ஈடுசெய் பிழை

_ ரமணி
நாளைய விடியலுக்குள்
நான் இறந்துபோகலாம்
எனில் இக்கணமே
என் கடைசி ஸ்வாசம்
நிகழ்ந்து விடட்டும்.

அடுத்தவர்களை விட அதிகமாயும்
நிறைய பேரைவிடச் செழுமையாயும்
வாழ்ந்த பிறகு
மரணத்தின் நியாயம் புரியாமலில்லை.

கணேசன் வெறும்
முப்பத்தெட்டு வயதிலேயே
மரித்துப்போனான்!
எனக்கோ கூடுதலாய்ப்
பன்னிரண்டாண்டுகள்!

இன்னுமொரு நாள் இல்லை
அதிகமாய் ஒரு மணி நேரம்
என்பது கூட நியாயமற்றதே!

நான் ஒன்றும் என்னை
உருவாக்கிக் கொள்ளவில்லை.
வாழ்க்கையே எனக்கொரு பரிசுதான்!

மரணவேளையைச் சிலர்மட்டுமே
தேர்ந்து கொள்ள முடிகிறது!

இதோ விடிந்துகொண்டிருக்கிறது!
என் வாழ்க்கைக் கணக்கிற்குள்
இன்னுமொரு நாள்!

குயில்களின் இசையையும்
குழந்தைகளின் அன்பையும் போற்றவும்
இன்னபிறவற்றிற்கும்
எனக்கு இன்னுமொரு நாள்!

நான் அகாலமாய்ப்
போனவர்களைப் பற்றிதான்
இக்கணம் நினைக்கிறேன்.
அவர்கள் நேரத்தில்தான்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ
என்ற குற்ற உணர்வுடன்.

_ _ _ ரமணி

Series Navigationமண் சமைத்தல்ஜென் ஒரு புரிதல் பகுதி – 15