விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி

This entry is part 32 of 33 in the series 14 ஏப்ரல் 2013

Vishwaroopamஇந்த கட்டுரை எழுதத் தொடங்கும்போதே என் இலக்கிய நண்பர்களில் சிலருக்கு நான் தீண்டத் தகாதவனாகி விடுவேன் என்பதை நான் உணர்கிறேன். கமல் ஹாசனின் சினிமா பங்களிப்பு தமிழ் சினிமாவின் தளத்தில் மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) , விருமாண்டி, தேவர் மகன் , ஹே ராம்.இவற்றின் இடம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உண்டு. இவற்றில் விருமாண்டி தேவர் மகன், ஹே ராம் வரிசையில் “விஸ்வரூபம்” இடம் பெறுகிறது.

இந்தப் படம் ஹாலிவுட் படங்களைப் போன்று எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை பாராட்டாகவும், (படப்பிடிப்பு, பிரமாண்டமான காட்சி அமைப்புகள், கார் துரத்தும் காட்சிகளின் நாற்காலி நுனிக்குக் தள்ளும் உத்வேகம், மிக நுணுக்கமான, கச்சிதமான படத் தொகுப்பு, நகைச்சுவையை விட்டுக் கொடுக்காத வசனத் தொகுப்பு, மிகையும், யதார்த்தமும் கலந்த கதையமைப்பு என்று பல காரணங்கள்), எதிர்மறை விமர்சனமாகவும் (அமெரிக்க நலனுக்கு உகந்த முறையில் எடுக்கப் பட்டிருக்கிறது, அமெரிக்க இந்திய உறவு பற்றிய கற்பனை மயக்கத்தில் எடுக்கப் பட்டிருக்கிறது, முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைப் பரப்புகிறது, அமெரிக்க ஆதரவு நிலையினால் சமநிலையற்று உள்ளது.போன்றவை) முன்வைக்கிற பல பார்வைகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

ஹாலிவுட் உலக சினிமாவின் கேளிக்கை மையமாக இருக்கிறது. இதன் பலனாக பல நாடுகளின் சினிமாத் தொழில் நசிவுற்று கிடக்கிறது. ஆனால் இந்திய சினிமா இன்னமும் தொழில் முறையில் முன்னணியில் இருக்கிறது. ஹாலிவுட் ஆனால் வெறும் கேளிக்கை மையம் மட்டுமல்ல. இன்றைய சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு வித்திட்டு வளர்த்து வரும் பெருநிகர் வணிக வளாகமும் ஆகும். அது மட்டுமல்ல. அன்று முதல் இன்று வரையில் சினிமாக் கலைஞர்களை இனங்கண்டு வளர்த்து வரும் நிறுவனம் ஆகும். அதனை நிறுவனம் என்று சொல்வது கூடத் தவறு. நிறுவனங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். ஆர்சன் வெல்ஸ் முதல், சார்லி சாப்ளின் வரை ஆங் லீ முதல் அல்மோடவர் வரை, பலருக்கும் புகலிடம் அளித்து திறனை வெளிக்கொண்டு வருவதில் முதன்மையான இடம் வகிக்கிறது. இங்கே இன்டியானா ஜோன்ஸும் சாத்தியம், லிங்கனும் சாத்தியம். ஷிண்ட்லர்ஸ் லிஸ்டும் சாத்தியம், சிரியானாவும் சாத்தியம்.

***

விஸ்வரூபத்தில் நிருபமா பணி புரியும் இடத்திற்குச் சென்று அவள் கம்பெனி பயன் படுத்தும் கணிணிகளை உபயோகிக்க கடவுச்சொல் என்ன என்று கேட்கும்போது “மூலா” என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். பணத்திற்கு அமெரிக்க வழங்குசொல் “மூலா” . நிருபமாவின் கம்பெனி உரிமையாளன் தீபக் தீவிரவாதிகளுக்கு துணை போகிறான். “உன்னைப் போல் ஒருவன்” திரைப்படத்தில் ஆயுத வியாபாரியாக ஒரு ஹிந்து வருகிறான். இது பற்றி சில ஹிந்து அமைப்புகள் விமர்சனத்தை முன்வைத்தன. உன்னைப்போல் ஒருவனின் மூலப் படமான “எ வெட்னஸ்டே” ஹிந்திப் படத்திலிருந்து விலகின புள்ளியாக இது உள்ளது. ஆயுத வியாபாரிகளின் மேல் உள்ள விமர்சனமாக இது முன்வைக்கப் படுகிறது. தீவிரவாதிகள் தம்முடைய முஸ்லிம் அடையாளத்தை முன்னிறுத்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் தன் ஹிந்து மதச் சார்பினால் ஆயுத வியாபாரியாக ஆகவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆயுதங்கள் கிடைக்கும் வர்த்தக மையங்கள் தம்முடைய உடனடி லாபத்தை முன்வைத்து செயல்படுகின்றன. ஆனால் இவர்கள் தீவிரவாதிகளின் நண்பர்கள் அல்ல. முதலில் தீவிரவாதத்திற்குப் பலியாவது இந்த “நண்பர்கள்” தான். அமெரிக்க ஆயுத வழங்கிகளுக்கும் , தலிபானுக்கும் உள்ள உறவும் இதே தான்.

***
இனி காலச்சுவடு இதழில் வெளிவந்த இன்னொரு விமர்சனத்தைப் பார்க்கலாம்.

விஸ்வரூபம்: ஒரு தனிப்பட்ட பார்வை

http://www.kalachuvadu.com/issue-159/page16.asp

சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் இந்த விமர்சனத்தில் ஜனரஞ்சக திரைப்படங்களை ஈடுபாட்டுடன் ரசிக்கும் மக்களைப் பற்றிய எள்ளல்களையும், மக்களைப் பற்றிய அங்கதத்தையும் தாண்டி விஸ்வரூபம் விமர்சனத்திற்கு வருவோம். வெகுஜன ரசனையைக் கிண்டல் செய்யாமல் தம் அறிவுஜீவித்தனத்தை எப்படி ஸ்தாபிக்க முடியும்?

“இந்தப் படம் தொழில்நுட்பத்திலும் அழகியலிலும் ஹாலிவூட் தரத்தில் இருக்கிறது என வியந்து போகிறவர்கள் அந்த மயக்கத்தில் ஹாலிவூட்டுடன் இணைந்துபோகும் இன்னுமொரு சமாச்சாரத்தை மறந்துவிடுகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியக் கருத்துகளுடன் இந்தியா ஒத்துப்போகிறது; அமெரிக்க அரசின் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பங்கெடுத்துக்கொள்ளவும் தன் புதிய வல்லரசுத் தன்மையை வெளிப்படுத்தவும் இந்தியா ஆர்வம் காட்டுகிறது.” தமிழ் மொழியை ஈஸ்சர்டிக்கையுடன் கையாள இயலாவிட்டால் எப்படி ஒரு குளறுபடி ஏற்படும்என்பதற்கு இந்த வாக்கியம் ஒரு சிறந்த உதாராணம். சுகிர்தராஜா சொல்ல வந்தது என்னவென்றால் பயங்கர வாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போரில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது என்ற கருத்து, தமிழைக் கையாளும் மயக்கத்தினால், அமெரிக்காவின் பயங்கரவாதத்தினை சுட்டுவதாக மாறிவிட்டது. (American war on terrorism என்ற ஆங்கில வாக்கியத்தின் மொழியாக்கம் நேர்முறையில் செய்யப்பட்டு எதிரான அர்த்தத்தை கொடுத்துவிட்டது.)

ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. இந்தியா அமெரிக்காவிற்கு ஒத்துழைப்புத் தருகிறது என்று சொல்ல வருகிறார். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஒத்துழைக்க வேண்டும் என்று இரு தேசங்களும் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டாலும் இது எந்த அளவு நடைமுறைப் படுத்தப் பட்டது என்று தெரியவில்லை.

வீஸ்வரூபம் ஒரு கற்பனைப் படம். அமெரிக்கா பற்றிய கனவுகள், கற்பனைகள் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகள் கடந்த அரை நூற்றாண்டாக கட்டி வளர்க்கப் பட்ட பிம்பம். அந்த பிம்பம் வெறும் கானல் நீரா அல்லது ஏதும் யதார்த்த அடிப்படை இருக்கிறதா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். முதலாவதாக அது தரும் சுதந்திரம். அது தரும் வாய்ப்புகள். இன்னமும் கூட மெக்சிகோ , கியூபா, லத்தீன் அமெரிக்கா என்று பலநாடுகளின் குடிமக்கள் சட்டபூர்வமாய் அல்லாமலும் கூட இங்கே குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கனவும் நிறைவேறி விட்டதா என்றால் இல்லை தான். ஆனால் எல்லா எதிர்பார்ப்புகளின் பின்னாலும் ஒரு கடுகளவு உண்மை இருந்தாக வேண்டும். நிருபமாவின் எதிர்பார்ப்பிற்குப் பின்னாலும் அந்த உண்மை இருப்பது போல் படம் செல்கிறது. வேறு நாடுகளில் அவளுக்கு இந்த வாய்ய்பும் சுதந்திரமும் கிடைத்திருக்குமா என்பது ஐயமே. இந்த எதிர்பார்ப்பு தவறா இல்லையா என்பதைக் காட்டிலும், இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறதா இல்லையா என்பது தான் யதார்த்தம் சார்ந்த கேள்வியாக இருக்க முடியும்:?

“சந்தேகத்தின் பேரில் அமெரிக்க அதிகாரி இந்திய வேவுத் தகவல் பிரிவைச் சேர்ந்த விஸ்வத்தை அடிக்கிறான். அடிவாங்கியது மட்டுமல்ல அடிவாங்கியபோது விஸ்வத்தின் அதிகாரி கொடுத்த சாக்குப்போக்கான விளக்கம் இதைவிடக் கேவலம்: இது தனிமனிதருக்கு நேர்ந்ததாக எடுத்துக்கொள்ளக் கூடாது, வர்த்தகத் தொடர்புடையது எனக் கூறுகிறார்.” மீண்டும் மொழியாக்கக் குழப்பம். “Nothing personal, just business” என்ற அமெரிக்க மொழிப்பேச்சு “வர்த்தகம்”: ஆகி விட்டது. இங்கே business என்பது வர்த்தகம் அல்ல. “எனக்குத் தனிப்பட்ட முறையில் உன்னிடம் ஏதும் பகைமை இல்லை , என் கடமையைத் தான் செய்தேன் ” என்ற அதிகாரியின் வார்த்தைகள் சுகிர்தராஜாவின் குழப்பத்தினால் வர்த்தகமாகிக் கேவலமாகவும் ஆகிவிட்டது.

“இந்தியா அமெரிக்காவுடன் ஒட்டிக்கொண்டது முதலாளித்துவக் கூட்டு என்றால் இது ஏகாதிபத்தியக் கூட்டு (crony capitalism).” என்ற சுகிர்தராஜாவின் வாக்கியத்தைப் படித்தவுடன் நான் வாய்விட்டுச் சிரித்தேன். அறுபதுகளில் லிபரேஷேன் போன்ற தீவிர இதழ்களில் புழங்கிய அரை வேக்காட்டு மார்க்சிய வாய்ப்பாடுகள் இன்னமுமா புழக்கத்தில் இருக்கின்றன? “அரையே அரைக்கால் முதலாளித்துவம்”, “முக்காலே மூணு வீசம் நிலப்பிரபுத்துவம் ” , “சமூக ஏகாதிபத்தியம்” என்றெல்லாம் புழங்கிய அர்த்தமற்ற அவதானிப்புகளும், அது குறித்த முடி பிளக்கும் விவாதங்களும், அந்த அவதானிப்பை அனுசரித்து எங்கள் புரட்சிகர செயல்பாட்டை அமைத்துக் கொள்கிறோம் என்று முழங்கிய அனைவரும் முனை மழுங்கி மங்கி மறைந்து போனபின்பும் எங்கோ லண்டனில் இந்த வார்த்தைகள் உயிர்ப்புடன் இருக்கின்ற தோற்றத்தை அளிக்கின்றன. சொல்லப் போனால் கோல்கேட் பற்பசை உபயோகிக்கிற ஒவ்வொருவனும், கோகா கோலா அருந்துகிற ஒவ்வொருவனும் crony capitalist தான். அல்லது capitalist crony தான்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் ஒத்திசைவான உறவு ஆப்கானிஸ்தான் குறித்து இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. சோவியத் யூனியன் ஆதரவு நிலையில் இருந்த இந்தியா, தலிபானுக்கும்- அதன் பின்பலமாகவும், இயக்கு சக்தியாகவும் இருந்த பாகிஸ்தானுக்கும்- எதிர் நிலையில் இருந்த இந்தியா , ஆப்கான் போரில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாக ஆதரிக்காவிட்டாலும், தாலிபான் படைகளால் துரத்தப்பட்ட ஆப்கன் அதிகாரிகளுக்கு புகலிடம் அளித்தது. அமெரிக்கா தாலிபானுடன் போரைத் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவின் தலிபானுடனான போர் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். இந்த ஒத்துழைப்பு இருந்தாலும் அதில் தவறு ஏதும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒத்துழைப்பினால் இரு நாடுகளும் , தம் முரண்பாடுகளைப் புதைத்துவிட்டு ஓருடல் இருயிராகிவிடும் என்று எந்த சமூக ஆய்வாளரும் எதிர்பார்க்க மாட்டார்.

“இந்தப் படத்தைப் பார்த்தால் அல் கொய்தா நவீனத்தின் முழு எதிரியல்ல எனத் தெரியவரும். நவீனத்தின் அபூர்வக் கண்டுபிடிப்புகள் எனச் சீராட்டப்படும் துப்பாக்கிகள், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பச் சாதனங்களான எண்ணியல் படக்கருவிகள், இணையம், வினைத் திறன்மிக்க கைபேசிகள், செயற்கைக்கோள் அலைவாங்கிகள் ஆகியவற்றை அவர்களுடைய தேவைக்காக உபயோகிக்கிறார்கள். அமெரிக்காவை அழிக்க அவர்கள் பாவித்த சீசியம்கூட நவீனத்துவத்தின் கண்டு பிடிப்புத்தான். அல் கொய்தாவின் நவீனத்தின் தழுவல் பகுதியளவான தெரிந்தெடுப்புத்தான். அல்கொய்தா இரண்டு காரியங்களில் நவீனத்தின் பாதிப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளுகிறது. ஒன்று பெண்களின் நிலை குறித்த அவர்களின் கருத்துகள். இவை ஒரு கரடான, கண்டிப்பான இஸ்லாமைப் போதிக்கிறது. இந்த இஸ்லாம் அல் கொய்தாவின் தனி வாசிப்பாகும். இறைத் தூதர் தம் காலத்து அரேபியப் பெண்களின் நிலையை வெகுவாக முன்னேற்றினார் என்பதற்குத் திருக் குரானில் வசனங்கள் உண்டு. இரண்டாவது திருக் குரானுக்கு மறுவிளக்கம் கொடுப்பதில் அல் கொய்தாவினரிடம் மிகக் கெட்டியான தயக்கமிருக்கிறது. தற்காலச் சமூகப் போக்குகள், விஞ்ஞான மாற்றங்கள், பாணிகளுக்கு திருக் குரானைக் கட்டுடைப்பதை எதிர்க்கிறார்கள். சீர்திருத்தச் சிந்தனையைத் தம் சொல்லாடலுக்குள் இணைத்துக்கொள்ளத் தயங்குகிறார்கள், தடைபோடுகிறார்கள்.” என்பது சுகிர்தராஜாவின் அவதானிப்பு. நவீனத்தினைப் பற்றியும் அதை அல் கொய்தா அமைப்பு எப்படி எதிர்கொள்கிறது என்பது பற்றியும் சுகிர்தராஜா சொல்வது இது.

ஆச்சர்யம் என்னவென்றால் இதே காலச்சுவடில் இதே விஸ்வரூபம் பற்றி எழுதும் அரவிந்தன் ” நவீன அம்சங்களை முற்றாக மறுதலிக்கும் அல்கொய்தா அமைப்பினரின் வாழ்க்கை முறை” பற்றிப் பேசுகிறார். எப்படி ஒரே படம், ஒரே அமைப்பு இரு முற்றிலும் வேறுபட்ட முறையில் இரண்டு விமர்சகர்களுக்குத் தோன்றியிருக்க முடியும்? சுவாரஸ்யமான இந்த முரண்பாடு நவீனத்தையும், நவீனத்தினை உள்வாங்கிக் கொள்ளும் மக்களையும் பற்றிய புரிதலின் பாற்பட்டது. நவீனம் என்றால் என்ன? வாழ்க்கைப் பார்வையா அல்லது புதிய பயன்பாட்டு உபகரணங்களின் பாவிப்பா? நுண் அலை அடுப்புகளையும், வேக ரயிலையும், விமானங்களையும் பாவிப்பதனால் மட்டுமே ஒருவன் நவீனன் ஆகிவிட மாட்டான். நவீனம் என்பது மாறுதலை சுவீகரிகும் ஒரு மனநிலை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல ” என்று மாறுதலையும், மாறுதலைக் கொண்டுவரும் நவீனத்தையும் ஏற்கும் ஒரு வாழ்க்கைப் பார்வை.

பன்றியின் ஈரலை பரிமாற்றம் செய்து உயிர் பிழைத்த மதப் பிரசாரகன் பரிணாம வளர்ச்சிக்கு எதிராக பேசுவது போன்ற ஒரு செயலை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த உடலுறுப்பு பரிமாற்றத்தின் பின்னால் உள்ள விஞ்ஞான உண்மை பரிணாம வளர்ச்சியின் ஒரு நிரூபணம் என்பது அவனுக்கு அனாவசியம். அதன் தத்துவத்தினை நிராகரித்துவிட்டு, அதன் பயன்பாட்டை மட்டும் அவனால் சுவீகரிக்க முடியும். இதில் எந்த முரண்பாடும் இருப்பதாய்க் கூட அவனுக்கு உணர்விருக்காது.

நவீன உபகரணங்கள் நவீனத்தின் பிரதிநிதியாக அல்ல, வெறும் பயன்பாட்டுக் கருவிகளாக மட்டும் பார்க்கப் படும் ஒரு நிலை இது. நவீனம் பற்றிய இஸ்லாமிஸ்டுகள் பார்வையை தொட்டுக் காட்டும் சில காட்சிகள் விஸ்வரூபத்தில் உள்ளன.

நவீனத்திடமிருந்து அல்கொய்தா விலகும் புள்ளிகள் இவை இரண்டு எனும்போது நவீனத்தின் திறந்த அறிவுத் தேடலில் அல்கொய்தா மனம் ஒப்பிப் பங்கேற்கிறது என்ற தொனி வருகிறது. இரண்டு விலகல்களைத் தவிர மற்றபடி நவீனத்தின் கருதுகோள்களுடன் அல் கொய்தா ஒத்துப் போகிறது என்ற கருத்து வெளிப்படுகிறது. இது பற்றிய அலசலை ஒரு முக்கிய காட்சியிலிருந்து தொடங்கலாம். நாசர் விஸாமிடம் “உனக்கு அரபு மொழி தெரியுமா” என்று கேட்கும் இடம். விசாம் “தெரியாது” என்று பதில் சொன்னவுடன், “குரான் ஓதுகிறாய் அல்லவா? ” என்று ஒரு திறந்த உரையாடலாக அதனை முடிப்பது.

ஒரு முஸ்லிமுக்கு அராபி மொழி தெரிந்திருப்பது கட்டாயமா? ஈரானிலும், துருக்கியிலும் அரபி மொழி கட்டாயமல்ல. மொழி பற்றிய ஒரு அதீத வழிபாட்டுணர்வை(fetishism) மதம் சார்ந்து ஏற்படுத்தும் ஒரு முயற்சி இது. இந்த வழிபாட்டுணர்வு பற்றி யோசிக்கும்போது நவீனம்,மற்றும் பொருந்தா வழிபாட்டுணர்வும் கொள்ளும் முரண்பாடு என்ற அடிப்படையான பிரசினை இது.

மொழி பற்றிய fetishism கூடவே மற்ற fetishism பற்றி நினைக்கத் தூண்டுகிறது. ஆண்கள் எல்லோரும் தாடி வைக்க வேண்டிய கட்டாயம். பெண்கள் முழு உடலையும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். சொர்க்கத்திற்குப் போகும் ஒருவன் தற்கொலைக்கு முன்பு உடல் முடியை மழித்துக் கொள்ளும் காட்சி. இன்னும் கடந்த காலத்தைக் கடந்து வராத ஒரு ஜனசமூகத்தின் வீழ்ச்சியில் எல்லா சமிக்ஞைகளும் , குறியீடுகளும் என்றோ நிகழ்ந்து முடிந்த சரித்திரத்தை நிரந்தரப் படுத்தும் ஒரு முயற்சியினால் உலகுடன் ஒட்டாது முடமாகி நிற்கும். அந்த முயற்சிக்கு முரணான எல்லா நவீனங்களும் மூர்க்கமாக நிராகரிக்கப் படும். நவீனத்தின் உபகரணங்களைக் கொண்டே அவை தோற்கடிக்கப் படும். (இதை எழுதும்போது இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. தமிழ்நாட்டில், ஒட்டகங்கள் இறக்குமதி செய்யப்படு குர்பானி அளிக்கப்படுகின்றனவாம் இயங்கியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் பேசும் இடதுசாரிகள் வரலாற்றை மறுக்கும் இஸ்லாமிஸ்டுகளுக்கு கொடி பிடிக்கிறார்கள்.)

சுகிர்த ராஜா கடைசிப் பகுதியில் ஒரு கலைஞனின் பணி பற்றியும், எதிர்ப்பு உணர்வின் வெளிப்பாட்டில் இருக்கும் உள்ளார்ந்த வலு பற்றியும் பேசுகிறார். மிக வலிமையாக வெளிப்படிருக்கும் இந்தப் பகுதி ஏன் விஸ்வரூபம் விமர்சனத்தில் இடம் பெற்றிருக்கிறது என்று யோசிக்கிறேன். A poet’s work is to name the unnameable, to point at frauds, to take sides, start arguments, shape the world, and stop it going to sleep. விஸ்வரூபம் இந்தப பணியினைச் செவ்வனே செய்வதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. சுகிர்தராஜா என் இந்த எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறாரா என்று தெரியவில்லை.

Series Navigationதமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5
author

கோபால் ராஜாராம்

Similar Posts

2 Comments

 1. Avatar
  smitha says:

  Gopal,
  I am suprised that you have seen things in the film which even kamal would not have even thought of. Shows you are a die hard fan. That is the first death knell for objectivity.

  வீஸ்வரூபம் ஒரு கற்பனைப் படம் – It is not. Originally there was a dsiclaimer that the story os based partially n facts, but due to opposition from muslims, kamal changed it.

 2. Avatar
  punaipeyaril says:

  கமல் திறமையாள சாதனையாளர் தான், ஆனால், பழுதற்ற படம் முழுதாய் தேவர்மகன், மைக்கேல் மதன், என்று சில வந்துள்ளன. பிறவற்றில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என யதார்த்தமற்ற தன்மையே மேலோங்கியிருக்கும். டான்ஸ் முடிந்து கிளம்பும் பெண்கள் காலில் விழும் காட்சி, விசுவுடன் வரும் அந்த ரா பெண்ணின் நடிப்பு முறைகள், நேராக நடக்காமல் இடித்துக் கொள்ளுதல், டெம்ப்ளேட் பாணி வசனங்கள் என பல பல… படம் சிரைத்தையுடன் இருப்பினும் கமலின் அதே பாணி தான். இதற்கு மேல் விஸ்வரூபத்திற்கு ரூபம் தர முடியாது எனும் அளவிற்கு எழுதப்பட்டாயிற்று..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *