This entry is part 1 of 4 in the series 3 மே 2026


பாலமுருகன் லோ

காலை விடிந்திருந்தது. பால் போடுபவனின் குரல், தெருவில் மாடுகள் நடக்கும் சப்தம், அவற்றின் கழுத்துமணி ஒலி, சமையலறையில் பால் குக்கரின் ஓசை, டேப் ரெக்கார்டரில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் கந்த சஷ்டி பாடல்—இவை எல்லாம் சேர்ந்து இனிய காலையை வரவேற்றன. ஆனால் போர்வைக்குள் தன்னை மறைத்துக்கொண்டு கிடந்த கிருஷ்ணனுக்கு மட்டும் அந்தக் காலை இன்னும் விடியவே இல்லை.

“கிருஷ்ணா டேய், எழுந்திருடா! எருமை மாடு, எவ்வளவு நேரமாச்சு தெரியுமா?” என்று சமையலறையில் சமைத்துக்கொண்டே, நெற்றியில் வழிந்த வியர்வையைப் புடவையின் முனையால் துடைத்தபடி சரிதா கத்தினாள்.

“இப்படி நீ இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிக்கிட்டே இருந்தா, விடிஞ்சும் உனக்கு விடியாத மாதிரிதான்.”

கிருஷ்ணன் எரிச்சலுடன் காதுகளைப் பொத்திக்கொண்டு திரும்பிப் படுத்தான்.

“வெளியில போய்ப் பாரு. உன்ன மாதிரி இருக்கிற பசங்களெல்லாம் எவ்வளவு பொறுப்பா வீட்டைப் பார்த்துக்கிறாங்க. நீயும்தான் இருக்கியே. எப்பப் பார்த்தாலும் வீட்டைச் சுத்திக்கிட்டு, வேளாவேளைக்கு சாப்பிட்டுக்கிட்டு, இப்படி பொழுதைக் கழிச்சா எப்படிடா முன்னுக்கு வருவ?”

போர்வையை விலக்கி, “ம்மா…” என்றான் கிருஷ்ணன்.

“ஏம்மா, இதே பொலப்பாப் போச்சு உனக்கு. ஒரு நாளைக்கு இதையே மூணு தடவை சொல்லணுமா? வேலை கிடைக்கக் கொஞ்சம் லேட்டாகுதுன்னா, வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவையா?” என்றான்.

“ஏண்டா, நான் என்ன அப்படி உன்னைக் கழுவி ஊத்துனேன்? என்னோட ஆத்தாமைதான் கோவமா வெளிவருது. அது குத்தமா?”

“யம்மா, தினமும் இதையே சொன்னா எப்படி பொறுத்துப் போறது? நீயே சொல்லு.”

“சரிடா, நீ வேலை தேடுற. நல்ல வேலைக்குப் போறப்போ போ. யாரு வேண்டாம்னு சொன்னா? ஆனா அது வரைக்கும் வீட்டுக்கும் கொஞ்சம் ஒத்தாசையா இருந்தா நல்லதில்ல?”

“யம்மா, நீ இப்ப என்ன சொல்ல வர? நான் இப்ப தண்டச்சோறு சாப்பிடறேன்னு சொல்லாம சொல்லற. சரிதானே?”

“அப்படி நான் சொல்லலடா. ஆனா ரெண்டு வருஷமா வேலை தேடுற உனக்கு இன்னும் வேலை கிடைச்சபாடில்லை. அதுல வேற சிபாரிசு வேண்டாம்னு சொல்லுற; உன்னோட சொந்த முயற்சியிலதான் கிடைக்கணும்னு சொல்லற. நல்ல விஷயம்தான். ஆனா அது வரைக்கும் ஏதாவது செய்யலாமே.”

“யம்மா, இந்த ரெண்டு வருஷமா நீங்க ரெண்டு பேரும் என்னைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கீங்க. நான் ஏதாவது வேண்டாத செலவு செய்யறேனா? சினிமா, சிகரெட், குடின்னு பணத்தை வீணாக்கறேனா? இல்ல. வாரம் வாரம் போஸ்டுக்குத்தான் செலவு செய்யறேன்.”

“நாங்க ரெண்டு பேரும் உன்கிட்ட என்னடா கேட்டோம்? தினம் ரெண்டு மூணு மணி நேரமாவது கடைக்கு வந்து உங்க அப்பனுக்கு ஒத்தாசையா இருந்தா நல்லா இருக்குமில்ல? அந்த ஆளு பாவம்; காலையில எழுந்து வீட்டை விட்டுப் போச்சுன்னா, பிறகு சாப்பாட்டுக்குத்தான் வீட்டுக்கு வருது. அவசர அவசரமா சாப்பிடுது, கொஞ்சம் தூக்கம் போடுது, அப்புறம் மீண்டும் கடைக்குப் போயிடுது.”

அப்போது வாசலிலிருந்து, “வாசு அண்ணே… போஸ்ட்!” என்ற குரல் கேட்டது. சரிதா வாசல் பக்கம் திரும்பினாள்.

“என்னங்க போஸ்ட்மேன், எங்கிருந்து வந்திருக்கு? யாருக்கு வந்திருக்கு?” என்றாள்.

“யம்மா, இங்க கிருஷ்ணா இருக்கானே?”

“ஆமாங்க, என் புள்ளதான். சொல்லுங்க.”

“யம்மா, சென்னையிலிருந்து இண்டர்வியூ லெட்டர் வந்திருக்கும்மா,” என்றார் போஸ்ட்மேன்.

இதைக் கேட்ட கிருஷ்ணன் வீட்டினுள் இருந்து வேகமாக வெளிவந்து, போஸ்ட்மேனிடமிருந்து அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்தான். வரும் வாரக் கடைசியில் மதியம் நேர்காணல் என்று இருந்ததைப் பார்த்ததும், அவன் முகம் மலர்ந்தது.

அவனின் முகத்தில் தெரிந்த அந்தச் சந்தோஷத்தைப் பார்த்த சரிதா, “இந்தத் தடவையாவது அவனுக்கு ஒரு நல்ல விமோசனம் பிறக்கணும், கடவுளே,” என்று மனத்துள் வேண்டிக்கொண்டாள்.

கிருஷ்ணன் அந்த வாரக் கடைசி நேர்காணலுக்குத் தயாரானான்.

வெள்ளி இரவு கலத்தூரிலிருந்து சென்னைக்குப் பயணம் மேற்கொண்டான். விடியற்காலை பேருந்து சென்னையை அடைந்தது. அங்கிருந்த கட்டணக் குளியலறையில் குளித்துவிட்டு, கொண்டுவந்த மாற்றுத் துணியை உடுத்தினான்.

கையில் வெறும் முன்னூறு ரூபாய் மட்டும்தான் இருந்தது. அதிலேயே காலை உணவு, பேருந்துக் கட்டணம், மதிய உணவு—எல்லாம் சமாளிக்க வேண்டும். மீதமிருக்கும் பணத்தில் சாயந்திரம் ஊருக்குத் திரும்பவும் வேண்டும்.

காலைக்கு இரண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டான். பின் சூடாக ஒரு கப் காபி குடித்துவிட்டு, நேர்காணல் நடக்கும் இடத்துக்குப் போனான். அங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது—அவனைப் போல் எவ்வளவு பேர் வேலைக்காக அலைகிறார்கள் என்று.

கூட்டத்தோடு வரிசையில் காத்திருந்து, தனது பெயரைக் கூப்பிட்டவுடன் உள்ளே சென்றான்.

“சார், உள்ளே வரலாமா?” என்றான்.

அறையின் அமைதியை உடைத்தபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் இரண்டு முறை அடித்தது. கிருஷ்ணன் தலை தூக்கிப் பார்த்தான். மணி இரண்டு ஆகியிருந்தது.

“எஸ், வாங்க. உட்காருங்க. உங்க பெயர்?”

“சார், கிருஷ்ணன்.”

“எஸ், கிருஷ்ணன். சொல்லுங்க, உங்களைப்பற்றி,” என்று நேர்காணல் நடத்துபவர் கேட்டார்.

கிருஷ்ணன் தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, தான் படித்த படிப்பைப் பற்றிச் சொன்னான்.

“ஏம்பா, இந்த வேலை நான் உனக்குக் கொடுத்தா, அதை நல்ல முறையில் செய்வியா?” என்றார்.

“சார், கட்டாயம் நல்ல விதமாக செய்வேன்.”

“நீ படித்த ஜாவா, ஆரக்கிள், சி, சி பிளஸ் பிளஸ் எல்லாம் இப்ப பழைய விஷயமா ஆயிடுச்சு. இப்போ வேற விஷயங்கள் தேவைப்படுது. இந்த ரெண்டு வருஷத்துல புதுசா என்ன கத்துக்கிட்ட?” என்றார்.

கிருஷ்ணன் தொண்டைக்குழியில் இருந்த எச்சிலை விழுங்கினான். நெற்றியில் துளிர்த்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்தான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.

“நாங்க இங்க ட்ரெயினிங் சென்டர் நடத்தலப்பா. கொஞ்சம் முன் அனுபவமோ, இல்லை அதைப் பற்றிய சிறிய புரிதலோ இருந்தால்தான் எடுத்துக்கொள்வோம். நீ படித்ததை மட்டும் வைத்து இந்த வேலையைச் செய்ய முடியாது.

கவலைப்படாதே. நல்லா படிச்சுட்டு, அப்டேட்டோட மறுபடியும் வந்தா பார்க்கலாம்,” என்றார்.

மனசு நொந்து வெளியே வந்த கிருஷ்ணன், பேருந்து நிலையத்துக்குச் சென்றான். இரவு உணவுகூட சாப்பிடணும்னு அவனுக்குத் தோணல. கையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான். ஊருக்குத் திரும்பப் போதும் என்ற அளவுக்குத்தான் இருந்தது.

பேருந்தில் ஏறி சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தான். பேருந்து நகர ஆரம்பித்தது. மெல்லிய காற்று அவன் மேல் பட, அவனுக்குள் ஏதோ அசைந்தது.

அவனோட அம்மா தன் முந்தானையை வீசி தன்னைத் தூங்க வைத்த காலம் அவன் கண்முன்னே வந்து போனது.

சற்றுக் கண் அயர்ந்தபோது கிருஷ்ணனின் நினைவு தன் அப்பாவை நோக்கி ஓடியது.

விடியற்காலையிலேயே கடைக்குப் போய், பரோட்டா மாவைப் பிசைந்து, அடுப்பின் வெப்பத்தைச் சகித்தபடியே, பகல் இரவு பாராமல் பசியோடு வரும் மனிதர்களுக்கு முகம் சுழிக்காமல் உணவு தரும் அப்பாவின் உழைப்பு அவன் மனதைப் பிழிந்தது.

அப்போதுதான் சில மாதங்களுக்கு முன்பு தன் அப்பாவிடம் சொந்தக்காரர் ஒருவர் பேசிய விஷயம் அவன் நினைவுக்கு வந்தது.

“ஏம்பா வாசு, உன் புள்ள படிச்சு முடிச்சுட்டானுல்ல?” என்றார் அவர்.

“ஆமாண்ணே, அவன் ரெண்டு வருஷம் முன்னாடியே முடிச்சுட்டான்,” என்றார் வாசு.

“பிறகு ஏம்பா இன்னும் அவனுக்கு வேலை கிடைக்கல? வேற ஏதாவது எண்ணமிருக்கா அவனுக்கு?”

“அண்ணே, நல்ல வேலையா தேடிக்கிட்டிருக்கானே.”

“சரிப்பா. இங்க இந்த அடுப்பு வெப்பத்துல நீ இப்படி கஷ்டப்படுற. வேண்டும்னா உன் புள்ளையைக் கூப்பிட்டுக்கக் கூடாதா ஒத்தாசைக்கு?”

“இல்லண்ணே, அதெல்லாம் சரிப்பட்டு வராது. நல்லா படிச்சிருக்கான் அவன். போய் இந்த அடுப்பு வெப்பத்துல எப்படி நிப்பான்?”

“என்னமோப்பா, நீ சொல்லுற. நான் கேட்டுக்கிறேன்,” என்று அவர் சொல்லிவிட்டுப் போனார்.

அந்த வரிகள் அவன் காதில் முன்னமே விழுந்திருந்தாலும், இப்போது அந்த வார்த்தைகள் கூரிய ஈட்டி தன் நெஞ்சைக் குத்திக் கிழித்தாற்போல் தோன்றியது.

நமக்காக நம்ம அப்பா அம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க. ஆனா அவர்களுக்கு நாமென்ன திருப்பிக் கொடுத்திருக்கோம் என்று அவன் மனசு கேட்டது.

பேருந்து இருளைக் கிழித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சன்னல் கம்பியில் தலையை வைத்துப் படுத்திருந்தவன், திடீரென்று தன் முகத்தில் காலைக் கதிரவன் படுவதைக் கண்டான்.

விழிப்பு வரவே, உடனே கண்களைத் திறந்தான். கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி சுமார் ஆறு ஆகியிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் ஊர் வந்துவிடும் என்று மனதில் எண்ணினான்.

பேருந்து நிறுத்தம் வந்ததும் கிருஷ்ணன் இறங்கினான். வழக்கம்போல் வீட்டுக்குச் செல்லாமல், நேராகத் தன் அப்பாவின் ஹோட்டலுக்குச் சென்றான்.

கடையின் முன் வாசு விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அடுப்பின் அருகே ஒரு சிறிய சூடத்தை ஏற்றி வைத்து, கைகளை கூப்பி சாமி கும்பிடத் தொடங்கியிருந்தார்.

கிருஷ்ணன் வாசலிலேயே நின்றான். அப்பாவையும், கடையின் பெயர்ப் பலகையையும், இன்னும் பற்றாத அந்த அடுப்பையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ஏம்பா கிருஷ்ணா, எப்ப வந்த? என்ன ஆச்சு போன காரியம்?” என்று வாசு கேட்டார்.

கிருஷ்ணனிடமிருந்து பதில் வரவில்லை.

“சரி விடு. கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு. அடுப்பைப் பற்றவைக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்துல எல்லாம் ரெடி ஆயிடும்,” என்றார் வாசு.

கிருஷ்ணன் அசையாமல் நின்றான். அவனது கண்களிலிருந்து மெதுவாக நீர் வழிந்தது. அதைத் துடைக்கவும் அவனுக்கு மனமில்லை. தன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

முதல்முறையாக, அந்த அடுப்பின் வெப்பம் அவனைச் சுடவில்லை.

பனிக்கட்டியைப் போல இறுகிப்போயிருந்த அவன் மனதை, அந்த அடுப்பு வெப்பம் மெதுவாக இளகச் செய்தது.

Series Navigationசங்க இலக்கியத்தில் வெற்றிலை பாக்கு – ஓர் ஆய்வு