This entry is part 8 of 11 in the series 26 நவம்பர் 2017
மகிழினி
அவமானமாய் இருந்தது
அத்தனைபேர் முன்னிலையில்
திட்டு வாங்குதலென்பது
அம்மாவோ அப்பாவோ
அதட்டியதில்லை
நான் அதட்டியிருக்கிறேன்
அன்பாய்த்தான் அவர்களை
பதின்ம வயதின்
பருவ மாற்றங்கள்
பல்வேறு சுரப்புகளைப்
பரவ விட்டுக்கொண்டிருக்கும் வேளை…
எனக்கும் தெரியாமல்
என்னன்னவோ செய்கிறேன்
அம்மாவைப் போல்
சமூகத்தாரும் புரிதலில்
பொறுத்தா கொள்வர்
சேற்றைவிடக் கேவலமான
செஞ்சொற்களால்
முகத்தில் விசிறுகின்றனர்
மானம் கொம்பிழப்பதாய்
மனம் நினைக்கிறது
மாண்டு போதலை
ஏற்கிறது போலும்
எதிர்த்துப் பேசத் திராணியற்று
ஏனோ மலைத்து நின்று
குளமோ கிணறோ
கயிறோ தேடி
கதையை முடிக்கிறது
இதோ நானும்….
மனோவலிமையை
முதலாய்க் கற்றுத்தாருங்கள்
நான் வாழப்பிரியப்பட்டவள்தான்
உங்களோடு..
Series Navigationமழயிசை கவிதைகள்வாட்ஸ் அப் வாழ்வியல்…!