யுவராஜ் சம்பத்
அமெரிக்க வல்லாதிக்கத்தை 20 ஆண்டுகள் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் நாட்டிலிருந்து விரட்டிய வியட்நாம் மக்கள், அதன் பின்னர் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்தனர்.
உணவிற்கும், ஒரு முழம் துணிக்காகவும் ரேஷன் கூப்பன்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள் தொகையின் 70% வரை.பணம் என்பது வெறும் ஒரு துண்டுச் சீட்டாகவே கருதப்பட்ட காலம் அது.
போரில் வென்ற நாடு பொருளாதாரத்தில் தோற்றிருந்தது.
அந்த நாடு இன்று உலகளாவிய விநியோகச் சங்கிலியின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறியது எப்படி?
இன்று ஈரான் மற்றும் பாலஸ்தீனில் நிலத்தடி சுரங்கங்கள் போர் உத்தியில் முக்கியமாகக் கருதப்படும் போது, அதை முறையாகப் பயன்படுத்தியதில் முன்னோடிகளில் ஒருவர் வியட்நாமியர்கள்.அதே வியட்நாம் இன்று ஒருகாலத்தில் தங்கள் மீது சுமார் 70 லட்சம் டன் குண்டுகளை வீசிய அமெரிக்காவுடனே நெருக்கமான வர்த்தக உறவை வைத்துள்ளது.
இது எப்படி சாத்தியம்?
இதன் பின்னணி என்ன?
இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம்.
பிரிவு மற்றும் போர்: வரலாற்றின் திருப்பம்
1954 ஆம் ஆண்டு, முதல் இந்தோசைனா போருக்குப் பிறகு, வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரிந்தது. இந்தப் போரில் பிரான்ஸ் தோல்வியடைந்தது.
வடக்கு வியட்நாமில் ஹோ சி மின் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நிறுவப்பட்டது.
தெற்கு வியட்நாமில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன், சைகோன் நகரைத் தலைநகராகக் கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டது.
இரு பகுதிகளுக்கும் இடையேயான எல்லையாக 17-வது இணையான கோடு (17th Parallel) நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் தேர்தல் நடத்தி ஒரே அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பது திட்டமாக இருந்தது. ஆனால் கம்யூனிசம் வெற்றி பெறும் என்ற அச்சத்தில், அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாம் அந்தத் தேர்தலைத் தடுத்தன.
இதுவே பின்னாளில் புகழ்பெற்ற வியட்நாம் போருக்குக் காரணமானது.
1975 ஏப்ரல் 30 அன்று, வட வியட்நாம் சைகோனை கைப்பற்றியது.
1976-இல், நாடு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.
இருண்ட தசாப்தம்: ரேஷன் பொருளாதாரம் (1975 / 1986)
அடுத்த பத்து ஆண்டுகள், வியட்நாமின் மிகச் சவாலான காலமாக இருந்தது.
அரசே மக்கள் வாழ்க்கையின் அனைத்தையும் கட்டுப்படுத்தியது.
எவ்வளவு அரிசி, எவ்வளவு துணி, எவ்வளவு எரிபொருள் அனைத்தும் ரேஷன் கூப்பன்களால் நிர்ணயிக்கப்பட்டது.போருக்கு முன்பு தெற்கு வியட்நாமில் இருந்த தனியார் வணிகங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.இதனால் உற்பத்தி பெருமளவில் முடங்கியது.
வறுமை, உணவுப் பஞ்சம், மற்றும் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
அந்த இருண்ட காலம், ஒரு நாட்டை உடைக்கவில்லை மாறாக மாற்றத்திற்குத் தள்ளியது.
1986-இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாய் மோய் (Doi Moi) சீர்திருத்தங்கள், வியட்நாமை ஒரு வறிய நிலையில் இருந்த நாடாக இருந்து, உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாற்றியது. சீர்திருத்தங்களுக்குப் பிறகு கூட்டுப்பண்ணை முறையை அரசு கைவிட்டது. நிலங்கள் விவசாயிகளுக்கே நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டன.விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களைச் சந்தையில் விற்க அனுமதி கிடைத்தது.
இதன் விளைவாக, உணவுக்குத் திணறிய வியட்நாம், சில ஆண்டுகளிலேயே உலகின் இரண்டாவது பெரிய அரிசி ஏற்றுமதி நாடாக மாறியது.
வியட்நாம் தனது கதவுகளை உலக நாடுகளுக்குத் திறந்தது.வெளிநாட்டு நிறுவனங்கள் வியட்நாமில் தொழிற்சாலைகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது.
குறிப்பாக சாம்சங் , இன்டெல் போன்ற நிறுவனங்கள் அங்கு பெரிய ஆலைகளை அமைத்தன. இன்று நாம் பயன்படுத்தும் பல மின்னணு பொருட்கள் “Made in Vietnam” என்று இருப்பதற்கு இதுவே காரணம்.
உலக வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் வறுமையை ஒழித்த நாடுகளில் வியட்நாமும் ஒன்று.1990-களின் தொடக்கத்தில் 70% ஆக இருந்த வறுமை விகிதம், இன்று 5% க்கும் குறைவாக சரிந்துள்ளது.நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்தது.
பொருளாதார வளர்ச்சியில் கிடைத்த வருமானத்தை அரசு கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்தது. இதனால் வியட்நாமின் தொழிலாளர்கள் அதிகத் திறன் கொண்டவர்களாக மாறினர். இது மீண்டும் அதிக முதலீடுகளை ஈர்க்க உதவியது.
1995-இல் அமெரிக்காவுடனான உறவை வியட்நாம் சீரமைத்தது.
2007-இல் உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது. இது வியட்நாம் தயாரிப்புகள் உலகச் சந்தைக்கு எளிதாகச் செல்ல வழிவகுத்தது.
வியட்நாம் வெறும் விவசாய நாடாக இல்லாமல், ஆயத்த ஆடை, காலணிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் உலகின் முன்னணி மையமாக உருவெடுத்தது.
இன்று வியட்நாம், சீனாவுக்கு மாற்றாகப் பார்க்கப்படும் ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக உள்ளது. குறிப்பாக ஜவுளி மற்றும் மின்னணுத் துறையில் வியட்நாமின் வளர்ச்சி மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு பாடமாகத் திகழ்கிறது.
வியட்நாமின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளையே வியக்க வைத்துள்ளது. டாய் மோய் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, அவர்கள் குறிப்பாக மூன்று முக்கியத் துறைகளில் உலகளாவிய சாதனைகளைப் படைத்துள்ளனர்:
இன்று வியட்நாமின் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது மின்னணுத் துறைதான். மொத்த ஏற்றுமதியில் சுமார் 30% க்கும் மேலாக மின்னணு சாதனங்கள் மட்டுமே பங்களிக்கின்றன.உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியாளராக வியட்நாம் உருவெடுத்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் 50% க்கும் மேற்பட்ட போன்கள் வியட்நாமில் தான் உற்பத்தியாகின்றன.
இன்டெல் , எல்ஜி மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாகத் தயாரிப்பாளர்கள் அங்கு பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர்.
வியட்நாம் ஜவுளி மற்றும் காலணித் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளராக உள்ளது.
சீனா மற்றும் வங்காளதேசத்திற்கு அடுத்தபடியாக உலகின் முன்னணி ஆடை ஏற்றுமதி நாடாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஆடைகளை அனுப்புகிறது.
நைக்கி மற்றும் அடிடாஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பிராண்டுகளின் காலணிகளில் பெரும் பகுதி வியட்நாமில் தயாராகின்றன.
தொழில்துறை மட்டுமல்லாது, விவசாயத்திலும் ஏற்றுமதியில் சாதனை படைக்கின்றனர்.உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளர்.பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய காபி ஏற்றுமதியாளர் (குறிப்பாக ‘ரோபஸ்டா’ வகை காபி).உலக மிளகு உற்பத்தியில் சுமார் 40% வியட்நாமில் இருந்தே வருகிறது.
இறால் மற்றும் மீன் ஏற்றுமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
வியட்நாமின் இந்த வெற்றிக்கு என்ன காரணம்?
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் : வியட்நாம் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா என உலகின் பல நாடுகளுடன் வரி இல்லா அல்லது குறைந்த வரி வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
அந்நிய முதலீடு : வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதாகத் தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையையும் , சிறந்த உள்கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.
அரசியல் ஸ்திரத்தன்மை: நீண்ட காலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அங்குள்ள அரசியல் சூழல் உதவியாக உள்ளது.
வியட்நாமின் இந்த வளர்ச்சிப் பாதை, குறிப்பாக ஜவுளித் துறையில் அவர்கள் பின்பற்றும் நவீன உத்திகள், நமது திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகள் ஆகியவற்றில் வியட்நாம் காட்டும் ஆர்வம் குறிப்பிடத்தக்கது.
சீனாவைப் போலவே வியட்நாமும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் நாடு. 1978-இல் சீனா தனது பொருளாதாரத்தைத் திறந்ததை போலவே,வியட்நாம் 1986-இல் செய்தது.
தற்போது சீனாவில் கூலி உயர்வு மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமாக, பல உலகளாவிய நிறுவனங்கள் சீனாவிற்கு மாற்றாக வியட்நாமைத் தேர்ந்தெடுக்கின்றன.சீனாவை விட சிறிய நாடாக இருப்பதால், வியட்நாமால் கொள்கை மாற்றங்களை மிக வேகமாகச் செயல்படுத்த முடிகிறது.
தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகள் 1960-70களிலேயே வளர்ந்துவிட்டன. வியட்நாம் அவர்களைப் பின்பற்றி ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மாதிரியை கையில் எடுத்தது.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மக்கள் தொகை முதிர்ச்சியடைந்து வரும் நிலையில், வியட்நாமில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். இது அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர்களுக்குப் பெரும் சாதகமாகும்.
தென்கிழக்கு ஆசியாவின் மாற்றங்களை கவனிக்கும்போது, வரும் பத்தாண்டுகளில் வியட்நாம் ஆசியாவின் புதிய “பொருளாதாரப் புலியாக” உருவெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.அவர்கள் சில முக்கியமான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வியட்நாமில் அந்நிய நேரடி முதலீடுகள் வெறும் ஒரு சில துறைகளில் மட்டும் முடங்கிவிடாமல், காலப்போக்கில் அதிக தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை நோக்கி நகர்ந்துள்ளன.
மொத்த அந்நிய முதலீட்டில் சுமார் 60% முதல் 70% வரை, உற்பத்தி மற்றும் செயலாக்கத் துறை பெற்றுள்ளது .இந்த ஒரு துறையிலேயே அதிகம் குவிகிறது.
ஸ்மார்ட்போன்கள், கணினி உதிரிபாகங்கள் மற்றும் செமிகண்டக்டர் தயாரிப்பில் சாம்சங், இன்டெல், ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன.
அடிடாஸ், நைக்கி மற்றும் பல சர்வதேச ஆடை நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களை அங்கு வைத்துள்ளன. குறிப்பாக, இப்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்திக்காக அதிக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சி காரணமாக மக்கள் தொகை நகரங்களை நோக்கி நகர்வதால், கட்டுமானத் துறையில் அதிக முதலீடு செய்யப்படுகிறது.
நவீன அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலை பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
வியட்நாம் தற்போது பசுமை ஆற்றலை நோக்கி வேகமாக நகர்கிறது.தென்கிழக்கு ஆசியாவிலேயே சூரிய மின்சக்தி உற்பத்தியில் வியட்நாம் முன்னணியில் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் அங்குள்ள காற்றாலை மற்றும் சோலார் பண்ணைகளில் அதிக அளவில் முதலீடு செய்கின்றன.
வியட்நாம் ஏன் முதலீட்டாளர்களைக் கவர்கிறது?
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆரம்ப காலங்களில் வரி விலக்கு மற்றும் சலுகைகளை அரசு வாரி வழங்குகிறது.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் மிகவும் மலிவான விலையில் தடையின்றி வழங்கப்படுகின்றன.
தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தை அரசு பெருமளவு குறைத்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 13, 2026) நொய்டாவில் ஊதிய உயர்வு மற்றும் 12 மணிநேர வேலை நேரத்திற்கு எதிராக நடந்த வன்முறைப் போராட்டங்கள் இந்தியத் தொழில்துறை வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதே போன்ற சூழல் வியட்நாமில் இருக்குமா என்று கேட்டால், அங்கு நிலைமை சற்றே மாறுபட்டது.
அரசு மற்றும் சட்டக்கட்டுப்பாடு
வியட்நாம் ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்பதால், அங்கு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ‘வியட்நாம் தொழிலாளர் கூட்டமைப்பு’ என்ற அரசின் ஒரே குடையின் கீழ் இயங்குகின்றன.நொய்டாவில் நடந்தது போன்ற தன்னிச்சையான அல்லது வன்முறை கலந்த போராட்டங்கள் அங்கு நடப்பது மிகக் குறைவு. ஏனெனில், போராட்டங்களுக்கு முன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் (Mediation) கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
திடீர் வேலைநிறுத்தங்கள்
சட்டப்படி போராட்டங்கள் நடத்தக் கடினமான விதிகள் இருந்தாலும், வியட்நாமில் ‘Wildcat Strikes’ எனப்படும் திடீர் வேலைநிறுத்தங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு.இவை பெரும்பாலும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் , குறிப்பாகத் தைவான், தென் கொரியா மற்றும் சீன நிறுவனங்களில் ஊதிய உயர்வு அல்லது தரமான உணவு கேட்டு நடக்கும்.
ஆனால், இவை நொய்டாவில் நேற்று நடந்தது போல வாகனங்களுக்குத் தீ வைப்பது அல்லது வன்முறையில் ஈடுபடுவது போன்ற நிலைக்குச் செல்வது மிகவும் அபூர்வம். அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு கண்டுவிடும்.
ஊதிய உயர்வு மற்றும் தீர்வுகள்
நொய்டாவில் நேற்று போராட்டம் நடந்த சில மணிநேரங்களிலேயே உத்தரப் பிரதேச அரசு 21% வரை ஊதிய உயர்வை இடைக்காலமாக அறிவித்துள்ளது.
வியட்நாமிலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்போது, அரசு ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஊதியத்தை சீராக உயர்த்தி வருகிறது.2026-ன் தற்போதைய நிலவரப்படி, அங்குள்ள இளைஞர்கள் வெறும் ஊதியத்தை மட்டும் பார்க்காமல், நல்ல வேலை சூழல் மற்றும் கண்ணியமான நடத்தையை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
வேலை நேரம்
இந்த பின்னணியில் இந்தியாவில் நடந்த சமீப சம்பவத்தை பார்க்கும்போது…”நொய்டாவில் 12 மணிநேர வேலை நேரத்திற்கு எதிராகப் போராட்டம் வெடித்தது.
வியட்நாமின் தொழிலாளர் சட்டம் (Labor Code 2019) படி, வாரத்திற்கு 48 மணிநேரம் மட்டுமே சாதாரண வேலை நேரம். கூடுதல் நேரம் என்பது தொழிலாளியின் சம்மதத்துடன் மட்டுமே செய்யப்பட வேண்டும். இதைக் கறாராகப் பின்பற்றுவதால், அங்கு வேலை நேரம் குறித்த பெரிய வன்முறைகள் எழுவதில்லை.
ஆக சுறுசுறுப்பு, வேலை நிறுத்தம் இல்லாமை , தொழிலாளர் நலன் பாதுகாத்தல் ஆகியவையே முன்னேற்றத்தின் மூன்று ஊன்று கோள்கள் என்றும் கொள்ளலாம்.வியட்நாமின் அசுர வளர்ச்சிக்கு இந்த மூன்று ஊன்றுக்கோல்களும் மிக முக்கியமான அடித்தளமாக அமைந்தன. 1986-க்கு முன்பு வறுமையில் வாடிய ஒரு நாடு, இன்று உலக நாடுகளுக்குப் போட்டியாக நிற்கிறது என்றால் அதற்கு இந்த “சமநிலை” தான் காரணம்.
வியட்நாமியத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் சுறுசுறுப்பு உலகத்தரம் வாய்ந்தது.ஆர்டர்களைச் சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பதில் அவர்கள் காட்டும் வேகம் அபாரமானது.
புதிய தொழில்நுட்பங்களை மிக விரைவாகக் கற்றுக்கொண்டு அதை உற்பத்தியில் பயன்படுத்துகின்றனர்.
தொழிலதிபர் மட்டுமல்ல, அங்குள்ள அரசு அதிகாரிகளும் ஒரு தொழிலைத் தொடங்கத் தேவையான அனுமதிகளை வழங்குவதில் அதீத சுறுசுறுப்பைக் காட்டுகின்றனர்.
தொழில் அமைதி – வேலைநிறுத்தம் இல்லாமை
ஒரு நாடு முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், அங்குத் தொழில் அமைதி மிகவும் அவசியம்.அங்கு வன்முறை கலந்த போராட்டங்கள் அல்லது நீண்ட கால வேலைநிறுத்தங்கள் இல்லாததால், உலகளாவிய நிறுவனங்கள் எவ்விதத் தடையுமின்றி இயங்குகின்றன.பிரச்சனைகள் ஏற்படும்போது அதை முளையிலேயே கிள்ளி எறியும் ‘முத்தரப்பு பேச்சுவார்த்தை’ (அரசு, தொழிலாளர், நிர்வாகம்) அங்குச் சிறப்பாகச் செயல்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
தொழிலாளர் நலன் பாதுகாத்தல்
சுறுசுறுப்பு மற்றும் உற்பத்தித்திறன் என்பது தொழிலாளர்களைச் சுரண்டுவதாக அமையக்கூடாது என்பதில் வியட்நாம் கவனமாக உள்ளது.தொழிலாளர்களுக்கான காப்பீடு, தரமான தங்குமிடம் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு முறைப்படுத்தியுள்ளது.தொழிலாளர்களை வெறும் உடல் உழைப்பாளர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களைத் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களாக மாற்ற அரசு தொடர்ந்து முதலீடு செய்கிறது.நல்ல வேலைச் சூழல் இருந்தால் மட்டுமே உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
வியட்நாம் மாடல் நமக்குச் சொல்லும் செய்தி:
இந்த மூன்று காரணிகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவை.
நலன் காக்கப்பட்டால் அமைதி நிலவும்.
அமைதி நிலவினால் சுறுசுறுப்புடன் இயங்க முடியும்.
இவை மூன்றும் இணைந்தால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் சாத்தியம்.
திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொண்டு வரும் தொழில் முயற்சிகளில், இந்த மூன்று காரணிகளையும் சமமாகப் பேணுவது பெரிய வெற்றியைத் தரும். குறிப்பாக, தொழிலாளர்கள் தங்களை இந்தத் தொழிலின் ஒரு அங்கமாக உணரும்போது , உற்பத்தித்திறன் தானாகவே உயரும்.
“வியட்நாம் காட்டிய பாதை வளர்ச்சி என்பது கொள்கை மட்டுமல்ல, ஒழுங்கும் சமநிலையும் சேர்ந்து உருவாக்கும் ஒரு கலாச்சாரம்.”
- அடுப்பு வெப்பம்
- சங்க இலக்கியத்தில் வெற்றிலை பாக்கு – ஓர் ஆய்வு
- வியட்நாம்… அன்றும், இன்றும்…
- மழைபுராணம் 30