இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

This entry is part 22 of 31 in the series 19 பிப்ரவரி 2012

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன.

எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, யதார்த்தம் அல்லது புனைவுசார்ந்த நிகழ்வுகளின் தொகுப்பாக கதையாடல்கள் அறியப்படுகின்றன. இதில் நிகழ்வுகளின் வரிசைமுறையும், காலப்பிண்ணனியும், திரும்ப சொல்லப்படும் முறையியலும் விவரணை செய்பவனின் மனநிலையும், பிரதியில் எழுப்பப்படும் குரலும் முன்னுக்கு வருகின்றன. உரையாடலுக்கும், நிகழ்வுகளை திரும்ப எழுத்துக்குள் உரையாடல் செய்து கதையாடலாக உருமாற்றுவதற்கும் இடையில் நிரந்தர உறவு எதையும் கூற முடியாது. என்றாலும் நிகழ்வு, விவரணை, உரையாடல் இம்மூன்றும் கதையாடல் பிரதியை தீர்மானம் செய்பவையாக அமைகின்றன.

உலக மக்களுக்கான விடுதலையை தரவந்த சமய அரசியல் தத்துவங்கள் கதையாடல்கள் முழுமையும் திரும்பத்திரும்ப தன்னுள் அதிகாரத்தையே கட்டமைத்துள்ளன. வாழ்வின் திசைவழிகளில் நம்பகத்தன்மையை இழந்துவிட்டனவாகவும் காட்சி தருகின்றன. வரலாற்றில் உருவான எல்லா பெருங்கதையாடல்களையும் சிதைக்கும் வகையில் அதற்கு இணையத்தளத்தில் எதிர்க்கதையாடல்கள் உருவாகி வந்துள்ளன. இந்த வகையான எதிர்க்கதையாடல்களின் ஒலியை முத்துமோகனின் எழுத்துலகம் தன்னுள் நிரப்பிவைத்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் சார்ந்த நீண்டநெடிய தத்துவ மரபுகளை விவாதிக்கும் வேளையில் வைதீகவேதாந்த அதிகார மரபுக்கு மாற்றான எதிர்மரபுகள் குறித்து ந.முத்துமோகன் உரையாடுகிறார். அது பௌத்தம் பற்றியதாக இருக்கிறது பூர்வாங்க நிலையிலிருந்து அயோத்தி தாசரின் தமிழ் பௌத்தம் இந்தியச் சூழலில் அம்பேத்கரின் தலித்பௌத்தம் என்பது வரை நீண்டு விரிந்து படர்கிறது. தத்துவக்களத்தில் சாருவாகம், சாங்கியம், சிராமணம், சித்தர்மரபு, அய்யா வைகுண்டர் சிந்தனை, இஸ்லாம், சீக்கியம் என சாதீயத்திற்கும், சனாதனத்திற்கும் எதிரான கதையாடல்களை மிக வலுவோடு வைதீகத்தோடு மோதிச் சாய்க்கிறது.

மேற்குலகம் கண்டறிந்த கோட்பாட்டு வடிவங்களை தமிழ் சூழலுக்குள் எந்தவகையான மதிப்பீடுமின்றி தாராளமயமாய் இறக்குமதி செய்யும் அறிவுத்துறையினரிடத்தில் உரையாடலைத் தொடர்வது ந.முத்துமோகனின் பிறிதொரு களமாகும். அமைப்பியல், பின் அமைப்பியல் சார்ந்த அணுகுமுறை நவீனத்துவ கதையாடலுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதாக இது தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. உள்மனம், அந்நியமான மனம், பிறழ்மனம் என்பதான உள்ளுலகங்களில் அதிகம் கவனம் செலுத்திய இருத்தலியம், சாரியலிசம் கோட்பாடுகளை விமர்சனத் தொனியோடு அணுகுவதும், சசூர், லெவிஸ்ட்ராஸ், மிகையில் பக்தீன் வழியாக மொழி, தொன்மங்கள், நாட்டார்கதைகளை பயில்வதற்கான வெளியினை உருவாக்குகிறது. இதில் ஆதிக்க சாதிப் பண்பாட்டு சிதைவுக்கு மாற்றாக அடித்தள மக்களின் கூட்டுப் பண்பாட்டு வடிவங்களும் ஒடுக்கப்பட்ட அறிவின் விடுதலையும் முன்னுக்கு வருகின்றன.

மார்க்ஸுக்கு பிறகான மார்க்ஸியம் என்பதான எல்லையில் நிகழ்ந்த தேடுதலில் பலப்பல பின்மார்க்ஸிய சிந்தனையாளர்கள் பற்றிய மூடுதிரை விலக்கப்படுகிறது. பிரதேச அடையாளங்களோடு ஒற்றைப்படுத்தப்பட்ட வடிவத்திலிருந்து மார்க்ஸியம் தன்னை மீட்டெடுத்துக் கொண்டது. எந்தவித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமான உரையாடலாக நிகழ்கிறது. பிரெஞ்சு மார்க்ஸியம், ஹெர்பர்ட் மார்க்யூஸ் அல்தூசரின் மனிதநேய மார்க்ஸியம், அந்தோனியா கிராம்ஷியின் பண்பாட்டு மார்க்ஸியம், பின்நவீனத்துவவாதிகளுடனான மார்க்ஸிய விவாதம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் புதுவகை வடிவில் ஜனநாயகத் தன்மையை மிக அதிகம் உள்வாங்கிக் கொண்ட வெகுஜன மார்க்ஸியம் என்பதாக இந்த அறிமுகங்கள் நீளுகின்றன. இந்திய, தமிழகச் சூழலிலே மார்க்ஸியத்திற்கும் அம்பேத்கருக்குமான உரையாடலிய தொனியில் மார்க்ஸிய தலித்தியம் என்பதான கருத்தியலுக்குள் வந்தடைவதான வாசிப்பையும் உணரலாம். பொருளாதார வாதமாக குறுக்கப்படாமல் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தையும் விடுதலைக்காக பயன்படுத்தக் கோரும் முறையியலாகவும் இதனை அணுகலாம். இது பிராமணீய, மற்றும் உயர்சாதி, இடைநிலை சாதி அதிகாரங்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் எதிரான போராட்ட வடிவமாகவும் முன்னெழுந்து செல்வதற்கான சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன.

தத்துவம், பண்பாட்டுத் தளங்களில் பாய்ச்சிய அதிவேகமும் உக்கிரமுமிக்க பார்வையை நவீன தமிழ் இலக்கிய விமர்சன வெளிக்குள்ளும் ந.மு. செயல்படுத்தியுள்ளாரா என்பது ஒரு கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. இது படைப்பிலக்கிய ரீதியாக பாரதி, பாரதிதாசன், ரகுநாதன், பொன்னீலன் என தமிழ் எழுத்தில் பன்மியஅடையாளங்களை பேச முற்படுகின்றன. எனினும் நவீன தமிழ் எழுத்தில் கோணங்கி வரையிலானவர்களின் படைப்பாக்க புதிர்களையும், அந்தபடைப்பு பிரதிக்குள் உள்ளுறைந்து கிடக்கும் பண்பாட்டு அரசியலையும் அகழ்ந்து பார்ப்பதற்கான சாத்தியங்களை வாசகன் எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே. தமிழ் சூழலில் சோவியத் இலக்கியங்கள் ஒரு இடதுசாரி மனத்தை கட்டமைத்த வரலாற்றைப்போல் லத்தீன் அமெரிக்க, கறுப்பின இலக்கியங்கள் தமிழ் சூழலில் தீவிரமாக வினைபுரிந்து வந்துள்ளன. இதன் எதிரொலிப்பாகவே தஸ்தாவேஸ்கியையும், மார்க்ஸையும் மிகவும் நுட்பமான முறையில் தமிழ் சூழலுக்குள் படைப்பிலக்கியம் வழியாக விவாதப்படுத்துகிறார்.

ந.முத்துமோகனின் ஆய்வியல் அணுகுமுறையில் வெளிப்படும் முறையியலை கட்டுடைத்தல் என்றும் சொல்லலாம். வைதீகத்தின் மீதான எதிர்வினையை இந்த உத்தியின் வழி கட்டவிழ்ப்புச் செய்து புனைவு நீக்கம் செய்கிறார். பிரம்மஞானம் குறித்த அவரது உரையாடலை இதற்கு மாதிரியாகச் சொல்லலாம்.

பிரம்மமே முழு முதல் உண்மை, நிரந்தரமானது, அதை அறிவதின் மூலம் சகலத்தையும் அறியலாம் என்பதான கருத்தியல்களை முன்வைப்போரை நோக்கி கேள்வி எழுப்புகிறார். சகலத்தையும் அறியலாம் என்றால் பிரம்மத்தால் மலம் அள்ளுவதை செய்ய முடியுமா பிரம்மத்திற்குள் சலவை தொழிலாளி வெட்டியானின் அறிவு வருமா, பனை ஏறுபவனின் ஞானம் அடங்குமா, பதனீரை கருப்புக்கட்டியாக்கும் அறிவுவருமா, சட்டிப்பானை செய்தல், தச்சுவேலை, கட்டிடவேலை செய்தல், மீன்பிடித்தல், படகு கட்டுதல், கால்நடைத்தோலை செருப்பாக, பறையாக செய்தல் அடங்குமா என்பதாக கட்டவிழ்ப்புச் செய்கிறார். பிரம்மம் குறித்த பேராண்மை நொறுங்கிவிழும் சப்தமும் கேட்கிறது.

வேள்வியில் பலியிடும் விலங்கின் உயிர் சொர்க்கத்திற்கு செல்லுமெனில் வேள்வி செய்பவன் தனது தந்தையை பலியிட்டு அவ்வுயிரை ஏன் சொர்க்கத்திற்கு அனுப்பவில்லை என சாருவாகர்கள் எழுப்பும் குரலையும் பதிவு செய்கிறார். வைதீக சனாதன அதிகாரங்களை கட்டவிழ்ப்பின் மூலம் அம்பலப்படுத்தும் அதே வேளையில் மைய நீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிந்தனை ஒட்டங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் விளிம்பு நிலை குறித்த அக்கறையை எழுப்புகிறார். ரிக்வேதத்தில் இடம்பெறும் ‘முனி’ ஆசிவகர்கள், மகாவீரருக்கு முந்தைய தீர்த்தங்கரர்களாக இருக்கலாம் என்றும் அனுமானிக்கிறார். சிராமணர்களை முண்டக உபநிடதத்தில் குறிப்பிடப்படும் தலைமயிரை மழித்த துறவிகள் வேதத்தை மதிக்காதவர்கள் பிராமணர்களுக்கு அறக்கருத்தை போதித்தவர்கள் என்பதாகவும் மதிப்பீடு செய்கிறார்.

மக்காவிலிருந்து தமிழகத்திற்கு

ந.முத்துமோகனின் மற்றுமொரு விவாதக்களம் இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, மதிப்பீடு சார்ந்ததாக இருக்கிறது. இஸ்லாம் ஏகத்துவம் பழைய தமிழகம், இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஏற்றங்களும் இறக்கங்களும், சீக்கியமும் இஸ்லாமும், அ.மார்க்ஸின் நான் புரிந்துகொண்ட நபிகள் பற்றிய விமர்சனம் உள்ளிட்ட ஆய்வுரைகள் இஸ்லாம் குறித்த மதிப்பீட்டை முன்வைக்கின்றன. இவற்றில் ஒன்று அராபியச் சூழலில் இஸ்லாம் சமயத்தின் தோற்றம் குறித்த தரவுகளாகும். இதற்கு பேராசிரியர் நிசாமி, அக்பர் எஸ் அகமது, பேரா. முகமது ஹபீப் போன்ற சிந்தனையாளர்களுடன் மார்க்ஸிய மூலவர்களில் ஒருவரான பிரடெரிக்கு ஏங்கெல்ஸ் இஸ்லாம் குறித்து முன்வைத்த கருத்துக்களையும் விவாதிக்கிறார்.

ஏழாம் நூற்றாண்டில் அராபிய நாட்டில் இனக்குழு வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் பகுதியினரையும், வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு செல்வம் ஈட்டிவந்த நகர்புற மக்கள் பகுதியினரையும் ஒன்றிணைத்த சமயமே இஸ்லாம். இனக்குழு மதிப்பீடுகளான கூட்டுணர்வு, புராதன சமத்துவம், ஒழுக்கவாழ்வு லட்சிய சமய வடிவங்களாக உருவாகின. நகர்புற வாழ்வுக் கூறுகளான செயல்பாட்டுத்தன்மை, செல்வம் ஈட்டுதல், உலகியல் இன்பம் துய்த்தல் முன்னுக்கு வந்தன. இவ்விரு வகையான வாழ்க்கை மதிப்புகளுக்கிடையிலான சமநிலை விலகலும் முரண்பாடு ஏற்படுவதன் சிக்கலும் நிகழ்த்திய மோதல்களின் வரலாறே அராபியர் வரலாறு. அரசு எந்திரம் தோன்றியிராத காலம், அரசியல் ரீதியான நிர்பந்த அமைப்பு இன்றி, ஒழுக்க, சமூகரீதியாக மக்களை ஒன்றுபடுத்த முகமது நபிகள் முயன்றார். என்பதான ஏங்கெல்ஸின் மதிப்பீட்டையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

பேரா. கே. ஹெச். நிசாமியின் ஆய்வியல் நோக்கில் சொல்லப் போனால் முன்னூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு கடவுளர்களை உருவ அடிப்படையில் வணங்கி வந்த பெடோயின் இனக்குழுக்களுக்கிடையில் உருவமற்ற ஒரே கடவுள் கொள்கையை முன்வைத்தது பிளவுபட்டுக்கிடந்த அராபிய இனக்குழுக்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் உபாயமாகவே இஸ்லாம் திகழ்ந்தது. இது இறையியல், உலகியல் என்கிற இரு கருத்தோட்டங்களையும் நடைமுறையில் ஒன்றிணைத்த செயல்பாடாகவே கருத முடியும் என்கிறார்.

அக்பர் எஸ் அகமது ஒன்றே கடவுள் என்ற கருத்து சமய அர்த்தம் தாண்டி சமூக உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. பல்வேறு விதமான பிளவுகள், பிரிவுகளிலிருந்து ஒரே சீரான தன்மைக்கும் குழப்பத்திலிருந்து ஒழுங்கினை நோக்கியும், வேற்றுமையிலிருந்து ஒற்றுமைக்குமான ஒரு பயணமாகவே கருதுகிறார்.

பேரா. முகமது ஹமீப் வரலாற்று பொருளியல் அணுகுமுறை சார்ந்து ஒரு கருத்தாடலை பேசுகிறார். இந்துமாக்கடல் நாடுகளுக்கும், மத்தியதரைக் கடல் நாடுகளுக்கும் இடையிலான சகல வணிக தொடர்புகளையும் கொண்ட வணிக நகரம் மெக்கா. அங்கு குறைஷி இன மெக்காநகர குடும்பங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சண்டையிட்டு வாழ்ந்ததும், பெடோயின் இனக்குழு மக்களை தாழ்ந்தவர்களாக எண்ணியதும் நிகழ்ந்தது. புராதன இனக்குழு சட்டங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகளைக்கொண்டு வாழ்ந்ததும், வெவ்வேறு தெய்வ உருவங்களை வழிபட்டு வாழ்ந்ததையும் முகமது நபிகள் மாற்றத் துணிந்தார். முகமது நபிகள் மெக்காவை தலைநகராகக் கொண்டு செய்த பத்தாண்டுகால ஆட்சி, அராபிய இனக்குழு மோதல்களை ஒழித்து, சமத்துவ, வர்க்கங்களற்ற சமூகத்தை உருவாக்க முனைந்தது என்பதும் ஷரீஅத் சட்டங்கள். மத்தியகால சூழல்களில் சிறந்தவையானதாகவும், அற்புத நிர்வாக கட்டமைப்பை கொண்டதாகவும் அமையப்பெற்றிருந்தன.

அராபியச் சூழலில் இஸ்லாத்தின் தோற்றத்திற்கான உள்முகக்காரணங்கள் விவாதிக்கப்படும் வேளையில் இதற்கான புறக்காரணங்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் விவாதங்களின் வழியாக ந. முத்துமோகன் இதை உரையாடல் செய்கிறார். இஸ்லாத்தின் தோற்றத்தை மத்தியத் தரைக்கடல் நாடுகளில் கத்தோலிக்க அரசுகள் நடத்திய ஆட்சியின் கொடூரங்களுக்கான எதிர்வினையாக மதிப்பிடலாம். கத்தோலிக்கர்களால் சிரிய மக்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டபோது எல்லா கிறிஸ்தவ பிரிவினரையும் இஸ்லாமியர் சகிப்புணர்வுடன் அங்கீகரித்தனர். ஆபிரிக்க நாடுகளில் ரோமானிய ஆட்சிக்கு எதிராக பெர்பர்களுடன் அராபியர் ஒன்றிணைந்து ஸ்பெயினை வெல்வதற்கு உதவி புரிந்தனர். கி.பி. 3 முதல் 15ம் நூற்றாண்டுவரை ஐரோப்பிய வரலாற்றில் கத்தோலிக்க கிறிஸ்துவம் நிலவுடமை ஆதிக்கம் செலுத்திய நிலப்பரபுக்களை ஆதரித்த கருத்தியலாகவும், உலகமறுப்பு, துறவை நிறுவனப்படுத்தி லட்சியமாக உருவகப்படுத்திய சமயமாகவும் அறியப்பட்டது. இஸ்லாமோ யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் புனித நூலின் மக்களாக ஏற்று அறிவித்து அவர்களையும் தன் சமயவட்டத்திற்குள் உள்ளிழுத்துக் கொண்டது.

இவ்விவாதங்களின் வாயிலாக ந. முத்துமோகன் இஸ்லாத்தின் தோற்றம் குறித்த தனது மதிப்பீடுகள் சிலவற்றை முன்வைப்பதை உற்றுநோக்கலாம். இதனை தமிழகத்தின் சங்ககால உருவாக்கத்தோடு ஒப்பியல் அடிப்படையிலும் அனுமானிக்கிறது. இனக்குழு உறவுகள் உடைபட்டு உடமை உறவுகள் தோன்றியதும், நிலம், திணைசார் இனக்குழுத் தலைவர்களின் யுத்தமும் இதனோடு அடங்கும். சங்கம் மருவிய காலத்திலே சமண பௌத்தம் சமயங்கள் செல்வாக்கு பெற்றதும் நீதி இலங்கியங்களான திருக்குறள், நாலடியார் உள்ளிட்டவை அறவியலைப் பேசியதும், வஞ்சி, கொற்கை, புகார் கடற்கரை நகரங்களில் வணிகக்குழுக்கள் வலுப்பெற்ற காலமாகவும் இருந்துள்ளது. அரபு நாட்டில் வெற்றிபெற்ற யூதம் கிறிஸ்தவம் போன்ற ஓரிறைச் சமயமாக உருவான இஸ்லாம் ஏகத்துவ இறையியலையும், வணிக அறவியலையும் இணைத்துப் பேசியது.

அன்பு, ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம்தான் ஓரிறைக் கொள்கையின் உள்ளடக்கம் என விளக்கம் கூறினாலும் பூர்வீக இனக்குழு அடையாளங்களை ஓரிறை சமயக் கொள்கைகள் இல்லாமல் ஆக்குகின்றன. இதில் இஸ்லாமும் விதிவிலக்கல்ல என்பது முனைவர் ந. முவின் நிலைபாடாகக் கருதலாம் மற்றொரு கருத்தியலாக, சனநாயகம், சமூகநீதி, பல்சமய யதார்த்தத்தை அங்கீகரிக்கும் அதேசமயம் அவரவர் மதங்களுக்கு உள்ளே பன்மிய கலாச்சாரக்கூறுகளுக்கு நெகிழ்வான இடம் வழங்கப்பட வேண்டும் என்பதாகவும் அவர் விவாதிக்கிறார்.

சூபியத்தின் பயணம்:

இரண்டாம் கட்ட நிலையில் ந. முத்துமோகனின் அணுகுமுறை இஸ்லாத்தின் போக்குகளிலிருந்து உருவான சூபிசக் கோட்பாடு பற்றியதாக அமைந்திருக்கிறது. அரபுச் சூழலில் நபிமுகமதுவிற்கு பிறகு உருவான கலீபாக்கள் எனப்படும் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அரசின் உருவாக்கம் நிகழ்கிறது. உமய்யாத், அபாசித்துகளின் ஆட்சிக்காலத்தில் பேரராசாக உருமாறுகிறது. இக்காலத்தில் தோன்றிய சமூக ஏற்றத்தாழ்வு அதிகார வர்க்கத்தின் தோற்றம், சுரண்டல், வன்முறை, அதீத உலகியல் நுகர்வுவாதம் உள்ளிட்ட சமூக அரசியல் நிலைமைகளை விமர்சித்தும், எதிர்த்தும் அல்லது அவற்றிலிருந்து விலகி ஒதுங்கியும் சூபியசப் போக்குகள் உருவானதாக இந்த மதிப்பீட்டினை முன்வைக்கிறார்.

ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உமய்யாத் பேரரசு காலத்தில் நிகழ்ந்த சூபியத்தின் தோற்றத்திற்கான சமூக அரசியல் காரணங்கள் குறித்து பீட்டர் ஜே. அவுன் விளக்குகிறார். சூபியிச மறைஞானம் தோன்ற ஆன்மீக விவகாரங்கள் காரணமாக இல்லை. மாறாக உமய்யாத் அரசாட்சியும் சமூக அரசியல் மாற்றங்களுமே தீர்மானகரமான பங்கினை வகித்தது. உமய்யாக்களின் அதீத உலகியல் ஈடுபாட்டிற்கு எதிர்விளைவாகவும் குர்ஆனின் பூர்வீக மதிப்புகளுக்கு திரும்பச் செல்லுதலாகவும் பணவெறி, அதிகாரவெறியை முதன்மையாகக் கொண்ட உலகியல் வாழ்வை மறுத்து அதன்வழி சுத்த இறைக்குருத்தை அணுகிச் செல்ல முடியும் என நம்பிக்கையின் விளைவாகவுமே சூபியத்தை குறிப்பிடுகிறார்.

உலக மறுப்பு, முகமதுநபி வாழ்வு போதனையை நேரடி வழிகாட்டுதலாக கொள்ளுதல், இறைக்கருத்துடன் தனிப்பட்ட நெருக்கம் என சூபியக் கொள்கையின் மூன்று முக்கிய அம்சங்கள் கூறப்படுகின்றன. இறையியல், உலகியல் இரண்டிற்குமிடையிலான சமநிலையை இஸ்லாம் உருவாக்க முயன்றது. கூடவே இஸ்லாமே உலகியலை விட்டு விலகிய இறையியலாக (மறைஞானக் கொள்கையாக) தோற்றம் எடுத்தது என்பதான மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன.

சூபியரின் வாழ்வின் உண்மைகளோடு இக்கூற்றை உரசிப்பார்த்தால் அவை முழுமைபெற்ற வாதமாக கருதமுடியாது. ஏனெனில் சூபிகளில் பெரும்பான்மையினர் இறைநேசத்தையும் மனிதகுல நேசத்தையும் இணைத்தே பேசுகின்றனர். அடித்தள மக்களுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ளனர். படைப்பிலக்கிய வடிவங்களான இசைக் கதைகள் வாயிலாக பண்பாட்டு அறவியலை உரையாடல் செய்துள்ளனர். தத்துவ நிலைசார்ந்த கருத்துப் படிமங்களையும் பேசுகின்றனர். இந்நிலையில் சூபிகளைப் பொறுத்தமட்டில் மனிதகுலத்திற்கு உள்ளிருத்தல், பிறகு விலகுதல், தனித்திருத்தல், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திரும்பவும் மனிதகுல மக்கள் வாழ்வோடு ஒன்றிணைதல் என்பதான சுழற்சியை கண்டுணரலாம். அதிகாரம் செலுத்தி ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகும் தன்மை சூபிகளிடத்தில் கிடையாது. எனவேதான் ஆட்சியாளர்களின் அதிருப்திக்கும், அடக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்டார்கள். உம்ய்யாத் அபாசித் ஆட்சியாளர்களோடான மோதல் போக்கை சூபிகள் கையாண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டில் துஅல்þநன் அல்மிஸ்ரி நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். 910ம் நூற்றாண்டில் அபாசித் ஆட்சிக்காலத்தில் சூபி அல்ஹல்லாஜ் எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டார். இப்பின்னணியில் மறுத்தலின் மறுத்தல் இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையில் இஸ்லாத்திலிருந்து முதல் மறுத்தலாக இறையியல் உலகியலில் ஒருமைநிலையில் முரண்பாடு ஏற்பட்டு சூபியம் உருவானது என்கிறார். இந்தியச் சூழிலில் சூபியத்திலிருந்து இரண்டாவது மறுத்தலாக சீக்கியம் உருவானதாக மதிப்பீட்டினையும் முன்வைக்கிறார்.

இந்தியாவில் சூபி ஞானியர்கள் வழியாகவே முதலில் இஸ்லாம் பரவத் தொடங்கியது. அரபு வணிகத் தொடர்புகளும், படையெடுப்புகளும் இஸ்லாத்தின் அறிமுகத்தை இன்னும் தீவிரப்படுத்தின. கிபி 8ம் நூற்றாண்டில் மேற்கு மாநிலங்களான சிந்து, பஞ்சாப் பகுதிகளுக்கு அராபியரின் வருகையும், அரபு பாரசீக பகுதிகளிலிருந்து ஏராளமான சூபிகள் வருகை தந்ததும் நிகழ்ந்தது. வடமேற்கு இந்திய மாநிலமான பஞ்சாப் எப்போதுமே அந்நியர் ஆக்ரமிப்பிற்கு பலியான முதல் பகுதியாக இருந்து வருகிறது. வேதாந்தம், சமணம், பௌத்தம், அராபியர், துருக்கியர், மங்கோலியர் என பல்வேறு சமய தத்துவங்களும், இனங்களும், மொழிகளும், பஞ்சாபின் மண்ணிற்கு சொந்தமானதாக மாறியும் உள்ளது.

குரானில் முகம் புதைத்து இறைவனை இறைஞ்சுகின்றனர். டாக்டர் முஜீப் இஸ்லாம் சீக்கியத்திற்கும் இடையே நிலவிய பொதுப்பண்புகளை வரிசைப்படுத்தும் கருத்தியலை ந.முத்துமோகன் மேற்கோள் காட்டுகிறார். உலகின் உள்ளீடாகவும், உலகைக் கடந்து விளங்கும் கடவுள் மீது நம்பிக்கை, உருவமற்ற கடவுளை ஏற்பதும் உருவ வழிபாட்டிற்கு எதிர்ப்பு, கூட்டு வழிபாடு, கூட்டு வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது, உலகியல், ஆன்மீகவியல் வாழ்வுகளுக்கிடையே ஒருமையை ஏற்படுத்துதல், சகல மனிதரும் சமம் என்ற உணர்வை பரப்புவது என்பவையாக அவை அமைந்துள்ளன.

பேரா. ரொமிலாதாப்பர் சூபிகளின் வரலாற்றைப் பற்றி குறிப்பிடுகையில், பாரசீக சூபிகள் சிந்து, பஞ்சாப், பின்னர் அங்கிருந்து குஜராத், தக்காணம், வங்கம் வரை பரவியதை விவரிக்கிறார். பாரசீக சூபிசம் இந்தியப் போக்குகளுடன் கலந்ததையும், இந்திய மண்ணில் சந்யாசம், மறைஞானவாதம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருந்தவர்கள் சூபியிசத்தாலும் கவர்ந்திழுக்கப் பட்டனர். பக்தி இயக்கத்தில் கணிசமான செல்வாக்கை சூபியிசம் செலுத்தியதும் மறைஞானிகள், துறவியர் வரிசையில் சூபியஷேக்குகளும் இடம்பெற்றதும் நிகழ்ந்தது.

ந.முத்துமோகன் சீக்கியத்தின் தோற்றுவாய் குறித்து ஆய்வு செய்கையில் சூபியியம், மறைஞானியர் மரபிலிருந்து முக்கியத் துவக்கம் கொண்டதாகவும் ஆனால் அது உலக மறுப்பை ஏற்கவில்லை என்றும், கடவுள் மட்டுமின்றி உலகம், மனிதன், செயல்கள் அழகுமயமானவை, மாயை, நிலையாமை கோட்பாட்டுக்கு எதிராக தீவிர உலகவாழ்வு, சமூகவாழ்வு விமர்சனம், எதிர்மறை சக்திகளை எதிர்த்துப் போராடுதல் என்பதான கருத்தாக்கங்கள் கொண்டிருப்பதை விளக்கம் செய்கிறார்.

இந்தியாவிற்குள் சமூக பொருளாதார பண்பாட்டுத்தாக்கத்தை இஸ்லாம் எங்ஙனம் நிகழ்த்திகாட்டியது என்பது குறித்தும் கவனப்படுத்த வேண்டியுள்ளது. இந்து இந்தியாவில் இஸ்லாம் அமைதி வழியில் ஒருபுறமும், வன்முறையுடன் மறுபுறமும் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தின. நகர்புறம் சார்ந்த, வர்த்தக பரிமாற்றம் மேலெழுந்த, தொழிற்கூறுகள் உருவாகின. இத்தோடு இந்திய அடித்தள சமூகப் பிரிவினர் மேல்நோக்கியும் சமதளத்திலும் உயர்ந்து சென்றனர். விலக்கப்பட்டவர்களான தீண்டாமையால் பாதிக்கப்பட்ட தீட்டு சாதியினர் புதிய சூழலில் சமூக உற்பத்தி அமைப்பினுள் நுழைந்தனர்.

பேரா. ஹபீப் இந்தியாவிற்குள் பத்து முதல் பதினாறாம் நூற்றாண்டு காலத்தில் இஸ்லாம் நிகழ்த்திய தாக்கங்களை பெருளாதார வகைப்பட்டவை மற்றும் பண்பாட்டு வகைப்பட்டவை என பிரித்து ஆய்விடுகிறார். இந்திய விவசாயம் பண்ட மாற்றுதன்மை கொண்ட பொருளாதார உறவாக இருந்தது. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமது விரிவிதிப்பு முறைகள் மூலம் இவற்றை பணப்பரிமாற்ற உறவுகளாக வளர்த்துள்ளனர். இந்திய கிராமிய பொருளாதார வாழ்வில் தனியுடமை உறவுகள் உருப்பெற உதவின. கைவினைஞர், கட்டிடதொழில்கலைஞர்களின் உருவாக்க நிகழ்வில் பிரமாண்ட கட்டிடங்களும், நினைவுச் சின்னங்களும் எழும்பின. இதன் விளைவாக உலகியல் ரீதியான செயல்பாட்டுத்தன்மை முக்கியத்துவம் பெற்றது. சீக்கியத்தை தோற்றுவித்த குருநானக்கின் காலம் கிபி 1469 1539க்கு இடைப்பட்டதாகும். கி.பி. 1206ல் இஸ்லாமியர்களின் அடிமை வம்ச ஆட்சிக்குப் பின் 1526களில் பாபர் முதலானோரின் மொகலாயர் ஆட்சி நடைபெற்றது. குருநானக் தன் பாடல்களின் மூலம் மொகலாய ஆட்சியாளர்களின் வரிவிதிப்புகள், போர்கள், ஏழை எளிய மக்களின் துயரங்களை வெளிப்படுத்தினார்.

கோபம் கொண்ட புலி ஒன்று / பலவீனமான ஆட்டு மந்தைக்குள் பாயும்போது எனது ஆண்டவனே யானாலும் / எதிர்த்துநின்று / நான் கேள்வி கேட்பேன்.

லோடி வம்ச ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்ட போது அதற்கான பரிவுக்குரலை குருநானக் எழுப்பினார்.

முகமதிய பக்கீர்களும் இந்துமத சாதுக்களும்

புறக்கணிக்கப்பட்டு விட்டனர்
சாத்தான்கள் மந்திரம் ஓதுகின்றன
முஸ்லிம் பெண்கள் துன்பம் தாளாமல்

குரானில் முகம் புதைத்து இறைவனை இறைஞ்சுகின்றனர்

இறைவா பிணங்கள் குவிந்துகிடக்கும்
நகரத்தின் நடுவில் நின்று
நான் உன் புகழைப்பாடுகின்றேன்

லோடி வம்ச ஆட்சியையும் பாபரின் படையெடுப்பையும் கண்டனம் செய்த குருநானக் அரசர்களை கொலைகாரர்களாக விமர்சித்தார்.

கலியுகம் தீட்டிய கத்திபோன்றது / அரசர்கள் கொலைகாரர்கள்

உண்மையும் நியாயமும் இறக்கை கட்டிக் கொண்டு

எங்கோ பறந்து போய்விட்டன.

சீக்கிய மத குருநானக்கும், அவரது சீடரும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்ய முன்வந்தபோது சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்துக்களையும், முஸ்லிம்களையும் விடுதலை செய்த பின்னரே தனது விடுதலை என தீர்க்கமாக கூறினார். சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்தத்தில் லோடி வம்ச ஆட்சியின் மீதான விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம்களின் சமயக்கடமைகளான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவை புறச்சடங்குகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன என்பதான விமர்சனத்தையும் சீக்கியம் முன்வைத்தது.

குருநானக் துவங்கி கடைசிமதகுரு கோவிந்த்சிங்வரை முஸ்லிம் ஆட்சியாளர்களுடனான முரண்பாடும், எதிர்ப்பும் தொடர்ந்தது. லோடி வம்ச ஆட்சியில் துவங்கி அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்கசீப் மன்னர்களின் ஆட்சியில்தான் இந்த முரண்பாடும், போர்களும் தீவிரம் கொண்டன. அக்பர் தவிர்த்த பிற மன்னர்களின் காலகட்டத்தில் சீக்கிய குருமார்கள் மீதான தாக்குதலும் போர்களும் நடந்தேறின. ஜஹாங்கீரின் அரசவைக் குறிப்பு ஆவணம் ஒன்று ஐந்தாவது சீக்கிய மதகுரு அர்ஜூன் சிங்கை இந்துமதத்தவர் எனக்கூறி ஏராள இந்துக்களை தன்னோடு இணைத்துக் கொண்டு மொகலாய ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. இதன் அடிப்படையிலேயே குரு அர்ஜூன்சிங் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப்பின் கொல்லப்பட்டார். கடைசி குரு கோவிந்சிங் மட்டுமின்றி இரு குழந்தைகளும் மொகலாய அரசர்களின் கைதிகளாகி கொல்லப்பட்டனர். சீக்கியர்களின் “கால்சா’ எனப்படும் போர்க்குணமிக்க அமைப்பின் உருவாக்கத்திற்கு மொகலாய, சீக்கிய மோதல் அடிப்படைக் காரணமாகவும் அமைந்தது.

முனைவர் முத்துமோகன் இவ்வாறாக இஸ்லாம் சீக்கிய உரையாடல்களிலிருந்து ஒரு வரலாற்றுண்மையை கண்டடைகிறார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தமது அரசியல், சமய ஆளுமைக்கு எதிரான சக்தியாக சீக்கியம் உருவாவதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில்தான் இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சிக்கு எதிராக கிளம்பிய இந்துசமய பண்பாட்டு எதிர்ப்பியக்கமாக சீக்கியத்தை மதிப்பீடு செய்தனர்.

இஸ்லாம் சீக்கியம் குறித்த உரையாடலில் தென்படும் முக்கிய அம்சம் இஸ்லாமிய மன்னர்கள், ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே சீக்கிய குருமார்களின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்லாமிய ஆட்சி சீக்கியம் பரவலை அரசியல் ரீதியான அச்சுறுத்தலாகவே கருதினர். இக்கால கட்டத்து சமயத் தலைவர்களும் மக்களிடமிருந்து விலகி ஆட்சியாளர்களுக்கு சேவகம் புரிபவர்களாகவே மாறிப் போயிருந்தனர். ஆனால் இதற்கு எதிர்திசையில் நடந்தேறிய சூபிய, சீக்கிய சிந்தனைக்களமும் செயல்பாட்டுதளமும் இந்திய வரலாற்றில் ஒரு வகையில் முக்கியமானதாகும்.

சூபிகள் எனப்படும் இஸ்லாமிய மறைஞானியர் இஸ்லாமிய மன்னர்கள் சார்ந்து நிறுவனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கோட்பாட்டிற்காகவும் செயல்பட்டவர்களல்ல. நிறுவனச் சமயவடிவமான இஸ்லாத்திற்குள் உருவானஅதிகாரங்களின் மீதான கேள்வியை எழுப்பியவர்கள் சூபிகள் இஸ்லாமிய அரசர்களின் செல்வ நாட்டம், ஆடம்பர வாழ்வு, சமய புறச்சடங்குகளை எதிர்த்து குரல் எழுப்பியவர்களாகவே இருந்தனர். இறைவனுக்கு மனிதருக்கும் இடையில் இடையாட்கள் தேவையில்லை என்றனர். சூபிகளின் ஆன்மீகமானது எளிய மனிதனால் பின்பற்ற முடியாததாக இருந்தாலும் சமூக வாழ்வியல் தளத்தில் சூபிஞானிகள் ஆட்சியாளர்களை விமர்சித்துள்ளனர். ஆட்சியாளர்கள் சூபிகளை கலகக்காரர்களாக கருதி நாட்டைவிட்டே வெளியேற்றி உள்ளனர். பதினொன்றாம் நூற்றாண்டிற்கு பின் இந்து þ முஸ்லிம் இணைவாக்க மறைஞான மரபு உருவானது. கபீர், ராமனந்தர், குருநானக் என இந்த மரபு தொடர்ந்தது.

இந்த மரபின் ஒரு அடையாளம்தான் சீக்கியமரபின் ஐந்தாவது குருவான குருஅர்ஜூன்சிங் பொற்கோவில் எனப்படும் ஹர்மந்திரை கட்டுவித்தபோது 1589ல் மியான் மீர் சூபிஞானிதான் ஹர்மந்திருக்கான அடிக்கல்லை நாட்டினார். குரு கோவிந்த்சிங் கடவுளை குறிக்க பயன்படுத்தியவற்றில் 25 அரபு பாரசீக சொற்களும் உள்ளடங்கும், சீக்கிய 10 குருமார்களின் சிந்தனை தொகுப்பான குருகிரந்தத்தில் கபீர், ரவிதாஸ், ராமானந்தர் வரிசையில் பாபாபரீத் எனப்படும் ஷேக் சையத் பரீத் சூபியின் பாடல்களும் இடம் பெறுகின்றன.

இவ்விவாதங்களிலிருந்து இஸ்லாத்தின் இருபக்கங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று இஸ்லாம் ஆட்சி அதிகாரம் சார்ந்து செயல்படும்போது வெளிப்பட்டுள்ள வன்முறையும் அடக்குமுறையும் சமய ஆதிக்கமும். மற்றொன்று சூபிகளின் வழியாக இஸ்லாம் கட்டமைக்கப்பட்டபோது நிகழ்ந்துள்ள சமத்துவம் சார்ந்த அடித்தள மக்கள் விடுதலையும், சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் சர்வாதிகாரத்திற்கு மாற்றாக சமய வழிப்பட்ட ஜனநாயகமும் என்பதாக இவற்றைக் கொள்ளலாம்.

நன்றி

தாமரை மாத இதழ் ஜனவரி 2012

Series Navigationதற்கொலையிலிருந்து கொலைக்கு …குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *