வங்காளத்தில் இறுதியில் டிஎம்சி செய்ததற்கு ஒரு சொற்றொடர் உள்ளது: அது தன்னைத்தானே விழுங்கிவிட்டது. வளர்ச்சி இல்லாதபோது, வளர்ச்சியின் நிழலில் பணம் பண்ண வழியில்லாதபோது உங்கள் சொந்த மக்களிடம் திருடுகிறீர்கள். மிகவும் பாதிக்கப்பட்ட மக்களும், வேலை தேடுபவர்களும், சிறு விவசாயிகளும், வாழ்க்கையில் சிறந்த வாய்ப்பிற்கான தேடலில் துயருற்ற குடும்பங்களும் வேட்டையாடலுக்கு ஆளானார்கள். மன்னிக்கக்கூடிய ஊழல் அல்ல அது. அதுதான் மக்களை கோடை வெயிலில் மூன்று மணி நேரம் வரிசையில் நின்று வாக்களிக்கச் செய்தது. இதில் மக்கள் தோல்வியுற்றால், திருணமுல் குண்டர்கள் தம்மைத் தேடி வருவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள்.
வங்காளத்தில் அரசியல் கட்சி ஆட்சி மாறும்போது, அது இந்திரனின் மரணத்தைப் போன்றது என்பார்கள். வங்க மொழியில் நாங்கள் கூறுவது போல் ‘இந்திரபதன்’, ஒரு பிரபஞ்ச நிகழ்வு. புராணங்களில், அகந்தை மற்றும் ஆணவம் இந்திரனை வீழ்த்துகின்றன, மேலும் பலர் நம்புவதற்கு மாறாக, இந்திரன் ஒரு பாத்திரம், கடவுள்களின் அரசர், ஆனால் அவர் கடவுள் அல்ல, மேலும் ஒவ்வொரு இந்திரனின் வீழ்ச்சியும் அவர் அரியணை ஏறியவுடன் முன்னரே விதிக்கப்பட்டுள்ளது. அதுதான் மம்தா பானர்ஜிக்கும் நடந்தது. மம்தா பானர்ஜியின் தோற்றம் மக்களில் ஒருவர் , எளிய புடவை, ஹவாய் செருப்பு, அடக்கமான குடியிருப்புகள், ஒரு காலத்தில் உண்மையாக இருந்திருக்கலாம் – அவர் எதிர்க் கட்சியில் இருந்தபோது. ஆனால் முதலமைச்சரானதும், எளிமையின் ஆடம்பரங்கள் வெறும் முகமூடியாகிவிட்டன. பழங்கதையை பராமரிக்க குடியிருப்புகள் அடக்கமாக இருந்தன. இருப்பினும், முழுப் பகுதியும் பாதுகாப்பு வளையத்தால் சுற்றி வளைக்கப்பட்டது, அவரது அண்டை வீட்டாராக இருந்தவர்கள் மற்றும் அவருடன் தோளோடு தோள் சேர்ந்து போராடிய பழைய நண்பர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள், அவர்களும் துண்டிக்கப்பட்டனர், மறக்கப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர். ஒரு காலத்தில் கவர்ச்சிகரமாய் காட்சியளித்த விசித்திரங்கள் தீவிரப் பெருமை மற்றும் ஆணவத்தின் அடையாளங்களாக மாறிவிட்டன, மம்தா பானர்ஜி தனது நாற்காலியின் சக்தியைப் பயன்படுத்தி, தன்னை வங்காளத்தின் மிகப்பெரிய கவிஞராக மாற்றினார். அவரது புத்தகங்கள் ஒவ்வொரு நூலக விற்பனையிலும் மற்ற அனைத்து எழுத்தாளர்களையும் விட அதிகமாக விற்றன, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி நூலகங்களில் அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டன அவரது 19 புத்தகங்கள். வங்கத்தின் வான் கோ என்று தன்னை விவரித்த அவருடைய ஓவியங்கள் கோடிகளில் விற்றுத் தீர்ந்தன, பொது நிகழ்ச்சிகளில் தவறாகப் பாடியதற்காக தொழில்முறை இசைக்கலைஞர்களைத் திருத்தும் பாடகராய் மமதா அவதாரம் எடுத்தார்.
அவரைப் பற்றி கேலி செய்யுங்கள், மீம்ஸ் போடுங்கள், உடனே சட்டத்தின் இரும்புக்கரத்தை உங்கள் வீட்டு வாசலில் எதிர்பார்க்கலாம்.
அவளுடைய அண்ணன் மகன் மற்றும் பட்டத்து இளவரசரான அபிஷேக் பானர்ஜி. தீதியாவது சிரமப்பட்டு மேல் நிலைக்கு வந்து சேர்ந்தார். அபிஷேக் பானர்ஜி எந்த சிரமமும் மேற்கொள்ளாமல் நியமிக்கப்பட்டார். அவர் கேமராவை நோக்கி விரல் ஆட்டி, 80-களின் வங்காள திரைப்படங்களில் இருந்ததைப் போன்ற வீர வசனங்களை உதிர்த்தார். வீர வசனங்களைப் பேசாதபோது, திரு. பானர்ஜி வாடகை ஹெலிகாப்டர்களில் மாநிலம் முழுவதும் விரைந்து சென்றார். பேரரசர்கள் கூட வெட்கப்படும் வகையில் கார்கள் அணிவகுத்துச் செல்ல நெடுஞ்சாலைகளில் வளம் வந்தார். உள்ளூர் நிர்வாகம் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியது. மேலும் அவர் சேவை செய்வதாகக் கூறிக்கொண்டிருந்த மக்களை விரட்டிவிட்டு அவருக்கு பாதை அமைக்கப் பட்டது. அவருடைய அரசர் போன்ற சிறப்புரிமை, வீர வசனங்கள் மட்டும் எரிச்சல் ஊட்ட வில்லை. அபிஷேக் பானர்ஜி கட்சியின் சில பல பழைய விசுவாசிகளைத் திட்டமிட்டு ஓரங்கட்டினார். மம்தா பானர்ஜியுடன் தோளோடு தோள் நின்று சிபிஐஎம் கொடுங்கோலர்களின் கோபத்தைச் சந்தித்தவர்களை நீக்கினார். அதற்கு பதில் அதிக சம்பளம் வாங்கும் தேர்தல் ஆலோசகர்களை நியமித்தார். அவர்கள் நிர்வாகப் பேச்சுவார்த்தைத் திறனால் அவரைக் கவர்ந்தனர். இந்த வகையான “உங்களுக்கு என்ன தெரியும்” என்ற உரிமை கொண்ட நிர்வாக நடத்தை தீதி வெற்றிகளாய்க் குவித்தபோது நன்றாக இருந்திருக்கலாம், ஆனால் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது விலக்கப்பட்ட யாரும் கூடுதல் முயற்சி செய்து தீதியைக் காப்பாற்ற முன்வரமாட்டார்கள்.
பின்னர் டிஎம்சியின் பல அடுக்கு அதிகாரப் படிநிலையின் இரண்டாவது அடுக்கில், வண்ணமயமான வாழ்க்கையும் இன்னும் வண்ணமயமான இரவு சொகுசுகளும் கொண்ட வயதானவர்கள் இருந்தனர். அவர்கள் அரசவையினராக இருக்கும் மகிழ்ச்சியில் திளைத்தனர். கேமராக்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு முன்னாள் கோமாளிகள் பெருமித வேடம் கொண்டு நடித்தார்கள். வங்காள சமூக மேடை தங்களுக்குச் சொந்தமானது என்று நம்பினர். அவர்களுக்குக் கீழே, சில ஜெனரல்கள் இருந்தனர். சந்தேஷ் காளியின் ஷேக் ஷாஜகான்கள் போன்றோர் , குறுநில மன்னர்கள் போல் தயங்காமல் ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்தார்கள், வரிகள், தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகள் மேலிடத்திற்கு குறித்த நேரத்தில் செலுத்தப்பட்டால் போதும். டிஎம்சியில் இந்த செல்வாக்குள்ள ஆட்களுக்குச் சொந்தமாக ஒரு வட்டம் இருந்தது. அவர்களைப் பார்த்து மக்கள் கை தட்டுவார்கள். அவர்களுக்காக போக்குவரத்து நிற்கும். மெஸ்ஸியுடன் நிகழ்ந்தது போல புகைப்படங்கள் எடுப்பார்கள். அவர்களின் ஆசி இல்லாமல் திரைப்படங்கள் திரையிட முடியாது. தயாரிக்க முடியாது. வளைந்து கொடுக்காத நட்சத்திரங்களின் தயாரிப்பில் பிரச்சினைகள் ஏற்பட்டன, தயாரிப்பாளர்கள் விலகினர். பல ஆண்டுகளாக, இந்த ஆளும் குழு பழைய ராஜாக்களைப் போல மாறிவிட்டது. இப்படிப்பட்டஅதிகார போதை ஏறி , காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். போதுமான மரியாதை செய்யப்படவில்லை என்று உணர்ந்தால் வீடியோவில் வெளிப்படையாகவே மிரட்டலைச் செய்தனர். இதனுடன் அரசியல் அமைப்பின் நரம்புகள் மற்றும் எலும்புகளை வெட்டும் விஷ ஊழல் மட்டத்தை சேர்த்தால், மம்தா பானர்ஜி முன்பு ஒருமுறை பயன்படுத்திய வார்த்தையை மக்கள் ஏன் மீண்டும் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் – “போரிபர்த்தன் – மாறுதல் “.
மாறுதல் – ஆனால் யார்?
கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) இனி இல்லை. சமூக ஊடகங்களில் திறமையான மற்றும் கேமராவுக்கு ஏற்ற “புதிய கம்யூனிஸ்டுகள்” சிலர் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கை புத்தகத்தின் விக்கிப்பீடியா பதிப்பைப் படித்து வளர்ந்தவர்கள் போல் தோன்றினர். மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பிறகு, பழைய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை ஆக்கிரமித்து, சிவப்பு நிறத்தை நீலம் மற்றும் வெள்ளையால் மூடிவிட்டார். இதன் பொருள் அவர்களின் அமைப்பு இல்லாமல் போனது. அதோடு அவர்களின் இலட்சியங்களும் மறைந்துவிட்டன. மதத்திற்கு இனி மக்களிடம் மதிப்பில்லை; இந்து மதத்திற்கு மட்டுமே இருந்தது. அதனால் தான் அவர்கள் 2021 இல் அப்பாஸ் சித்திக்கியின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி என்ற இஸ்லாமிய அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான உருவத்தை இப்போது மக்கள் மிகச் சரியாகப் பார்த்தார்கள்: சூரிய ஒளியில் சாம்பல் நிறமாக மாறும் ஒரு டைனோசரின் எலும்புக்கூடு அது. இது உண்மையான புதைபட்ட எலும்புக் கூடா அல்லது ஒரு விளையாட்டு காகிதக்கூழ் பொம்மையா என்று கூட நமக்குத் தெரியவில்லை.
இறுதியாக பாரதிய ஜனதா கட்சி (BJP) மட்டுமே எஞ்சியது. கடந்த சில நாட்களின் கொந்தளிப்புக்கு முன்பு, மேற்கு வங்காளத்தின் பின்னணியில் அதைப்பற்றி வாய் திறந்து சொல்வது கூட வேடிக்கையாக இருந்தது.
ஆனால் ஏன்? இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை ஆளும் பாஜகவை ஒரு ஆளும் கட்சியாக நினைப்பது மிகவும் கடினமாக இருந்ததற்கு வங்காளத்தில் என்ன தான் சிறப்பு இருக்கிறது?
வங்காளிகள் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பும் மற்றும் பிற மொழி பேசுபவர்கள் நம்புவதற்குரிய கட்டுக்கதை ஒன்று உள்ளது: அதுதான் மேற்கு வங்காள மாநில எல்லைக்குள் பிறந்தால் குழந்தைகளுக்கு மதச்சார்பற்ற தாராளவாதத்தின் ஒரு ஒளிவட்டம் இயல்பிலேயே கிடைக்கிறது. இரண்டாவது பிற்காலத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று நினைப்பது. இதில் இரண்டாவது பகுதி மட்டுமே உண்மை.
வங்காளத்தின் தீவிர பழங்குடி மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வன்முறைகள் நிறைந்தவர்கள். வங்காளிகள் உலகளாவிய மனிதாபிமான விழுமியங்களை விரும்பும் வீழ்ச்சியடைந்த கவிஞர்கள் என்ற கருத்து வெறும் ஒரு கருத்து மட்டுமே.
வரலாறு, நேரடி நடவடிக்கை நாள் (direct action day) மற்றும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த வகுப்புவாத வன்முறை, அல்லது தாராசங்கர் பந்தோபாத்யாய போன்ற கிராமப்புற வாழ்க்கையைப் பற்றிய வரலாற்று ஆசிரியர்களின் படைப்புகள் எதுவும் இந்தக் கருத்தை -மனிதாபிமான விழுமியங்களை போற்றும் வங்காளிகள் என்ற கருத்தை – ஆதரிக்கவில்லை. வங்காளம் தனித்துவமாக இருப்பதற்கு காரணம், வங்காளிகளுக்கு யார் தங்கள் குழுவுக்குள் இருக்கிறார்கள், யார் இல்லை என்பது பற்றிய வலுவான குழு மனப்பான்மை எண்ணம் இருப்பதுதான். ஆனால், வங்காளத்தில் இந்தப் பழங்குடி மனப்பான்மை சமூக அளவில் அல்லாமல், கட்சி ரீதியாக வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்டுகள் இதற்காக பாராட்டுக்கு உரியவர்களோ அல்லது பழியைச் சுமக்கவோ தகுதியானவர்கள். பிரிவினை மூலம் பெறப்பட்ட ஆழமான வகுப்புவாத பிளவு கோடுகளை எதிர்கொண்ட அவர்கள், மத ரீதியிலான பதற்றத்தை நீக்குவதற்குத் தெளிவான முயற்சியாக ஒரு வித்தியாசமான அடையாளத்தை அதற்கு மேலாக உயர்த்தினார்கள். செய்தி எளிமையானது: மொழி தான் மதத்தை வெல்லும். 1971-ல் பாகிஸ்தான் இராணுவமும் ரஸாக்கர்களும் பெங்காலி இனத்தவரையும் அவர்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் அளித்த சான்று, அதாவது முஸ்லிமாக இருப்பதால் எந்தவித பாதுகாப்பும் கிடைக்காது என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்த போது வங்காள அடையாளமே எதிரி என முடிவு செய்யப்பட்டது. எனவேதான் நமது உண்மையான சமூக அலகு மொழிதான், மதம் அல்ல என ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. பிரிவினையால் இடம்பெயர்ந்த வங்காளிகளிடையே இருந்த மறைமுகமான ஏக்கத்தையும், ஈபார் பங்களா மற்றும் ஓபார்பங்களாவின்(இந்தப்புறமும் வங்காளம், அந்தப் புறமும் வங்காளம்) நினைவையும் இது தொட்டு சென்றது. மேலும் சமாதான சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வைத்த பிரிட்டிஷ் எனும் வெளியிலிருந்து வந்த தீமையைக் குற்றம் சாட்டும் போக்கு இருந்தது. இந்த நிரலாக்கம் எனக்குத் தெரியும் ஏனெனில் நான் அந்த கருத்தின் கீழ் வளர்ந்தவன். இந்த உலகக் கண்ணோட்டத்தில், மற்றவர்கள் வங்காளி மொழியைப் பேசாதவர்கள்தான்: மார்வாரிகள் மற்றும் குஜராதிகள், ஒரு நாள் கழித்து காளிபூஜையை கொண்டாடினர், பாஜகவுக்கு வாக்களித்தனர். நாங்கள் அன்னை துர்காவை வணங்கும் போது அவர்கள் ராமர் கடவுளை வணங்கினார்கள். டிஎம்சியின் பஹிரகோட்டோ (வெளி ஆட்கள்) கதையில் இந்த சிந்தனையின் நேரடி வழித்தோன்றல்களைக் காணலாம், இருப்பினும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பயன்படுத்தப்பட்டன, இயற்கையாகவே: மம்தா பானர்ஜியின் பீடத்தில் நீங்கள் தலைவணங்கினால், மொழியில் ஒரு வார்த்தைகூட பேசாமல் அல்லது மாநிலத்தில் ஒரு நாள் கூட செலவிடாமல் வங்காளியாக மாற முடியும். வங்காள மொழி அறியாத எம்பி யூசுப் பதான் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
மத அடையாளத்திற்கு ஆதரவாக மொழி அடையாளத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது, மதச்சார்பற்ற பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. மதரஸாக்கள் முற்றிலும் மாறுபட்ட தர்க்கத்தில் இயங்கின. இதன் விளைவாக அமைதியான வகுப்புவாத சமச்சீரற்ற நிலை ஏற்பட்டது: இஸ்லாமியக் கல்வியைப் பெற்றவர்கள் முதன்மையாக முஸ்லிம்களாக அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் மதரசா அமைப்புக்கு வெளியே உள்ளவர்களுக்கு முதலில் வங்காளியாக அடையாளம் காண்பது என்று கற்பிக்கப்பட்டது. இரண்டு மக்கள் தொகையினர் உடன் வாழ்ந்து, அவர்கள் யார் என்ற அடையாளம் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். இது பாஜக வங்காளத்திற்குள் நுழைவதற்கு முன்பே இருந்த வகுப்புவாத பிளவு கோடு ஆகும். இதுவரை வங்காளத்திற்கு அமைந்த சிறந்த முதலமைச்சராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அதை போதுமான அளவு தெளிவாகப் பார்த்தார். தனது முதல் உரையில், சில எல்லைப்புற மதரஸாக்களை அடிப்படைவாதம் மற்றும் தேச விரோத நடவடிக்கைகளின் மையங்களாக இருப்பதை அவர் விவரித்தார். இந்த உண்மையைச் சொன்னதற்காக “வகுப்பு வாதம்” என்று கூறி, அவரது சொந்தக் கட்சியின் மூத்த தலைவர்களால் அவர் கண்டிக்கப்பட்டதால் அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொலிட்பீரோ முதலமைச்சரை கண்டிப்பதற்கு நல்ல காரணம் இருந்தது: சிறுபான்மையினர் சிறுபான்மையினராகவே வாக்களிக்கிறார்கள், அந்த வாக்குகள் சிதறும்படி செய்யக்கூடாது. கார்ல் மார்க்ஸ் என்ன சொன்னாரோ அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? அது முக்கியமல்ல. இந்த “வாக்கு வங்கியே எல்லாமும்”. பல சட்டவிரோத வங்கதேசக் குடியேற்றவாசிகள், சிபிஐஎம் மூலம் ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் அளிக்கப்பட்டு முறையாக மாற்றப்பட்டனர். இது மம்தா பானர்ஜியிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. அப்பொழுது அவர் எதிர்க்கட்சியில் இருந்தார்.
ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும், இடதுசாரி முன்னணி அமைப்பை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட பிறகு, வங்கதேசத்தவர்களின் வருகையை தீவிரமாக ஊக்குவித்தார். இது வெறுமனே எல்லை தாண்டி மக்கள் வருவதால் மட்டும் நடக்கவில்லை, வங்கதேசத்தவர்கள் சட்டப்பூர்வமாக வங்காள கிராமங்களில் நிலங்களை வாங்கி, மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை அமைத்து, பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தி, மதரீதியான துருவமுனைப்புக்கு வழிவகுத்தனர்.
இது திரிணாமுல் காங்கிரசுக்குச் சாதகமாக இருந்தது. முதலமைச்சரே ஒருமுறை, “அவர்கள் வாக்குகளைக் கொண்டு வருகிறார்கள், அதனால் நீங்கள் அவர்களை சகித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். விமர்சகர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லியதற்கு மாறாக, இந்த சிறுபான்மையினரை தாஜா செய்வது இந்துக்கள் மீது இருந்த வெறுப்பால் தூண்டப்படவில்லை. அவரது கட்சிக்கு உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு இருந்தது என்று நம்புவது அதன் அறிவுசார் அடித்தளங்களை மிகைப்படுத்திக் கணிப்பதாகும். இந்தத் தொடரின் முதல் பகுதியில் அவர்களை இயல்பாக உருவாகும் சித்தாந்த வெற்றிடம் என்று நான் அழைத்தேன், அது உண்மையான கருத்துதான்.
சிறுபான்மையினரை ஆதரித்தது முற்றிலும் பரிவர்த்தனை அடிப்படையிலானது: அவர்கள் கட்சியின் கட்டளைகளை அமல்படுத்த காலாட்படையை வழங்கினர். அதற்குப் பதிலாக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டிய சட்ட அமைப்பு விலகிச் சென்றது. திரிணாமுல் காங்கிரஸுக்கும் சிபிஐஎம்க்கும் இடையே உள்ள ஒரே முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சிபிஐஎம் மதத்தை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதை அதிகாரப்பூர்வமாக எதிர்த்தது, ஆனால் மம்தா அதை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார். தனது வசப்படுத்தப்பட்ட சிறுபான்மை வாக்கு வங்கியை மோசமான செயல்களால் உறுதிப்படுத்தி, அவர் ஒருபோதும் செய்ய நினைத்திராத ஒன்றைச் செய்தார்: இந்துக்களை முதன்மைப்படுத்தும் கட்சியின் கீழ் இந்து வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான அடித்தளத்தை வளப்படுத்தினார்.
இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க ஏற்ற சூழல் உருவாகியிருந்தது, ஆனாலும் பாஜகவால் அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் சில மோசமான உத்திகள் இருந்தன: உங்கள் வேட்பாளர்கள் பி.சி. சர்க்கார் மற்றும் பப்பி லாஹிரி என்றால் யாரும் நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்கள் என்று நம்பப் போவதில்லை. ஆனால் அவர்களின் மிகப்பெரிய பிரச்சனை ஒரு பார்வையாகவே இருந்தது: பாஜகவின் இந்து அடையாளம் வங்காளிகளின் இந்து அனுபவத்துடன் அடிப்படையில் ஒத்துப்போகவில்லை, மேலும் வங்காளிகள் உணவே கூட விவாதத்தின் கூர்மையான புள்ளியாக இருந்தது.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும்பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக வைஷ்ணவ மற்றும் சமண தாக்கத்தால் வடிவமைக்கப்பட்ட பகுதிகளில், அசைவ உணவு சிறந்ததாக ராஜஸிகமாகவும் (ராஜசிக் – ஆற்றல் தரும் உணவு ), தாமாஸிகமாகவும் (தாமாஸிக் என்பது கெட்ட விஷயங்களை தூண்டும்) கருதப்படுகிறது. இது கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டி ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. 2024 லோக் சபா பிரச்சாரத்தின்போது மோடி அவர்களே இந்த உணவுக் கண்ணோட்டத்திற்கு குரல் கொடுத்தார். உதம்பூரில் நடந்த ஒரு பேரணியில், புனிதமான ஆடி மாதத்தில் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒரு குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று அங்கு ஆட்டுக்கறியை சமைத்ததாகக் கூறி அவர்களைத் தாக்கி பேசினார். மேலும், “நம் நாட்டின் மக்களை அவமானப் படுத்த” ஒரு வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். அசைவ உணவுப் பழக்கம் காரணமாக அவர்களை முகலாயர்களுடன் ஒப்பிட்டார். இந்த கருத்து ஹிந்தி பேசும் பகுதியை இலக்காகக் கொண்டது. அங்கு இந்தப் பார்வை மதிப்புப் பெற்றிருக்கலாம். ஆனால் வங்காளத்தில், மோடி மீது உண்மையான மரியாதை கொண்ட பலருக்கு இது கடினமான துரோகமாக இருந்தது.
வங்காளிகளுக்கு, சைவ / அசைவ உணவு வேறுபாடு என்பது சமையல் பழக்கவழக்கங்கள் பற்றிய கருத்து வேறுபாடு மட்டுமல்ல. வங்காள இந்து மதம் சாக்தம் சார்ந்தது ஆகும். காளி பூஜையின்போது மாமிசம் சாப்பிடப்படுகிறது. துர்கா பூஜையில் மீன் பூஜைத் தட்டில் வைக்கப்படுகிறது. தங்கள் உணவுப் பழக்கத்தை தாக்கும் ஒரு கட்சியுடன் ஆன்மீக ரீதியாக சமரசம் செய்து கொண்டு வாக்குக் கேட்பது என்பது ஆகக் கூடிய செயல் அல்ல. அந்த கட்சியிடம் ஆட்சியை அளிக்க மாட்டார்கள். TMC இதைப் பயன்படுத்தி அரசியல் செய்தது. அவர்கள் வங்காளத்தைப் பெறவே முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் போஹிராகோடோக்கள்- வெளியாட்கள். நாங்கள் வங்காளிகள்.
TMC-யின் வலுவான இந்த துருப்புச் சீட்டை அழிக்க வரலாறு தலையிடும் என்பதை யாரும் முழுமையாக எதிர்பார்க்கவில்லை: அதாவது, வங்காள அடையாளமே மத அடையாளத்தை விட உயர்ந்தது என்றும், நாங்கள் முதலில் வங்காளிகள் தான், பின்னர் இந்துக்கள் என்று கூறினர். ஆகஸ்ட் 2024 இல் ஹசீனா அரசு கவிழ்ந்தபோது, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, வெறுமே ஆட்சி மாற்றத்திற்குப் பிந்தைய வன்முறையாகக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது ஆனால் வங்காளிகள் முதலில், இந்துக்கள் அதன் பின் என்ற வசதியான தன்னம்பிக்கை நிலைக்கவில்லை. மேலும் வங்காள ஒற்றுமையை ஒரு கேடயமாக நம்புவது இனி சாத்தியமில்லை. மேற்கு வங்கத்தை பாஜக ஆளவில்லை என்றால் என்ன நடக்கும் என்று சுட்டிக்காட்ட BJP-க்கு இது சரியான விஷயமாக இருந்தது.
இன்றைய வங்காள முதல்வர் ஷூபேந்து அதிகாரி, பைடன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்.
உணவு அரசியலுக்கு முடிவு கட்ட பாஜக முடிவு செய்தது. அதன் பிறகு நடந்த பிரச்சாரம் கலாச்சார திருத்தத்திற்கான ஒரு தலைசிறந்த பயிற்சி. கதலா மீன்களை ஏந்தி பாஜக வேட்பாளர்கள் வீடு வீடாக சென்றனர். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேமராவுக்கு முன்பாக சொர்ஷே மீனைத் தின்று காட்டினார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மம்தாவுக்கு மீன் சாப்பிடும் போட்டியை அறிவித்தார், மாமாதாவை விட ரோஹு அல்லது இலீஷ் மீனை ஒரு கிலோகிராம் அதிகமாக என்னால் சாப்பிட முடியும் என்று உறுதியளித்தார். பாஜக மாநிலப் பிரிவின் தலைவர் சமிக் பட்டாச்சார்யா கையில் மீனுடன் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு பதிவிலும் வழங்கப்பட்ட செய்தி எளிமையானது: நாங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்காக வங்காளத்திற்கு வரவில்லை.
சிறிய விஷயங்களை பாஜக சரியாகப் புரிந்து கொண்டு கவனம் செலுத்தியது. இனிமேல் வங்காளிகள் மனதைப் புரிந்துகொள்ளாமல் பிரசாரம் செய்பவர்களை ஒதுக்க வேண்டும். முடிவுகள் உள்ளூரில் எடுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட தலைமைகள் மீண்டு வருமாறு சரி செய்யப்பட்டன. அதில் திலீப் கோஷும் அடங்குவார். அவர் அடிமட்டத்திலிருந்து கட்டிய கட்சியில் உதாசீனம் செய்யப்பட்டதாக உணர்ந்தார். 2021 இல், பாஜக விலாவரியாக் இரண்டாம் தர பிரபலங்களுக்கு டிக்கெட் கொடுத்து தேர்தலில் நிறுத்தியது. TMC யிலிருந்து பாஜக வந்த அவர்கள் அவர்கள் அனைவரும் தோற்றுப் போனவுடன் மீண்டும் TMC-க்குச் சென்றனர். பாபுல் சுப்ரியோவைக் கூட கருத்தில் கொண்டனர், அவர் தமக்கு ஏற்ற தருணத்தில் மீண்டும் TMC க்கு ஓடினார். கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலியை பெற வாரக்கணக்கில் முயற்சித்தனர். பின்னர் கங்குலி மறுத்துவிட்டபோது, கடைசி நிமிடத்தில் மிதுன் சக்ரவர்த்தியை களத்தில் இறக்கினர். இந்த முறை பாஜக பிரபலங்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டது. அதற்கு பதிலாக, TMC கொடூரங்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு டிக்கெட் கொடுத்தனர். சந்தேஷ்காலி முஸ்லீம் கலவரத்தில் உயிர் பிழைத்த ரேகா பத்ரா மற்றும் RG கர் பலாத்காரத்தில் உயிரிழந்த அபயாவின் தாய் ரத்னா தேவ்நாத் போன்றவர்கள், இது கூட்டங்களுக்காக இல்லாமல் நீதி பற்றியதாக இருந்தது.
TMC, இன்னமும் 80 களுக்கான படங்களைப் போல நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. வங்காள சினிமா பிரபலங்கள் கூட்டத்தை கூட்டியிருக்கலாம். ஆனால் தீதி பிராண்ட் முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை.
எனவே, வங்காளம் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் முதல் முறையாக, பாஜகவிற்கு பெரும் திறப்பு கிடைத்துள்ளது. கலாச்சார அந்நியப்படுதல் பொய்த்துப் போனது. கள விளையாட்டு கூர்மையாக இருந்தது. பங்களாதேஷ் ஆட்சி மாற்றம் வடிவில் வரலாறு மீதியைச் செய்து முடித்தது. பெங்காலில் பாஜக வெற்றி பெற்றது. அதன் பின்னால் உள்ள செய்தி – அவர்களை வங்காளத்தின் உள்ளே விடாமல் இருப்பதற்கான காரணங்கள் இல்லாமல் போனது.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் எழுதியிருந்த ஒரு வயதான பெரியவர் இருக்கிறார். பணி ஓய்வு பெற்ற அவர் கொல்கத்தாவில் உள்ள எங்கள் பகுதியில் இருக்கிறார். 1990-களின் முற்பகுதியில், யார் கேட்பார்களோ ம், கேட்காத பலருக்கும், பாஜக தான் வங்காளத்தை ஆட்சி செய்யும் என்று கூறினார். அதைக் கேட்டு நாங்கள் அன்று சிரித்தோம்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தன்னைப் பற்றியே பெருமிதம் கொண்டு சிரிக்கும் அவரது குரல் இப்போது எனக்குக் கேட்கிறது. அந்தச் சிறிய தோட்டத்தில் தாமரை மலர்ந்துள்ளது. மேலும், எல்லா இடங்களிலும் சிறு சிறு துண்டுகளாகவும் பூத்துள்ளது.
- மழை புராணம் – 33
- நிம்மதி
- சிறுகதையின் ஓசை
- கன்னித்தெய்வங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
- போர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும்
- வெளிச்சம் எங்கே?
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: எட்டு [தொடர்ச்சி]
- வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது? தொடர்ச்சி