சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

முனைவர் ம இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புகள் என்று தீவிரமாகச் செயல்பட்ட காந்தியவாதி. விமர்சனம் வளர வேண்டும் என்ற எண்ணம் சி.சு.செ மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதற்குக் காரணம் “இலக்கியத் தரம் என்று ஒன்று இருக்கிறது; அதற்கான குணங்கள் வேறு. வாசகப் பெருக்கம் அதற்கு உதவாது; வியாபாரத்துக்கு உதவலாம் “என்று அன்றைய தமிழ் எழுத்தில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்தார் க.நா.சு. 
இது ஒரு தொடக்கமே. சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு என்று க.நா.சு விட்டுவிடவில்லை. தொடர்ந்து சுதேசமித்திரனில் இடம் கிடைத்தவரை எழுதி தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தியதேயாகும்.

செல்லப்பாவும் விமர்சன வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர்கள் எழுத்தைக் கண்டனம் செய்வோர் எண்ணிக்கையில் பிராபல்யத்தில் அதிகம் என்பதாலும் இது ஒரு இயக்கமாகத் தொடர்ந்ததாலும் தமிழில் இந்தப் புதிய பார்வை வேரூன்றியது. சுதேசமித்திரன் கிளப்பிவிட்ட சர்ச்சை அங்கு தொடராவிட்டாலும் ‘சரஸ்வதி’ பத்திரிகை அவருக்கு இடமளித்தது.

பிறகு விமர்சனம் சார்பு இல்லாமல் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் சி.சு.செ எழுத்தைத் தொடங்கினார். பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனை,
“அதைத் தொடர்ந்து 1959-இல் செல்லப்பா இனி மற்ற பத்திரிகைகளை நம்பிப் பயனில்லை என்று  இதற்கென ‘எழுத்து’ என ஒரு தனி பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். செல்லப்பாவே பின்னர் இரண்டு மூன்று இடங்களில் சொன்னது போல, இலக்கியத் தரம் என்ற ஒன்றை விமர்சனம் இல்லாது ஸ்தாபித்துவிடமுடியாது, தரமற்றது தானே அழியும், தரமானது என்றோ ஒரு நாள் தன்னைத் தானே ஸ்தாபித்துக்கொள்ளும், கால வெள்ளம் இதையெல்லாம் சரிசெய்துவிடும் என்று நம்பி இருப்பது சரியில்லை என்று சொல்லிச் சொல்லி முதலில் இதில் நம்பிக்கையில்லாத செல்லப்பாவையும் விமரிசனத்தில் தீவிரமாக ஈடுபடச் செய்தது க.நா.சு. குளவி கொட்டக் கொட்ட செல்லப்பாவும் குளவியானார்” என்று வெங்கட் சாமிநாதன் கூறியுள்ளார். மேலும்

க.நா.சு.வும் ‘இலக்கிய வட்டம்’ என்று ஒரு தனி பத்திரிகை தொடங்கினார். ‘சரஸ்வதி’பத்திரிகையில் தொடங்கியது எழுத்திலும் இலக்கிய வட்டத்திலும் தொடர்ந்தது. மிக ஆச்சரியமும் மகிழ்வும் தரும் ஒரு விளைவு, அன்று வரை வெளித்தெரியாத, எழுதுவதற்கு வாய்ப்பில்லாத, ஒரு புதிய தலைமுறை, புதிய எழுச்சியுடன், பார்வையுடன் எழுந்தது. தமிழ் எழுத்தில், கவிதை, விமர்சனம்,, நாவல், சிறுகதை என பல இலக்கிய வடிவங்களிலும் ஒரு புதிய தலைமுறை, பெரும் கூட்டமாக என்றுதான் சொல்ல வேண்டும், தெரிய வந்தனர். க.நா.சுவும் அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாவும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து இன்னும் பலரும் இப்புதிய குரலை எழுப்பாதிருந்தால், இது சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு சிறு வட்டத்துக்குள்ளாவது விமர்சனம் என்று தமிழுக்கு பழக்கமில்லாத ஒரு புதுத் துறை வேர்கொண்டது. அதன் முதல் விதை க.நா.சு விதைத்ததுதான். அந்த முதல் நாற்றங்காலுக்குச்  சொந்தக் காரர்கள், முதன்மையாக க.நா.சு.வும் சி.சு.செல்லாப்பாவும் தான். தங்கள் படைப்பு ஈடுபாட்டைச் சற்று ஒதுக்கி, சக எழுத்தாளர்களின் பகையையும் பொருட்படுத்தாது, விமர்சனத்தில் ஈடுபட்டது,“நமக்கு ஏன் வம்பு?” என்னும் பாரம்பரியத் தமிழ் மரபார்ந்த சிந்தனைக்கு எதிரான செயல் இது. எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருஷ நீட்சி கொண்ட ஒரு மரபுக்கு எதிரான செயல் இது என்று வெ.சா கூறினார்.

“அந்த இதழின் (எழுத்து) வழியாக செல்லப்பா நவீனத் தமிழ் இலக்கியத்திற்காக எவ்வளவு தூரம் ஓடியோடி உழைத்திருக்கிறார். எவ்வளவு கனவு கண்டிருக்கிறார். எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மை துல்லியமாகப் புலப்பட்டது. தன் விருப்பத்தின் வழியே மட்டுமே அவர் பயணம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்திருக்கிறது.

குறிப்பாகத் தமிழ் விமர்சனத் துறையை ஆங்கில இலக்கியத்தின் நவீன விமர்சனத் துறைக்கு நிகரானதாக உருவாக்கவேண்டும் என்பதில் கூடுதலாகவே அக்கறை கொண்டிருக்கிறார். அதே வேளையில் தனது கருத்துகளோடு உடன்படாத பல முக்கியப் படைப்புகளையும் அவர் பிரசுரம் செய்திருக்கிறார்” என்று எஸ்.ராமகிருஷ்ணனும் எடுத்துக் கூறியுள்ளார்.

எழுத்து பத்திரிகை மூலம் பல புதியவர்கள் எழுத வந்தனர். அதில் நானும் ஒருவன் என்று வெ.சா கூறியுள்ளார். “செல்லப்பா தான் என்னை எழுத்துக்கும் ‘எழுத்து’ பத்திரிகைக்கும் இழுத்து வந்தவர் என்று சொல்ல வேண்டும். முதலில் எனக்குத் தெரியவந்த அதிகம் பல பத்திரிகைகளிலும் நான் படித்து உற்சாகம் பெற்றது க.நா.சு.வால் தான். ஆனால் நான் ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதத் தொடங்கிய சமயம் க.நா.சு.வுக்கு எழுத்து பத்திரிகையுடனும் சி.சு.செல்லப்பாவின் விமர்சனத்துடனும் அபிப்ராய பேதங்கள் கொண்டிருந்த சமயம். அந்தச் சமயத்தில் க.நா.சு தொடங்கிய விமர்சன எழுத்துக்குப் பெரும் பங்களிப்பைப் புதிய தலைமுறையிலிருந்து பலரை அறிமுகப்படுத்தியது ‘எழுத்து’ பத்திரிகை தான். முக்கியமாக விமர்சனத்திற்கும் புதுக்கவிதைக்கும் ‘எழுத்து’ மூலம் சேர்ந்த புதிய தலைமுறை வளம் மிக முக்கியமானது. அந்த வளம் புதிய தலைமுறையிலிருந்து புதியவர்களிடமிருந்து வருதல் மிக விசேஷமானது” என்கிறார் வெ.சா.

தமிழில் விமர்சனக் கலை வளர வேண்டுமென்றால் அதனைப் பற்றிய கோட்பாட்டு அறிவு தேவையென்பதை விரைவில் உணர்ந்து கொண்டார். இதற்கு மேலைய விமர்சன நூல்களைக் கடும் முயற்சியில் படிக்கத் தொடங்கினார். இதனை, “பத்திரிகை நடத்த ஆரம்பித்தபோது ரொம்பப் பிரமாதமாக நடத்தினார்  முதலில் அவருக்கு விமர்சனத்தில் அவ்வளவு பழக்கம் கிடையாது. பெரிய பெரிய நூல் நிலையங்களுக்குப் போய், பணம் கொடுத்து சந்தாதாரராக ஆகிக்கொள்ளும் வசதிகள் எல்லாம் அவருக்கு இருக்கவில்லை. பிரிட்டிஷ் லைப்ரரி, அமெரிக்கன் லைப்ரரிகளில் அதிகச் செலவு இல்லாமல் புத்தகங்களை எடுத்துக்கொள்ள முடியும். அந்த நூல் நிலையத்தைக் கவர்ச்சிகரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு நூல் நிலையத்துக்கும் மாறி மாறிப் போய் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்களை ஒன்று விடாமல் படித்துவந்தார். நான் எப்போது போய்ப் பார்த்தாலும் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்கள்தான் அவர் கையில் இருக்கும். அந்தச் சமயத்தில் நாவலோ சிறுகதைகளோ அவர் படித்து நான் பார்த்ததில்லை. விமர்சனம் சம்பந்தமாக அவர் அப்படிப் படித்து வந்தவற்றின் பாதிப்பை எழுத்துவில் வெளிவந்த கட்டுரைகளில் பார்க்க முடிந்தது என்று சுந்தரராமசாமி கூறியுள்ளார்.

“மேலை இலக்கியத்தில் எதை அறிமுகம் செய்யவேண்டும், அதை எப்படி அறிமுகம் செய்ய வேண்டும், விமர்சனம் என்பதன் முக்கியத்துவம் என்ன? கோட்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்று துல்லியமான எண்ணங்கள் செல்லப்பாவிடம் இருந்தன. அத்தோடு எவரையும் எதிர்பாராமல் தன் எழுத்தின் திசையில் போராடிச் செல்லும் மனவுறுதியும் அவரிடமிருந்தது” என்று வெளி ரங்கராஜனும் கூறியுள்ளார்.

இவ்வாறு தனி மனிதராகவும் எழுத்து இதழின் மூலமாகவும் அயராத உழைப்பினாலும் மன உறுதியாலும் நவீன தமிழ் இலக்கியத்தை விமர்சனத்தை நிலை நிறுத்திய சி.சு.செ அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை “செல்லப்பாவின் பங்களிப்பு மகத்தானது. அவரது படைப்புகள் மறுவாசிப்புக்கு உள்ளாகவே வேண்டும் என்பதோடு அவரது இலக்கியப் பணிகள் முழுமையாக சமகால வாசகர்களின் பார்வையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

சி.சு.செல்லப்பா எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி வாழ்ந்த ஒரு ஆளுமையின் அடையாளம். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முன்னோடிக் கலைஞன். இன்றும் அவருக்கு உரிய இடமும் கௌரவமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வாசகனைத் தேடிச் சென்ற எழுத்தாளனின் பாதை இன்று தூர்ந்து போயே கிடக்கிறது.

விமர்சகராக அவர் உருவாக்கிய கருத்துக்கள் பிரிட்டிஷ் விமர்சன மரபின் பாதிப்பைப் பெற்றவை. தமிழில் விமர்சன மரபைத் தோற்றுவிக்க முயன்ற புலவர்களும் இந்த மரபில்தான் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் தாங்கள் உருவாக்கிய அளவுகோலைப் பண்டைய இலக்கியத்தைப் பார்க்க எடுத்துச் சென்றபோது செல்லப்பா ஏறத்தாழ அதே அளவுகோலைப் புதுமை இலக்கியத்துக்கு கொண்டுவந்தார். இந்த அளவில் அவரை ஒரு நவீனப் புலவர் என்று அழைக்கலாம் என்று
வெளி ரெங்கராஜன் எடுத்துக் கூறியுள்ளார்.

சி.சு.செல்லப்பா விமர்சனக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்பியல் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். மேலும் தமிழில் சிறுகதை பிறக்கிறது, என் சிறுகதைப் பாணி,  பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி, இலக்கியச் சுவை, ஏரிக்கரை முதலிய விமர்சன நூல்களை எழுதியுள்ளார். க.நா.சுவால் தூண்டப்பட்டாலும் அவரது விமர்சன முறையிலிருந்து விலகி தனக்கான பாதையை அமைத்துக் கொண்டு புதுப்பாதையில் பயணித்த ஒற்றை ஆளுமை சி.சு.செ.

எந்தச் சார்பும் இல்லாமல் மனதில் பட்டதை அறிவில் புகுத்தி ஒப்பனைகள் இல்லாமல் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய சி.சு.செ இலக்கியக் கடலில் திசை தெறியாமல் தத்தளித்த பல புதிய படைப்பாளிகளுக்கு உரமாக, கலக்கரை விளக்காக விளங்கினார். அவரின் அடிச்சுவட்டில் என்று தமிழ் விமர்சனத்துறை பயணித்துக் கொண்டிருப்பதைச் சிந்திக்க வேண்டியதும் சி.சு.செவைக் கொண்டாட வேண்டியதும் அவசியம்.

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18