This entry is part 1 of 10 in the series 18 அக்டோபர் 2026

பாலமுருகன்.லோ

இந்த மனசு வலியைவிட உடம்பு வலிதான் இப்பெல்லாம் அதிகமா இருக்கு. உடம்பு வலியைப் பொறுத்துக்கொள்ளக் குடிக்க ஆரம்பிச்சது, இப்பெல்லாம் அதுவே பழகிப்போயிடுச்சு.

சரக்கு இல்லாத நாளே இல்லேங்கிற மாதிரிதான் இப்பெல்லாம் ஆயிப்போச்சு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தேவை இருக்கிறது. இங்க வரவங்களுக்கு அதில் ஒரு நிம்மதி, சந்தோஷம் எல்லாம். ஆனா, இங்கயே இருப்பவர்கள் பாவப்பட்டவர்கள், இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள்.

இப்படி இருக்கணும்னு யாரும் விரும்பல, ஆனா காலத்தின் கோலம். எங்களப் போல உள்ளவர்களை காலம் கடுமையாகத் தண்டிக்கிறது. ‘சில சமயங்களில் நினைக்கத் தோணும், நமது கர்மாதான் நம்மள இப்படி ஆட்டிப்படைக்குதுன்னு’ எண்ணிக்கொண்டிருந்த ஹேமாவுக்கு, அறையின் வெளியில் இருந்து குரல் கேட்டது.

“ஏண்டி ஹேமா, உள்ள என்னப் பண்ணிட்டு இருக்க? வெளிய வா!” என்றாள் அதட்டல் தொனியில் விசாலாட்சி.

தொடர்ந்து வெளியே இருந்தவரிடம், “என்ன சாப்பிடுறீங்க? கூல் டிரிங்ஸ் ஏதாவது கொண்டுவரச் சொல்லவா? என்ன பிடிக்கும் உங்களுக்கு?” என்றாள் விசாலாட்சி.

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்ற பதில்தான் மறுமுனையில் வந்தது.

ஹேமாவின் அறைக்கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. உள்ளிருந்து அவள் வெளியே வரும் அழகை என்னவென்று சொல்லுவது? செஞ்சுவைத்த சிலை போல இருக்கிறாள். அவளது நடை திருவாரூர் தேர் மாதிரி நின்று, நிதானித்து, ஒவ்வொரு அடியும் எடுத்துவைத்து வெளியே வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஏதோ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதைபோலத் தோன்றுகிறாள் பார்ப்பவர்களுக்கு. கழுத்து முழுக்க நகை. செயற்கையே ஆனாலும், அவளது கழுத்தில் இருப்பதால் தங்கத்தைக் காட்டிலும் ஒரு மடங்கு கூடுதல் ஜொலிஜொலிப்பு. காதுகளில் மாட்டியிருந்த தொங்கட்டான், கையில் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள்—இவை எல்லாத்துக்கும் முத்தாரம் வைத்தாற்போல், அவளது கால்களில் இருந்த கொலுசும், அவள் நடந்து வரும்போது அவை எழுப்பிய சத்தமும் அலாதி.

வெளியே வந்தவளிடம், “சித்தப் பேசிட்டு இரு நீ, நான் இப்ப வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு, நின்ற இடத்தைவிட்டு நழுவினாள் விசாலாட்சி.

ஹேமாவிடமிருந்து ஒரு மெல்லிய புன்னகை வெளிப்பட்டது. எதிர்ப்புறம் இருந்தவரின் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

“கொஞ்சம் பேசலாமா?” என்றாள் ஹேமா.

“அதற்கென்ன, தாராளமாகப் பேசலாமே. என்ன இப்போ?” என்ற பதில் வந்தது.

“உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா? புள்ள குட்டிங்கள்னு ஏதாவது இருக்காங்களா?”

“இருக்காங்க, முத்து முத்தா இரண்டு புள்ளைங்க.”

“அப்புறம் ஏன் இங்க? நல்லா சந்தோஷமா குடும்பத்தோட முழுசா பழக வேண்டியதுதானே!”

இந்தக் கேள்வியை மறுமுனையில் இருந்தவர் எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரியெல்லாம் நடக்கும், இப்படியெல்லாம் நம்மள உட்காரவைத்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று எண்ணி வந்த ஆசாமிக்கு, தலையில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரி இருந்தது.

“அது வந்து, மனசு கஷ்டம், என்னவளுடன் சண்டை, வேதனையெல்லாம் ஒன்று சேர்ந்து இங்கே வரும்படி ஆயிடுச்சு…”

“குடும்பம்னா தகராறு இருக்கத்தான் செய்யும். ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் வருத்தம், மற்றொரு நாள் ஏக்கம், துக்கம்னு எல்லாம் சேர்ந்ததுதான் இந்த வாழ்க்கை. இப்படி சண்டை, நிம்மதியில்லை என்று ஊரில் உள்ள அனைவரும் கிளம்பியாச்சுன்னா, குடும்பம் என்ன ஆகும்? ஏதாவது கொஞ்சமாவது யோசிச்சுத்தான் வந்தீங்களா? நல்லா ஆரோக்கியமாகத்தான் இருக்கீங்க. இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் வந்துபோனால் என்ன ஆகும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? இதைக்கூட ஒருத்தர் சொல்லணுமா? உங்களுக்கேத் தோணல.”

தொடர்ந்து தன் ஆதங்கத்தைப் கொட்டினாள் ஹேமா, “எங்க வாழ்க்கைதான் இப்படி பாழுங்கிணத்துல போடுற கல்லு மாதிரி ஆயிடுச்சு. பூஞ்சோலையா இருக்க வேண்டிய உங்க மொத்தக் குடும்பமும் பாதிக்கும்னு உங்களுக்குத் தெரியாதா? என்ன, நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்; ஒரு பதிலும் காணோம்?”

இதற்கிடையில் வெளியே போன விசாலாட்சி அங்கு வந்து குறுக்கிட்டாள். “என்ன ஆச்சு? உங்க மூஞ்சி வெளவெளத்துப் போச்சே! நல்லா பொலிவோடு இருப்பீங்கன்னு நினைச்சுத்தானே வந்தேன். இவகீது ஏதாவது கேட்கக்கூடாததைக் கேட்டாளா என்ன?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, இப்ப கொஞ்சம் மனசு சரியில்ல. வேறொரு நாள் பார்ப்போம்” என்ற பதிலை விசாலாட்சி எதிர்பார்க்கவில்லை.

‘நல்ல சாப்பாடு, பிரியாணி என்று நினைத்தவளுக்கு… வெண்ணைத் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாவுல இருக்கு’ என்று மனதளவில் எண்ணினாள் விசாலாட்சி.

“ஏண்டி, என்னத்த கேட்டு வச்ச? அந்த மனுஷன் பாட்டுக்குப் போயிட்டான்.”

“நான் வேணும்னு கேட்கல. உண்மையை, ஏதார்த்தமாக எடுத்துச் சொன்னேன். அதற்கு அந்த மனுஷன் போயிட்டாருன்னா, நான் என்ன பண்ணுவேன்? இப்ப இங்கிருந்து போ. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். மனசு முழுக்க பாரமா இருக்கு.”

“அதான் உன் பாரத்தையெல்லாம் இங்க வரவங்ககிட்ட இறக்கி வச்சுடுறியே! அதான் வந்த உடனே போயிடுறாங்க” என்று சலித்துக்கொண்டாள் விசாலாட்சி.

பதிலேதும் பேசாமல் உடனே உள்ளே போய்த் தன் அறைக் கதவைச் சாத்திக்கொண்டாள். அங்கிருந்த படுக்கையில் படுத்தவள் எண்ணலானாள்.

‘போலியான பொலிவைக் கண்டு ஏமாறும் ஜனங்கள். அவர்களுக்குத் தெரியலையா, அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாங்களா? உண்மையான அழகு அவர்களுடைய வீட்டில்தான் உள்ளது; இந்த இடத்திலோ அல்ல, என்னைப் போன்ற ஒருத்தியிடமோ கட்டாயமில்லை என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி அவர்களது தேவைக்காக இங்கு வருகிறார்களா? எவ்வளவு பெரிய சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்! கட்டின மனைவிக்கு உண்மையாக இல்லாதவங்களெல்லாம் மனுஷங்கத்தானா?’

‘எனக்கு ஒண்ணு புரியல, எதுவுமே நிரந்தரமில்லாததால என் வாழ்க்கை இப்படி சிரிப்பா சிரிச்சுப் போச்சு. ஆனா, இவுங்க நல்லாத்தானே இருக்காங்க; பின்ன என்னவாம்? ஏன் இங்க வராங்க? வேற வழி இல்லாம வயித்துப் பிழைப்புக்காக இந்தப் பாலாப்போன தொழிலைக் கட்டிக்கிட்டு தினம் தினம் அழுகிறோம். எப்படா எங்களுக்கு விமோசனமுன்னு நினைக்காத நாளே இல்ல. வரவங்களுக்கு எங்களுக்கும் ஒரு மனசு இருக்குமின்னு நினைச்சிருந்தாங்கன்னா, இங்க வருவாங்களா? இல்லேல. அதெல்லாம் புத்திக்கு உறைக்கிறது இல்ல; அதனால இப்படி நடந்துக்கிறாங்க.’

‘அழகு போயி, வாலிபம் போயி, பலம் போயி, வெறும் ஜடம் மாதிரி, எல்லாம் பொய்யான பொலிவுடன் உலாவரும் எங்களைப் பத்தி நல்ல விதமா நினைக்கிறவங்க யாராவது இருக்கிறாங்களா?’

— பாலமுருகன். லோ ✍️

Series Navigationசொற்களின் ஊடே சுழலும் பின்நவீனத்துவப் பிரபஞ்சம்: டீன் கபூரின் கவிதைகள் பற்றிய ஓர் ஆய்வு