மழையம்மா மழையம்மா
— பா.சத்தியமோகன்
மழையம்மா! உனக்குப் படையல் எடுக்கிறேன்’
கொஞ்சம் நின்று வாடி.
ஏன் இத்தனைப் பாய்ச்சலோ
எதற்கு இத்தனை வேகமோ
யார் சொல்லித் தாக்குகிறாய் மழையம்மா
பருவமழை கனத்தமழை புயல் மழை அடைமழை
வெள்ளமழை விடாத மழை
பலப்பல ரூபமானாய் பரிதவித்துப் போனோம்
கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்த போதெல்லாம்
விர்ன்னு மேகமுந்தானை உணத்திப் போனவளே
இப்போ நிதம் நிதமும் வந்து
குடிசையிலே தூங்கவும் விடாமெ மூழ்கடிப்பதென்ன
நெஞ்சும் தோளும் நனையும் வரை
பெஞ்சு தான் தீர்வேனுன்னு அடம் பிடிக்காதே
தாங்க மாட்டோம் கொஞ்சம் தோலும் நனைக்க வராதே
சட்டுன்னு நின்னுடு
சில்லிட்டுக் கிடக்றோம் வெளியில உன் பேச்சு
சிலுசிலுவென்னு வருவே குளுகுளுன்னு வருவே
பாத்துட்டுப் போயிடுவே
இப்போ கடுகடுன்னு வாரியோ என்னமோ
ஒரே முட்டா தாக்கிப்புட்டே
பயிர் வேணும்னு சொன்னோம் எங்க உயிர் வேணாமா
பசி வேணும் காசு வேணும்னு
நிதமும் நெனச்சுவோம்
நெல் சோத்துல மண்ணு வந்து விழுகலே
இப்போ மழை வந்து விழுகுதும்மா
கும்பிடறதும் மாரிதான்
பெய்யறதும் மாரிதான்
நிலத்தை உழுறதும் மாரி தான்
இப்போ பெஞ்சுபுட்டே மாரிதான்
என்னகுமோ எதிர்காலம்
மழையாலே அழிஞ்சதுன்னு
உனக்கு கெட்ட பெயர் வேணுமின்னா
தாயீ இன்னும் கனமா பேஞ்சுக்கோ
எங்க உயிரை முழுசுமா எடுத்துக்கோ.
***