சூறாவளி

மூலம்     : கலீல் ஜிப்ரான்

தமிழாக்கம் : புதுவை ஞானம்

ஒரு நாள் ஃப்பாரிஸ் எஃப்ஃபெண்டி தனது வீட்டில் விருந்துண்ண என்னை அழைத்தார் நானும் ஒப்புக்கொண்டேன். சுவர்க்கம் செல்மாவின் கரங்களில் அளித்ததும். உண்ண உண்ண இதயத்தில் பசியைத் தூண்டி விடுவதுமான தெய்வீக அப்பத்தை என் நெஞ்சு நேசித்தது. இந்த அப்பத்தைத்தான் அரபுக் கவிஞரான கைஸும், தாந்தேயும், சாப்போவும் புசித்தனர். அது அவர்களது இதயத்தில் தீயை மூட்டியது. முத்தங்களின் இனிப்பாலும் கண்ணீரின் கசப்பாலும் தெய்வீக அன்னை சுட்டெடுத்த அப்பம் அது.

நான் எஃபென்டியின் வீட்டை அடைந்த போது செல்மா தோட்டத்தில் ஒருவிசிப்பலகையின் மீது ஒய்வெடுத்துக் கொண்டிருந்தாள். தன் தலையை ஒரு மரத்தின் மீது சாய்த்து இருந்த அவள் வெண்பட்டாடை உடுத்தி மணமகள் போல் காட்சி தந்தாள். அல்லெனில் அந்த மாளிகையக் காக்கும் தேவதை போல் வீற்றிருந்தாள்.

பயபக்தியோடு அவளை அணுகி பக்கத்தில் அமர்ந்தேன். என்னால் பேசமுடியவில்லை . எனவே இதயத்தின் ஒரே மொழியான மவுனத்தில் ஆழ்ந்தேன். ஆனால் செல்மா எனது வார்த்தைகளற்ற  அழைப்பினை ஏற்று எனது கண்களினூடே எனது ஆன்மாவைத் தரிசிப்பதாக எனக்குத் தோன்றியது.

சில நிமிடங்களில் அந்த முதியவர் வெளியே வந்து வழக்கம் போலவே என்னை வரவேற்றார். அவரது கரங்களை என்னை நோக்கி நீட்டியபோது என்னையும் அவரது மகளையும் இணைத்த இரகசியங்களை அவர் ஆசீர்வதிப்பதாக எனக்குத் தோன்றியது. பிறகு சொன்னார் ” விருந்து தயார் சாப்பிடுவோமா! “ நாங்கள் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தோம். செல்மாவின் கண்கள் பிரகாசமடைந்தன. எங்களை அவர் குழந்தைகளே என அழைத்ததனால் அவளுடைய காதலுக்கு ஒரு புதிய ஊக்கம் உண்டானது.

மேசையில் அமர்ந்து உணவை ருசித்து ஒயினைக் குடித்தபோது எங்களது ஆன்மாக்கள் எங்கோ சஞ்சரித்தன. நாங்கள் எதிர்காலத்தையும் அதன் சிரமங்களையும் பற்றி சிந்தித்தோம்.

மூன்று பேர்களும் தனித்தனியே சிந்தித்த போதிலும் அன்பினால் கட்டுண்டு இருந்தோம் .  மூன்று அப்பாவிகள் அதிக உணர்வுடனும் குறைந்த அறிவுடனும்.  நாடகம் நடிக்கப்பட்டது தனது மகளின் மீது பாசம் வைத்து அவளது மகிழ்ச்சியில் அக்கறை கொண்ட முதியவர், இருபதே வயதான எதிர்காலத்தைக் கவலையுடன் நோக்கும் ஒரு இளம்பெண், கனவு காணும் கவலையுறும்- வாழ்வின் இனிப்பையும் புளிப்பையும் சுவைத்தறியாத – இளைஞன். அன்பின் உச்சத்தையும் அறிவின் சிகரத்தையும் எட்ட விரும்பியும்காதல் போதையில் இருந்து எழ முடியாதவன். நாங்கள் மூவரும் அந்தத் தனித்த வீட்டில் அமர்ந்து விருந்துண்டோம் அரையிருட்டில் சுவர்க்கத்தின் விழிகள் காவலாய் இருக்க எங்கள் கோப்பைகளின் அடியாழத்தில் கசப்பும் வெறுப்பும் மறைந்திருந்தன.

நாங்கள் சாப்பிட்டு முடிந்ததும்  வேலைக்காரியொருத்தி வாசலில் யாரோ ஒருவர் அந்த முதியவரைக் காண வந்திருப்பதாக சொன்னாள்.” யாரது ?” வினவினார் முதியவர். “ பாதிரியாரின் தூதர்.” என்றாள் வேலைக்காரி. அங்கு அமைதி நிலவியது. முதியவர் தனது மகளை தெய்வீக இரசியத்தை எடுத்துரைத்த தேவதூதர் போல் நோக்கினார். பிறகு வேலைக்காரியிடம் “ அந்த மனிதரை வரச்சொல் “ என்றார்.

வேலைக்காரி அங்கிருந்து சென்ற பிறகு  முறுக்கி விட்ட மீசையும் கிழக்கத்திய ஆடையும் கொண்ட அந்த மனிதன் சொன்னான் “ அருட்தந்தை உங்களை அழைத்து வரும்படி தனது வண்டியை அனுப்பி இருக்கிறார். ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டுமாம்.” புன் சிரிப்பு அகன்று முதியவரின் முகம் குழம்பியது. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துவிட்டு என்னிடம் வந்து நட்பு தோய்ந்த குரலில் சொன்னார்

“நான் திரும்பி வரும்போது நீங்கள் இங்கே இருப்பீர்களென நம்புகிறேன் இந்த தனி இடத்தில் செல்மா உங்கள் தோழமையை விரும்புவாள்.”

இதைச் சொல்லிவிட்டு  சிரித்துக்கொண்டே செல்மா பக்கம் திரும்பி சரிதானே என்றார். அவள் தலையாட்டினாள்.அவள் முகம் சிவந்தது. “ விருந்தாளியை மகிழ்விக்க என்னால் ஆனதைச் செய்வேன் அப்பா”, என்றாள்.

தன் அப்பாவையும் பாதிரியாரின் தூதனயும் ஏற்றிச்சென்ற வண்டி கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்தாள். பின்னர் அவள் திரும்பி வந்து பச்சைப்பட்டாடை போர்த்திய மெத்தையில் என் எதிரே அமர்ந்தாள். இளம் மாலைப்பொழுதின் தென்றலில் பசும் புற்களின் மீது சாய்ந்திருக்கும் வெண்ணிற அல்லி மலர் போல் காட்சி தந்தாள். செல்மாவுடன் அந்த இரவில் மரங்கள் சூழ்ந்த அவளது அழகிய வீட்டில் எங்கு அமதியும் அன்பும் சூழ்ந்திருக்கையில் நான் தனியே இருக்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம் போலும்.

நாங்கள் இருவருமே அமைதியாக இருந்தோம். யாராவது முதலில் பேசமாட்டார்களா என்று ஆவலோடு காத்திருந்தோம்.ஆனால் பேச்சுதான் இரண்டு ஆன்மாக்களிடையே புரிதலுக்கான சாதனம் என்பதில்லை. உதட்டிலிருந்தும் நாவிலிருந்தும் வெளிவரும் சப்தங்கள்தான் இரு இதயங்களை இணைக்கும் என்பதில்லை.

வாய்ப்பேச்சைவிட உயர்வானதும் புனிதமானதுமான ஏதோ இருக்கத்தான் செய்கிறது. மவுனம் நமது ஆன்மாக்களுக்கு ஒளியூட்டுகிறது அது இதயத்தைத் துளைத்து ஊடுறுவி அவற்றை ஒன்றிணைக்கிறது.மவுனம் நம்மிடமிருந்தே நம்மைப் பிரிக்கிறது. ஆன்மாவின் மீது மிதந்து சுவர்க்கத்திற்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. உடல்கள் வெறும் சிறைக்கூடம்தான் இந்த உலகம் அந்நியம்தான் என்பதை நாம் உணரவைக்கிறது.

செல்மா என்னை ஏறிட்டு நோக்கினாள், அவளது விழிகள் இதயத்தின் இரசியங்களை வெளிப்படுத்தின. அவள் மெதுவாகச் சொன்னாள்,”நாம் தோட்டத்துக்குள் சென்று மரத்தடியில் உட்காருவோம். மலைகளின் பின்னிருந்து நிலவு உதிப்பதைக் காண்போம்.”   எனது இருக்கையில் இருந்து நான் எழுந்தேன் ஆயினும் தயங்கினேன்.

“நிலவு எழுந்து தோட்டம் முழுவதும் வெளிச்சம் வரும் வரை நாம் காத்திருக்கலாம் அல்லவா ? இருள் மரங்களையும் பூக்களையும் மறைக்கிறது.நம்மால் எதையும் பார்க்கமுடியவில்லை.” பிறகு அவள் சொன்னாள், இருள் மரங்களையும் பூக்களையும் நம் கண்ணிலிருந்து மறைத்தாலும் நமது காதலை இதயத்திலிருந்து மறைக்கமுடியாது”

ஒரு வித்தியாசமான குரலில் சொல்லிவிட்டு யன்னல் பக்கமாக தனது பார்வையைத் திருப்பினாள்.நான் அமைதியாக அவள் சொன்னதற்கான உண்மையான பொருளை  ஒவ்வொரு அட்சரமாக அசை போட்டேன் .தான் சொன்னதற்கு வருத்தப்படுபவள் போல் என்னை நோக்கினாள் .தனது பார்வையின் வித்தையால் அந்த வார்த்தைகளை எனது செவிகளில் இருந்து திரும்ப  எடுப்பது போல் தோன்றியது. ஆனால் அந்த விழிகள் அவள் சொன்னதைத் திருப்பி எடுப்பதற்குப்பதில் எனது இதயத்தின் அடியாழத்தில் மீண்டும் மீண்டும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது, நித்தியமாக என் நினைவில் செதுக்கியது போலாயிற்று.

இந்த உலகத்தின் ஒவ்வொரு அழகும் உன்னதமும் ஒரு மனிதனுள் தோன்றும் எண்ணம் அல்லது உணர்வால் உருவாக்கப்பட்டது . இன்று நாம் உலகில் காணும் ஒவ்வொன்றும் ஒரு மனிதனின்  சிந்தையில் உருவான எண்ணமோ உணர்ச்சியோதான். நாம் காணும் எல்லாமும் கடந்த தலைமுறையால் உருவாக்கப்பட்டது தான். அவை தொன்றும் முன் ஒரு பெண்ணின் அறிவிலோ இதயத்திலோ முகிழ்த்தது தான். ஏராளமானஇரத்தம் சிந்திய புரட்சிகளும் மனிதர்களின் சிந்தனையை சுதந்திரத்தை நோக்கி திருப்பியதும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களோடு வாழ்ந்த ஒரு மனிதனின் கருத்துதான். பேரரசுகளை தரைமட்டமாக்க பெரும்போர்களை நடத்திய சிந்தனை தனது சூழலில் இருந்து விலகியவனான அறிவாளியான ஒரு மனிதனுக்குள்தான் உதித்தது. தனித்த ஒருவனின் சிந்தனைதான் அலெக்சாண்டிரியாவின் நூலகங்களைக் கொளுத்தியது , இஸ்லாத்தின் பெருமையான பிரமிடுகளை உருவாக்கியது .

ஒரு சிந்தனை இரவில் வரும் அது புகழின் உச்சிக்கோ பைத்தியத்தின் பாதாளத்துக்கோ இட்டுச்செல்லக்கூடும். ஒரு பெண்ணின் விழிப்பார்வை உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதனாக ஆக்கி விடும். ஒரு மனிதனின் நாவிலிருந்து வரும் சொல் உன்னை ஏழையாகவோ செல்வந்தனாகவோ ஆக்கிவிடும்.

அன்று இரவு செல்மா உதிர்த்த சொற்கள் என்னை சிறைப்படுத்தின எனது கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் இடையில்  _ ஆழமான பெருங்கடல் மத்தியில் நங்கூரமிடப்பட்ட கலத்தைப்போல . அந்த வார்த்தை இளமையின் மதர்ப்பிலிருந்தும் தனிமையிலிருந்தும் என்னை எழுப்பி வாழ்வும் சாவும் தங்களது பாத்திரத்தை நடிக்கும் நாடகமேடையில் பொருத்தி வைத்தது.

நாங்கள் மவுனமாக தோட்டத்திற்குள் வந்து மல்லிகை படர்ந்த மரத்தின் கீழ் அமர்ந்த போது மலர்களின் மணம் தென்றலுடன் கலந்து வீசியது . தூங்கும் இயற்கையின் மெல்லிய மூச்சொலியைக் கேட்டபோது சுவர்க்கத்தின் விழிகள் எங்களது நாடகத்தை ரசித்தன.

மலையின் பின்னிருந்து நிலவு எழும்பி கடற்கரையில் மலைகளில் குன்றுகளில் ஜொலித்தது . ஒன்றுமே இல்லாத இடத்திலிருது அந்த கிராமப்பள்ளத்தாக்கு முளைத்தது போல் தோன்றியது . நிலவின் வெள்ளிக்கதிர்களின் கீழ் லெபனானின் அனைத்து அழகையும் நாங்கள் கண்டு வியந்தோம் .

மேற்கத்திய கவிஞர்கள் லெபனானைப் பற்றி, அது ஒருபுராதமான இடம் ஆதாமும் ஏவாளும் மறைந்தவுடன் மறக்கப்பட்ட ஈடன் தோட்டம் போலவே , தாவீதும் சாலமனும்  தேவதூதர்களும் மறைந்தததும் மறக்கப்பட்ட இடம் என்பதாக நினைக்கின்றனர் . அந்த மேற்கத்திய கவிஞர்களுக்கு,” லெபனான் “ என்ற சொல் புனிதமான செடார் மரங்களின்

வாசனையால் சூழப்பட்ட மலையுடன் தொடர்புடைய கவிதை வெளிப்பாடாகத் தோற்றம் கொள்கிறது . அது அவர்களுக்கு தாமிரமும் சலவைக் கற்களுமான கோட்டைகள், பள்ளத்தாக்குகளில் மேயும் மான் கூட்டங்கள் என்பதாகக் காட்சியளிக்கிறது . அன்று இரவு நான்  கவிஞர்களின் பார்வையில் லெபனானைக் கனவு போலக் கண்டேன் .

இவ்வாறாக பொருட்களின் தோற்றமும் மாற்றமும் உணர்வுகளைப் பொருத்து அமைகின்றன . அவற்றின் அழகையும் விசித்திரத்தையும் நாம் காண்கிறோம் . எனினும் உண்மையில் அழகும் விசித்திரமும் நமக்குள்ளேயே இருக்கின்றன.

நிலவின் சில்லென்ற  கதிர்கள் செல்மாவின் முகத்தில் படரும் போது அழகின் தேவதையான இஷ்தாரின் பக்தன் ஒருவனின் விரல்கள் செதுக்கிய தந்தச்சிலை போல சுடர்விட்டாள் . அவள் என்னை நோக்கி,” ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் ? உங்களது கடந்த காலம் பற்றி ஏதாவது சொல்லக்கூடாதா ? .” என்றாள். அவளை நான் ஏறிட்டு நோக்கிய போது எனது மவுனம் விலகியது . எனது உதடுகளைத் திறந்து “ நாம் இந்தப் பழத்தோட்டத்தில் நுழையும் போது நான் சொன்னதைக் கேட்டாய் அல்லவா ? பூக்களின் கிசுகிசுப்பையும் மவுனத்தின் பாடலையும் கேட்கத் தெரிந்த ஆன்மா எனது இதயத்தின் துடிப்பையும் நடுக்கத்தையும் கேட்கிறது.”

அவளது கைகளினால் முகத்தை மூடிக்கொண்டு நடுங்கும் குரலில் சொன்னாள்,” ஆம் . நான் கேட்டேன் _ இரவின் ஆழத்தில் இருந்து வரும் குரலையும் பகலின் இதயத்திலிருந்து பொங்கி வரும் தாபத்தையும் கேட்டேன்.’’

எனது கடந்த காலத்தை மறந்து , இருப்பையே மறந்து செல்மாவைத்தவிர அனைத்தையும் மறந்து அவளுக்கு பதில் சொன்னேன் ,” நானும் நீ சொன்னதைக் கேட்டேன் செல்மா. காற்றில் புல்லரிக்கும் இசையின் நாடித்துடிப்பையும் அது இந்தப் பிரபஞ்சத்தையே நடுங்க வைப்பதையும் கேட்டேன் .”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள் .அவளது இதழோரம் இன்பமும் துன்பமும் கலந்த ஒரு குறுநகை நெளிந்தோடியதைக் கண்டேன் . மெல்லென அவள் முணுமுணுத்தாள்

“இப்பொழுது எனக்குத் தெரிகிறது  சுவர்க்கத்தை விட உயரமான ஏதோ இருக்கிறது.கடலை விட ஆழமான ஏதோ இருக்கிறது , வாழ்வையும் சாவையும் காலத்தையும் விட புதிரானதொன்று இருக்கிறது . இதுவரை தெரியாதனவெல்லாம் இப்போது எனக்குத் தெரிகிறது .”

அந்தக் கணத்தில் செல்மா ஒரு நண்பனைவிட அன்பு பாராட்டுபவளாகவும், தங்கையைவிட நெருக்கமானவளாகவும் ,காதலியை விட அதிகம் நேசிப்பவளாகவும் தோன்றினாள் .அவள் அதியுன்னத சிந்தனையாகவும், அழகான சொப்பனமாகவும்,எனது ஆன்மாவை விஞ்சிய உணர்வாகவும் ஆகிவிட்டாள் .

காதல் என்பது நீண்ட கால தோழமையாலும் இடைவிடாத தொடர்புகளாலும் வருகிறது என நினைப்பது தவறு , காதல் என்பது ஆன்மீகப் பிணைப்பின் வாரிசு திடீரென ஒரு கணத்தில் அது உருவாகாவிட்டால் பல ஆண்டுகள் ஆனாலும் அல்லது பல தலைமுறைகள் கடந்தாலும் அது உருவாவதில்லை. ( தொடரும்) 16.07-2013

a

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் – 11