வேர் மறந்த தளிர்கள் 3

This entry is part 40 of 40 in the series 26 மே 2013

3 சிறிய குடும்பம்

மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன.

வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை மன்னர்களும் அங்கு வெறுமனமே சுற்றித்திரியும் கோலங்களைக் காண முடியாது.

காவல் துறையினரின் கண்காணிப்பினால் மட்டுமல்லாமல் குடியிருப்பைச் சுற்றி நவீன பாதுகாப்பு வேலிகள் பொறுத்தப்பட்ட அம்சங்கள் நிறைந்த அப்பகுதி யாதொரு பதற்றமும் இன்றி அமைதிப் பூங்காவாக மிளிர்ந்து கொண்டிருந்தது.

தனி நிலம் கொண்ட பங்களா வீடு என்பதால் வீட்டைச் சுற்றித் தாராளமாக இடம் இருந்தது. அந்தக் காலி இடத்தை அம்மா முழுமையாகப் பயன் படுத்தியிருந்தார். தம் ஓய்வு நேரத்தில் வீட்டைச் சுற்றி மரங்களையும் பூச்செடிகளையும் நட்டுவைத்திருந்தார். நடப்பட்டிருந்த அழகிய மரங்கள்,பல்வேறு பூச்செடிகள் அதிலும் குறிப்பாகச் செம்பரத்தைப் பூச்செடிகளில் பூத்திருந்த மஞ்சள்,சிவப்பு,வெள்ளை,ஊதா வண்ணங்களில் பெரிய வகை மலர்கள் இலேசான பனியில் நனைந்து காணப்படுகின்றன.

பூஞ்சோலையாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அங்கே மஞ்சள் கறுப்பு வர்ணம் கலந்த தேன்சிட்டுகள் கீச்சிட்டவாறு மலருக்கு மலர் பறந்து சென்று தேனை உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தன.பல வண்ணத்துப் பூச்சிகளும் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களுக்குப் பறந்து சென்று தன் நுண்ணிய அலகுளால் தேனை உறிஞ்சிக் கொண்டிருந்தன.

தன் அறை சன்னல்வழி வெளிப்புறக் காட்சிகளைத் தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறான்.அம்மா ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கிறார்.எந்த வேலையானாலும் அவருக்குச் சரியாக இருக்க வேண்டும்.சிறிய குறை என்றாலும் எளிதில் அவர் விட்டுக்கொடுக்க மாட்டார்.பிழையென்றால் கணவர் என்றாலும் சமரசத்துக்கு உடன்படமாட்டார்.

எல்லாவற்றிலும் நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும். ஒழுங்கு வாழ்க்கையில் அவசியம் இருக்க வேண்டும்; அது உயிர் என்பார். குடும்பத்தில் யாரும் சோம்பல் படுவதை அவர் ஒருபோதும் ஏற்க மாட்டார்.எறும்பைப் போன்று எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். இரவில் ஆறுமணி நேரம் தூங்கும் நேரத்தைத் தவிர அவர் ஓய்ந்திருக்கும் நேரத்தைப் பார்க்க முடியாது.

“பார்த்திபா……! இரவு நன்றாகத் தூங்கத் தெரிகிறது.படுத்தப் படுக்கை ஒழுங்கா எடுத்து வைக்க முடியாதா? கழுத வயசு ஆயுடுச்சினுதான் பேரு ஒழுங்கு உன்னிடம் மருந்துக்குக் கூட ஒழுங்கு இல்லை. உன் வேலையை நீதானே செய்யனும்? பிறர் கையை எதிர்ப்பார்ப்பது சுத்தச் சோம்பேறித்தனம்!” என்று அம்மா மற்றொருநாள் படுத்தப் படுக்கையைச் சீர்செய்யாமல் போன அன்று பத்திரக்காளியாகக் காட்சியளித்த நாள் கொண்டு தனது வேலைகளைச் சுயமாகச் செய்து பழகிக் கொண்டான்.

அம்மா சொல்லும் போது மனம் வருந்தினான்.ஆனால், பின்னாளில் பல்கைக்கழகத்தில் அவன் மூன்றாண்டுகள் கல்வி பயின்ற வேளை யாருடைய உதவியையும் எதிர்ப்பார்க்காமல் சுயமாகத் தன் தேவைகளைப் பூர்த்திச் செய்துக் கொண்டபோது அம்மாவின் தொலை நோக்கப் பார்வையை எண்ணி மனதுக்குள் பாராட்டினான்.சுயகாலில் நிற்க வேண்டியதன் அவசியத்தை அன்றே அவர் வலியுறுத்தியதால் விளைந்த பயன்களைப் பார்த்திபன் நடைமுறையில் உணர்ந்து கொண்டான்.

பெரியதாக வாயைப் பிளந்து கோட்டுவாய் விடுகிறான்.இடது வலமுமாக தனது உடலை முறுக்கி சோம்பல் முறிக்கிறான்.அம்மா மாலையில் வந்து பார்க்கும் போது படுத்தப் படுக்கை ஒழுங்காக எடுத்து வைக்காமல் இருந்தால் அவர் திட்டத் தொடங்கி விடுவார்.எதற்கு வீண் வம்பு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவனாகப் படுக்கையைச் சீர்செய்கிறான். காலைக்கடனை முடிப்பதற்காகக் குளியல் அறையை நோக்கிச் செல்கிறான்.

அருகிலிருந்த சாப்பாட்டு அறையில் இருந்த மேசையைப் பார்க்கிறான்.அம்மா பசியாறிவிட்டு அவரது உணவு தட்டுகளைக் கழுவி ஒழுங்காகப் பாத்திரங்கள் வைக்க வேண்டிய இடத்தில் அடுக்கி வைத்துவிட்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டிருந்தார்! அப்போது மணி ஆறேமுக்காலைத் தாண்டிக் கொண்டிருந்தது! வழக்கமாக அப்பா தினகரன் ஆறு மணிக்கே அவரது அலுவலகத்திற்குப் புறப்பட்டிருந்தார்!

கிள்ளான் பட்டணத்திலிருந்து நாட்டின் தலைநகர் கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் காலை ஏழு மணி தொடங்கி ஒன்பது மணி வரையில் ஏற்படும் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டால் அரைமணி நேரத்தில் அமைய வேண்டிய விரைவுப் பயணம் இரண்டு மணி நேர ஆமைப் பயணத்திற்குள்ளாகி,வாகனத்தை இயக்குவதையே விட்டுவிடலாம் என்று எண்ணத்தோன்றும். வீணான மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவே பெற்றோர் இருவரும் நேரத்திலேயே அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட்டனர் !

எட்டு மணிக்குப் பார்த்திபனுக்கு வேலை தொடங்கிவிடும் ! சுவர்க்கடிகாரத்தைப் பார்க்கிறான் மணி ஏழரையைத் தொட்டுக் கொண்டிருந்தது! அலுவலகம் செல்ல இன்னும் அரை மணி நேரமிருந்தது. ஏன்தான் இன்றையப் பொழுது இவ்வளவு சீக்கிரத்தில் விடிந்ததே என்று எண்ணிக் கொள்கிறான்! உற்சாகத்தைத் தொலைத்தவன் போல் அலுத்துக் கொள்கிறான்.

குளித்து உடை மாற்றம் செய்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்கு வருகிறான். மேசை மீது அம்மா கலக்கி மூடி வைத்திருந்த நெஸ்க்காப்பி சில்லிட்டியிருந்தது. ரொட்டி,அதோடு,ஜேம்,காயா,பட்டர் என்று பசியாறிக் கொள்ள பலவித இனிப்புகள் வைத்திருந்தார்.தவறாமல் சாப்பிடப் பழங்களும் இருந்தன.மகன் வெறும் வயிற்றோடு வேலைக்குச் சென்றால் தெம்போடு வேலை செய்ய முடியாது என்று எண்ணம் அவருக்கு.

ஒரே மாதிரியான உணவு. உண்டு சலித்துப் போன உணவு வகைகளை மீண்டும் அன்றையக் காலைப் பொழுதில் பார்த்ததும் சலித்துக் கொள்கிறான்.இருந்த பசிக்கூட எங்கோ ஓடி மறைகிறது!

Series Navigationவிஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *