துயர் விழுங்கிப் பறத்தல்

Spread the love

 

 

பறந்திடப் பல

திசைகளிருந்தனவெனினும்

அப் பேரண்டத்திடம்

துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ

சௌபாக்கியங்கள் நிறைந்த

வழியொன்றைக் காட்டிடவெனவோ

கரங்களெதுவுமிருக்கவில்லை

 

ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி

ஒவ்வொரு பொழுதும்

காற்று ரணமாய்க் கிழிக்கையில்

மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல

தன் சிறகுகளால்

காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

 

முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்

தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து

தன் எல்லை மீறிய பொழுதொன்றில்

மிதந்தலையும் தன் கீழுடலால்

மிதித்திற்று உலகையோர் நாள்

 

பறவையின் மென்னுடலின் கீழ்

நசுங்கிய பூவுலகும் தேசங்களும்

பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து

தெறித்த குருதியைப் பருகிப் பருகி

வனாந்தரங்களும் தாவரங்களும்

பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட

 

வலி தாள இயலா நிலம் அழுதழுது

ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து

ஓடைகள் நதிகள்

சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

 

விருட்சக் கிளைகள்

நிலம் நீர்நிலைகளெனத் தான்

தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்

தடயங்களெதனையும் தன்

மெலிந்த விரல்களிலோ

விரிந்த சிறகுகளிலோ

எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு

வெளிறிய ஆகாயம் அதிர அதிர

தொலைதுருவமேகிற்று

தனித்த பறவை

 

– எம். ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationபுதியதோர் உலகம் செய்வோம் . . .பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா