This entry is part 9 of 10 in the series 18 அக்டோபர் 2026

வளவ. துரையன்

சங்கம் மருவிய காலத்தில் கண்ணங்கூத்தனார் எனும் பெயரில் ஒரு புலவர் வாழ்ந்திருந்தார். இவர் மதுரையில் பிறந்திருக்கலாம் என்றும் கண்ணன் என்பவருக்கு மகன் என்றும் கூறப்படுகிறது. இவர் காலம் கி.பி 200-க்கு முற்பட்டதாக இருக்கலாம்.

தலவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். ஓதல், போர், மற்றும் தூது போன்ற காரணங்களால் தலைவன் பிரிதல் அக்கால வழக்கமாகும். அவன், தலைவியிடம் கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன் என உறுதி கூறிச் சென்றான். தலைவி அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். கார்காலம் தொடங்கிவிட்டது. இன்னும் அவன் வரவில்லை. தலைவி வருந்துகிறாள். அப்போது அருகிலிருக்கும் தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

தலைவி தன் காதுகளில் அழகான குழைகளை அனிந்திருக்கிறாள். அது வளைந்து காட்சியளிக்கிறது. அதைக் காட்டி, “வளைந்த குழையுடையாய்” எனத் தோழி தலைவியை அழைக்கிறாள். ”அதோ பார் சூரியனின் வெம்மையான கதிர்கள் குறையத் தொடங்கிவிட்டன” என்று காட்டுகிறாள் தோழி. மேலும் “வெப்பம் குறைவதால் சூரியனுக்கே வறுமை வந்துவிட்டது “எனும் பொருளில் நல்கூர எனக் காட்டுகிறாள். கார்காலத்தில் மலர்கள் மலரத் தொடங்கும். கார்காலம் வருவதற்கு அறிகுறியே கொன்றை மலர்கள் பூக்கத் தொடங்குவதுதான்.

தலைவன் வரக் காரணமான கார்காலம் என்பதால் கார்காலத்தைச் செல்வம் என அழைக்கிறாள் தோழி. அந்தச் செல்வம் காடு முழுதும் பூவாக மலர்ந்துள்ளதாம். ”அப்படிப்பட்ட கார்காலம் தொடங்கிவிட்டதால் நம் தலைவர் விரைவில் வந்துவிடுவார். மேலும் அதோ பார்; மின்னல் மின்னுகிறது. அதுதான் நான் வருகிறேன் என்பதை அறிவிக்க அவர் அனுப்பி இருக்கும் தூதாகும்” என்றும் தோழி ஆறுதல் கூறுகிறாள்

கடுங்கதிர் நல்கூர, கார்செல்வம் எய்த

      நெடுங்காடு நேர் சினை ஈன,-

      கொடுங்குழாய்!

      ’இன்னே வருவர், நமர்’ என்று எழில்வானம்

      மின்னும், அவர் தூது உரைத்தது.

பாடலின் திரண்ட பொருள்: சூரியன் வெப்பம் தணிந்து வறுமையில் வாடுகிறது. கார்காலம் செல்வம் நிறைந்து மிளிர்கிறது. இந்தச் செல்வம் காட்டில் பூவாக மலர்ந்துள்ளது. வளைந்த குழைகளை அணிந்தவளே! நம் தலைவர் இப்போதே வந்துவிடுவார். வானம் மின்னுகிறதே; அதுதான் அவர் அனுப்பிவிட்டிருக்கும் தூதாகும்.

                               3. பாதிரி வாடுகிறது

                        வரிநிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து

                        அயிர்மணல் தன்புறவின் ஆலி புரள,

உரும் இடி வானம் இழிய, எழுமே

நெருநல், ஒருத்தி திறத்து.

”கார்காலம் தொடங்கிவிட்டது. காற்று  வேகமாக வீசுகிறது. அக்காற்றின் காரணமாக பாதிரிப்பூ வாடுகிறது. அயிர்மணல் என்பது மெல்லிய மணலைக் குறிக்கிறது. நிலமும் குளிர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட குளிர்ந்த முல்லை நிலத்தில் பெருத்த இடியுடன் மழை பொழிகிறது அதுவும் ஆலங்கட்டிகளாகக் கொட்டுகிறது. இப்படிப்பட்ட குளிர்ச்சியான மழை நேற்றுமுதலே பெய்து வருகிறது. நிலம் முழுதும் குளிர்ந்து மகிழ்ந்து காணப்படுகிறது. இங்கே தலைவனைப் பிரிந்த துயரோடு ஒரு பெண் தனித்திருக்கிறாள். அவள் துன்பத்தை மேலும் அதிகரிப்பதற்காகவே இந்த மழை பொழிவது போலவே தோன்றுகிறது” எனத் தோழி தலைவியைத் தேற்றுவதற்காகக் கூறுகிறாள்.

கார்காலம் தொடங்கியும் வராத தலைவனை எண்ணித் தலைவி  வருந்தி இருக்கிறாள். அப்பொழுது தலைவிக்கு ஆறுதலாகத் தோழி உரைக்கும் பாடல் இதுவாகும்.  தன் தலைவி மீது உள்ள அன்பின் காரணமாக இயற்கை நிகழ்வான மழை பொழிவதையே  குறை சொல்லித் தலைவியைத் துன்பப் படுத்தவே பொழிகிறது என்பது தற்குறிப்பேற்ற நயமாகும்.

Series Navigationஎதுவும் என்னிடம் கேட்டதில்லை.Compass என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?