மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43

This entry is part 3 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நாகரத்தினம் கிருஷ்ணா

ஹரிணி

54. மறுநாள் திங்கட் கிழமை. காலை பத்துமணிக்கு அண்ணாநகர்வரை போகவேண்டியிருந்தது. நான்கு தினங்களுக்குமுன்பு புதுச்சேரி கடற்கரையில் சந்தித்த பிரெஞ்சு இளைஞர் குழு, தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புதுச்சேரிக்கு மேற்கே ஒருகிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித் தரவிருப்பதாக கூறியிருந்தார்கள். காலை எட்டுமணிக்கு எழுந்திருந்தபோது, கௌசல்யா அம்மா தோசைவார்த்துக்கொண்டிருந்தார். பல்துலக்கி குளித்து முடித்து, வழக்கம்போல ஒரு டெனிம், காட்டன் ஷர்ட் என்று தயாராகவும், மேசைக்கு தோசைதட்டு வந்தது. அவசர அவசரமாக தோசை விள்ளல்களை கார சட்டினியுடன் விழுங்க விக்கல் தொல்லை கொடுத்தது.

– மெதுவா சாப்பிடும்மா என்ன அவசரம்? தண்ணீரை எடுத்து நீட்டினார்.

– காலையில் வேலைகளிருக்கின்றன, அண்ணா நகர் சென்று அங்கிருந்து ஒரு கிராமத்திற்குப்போகிறேன். மதிய உணவை அங்கேயே முடித்துக்கொள்வேன். எனக்காக எதுவும் சமைக்கவேண்டாம். இன்றிரவும் எத்தனை மணிக்குத் திரும்புவேனென்றும் தெரியாது. நீங்கள் வேளையாய் வீட்டுக்குப்போவதென்றாலும் போகலாம் காத்திருக்கவேண்டாம்.

– கொஞ்சம் சன்னற் பக்கம் பாரும்மா!

பார்த்தேன்.இருபது இருபத்தொன்று வயது சொல்லக்கூடிய இரண்டு பையன்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

– இவனுங்க அடிக்கடி இங்கே வந்து நிக்கறானுங்க. ஒரு முறை வீடேறிவந்து விசாரிச்சுட்டு போனானுங்க அதன்பிறகு இப்பக்கம் வருவதில்லை. வெகுநாட்களுக்குப் மறுபடி பார்க்கிறேன். எதுக்கும் பொலீசுலே சொல்லிவைக்கிறது நல்லது.

வீட்டுக்கார அம்மாளூம் அவர்களைப் பற்றி கூறியது நினைவுக்குவந்தது. தொலைபேசி மணி ஒலித்தது: எரிக் நோவா.

– ஹரிணி உன்னுடன் பேசும்போது அந்த எண்ணம் வரவில்லை. எனக்கென்னவோ கலா பெண்ணை பார்த்தால் சில உண்மைகள் தெரியவரலாம். அதை என் ஒருவனால் தனியாகச் செய்ய முடியாது. நீயும் வந்தாயானால் நல்லது.. இருவரும் செஞ்சிக்குப் போகலாமா, பிரச்சினைகளில்லையே!

– இன்றைக்கா? வாய்ப்பே இல்லை. நாளைக்கென்றால் முடியும். அண்ணா நகர்வரை போகணும். பிறகு அங்கிருந்து ஒரு கிராமத்திற்குப்போகிறோம். துலூஸ் பல்கலைகழக மாணவியர் பத்துபேர் வந்திருக்காங்க. அவர்களுடன் செல்கிறேன். திரும்புவதற்கு பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணி ஆகும். அதன் பிறகு செஞ்சி சென்று திரும்ப முடியாது. ஏன் என்ன விஷயம். நீ கூறியிருந்தாயே அந்நூல் சம்பந்தமாகவா?

– ஆமாம். அதை இழக்க எனக்கு விருப்பமில்லை. கலாவைச் சந்திக்கனும்னு நினைக்கிறேன். கண்டிப்பாக அவங்ககிட்டே சில ரகசியங்கள் இருக்கின்றன. எனக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமுமில்லை. நான் போயுட்டு அவங்களோட பேசுவதெல்லாம் நடவாத காரியம். அதனாலேதான் உங்க உதவித் தேவைப்படுது.

– நாளைகாலை கண்டிப்பாக போகலாம். எனக்கும் பெரியவரை பார்க்கணும். வேணு நடவடிக்கைகளில் நிழலிருக்கிறது. என்னைக் நேரிட்டுப்பார்க்க அவன் தயங்குகிறான். கலாவிடமும் தெரிந்துகொள்ள நிறைய இருக்கின்றன. புதுச்சேரி பெண் பிரச்சினை ஏதாவது தெரியவந்ததா?

– இதுவரை எதுவுமில்லை. அவள் என்னைச் சந்தித்தாலும் நீ அறிவுறுத்திய தந்திரத்தை கையாளுவதென்று முடிவெடுத்திருக்கிறேன். நீங்கள் போகும் வாகனத்தில் ஒரு ஆளுக்கு இடமிருக்குமா? இன்றைக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லை, உங்களுடன் வரலாமா என்பதற்காகக் கேட்டேன். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது எனது புல்லட்.

– எப்படி வேண்டுமானாலும் செய். இந்திராகாந்தி சிலை அருகே 9.30க்கு காத்திரு. அங்கிருந்து ஒன்றாக போகலாம்.

ஆட்டோ இந்திராகாந்திசிலையை நெருங்கும்போதே எரிக் நோவா காத்திருப்பதைப் பார்த்தேன். ஆட்டோவைத் தொடர்ந்துவர செய்த சைகையைப் புரிந்துகொண்டு தொடர்ந்தான். பத்துநிமிடம் முன்னதாகவே தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை அடைந்துவிட்டோம். சரியாகப் பத்து மணிக்கு பிரெஞ்சு மாணவியர் குழு வந்தது. தொண்டு நிறுவனத்தின் தலைவர் அனைவரையும் வரவேற்றார். எல்லோருக்கும் மாலைகள் பூச்செண்டுகள். நிறுவனம் ஆரம்பித்தது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதென்ற சிறிய சொற்பொழிவுக்குப் பிறகு அனைவருக்கும் பிஸ்கெட்டும் காபியும் வந்தது. போதுமான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எரிக் நோவாவின் புல்லட்டை அங்கேயே விட்டுச்செல்வதென்று முடிவெடுத்தோம். பதினோருமணிக்கு, மங்கலம் கிராமத்திலிருந்தோம். சமுதாய நலக்கூடம் கட்டவேண்டிய இடத்தை காண்பித்தார்கள். அதே ஒடத்தில் பந்தல்போட்டு மகளிர் சுய உதவி குழுவினர் பிரான்சிலிருந்து வந்தவர்களை வரவேற்றார்கள், அனைவருக்கும் பொன்னாடைகள். குழுவினரின் அறிமுகம். பிரெஞ்சு மாணவிகள் மறுநாளிலிருந்து அங்கே செய்யவேண்டியவை என்ன என்பது பற்றி சுருக்கமாகத் தெரிவித்தார்கள். சிறுவர் சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிநடந்தது. நிதிஉதவி வேண்டுதலும் வந்தது. மகளிர் சுய உதவிக் குழுவினருடன் மதிய உணவை சேர்ந்தே முடித்தோம். பிரெஞ்சு மாணவிகளுடன் உரையாடிக்கொண்டிருந்த நேரம் அந்தோணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டுமுறை தொடர்பைத் துண்டித்தேன். பிறகு பரிதாபப்பட்டு எடுக்கவேண்டியிருந்தது.

– பாரீஸிலிருக்கும் உங்கள் பிரண்டு கிடைச்சாங்களா? அதுதாம்மா, என் அண்ணன் தேவசகாயம் பொண்ணு.

– ஏதாவது அவசரமா?

– ஆமாம் அவசரம். இன்னும் கொஞ்சம் நேரத்துலே பவானி மகளென்று யாரையோ இழுத்துவந்து, அந்த மனையை கிரையம் செய்யப்போறாங்க. தடுத்து நிறுத்தியாகணும். இங்கே உள்ளூர் தாதா ஒருத்தன்தான் எல்லாத்துக்கும் காரணம். நீ ஒத்துழைக்க முடியுமெனில் அங்கே போலீசாரோடு நான் வருவேன்.

– நானா?

– ஆமாம் நீதான். பவானி மகளை நேரில் பார்த்திருக்கும் ஒரே சாட்சி. இவர்கள் அழைத்து வந்திருக்கிறபெண் பொய்யானவளென்று ரிஜிஸ்ட்ரேஷன் ஆபிசிலே சொல்லணும், பத்திர பதிவு நின்றுபோகும். சம்பந்தப்பட்டவர்களை கம்பி எண்ண வைக்கலாம். உடனே புறப்பட்டு ரிஜீஸ்ட்ரேஷன் ஆபிஸ¤க்கு வா. சாரத்துலே கலெக்டர் ஆபீஸ் பக்கத்துலே இருக்கிறது. ஆட்டோகாரர்களுக்குத் தெரியும். மாலை நான்கு மணிஅளவில் பத்திரபதிவென்று தகவல், நீங்கள் குறைந்தது அரைமணி நேரம் முன்னாலே இருக்கணும். .

மூன்று மணிக்கு பதிவுத்துறை அலுவலக வாசலில் ஆட்டோவை நிறுத்தச்சொல்லி இறங்கிக்கொண்டேன். எரிக் நோவா என்னுடன் வந்திருந்தான். தனது இரு சக்கரவாகனத்தை அவன் ஓரமாக நிறுத்தவும், எங்களை எதிர்பார்த்திருந்ததுபோல அந்தோணி ஓடிவந்தார்.

– எங்கே வராது போயிடுவீங்களோன்னு நினைச்சேன். இங்கே நிற்கக்கூடாது. மறைவாகக் காத்திருப்போம். நம்மைபார்த்துவிட்டால் எதிர்பார்ட்டி உள்ளேவராது. தப்பித்துவிடுவார்கள்.

ஒருமணிநேர காத்திருப்பிற்குப்பிறகு அந்தோணியிடம் ஏற்பட்ட மாறுதல்களைவைத்து அவர்கள் வந்திருக்கவேண்டும் என புரிந்துகொண்டேன்.

– ரிஜீஸ்ட்ரார் ஆபீஸ¤க்குள்ளே போயிருக்காங்க. நீங்க உள்ளே போங்க, நான் போலிஸாரை அழைத்துவறேன்.

நானும் எரிக் நோவாவும் உள்ளே நுழைந்தோம். பதிவாளரைச்சுற்றி கூட்டம். பத்திரம் எழுதுபவர்கள். சொத்தை வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் நின்றிருந்தார்கள்.

– இங்கே ஹரிணி யாரும்மா?

– பதிவாளரை நோக்கி முன்னேறிய பெண்ணைப்பார்த்தேன். எரிக் நோவாவும் பார்த்தான்.

– அட அவளா இது? என பிரெஞ்சில் ஆச்சரியப்பட்டான். எரிக் நோவாவின் குரலைகேட்டுத் திரும்பியவள் பேயறைந்தவள்போல ஆனாள். அவளருகில் வேணு. கருப்பாகவும் குள்ளமாகவும் மற்றொரு ஆசாமி, அவனுடன் காலையில் எனது குடியிருப்புக்கெதிரே பார்த்த இரண்டு வாலிபர்கள்.

– யார் அவள்? என்று கேட்டேன்

– என்னை ஏமாற்றினாளென்று சொன்னேனே அதேபெண்.

– இங்கே என்ன நடக்கிறது? பதிவாளர்.

அந்தோணி முன்னால் வந்தார் அவருடன் ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு காவலர்களும் இருந்தனர்.

– இவர்கள் ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரிக்க நினைக்கிறாங்க. இந்தப்பெண் உள்ளூரைச் சேர்ந்தவள். இவளுக்கும் சொத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அவசரமாக வெளியேறிய வேணுவையும் மற்றவர்களையும் காவலர்கள் தள்ளிக்கொண்டுபோனார்கள்.

எரிக் நோவாவும் நானுமாக வெளியில் வந்தோம். காவல்துறையின் வாகனத்தில் வேணு உட்கார்ந்திருப்பது தெரிந்தது, என்னைப் பார்த்ததும் தலையைத் திருப்பிக்கொண்டான். ‘ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே’ என்ற பெரியவர் சடகோபன் கூற்று நினைவுக்குவந்தது.

– அவனை உங்களுக்குத் தெரியுமா? எங்க பவானி அண்ணி குடும்பமாம். இத்தனை நாள் எங்கேயிருந்தாங்கண்ணு தெரியலை. இப்போ சொந்தம் கொண்டாட வந்திட்டாங்க. தப்பு அந்தக் குடும்பத்தின் மேலேயுமில்லை. அங்கே கருப்பா குள்ளமா ஒருத்தனை பார்த்தீங்க இல்லை. அவன்தான் இதுக்கெல்லாம் மூல காரணம். சொத்தை வாங்க இருந்தவனும் அவன்தான். சரியான நேரத்துக்கு வந்து உதவி செஞ்சீங்க. உங்க தோழிக்குப் போன்போட்டு நிலமையை எடுத்துச்சொல்லுங்க. ஏதாவது செய்யச்சொல்லுங்க, இல்லைன்னா நாளைக்கு வேறொருத்தன் சொந்தம் கொண்டாடிக்கிட்டு வருவான். ஒவ்வொருமுறையும் இப்படி மோப்பம் பிடித்துக்கொண்டு அலையமுடியாது.

– அந்தோணி எனக்கு ஒரு உதவி செய்வீங்களா. செஞ்சி இளைஞனையும், அந்தப்பெண்ணையும் காவல்துறையிடம் கூறி எச்சரித்து விட்டுவிடச் சொல்ல முடியுமா?

– அவர்களுக்கா பரிதாபம் காட்டறீங்க கூடவே கூடாது.

– நீங்க என்னை ஓர் உதவிகேட்டீங்க, அதுபோல எனக்கு நீங்க இந்த உதவியைச் செய்யுங்க.

அவர்களை விடுவிக்க முடியும். போ¡லீஸார் குற்றத்தைப்பதிவு செஞ்சால்தான் பிரச்சினை. அப்படி செய்யப்போனால் நான் சொன்ன தாதாவையும் தப்பிக்கவிட்டதுபோல ஆகிடும். அவனை உள்ளே தள்ளியாகனும். . எனக்கு தெரிந்த வக்கிலொருத்தர் இருக்கிறார். அவர் யோசனையைக் கேட்டு சொல்றேன்.

– ஏதாவது செய்யுங்க ஆனால் உடனடியாக செய்யுங்க. கொஞ்சம் செலவாகுமென்றாலும் பரவாயில்லை.

– அவர்கள் தண்டிக்கப்படணும். இப்படி குற்றவாளிகளை தப்பவிட்டால் எப்படி? சார் நீங்களாவது கொஞ்சம் அதுகிட்டே எடுத்துசொல்லுங்க- எரிக் நோவாவுக்கு ஏதோ தமிழ் புரியும் என்பதுபோல அவனிடம் வேண்டுதலை வைத்தார்.

– தாதாவைத் தண்டியுங்க நான் தடுக்கவில்லை. மற்றவங்க இரண்டுபேரும் அந்தக்குற்றத்தை இனிசெய்யம்மாட்டாங்கண்ணு மனப்பூர்வமாக நம்பறேன்.

– எதற்கும் அண்ணன் குடும்பத்திடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யறது நல்லதில்லையா?

– கண்டிப்பாகச் சொல்லனும். ஆனால் அதற்கு அவசியமில்லை. உங்கக்கிட்டே ஆரம்பத்திலேயே உண்மையைச் சொல்லியிருக்கணும். என் பேரு ஹரிணி தேவசகாயம்-பவானியோட மகள் நான்.

– என்னம்மா இப்படியொரு அதிர்ச்சியைக்கொடுக்கிற. உண்மையாகவா?

– ஆமாம். நான் சொன்னதுபோல வேணுவையும் அந்தப்பெண்ணையும் விடுவிக்க ஏற்பாடு செய்துட்டு சொல்லுங்க. பிறகொருநாள் சாவகாசமாக பேசுவோம். வரட்டுமா?

– வீட்டுக்கு கட்டாயம் ஒருநாள் சாப்பிட வரணும், உங்க சித்தி நல்லா பிரியாணி செய்வா.

Series Navigationபசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறதுபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *