ஞானக் கிறுக்கன்

– பத்மநாபபுரம் அரவிந்தன் –

கப்பல்த் தளத்தில்
புகை பிடித்தபடி அமர்ந்திருந்தேன்
அருகே வந்தமர்ந்தான்
அந்த குரோஷியன் ..

அமைதியாய் கிடந்த
கடலினைப் பார்த்து
அவன் சொன்னான்
கடல் தூங்குகிறதென்று

தூங்கவில்லை சலனம்
இருக்கிறது பாரென்றேன்..

அது சலனமில்லை
தூங்கும் போது கடல்
விடும் மூச்சின் அசைவென்றான் ..

இருளிலும் வெண்மையாய்
கடலில் மிதந்த சீகல் பறவைகள்
கடல் தேவதையின்
குழந்தைகளென்றான்…

வானில் வேட்டைக்கார
நட்சத்திரக் கூட்டத்தைப்
பார்த்தபடி அவை தன்
மூதாதையர்களென்றான்…

ஓயாது வேட்டையாடி
அவர்கள் வென்றெடுத்த
வானில் வாழ்கிறார்களென்றான்..

அவன் கற்பனைகளை
நான் ரசித்துக் கொண்டிருக்கையில்
என்னை ஆச்சரியமாய்ப் பார்த்து
ஒரு கேள்வியைக் கேட்டான்

குரோஷியா மேல் வாழும் அவர்கள்
எப்படி இங்கேவென்று …

நான் என் சிகரெட்டைப் பாதியில்
அணைத்துப் போட்டுவிட்டு
உள்ளே நுழைந்தேன் ….

Series Navigationமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.