இரு கவரிமான்கள் – 1

This entry is part 26 of 31 in the series 16 டிசம்பர் 2012
 

 

   நெடுங்கதை

கேன்டி வொய்ட் நிற வோல்ஸ்வேகன் பஸ்ஸட் கார் காற்றைக் கிழித்துக் கொண்டு சீறியப்படியே புறவழிச் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. காரினுள்ளே இருந்த ஜி.பி.எஸ்-க்கு அதிகம் வேலை இல்லாமல் மின்னி மின்னி ஒரே சீராக அம்பு பாய்வது போல வழி சொல்லிக் கொண்டிருந்தது.  ரமேஷ் சந்தோஷமாக விசிலடித்தபடியே லாவகமாக ஸ்டியரிங்கைப் பற்றியபடியே மனதுக்குள் மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். காலையில் அவசர அவசரமாக தாம்பரம் வரைக்கும் ஒரு முக்கிய காண்டிராக்ட் ஆர்டருக்காக வந்தவன் ,வந்த வேலை முடிவதற்குள்ளாகவேத் திரும்பிக் கொண்டிருந்தான்.அவனை இவ்வளவு அவசரமாக அழைத்து திரும்ப வைத்தது பைரவியின் மெசேஜ் தான் . மறுபடியும் பைரவி அனுப்பிய செய்தியை தனது கைபேசியில் பார்க்கிறான்.”ரமேஷ் உடனே எங்கிருந்தாலும் வா…பேசணும்..” என்று சிரித்தாள் பைரவி. மெசேஜ் பாக்ஸை  மூடியதும் “சாம்சுங் காலக்ஸி” சிரித்த பைரவியை காட்டி மறைந்தது.

“என்ன அழகு…..எத்தனை அழகு ..!
கோடி மலர்…கொட்டிய அழகு….
இன்றெந்தன் கை  சேர்ந்ததே….”

என்று பாடியபடி காரின் வேகத்தை அதிகரித்தான்..ரமேஷ்.

மற்ற எந்த வேலைகள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்துக்காகத் தள்ளி வைக்கலாம்….அதனால் அவனுக்கு சில லட்சங்கள்  மட்டும் தான் நஷ்டமாகும்…இப்போது பைரவி மட்டும் தான் அதி முக்கியம்…என்பதால்  அவள் அனுப்பிய செய்தியைக் கண்டதும் அடித்துப் பிடித்துக் கொண்டு காரை விரட்டிக் கொண்டிருந்தான்.என்ன விஷயமாயிருக்கும்? எங்கே சந்திக்கலாம்?  என்று அவன் மனம் முக்கிய இடங்களைப் பட்டியல் போட்டபடி இருந்தது. இறுதியாக மனதில் வந்து நின்றது..”தி கிராண்ட்..” ஹோட்டல்.

உடனே பைரவிக்கு அதைத் தெரிவித்து விரைவில் வந்துவிடுவேன்…. காத்திருக்கவும்…”பதில் மெசேஜ் கொடுத்து விட்டு…அவளை சந்திக்கும் ஆசையுடன்  அவனும் காத்திருந்தான். அத்தனை வேகத்திலும் கூட அவனுக்கு நேரம் மிக நிதானமாக நகர்வது போலிருந்தது.

பைரவி வளர்ந்து வருகிற திரைப்படப்  பின்னணிப் பாடகி என்பதையெல்லாம் தாண்டி வளர்ந்து விட்ட நிலையை தொட்டிருப்பவள். அடுத்தடுத்த புதுப் படங்களில் அவளை புக் செய்துவிட்டு ரெகார்டிங் செய்ய அவளது கால்சீட்டை எதிர்பார்த்து காத்திருந்தனர் பெரிய பெரிய இயக்குனர்கள். நாளும் பொழுதும் ட்ராக் பாட ஒவ்வொரு ரெகார்டிங் தியேட்டராக ஓடிப்  பாடி நேரமின்மையால் தவித்துக் கொண்டிருந்தாள் பைரவி. இந்நிலையில் அடுத்த மாதம் லண்டனில் நடக்க இருக்கும் ஒரு கலை நிகழ்ச்சிக்காக தன்னைக் கலந்து கொள்ளச் சொன்ன இயக்குனரிடம் “கண்டிப்பாக நடத்தித் தருகிறேன் ” என்று வாக்குக் கொடுத்துவிட்டு, தான் லண்டன்   செல்லப் போகும் விஷயத்தைச் சொல்ல  வேண்டும் என்ற ஆவலில் தான் ரமேஷுக்கு அந்த மெசேஜ் அனுப்பினாள் பைரவி.

இரண்டு மாதங்களுக்கு முன்னால்  பைரவி தன மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் செய்தவளாய் இருந்தாள் . அவளுக்கு அந்த பூரண சுதந்திரத்தை அவளது அம்மாவும் அப்பாவும் கொடுத்து ஊக்கப் படுத்தினர். அவளுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் அவளை ஆரோக்கியமாக வளர்த்து விட்டிருந்ததை எண்ணி அவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே.

இருபத்தி நாலு வயதில் திடீரென்று ஒரு திரையிசைப் பாடலில் பிரபலமாகி, அடுத்தடுத்து அனைத்துப் படப் பாடலிலும் அவளது குரல் தான் மேலோங்கி இருந்து திரையுலகில் தனி இடம் பெற்ற  பாடகியாக வலம் வருவது கண்டு  அவர்களே வியந்து ஆச்சரியப் பட்டனர்.

இப்போதெல்லாம் “ஏர்டெல் சூப்பர் சிங்கர் ” நிகழ்ச்சிக்கு நடுவராக பைரவி இருப்பதால் பணம்,பெயர் , புகழ் ,அந்தஸ்து என்று மரியாதைக்குப் பஞ்சமில்லாமல் ராஜவீதியில் யௌவன கர்வத்தோடு நடந்து கொண்டிருந்தாள் பைரவி. இதெல்லாம் ரமேஷை  அவள் வாழ்வில் குறுக்கிடாத வரையில் தான்.

என்று ரமேஷின் காந்தக்கண் இவளை இழுத்ததோ அன்றிலிருந்து அந்தப் பெரிய பாடகியில் மனதுக்குள்ளும் சலனம்….ஈர்ப்பு…சபலம்….

எனக் காதலுக்குண்டான லக்ஷணங்கள் அவள் மனத்துள் நுழைந்து பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அவள் பாடும் பல பாடல்கள் அவனுக்காகத்  தான் பாடுவதாகக் கூட நினைந்து குரல் நெகிழ்ந்து இன்னும் இனிமை சேர்த்தது. பைரவி அசப்பில் ஸ்ரீதேவியை  நினைவுக்கு இழுத்துக்  குரலால் வாணி ஜெயராமை அடையாளம் காட்டுவாள். எத்தனையோ பேர்களின்  வேட்டைக் கண்களுக்குத் தப்பிய‌ கவரிமான், ரமேஷ் வீசிய காந்த வலையில் விழுந்து சிக்கிக் கொண்டது.  அதன் பின்பு அவளுக்கு  எல்லாம் அவனாகிப் போனான் ரமேஷ்.

கலிஃபோர்னியா ஸ்டேட் யுனிவேர்சிட்டியில் விஸ்காம் படித்து விட்டு வந்த ரமேஷ் சொந்தமாக விளம்பரப் படங்கள் தயாரித்து வெளியிட ஆரம்பித்து இப்போது அவனுக்கென சொந்தமாக ஒரு தனி டி வி சேனலே வைத்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யும் அளவுக்கு உயர்ந்து விட்டான். மார்கெட்டில் லீடிங்கில் இருக்கும் அத்தனை பெரிய வர்த்தக விளம்பரங் களுக்கும் அவனே கான்ட்ராக்ட் எடுத்து படமாக்குவதோடு  அவனது சானலுக்குத்  தான் முதலில் என்ட்ரி கொடுப்பான். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல சென்னையில் பிரதான இடங்களில் இரண்டு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் வேறு. மாதம் முப்பது நாட்களும் லட்சங்களை  அலட்சியமாக அவனை எண்ணிச் சேர்க்க வைத்து , வாழ்க்கையை சுவாரசியமாக்கியது. அவனது பணத் தேவைகள் பூர்த்தியாகிய வேளையில் மனத்தில் புதிதாக நுழைந்து இசைத்த ராகம் தான் பைரவி.

இசைப்பிரியன், கலா ரசிகன்  ரமேஷின் பெற்றோர்கள்  கூட இசைக் கலைஞர்கள் தான். கர்நாடக சங்கீதமும், வீணையின் நாதமுமாக காதல் மனமும், கலப்புத் திருமணமும் அவர்களது இசை உலக வாழ்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கியது. அதற்கான  சாட்சியாக செல்லப் பிள்ளை ரமேஷ்.. அவனது அம்மா அவனது கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்து ” ரமேஷ்…உன் கல்யாணத்துக்கு பெண் பார்க்கப் போறோம்….உன் மனசில் யாராவது இருந்தால் சொல்… என்று கண்ணியமாகக் கேட்டாள் .
.
“அம்மா…என் வாழ்க்கையை பங்கெடுக்க வருபவள் இசையில் அல்லது பரத நாட்டியத்தில் பெரிய அளவில் பெயர் பெற்றவளாக கலையின் அருமை புரிந்தவளாக இருக்க வேண்டும்,அப்படி இருக்கும் ஒருத்தியைத் தான் நான் உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவேன்.  அவளை நானே பார்த்து, ரசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆசை….அது வரை நீ கொஞ்சம் எனக்காக விட்டுக் கொடேன்…” என்று கெஞ்சியதும்….சரி தான்…சரி தான்….அப்பாவுக்குத் தப்பாமல் தான் பொறந்திருக்கே…ன்னு புன்னகைக் கொடியை காட்டினாள் .

அதீத கற்பனா  சக்தியும், இசையில் மனம் லயித்த நாட்டமும், நாட்டியத்தில் ஆசையும் ஆவலும் கொண்ட மனமாக அவன் கண்ட கனவெல்லாம் பைரவியாக  அவன் வாழ்வில் நுழைந்த தருணம்….. தன்னையறியாமல் ரமேஷ் ஆனந்தத்  தாண்டவமாடினான்.அவளை முதன் முதலாக சந்தித்த போது ..”இவள் தானா…இவள் தானா…. எதிர்பார்த்த பெண்மானும் இவள்தானா…” என்று அவனது ஆத்மா மகிழ்வோடு  பாடியது..

வலை விரிக்காமல் கொக்கி போட்டு காத்திருக்காமல், ஒற்றைக் காலில் கொக்கைப் போல நின்று தவமிருக்காமல் ராகமாலிகாவாக  தானாகவே இதயத்தோடு இணைந்தவள் பைரவி.  இவளைவிடச்  சிறந்தவளாக இன்னொருத்தியும் இந்த உலகத்தில் பிறந்திருப்பாளா …. என்ன…? வாழும் காலம் வரை இவளோடு பெருமையாக வாழ வேண்டும்…என்று மனதுக்குள் முடிச்சும் போட்டுக் கொண்டான் ரமேஷ்.

வாகினி ஸ்டுடியோ விற்கு ஒரு வேலையாக சென்று திரும்பும் நேரம் பார்த்து தனக்கெதிராக மின்னலாக  பைரவி எதிர்ப்பட்டாள் . ஒரு நொடி பார்வை பரிமாற்றம் மட்டும் மனதை,… உடலை.., உலுக்கியது.ஆனந்த அதிர்ச்சி. ..அவனுக்குள் ஏற்படுத்த,  பைரவியோடு  பேசும் பொன்னான  தருணத்தை திட்டம் போட்டு உருவாக்கினான்.

அவன் தீட்டியபடியே  ஒரு நாள் தன்னை பைரவிக்கு அறிமுகப் படுத்திக் கொண்டு அப்படியே ஒரு மெகா சீரியலுக்கு “டைட்டில் ஸாங் ”   நீங்க தான் பாடணும் ….”மாட்டேன்னு சொல்லிடாதேங்க…இந்த சீரியல் கிட்டத் தட்ட மூணு வருஷம் என்னோட சானல்ல  ரெகுலரா.வரும் ..உங்க குரல் டைட்டில்ல கிடைச்சால்…..”டி.ஆர்.பி. ரேடிங் கிடைக்கும். இது தாய்க்குலத்தைப் பெருமை படுத்தற சீரியல்….உங்களுக்கும்  சின்னத்திரையில் ஒரு லிப்ட் கிடைக்கும்…என்று சொல்லியபடியே வெற்றுச் செக்கில் கையெழுத்துப் போட்டு உங்களுக்கு எவ்ளோ வேணுமோ போட்டு எடுத்துக்கோங்க….நோ ப்ராப்ளம் …..ஆனால் பாட்டு உங்கள் குரலில் தான். என்று சொல்லி விட்டு சட்டென்று நகர்ந்தான்.

அவனது கண்ணிய அப்ரோச் பிடித்திருந்தாலும், தயக்கத்துடன் அந்த செக்கைக் கையில் வாங்கியவள்…இதைக் காரணம் காட்டி இவரோடு இன்னொரு முறை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்… என்று நினைத்தாள் . அவள் மனமும் அவன் பின்னே சென்றதை அவளே அப்போது அறிந்திருக்கவில்லை.அவனும் அவளைப் பிடித்துப் போடத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடத் தவற வில்லை.

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் ஒன்றை விட்டு ஒன்றாக ஏதோ ஒரு விதத்தில் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்ட போது அவர்களையும் மீறி நட்பாகி அதுவே பைரவியின் மனதுள் மனதுள்  காதலாகி கனிந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் பைரவியின் பிறந்தநாள் பரிசாக தானே ஆசையோடு  தஞ்சாவூர் வீணையை ஏந்தி வந்து அவள்  வீட்டு ஹாலுக்குள் நுழைந்ததும் இனிமையாகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடியபோது  இன்ப அதிர்ச்சி அடைந்தாள் பைரவி . யாரும் பார்க்காத நேரம் பார்த்துக் காத்திருந்து ,கண்ணீர் மல்க ஆனந்தத்தில் ரமேஷின் மார்பில் சாய்ந்து நன்றி சொன்னாள்  பைரவி.ஒரு நிமிடத்தில் விலகி நின்றவளை ஏக்கத்தோடு பார்த்த ரமேஷ்….பைரவி…..” என்னைக்கும் நீ தான் என் பக்கத்தில் இருக்க வேண்டும்…உறுதி செய்….” என்று மெல்லிய குரலில் கொஞ்சியப்படியே கரத்தை நீட்டினான் ரமேஷ்.

அந்த பாக்கியத்தை நீ தான் எனக்குத் தர வேண்டும் ரமேஷ்….நான் காத்திருக்கேன்….என்று நீட்டிய கரத்தில் தன் கரத்தை இணைத்தாள் அதீத வெட்கத்தில் திக்கு முக்காடிப் போய்  உதடுகள் துடிக்க, கன்னம் சிவக்க தலை குனிந்த  படியே சொல்லி முடித்தாள் .

அய்யே…..எத்தனை சினிமாப் பாட்டுப்  பாடி அசத்தரே…..வெக்கத்தப் பாரு….என்று அவளின் முகத்தை நிமிர்த்தியவன்….”என்ன தான் நீ பாடினாலும்….இது தான் நிஜம்…இது தான் நீ…!  என் பைரவி ராகம்….என்று “உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ…..?” என்று பாடிக் காண்பிக்க..

பைரவி வெட்கத்துடன்…..”ம்ம்ம்ம்….…இதுவும் பைரவி ராகம் தான்.” என்று சிணுங்கினாள்.

அம்மாடி நான் உண்மையைப் பாடினேன்…எனக்கு ராகமெல்லாம் ஒண்ணும்  தெரியாது  உன்னோட போட்டிக்கு நான் வரலப்பா…என்று தோளை லேசாகக் குலுக்கி
நீ தன்னே ஒன்னாங்கிளாசாயிட்டு பாடுன்னு ..எனிக்கு நீ மாத்ரம் மதி .! என்று  மலையாளத்தில் சொன்னபோது போது  அங்கே  சங்கீதமாக இருவரின் சிரிப்பும் இணைந்தது.

ரமேஷ் வந்து விட்டு சென்றதும்…அம்மாவின் முதல் கேள்வியே…..” முதல்ல நீ வெளில போக ஆரம்பிச்சே…இப்போ வீணை உள்ளே வர ஆரம்பிச்சிருக்கு….இன்னும். என்னவெல்லாம்  வருமோ ?என்னவெல்லாம் நடக்கப் போறதோ …? யார் கண்டா..? பெரிய பரிசோட வரார்….உங்களுக்குள்ள…..  .என்று சந்தேகத்துடன் இழுத்தாள் .

ம்ஹும்…..அப்டிலாம் நீ நினைக்கறா மாதிரில்லாம் ஒண்ணும்  கிடையாது.இன்னும்..அவர் எனக்கு   ஜஸ்ட் குட்  ஃபிரண்ட் தான்…என்றாள்  தீர்மானமான குரலில். வாய் சொன்னாலும் மனம்….ஏன் பொய் சொல்றே…. உண்மையைச் சொல்லிடேன்…என்று வீணையைக் கட்டிக் கொண்டது. கைவிரல்கள்..வீணையை லேசாக மீட்டி அதில் வரும் நாதத்தை ரசித்தது. மனம்….ரமேஷ் வீணையை ஏந்தி ஹாலில்  நின்று பிறந்த நாள் பாட்டுப்  பாடியதை  கண்ணுக்குள் கொண்டு வந்து காட்டியது.

அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். பைரவி…நீ முன்ன மாதிரி கிடையாது..சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிறவள்…அதே சமயம் கல்யாணமாக வேண்டிய பெண். பத்திரிகை ரிப்போர்டர்ஸ்.பார்த்தால் போதும்…யாரோ எதையோ செய்யறா நமக்கெதுக்குன்னு இருக்க மாட்டா   முதல் பக்கத்துல இன்னார்க்கு இன்னார்னு கொட்டை கொட்டையா  எழுதிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள் .. அவங்களுக்கு வேண்டியது கொஞ்சம் அவல் நிறைய த்ரில் அவ்ளோதான். என் கவலை எனக்கு….ஆயிரத்தி ஒண்ணாவது ரசிகனா இருந்தாத் தேவலை…தான். ஆனால்…இது கொஞ்சம் கூட நன்னாயில்லை  நம்ப குடும்பத்து கௌரவம்…..என்று இழுத்தாள் அம்மா..!

அம்மா…ஒரு விஷயத்தை இல்லைன்னு சொல்லிட்டு..பின்னால ஆமாம்னு சொன்னாத் தப்பில்லை. அதே விஷயத்தை இருக்குன்னு வெளிப்படையாச் சொல்லிட்டு பிறகு இல்லைன்னு சொல்லிண்டு நின்னா…அப்போ தான் உன்னோட குடும்ப கௌரவப் பிரச்சனை எல்லாம் வரும்….இப்ப வர எந்த கிசு கிசுக்கும் நான் இல்லைன்னு ஒரே பதிலைத் தான் தருவேன் நீ கவலைப் படாதே..என்று அம்மாவை சமாதானப் படுத்தினாள் .

அதற்குள் பைரவியின் கல்லூரித் தோழி மாதவி கையில் பூங்கொத்தோடு வந்து நின்று வாழ்த்துச் சொல்லவும் ரமேஷ் சிறிது நேரம் மனதிலிருந்து விலகி நின்றான்.அப்படியும் அவனைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை பைரவியால் .

கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா மாதவி..? இப்பத் தான் ரமேஷ், அதான்….”வானவில் டிவி”  ஓனர் ரமேஷ்  வந்துட்டுப் போனார். உனக்கு அறிமுகப் படுத்தி இருப்பேன்.மிஸ் பண்ணிட்ட….என்று வருத்தப் பட்ட பைரவி “இதோ அவர் கொடுத்த பரிசு…இந்த வீணை…” என்று பெருமை பொங்க தோழியிடம் வீணையைக்   காண்பித்தாள் .

அவர்கள் பேச்சு எங்கெங்கோ  சென்று திரும்ப..சாப்பிடும் போது  பைரவியின் அம்மா தான் கேட்டாள் …”அடுத்தது மாதவி…உன்னோட  கல்யாண விருந்துக்கு எங்களை எப்போ கூப்பிடப் போறே..?”

அதெல்லாம் இப்போ ஒண்ணும்  கிடையாது ஆன்ட்டி ….எனக்கு இந்தக் கல்யாணம் என்ற உறவுச் சிறையில் எல்லாம் நம்பிக்கையே இல்லை… அதெல்லாம் ஒரு கமிட்மென்ட்.எனக்கு குழந்தைகளையே பிடிக்காது. பிரசவம்னா பயம்…அதை தடுக்கனும்னா நிச்சயமா கல்யாணத்தை நிராகரிக்கனும் என்று வெளிப்படையாக பளிச்சென்று சொன்னாள்  மாதவி.

என்ன சொல்றே நீ மாதவி..? என்னால நம்பவே முடியலையே…இன் ஃபாக்ட் நீயா..? இப்படிப்  பேசினே…! ஆச்சரியமா இருக்கு…என்று மாதவியின் முகத்தைப் பார்த்தாள் பைரவி.அவளின்  பார்வை கேள்விக் குறிகளை கொக்கியாக போட்டு மாதவியின் மனதின் ரகசியத்தை இழுக்க ஆரம்பித்தது.

அது சின்ன வயசிலயே மனசுல விழுந்த அடி பைரவி. இதயத்தோடு தழும்பா இருக்கு…நான் அதை விட்டு வெளியே வர முடியாமல் தான் இன்னும் தவிக்கறேன்.
அந்த வலியிலிருந்து விலகி வாழணும்னு தான் நான் பரதமே கத்துண்டேன்…நாளடைவில் பரதமே எனக்கு ஆதரவா, ஆறுதலா ஒரு துணையாய் மாறிப் போச்சு.  .
நான்  சதங்கை கட்டாமல் ஆடினாலும் என் காதுக்குள் சரியான ஜதி  ஸ்ருதி  சுத்தமாகக் கேட்கும். என்னால என் நாட்டியத்தை என்னைக்கும் விட முடியாது. அதே சமயம் என் அம்மாவைப் போல பெற்ற குழந்தைகளை பறி  கொடுத்து விட்டு காலா காலத்துக்கும் கவலைப்  பட்டுக் கொண்டு நடை பிணமாக வாழ முடியாது.

மாதவி……என்னாச்சும்மா உன் அம்மாவுக்கு…? அழும் குழந்தையைத் தேற்றும் தாயாக பைரவியின் அம்மா மாதவியின் தலையை வருடியபடி அருகில் நின்றாள் .

என் அம்மாவுக்கு நான் பிறந்த  பிறகு இரண்டு பிரசவம் நடந்தது. இரண்டு தடவையும் குழந்தை ரோஜாப்பூ மாதிரி பிறக்கும்…கையைக் காலை அசைத்து நெளியும்..அடுத்து சில நிமிடங்களில் உதறலெடுத்து  விறைத்துக் கொண்டு இறந்து போகும். இன்னைக்கு இருந்திருந்தால் எனக்கு ரெண்டு தங்கைகள இருந்திருப்பார்கள். பாவம்…இதை நேரில் பார்த்திருக்கேன் நான். அப்போ எனக்கு வயசு எட்டு இருக்கும். நானும் அப்படித் தான் போயிருந்திருப்பேனாம்….பகவான் புண்ணியம் நீ மட்டும் பிழைச்சேன்னு பாட்டி சொல்லுவா. இந்த அதிர்ச்சியில் என் அப்பா துக்கம் தாளாமல் ஹார்ட் அட்டாக்கில் செத்துப் போய்ட்டார்.  என் அம்மாவுக்கு நான் மட்டும் தான் மிச்சம்..அம்மாவும்  அந்த சோகத்திலிருந்து  இன்னும் மீளாமல் எதிலும் பிடிப்பில்லாமல் இருக்காங்க . என்னைத் தான் உயிரா நினைச்சுண்டிருக்கா .  கண்ணில் நீர்முத்தாக வந்த கண்ணீரை கைகுட்டையால் மெதுவாக ஒத்திக்  கொண்டாள் . ரோஜாப்பூவில் பன்னீர்த்துளி ததும்பியது போலிருந்தாள் அவள்.

உன் மனதுக்குள் இத்தனை சோகமா.? கவலைப் படாதே எல்லாம் சரியாகும்…தைரியமா கல்யாணம் பண்ணிக்கோ..உனக்கு ஒண்ணும்  ஆகாது என்று பைரவியின் அம்மா ஆறுதல் சொன்னாள் . பைரவியும் ஆதரவாக தன்  அழகிய தோழி  மாதவியைக் கட்டிக் கொண்டாள் .இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருந்து மெல்ல பேச்சு வேறு பக்கம் சென்றது. புதுப் படப் பாடல் பற்றியும் தனது அரங்கேற்றம் பற்றியும் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .பிறகு ரமேஷைப் பற்றியும் பேச்சு திசை திரும்பியது.

விடைபெறும் நேரம் வந்ததும்…”கண்டிப்பா அவரையும் அழைச்சுண்டு வா. எனது நடன நிகழ்ச்சிக்கு ….. ராணி சீதை மஹாலில் ….மறந்துடாதே… அடுத்த ஞாயிறு….. எதிர்பார்ப்பேன்…..கண்டிப்பா அந்தக் கலா ரசிகரையும் அழைச்சுண்டு வா…மறந்துடாதே..என்றதில் அந்த “அவரையும்” என்னும் போது அதில் ஜதி கூட சேர்த்தாள் மாதவி.

நிலைமை இப்படியிருக்க,  பைரவி என்ன பேசுவாள் என்று கற்பனை செய்தவன்….காரை லாவகமாக ஜி.ஆர்.டி  கிராண்ட்  ஹை டைம்  ஹோட்டலில் நுழைந்து காரைப் பார்க் செய்து லாக் செய்து விட்டு கைபேசியோடு  நடந்து கொண்டே சரியாக பைரவி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சென்று…….லேசாக ஃபோனால்  தலையில் மென்மையாக ஒரு தட்டுத் தட்டி ரொம்ப நேரமாச்சா? சாரி…சாரி… …தாம்பரத்துலேர்ந்து பறந்து வந்தேன்…..என்று மூச்சிரைப்பது போல நடித்தான்.

ஜஸ்ட் இப்பத்  தான் வந்தேன். சீட்ஸ் ஃ போன்ல ரிசர்வ் பண்ணிருந்தேன். அதனால நோ ப்ராப்ளம்…என்றவள்…ஏதாவது லைட்டா ஆர்டர் பண்ணு பசிக்குது. என்றாள் ..

அவளிடம் கேட்காமலேயே அவளுக்குப் பிடித்ததெல்லாம் சொன்னான் ரமேஷ்.அவள் ஆச்சரியத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு… ம்ம்ம்ஹும்…..நீ சொன்ன மெனுல ஒண்ணு  கூட எனக்குப் பிடிக்காது தெரியுமா? என்று அவனிடம்  பொய்யாகச் சொல்கிறாள்.

அட அப்படியா…அந்த மெனுல  இருக்கும் ஒண்ணும்  எனக்கும் பிடிக்காது, அது உனக்குத் தெரியுமா? என்று கண் சிமிட்டிய படியே பதில் சொல்கிறான் ரமேஷ்.

சரி…ஜோக் இருக்கட்டும்…கொஞ்சம் சீரியஸ் விஷயம். பேசலாமா ?.. இன்னும் இரண்டு மாசத்தில் லண்டன்  போறோம்….அங்க ஒரு கலை நிகழ்ச்சி…இந்த வாட்டி போறதுக்கு பெயர் கொடுப்பதற்கு முன்னாடி உங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உன் பெர்மிஷனோட போகணும்னு ஒரு அல்ப ஆசை….!  போகட்டுமா…ஒரு வாரம்…ஆகும் திரும்பிவர…நீயும் வந்தாலும் வரலாம்…என்ன சொல்றே..உன் பெயரையும் சேர்த்துடவா என்று தலையைச்  சாய்த்தபடியே அவனைப் பார்த்து ஆவலாகக் கேட்க. சீக்கிரம் சொல்லு..சாப்பிடுட்டு மதியம்  மூணு மணிக்கு  சூப்பர் சிங்கர் ஷூட்டிங் இருக்கு…போகணும்..வெளில டிரைவர் வெய்டிங் என்று பைரவி அவசரப் படுத்தினாள்.

பக்கத்து இருக்கையில் இருந்து இவர்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் வந்தவர்கள். சிலர் சிநேகமாகச் புன்னகைத்தனர். சில பெண்கள்  இவளிடம் ஆடோகிராஃப் கேட்டு கை துடைக்கும் டிஸ்ஸு பேப்பரை  கொண்டு வந்து நீட்டினார்கள். இவளும் சிரித்தபடியே இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு கையெழுத்துப் போட்டு விட்டு…சாதரணமா பாடகிகளுக்கு இந்த மாதிரி ரசிகர்கள் தொந்தரவு அதிகமா எங்கியும் இருக்காது…இப்போல்லாம் மீடியா இருப்பதால் தான் வெளியில் தெரிகிறது …சரி நீ சொல்லு ரமேஷ்…பதில்…என்று கண்ணால் கேட்க.

இப்ப ஒரு ஸிச்சுவேஷன்  சாங் பாடட்டுமா…”போகுதே…போகுதே...என் பைங்கிளி வானிலே….நானும் சேர்ந்து போகவும்…சிறகும் இல்லையே….உறவும் இல்லையே…”
என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு….டேபிள் மீதிருந்த கிளாசில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கண்ணில் தொட்டு வைத்துக் கொண்டு தேம்புவது போல நடிக்கிறான்.

ரமேஷ்…போதும்….போதும்..நான் போறேன் லண்டனுக்கு……? வரமாட்டேன்னு சொல்ல முடியாது. இப்ப என் கேள்வி… நீயும் கூட வரியா? ன்னு கேட்கத்தான் வந்தேன்.

நீ தான் முடிவே பண்ணிட்டியே..என்றவன்…நிமிர்ந்து உட்கார்ந்தபடி…” வேண்டாம் பைரவி…வரலைன்னு சொல்லிடு….எங்கெல்லாம் உனக்குப் போகணும்னு தோணுதோ லிஸ்ட் கொடு…நாம தனியா போகலாம்….” கூட்டத்தோட வேண்டாம்…நான் வரலை. நீயும் இரேன்….போகாதே…..போகாதே என்று மாதவன் ஸ்டைலில்  ராகம் பாட. ஆரம்பிக்கிறான்.

போகாதேன்னு சொல்லாதே ரமேஷ்…நீயும் கூட வர ட்ரை  பண்ணேன் ப்ளீஸ்….என்கிறாள்.

பைரவி…நீ டிரைவரை அனுப்பிடு நான் உன்னை அங்கே  ட்ராப்  பண்றேன்  என்று சொல்கிறான்.

வித விதமாக உணவுகள் உணர்வுகளைத் தூண்ட….ரசித்து சாப்பிட்டு விட்டு…இவனோடு காரில் தொத்திக் கொள்கிறாள் பைரவி.

அவளது கார் அவள் இல்லாத தனிமையில். சோர்வுடன் கிளம்புகிறது…. “தங்கமான பொண்ணு பைரவியம்மா ….இவரு எப்படிப் பட்டவருன்னேத் தெரியலை…கூட்டிக்கிட்டு சுத்துறாரு…..அடுத்த தடவை அம்மாக்கிட்ட சொல்லி வைக்கணும்….ஜாக்கிரதையா இருங்கம்மான்னு…இந்தம்மா வெளுத்த தெல்லாம் பாலுன்னு நம்பும்..பாடகி ..!  எந்தப புத்துல எந்த பாம்போ..?

அவர்களின் கார் கடந்ததும்…புலம்பியபடியே டிரைவர் வேகம் பிடிக்கிறார்.

இது ரொம்ப அழகான கார்ல….ஐ லைக் திஸ்…! வெரி வெரி கம்ஃபர்டபில் கார்…என்றபடியே அதில் ஒலித்த பாடலை ரசித்தபடியே…..நீ எல்லாம் நான் பாடினதாத் தான் கேட்குறியா ? இந்தப் பாட்டு ரெகார்டிங் ஆகும்போது ஒரு ஜோக். நான் ஒரே ட்ராக்ல பாடிட்டு வந்துட்டேன். கோரஸ் க்ரூப்ல ஒரு பொண்ணுக்கு சோர் த்ரோட் ….பாவம்…ரெகார்டிங் ஆயிட்டிருக்கு…..அவ குரல் மட்டும் தனியா கேட்குது….எப்படி இருக்கும்..? என்று கல கல வெனச்  சிரித்தாள்.

நீ இப்படிச் சிரிச்சுக்கிட்டே இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்..என்று ரமேஷின் பதில் ஜொள்ஸ் ….அவள் அவனைப் பார்த்து பொய் கோபத்தில் முறைத்தாள் .

ஸ்டீரியோவை அணைத்தபடியே…ரமேஷ், நான் லண்டன் போறதுக்கு முன்னாடியே நாம கல்யாணம் பண்ணீடால் என்ன? எந்த “காசிப்”பும் இருக்காது.   நீயா நம்ம கல்யாணப் பேச்சை எடுப்பேன்னு பார்த்தேன். அன்னிக்கு நீ வீட்டுக்கு வீணையோட வந்துட்டு போன பிறகு என் பேரெண்ட்ஸுக்கு   விஷயம் தெரிஞ்சு போச்சு..என் அப்பா ஜாடையாகக் கேள்விகள் கேட்க ஆரம்பிச்சாச்சு……என்று நாணம் மிகுந்த கண்களோடு கூர்ந்து ரமேஷைப் பார்க்கிறாள் பைரவி.

சடன் பிரேக் போட்ட ரமேஷ்….” ஹேய் …..நீ என்ன சொல்றே….? என்னது…கல்யாணமா..?   என்று  பெரிய ஜோக்கைக் கேட்டவன் மாதிரி சிரிக்கிறான்…நீ எந்தக் காலத்தில் இருக்கே….பைரவி…கல்யாணம் எல்லாம் ரொம்ப ஓல்ட் ஃ பாஷன். நானே உன்கிட்ட இதைப் பத்தி கேட்கணும்னு இருந்தேன். கல்யாணம் பத்தி எல்லாம் நான் நினைப்ப தில்லை !

அடித்த ஷாக்கில்  வெளிறிப் போயிருந்த பைரவிக்கு  மீண்டும் ஷாக் கொடுப்பது போலிருந்தது அவனது கேள்வி..

“லிவிங் டுகெதர் ” பத்தி நீ என்ன நினைக்கிறே? எனக்கு ஒ.கே…இன் ஃபாகட்  நம்ம இண்டஸ்ட்ரியில் இது தான் சூப்பரா வொர்க் அவுட் ஆகும். ரெண்டு பேரோட வேலையும் எதனாளையும் கெடாது. எந்த ரிஸ்கும் இல்லை.  ஏன்…? அவர் கூட….பேர்… டக்குன்னு நினைவுக்கு வரலை….யாரது…நீ சொல்லு…ன்னு யோசிக்கும் பாவனையோடு ரமேஷ் இவளைப் பார்த்துக் கொண்டே . காரை நிதானமாக ஒட்டினான்.

பைரவிக்கு திக்கென்றது.  இதயத் துடிப்பு அதிகமானது. கோபத்தில் முகம் சிவந்தது. உள்ளுக்குள் எழுந்த உணர்வு வெறுப்பாக மாறி…சிறிது நேரத்திற்கு முன்னால்  இருந்த சகஜம் மறைந்து பயம் வந்தது அவளுக்கு.

என்ன ரமேஷ்….? நீங்க சொல்றது….மத்தவங்களை விடுங்க…..யார் என்ன செய்தா எனக்கென்ன..? ஆனால் நீங்கள் சொல்வதைக்  கேட்கும் போது நான் தான் அவசரப் பட்டுட்டேனோ  என்று தோன்றுகிறது.இப்ப என் மூடையே நீ ஸ்பாயில் பண்ணிட்டே. என் குடும்பமோ…நானோ …நீ நினைக்கறா மாதிரி இல்லை. தயவு செய்து என்னை மறந்து விடு. இங்கயே..இப்பவே என்னை  இறக்கி விட்டுடு… ப்ளீஸ்.. நான் என் கார்ல  என் வேலைக்கு போறேன்…ஸ்டாப் த கார். லெட்  மீ  கெட் அவுட் ஃ பர்ஸ்ட் . என்று காரின் கதவைத் திறப்பது போல செய்கை செய்கிறாள்….பைரவி. அவளின் ஏமாற்றம் அவளை சராசரி பெண்மணியாக்கியது.

ஹே…..ஹே…..வாட்ஸ் திஸ்….சும்மாக்  கேட்டதுக்கே இத்தனை ஆர்ப்பாடம்மா? எனக்கும் உன் எண்ணம் தெரிஞ்சுக்கணும் இல்லையா? ஓகே…ஓகே….கீப் கூல் …நானும் யோசிக்கறேன்….நீ சொன்னதை…நீயும் யோசி நான் சொன்னதை…சரியா?  பைரவி..ஐ வான்ட் யு டு  பி வித் மீ ஃபாரெவர் …அண்டர்ஸ்டா ண் ட்  மீ மை  ஸ்வீட்டி..!
என்று கெஞ்சும்  குரலில் குழைந்த போது  பைரவி அமைதியானாள். ஆனாலும் அவள் உள்ளத்தில் ஒரு விரிசல் லேசாக  இடம் விட்டு  நகர்ந்தது .

அடுத்து சில நொடிகளின் அமைதியைத் தாளாத பைரவி…டக்கென்று காரின் ஸ்டீரியோவை ஆன்  செய்தாள் .. அதில் அவள்  மிகவும் விரும்பும் குரலில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“தேரில் ஏறும் முன்னமே… தேவன் உள்ளம் தெரிந்தது….
நல்ல வேலை திருவுள்ளம்…  நடக்க வில்லைத் திருமணம்…
நன்றி…நன்றி…தேவா….. உன்னை மறக்க முடியுமா?
கலைந்திடும் கனவுகள்… கண்ணீர் சிந்தும் நினைவுகள்….
வசந்த காலக் கோலங்கள்……..”

இந்த வரியோடு பைரவி இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கி விட்டுச் சென்றான்  ரமேஷ்.  நடந்தவளுக்கு மனசெல்லாம் அதே வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தது..

ஏழு நாட்கள் இருவரும் கைபேசியில் மாறி மாறிப் பேசிப் பேசி கழிந்து விட்ட நிலையில் மாதவியின் நடன நிகழ்ச்சிக்கு ரமேஷும் பைரவியும் சேர்ந்து சென்று முதல் வி.ஐ.பி வரிசையில் உட்காரவும்…நிகழ்ச்சி ஆரம்பமாகவும் சரியாக இருந்தது.தன

ரமேஷுக்கு  தன்  கண்களையே நம்ப முடியவில்லை. .ரம்பா..ஊர்வசி. மேனகை என்று கேள்விப்பட்டிருக்கிறான்….இது வரை   கண்டிராத பேரழகுப் பதுமையாக மேடையில் ஆடிக்கொண்டிருந்தாள்.அவள் அழகில் , நிறத்தில், கவர்ச்சியில் பைரவியை ஓரங்கட்டி விட்டது போலிருந்தது ரமேஷுக்கு. மாதவியைப்  பார்த்ததும் திடீரென்று  அவன் மனத்தின் வக்கிரம்  விழித்துக் கொண்டது.  பைரவிக்குத் தெரியாமலாவது மாதவியோடு உடனே பழக வேண்டும் என்ற ஆவலில் ஆசைமனம் திட்டம் தீட்டியது..வைத்த கண்ணை எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ்..பைரவி…உன் ஃ ப்ரெண்டுக்கு  நல்ல ஃப்யூச்சர் இருக்கு.. பாரேன்.எவ்ளோ நளினம், எவ்ளோ நளினம்..என்ன  ஒரு அசத்தலான முக பாவம்… மஞ்சு பார்கவி, பானுப் ப்ரியா, ஷோபனா இவங்க ரேஞ்சுக்கு ஆடறாங்க  பாரேன்….ஐ லைக், ஐ..லைக்…ஹெர் டான்ஸ்.நானே நிறைய சான்ஸ் வாங்கித் தரேன். என்று சொன்னதும் பைரவி மகிழ்ந்தாள்.

மேடையில் மாதவி அபிநயத்தோடு ஆடிக் கொண்டே இவர்களையும் ஒரு மின்னல் வெட்டும் பார்வை பார்க்கிறாள்.

மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் –

அந்தப் பார்வைக்   கணையில் ரமேஷ் தன்னை மறந்தான். அவளழகில் மயங்கிக் கொண்டிருந்தான்.

“மான்  கண்டேன் மான் கண்டேன்…மானே தான் நான் கண்டேன்…நான் பெண்ணைக்  காணேன்” என்று அவனது ஆன்மா பாட ஆரம்பித்தது.

என் கண்ணேப் பட்டுவிடும் போலிருக்கு.அவளுக்கு  இந்த நிகழ்ச்சியில ஒரு தீவிர ரசிகன் கிடைச்சுட்டான்ன்னு  அவங்ககிட்ட நீ சொல்லு. என்று ரமேஷ் சிரித்தான்.
ரமேஷ் வானில் பைரவி சிறிது சிறிதாய் பிறை நிலவாய் மறைந்து கொண்டு வந்தாள்.  மாதவி முழு நிலவாய் அடுத்தடுத்து நிறைவாகி   வந்தாள்.

சொன்னா..அவ ரொம்ப சந்தோஷப் படுவாள்…..என்று  மேலாக சொன்னாலும்….பைரவியின் உள்  மனசு ” அவ உனக்கெல்லாம் சிக்க மாட்டா..” என்று முணுமுணுத்தது.

அரங்கம் விட்டு வெளிவந்து வீடு சென்று இரவு படுக்கையில் படுத்த பின்பும் ரமேஷுக்கு அந்த நடனத்தின் தாக்கம் இருந்தது மெல்ல மெல்ல மாதவி ரமேஷின் இதய மேடையில் சலங்கை கட்டி ஜல்ஜல்லென ஆடிக் கொண்டிருந்தாள்.  ரமேஷ் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு தவித்துக் கொண்டிருந்தான். பைரவி தான் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை மாதவி என்னை ஏற்றுக் கொள்வாளா? இந்த விஷயம் பைரவிக்குத் தெரியாமல் தான் கேட்டுப் பார்க்கணும். மாதவி இல்லாத வாழ்வை என்னால் இனி நினைத்துப் பார்க்க முடியாது.  ஆனால்..பைரவி…? என்று மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது.

“அவளையும் பார்க்கிங் லாட்டில் வைத்துக்கொள்வேன்,”…என்று சொல்லிக் கொண்ட ரமேஷ் கண்களை மூடி தலையணைக்குள் முகம் புதைத்து கனவுலகில் நுழைந்தான். அங்கும்  மாதவி தான் ஜலங்கையோடு நடனமிட்டாள்.

“வந்ததுவும் போனதுவும் இமைப் பொழுதானாலும்
மனமிங்கு களவானதே….கைதொழு நவநீதன்….”
இதயமேடையில் நளினமாக  ஆடிக் கொண்டிருந்தாள்.

இரவு மெல்ல மெல்ல விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

[அடுத்த வாரம் முடியும்]

Series Navigationதிருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் : கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 நாள்களில்இணைய தளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *