முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்

This entry is part 39 of 42 in the series 1 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

நான் போய்வந்தேன். ஆகாவென்றிருந்தது. மீண்டும் போனேன் அங்கே. இலையுதிர்காலம் கடந்தது. புனித லூக் மருத்துவப் பள்ளியில் குளிர்கால வகுப்புகள் துவங்க, நான் லண்டன் திரும்பிவந்தேன்… இப்போதெல்லாம் சனிக்கு சனி நான் அங்கே ஆஜர்.

அதுதான் எனது கலை மற்றும் எழுத்து உலகத்தின் சாளரம். நான் அறையில் ரொம்ப மும்முரமாய் எழுதிக் குவித்தேன், ஆனால் சனி மதியங்களில் யாரிடமும் அதைப்பற்றி மூச்சு காட்டவில்லை. இந்தக் காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பிற எழுத்தாளர்களைச் சந்திப்பதில் எனக்கு ஒரு கிளர்ச்சி இருந்தது. அவர்களின் உரையாடல்களை உன்னிப்பாய்க் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன்.

பலதரத்தினரான நபர்கள் அங்கே கூடிக் கலந்தார்கள். வார இறுதிகளே எனக்கு அரிதான விஷயமாய் இருந்தது அப்போது. கோல்ஃப் அப்போது பிரபலமாகவில்லை. அந்த ஆட்டத்தை எல்லாரும் நக்கலடித்த காலம் அது. சனி மதியங்களில் யாருக்கும் எந்த வேலையும் இல்லாதிருந்தது. வந்தாட்களில் இன்னார் இதில் முக்கிய நபர் என்று மேலே வந்ததாக, கொடியேத்தியதாகச் சொல்ல முடியாது. எத்தனையோ சந்திப்புகள்… என்றாலும் திரிஃபீல்ட் வீட்டில் நான் சந்தித்த ஓவியர்களில், எழுத்தாளர்களில், இசைக்கலைஞர்களில் ஒரு புகழ்கட்டத்தை எட்டித் தொட்டவர் எவரும் இலர். எல்லாருமே கத்துக்குட்டி கன்றுக்குட்டிகள். ஆனாலும் அந்த சந்திப்புகளில் நல்ல சிந்தனையொழுங்கு கிடைத்தது எனக்கு. உற்சாகம் வந்தது.

அங்கே வந்த இளம் நடிகர்கள் சின்னப் பாத்திரம் எதும் கிடைக்குமா என்று காத்திருந்தார்கள். நடுத்தர வயசுப் பாடகர்களோவெனில் ச், இந்த ஆங்கிலேயர்களுக்கு ரசனை அத்தனை பத்தாது என்று அலுத்துக் கொண்டார்கள். திரிஃபீல்ட் வீட்டில் பியானோவில் அமர்ந்து புது மெட்டுகளை உருவாக்கிய இசைக்கலைஞர்கள், இதெல்லாம் சின்ன வெள்ளோட்டம், என் சங்கீதத்தைப் பெரிய அரங்கத்தில் கேட்கிற கம்பீரமே தனிதான், என அடங்கிய குரலில் அங்கலாய்த்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு என்று வந்து கலந்துகொண்டதில் தாங்கள் சமீபத்தில் எழுதிய கவிதையைக் கவிஇளவல்கள் வாசிக்கிறார்கள். தங்கள் கைவரிசையை அரங்கேற்றக் காத்திருக்கிற ஓவியர்களும் அங்கே வருகை புரிந்தார்கள். சில சந்தர்ப்பங்களில் பேர் வாங்கிய சிலர் வந்தமைவதும் உண்டு. அப்ப அந்தக் காலத்தில் எழுத்தாளர்களிடத்தில் பந்தா பாவனைகள் எல்லாம் வந்து சேர்ந்திருக்கவில்லை. சாதாரணமாய் ஒருத்தரை ஒருத்தர் வருவதும் பார்ப்பதுமாய் இயல்பாய் நடமாடிய காலம் அது.

அத்தோடு இந்தமாதிரி ஒரு நபரின் வீட்டில் இம்மாதிரி கலைஞர்கள் ஒன்றுகூடிக் கலக்கிறார்கள் என்றால், எதாவது வகையில் அந்த விருந்தளிக்கிற நபர் வாழ்க்கை எனும் சேற்றில் விழுந்து வாரியிருப்பார்… விவாகரத்தானவராய் இருப்பார் அந்த ஆணோ பெண்ணோ… பொழுதன்னிக்கும் சீட்டாடி இருக்கிற பணத்தைக் கோட்டை விட்டிருப்பார்.

ஹா, இந்த நிலைமையை நாங்கள் மாற்றிவிட்டோம். கட்டாயக் கல்வி என்று ஆன பின்பே இந்த நிலைமை நெறிப்பட்டு விட்டதாய்ச் சொல்லலாம். பாமரர் குறைந்து படித்தவர், மேன்மைக் குணமுடையோர் அதிகரித்திருக்கிறார்கள் இப்போது. சனங்கள் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறதில் இந்த எழுத்தாள சாதிக்கும் ஒரு மரியாதை வந்திருக்கிறது. ‘புகழ்பெற்ற எழுத்தாளர்களும், ஒழுக்க எழுத்தாளர்களும்’ என ஹொரேஸ் வார்போடல் ஒருமுறை பட்டியலிட்டார். அப்படி முயற்சிகள் இப்போது ஒரு என்சைக்ளோபிடியா அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஒரு பட்டம் பெற்றால், அது எத்தனை சின்ன அரங்கில் கிடைத்தாலும் அந்த எழுத்தாளனுக்கு கொம்பு முளைச்சாப்போல. இப்படி அடையாள அங்கீகாரங்கள் அவர்களுக்கு பிற எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு விரைப்பை, நிமிர்வைத் தர வல்லவை.

சில சமயம் நான் நினைக்கிறதுண்டு… இந்த பிரபுக்களின் அவை, அந்த அமைப்பையே ஏறக்கட்டிவிடலாம். இலக்கியத்தை ஒரு தொழில் என ஆக்கி, அதில் அந்த எழுத்தாளன், அவன் மனைவி, குழந்தைகள்… இவ்வளவே என்று முறைப்படுத்தி விட்டால் புண்ணியம். இதில் உரிமை என்று பின்கொண்டாட்டங்கள் எதுவும் தேவையில்லை என்பதை மொத்த நாடுமே எழுந்துநின்று கைதட்டி வரவேற்கும் என்பதில் ஐயம் இல்லை. நிறையப் பேருக்கு இப்படிப் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்த பின் வாரிசுகளாக, நட்புவட்டமாக மிஞ்சுவது என்ன என்று பார்த்தால், சேர்ந்திசையில் பாடும் உதிரிப் பாடகிகள், பந்தயக் குதிரைகள். அப்பிடியும் பணம் மிச்சமிருக்கிற இந்த மகாத்மாக்கள் ‘செமின் டி ஃபெர்’ ஆட்டத்தில் விட்டுவிடுகிறார்கள். (செமின் டி ஃபெர் – விடுதிகளில் ஆடும் சூதாட்ட சீட்டாட்டம். நடுவில் பேங்க்கரை வைத்துக்கொண்டு இருவரோ அதற்கு மேலோ ஆடுவார்கள். விரித்துக்கிடக்கிற ஒன்பது சீட்டுகளில் மூன்றோ அதற்கு மேலோ தம் கையில் வைத்திருக்கிறவர் வெற்றிவாகை சூடுகிறார்.)

இந்த சமூக ஆர்வலர்கள் வேறு உருப்படியான வேலை எதாவது செய்யலாம். அவர்கள் இயல்பாகவே வந்த ஊக்கத்தினால், தமக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறெதுக்கும் தகுதி கிடையாது என நம்பித் தொலைக்கிறார்கள். இந்தக் காலம் புனரமைப்புக் காலம் அல்லவா? நான் சொல்வதை தயவுசெய்து அமல்படுத்திப் பாருங்கள். ஆங்கில இலக்கியத்துக்கு புண்ணிம்.

எழுத்தாளர்களை வகைப்படுத்தி அவரவர் தரத்தை, ஸ்தானத்தை வெளிச்சப்படுத்திப் பாருங்கள். சின்ன வட்ட எழுத்தாளர்களுக்கு அதற்குத் தக்க வட்டத்தில் புழங்க இடம் இருக்கத்தான் இருக்கும். அவர்கள் ஒருபக்கம் நாட்டாமை செய்யட்டும். இலக்கியத்தில் பெரியவர்கள், மேதைகள், அவர்களது வாரிசுகள் எழுத்துத்துறையில் பத்திரிகையாளர்களாகவும், நாடகாசிரியர்களாகவும் பதவி பேணிப் பரிமளிக்கட்டும். புனைவு என்பது எழுத்தரசர்களின் அந்தப்புரம் என ஆகட்டும். புனைகதை இலக்கியம் ஆகச் சிரமமான வேலை என்பது தெரிந்த விஷயம்தான். அதற்கும் நிறைய நல்ல நாவல்கள் வாசிக்கக் கிடைக்கத்தான் செய்கின்றன. நிறைய என்றால் ரொம்ப நிறைய கிடைக்கின்றன. போதும் அவை. இனியும் அதில் பயிலவோ முயலவோ வேலையில்லை, என்றே சொல்லுவேன்.

புனைவு என்பது காவியமாகத்தான் மிஞ்சிக் கிடக்கிறது. இதன் தாத்பரியம் புரியவில்லை. வெறும் ‘பெல்லெஸ் லெட்டர்ஸ்’, அதாவது மயக்கும் வர்ணனைகள் அளவிலேயே ருசிதட்டுகிறது நாவல். துட்டு கொட்டித் தருகிற அம்சம் அதில் இருக்கலாம். ஆகவே, இதன்மூலம் அந்தப் புனைகதையாளர்கள் ஒரு பந்தா பாவனையோடு வாசகரிடையே வலம் வரவும் கூடுகிறது. பேர் கிடைக்கிறது. புகழுக்கும் பஞ்சமில்லை.

இலக்கியத்தின் மகுடம் என்றால் கவிதை என்பேன். இலக்கியத்தின் உச்சமும், இலக்கும் கூட அதுவே. மனித ஆத்மாவின் ராகம். நம்மிடம் உள்ள அழகியலின் ரசனையின் மொட்டுவிரிதல் அது. சாதனை அது. ஒரு கவிஞன் பேச ஆரம்பிக்கும்போது, கதாசிரியன் பின்னுக்கு ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். நமது முழு உடல், பொருள், ஆத்மா… எல்லாவற்றையும் அவன், கவிஞன் ஒன்றுமில்லாதடிக்கிறான்.

… அதனால், தயவுசெய்து மேதைகளிடம் கவிதைகளை விட்டுவிடுங்கள். அதை அவர்கள் செய்யட்டும், மற்றவர்களை அங்கே அனுமதிக்காமல் நாம் பார்த்துக்கொண்டு, அவர்களை, மேதைகளை மேலும் போஷிக்க வேண்டும்… அத்துமீறி நுழைபவர்கள் தண்டனைக்குட்படுத்தப் படுவார்கள், என்று எச்சரிக்கை பலகை வைத்தாலும் தப்பே இல்லை. தண்டித்தாலும் தவறே இல்லை. கலையின் உச்சம் அது, என்றால் அது கலையின் உச்சபட்ச மேதைகளால் கையாளப்பட வேண்டாமா? குப்பனுக்கும் குப்பை பொறுக்குகிற சுப்பனுக்கும் அங்கே என்ன வேலை?

ஆக இங்கேயும் சிறப்புத் தகுதிகள் கொண்டாடப்பட வேண்டும். அலக்சாண்டரின் பின் வாரிசுகளைப் போல, இந்த மேதைகளின் வாரிசுகள் இந்த இலக்கிய உச்சத்தின், கவிதைகளின் சாம்ராஜ்யத்தை ஆளாளுக்குப் பிரித்துக் கொள்வார்கள்… தங்கள் தங்கள் தனித் திறமைகளாலும், வழிவழியாக வந்த பாரம்பரியச் செழுமையாலும் அவர்கள் கோலோச்சுவார்கள். அதாவது, மான்செஸ்டர் மன்னர்கள் ஒருமாதிரி ஒழுக்கம்சார்ந்த, தர்ம சிந்தனைகளைக் கிளர்த்துவர்ர்கள் எனில், வெஸ்ட்மினிஸ்டர் வேந்தர்கள் தேசத்தின் கடமைகளை, பொறுப்புகளை முன்னெடுக்கும் கவிதைகளை வார்ப்பார்கள். நம்ம தேவன்ஷைர் தேவதைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் காதல் கவிதைகள் புனையக் கூடும்! அத்தோடு துக்கத்தையும் கலந்து, கடுக்கென மதுவாக வழங்கக் கூடும். மார்பலோ மகேஸ்வரர்களின் கவிதைகளோவெனில் சராசரி வாழ்க்கை பற்றிய யதார்த்தங்களை மகிமைப்படுத்தும். இல்லறமே நல்லறம். ஒருவனுக்கு ஒருத்தி. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்… என அவர்கள் ஒருபக்கம் எழுதட்டும் பக்கம் பக்கமாக.

அட பரவால்லப்பா, என்கிறீர்கள். அத்தோடு ஒரு கொக்கியும் போடுகிறீர்கள் என்னிடம். அந்த மேதைகள்… அவர்களிடம் சில கோளாறுகள் இல்லாமல் போகுமா? சில சமயம் அவர்களும் கொஞ்சம் நடை தடுமாறித்தானே ஆகிப் போகிறார்கள்?… தேசத்துக்காக நான் கவிதை எழுதுகிற போது, தேசத்தின் சட்ட திட்டங்களை நினைத்துக்கொண்டு நான் எழுதுவது இல்லை, என்றான் ஒரு பேரறிவாளன்… அவர்கள் அப்படிச் செய்வது தப்பில்லையோ, என்பது உங்கள் கருத்து. ஆகவே அப்படியே குற்றப் பார்வையுடன் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள் என்னிடம்.

மனித அந்தராத்மா பல்வேறு மடிப்புகள் கொண்டது. ஒருநிலையில் அடங்காமல் சஞ்சரிக்கக் கூடியது, அதன் அலையடிப்புகளுக்கு, அதன் ஆசை அபிலாஷைகளுக்கு சட்டம் போட முடியுமா?… என்று என்னைக் கேட்டால்… இதைபற்றி நான் முன்பே யோசித்து வைத்திருக்கிறேன்… விஷயம் அந்த மேதைகளின் சீமாட்டிகளைப் பற்றியதாகும். ரொமேக்னாவின் சம்சாரிகள் ‘தார்க்வடோ டஸ்ஸோ’ போன்ற தெம்மாங்குகளை தங்கள் காதலிகளுக்கு என்று காற்றில் உலவ விட்ட காலம் காலாவதியாகி விட்டது ஐயா. குழந்தை ஆர்னால்டின் தொட்டிலுக்குக் குனிந்து திருமதி ஹம்ஃப்ரி வார்ட் சேர்ந்திசைக் கொண்டாட்டமாய் தாலாட்டு பாடிய காலமும் மலையேறிவிட்டது.

இந்தக் காலத்தை அனுசரித்து மாற்றங்கள் தேவையாய் இருக்கின்றன. ஆகவே இனி நம் இல்லத்தரசிகள் இப்போது தாலாட்டுகள், பாலர் பாடல்கள் புனையலாம் என்பேன். மேடையேறுகிற தினுசுகளை, (ஸ்ட்ராபெரியுடன் ஒய்ன் தழைகளைக் கலந்து குடிக்கிறது சிலருக்குப் பிடிக்கிறதே, என்ன செய்ய!) இசைஹாஸ்ய மெட்டுகளை அரங்கங்களுக்கும், ஹாஸ்யப் பத்திரிகைகளுக்கும் பிறர் எழுதிக்கொள்ளட்டும்.

கவிதையில் இன்னொரு தினுசு இருக்கிறது. வெடிப்பெட்டிகளிலும், கிறிஸ்துமஸ் மற்றும் விசேஷநாள் வாழ்த்து அட்டைகளிலும் கவிதை எழுதுவோர் உளர். எப்படியும் இவர்களும் பிரித்தானிய சனங்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் தானே? தனி அந்தஸ்தும் மரியாதையும் அவர்களுக்கு கவிஞன் என்று அளித்து வருவதை நாம் விட்டுவிட வேண்டும்.

சரி நம்ம கதையைப் பார்ப்போம். இந்த சனி மதிய விருந்துகளின் போதுதான் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது, நம்ம திரிஃபீல்ட், அவருக்கு ஒரு சமூக கௌரவம் இருக்கத்தான் இருந்தது. ஒரு இருவது புத்தகங்கள் வரை அப்போது அவர் எழுதியிருந்தார். அதில் பெரிசாய் வரும்படி என்று அள்ளாவிட்டாலும், நல்ல மரியாதை கிடைத்திருந்தது. ஊர்ப் பெரிய நீதியரசர்கள் அவற்றைப் பாராட்டினார்கள். அவர் வீட்டில் விருந்துண்ண வந்தவர்களும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் இந்தாள் பெரியாளாகி விடுவார், என ஒத்துக்கொண்டார்கள். இந்தப் பக்கமாய் இப்படியோர் அருமையான எழுத்தாளர் இருக்கிறார் என்பதைக் கண்டுகொள்ளாததில் அவர்கள் சனங்களைத் திட்டினார்கள். ஒராளை உயர்த்திப் பிடிக்க கூட இருக்கிற ஆளை எத்து புட்டத்தில், என்று அவர்களின் தாத்பர்யம். திரிஃபீல்டுடன் ஹோதாவில் இருக்கிற சமகால பிற நாவலாசிரியர்களைப் பற்றி மட்டமான அபிப்ராயம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இந்த இலக்கியக் குழுக்களை வைத்து நான் யோசித்துப் பார்த்தால், (அடிக்கடி திருமதி பார்த்தன் திரஃபோர்ட், திரிஃபீல்ட் இல்ல விருந்துகளுக்கு வந்து போவாள்.) அவள் கணிப்பில், ரெண்டாவது நிலையில் பின்னே வந்துகொண்டிருக்கிற திரிஃபீல்ட் இப்போது தம் பிடித்து மல்லுக்கட்டி முதல் நிலைக்கு ஓடிவர வேண்டிய காலகட்டம் இது, என்பதை உணர்ந்தேன். கூடிய விரைவில் அவர் அதைச் சாதித்து விடுவார் என நம்பினேன்.

இந்த பார்த்தன் திரஃபோர்ட், இவளை முதலில் நான் சந்தித்தபோது எனக்கு அவளைப் பற்றி ஒரு அபிப்ராயமும் கிடையாது. எங்க ஊர்ப்பையன், என்று திரிஃபீல்ட் அவளிடம் என்னை அறிமுகப் படுத்தினார். இங்க மருத்துவம் வாசிக்கிறான்… என்னைப் பார்த்து அவள் சிரித்த சிரிப்பு கொஞ்சலாய் இருந்தது. பாப் சாயர் பத்தி என்னவோ மெல்லச் சொன்னாள். ரொட்டியில் வெண்ணெயிட்டு நான் நீட்ட, வாங்கிக்கொண்டாள். மீண்டும் திரிஃபீல்ட் பக்கமாய்த் திரும்பிப் பேச ஆரம்பித்து விட்டாள்.

என்றாலும் அவளது இருத்தல் அங்கே உணரப்பட்டது, என நான் புரிந்துகொண்டேன். அதுவரை ஒரே கூத்தாய் இரைச்சலாய்ப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென வாய் மூடிக்கொண்டார்கள். ரகசியக் குரலில் நான், யார் அவள், என்று கேட்டேன். ஐய இவளையா தெரியாதுன்றே, என்கிற மாதிரி என்னைப் பிறர் பார்த்தார்கள். அவள் நிறைய எழுத்தாளர்களை மேலே ஏத்திவிட்டிருக்கிறாளாக்கும். அவ நினைச்சால் களிமண்ணைப் பிள்ளையாராக்குவாள்.

ஒரு அரை மணி அங்கே அவள் இருந்தபின் எழுந்துகொண்டாள். தனக்குப் பரிச்சயமானவர்களோடு கைகுலுக்கி விடைபெற்றாள். மென்னகையுடன் அந்தக் கூடட்த்தில் இருந்து ஒதுங்கி வெளியே போனாள். திரிஃபீல்ட் வாசல் வரை கூடப்போய் அவளை சாரட்டில் ஏற்றிவிட்டார்.

அப்போது திருமதி பார்த்தன் திரஃபோர்டுக்கு வயசு ஐம்பது இருக்கும். சதைபோடாத சின்ன உருவம். ஆனால் கையும காலும் சாட்டை சாட்டையாய். அதனால் அவள் சிரம் உடம்புக்கு ஒட்டாத அளவில் பெரிசாய்த் தோன்றியது. கம்பியான வெண் சிகை, தலையில் அது கிரீடமிட்டிருந்தது. சின்ன வயசில் ரொம்ப சாத்விகமான, இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா ரகமாக இருந்திருப்பாள், என்று எண்ண வைத்த தோற்றம் அது. பளிச்சென்ற கருப்பு சில்க் உடை. கிளிஞ்சல்களும் பாசிகளும் கோர்த்த மாலைகள்.

அவளது இள வயசு மண வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை என்று கேள்விப்பட்டேன். பிறகு இப்போது பார்த்தன் திரஃபோர்டோடு பிரியமாய் ஈருடல் ஓருயிராய் வாழ்ந்து வருகிறாள். அவர் ‘ஹோம் ஆஃபி’சில், (ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில்) குமாஸ்தா. கற்கால மனிதர்களைப் பற்றி அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது…  இந்த திருமதி திரஃபோர்ட்  நல்ல மொழுமொழு, உடம்பில் எலும்பே இல்லையோ என்றிருக்கும் பார்க்க. அவளை ஒரு கிள்ளு கிள்ளினால் (அவள் அந்தஸ்துக்கும், அவள் பெண் என்பதற்கும், என் வயசுக்கும் – அட, இதெல்லாம் சாத்தியமா என்ன!) அட கற்பனைதானே, அவளை ஒரு கிள்ளு கிள்ளிப் பார்த்தால் விரல்கள் தொட்டுக்கொள்ளும். அந்தக் கையைப் பாருங்கள், எலும்பற்ற ஜெல்லி மீன்… அவள் முகத்தில் மூக்கு கண்ணு நெற்றி எல்லாமே பெரிசு பெரிசு, என்பதை விட்டுவிடுங்கள், அந்த முகம், மகா குழைவு அது. அவள் உட்கார்ந்தாளானால் முதுகெலும்பு இல்லைபோலவே அமர்ந்தாள். ஒரு பொதுக் சோபாபோல சதையடைத்துக் கிடந்தாள் அவள். அலங்காரமாய் ஃபிரில் வைத்த பொதுக் சோபா.

மென்மையின் திருவுருவம் அவள். அந்தக் குரல் மென்மை. அந்தப் புன்னகை மிருது. சிரிப்போ மெத்து. அந்தக் கண்கள் இதம். சின்ன வெளிறிய விழிகள். ஒரு பூ மலர்ந்தாப்போன்ற கண்கள் அவை. வெப்பகாலத்து மழைபோல அவள் அத்தனை ஹா-சுவாசம் அளிக்கிறாள். இத்ந அபூர்வங்களினால் அருமைகளினால் அவள் எல்லாருக்குமே அரிய சிநேகிதியாகி யிருந்தாள். அதனாலேயே அவள் அங்கே அத்தனை மதிப்பும் அந்த அடையாளமும் பெற முடிந்தது.

மொத்த லோகமுமே அவளுடன் நட்பு பாராட்டிய அந்த மகா மேதையான நாவலாசிரியரை, ஆங்கிலம் அறிந்த அத்தனை ஆத்மாக்களின் ஆதர்ச புருஷர் அல்லவா அவர்… அவர் மரணத்தை சில வருடங்களுக்கு முன்னால் ஓர் அதிர்ச்சியுடன் எதிர்கொள்ள நேர்ந்தது. திரிஃபீல்ட் அவளுக்கு எழுதிய ஏராளமான கடிதங்களை மக்கள் அறிந்திருந்தார்கள். அன்னாரின் மரணத்திற்குப் பிறகு அவள் அதையெல்லாம் தனி நூலாக வெளியே கொண்டுவந்தாள்.

அதில் ஒவ்வொரு பக்கத்திலும் அவளது அழகை அவர் வியந்து கொண்டாடியிருந்தார். அவளது முடிபுகளை அவர் எத்தனை மரியாதையுடன் கவனித்துக் கேட்டார் என்பதும் அதில் காணக் கிடைத்தது. தன் எழுத்தில் அவள் தந்த ஊக்கம் எத்தனை மகத்தானது, அதற்கு அவர் எத்தனை  நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்பதை விளக்க அவரிடம் வார்த்தைகள் இல்லை. அவர்மீது அவள் காட்டிய பரிவு, ஆதுரம்… அவளது அணுகுமுறைகள், ரசனை… திருமதி பார்த்தன் திரஃபோர்டே வாசிக்கச் சிணுங்குகிற சில நெகிழ்ச்சியான வார்த்தைகள் அதில் இருந்தால், அதுகூட இப்போது பிறத்தியார் வாசிக்கையில் அலாதி ஆர்வத்தைத் தூண்ட வல்லதாய் இருந்தது. தத்துவம், பண்பாடு என்று பேசித் திரியும் சிலரின் விமர்சனங்களை திரிஃபீல்ட் துரதிர்ஷ்டவசமாக பின்னாளில் எதிர்கொண்டார். ஆனால், திருமதி பார்த்தன் திரஃபோர்ட் இந்த ஆபாச சலசலப்புக்கெல்லாம் ஒடுங்கிவிடாத பெருந்தன்மைக்காரி.

திரிஃபீல்டும் சளைக்கவில்லை. கற்கால மனித கோடாரிகளைப் புறந்தள்ளி, கல்லெறிபட நேரலாம் என்பதையும் ஒதுக்கிவிட்டு, அவர் ஒரு நாவலில் எழுதினார். அமரரான ஒரு நாவலாசிரியனின் வாழ்க்கை போல் அமைந்த அந்த நாவலில் அவர் ஒரு எழுத்தாளனின் எழுத்து மேன்மைகளும் மேதமைகளும் எத்தனை தூரம் அவனது காதலியிடம், மனைவியிடம் அடங்கியிருக்கின்றன, என ஒப்புதல் வாக்குமூலமாகவே அது அமைந்தது.

தனது நெருங்கிய இனிய நண்பர், எழுத்தாளர் ஒரே ஒருவருடன் அவளது இலக்கிய ஆர்வம், கலைதாகம் உள்ளமுங்கி விடவில்லை. அதைவிட அதிகமான புகழ்போதை அவளிடம் இருந்தது. புத்தகப் புழு அவள். அநேகமாக சின்னதான படைப்பைக்கூட தரமானதானால் அவள் கண் தப்ப விடவில்லை. எந்த இளம¢ எழுத்தாளரிடம் விஷயம் இருந்தாலும் அவள் உடனே மோப்பம் பிடித்து, அந்த நபருடன் சிநேகம் பாராட்டத் தவறியதே இல்லை. அவளது குணமே அப்படி. வாழ்க்கையே அப்படி. காலப்போக்கில் அவளது பார்வையை, பரிவை எல்லா எழுத்தாளருமே ஏற்கத் தலைப்பட்டாயிற்று. அவளுக்கு அந்த விபரம் தெரியவும் தெரியும். இலக்கிய போஷகி. கிரியாவூக்கி. புதிய திறமைகளைத் தேடி அவள் இலக்கியக் காட்டில் அலைந்து திரிந்தாள்.

எதையாவது அவள் வாசித்து ஹா, சொன்னால் போதும், திரு பார்த்தன் திரஃபோர்ட், அந்தாளுக்கு இலக்கியத்துக்கும் வெங்காயத்துக்கும் வித்தியாசம் தெரியாது, உடனே அந்தப் படைப்பாளிக்கு தன் இல்லத்தில் விருந்துண்ண வரும்படி கடிதம் எழுதிப்போட்டார். விருந்துக்குப் பின் அவர் தன் ‘ஹோம் ஆஃபி’சுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. ”எனக்கு நேரமாச்சி… நீங்க இவளோட பேசிட்டிருங்க. சந்தோஷப்படுவாள்” என்று அவர் கிளம்பிப் போனார். எத்தனையோ பேர் இப்படி வந்து போனார்கள். அவர்களுக்கு அங்கே ‘எதோ’ கிடைத்தது, ஆனால் அது போதவில்லை. கோவில் பிரசாதம் போல. அந்தப் பெண்மணிக்கு ஒரு நளின வசிகரம் இருந்தது, அதை அவள் நம்பினாள். அதில் ஒரு ஈர்ப்பை அவளால் ஸ்தாபித்துக்கொள்ள முடிந்தது.

அட அந்த கவிஞர் ஜாஸ்பர் கிப்சன், அவள் பிடியில் இருந்து நழுவப் பார்த்தார். ஹா, அவளிடமாவது…

ஒரே ராத்திரியில் பிரபலமாகிற எழுத்தாளர்களை சரித்திரத்தில் நாம் பார்த்துத்தான் இருக்கிறோம். ஆனால் சமீப காலங்களில் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. நம்ம விமரிசகர்களும் ஒராள் உலகத்துக்கு வந்தவுடன் தூக்கியெடுத்து உச்சி முகர்ந்துவிடுவது இல்லை. தாக்குப் பிடிக்கிறானா, நின்னு விளையாடுகிறானா… என்று அவர்கள் பொறுமை காக்கிறார்கள். சனங்கள் தாங்களே முடிவு செய்து பிடித்த எழுத்தாளர் என்று இல்லாமல் தற்செயலாக வைரப் புதையலைக் கண்டடைய வேண்டியிருக்கிறது.

ஆனால் ஜாஸ்பர் கிப்சன் குபீரென்று விட்டத்தில் தெளிவாகப் பாய்ந்து சர்க்கஸ் வெளிச்சத்துக்கு வந்தான். இப்போது அவனை எல்லாரும் மறந்தே விட்டார்கள் தான்.  அவனை இந்திரன் சந்திரன்னு வானத்துக்குத் தூக்கித் திரிஞ்சவர்கள் எல்லாரும் இப்ப வார்த்தையொடுங்கிப் போனார்கள். பழைய செய்தித்தாள்களில் அவர்களின் கணிப்புகள் இன்னும் பாதுகாப்பாக தூங்குகின்றன. என்றாலும் அந்த கிப்சன் தனது முதல் கவிதைத் தொகுதியில் எழுப்பிய புழுதி நம்ப முடியாத சமாச்சாரம். பரிசுக்குழுவில் தேர்வுக்கு இருக்கும் ஒரு புத்தகம் அளவுக்கு இந்தப் புத்தகத்துக்கு விமரிசனங்களை பத்திரிகைகள் வெளியிட்டன. பிரபலமான பெரிய விமர்சகர்களே அதைப்பற்றி ஆகா ஓகோவென்று ஆர்வத்துடன் எழுதினார்கள்.

அவரா? அவர் மில்டனைப் போல, சந்தம் அத்தனை அருமை என்றார்கள். படிமங்களைப் பாரப்பா, இந்தாள் கீட்சின் வாரிசு… என்றார்கள். புனைவில் அவர் சிருஷ்டிக்கும் கனவு உலகத்தை வைத்து ஷெல்லி என்றார்கள் சிலர். இதைச் சாக்கிட்டு தாங்கள் கேலியாடும் சில கவிஞர்களை அவர்பேரைச் சொல்லி கில்லியடித்தார்கள்… ஏ இவர் வந்தாச், நீவிர் இடத்தைக் காலி செய்க… இதில் டென்னிசன் பிரபுவுக்கு புடடத்தில் உதை கிடைத்தது. ராபர்ட் பிரௌனிங்கின் வழுக்கைத் தலை குட்டுப்பட்டது.

ஜெரிகோ சுவர் போல சரசரவென மக்கள் சரிந்தனர். ஜாஸ்பர் கிப்சனின் தொகுதி பல பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்து விற்றுத் தீர்ந்தன. எங்கும் எங்கெங்கும் அவர் கொடி பறந்தது. மேஃபேர் பிரதேச சீமாட்டிகளின் படுக்கையறை அலமாரிகளில் அவரது அழகான பதிப்புகள் அலங்கரித்தன. பட்டி தொட்டிகளிலெல்லாம், லான்ட்ஸ் என்ட் முதல் ஜான் ஓ க்ரோட்ஸ் வரை விகாரேஜ்களின் வரவேற்பறைகளில் அவை இடம் பிடித்தன. கிளாஸ்கோ, அபிர்தீன், பெல்ஃபாஸ்ட் நகர பண்பாளர்களின், குணசீல வணிகர்களின் கூடங்களில் தவறாமல் அவற்றைக் காண முடிந்தது. ஒரு நல்ல பதிப்பாளரிடமிருந்து விக்டோரியா மகாராணி சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதியைப் பெற்றுக்கொண்டதும நடந்தேறியது. பர்த்தியாக அவள் கவிஞருக்கு அல்ல, பதிப்பாளருக்கு ‘லீவ்ஸ் ஃப்ரம் எ ஜேர்னல் இன் தி ஹைலெண்ட்ஸ்’ (மேட்டுக்குடி இதழின் பக்கங்கள்.) பரிசளித்தபோது தேசமே ஹா என்றது.

இதெல்லாம் சட்டென, இமை சிமிட்டும் நேரத்தில் நடந்தேறின. ஹோமர் பிறந்த இடம் என்று கிரிசில் ஏழு ஊர்கள், தாங்களே என முட்டி மோதின அல்லவா? ஜாஸ்பர் கிப்சனின் பிறந்த ஊர் வால்சால் என்பது யாவரும் அறிந்ததே. ஈரேழு ஊர்கள் அவரை நாங்களே அடையாளங் கண்டோம் என்று மல்லுகட்டின. ஒராள் அடுத்தவரை ஒட்டியும் வெட்டியும் மை தீரும்வரை எழுதியானது. ஒரு 20 வருஷங்கள்போல கோலோச்சி வரும் பேர்போன எழுத்துப் பிரமுகர்கள் கடுமையாக இந்த விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். உலகமே அந்த கருத்து யுத்தத்தை சிரத்தையுடன் அவதானித்துக் கொண்டிருந்தது.

மகா பிரபலங்களின் விதவைமாரும், விருந்து என்றும் தேநீர் என்றும் அவரை அழைப்பு மேல் அழைப்பு எய்தவண்ணம் இருந்தார்கள். அரசாங்க மந்திரிமாரின் மனைவிகளும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. பிஷப்களின் விதவைச் சீமாட்டிகளும் இந்த வரிசைக்கு வந்தார்கள்.

ஹாரிசன் எய்ன்ஸ்வொர்த் தான் நாம் அறிந்தபடி இந்தமாதிரி எழுத்தாள சாதியில் மேல் அந்தஸ்து பெற்று சீமான்களின் சீமாட்டிகளின் நல்லாதரவு பெற்று அவர்களோடு கூடிக் கலந்து விருந்து என பிரசித்திபெற்ற மகானுபாவன். அப்போது அது புதுசு. அந்த சந்தர்ப்பத்தில் அவரது பதிப்பாளர் அலட்சியமாய் விட்டுவிட்டார். எய்ன்ஸ்வொர்த்தின் புத்தகங்களை கன கவர்ச்சியாய் வெளியிட்டு காசாக்கி, மேல்வர்க்க அலங்கார வஸ்துவாக அதை ஆக்கத் தவறிவிட்டார்… என்பதில் எனக்கு ஆச்சர்யமே.

… எது எப்பிடியானாலும் நம்ம ஜாஸ்பர் கிப்சன் தான் முதன் முதலில் ஓபரா மற்றும் உச்சஸ்தாயி பாடகரின் முகவரி அட்டைகளிலும் ‘அட் ஹோம்’ என கூட இடம் பிடித்த முதல் எழுத்தாளர்.

 

தொடரும்

storysankar@gmail.com

Series Navigationசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *