சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.

This entry is part 19 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று, சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கில், இரண்டு அமர்வுகளுடன் நடைபெற்றது மேற்சொன்ன விழா. காலை பத்து மணிக்கு க.நா.சுவின் மாப்பிள்ளையான பாரதி மணி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். மெல்லிய நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கட்டுரையை வாசித்தார் மணி. இந்திரா பார்த்தசாரதி தில்லி நினைவலைகளில் மூழ்கினார்.

முதல் அமர்வில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் பணி புரியும் தமிழவன் மற்றும் முனைவர் பஞ்சாங்கம் கலந்து கொண்டனர். தமிழவனின் உரை பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது. தமிழவன் கன்னட மொழியில் தமிழ் இலக்கியங்களை அங்கே அறிமுகப்படுத்துகிறார் என்பது ஒரு ஆச்சர்யத் தகவல். அவரது உரையிலிருந்து:

“ 50 வருடங்களாக கையாளப்பட்டு வந்த தமிழ் எழுத்து முறையை, க.நா.சு உடைத்தார். இன்னும் 100 வருடங்களுக்கு அவர் கொண்டு வந்த முறைதான் நிற்கும். ஆனாலும் ‘ க.நா.சு.வின் model தோற்றுவிட்டது ‘ என்று மாலனொரு கருத்து வைக்கிறார். க.நா.சு. இல்லையென்றால் கசடதபர, நடை, பிரக்ஞை, இவையெல்லாம் வந்திருக்காது. தமிழ் உலகளவில் ஒரு உயர்ந்த நிலைக்குப் போயிருக்காது. தமிழின் taste ஐ மாற்றியவர் க.நா.சு. வாசகன் – எழுத்தாளன் – விமர்சகன் என்கிற மூன்று கூறுகள் கொண்டது தமிழிலக்கியம் என்பது அவரது எண்ணம்.

தனக்குப் புரியாத ஒன்றைப் பற்றி அவர் விமர்சிப்பதேயில்லை. ஆனாலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இப்போது கூட புதுக்கவிதையில் ஞானக்கூத்தனிலிருந்து குட்டி ரேவதி வரை சில பகுதிகள் புரிவதேயில்லை. இருந்தாலும் ஒரு புரியாமையோடே, ஒரு ambiguityயுடனே தமிழ்ச் சமூகம் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. நமக்குப் புரியாத ஏதோ ஒன்று அதில் இருக்கிறது என்கிற நம்பிக்கையுடன் தமிழ்ச் சமூகம் பயணிக்கிறது.

எதையும் வாசித்து, புரிந்து கொண்ட பின்னரே, அது குறித்த விமர்சனம் வைக்கும் க.நா.சு. ஒரு முறை சொன்னார்: “ எனக்கு மார்க்சியமே தெரியாது. நான் எப்படி தெரியாத ஒன்றுக்கு எதிரியாக முடியும்? “ அதுதான் க.நா.சு.”

பஞ்சாங்கத்தின் பேச்சு தர்க்க ரீதியாக இருந்தது. சுவை குறைவு. பணம் சம்பாதிக்க எப்படி வேண்டுமானாலும் compromise செய்து கொண்டு இப்போது எழுதுகிறார்கள். அதனால் நல்ல இலக்கியம் அருகி விட்டது என்கிற கருத்தை முன் வைத்தார். எல்லோரும் கோடிகளைக் குறி வைத்து எழுத ஆரம்பித்து விட்டார்கள் என்றார்.

முதல் அமர்வின் தலைமையேற்று நடத்தும் பொறுப்பை ஏற்று, தில்லியிலிருந்து வந்திருந்தார் வடக்கு வாசல் ஆசிரியர் பென்னீஸ்வரன். க.நா.சு. தில்லியில் இருந்த காலத்தில், அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர் இவர். தில்லியில் சராசரி தமிழ் வாசகன் யாருக்குமே க.நா.சு.வைத் தெரியாது என்றொரு தகவலைத் தந்தார் அவர். பெரிய எழுத்தாளர், எந்தவித பந்தாவும் இல்லாமல், தெருவோரக் கடையில் டீயும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் என்றார்.

இரண்டாவது அமர்வின் தலைமை திருப்பூர் கிருஷ்ணன். நா.பா. இல்லாமல் தி.கி.யால் பேச முடியாது. முயன்றால் திக்கி விடுவார். இங்கேயும் அப்படியே.. சாகித்ய அகாடமி பரிசுக்கு க.நா.சு. பெயரை பரிந்துரைத்தவர் நா.பா. துணையில்லாமல் வர முடியாது என்று க.நா.சு. கடிதம் எழுதிய போது, அதற்கு ஒப்புதல் தந்த அகாடமியின் கடிதத்தை நேரில் கொண்டு கொடுத்தவர் நா.பா. இத்தனைக்கும் நா.பா.வின் படைப்புகளை கடுமையாக விமர்சனம் செய்தவர் க.நா.சு. பெண்கள் சமையலறையிலேயே அடைந்து கிடக்கக் கூடாது என்று எண்ணியவர் அவர். அதனால் காலை ஏழு மணிக்கே மனைவியுடன் சிற்றுண்டி சாப்பிட கிளம்பி விடுவார் க.நா.சு. இப்படிப் பலத் தகவல்கள்.

பெங்களூரிலிருந்து வந்த கிருஷ்ணசாமியின் உரையில் யதார்த்தம் அதிகம். க.நா.சு. பெங்களூர் வந்தால் அவர் வீட்டில்தான் தங்குவார். ஒருமுறை கி.சாமியின் பெண் தோழியை(?!) பார்த்து அவர் கேட்டாராம்: “ நீ வெறும் தோழி மட்டும்தானா? இல்லை வேறு ஏதாவதாக மாற வழியுள்ளதா? “ அந்தப் பெண் சொல்லியிருக்கிறார்:

“ இப்போதைக்கு தோழி மட்டும்தான். பின்னால் எப்படி மாறும் என்று தெரியவில்லை”

உடனே க.நா.சு. சொல்கிறார்: “ அவன் வேலை வெட்டி எதுவும் பார்க்காமல் இலக்கியமே வாழ்க்கை எனத் தேர்ந்தெடுத்தால், நீ உன் பெற்றோர் பார்க்கும் பையனைக் கல்யாணம் செய்து கொண்டு விடு. “ நான் இலக்கியத்தை விட்டு மத்திய அரசு வேலையில் சேர்ந்து விட்டேன். “(கிருஷ்ணசாமி)

சாகித்திய அகாடமி நல்ல நிர்வாகத் திறனுடன் கூட்டம் நடத்தியது. காலை அமர்வில் சுடச்சுட டீ, பிஸ்கட். மதியம் நல்ல சைவ உணவகதிலிருந்து மதிய உணவு என்று ஜமாய்த்து விட்டார்கள். செவிக்குணவும் வயிற்றுக்கு ஈந்ததும் செம டேஸ்ட்.

0

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சிம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *