கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

This entry is part 5 of 14 in the series 25 செப்டம்பர் 2022

 

எஸ்ஸார்சி

 

இந்த   காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள்.  ஊர் மக்கள் அவரோடு  அனுபவித்தது அப்படி. அது என்னப்பா  நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள்.  அதற்கும்  ஒரு பதில் சொல்லத்தான் வேண்டும். இப்படி ஒரு சொல்லாடல்  வழக்கத்தில் இருக்கிறதுதான்.

யார் யார் நோய் நொடி என்று  படுக்கையில், கிடக்காமல், யாரும் தூக்காமல்  கொள்ளாமல் இந்தப் பூ உலகினின்று விடைபெற்றுக்கொண்டு  நரகம் இல்லை  அந்த  சொர்க்கம் போகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பது நல்லசாவு.   எளியவனின் சிறு  விளக்கம்.

சிலரோ  நோயில் படுத்துப் படாத இம்சையை  தானும் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் படவைப்பார்கள்.  இந்த ஆசாமிகள் போய்ச்சேர்ந்தால் போதுமப்பா என்று ஆகிவிடும்.  சில  பேர்வழிகள் இப்படியும் இருக்கவே செய்கிறார்கள். இந்தச் சாவு நல்ல சாவில்லை. அவ்வளவுதான். அதனைக்கெட்ட சாவென்று மட்டும்  சொல்லிவிடாதீர்கள். அதுவும் ஒரு  தெய்வக்குற்றமாகிவிடும்.

பாவம் புண்ணியம் என்கிற டெபிட் கிரெடிட் டபுல் என்ட்ரி கணக்குப்போடும் எமலோகத்துக் கணக்கன்  சித்திரா புத்தன் பகை  மட்டும் மனிதர்க்கு  என்றும்  ஆபத்து.  ரூபாய் அணா பைசா  என்று வரவு செலவு கணக்கு எழுதுபவர்கள் என்றைக்குமே  அடுத்தவர்க்கு  ஆபத்தானவர்கள். அவர்களைப் பகைத்துக்கொண்டால் அப்புறம் பின் விளைவுகள் எங்கெங்கோ  கொண்டு போய்விடும். எத்தனையோ  நடப்புக்கதைகள் இவண் பார்த்தும் இருக்கிறோம். 

 சேவூர் கணக்கன் செத்தும் கெடுத்தான்.  இப்படி ஒரு பழமொழி தெரியுமோ . அந்தக்காலத்தில் ஊருக்கு ஊர் கணக்குப்பிள்ளை என்கிற அரசு உத்யோகம் உண்டு. அந்தப்படிக்கு சேவூர் என்னும் ஒரு கிராமத்துக்கணக்கன்  ஜனங்களுக்கு இல்லாத  பொல்லாத தலைவலி கொடுத்துக்கொண்டிருந்தானாம். ஒரு நாள் அவன் இறந்துமே போனான். இறப்பதற்கு முன் ஒரு சீட்டு எழுதிவைத்தான். அதனில் இப்படி எழுதியிருந்தான். நான் உங்களுக்கு இது நாள் வரைக்கும் எவ்வளவோ இம்சைகள் கொடுத்து வந்தேன். எனக்கே மனம் சஞ்சலப்படுகிறது. ஆக என் சவத்தை மட்டும் சிரமம் பார்க்காமல் அடுத்த ஊர் இடுகாட்டில் புதைத்துவிடுங்கள். அப்படிச்செய்துவிட்டால் இனி   என்னால் உங்களுக்கு  ஒரு தொல்லையும் வராது’  என்று முடித்துவிட்டானாம். அதன்படிக்கு அவன்  சவத்தைத்தூக்கிக்கொண்டு  இந்த ஊர் ஜனங்கள் அடுத்த ஊர் இடுகாட்டுக்கு எச்சரிக்கையோடு போயிருக்கிறார்கள். அந்த ஊர் மக்கள் கைகளில் கம்பும் கட்டையுமாக தூக்கிக்கொண்டு ‘அந்தக்கணக்கன் அப்போதே எங்களுக்குச்சொல்லிவிட்டான். ’நான் இறந்தால் என் சடலத்தைப்புதைக்க இந்த ஊருக்குத்தான் தூக்கிக்கொண்டு வருவார்கள். நீங்கள் அனைவரும் ஜாக்கிரதையாக  இருந்து கட்டாயம் அதனைத் தடுத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால்   உங்கள் ஊருக்கு மிகுந்த கஷ்டம்  உண்டாகும் என்று’ ஆக நாங்கள்  எங்களூர் இடுகாட்டில்  உங்களை அனுமதிக்கவே மாட்டோம்’ என்றனர்.

 இரண்டு ஊருக்கும் பெரிய சண்டை. மண்டை உடைந்தது. அப்போதுதான்  சேவூர் மக்கள் சொன்னார்களாம்  ‘சேவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்று’  ஆக கணக்கு வழக்கு  பார்க்கும்  ஜனங்கள் சாமான்யமானவர்கள் இல்லைதான்.

 சிறிய வட்டமாய்  ரப்பர் ஸ்டாம்ப்  வைத்துக்கொண்டுப் பச்சையும் சிவப்புமாய் கையெழுத்துப்போடும் ஆடிட்டர் பகவான்கள் என்றேனும்  எக்கு தப்பாய் மாட்டிக்கொண்டார்கள் என்றோ திரு திரு  என்று விழித்தார்கள் என்றோ கையைகட்டிக்கொண்டு நின்றார்கள் என்றோ ஒரு கதையாவது நாம் கேட்டதில்லையே, அங்குதான் சூட்சுமம் இருக்கிறது.

சரி  சரி காளையார்குடி  வாசு அய்யர் கதைக்கு வந்துவிடுவோம்.  வாசு அப்படி என்ன செய்துவிட்டார் அதையும்தான் பார்த்துவிடுவோம்.  ஊரில் ஏரிகுளம் தூர் வாரி  தெருவெல்லாம் சாலை போடுவது கழிவு நீர் கால்வாய் வெட்டுவது பின் சுவர் கட்டுவது  மின்கம்பத்தில்  மஞ்சள் மஞ்சளாய்த் தெருவிளக்கு போடுவது  இதுகள் ஜனங்கள் சவுகரியப்படவே செய்கிறார்கள் என்று  இந்த அப்பாவி பொது ஜனம் நினைத்துக்கொண்டு ஜீவித காலம் கழிக்கிறார்கள். அது அப்படி எல்லாம் இல்லவே இல்லை. தலைவர்கள் தம் சொந்த பந்தத்துக்குக் கல்லா கட்டத்தான் இந்த ஏற்பாடுகள் எல்லாம் என்கிற தேவரகசியம் எங்கே தெரியப்போகிறது

வாசு அய்யர் பற்றி  உள்ளூர் ஏரிக்கு பெரியகரை அமைக்கிறேன் பேர்வழி என்று டெண்டர் எடுத்துச் சாப்பிட்டது தொடங்கி ஆரம்பிக்கவேண்டும். பிறகு வெண்தாமரைக்குளம் சுரண்டி சுரண்டித் தூர் வாறுவது என்றும் தொடர்ந்தார். அதனில் எவ்வளவோ கொள்ளை. வேறு ஒரு பாசன ஏரியை தூர்த்து நிலமாக்கி நஞ்செய் என அடுத்தவர்க்கு விற்றுச் சம்பாரித்தார் அதுவே பின்னர் குறுக்கும் நெடுக்கும் கோடுகள் கீறிப்போட்டு  வீட்டு மனைகள் என்றானது.

.  வாசு அய்யருக்கு உடன் பிறந்த அண்ணன் ஒருவர் இறந்துபோனார். அவர் சொத்து முழுவதும் இந்த வாசு ஐய்யருக்கே வந்து சேர்ந்தது. பங்காளிகள் வைத்திருந்த சேமிப்புப்பணத்தைத் தந்திரமாய்க்கடன் கொடு  என்று வாங்கி வாங்கிச் சுருட்டிக்கொண்டார்.  அய்யரின் தமக்கைகள் இருவர் வாழ்விழந்து வீட்டுக்கு வந்துவிட அவர்கள் கொண்டுவந்த சொத்தை அபகரித்துக்கொண்டு அவர்களைத்திண்டாட வைத்தது  பெரும்சோகம். இன்னும் எத்தனையோ.

கொஞ்சம் கேவலம்தான்.உள்ளூர் வேதவனப்பெருமாள்கோவில் பட்டாச்சாரி ஆராவமுது. அவரின் மனைவியை தனதாக்கிக்கொண்டு அனுபவித்தவராயிற்றே. இந்த வாசு ஐய்யருக்கும் அந்த அம்மாளுக்கும் பிறந்ததாய் இரண்டு குழந்தைகள்  இது  ஊரே அறிந்த சமாச்சாரம்.   மேற்படி அந்தச் சமாச்சாரம்  ஆண் பெண்  இருவரின் சொந்த விருப்பம் என்றாகிவிட்டபடியால் சுப்ரீம் கோர்ட்தான் இதில் என்ன சொல்ல இருக்கிறது..

எண்பது வயதைத்தாண்டிய  இந்த வாசு அய்யர் நன்றாகத்தான் காலம் தள்ளினார். அவரின் மனைவி எப்பவோ காலமாகிப்போனதும் அவருக்கு வசதியாய்த்தான் போனது.

 வாசு ஐயருக்கு நான்கு மகன்கள். அவரவர்கள் பிழைப்புத் தேடி எங்கு எங்கோ சென்று விட்டார்கள். மூத்த மகனுக்கு தாலுக்கா ஆபிசில் எழுத்தர் வேலை. அருகில் இருக்கும் ஜெயங்கொண்டசோழபுரத்தில்தான்.

ஐய்யரின் மருமகள்தான்  ஒரு நாள்  அதிகாலை எத்தனை அழகாய் விபரம் சொன்னார்.  ஊராரும் எப்படி வாய்பொத்திக்கேட்டுக்கொண்டனர்.

‘ என் மாமனார் இன்று  வெடியற்காலம் ஒரு நான்கு மணிக்கு  என்னை அழைத்தார். நான் என்ன மாமா வேண்டும் என்றேன். காமாட்சி விளக்கை உடனே ஏற்று என்றார். ஏற்றினேன். கல்பூரம் ஏற்றிக்கொடு என்றார்.  வெள்ளித்தாம்பாளத்தில் கற்பூரம் ஏற்றிவைத்தேன். குலதெய்வம்  கருவாழைக்கரை காமாட்சி படத்திற்கு அதனைக் காட்டினார். ‘காமாட்சி காமாட்சி வா  வந்து  என்னை அழைத்துக்கொண்டு போ ’ சொல்லித்தன் தலையை தரைமீதுவைத்து வேண்டினார்.கல்பூரத்தட்டில்  இருந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு சிறிது வாயிலும் போட்டுக்கொண்டார்.  ஆகாயம் பார்த்தார். அப்படியே என் மடியில் சாய்ந்து கொண்டார். அவ்வளவுதான் ஆவி பிரிந்துபோனது’

சொந்தபந்தங்கள் சேதி அறிந்து  காளையார்குடி  ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.  ஊரார் வாசு அய்யர் விடை பெற்ற  முழுவிபரமும் அறிந்து ஆச்சர்யப்பட்டார்கள். ‘இப்படிக்கூட ஒருத்தருக்கு சாவு வருமா’ என்று கூடி கூடி பேசிக்கொண்டனர்.

‘’நல்ல சாவு அய்யாவுக்கு’  ஒருவர் பாக்கி இல்லாமல் சொல்லிமுடித்தார்கள்.

‘இப்படி ஒரு சாவு யாருக்கேனும் வாய்க்குமா’ சொந்த பந்தங்கள் அவரவர்கள்  சொல்லிச் சொல்லி ஓய்ந்தார்கள்.

அய்யரைக்காட்டிலும் அந்த மருமகள்தான் பலே கெட்டிக்காரி என்பது காளையார்குடி  ஜனங்கள்  இன்னும் அறியத்தான் வேணும்.

——–

Series Navigationஒரு வழிப்பாதை  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *