புதுதில்லியில் 23-வயது நிரம்பிய ஒரு மருத்துவ மாணவியின்(physio therapist) மேல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை இந்திய சமூகப் பிரக்ஞையில் அதிர்ச்சியையும், அரசுக்கு இனிமேலும் வெறுமெனக் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க முடியாது என்ற கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் எத்தனையோ பாலியல் வன்முறைகள் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டன என்பதையும் மறக்க முடியாது. அவற்றையும் உள்ளடக்கிய தீவிரம், புதுதில்லியில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கெதிரான வலுவான எதிர்வினைகளிலும், போராட்டங்களிலும் உட்கிடையாய் இருக்கிறது என்று அரசு எடுத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும். பெண் உரிமைகள், பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கருத்தாக்கங்களளைக் கட்டுரைகளிலும், ஊடகங்களிலும் அறிவுஜீவிகள் அலசுவது புதிதல்ல. ஆனால், குறிப்பிடத்தக்கவாறு முதன்முறையாய் நடைமுறையில் பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டம் மக்களால், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தால், புதுதில்லியின் ராஜபாட்டைகள் அதிருமாறு நடந்திருக்கிறது. அதே சமயத்தில், பாலியல் வன்முறைகள் ’பெண்ணுடல்’’ என்பதை மட்டும் மையப்படுத்தி இருக்காமல், ஜாதி, பொருளாதார ரீதிகளிலும் தம் உக்கிரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பதையும் புதுதில்லியின் பாலியல் வன்முறைக்கெதிரான எதிர்வினைகள் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இருந்தால் தான் போராட்டத்தின் அதிர்வுகள் பட்டிதொட்டிகளிலும் பரவி தேசியப் பெண்ணிய எழுச்சியாய்ப் பரிணமிக்க முடியும்.
புதுதில்லியில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை பற்றிய கருத்துக்கள் பல்தரப்புகளிலிருந்தும் பல்விதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் கருத்துக்களை இப்படி தொகுக்கலாம்.
பெண்கள் தங்கள் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். பெண்ணுடல் கவர்ச்சி காட்டும் உடைகள் ஆண்களிடம் பாலியல் வன்முறையைத் தூண்டுகின்றன.
பெண்கள் , குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள், இரவு வேளைக்கு முன்னாலாயே வீடுகளுக்குத் திரும்பி விட வேண்டும்.
பெண்கள் தங்கள் நடத்தைகளில் , ‘இலக்குவன் கோடு/எல்லை’( Lakshman reka) உள்ளது என்பதை மறக்கக் கூடாது.
பெண்கள் ஆபாசமாக தங்கள் உறுப்புக்களை ‘ஐட்டம்’ பாட்டுகள்(Item songs) போன்ற நிகழ்ச்சிகளில் பண்டப்படுத்துவது (commoditisation) காமத்தை உசுப்பி விடுவதாயும், அவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு மறைமுகக் காரணமாயும் அமைகின்றன.
பெரும்பாலான இக்கருத்துக்கள் பெண்ணுடலை மையப்படுத்தியதாய், ஆணாதிக்கவாதிகளின்(male chauvinists), பெண்களிலும் சிலரின் ஆணாதிக்கவாதிகளின் கண்ணோட்டத்திலான கருத்துக்களாய் உள்ளன.
இந்திய சமூகத்தில் ’பெண்ணுடல்’ பற்றிய பிரக்ஞை தன்னியல்பாய் இருப்பதாய்த் தோன்றவில்லை. ஒருபுறம் அடி முதல் முடி வரை தேவி ஆராதனையாக இருக்கும். இன்னொரு புறம், பெண் உடல் காமக் கலன் என்று இகழ்ச்சியாக இருக்கும். ஆராதனையானாலும், இகழ்ச்சியானாலும், இந்நிலைகள் ஆணியவாத மையத்திலிருந்து பெண்களை விளிம்பு நிலையில் பார்க்கும் கண்ணோட்டஙகள் தாம். இன்னும் நம் திருமணங்களில் நடப்பது கன்யாதானம் தானே. ஒரு பெண் பிக்குணியை வழிமறித்து ஆணொருவன் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகிய நிகழ்ச்சிக்குப் பின், புத்தர் பெண் பிக்குணிகள், தனியாய் வழிகளில் செல்வதும், உறங்குவதும் கூடாது என்று விதிமுறையாக்கினார்.(Old Path White Clouds, Thich Nhat Hanh(2011)). கவர்ச்சி உடை அல்லது இலக்குவன் கோடு/எல்லை என்பதெல்லாம் காண்பவரின் கண்ணோட்டம்(perception) தான். சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரத்துக்கு(rape) உட்படுத்தப்படுகிறார்களே எப்படி? 2011-ல், புகார் செய்யப்பட்ட(reported crimes) 24206 பாலியல் பலாத்காரங்களில், 10 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை வீதம் 3.6%; 10-14 வயதுக்குட்பட்ட பருவத்தினரின் எண்ணிக்கை வீதம் 7%(National Crime Records Bureau Report,2011). ஒரு ஆணாதிக்கவாதிக்கு இருக்கும் பிரச்சினையே பொதுவெளியில்(public space)ஒரு பெண்ணைப் பெண்ணுடலாய்ப் பார்க்காமல், விகற்பமின்றி சக தோழமையுடன் எதிர்கொள்ளும் பண்பும் பக்குவமும். ஐட்டம் பாட்டுகளில் பெண்ணுடல் ‘பண்டப்படுத்தப்படுவது’ பொதுவெளியில் ஆண்களின் மனக் கட்டுப்பாட்டிற்கு அசெளகரியமானதென்றால், தொன்று தொட்டு வரும் ‘பரத்தமை’ மட்டும் இருட்டில் எப்படி செளகரியமாய்ப் போனது? இது ஆணாதிக்கவாதத்தின் ஒரு இரட்டை நிலை. நம் ஊர்களில் அன்று நடந்து கொண்டிருந்த ‘ரிக்கார்டு டான்ஸ்கள்” தாம் இப்போது ஊடகங்களில் ’ஐட்டம்’ பாட்டுகளாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்ணுடலின் கவர்ச்சி பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளுக்கான தூண்டல்கள் என்றெல்லாம் ஆண்நோக்கில் பேசி தம் பொறுப்பைத் தட்டிக்கழித்து பெண்களுக்கான பொதுவெளியை ஆணாதிக்கவாதிகள் குறுக்கி விட முடியாது. ‘பெண்ணுடல்’ என்பது ஆளப்பட வேண்டியது என்ற ஆணாதிக்கத்தின் பிரக்ஞை தான் அடி சரடாய் உள்ளது. ஏன், பெண்ணுடல் பற்றி பெண்கள் சிலருக்கே பிரக்ஞை இல்லாமல் இல்லை. சில கிராமப் புறங்களிலும், நகர்ப் புறங்களிலும், பேருந்துகளில் பயணம் செய்யும் போது தற்செயலாய் ஆணுடல் பட்டு விட்டாலும் ‘உண்டு இல்லை’ என்று சண்டைக்கு வருகின்ற சில பெண்கள் இல்லாமல் இல்லை. இந்தப் பிரக்ஞை உடை சார்ந்ததல்ல. சமூகத்தில் , குறிப்பாக கிராமங்களில் ‘நீ ஒரு பெண்ணுடல்’ என்று தான் ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை வரையறைப்படுத்தப் படுகிறாள். ஆக, ஒரு பெண்ணுடல், ஆணுடல்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் போது, அதற்கெதிரான எழுச்சியும் அதிகாரமும் பெண்களின் கைகளில் இருக்க வேண்டும். சராசரித் திரைப்படங்களில், கதாநாயகியின் பெண்ணுடல் வில்லன்களின் ஆணுடல்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் போது கதாநாயகனின் ஆணுடல் தான் காப்பாற்ற வரும்; அதனாலே கதாநாயகி கதாநாயகனைக் காதல் கொள்வாள்!. இப்படி பெண்ணுடலைச் சுற்றி ஒரு சிலந்தி வலையை ஆண்களே சொல்லிச் சொல்லி பெண்களாகவே பிண்ணிக் கொண்டது போன்ற மாய்மாலம் ஆணாதிக்கவாதிகளால் கட்டமைக்கப்படுகிறது. மிக மோசமானவை பெண்ணுடலை மையப்படுத்தி எழுதப்படும் கணக்கற்ற சினிமாக் காதல் பாடல்கள். கேட்கப் பொறுக்காத இந்த நிலை மாற ,ஒரு பெண் திரைப்படக் கவிஞர் வரக் கூடாதா என்றும் தோன்றுகிறது.
புதுதில்லியில் நடந்த பாலியல் வன்முறையில் , பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒரு மருத்துவ மாணவி. இரவில் ஆண் துணையில்லாமலும் பேருந்தில் ஏறவில்லை. அவளின் படிப்போ, சமூக நிலையோ, ஒரு ஆண்துணை கூட, இங்கு பேருந்தில் இருந்த ஆணாதிக்க அறுவர்களின் பார்வையில் ஒரு பொருட்டாக இல்லை. இரவில் பயணம் செய்யும் ’ஒரு பெண்ணுடலாய்த்’ தான் அந்தப் பெண்ணை ஆறு ஆணுடல்கள் எதிர்கொண்டிருக்கின்றன; பார்த்திருக்கின்றன. இந்தப் பார்வையும் அணுகுமுறையும், ஆறு ஆண் உடல்களுக்கு ஒரு பெண்ணுடல் இரையானது என்பது எவ்வளவு குரூரமோ அவ்வளவு குரூரமானது; ஏனென்றால், இந்த விதமான பார்வையில் தான் ,அணுகுமுறையில் தான் சராசரி வாழ்க்கை நடை முறைகளில், எத்தனையோ ஆணாதிக்கவாதிகள் பெண்ணுடல்களைக் கண்களால் விழுங்குகிறார்கள். இந்த அணுகுமுறை ஆணாதிக்கவாதிகள் சிலரிடம் வக்கிரமாய்த் துணிச்சல் பெறும்போது வெளிப்படையான பாலியல் வன்முறையாகப் படம் எடுக்கிறது. பல சமயங்களில்,உயர் நிலை, பதவி, அந்தஸ்து, வசதி, ஜாதி- போன்றவற்றில் எதுவொன்றோ அல்லது எல்லாமோ பக்கத் துணையாகும் போது , இந்த வக்கிரத் துணிச்சல் தீயுரசிக் கொழுந்து விட்டெரிகிறது உயர் மட்ட பாலியல் வன்முறைகள்- உதாரணமாக சில அரசியல்வாதிகளின், மடாதிபதிகளின், சமூகத்தில் செல்வாக்குள்ளவர்களின் பாலியல் சீண்டல்கள்- இந்த வகையைச் சேர்ந்தவை தாம். அதே சமயத்தில் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருக்கின்ற பெண்களுக்கே அவர்களின் பதவி, அந்தஸ்து, வசதி போன்ற நிலைகள் அவர்களைப் பாலியல் சீண்டல்களிலிருந்தோ, வன்முறைகளிலிருந்தோ முற்றும் காக்கும் கவசமாக இருக்க உதவாத போது, கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்கள் நிலைமையை என்ன சொல்வது? மிகவும் மோசமானது என்னவென்றால், ஆணாதிக்கவாதிகளின் இந்தப் பாலியல் துணிச்சலுக்கு சராசரித் தனமான திரைப்படங்களில் தரப்படும் ஒரு சுழற்சி(spin). ’கழி பெருங்காதல்’ என்று காட்டப்படும் பாலியல் துணிச்சலில், கதாநாயகி தான் தன்னுடைய பெண்ணுடலை கதாநாயகனின் ஆணுடல் மேல் விழுந்து விழுந்து ஆடுவாள். இப்படி பெண்களின் பாலியல் தூண்டல்கள் ஆண்களின் மேல் அவிழ்த்து விடப்பட்டது போன்று கட்டமைக்கப்படும் திரைப்படக் காட்சிகளில் ஆணாதிக்கவாதிகளின் உட்கிடை வக்கிரம் பெண்கள் மேல் சுமத்தப்ப்டும் பொய்மைகள் மலிந்து போய்க் கொண்டிருக்கின்றன.
ஒட்டு மொத்த வெகு ஜனக் கலாச்சாரமும், ஆணாதிக்க சமூகச் சூழலும், இன்னும் பெண்ணுக்குத் தன் உடல் மேலான உரிமையையும், சுதந்திரத்தையும் மறுக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. அதற்குப் பெண்ணுடலையே காரணமாகக் காட்டும் அபத்தம் தான் புது தில்லியின் பாலியல் வன்முறை குறித்த மேற்சொன்ன பல்வேறு ஆணாதிக்க எதிர்வினைகள் எதிரொலிக்கின்றன. இதற்கான தீர்வு மூன்று கோணங்களிலிருந்து நோக்கப்பட வேண்டியது. ஒரு கோணம் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டம், தண்டனை என்பவற்றைச் சார்ந்தது. பாலியல் வன்முறைக்கெதிரான சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டால் ,அவை பாலியல் குற்றங்களுக்கான அச்சுறுத்தலாக(deterrance) இருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் பெண்ணுடலைப் பற்றிய ஒரு சரியான புரிதலுக்கு எப்படி இது உதவும்? அடுத்த கோணம், பால்(gender) குறித்த ஒரு புரிந்துணர்வைச் (sensitisation) ஒரு சமூகப் பொறுப்பாகக் கடைப்பிடிப்பதும், வெகுவாகச் சமூகத்தில் எடுத்துச் செல்வதும். இதில் ஊடகங்களின், வணிகக் குழுமங்களின் பங்கு முக்கியமானவை. அவை பால் நடுநிலையிலான(gender neutral) கருத்தாக்கங்களையும், விளம்பரங்களையும் வரைவித்து, ஊக்குவித்துச் செயல்படுத்துவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மூன்றாவது கோணம் பாதிக்கப்படும் பெண்கள் சமூகத்திடமிருந்து வர வேண்டியது. பெண்கள் தாம் தங்கள் உடல்களுக்கு உரிமையும், சொந்தமும் கொண்டவர்கள் என்பதை எந்தச் சவால்களிலும், இன்னல்களிலும் விட்டுக் கொடுக்காதது முதலில் அவசியம். இதற்கான வழிமுறைகள் என்னவென்று சொல்வது எளிதல்ல. இந்தக் கட்டத்தில் பெண்களை ’ஆளுமைப்படுத்தல்’ (empowerment) என்பதை ’ஆண்மைப்படுத்தல்’ (masculinisation) என்பதோடு குழப்பிவிடக் கூடாது. கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், கராத்தே எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமாகுமா? பால் நடுநிலையிலான உடைகள் புது தில்லி போன்ற பெரு நகரங்களில் புதிதல்ல. அப்படியிருந்தும் புது தில்லி “கற்பழிப்பின் தலை நகர்’ என்ற அவப் பெயரை ஏற்க வேண்டியிருக்கிறது. ஏன் பெண்களுக்குப் ‘பெண் பெயர்கள்’ என்று கூடக் கேட்கலாம். பால் நடுவுநிலையிலான பெயர்களைத் தெரிவு செய்யலாமா? சீனாவில் பண்பாட்டுப் புரட்சியின் போது, பால் நடுவுநிலையிலான பெயர்களைப் பெண்கள் பலர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். ஆனால் இது ஒரு வெறும் குறியீடாகத்(symbolic) தான் இருக்க முடியும்.
ஆண்மைப்படுத்தும் வழிமுறைகளெல்லாம் பெண்களை ’ஆண்மைப்’ படுத்துவதன் மூலம் பாலியல் வன்முறைகளை முன்தவிர்க்க முடியும் என்ற அனுமானத்தில் சொல்லப்படுபவை. வேண்டுவது பெண்களின் ’ஆண்மைப்’ படுத்தலல்ல. பெண்களின் ஆளுமைப்படுத்தலோடு, ஆணாதிக்கவாதிகளின் சிந்தனையில் ’பெண்மைப்’படுத்தல்- பால் புரிந்துணர்வைப்(gender sensitivity) படிப்பித்தல். பெண்களை இப்படி ‘ஆண்மைப்’ படுத்துவதிலும் ஆணுடல்களின் மற்றும் ஆண்மையின் மேலாண்மை மறைமுகமாய் ஒப்புக் கொள்ளப்படும் நெருடல் இருக்கிறது. ஆளுமையிலும்,அறிவார்த்தத்திலும் ஆண்களுக்கு பெண்கள் நிகராய் இருக்க முடியும் என்று எத்தனையோ பெண்களின் ஆளுமைகள் உதாரணங்களாய் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆணாதிக்க வாதிகளுக்குப் பயந்து பெண்களை ஆண்மைப்படுத்துவது போல ‘பெண்ணுடல்’ சார்ந்த ஒரு அபத்தம் இதில் தொனிக்கிறது. பெண்களின் அடையாளம்(identity) அவர்களின் உள்ளார்த்தத்திலும், உடலார்த்தத்திலும் மதிக்கப்பட வேண்டியது. இந்த சுயமரியாதையின் அடிப்படையில் தான் பெண்கள் தங்கள் பாலியல் உட்பட்ட உரிமைகளை வென்றெடுத்துக் கொள்ள வேண்டும். புது தில்லியின் பாலியல் வன்முறை பற்றி தொகுத்துரைக்கப்பட்ட மேற்சொன்ன எதிர்வினைகளை ஆதரிப்போரில் பெண்களும், எதிர்ப்போரில் ஆண்களும் இருக்கும் சூழலில் பெண்ணுடல் சார்ந்த கருத்து நிலை பால் நடுவு நிலையிலான கருத்து நிலையாய்- பெண்களால் முன்வைக்கப்படும் பெண்ணியவாதம் என்று மட்டும் குறுக்கி விடாமல்- அடையாளமாகிறது. இந்த நடுவு நிலை பெண் உடல் பற்றிய பொது புத்திக்கு எதிரான வீறும் வீச்சும் கொண்ட சமூக மறுமலர்ச்சிக்கு உரம் கொடுக்க முடியும். பெண்ணியக்கங்களின் வெற்றி ‘பெண்ணுடல்’ சார்ந்த பால் நடுவுநிலையிலான கருத்து நிலையின் பரந்துபட்ட செயலாக்க வெற்றியில் தான் உள்ளது. பால் அசமக் குறியீட்டில்(Gender Inequality Index) 187 நாடுகளில், இந்தியாவின் தரம் 129 என்பது மிகவும் பின்னடைவாக உள்ளது.( Human Development Report(2011)) பால் அசமக் குறியீடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுகாதாரம் (health), ஆளுமைத் திறன்(empowerment), வேலைச் சந்தை(labour market) என்ற மூன்று அளவைகளில் இருக்கும் வேறுபாடுகளை ஒட்டுமொத்தமாய்க் குறிக்கும் ஒரு பன்னாட்டுக் குறியீட்டு எண் (Global Composite Index). பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம், வேலைச்சந்தையில் பெண்களின் பங்கு இந்தியாவில் இன்னும் பின்னடைவாகவே உள்ளது. பெண்களின் இந்தப் பின்னடைவுக்கும், பாலியல் வன்முறைகள் உட்பட பெண்களின் மேல் இழைக்கப்படும் குற்றங்களுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. புதுதில்லி பாலியல் வன்முறையின் எதிரொலியாக இனி அரசு எடுக்கப் போகும் கொள்கை மற்றும் சட்டவழிமுறைகளில், பாலியல் குற்றத் தடுப்பு மட்டுமன்றி, பெண்களின், முக்கியமாக சமூகத்தின் அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதி, பழங்குடிப் பிரிவுகளைச் சார்ந்த பெண்களின், ஒட்டுமொத்தமான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கும் ஆளுமைக்குமான புதிய கொள்கைகளும், நடவடிக்கைகளும் உள்ளடக்கி இருப்பது அவசியம். அப்போது தான் பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டச் செயல்பாடுகளும், பெண்களைப் பாதிக்கும் மற்ற சமூக நிலைகளின் மாற்றங்களோடு இயைந்து அமைப்பு ரீதியில் நிலை நிறுத்தப்படுவது சாத்தியமாகும்.
கு.அழகர்சாமி
- கட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.
- கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்
- ‘எனது பர்மா குறிப்புகள்’ பற்றிய ஒரு வாசகனின் சில குறிப்புகள்
- சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்
- மெய்ப்பொருள்
- ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு
- தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42
- இட்லிப்பாட்டி
- செவ்விலக்கியங்களில் பரத்தையர்
- முகம்
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3
- ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )
- மணிராமின் “ தமிழ் இனி .. “
- அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்
- பெண்ணுடலும் பாலியல் வன்முறையும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….12 க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’
- பொல்லாதவளாகவே
- வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)
- சாதி….!
- “சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதை
- மணலும், (வாலிகையும்) நுரையும் – 7
- தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்
- அம்மாவின் அங்கி!
- அக்னிப்பிரவேசம்-18
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]
- இன்னொரு வால்டனைத் தேடி…..
- சாய்ந்து.. சாய்ந்து
- “சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”
- சுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்
- ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?
- இரு கவரிமான்கள் – 5