அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 35 of 40 in the series 26 மே 2013


தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

gaurikirubanandanபதினைந்து நாட்களாய் பீடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாவனாவின் தொகுதியில் சில ஆயிரக்கணக்கான பீடி தொழிலாளர்கள் வசித்து கொண்டிருந்தார்கள்.’அதில் நிறைய பேர் பெண்கள்தான். அவள்களுடைய ஓட்டுக்கள் தான் அவளுக்கு நிறைய கிடைத்தன. பாவனா அவர்கள் சார்பில் சமரசம் பண்ண ,முயன்றாள்.
“மேடம்! நீங்கள் எங்கள் நிலைமையைக் கூட புரிந்து கொள்ளணும். பீடி உற்பத்தியில் வரும் லாபம் மிகவும் குறைவு. இப்போ கூலியை அதிகரித்தால் பீடியின் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும்” என்றார் பேக்டரி முதலாளி.
“கடந்த வருஷத்தில் நீங்க நான்கு முறை விலையை உயர்த்தி இருக்கீங்க. உங்கள் லாபத்தில் பங்கு கொடுக்காமல் இருப்பது அநியாயம் இல்லையா?”
“லாபம் எங்கே அதிகமாச்சு ,மேடம்,? ஒரு பக்கம் இலையின் விலையும், இந்தப் பக்கம் புகையிலையின் விலையும் எவ்வளவு உயர்ந்து இருக்குன்னு பாருங்கள்” என்று காகிதத்தை அலட்சியமாய் முன்னுக்குத் தள்ளினான்.
பாவனா அந்த காகிதத்தை இரண்டு வினாடிகள்தான் பார்த்தாள்.
“இந்த கணக்கெல்லாம் தவறு. இன்கம்டாக்ஸ் காரர்களுக்கு காட்டுவதை எனக்குக் காட்டாதீங்க. பீடி இலைகள் நம் நாட்டிலேயே கிடைப்பவைதான். நீங்க போட்ட ரேட் மட்டும் குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு சப்ளை பண்ணுவது. நீங்க போட்டிருக்கும் புகையிலையின் விலை மார்கெட் ரேட். நாங்கள் தரும் கண்ட்ரோல் ரேட் இல்லை. இதைக் கொண்டு உங்கள் லாபம் எவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்லட்டுமா?”
அவன் முகம் வாடி விட்டது. இருபத்தைந்து வயதே உடைய இந்தப் பெண், அரசியலுக்குப் புதிது, இவ்வளவு விஷயங்களை சேகரித்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கவில்லை.
“சாரி மேடம்! எங்க செகரெட்ரி தெரியாமல் தவறு செய்திருப்பார். சொல்லுங்கள், இப்போ என்ன செய்யச் சொல்றீங்க?”
“கூலியை பத்திலிருந்து பதினைந்திற்கு உயர்த்துங்கள். கட்சியின் நிதிக்கு ஐம்பதாயிரமும், பெண்கள் நல நிதிக்கு பத்தாயிரமும் கொடுங்கள். பீடி விலையை பதினைந்து பைசாவுக்கு உயர்த்துங்கள்.”
“ரொம்ப கஷ்டம். அது போதாது மேடம்.”
“அப்படி என்றால் பேக்டரியை அரசாங்கம் உடைமையாக்கிக் கொண்டு விடும். இதை நான் சொல்லவில்லை. முதலமைச்சர் சொன்னது தான்.”
அரைமணியில் எல்லாவற்றுக்கும் சம்மதித்துவிட்டுப் போனார் அவர். பாவனா லேபர் யூனியன் செகரெட்ரியை அழைத்தாள்.
“நிர்வாகம் சம்மதிப்பதாய் இல்லை. கூலி இரண்டோ மூன்றோ உயர்த்துவதாக சொல்கிறார்கள்.”
“வேலை நிறுத்தம் தொடரும்” என்றான் அவன்.
“அதனால் லாபம் என்ன?” கேட்டாள் பாவனா. “கைவசம் உள்ள சரக்கை பிளாக்கில் விற்றுக் கொள்வார்கள் அவர்கள். எவ்வளவு நாட்களுக்கு பட்டினி கிடப்பீங்க?”
“லாபம் இல்லை மேடம். தொழிலாளர்களை குறைவாக எடை போடாதீங்க.”
அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள். இந்தப் பக்கத்தில் நிர்வாகத்தினரும், அந்தப் பக்கம் யூனியனும் சரி இரண்டு பேரும் பொய்யும் பித்தலாட்டமும் தான். செகரெட்ரி கையில் பத்தாயிரம் விழுந்தது.
“கூலியை ஐந்து ரூபாய் உயர்த்துவதற்கு சம்மதிக்க வைக்கிறேன். உங்கள் யூனியனை எங்கள் கட்சியுடன் இணைக்கச் செய்யுங்கள்.”
சந்தோஷமாய் ஒப்புக் கொண்டான் அவன்.
“நாளைக்கு உங்கள் சேரியில் மீட்டிங் ஏற்பாடு செய்யுங்கள். நான் வந்து பேசுகிறேன்.’
“சரி மேடம்.”
மேடையேறி ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தாள் பாவனா.
“ஐந்து ரூபாய் கூலி உயர்த்துகிறோம்” என்று சொன்னதுமே கைத்தட்டல் ஒலி வானை எட்டியது. “உங்கள் உடல்நலம் பற்றி கூட யோசித்து வருகிறோம். விரைவில் புதிய காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். புகையிலை ஒவ்வாமையினால் ஏற்படும் நோய்களை குணமாக்குவதற்கு இந்தச் சேரியில் சிறப்பு டிஸ்பென்ஸரியைத் திறக்கப் போகிறோம்.”
ஐந்து நிமிடங்கள் வரை அந்த எல்லையில் வாழ்த்து முழக்கங்கள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
கூட்டம் வெற்றிகரமாய் முடிந்தது.
******
தமிழகத்தைப் புயல் மூன்று நாட்கள் உலுக்கி எடுத்துவிட்டது.
முக்கியமாய் கடலோரப் பிரதேசங்கள் அதிகமாய் பாதிக்கப் பட்டன. இயற்கை சீற்றமடைந்தால் என்ன விளைவு ஏற்படும் என்று அந்த எல்லைகளில் சுற்றுப் பயணம் செய்து பார்த்தால் புரியும்.
பசி குடலைப் பிடுங்கும். மனித நேயம் நசிந்து போய்விடும். இறந்து உப்பிப் போயிருக்கும் உடல்களிலிருந்து நகைகளை கையாளும் காட்சிகள் ஒரு புறம், இறந்து விட்டவர்களை அதிர்ஷ்டசாலிகளாக எண்ணி, பிழைத்துக் கரையேறியதற்காக வருந்தும் துரதிர்ஷ்டசாலிகள் இன்னொரு புறம். இழந்தது உடையாக இருக்கலாம். கயிற்றுக் கட்டிலாகவும் இருக்கலாம். திரும்பவும் சம்பாதித்துக் கொள்வதற்கு பல ஆண்டுகள் பாடுபட வேண்டியிருக்கும்.
முதலமைச்சர் அந்த இடத்தில் கேம்ப் போட்டிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அந்த இடத்திற்கு வந்து சேரும் போது மாநில அமைச்சர்களில் பலர் அங்கே கூடியிருந்தார்கள். மயானத்தில் பண்டிகை கோலாகலம் என்பது போல் டிவி. கேமிராக்கள், பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தால் அந்த இடம் சந்தடியாய் இருந்தது.
பாவனா முதல் பேட்சிலேயே அந்த இடத்திற்குப் போய்விட்டாள். நிருபர்களின் சலசலப்பு கேமிராக்காளின் சந்தடி இவற்றுடன் சம்பந்தம் இல்லாமலேயே வேலைகளை செய்து கொண்டிருந்தாள். வாலண்டியர்களை, ஊரில் இருந்த இளைஞர்களை திரட்டி வேலைகளை உத்தரவிட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் ஏதோ புரியாத கம்பீரமும், கண்களில் மிடுக்கும் இருந்தன.
எல்லாம் துடைத்துக் கொண்டு போய்விட்டது. எல்லோருக்கும் உதவி கிடைக்கும்படி பார்க்க வேண்டும். குடிசையில் இருப்பவன் வீட்டில் உள்ள எல்லோரையும் வரிசையில் நிற்க வைப்பான். சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொரு தடவை அனுப்பவும் தயங்க மாட்டான். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் தானே வந்து கொடுத்ததை கூச்சத்துடன் வாங்கிக் கொண்டு போவான். கொஞ்சம் மேல் மட்டத்தில் இருப்பவன் கைநீட்டி கேட்பதற்குத் தயங்கி தொலைவில் நின்றபடி பார்த்துக் கொண்டிருப்பான்.
பாவனா ஒவ்வொருவரிடமும் போய் விசாரித்து விட்டு உதவி பண்ணிக் கொண்டிருந்தாள். அவளிடமிருந்த உண்மையான அன்பு எல்லோரையும் கவர்ந்தது. அது முதலமைச்சரின் கவனத்தையும் ஈர்த்து விட்டது.. பத்து நாட்களின் உழைப்பு நற்பலன்களை கொண்டு வந்தாலும் அவளுடைய உடல்நலம் பாதிக்கப் பட்டுவிட்டது. ஜுர மயக்கத்தில் இருந்த அவளை சென்னைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். குணமாவதற்கு ஒரு வாரம் பிடித்தது. அவள் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய பொழுது நாடு முழுவதும் அவளைக் கொண்டாண்டிக் கொண்டிருந்தது. அதிகாரத்தில் இருக்கும் கட்சியை விமரிசிப்பதற்கு கடுகளவு வாய்ப்பு கிடைத்தாலும் தவற விடாத பத்திரிக்கை ஒன்று அவள் சேவைகளைப் பாராட்டி தலையங்கம் எழுதி இருந்தது.
பாவானாவுக்கு ரொம்ப திருப்தியாய் இருந்தது. விளம்பரதிற்காக அரசாங்கம் செய்ய வைக்கும் பாராட்டு விழாக்கள் இல்லை அவை. உண்மையான இதயத்திலிருந்து பொங்கி வெளி வந்த அன்பிற்கு எடுத்துக்காட்டு.
ஒரு பக்கம் பாவனா இவ்வாறு வேலைகளில் ஆழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் அமைச்சர்களின் கூட்டணி கவலையில் ஆழ்ந்து போகும்படியான ஆபத்து ஏற்பட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டிய ஹோம் மினிஸ்டர் மட்டும் சுற்றுப் பயணத்திற்கு வரவில்லை. அவர் சிபாரிசு செய்த நபருக்கு சேர்மன் பதவி கிடைக்கவில்லை. அதனால் விரோதம் ஏற்பட்டுவிட்டது. இதையே சாக்காய் வைத்துக் கொண்டு எதிர்கட்சியினர் அவருடன் பெச்சு வார்த்தைத் தொடங்கினார்கள்.
“அமைச்சர் கூட்டணியில் முக்கியமான பதவியில் இருக்கும் நபர இவ்வாறு எதிர்க்கட்சியுடன் கைகோர்ப்பது கட்சிக்கு பெரிய அடியாய் மாறக்கூடும். என்று கட்சித் தலைவர் எச்சரித்தார்.
“என்ன பண்ணலாம்?” முதலமைச்சர் யோசனையுடன் கேட்டார்,
‘அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும்.”
“மை காட்! அப்படி என்றால் கட்சியில் இருக்கவே மாட்டார்.”
“அவர் கட்சியில் எப்படியும் இருக்க மாட்டார். இப்போ அவர் தானாகவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே போய்விட்டால் மக்களுக்கு நடுவில் அவருடைய செல்வாக்கு பெருகிவிடும். நாமே முதலில் அவரை நீக்கிவிட்டோம் என்றால், அதற்குப் பிறகு அவர் கட்சியை விட்டு விலகிவிட்டாலும் ‘அமைச்சர் பதவி போய் விட்டதால் கட்சியை விட்டு விலகிப் போய்விட்டார்’ என்று பிரசாரம் பண்ணலாம்.”
அரசியலில் ஏற்ற இறக்கங்களை எத்தனையோ சந்தித்த முதலமைச்சர் கூட சிலையாய் தலைவரின் பக்கம் பார்த்தார். அரசியல் சதுரங்கத்தில் எந்த காயை எப்போ நகர்த்துவது என்று தெரிந்திருக்க வேண்டும். எதிரியை மூச்சுவிட முடியாதபடி வீழ்த்த வேண்டும்.
“ஹோம்மினிஸ்டரை நீக்கிவிட்டு….” கட்சித் தலைவர் மேலும் எதோ சொல்லப் போனார்.
“ஹோம் மினிஸ்டரை மட்டுமே இல்லை. அமைச்சர்களின் கூட்டத்தையே மாற்றி விடுவோம். கட்சி எதிர்ப்பு வாதிகள் எல்லோரும் ஒரேயடியாடியாய் போய்விட்டால் கட்சி மேலும் வலுவாக இருக்கும்.” என்றார் முதலமைச்சர்.
“இந்த யோசனையும் நன்றாகத்தான் இருக்கு” என்றார் கட்சித் தலைவர்.
*******
அதே சமயத்தில் பாவானா வெளியே தோட்டத்தில் இருந்தாள். நேரம் பதினொன்றரைத் தாண்டிவிட்டது. தோட்டம் முழுவதும் நிலா வெளிச்சத்தில் தோய்ந்து இருந்தது. பார்க்க வேண்டிய பேப்பர்களை எல்லாம் பார்த்துவிட்டு, பதில் தர வேண்டியவற்றை குறித்துக் கொண்டு பக்கத்தில் வைத்தாள். தூக்கம் வராததால் எழுந்து வெளியே வந்தாள்.
அந்தத் தோட்டத்தைப் பார்க்கும் போது அவளுக்குச் சிறுவயது நினைவுக்கு வந்தது. போட்டிப் போட்டுக்கொண்டு தங்கைகளுடன் சேர்ந்து தொட்ட வேலை செய்தது நினைவுக்கு வந்தது.
அசெம்பிளி மெம்பர் ஆன பிறகு மக்களுக்கு இடையிலும், கட்சியிலும் நல்ல பெயர் எடுத்து விட்டிருந்தாள். எல்லோருக்கும் வேண்டியவளாக இருந்தாள். ஆனாலும் ஏதோ அதிருப்தி. ஆனால் அந்த அதிருப்தி சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொள்ள யாருமே இல்லை என்பதால் வந்தது அல்ல.
ஒரு பக்கம் தொழிலாளர்களை, இன்னொரு பக்கம் முதலாளிகளை சிதறடித்து லஞ்சத்தைக் காட்டி சமரசம் பண்ணி வைப்பதும், கட்சிக்கும், கட்சி நலநிதிக்கும் லாபத்தை ஏற்படுத்துவது… “பதவி” என்றால் இதுதானா?
ஒருகாலத்தில் பாஸ்கர் ராமமூர்த்தி குடித்து விட்டு வந்த போது, அரசாங்கம் இதை ஏன் தடை செய்யவில்லை என்று நினைத்துக் கொள்வாள். இப்பொழுது அரசின் சார்பில் அந்தத் தொழில்களை எல்லாம் ஊக்கப் படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டமும், ஜீவன ஆதாரமும் காரணங்கள்!
இதுதானா தன்னுடைய வெற்றி?
பரமஹம்சா பத்து பேர் பெண்களை ஏமாற்றி வெற்றியைச் சாதித்து விட்டதாக நினைக்கிறான். தானோ கோடிக் கணக்கான மக்களை நம்பச் செய்து வெற்றியைச் சாதித்து விட்டதாக நினைக்கிறாள். “பிறருக்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. கேட்டது மட்டும் செய்யாமல் இருந்தால் போதும்” என்பது ஒரு காலத்து கொள்கை. “பிறருக்கு தீமை செய்யாமல் இருப்பது சாத்தியப் படாது. கொஞ்சம் பேருக்காவது நல்லது பண்ணு. அதுதான் உன் பெருந்தன்மை” என்பது இன்றைய கொள்கையாகிவிட்டது
‘ஏன் இவ்வளவு எதிர்மறையாக யோசிக்கிறாய்? ஒன்றுமே செய்ய முடியாத இயலாமை நிலையிலிருந்து இந்த அளவுக்காவது செய்ய முடிந்ததே என்ற திருப்தி இல்லையா?’ கேட்டது மனசாட்சி.
‘எங்கிருந்து எதுவரையில் இந்தப் பயணம்?’ என்று கேட்டது சோர்வு.
கள்ளமில்லாமல் மரத்தின் நிழலில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைப் பருவம். அன்பையும், அபிமானத்தையும் குழைத்து கோலமிட்ட அந்த வீட்டுமுற்றத்தில் கழித்த வாழ்க்கையின் முதல் பக்கங்கள்! சுந்தரியின் நெருக்கம், சைலஜாவின் நட்பு, துளிர்த்தவுடன் கிள்ளியெறியப்பட்ட முதல் காதல்! வசந்தி, சாஹிதி, பரமஹம்சா!
சாஹிதியின் நினைப்பு வந்ததுமே “பாவம், அந்தப் பெண் என்ன செய்கிறாளோ?” என்று நினைத்துக் கொண்டாள். தான் தூண்டிவிட்ட தைரியத்தில் அந்தப் பெண் கடைசி வரையிலும் பரமஹம்சாவை எதிர்த்து நிற்பாளா? தாய் பக்கத்து தாக்குதல் அதிகரித்துவிட்டால் திரும்பவும் தளர்ந்து போய்விடுவாளா? பாவனா இந்த விதமான யோசனைகளில் ஆழ்ந்திருந்த போதே போன் மணியடிக்கும் சத்தம் கேட்டது. அவள் உள்ளே போய் ரிசீவரைக் கையில் எடுத்து “ஹலோ!” என்றாள்.
“கங்கிராட்சுலேஷன்ஸ்! உன்னை ஹோம் மினிஸ்டராய் தேர்ந்தெடுக்க இப்பொழுதுதான் முடிவு செய்திருக்கிறோம்.” மறுமுனையிலிருந்து முதலமைச்சரின் குரல் கேட்டது. அவளுக்குத் தான் கேட்டதை நம்புவதா, கூடாதா என்று புரியவில்லை. அவள் நிலைமையைப் புரிந்து கொண்டாற்போல் “கேபினெட் முழுவதையுமே மாற்றிவிட்டு, எல்லோரையும் புதிதாக எடுத்துக் கொண்டோம். இப்பொழுதுதான் லிஸ்ட் பைனலைஸ் பண்ணினோம்” என்று அவர் சொல்லிக் கொண்டே போனார்.
பாவானா கேட்டுக்கொண்டே ஜன்னல் வழியாய் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சீட்டுக்கட்டில் சீட்டுகள் ஒன்று சேர்ந்தாற்போல் வாழ்க்கையில் ஆனந்தமும் துக்கமும் கலந்த சங்கமம்.
நிலா வெளிச்சத்தைப் பேலாவில் நிரப்பி வைத்துக்கொண்டு ஒரு தேவதை மேகத்தின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு பூமியை நோக்கித் தெளித்துக் கொண்டிருந்தாற்போல் வீட்டின் முன் எல்லையெல்லாம் பாலாய் காய்ந்து கொண்டிருந்தது வெண்ணிலவு.
32
நடந்து கொண்டிருக்கும் விஷயங்களைப் பார்த்துக்கொண்டே, வெறுமே உட்கார்ந்திருக்கும் பார்வையாளனைப் போன்றவன் இல்லை பரமஹம்சா. தன் பக்கத்து ஆயுதங்களை சேகரித்துக் கொள்ளக் கூடியவன்.
“பரமஹம்சா சீரியஸ். ஸ்டார்ட் இம்மீடியட்லீ” என்று தந்தியைக் கொடுத்து தாயையும், மகளையும் திரும்பி வரவழைத்துக் கொண்டான். அவன் உடல் நலம் சரியாக இருக்க வேண்டும் என்று ஆயிரம் தெய்வங்களை வேண்டிக்கொண்டே வந்தாள் நிர்மலா.
“என்னை இப்படி நட்டாற்றில் தள்ளிவிட்டு போய்விடலாம் என்று இருந்தாயா நிர்மலா?” இரக்கம் தொனிக்கும் குரலில் கேட்டான்.
“ஐயோ! என்ன பேச்சு இது?” என்றாள்.
“பின்னே வீட்டைக் காலி பண்ணச் சொல்லி லாயர் நோட்டீஸ் வந்ததே? இதெல்லாம் என்ன?”
“நோட்டீஸா? எனக்கொன்றும் தெரியாதே? சாஹிதிதான் சொன்னாள். ‘நான்தான் மேஜராகிவிட்டேன் இல்லையா. இனிமேல் எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்று எனக்கு ஏனோ பயமாய் இருக்கு. அவள் ஒரு பைத்தியம். உங்க மனதை ஏதாவது கஷ்டப் படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.”
“சாஹிதி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“சாஹிதி என்றதும் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் யாரோ வந்து சாஹிதி உங்க மகள் இல்லை. பத்தாயிரம் கொடுத்தால், உங்கள் உண்மையான மகள் யார் என்று சொல்கிறேன் என்றான்.”
பரமஹம்சாவின் புருவம் முடிச்சேறியது “யார் அது” என்றான் கடுமையாய்.
“யாரோ பாஸ்கர் ராமமூர்த்தியாம்.”
‘அதுக்கு நீ என்ன சொன்னாய்?”
“உங்களைக் கேட்டுக் கொண்டு சொல்வதாய்ச் சொன்னேன்.”
“நல்ல வார்த்தைச் சொன்னாய். பணம் படைத்தவர்கள் மீது லட்சம் பேருக்கு கண் இருக்கும். அதை எந்த விதத்திலாவது கறக்கப் பார்ப்பார்கள். அதுசரி, நான் வந்த காரியத்தையே மறந்துவிட்டேன். நீ உங்க சொத்து அத்தனைக்கும் என்னை கார்டியனாய் நியமித்து எழுதிக் கொடுத்த பேப்பர்கள் இவை. நீயே எடுத்துக் கொள்.”
நிர்மலா திக்பிரமை அடைந்தவளாய், “இதெல்லாம் எதுக்கு?” என்றாள்.
“உங்க சொத்துக்கு நான் ட்ரஸ்டியாய் இருப்பது சாஹிதிக்குப் பிடிக்கவில்லை போலிருக்கு. இதில் அவளுடைய தவறுகூட எதுவும் இல்லை. அவள் சொன்னது போல் அவளும் பெரியவளாகி விட்டாள் இல்லையா?”
நிர்மலா பெரிதாக அழுதுகொண்டே “அப்படி எல்லாம் சொல்லாதீங்க. அதைவிட என்னைக் கொன்றுப் போட்டு விடுங்கள். நன்றாக இருக்கும்” என்றாள்.
“இல்லை நிர்மலா. நான் இதையெல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டுத் தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இந்தச் சொத்தெல்லாம் நீ சொந்தமாக சம்பாதித்தது இல்லை. சந்திரனுடையது. அவன் மகளான சாஹிதி அதை தன் விருப்பம் போல் அனுபவிக்கலாம். உன்னை ஏமாற்றித் தன் சொத்தை நான் அபகரித்துவிட்டேன் என்று நாளைக்கு போலீஸில் புகார் கொடுத்தால் கஷ்டமாகிவிடும் இல்லையா? இப்பொழுதெல்லாம் சாஹிதியின் நடவடிக்கையைப் பார்த்தால் அதற்குக்கூட துணிந்து விடுவாள் என்றுதான் தோன்றுகிறது.”
“என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அந்தக் காரியத்தைப் பண்ண விடமாட்டேன்.”
“கடவுளின் உத்தரவு இருந்தால் உயிர் போவது அத்தனைக் கஷ்டம் ஒன்றும் இல்லை நிர்மலா” என்று தன் கையில் இருந்த காகிதங்களைக் கிழித்தெறிந்தான். நிர்மலாவின் திருமணம் பரம்ஹம்சாவுடன் நடந்த போது சாஹிதி எழுதிக் கொடுத்த பவர் ஆப் அட்டார்னி கடிதங்கள் அவை.
அவன் சொன்னது போல் அவற்றை சாஹிதி எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம். அவற்றுக்கு மதிப்பு இல்லை.
“உனக்கு என் வார்த்தையின் மீது மதிப்பு இருந்தால் இதோ, இதில் கையெழுத்துப் போடு” என்று மேலும் சில காகிதங்களை அவளுக்கு முன்னாள் தள்ளினான். அவள் அவற்றில் கையெழுத்துப் போட்டாள்.
“என்னெவென்று நீ ஏன் கேட்கவில்லை?”
“நீங்கள் சாட்சாத் கடவுள்! உங்களைக் கேள்வி கேட்பதா?”
“ஆனாலும் சொல்ல வேண்டிய கடமை என்னைச் சேர்ந்தது. சொத்து முழுவதும் சாஹிதியின் கணவனைச் சேரவேண்டும் என்றும் சாஹிதிக்கு அதன் மீது உரிமை இல்லை என்றும், கல்யாணம் ஆகும் வரையில் சொத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைப்பதாயும் நீ எழுதிக் கொடுத்த பேப்பர்கள் இவை. புரிந்ததா?”
“சாஹிதி உங்களுக்கு ஏதோ ரொம்ப கொடிய அபராதம் செய்திருக்கிறாள். இல்லாவிட்டால் உங்களுக்கு இவ்வளவு கோபம் வராது.” கவலையோடு சொன்னாள் நிர்மலா.
“கோபம் இல்லை. கஞ்சா மயக்கத்தில் மிதந்து கொண்டிருக்கும் சாஹிதியைக் காப்பாற்றுவதற்குத்தான் இந்த முயற்சி எல்லாம். என்னை நம்பு நிர்மலா.”
வானமே இடிந்து தலையில் விழுந்தாற்போல் அதிர்ச்சி ஏற்பட்டது நிர்மலாவுக்கு. “என்னது?” என்றாள் திக்பிரமை அடைந்தவளாய்.
“ஆமாம். அதற்காகத்தான் நான் ஜாக்கிரதையை மேற்கொண்டேன். சாஹிதி கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கும் விஷயம் எனக்கு என்றோ தெரியும். நான் கடவுளிடம் கேட்டேன். “சுவாமி! நான் நடமாடும் இடத்தில் இப்படிப்பட்ட பாதகம் நடப்பது நியாயமா?’ என்று கர்மபலனை அனுபவிக்காமல் தீராது சாஹிதிக்கு கல்யாணம் ஆகும் வரையில் இந்தப் பழக்கம் போகாது என்றார். அதனால்தான் அதுவரையில் இந்தச் சொத்து அவள் கைக்குக் கிடைக்கக் கூடாது என்று என்னைக் கொண்டு இதுபோல் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டேன். சாஹிதியின் கல்யாணம் இன்னும் ஆறுமாதத்தில் நடக்கப் போகிறது. அன்று முதல் உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பித்து விடும்.”
“.என் கண்முன்னால் வளர்ந்து பெரியவளான என் மகள் சாஹிதி, போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டாளா?”
“ஆமாம் நிர்மலா. அதனால்தான் அவளுக்கு சல்லிக்காசு கூட கிடைக்கக் கூடாது என்றும், அவள் கணவனுக்கு சொத்து போய்ச் சேரும் வரையிலும் நான் கார்டியன் என்றும் உன்னைக் கொண்டு எழுத வைத்தேன். உன் மகள் போதைபொருளுக்கு அடிமையாகி விட்டாள் என்றும், சுயமாய் முடிவெடுக்கும் நிலையை இழந்து விட்டாள் என்றும்கூட இந்தப் பேப்பர்களில் குறிப்பிட்டு உள்ளேன். உங்க குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆறு மாதத்திற்குள் சாஹிதியை திருத்தி வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. அதைப் பற்றி நீ கவலைப் படாதே.”
அவள் குனிந்து அவன் பாதங்களில் விழுந்தாள். “உங்களுக்கு என் நன்றியை எப்படி எடுத்துச் சொல்லுவேன்?” என்றாள்.
அவன் இரக்கம் ததும்பச் சிரித்தான். (தொடரும்)

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11வளைக்காப்பு
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *