும் பில் கையைக் கடிக்காது. அது மட்டுமல்ல, குப்ளாய் கானின் படம், அக்காலத்து நாணயங்கள், வரைபடங்கள் என்று விடுதிகளின் சூழல் விருந்தினர்களைப் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கே அழைத்துச்சென்று மார்கோ போலோவுடன் பயணித்த அனுபவத்தைத் தரும்.”
“நீ சொல்வதில் இருந்து இவை வித்தியாசமானவை என்று தெரிகிறது. நான் அவற்றின் விளம்பரங்கள் பார்த்தது இல்லை.”
“ஒன்றிரண்டுதான். அவற்றிலும் பிரபலங்கள் கிடையாது. வாடிக்கைகளின் திருப்தியும், உள்ளூர் விமர்சிகர்களின் புகழ்ச்சியும் அதன் வளர்ச்சிக்கு உரம்.”
“இன்டரெஸ்டிங். எத்தனை ஃப்ராஞ்சைஸ்கள்?”
“முன்னூறை எட்டப்போகிறது. நாஷ்வில் வட்டாரத்திலேயே பதின்மூன்று. ‘இன்-என்-அவுட் பர்கர்’ போல அவை எல்லாம் கம்பெனிக்கே சொந்தம்.”
“அப்படியா?” அவற்றை வாடகை இடங்களாக மாற்றி கொள்ளை லாபம் அடிக்க ஹின்ட்மன்னின் கை துடித்தது.
“வாங்கியதும் இன்னும் இருநூறு புது ஃப்ராஞ்ச்சைஸ்கள் விற்றுவிடலாம் – வடகிழக்கிலும், மேற்கேயும்.”
“நமக்குப் போட்டியாக…”
“இப்போதைக்கு யாரும் கிடையாது. காரணம், எனக்கு மட்டுமே தெரிந்த உள் ரகசியம். முதல் கடையை ஃப்ராங்க்லின், டென்னஸியில் ஆரம்பித்தது மாட்டியோ லம்பார்டி. அதை எடுத்து அவருடைய திட்டப்படி வளர்த்தது அவர் மருமகன் யுகோ. இப்போது அவன் அதன் சிஈஓ.”
“கம்பெனியின் பொதுப் பங்குகள்?”
“நாற்பத்தைந்து சதம் மட்டுமே அவன் பெயரில்.”
“மீதி?”
“மாமாவிடம். ஆரம்ப விடுதிகளுக்கான மூலதனம் அவர் பணத்தில்.”
“அவருக்கு?”
“இரண்டு பையன்கள், ஒரு பெண். அவர்களுக்கு அரசியல் அலுவலகங்களில் உடல் அலுங்காத வேலைகள். அதனால் விடுதிகளின் வளர்ச்சியில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.”
“இப்போது?”
“மூளையின் இரத்தக்குழாய் வெடிப்பினால் பெரிய லம்பார்டியின் இயக்கமும் பேச்சும் குறைந்துவிட்டன. அது தெரிய வந்ததுமே அவருடைய சந்ததிகளை சந்தித்துப் பேசி ஆசை காட்டிவிட்டேன். யுகோவின் மாதம் ஒரு விடுதி என்கிற திட்டத்திற்குப் பதில் அபார வளர்ச்சி. பங்குகளின் விலையில் வேகமான உயர்ச்சி.”
“என்ன முன்யோசனை! என்ன சாமர்த்தியம்!”
ப்ரபாகர் கர்வத்துடன் புன்னகைத்தான்.
“மாட்டியோவுக்கு மிஞ்சிப்போனால் இரண்டு மாதம். பிறகு கம்பெனியின் அதிகாரம் அந்த மூன்று பேரிடம்.”
“யுகோவைத் தள்ளிவிட்டு, தேவைப்பட்டால் அவன் பங்குகளை வாங்கியதும் நிர்வாகம் நம் மேலதிகாரத்தில். எல்லா தீர்மானங்களும் நம் விருப்பப்படி…”
அவை என்னவென்றும், அவற்றால் பணம் எப்படி மார்கோ போலோவில் இருந்து க்ரானைட் பக்கம் பாயும் என்பதும் ப்ரபாகருக்கு நன்றாகத் தெரியும்.
“நான் நாஷ்வில்லில் இருந்து பறந்து வந்தது…”
“ரொம்ப நல்ல காரியம். இப்போதே உனக்கு ஒரு பரிசு. ஆனால், எல்லாம் முடிவாகும் வரையில்…”
வலது கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒட்டி வாயைப் ‘பூட்டிக்கொண்டான்’.
அருளை அழைத்து அன்புமணி ஞாயிறு மாலை விருந்தில் ஆரம்பித்து நடந்ததைச் சொன்னான். முடித்ததுமே தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பு கிடைத்துவிட்ட நிம்மதி.
விவரங்களை ஜீரணித்த அருள்,
“நீ பெஸல் என்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கியா?”
“கடிகாரம் இல்ல நகையில…”
“இது வேற. பி ஈ ஸி ஸி எல் ஈ. ஜான் கால்ப்ரெய்த் அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தார். அதைப் புரிந்துகொள்ள என் சொந்த அனுபவம். வடபழனி பஸ் ஸ்டான்ட்ல காத்திருக்கேன். ஒரு நடுத்தர குடும்பத்து நடு வயது அம்மா. தெருவோரக் கடையில கடலை வாங்கறாங்க. பிளாஸ்டிக் கூடையில இருந்து பர்ஸை எடுத்து பணம் கொடுத்திட்டு அதையும் கடலைப் பொட்டலத்தையும் கூடையில வைக்கிறாங்க. கொஞ்சம் தள்ளி ஒரு பத்து வயசு பையன் – ஃபேகின்ஸின் சிஷ்யன் – இதைக் கவனமா பாத்திட்டிருக்கான். அவங்க போக வேண்டிய பஸ் வந்து நின்றதும் எல்லாரும் அடிச்சுபிடிச்சு ஏறும்போது அந்த அம்மாவின் பின்னால புகுந்து மின்னல் வேகத்தில பையில கைவிட்டு பர்ஸை எடுத்துட்டு வண்டி நகரும்போதே இறங்கி சந்தில புகுந்து ஓடிட்டான். அந்த அம்மா போகவேண்டிய இடத்தில இறங்கி எதாவது சாமான் வாங்கும்போதோ, இல்ல வீட்டுக்குப் போன பிறகோ பர்ஸ் இல்லாததைக் கவனிக்கிறாங்க. இந்தக் கணத்துக்கும் பையன் பர்ஸை சாமர்த்தியமா எடுத்த கணத்துக்கும் நடுவில இருக்கும் இடைவெளி தான் பெஸல். அந்த நேரத்தில அவங்க பர்ஸ் பத்திரமா கூடையில இருக்குன்னு நினைக்கிறாங்க. பையன் பர்ஸ் தன்னுதுன்னு உரிமை கொண்டாடறான். இரண்டில ஒண்ணு தான் நிஜம்.”
“அதாவது… பணத்தை அனுப்பிய நேரத்தில் இருந்து அதைவைத்து வாங்கிய எலிப்டெக்ஸ் ஸ்டாக்குகளின் மதிப்பு வாங்கிய விலையில் பாதிதான்னு நான் கவனிக்கிற வரைக்கும்.”
“உனக்கு சமையல் அறையைப் பெரிதாக்கும் சந்தோஷம், அவளுக்கு விற்பனை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே டிமான்டை ஊதிப்பெருக்கி முப்பது டாலர் விலை போட்ட ஸ்டாக்களை எண்பது டாலருக்குத் தூக்கிவிட்ட திருப்தி.”
“அப்ப நாலாயிரம் டாலர் போனது போனது தான். ம்ம்.. யாமினி கிட்ட திட்டு வாங்கிக்கணும்.”
“நான் சகுந்தலாவோட மன்னிப்புக்குத் தோப்புக்கரணம் போடறது வழக்கம். அது பிடிக்கலன்னா நீ யாமினி முன்னால மண்டியிடலாம்.”
“இப்பத்தானே ரெண்டாவது நாள். ஒருவேளை எலிப்டெக்ஸ் விலை ஏறலாம், இல்லையா?”
“நிச்சயமா. அவசரப்பட்டு உடனே விற்கறதும் சரியில்ல.”
கேரனுக்கு அனுப்பிய பணத்தில் பாதி திரும்பிவராத கடன் என்று கைகழுவலாம், இல்லை எலிப்டெக்ஸ் எண்பதைத் தொட்டதும் எல்லா பங்குகளையும் விற்று ஏதோ தலை தப்பியது என்று திருப்திப்படலாம். அந்த சாத்தியங்களைத் தாண்டி பெஸல் என்கிற வார்த்தையின் ஆழம் அன்புமணிக்குப் பிடித்திருந்தது.
“இன்னும் தீவிரமா யோசிச்சுப் பார்த்தா…” என்று உரையாடலைத் தொடர்ந்தான். “பெஸலின் பணம் தனக்குத்தான் சொந்தம்னு இரண்டு பேரும் நினைத்தாலும் பித்தலாட்டக்காரனுக்குத்தான் அதன் மேல உரிமை அதிகம், இல்லையா? கடன் அட்டையின் விவரங்களைத் திருடி ஒருவன் மாட்டிக்கிட்டா ஒருவேளை அவன் செலவழிச்ச பணம் திரும்பக் கிடைக்கலாம். மத்தபடி சட்டங்களைத் தங்களுக்கு சாதகமா வளைச்சுப்போட்டு தில்லுமுல்லு செய்யறவங்களை ஒண்ணும் செய்யறதுக்கு இல்ல.”
“ம்ம். நீ சொல்றது உண்மை. அதுக்கு பல காரணங்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லா சாத்தியங்களையும் யோசிச்சு எல்லா மறுப்புகளுக்கும் பதில் தயாரா வச்சிருப்பாங்க. பண விஷயத்தில என் மனைவிக்குத் தெரியாம நான் எதுவும் செய்யறதில்லன்னு சொன்னா, நீ பணத்தை இரண்டுமடங்கு ஆக்கினப்புறம் அவ கிட்ட பெருமை அடிச்சுக்கறதை யோசின்னு ஆசை காட்டுவாங்க. எனக்கு நேர்வழியில சம்பாதிக்கத்தான் பிடிக்கும்னு சொன்னா, இந்தக்காலத்தில எது நேர்வழி எது குறுக்குவழின்னு சாதிப்பாங்க.”
அது போன்ற மறுப்பு எதுவும் சொல்லாமல் கேரனின் வார்த்தைகளில் மயங்கியதை அன்புமணி யோசித்துப்பார்த்தான்.
“பாங்க்ல கடன் வாங்கினதுலேர்ந்து உன்னைப்பத்தி கேரனுக்கு எல்லாம் தெரியும். அவளைப் பத்தி உனக்கு?”
“சில்வர்மன் இன்வெஸ்ட்மென்ட்டோட நேராகவோ ஒருசுத்து தள்ளியோ சம்பந்தப்பட்ட ஒருவர், அவ்வளவு தான்.”
“இன்னொரு காரணம் அவளுக்கு எலிப்டெக்ஸ் பங்குகளை விற்பது பற்றி ஒரு தெளிவான திட்டம். நேற்று காலையில உனக்கு மனக்குழப்பம். அந்த பலவீனமான தருணத்தில் அவள் தகவல் உள்ளே புகுந்துவிட்டது.”
“இன்னைக்கு அவ மெஸேஜ் வந்திருந்தா அதைப் பிரிக்காம குப்பையில தள்ளி இருப்பேன்.”
“இதில இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கணும். மோசடி ஆட்களுக்கு இருபது தடவை வலை வீசி அதில ஒரு மீன் சிக்கினாலும் வெற்றி. நமக்கு இருபது தடவையும் தப்பிக்கணும். அப்படியே ஒரு வாட்டி சிக்கிக்கிட்டாலும் அது சுருக்கு வலையா இல்லாம பார்த்துக்கணும்.”
“ம்ம்… பெஸல் வார்த்தைக்கு நானே ஒரு உதாரணம்” என்று அன்புமணி சமாதானம் அடைந்தான்.
“இப்ப எனக்கு ஒரு சந்தேகம்.”
“சொல்!”
“ப்ராபகர் எங்கே வேலை செய்யறான்?”
“க்ரானைட் இன்வெஸ்ட்மென்ட்ஸின் நாஷ்வில் ஆஃபீஸ்ல.”
“நீ ஒரு ரெஸ்டாரன்ட் மேனேஜர்னு தெரியும். அது?”
“பெல்வியு மார்கோ போலோ.”
“ஓஓ! உனக்கு ரிபெக்கா ராஜாமணியைத் தெரியும்?”
“ம்ம்.. என் ‘தர்ட்டி-ஃபோர்’ சர்ச்சல பல தடவை பார்த்திருக்கேன். பணம் மாதிரி முடிவில்லாமல் பெருகிட்டே போற எதுக்கும் மதிப்பு இருக்காதுன்னு ஒரு ஞாயிற்றுக்கிழமை செர்மன் குடுத்தாங்க. இயேசு பிரானும் அதனால தான் பண வியாபாரிகளைக் கோவில்லேர்ந்து வெளியே தள்ளினார்னு சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது. ப்ரார்த்தனை முடிஞ்சதும் நேர்ல பாராட்டப் போனேன். அவங்களைச் சுத்தி ஒரு ஒளிவட்டம் இருக்கற மாதிரி எனக்குத் தோணித்து.”
“எனக்கு அவங்களோட இருபத்திஐந்து வருஷப் பழக்கம். அனால நான் கவனிச்சதில்ல. ஆனா அவங்க மாதிரி எந்தவித பிரதிபலனோ புகழோ எதிர்பார்க்காம மனிதசேவை செய்யறவங்க இந்த உலகத்தில ரொம்ப பேர் கிடையாது.”
சிறு யோசனைக்குப் பிறகு,
“உண்மைதான்.”
“ரிபெக்காவும் மார்கோ போலோவின் சிஈஓ யுகோவும் ஒண்ணா காலேஜ்ல படிச்சாங்களாம். பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில ரெஸ்டாரன்ட் திறக்கறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு முடிச்சப்பறம் தான் அதை நடத்த அவன் ஆள் தேடுவான்னு ரிபெக்கா சொன்னதா ஞாபகம்.”
“சரிதான். நான் சர்ச்சின் கணக்குகளை நல்லபடியா கவனிச்சதால பெல்வியு விடுதியின் பொறுப்பு எனக்குக் கிடைச்சுது. அது எனக்கு சொந்தக்கடை மாதிரி. நல்ல சம்பளம். அதில ஒரு பங்குக்கு கம்பெனியின் ப்ரிஃபெர்ட் ஸ்டாக் வாங்கிக்கலாம். நான் மட்டுமில்ல, ஒரு வருஷம் வேலை செய்தபிறகு மத்தவங்களும் வாங்கலாம்.”
“அதுக்கு வருமானம் உண்டு ஆனா, ஓட்டு உரிமை கிடையாது.”
“கரெக்ட். கம்பெனியை விட்டு விலகினா அப்போதைய விலைக்கு எல்லா ஸ்டாக்கையும் அவங்களுக்கே விற்றுடணும். தினப்படி நடவடிக்கைகளில எங்களுக்கு நிறைய சுதந்திரம். உயர்மட்ட விஷயங்கள் எல்லாம் யூகோ, அவன் மாமா ரெண்டு பேர் பொறுப்பு. பெரியவருக்கு உடல் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.”
அருள் அத்தகவலையும் கணக்கில் சேர்த்துக்கொண்டான்.
ஒரு வாரம் போனதும்,
“ஒரு அதிர்ச்சி தரும் தகவல். அதைச் சொல்ல வருந்துகிறேன்” என்றான் அருள் அனுதாபத்துடன்.
“எலிப்டெக்ஸ் இப்போ முப்பது டாலர்.”
“அதுக்கும் கீழே, இருபத்தியாறு. நான் சொல்லப்போறது இன்னும் சீரியஸான விஷயம். ப்ரபாகருக்கு அரை மில்லியன் டாலர் போனஸில் ஆரம்பித்து எல்லா விவரங்களும் தேடிப் பார்த்தேன். இந்த ஒரு முடிவுதான்.”
மௌனத்தில் அன்புமணி தகவலுக்கு மனதைத் தயார்செய்து கொண்டான்.
“சரியான எண்ணிக்கை தெரியாது. ஆனா, மார்கோ போலோவின் பெரும்பான்மை ஸ்டாக் மாமா பேரில். அவருக்கு ஒரு பெண், இரண்டு பையன்கள். அவர் காலம் முடிஞ்சு பங்குகளைப் பிரிச்சதும், அந்த மூணு பேரும் ஒண்ணுசேர்ந்து யுகோவுக்கு எதிரா கம்பெனியை க்ரானைட் இன்வெஸ்ட்மென்ட்ஸுக்கு வித்திடுவாங்க.”
ரெட் லாப்ஸ்டர், டிஜிஐ ஃப்ரைடே (குடும்ப உணவு விடுதிகள்) – இங்கெல்லாம் நடந்தது மார்கோ போலோவிலும். கம்பெனியின் மேல் கடனை ஏற்றி நிர்வாகக்குழுவுக்கு போனஸ். எல்லா விடுதிகளின் இடங்களையும் க்ரானைட்டின் ரியல் எஸ்டேட் டிவிஷன் தனதாக்கிக்கொள்ளும். அதற்கு மாதாமாதம் ஒவ்வொரு விடுதியும் அநியாய வாடகை செலுத்தும். வேலையாட்கள் எல்லாரும் ‘இன்டிபென்டென்ட் கான்ட்டிராக்டர்ஸ்’. அதாவது, நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் அவர்களை வேலையில் இருந்து தள்ளலாம். ஆனால் ‘நான்-கம்பீட் க்ளாஸ்’படி அவர்கள் அதிக பணத்துக்கு வேலை மாற முடியாது. சம்பளம், சாப்பாட்டின் தரம், அதன் விலை, எல்லாவற்றில் இருந்தும் டாலர் பிழியப்படும்.
இத்திட்டத்தை வரைந்த பிரபாகருக்கு அது விரைவில் நிறைவேறும் என்கிற நிச்சயத்தில் ஒரு போனஸ். ஏமாற்றத்திலும் அன்புமணி,
“பெஸல் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம்” என்று அருளின் ஆர்வத்தைக் கிளறி, “நட்பு ஆரம்பித்ததில் இருந்து ஒருவனை நம்ம நலத்தில அக்கறை காட்டும் சிநேகிதன்னு நினைச்சிட்டிருக்கோம். ஒரு நாள், அவன் நம்மை முகம் தெரியாத மூணாவது மனிதனாத்தான் வச்சிருக்கான்னு தெரிய வருது. இந்த இடைக்காலத்தின் நாணயமில்லாத நட்பு ஒரு செல்லா காசு” என்றான்.
“அதாவது, பெஸல்.”
யுகோவின் ஊர்தி வந்து நிற்பதைப் பார்த்ததும் அதற்காகக் காத்திருந்த அன்புமணி வாசற்கதவைத் திறந்து நடைபாதையில் நின்றான். மிக எளிய ஆடையில் புன்னகையும் சந்கேமும் கலந்த முகத்துடன் நடந்துவந்த யுகோவை விடுதி தொடங்கிய போது பார்த்தது. ஐந்து ஆண்டுகளின் தாக்கம் இலேசான கூனலில் தெரிந்தது.
அருளுடன் பேசியதும் அவன் யுகோவுக்கு அனுப்பிய தகவல்.
– நான் பெல்வியு விடுதியின் மேனேஜர் அன்புமணி அருமைநாயகம். ஒரு முக்கியமான வியாபார விஷயம் பேச வேண்டும். நேரில் சந்திக்க முடியுமா? அரை மணி ஒதுக்கினாலும் போதும்.
– நாளை மறுநாள் காலை பதினோரு மணிக்கு நானே உன்னைப் பார்க்க வருகிறேன்
கைதொடும் அளவில் வந்ததும் கைமுட்டிகைள இடித்துக்கொண்டார்கள்.
“நீ முதலில்” என்று யுகோ கைகாட்டி அன்புமணியை தொடர்ந்தான். சாப்பாட்டுக் கூடத்தில் மதியத்துக்கான ஏற்பாடுகள். அலுவலகக் கதவைச் சாத்தி இருவரும் அமர்ந்ததும்,
“இந்த விடுதி நல்லபடியாக நடப்பதாகச் செயலர் தெரிவித்தார்.” சந்திப்பிற்கு அது காரணமாக இராது.
“இது வேறொரு பெரிய பிரச்சினை. மிஸ்டர் மாட்டியோ லம்பார்டியின் உடல்நிலை?”
“நேற்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். சுயநினைவு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.”
“உனக்கு அருள் ஆனந்தம் தெரிந்திருக்கும்.”
“யெஸ். ரிபெக்கா வழியாக. சில முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அபூர்வ மனிதர்.”
‘உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிடுது என் நோக்கம் அல்ல’ என்பதை, “அவருடைய கணிப்பு என்பதால் உன்னிடம் சொல்ல வேண்டிய கட்டாயம்” என்ற மன்னிப்பில் அடக்கினான்.
“எதுவானாலும் சொல்!”
முழுவதும் கேட்ட பிறகு யுகோ சில நிமிடங்கள் யோசித்தான்.
“உன் எச்சரிக்கையை வரவேற்கிறேன். என் மாமாவின் உடல்நிலை மோசமானதில் இருந்து எனக்கே மார்கோ போலோவின் எதிர்காலம் பற்றிய கவலை. நிலைமையின் தீவிரம் நீ சொன்னதும் புரிகிறது. அதை மறந்து உணவை அனுபவிப்போம்” என்று எழுந்தான்.
சாப்பிட்டபோது அவர் யார் என்று தெரிந்து அதிகப்படி உபசரிப்பு.
நான்கு நாட்களுக்குப் பிறகு மறுபடி சந்திப்பு. ஊர்தியில் இருந்து நடந்துவந்த யுகோவின் முகத்தில் திருப்திப்புன்னகை.
“முந்தைய சந்திப்பு மாதிரி இல்லை. இது சந்தோஷமாக இருக்கப்போகிறது.” அன்புமணி புன்னகையை அடக்கிச் சொன்னான்.
யுகோ அவன் தோளைத்தட்டி,
“அது சரியான நேரத்தில் நிகழ்ந்ததை மறக்கக்கூடாது.”
அலுவலக அறையில்,
“வாழ்க்கையின் முடிவு தெரிந்ததும் என் மாமாவே ஒரு சேவை நிறுவனத்துக்கு நிதி வழங்குவதாக இருந்தாராம். நான் தன்னலமற்ற சேவகி ரிபெக்காவைப் பற்றிச் சொன்னதும் அவளுக்கு மார்கோ போலோ பங்குகளில் பதினைந்து சதம் ஒதுக்கி இருக்கிறார். என் கசின்களைப் பற்றி இப்போதைக்குக் கவலைப்பட வேண்டாம். ரிபெக்காவுக்கும் அருளுக்கும் நானே தகவல் அனுப்பிவிட்டேன்.”
“எனக்கு மட்டுமல்ல மார்கோ போலோவுடன் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே நிம்மதி.”
அடுத்த முறை அருளுடன் பேசும்போது, ‘காரியம் நிறைவேறும் வரைக்கும் ஒரு தரப்பின் ரகசியம் இன்னொரு தரப்புக்குத் தெரியாமல் இருந்தால் தான் பெஸலினால் முன்னவருக்கு வெற்றி. அந்த உண்மை மாட்டியோ லம்பார்டியின் உயிலை வாசிக்கும்போது ஒரு சிலருக்குத் தெரிய வரும்’-
“அன்புமனி! கடந்த சில நாட்களின் கவலையை ஃப்ளாரிடா ரிவர்ஃப்ரன்ட் கடற்கரையில் நீ கரைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.”
“தாங்க்ஸ், யுகோ!”
“பயணத்தின் முழு விவரமும் கேட்ட பிறகு நன்றி சொல்!”
அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இலையுதிர்கால விடுமுறை.
ஃப்ளாரிடா ரிவர்ஃப்ரன்ட் செவன்த் இன். காலை உணவுக்கூடத்தின் மூலையில் ஜ்யோதியும் அவள் அறைத்தோழி கெல்ஸியும். ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலும் அதைத்தாண்டிக் குறுகலான நிலமும் தீவுகளும் அவர்களைக் கவரவில்லை. சுட்ட பேகலின் மேல் க்ரீம் ச்சீஸைப் பரப்பியபோது ஜ்யோதி கூடத்தைச்சுற்றி பார்வையை ஓடவிட்டாள். அவர்களைத் தவிர சற்றுத் தள்ளி இந்திய மரபுவழி ஆண், பெண், குழந்தை. அவளுக்குத் தெரிந்த தமிழில் இருந்து அவர்கள் வருகையின் நோக்கம் நல்லபடியாக முடிந்துவிட்டது.
“இடம் பிடிச்சிருக்கு?” என்கிறாள் பெண்.
“ம்ம்ம். ஒரு கட்டடத்தின் ஓரம். இரண்டு பக்கம் உயரமான ஜன்னல்கள். கார் நிறுத்த சுற்றிலும் இடம். சகாயமான விலை. பெல்வியு கடையைவிட முக்கால் பங்கு. சுத்து வட்டாரத்தில ஃபேமிலி ரெஸ்டாரன்ட் எதுவும் இல்ல.”
“இனி மூணு நாள் கவலை இல்லாம ஊரைச் சுத்திப் பார்க்கலாம்.”
சாப்பிட்டு முடித்து குழந்தை போட்ட குப்பையைச் சேகரித்தபோது அவன் ஜ்யோதியை ஓரக்கண்ணால் அளந்தது போலத் தோன்றியது.
ஆம்லெட்டுக்குக் காத்திருந்த நேரத்தில் கெல்ஸி ஜ்யோதியுடன் பேச்சுக்கொடுக்கவில்லை. அவள் வசிப்பது அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கற்பனை உலகில். அதிலிருந்து வெளிப்பட்டு புற உலகைப்பற்றி அவள் எது சொன்னாலும் கச்சிதமாக இருக்கும். ஆனால், அது எப்போதாவது தான். கெல்ஸியின் மௌனம் அலட்சியத்தினால் அல்ல என்று தெரிந்ததும் ஜ்யோதிக்கு ஒரு நாளிலேயே அவள் வெகுளித்தனம் பிடித்துவிட்டது. பணிப்பெண் ஒரு தட்டில் ஆம்லெட் எடுத்துவந்து மேஜையின் ஓரத்தில் வைத்தாள். கெல்ஸிக்குப் பதில் ஜ்யோதி நன்றி சொல்லி அதை மற்றவள் பக்கம் நகர்த்தினாள்.
சில வாரங்களுக்கு முன் வில்லியம்சன் மாவட்டப் பள்ளிக்கூடங்களில் நடந்த இலக்கியப் போட்டியின் குறிக்கோள்: காங்க்ரஸ் அங்கத்தினருக்கு நாட்டின் முக்கியமான பிரச்சினை பற்றிய மின்னஞ்சல்.
‘பூமி சூடாதல் பொய். அதற்குப் பொருளாதாரத்தை பலி கொடுப்பது மகாதவறு’ என வாதிடும் லரிஸா கஸ்டருக்கு, தட்பவெப்ப நிலையில் குளறுபடி என்ற குறுகிய நோக்கில் பார்க்காமல் இயற்கைக்கு மனிதர்கள் இழைக்கும் தீங்குகள் என நம் பார்வையை விரிவாக்க வேண்டும் என்பதை வரைபடங்களுடன் ஜ்யோதி எழுதிய கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் அவள் பெற்றோருக்குப் பெருமை. ஜ்யோதிக்கு அதன்வழியே கிடைக்கும் ‘ரைட்டிங் ஒர்க்-ஷாப்’பில் அக்கறை. சில ஆண்டுகளுக்கு முன் யூடா பல்கலையில் நடந்த ஒரு எழுத்துப் பயிற்சியின் அனுபவத்தை மானஸா சஹாதேவன் உள்ளூர் செய்தித்தாளில் விவரித்திருந்தாள். அதை வாசித்ததில் இருந்து அதைப்போல் எழுத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களுடன் படைப்பு இலக்கியப் பேராசிரியர் வழிகாட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அவளுக்கு ஆசை.
கடற்கரையை ஒட்டிய செவன்த் இன்னுக்கு வந்த மறுநாளே அவளுக்கு ஏமாற்றம். வில்லியம்சன் மாவட்டத்தின் எட்டு மேனிலைப் பள்ளிகளில் இருந்து எட்டு பெண்கள். மற்ற ஏழுபேரை அவள் எந்தப் போட்டியிலும் பார்த்ததில்லை. பயிற்சி அருகில் இருந்த ஹாம்லின் கல்லூரியில் வைத்திருந்தால் அவர்கள் மாணவர் விடுதியில் இலவசமாகத் தங்கி கல்லூரி சூழலை அனுபவித்திருக்கலாம்.
கெல்ஸி உப்பும் மிளகும் தூவி சாப்பிடத் தொடங்கினாள்.
முதல் நாள் காலை. மத்திய ஃப்ளாரிடா பல்கலையில் இருந்து மொழிப்பேராசிரியர். எழுத்துத்துறையில் காலடி வைப்பதற்குமுன் இலக்கியத்திருட்டுக்கு ஒரு எச்சரிக்கை. பதினெட்டு வயதில் தெரிந்தோ தெரியாமலோ காவ்யா விசுவநாதன் செய்த தவறைப் பெரிதுபடுத்தி நீண்ட உரை. பழியைப் பின்னுக்குத் தள்ளி சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வாதாடும் வழக்கறிஞறர், ஏழை நாடுகளில் பெண்கள் மேல்படிப்பைத் தொடர வழிசெய்யும் ஆர்வலர் என அவள் தன் வாழ்க்கைப் பாதையை நேராக்கியது பற்றி ஏன் ஒரு வார்த்தையும் இல்லை?
உரை முடிந்ததும், ‘கல்லூரியில் அடுத்த வகுப்பிற்குப் போக வேண்டும்’ என ஓடிவிட்டாள். பிறகு, அந்தப் பேராசிரியரின் டீச்சிங் அஸிஸ்டன்ட் என்று தன்னை அறிமுகம் செய்த இளைஞன் ஜாஷ் ரிவென். ‘முதல் ட்ராஃப்ட்டை எழுதிக்கொண்டே போக வேண்டும்.’ ‘வாசகர்களை முன்வைத்து எழுதுவது நல்லது.’ தெரிந்த அறிவுரைகள் என்றாலும் சொந்த அனுபவத்தைக் கலந்து சுவாரசியம் ஆக்கினான்.
காலை மூளை உழைப்பிற்கு (?) பிற்பகல் முழுக்க ஓய்வு. மாலை கடற்கரையில் ஒரு பிக்னிக்.
கெல்ஸியின் தட்டில் சில துண்டுகள் மிச்சம்.
“நான் எனக்குக் காப்பி எடுத்துவரப் போகிறேன். உனக்கு?”
“யெஸ்! தாங்க்ஸ்! கொஞ்சம் க்ரீம், சர்க்கரை வேண்டாம்.”
இரண்டு கோப்பைகளுடன் ஜ்யோதி திரும்பிவந்தாள்.
காப்பியைக் குடித்தபோது கெல்ஸி,
“எனக்கு இந்த வொர்க்-ஷாப் பிடிக்கவில்லை.”
“ஏன்?”
“நாம் நான்காம் மாடியில். மற்ற ஆறு பேரும் வெவ்வேறு தளங்களில்.”
அதன் காரணம் என்னவாக இருக்கும்?
“ப்ரோக்ராமைக் கவனமாகப் பார்! இன்று மாலை சிறப்பு விருந்து. அப்புறம் நாளை மாலையும் கடைசி தினத்துக்கு முந்தைய மாலையிலும். எத்தனை செலவு? நாம் பார்ட்டிக்கா வந்தோம்?”
ஜ்யோதி அதை யோசிக்க, கெல்ஸி தன் கூட்டுக்குள் புகுந்துகொள்ள, சிலர் உணவுத்தட்டுகளுடன் காலி மேஜைகளைத் தேட…
“கெல்ஸி! போகலாமா?”
மௌனமாக எழுந்தாள்.
மாலை சிறப்பு விருந்து. கூடம் முழுக்க வண்ண விளக்குகள். மாணவர்களுடள் கடற்கரையை அனுபவிக்க வந்த விடுதி விருந்தினர்கள். தாம்பாளத் தட்டுகளைத் தாங்கி நடந்த பரிசாரகர்கள்.
நான்கு பேருக்கான வட்ட மேஜையில் கெல்ஸி, ஜ்யோதிக்கு நடுவில் ஒரு பக்கம் ஜாஷ். இன்னொரு பக்கம்,
“இது மேடலின்! லோகல் கெய்ட்.”
ஜ்யோதியின் வீகன் சாப்பாட்டுடன் ஒரு கோப்பை ஒயின். புத்தாண்டு மற்றும் போட்டிகளில் வெற்றி போன்ற நிகழ்வுகளின் போது ஒயினை ரசித்து அருந்த அவள் தந்தையிடம் பயிற்சி.
சுவை பார்த்தாள். பொதுவாக ஒரு மிடறு அவளை ஒன்றும் செய்ததில்லை. இது தலையில் சூடு ஏற்றியது.
“எப்படி?”
“க்ரேட். நான் இது போல சுவைத்ததில்லை.” வாட்கா கலந்திருக்கும்.
சாப்பாட்டின் முடிவில் கலோரியை யோசிக்கவைக்காத இனிப்பு.
“ஜோடி! நீ லரிஸா கஸ்டருக்கு எழுதிய கடிதம். மனித குலத்தை எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வுகள் இல்லை என நினைக்கவைக்கிறது” என்றான் ஜாஷ்.
“அப்படிப்பட்ட முடிவுக்கும் வரலாம்.”
“அதனால் நாளை பற்றி கவலைப்படாமல் இன்றையப்பொழுதை அனுபவிக்க வேண்டும், சரியா?”
கெல்ஸி தன் மௌனத்தில் இருந்து விடுபட்டு,
“தீர்வுகள் இல்லாவிட்டாலும் நிலைமைக்கு அனுசரித்துப்போக நாம் முயற்சிக்க வேண்டும்” என்று ஜாஷின் உரையாடலைப் பாதியிலே வெட்டினாலும் அதன் திசையை ஊகிப்பது ஜ்யோதிக்கு சிரமமாக இல்லை.
“சாப்பிட்டதும் நாம் வெளியே போகப்போகிறோம். நம்பிக்கையான டாக்ஸி டிரைவர் நம்மை தனியார் தீவுக்கு அழைத்துப்போவான். மேடலினுக்கு அதன் எல்லா இடங்களும் தெரியும். ஆனால், ஜோடி! நீ இன்னும் உன் பானத்தை முடித்தபாடிவில்லை.”
“இதோ! இப்போதே!”
தண்டை நீண்ட விரல்களால் பிடித்து ஜ்யோதி கோப்பையை எடுத்தபோது தட்டின் ஓரத்தில் இடித்து, க்ளிங்! அதனால் அவள் கவனம் சிதறி… அவள் மேல் கோப்பை சாய்ந்து… நல்ல வேளை! அது தரையில் விழுமுன் அதை இறுக்கப்பிடித்து…
ஆனால், அழகிய மாலை ஆடை நனைந்தது. அதன் ஈரம் உடலை எட்டுதவற்கு முன்…
நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி ஜ்யோதி எழுந்தாள்.
அருளைத் தவிர அவன் குடும்பத்தில் வேறு யாரையும் அன்புமணி நேரில் சந்தித்தது இல்லை. ஆனாலும் பேச்சு வாக்கில் அவன் கொடுத்த விவரங்களில் இருந்து அறிமுகம் ஆனது போன்ற பரிச்சயம். காலை உணவின் போது செவ்வகத்தட்டும் காப்பிக்கோப்பையும் ஏந்திவந்து இன்னொரு பெண்ணுடன் சாப்பிடத்தொடங்கிய அந்தப் பள்ளிப்பருவப் பெண்ணிமேல் எதேச்சையாகப் பார்வை விழுந்து, அவன் மகள் ஜ்யோதியாக இருக்குமோ? மூன்று நாட்களுக்கு முன் குடும்பத்துடன் ரிவர்ஃப்ரன்ட் விடுதியில் நுழைவுப்பதிவு செய்தபோது அந்த வாரம் டென்னஸி பள்ளிக்கூட மாணவிகளுக்காக ஒரு சின்ன எழுத்துப் பட்டறை என்று மேனேஜர் சொன்னான். அவர்கள் இருவரும் அதில் பங்குபெற வந்திருக்கலாம். ப்ளாகில் தினம் ஒரு கட்டுரையோ கதையோ கவிதையோ சேர்க்கும் அருளின் பெண்ணுக்கு எழுதக்கற்றுத் தரவேண்டுமா? சாப்பிட்டு முடித்து எழுந்தபோது ஓரக்கண்ணால் பலமுறை பார்த்து அவள் தோற்றத்தை நினைவில் பதித்து, அறைக்குத் திரும்பிவந்து, ரேவன்வுட் மேனிலைப்பள்ளியை வைத்து ஜ்யோதி ஆனந்தத்தைத் தேடினான். அவள் படம் கிடைத்ததும்,
“அருளின் பெண் ஜ்யோதி ரைட்டிங் வொர்க்-ஷாப்புக்கு வந்திருக்கா.”
“எழுத்துக்கு மட்டுமில்ல, சுதந்திரத்திற்காகவும்” என்பதை யாமினி நினைவூட்டினாள்.
“வியாபார விஷயமா நான் இங்கே வந்தது அருளுக்குத் தெரியாது. நானும் ஜ்யோதியைக் கண்டுக்கறதா இல்ல.”
மாலை உணவுக் கூடத்தில் கும்பல். ஜ்யோதிக்குப் பின்னால் மட்டும் ஒரு காலி மேஜை. அன்புமணி அவள் பக்கம் முதுகைத் திருப்பி அமர்ந்து சாப்பாட்டில் கவனம் வைத்தான். சுமார் தான்! மார்கோ போலோவின் தரமான உணவு இந்த இடத்தில் பறந்துவிடும். அவன் அக்கறையின்மை, சாப்பாட்டின் முடிவில் ஜ்யோதியின் நாற்காலி தடால் என்று பின்னால் தள்ளப்பட்டு அவனை இடிக்கும் வரை. திரும்பிப் பார்த்தபோது மேஜையில் இருந்து விலகி நின்றிருந்த ஜ்யோதியின் வெளிர்நீல மாலை ஆடையில் நீண்ட ஈரம். தரையிலும் ஒருசில சொட்டுகள். அவள் முகத்தின் சோகத்தில், “ஒஓ!” மேஜை மேல் சாய்ந்திருந்த ஒயின் கோப்பையை நிமிர்த்தி வைத்த இளைஞன்,
“உட்கார்! இன்னொரு கோப்பை நிரப்பி வருகிறேன். நீ குடித்ததும் நாம் கிளம்பலாம்.”
“முதலில் நான் உடைமாற்ற வேண்டும்.”
“எதற்கு? நிமிஷத்தில் உலர்ந்துவிடும்.” காகித்துண்டுகளை நீட்டுகிறான்.
ஒரு துண்டை இடுப்பில் ஒற்றியதும் அது முழுக்க ஊறிவிடுகிறது.
“இதெல்லாம் போதாது.”
ஜ்யோதி நாற்காலையை முன்னால் நகர்த்தி நடக்க இருந்தபோது நடுவயதுப்பெண்,
“நானும் துணைக்கு வருகிறேன்.”
“அவசியமில்லை. என் அறைக்குத் தானே போகிறேன்.”
“நான் கூட வருவது நல்லது.” குரலில் ஒளிந்திருந்த கட்டளை ஜ்யோதியை மசிக்கவில்லை. நிதானத்தை இழக்காமல்,
“ஐந்து நிமிடம். உடனே வந்துவிடுவேன். எடுத்துவந்த இந்திய சம்பிரதாய ஆடையை அணிய ஒரு சாக்கு.”
முகத்தின் கடுகடுப்பில் அவளுக்கு அதில் ஒப்புதல் இல்லை. உடனே மறுத்துச் சொல்லவும் முடியவில்லை.
“கெல்ஸி! என்னுடன் நீ வரமுடியுமா?”
“ஓ! ஷுர்.” ஜ்யோதியின் மேல் பார்வையைப் பதித்திருந்த எதிர்ப்பக்கத்துப் பெண் காகிதத்துண்டில் வாயைத் துடைத்துவிட்டு அவளுடன் சேர்ந்துகொள்கிறாள். வெளிப்படையான அவள் முக பாவத்தில், ஏதோ சரியில்லை.
“தாங்க்ஸ்! கெல்ஸி!”
இருவரும் மின்தூக்கிகளை நோக்கி நடக்கிறார்கள். இளைஞன் கோபத்தைத் தணிக்க காகிதத்துண்டுகளைக் கசக்கியபடி நடுவயதுப் பெண்ணை அர்த்தத்துடன் பார்க்கிறான். அவள் இருவரையும் பின்தொடர்கிறாள். பரிச்சயமான நாடகத்தை நடுவில் பார்க்கத் தொடங்கினாலும் அதன் கதையைப் பின்பற்றுவது போல அன்புமணிக்கு நிலைமையின் தீவிரம் புரிந்துவிடுகிறது. வேகமாக எழுந்து அவளைத் தாண்டி முன்னால் அவன் நடப்பது அவளைத் தயங்க வைக்கிறது. காலியாக இருந்த மின்தூக்கியில் இளம்பெண்கள் ஏறிச் சென்றதும், அடுத்த மின்தூக்கி வர மற்றவள் பொறுமையில்லாமல் நகத்தைக் கடிக்கிறாள். அது வந்து கும்பலில் ஒவ்வொருவராக வெளியேறியதும் இருவரும் நுழைகிறார்கள். அவள் நான்கை அழுத்த,
“எனக்கும் அது தான். தாங்க்ஸ்!”
அவனை சந்தேகத்துடன் பார்க்கிறாள்.
கதவுகள் பிரிந்ததும் அவள் வெளியே பாய்கிறாள். அவன் நடைவழி ஓரமாக நின்று அலைபேசியில் தேடுகிறான். அவன் தொடரவில்லை என்பதை நிச்சயம் செய்து அவள் வேகமாக ஐந்தாறு அறைகளைத் தாண்டி ஒரு கதவை ஓங்கித்தட்-
“டாமிட்! “
தொலைவில் இருந்தே அன்புமணிக்கு அவள் எரிச்சலின் காரணம் தெரிகிறது. கதவின் பிடியில் தொங்கிய சிவப்பு நிற அட்டை.
ப்ளீஸ்
டூ நாட்
டிஸ்டர்ப்!
அன்புமணிக்கு ஆனந்தக் கண்ணீர் ஆறாகக் கொட்டுகிறது. முகத்தைத் திருப்பி இரண்டு நடைவழிகளுக்கு நடுவில் ஜன்னல் பக்கம் வந்து கண்களை மூடிக்கொண்டு நிற்கிறான். பல நிமிடங்கள் கழித்து அவள் அவனைக் கடந்துசெல்லும் பலமான காலடிச்சத்தம் ஓயும்வரை காத்திருக்கிறான்.
பிறகு, நடைவழியின் முடிவில் இருந்த படிக்கட்டுகளில் இறங்கி சாப்பாட்டுக் கூடத்துக்கு வந்தான். அவன் கலவர முகத்தைப் படிக்க முயன்ற யாமினியிடம்,
“அனிதா ஜ்யோதியைப் போல வளர ஏசுவிடம் ப்ரார்த்தனை செய்தேன்” என்றான்.
அதன் காரணம் தெரியாவிட்டாலும் அவள் உடன்பாடாகத் தலையசைத்தாள்.
விடுதியின் சந்தடியில் இருந்து வெளியே வந்து அருளை அழைத்தான்.
“யுகோவே நல்ல சேதி சொன்னான்.”
“தெரியும். நான் கூப்பிட்டது பெஸல் வார்த்தையின் இன்னொரு உபயோகத்தைச் சொல்ல.”
“அது உன்னை விடமாட்டேங்குது.”
குரலில் அசாதாரண கனத்துடன்,
“உலக அனுபவம் இல்லாத ஒரு இளம்பெண் மேல் ஒரு வில்லன் குறி வைக்கிறான். நைஸாகப் பேசி அவள் நம்பிக்கையை சம்பாதிச்சு, சரியான நேரத்தில் அவள்மேல் சுருக்கு வலையை வீசி இறுக்குகிறான்.”
“இந்த இரண்டு கணங்களுக்கு நடுவில இருக்கும் இடைவெளியும் பெஸல். அந்த காலக்கட்டத்தில் அவளுக்கு நடக்கப்போறது தெரியாது. அவனுக்கு அவள் தன் வசம்னு நிச்சயம்.” வருத்தத்தில் அருளுக்குத் தொண்டை அடைத்தது.
“எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண். இந்த சோக நாடகத்தின் ஸ்க்ரிப்ட்டை நடுவில ஊகிச்சிடுறா.”
“அவன் வலை வீசும்போது…”
“சாமர்த்தியமா அதை வெட்டி தப்பித்துவிடுகிறாள்.” மறுபடியும் அவன் கண்களில் ஈரம்.
“புத்திசாலிப் பெண்” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அருள் சொன்னான்.
“புத்திசாலியான அப்பா அம்மாவுக்கு பிறந்த பெண்.”
bezzle
noun
a financial or social interaction with one side, by concealing key details from the other, has undue advantage.
the duration from the setting up of such interaction to its eventual resolution when the key details become apparent to the adversely affected side.