குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13

This entry is part 21 of 24 in the series 9 ஜூன் 2013

தன் அப்பா சொன்னபடி அவருடைய நண்பரைப் பார்த்துவிட்டு வந்திருந்த சங்கரன் திங்கள் கிழமையிலிருந்து அவன் வரலாம் என்று சொன்னதன் பேரில், இரவு எட்டரை மணிக்குப் பகுதி நேர ஊழியம் செய்ய அந்தக் கம்பெனிக்குப் போனான். நல்ல வேளையாக அவன் எட்டு மணிக்கு வேலை முடித்த அலுவலகத்துக்கு மிக அருகில் அது இருந்ததால், குறித்த நேரத்துக்கும் முன்னதாகவே அவனால் அங்கு செல்ல முடிந்தது.

.  .  .  தயாவைப் பேருந்தில் ஏற்றிவிட்டு, அவன் தான் வேலை செய்யும் இடத்தை யடைந்தான். வேலையே ஓடவில்லை.  எப்படியோ ஒரு வழியாக வேலைகளை ஒப்பேற்றிவிட்டு அவன் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு மணி பத்தேகால். அம்மா ராமலட்சுமி மட்டும் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா இது, சங்கர்? உங்கப்பா சொன்ன புது வேலையையும் ஏத்துண்டுட்டியா?”

“ஆமாம்மா,” என்றவாறு அவன் கால் கழுவப் போனான். அவன் திரும்பி வந்ததும், ராமலட்சுமி, “வாடாப்பா. சாப்பிட உக்காரு,” என்றவாறு தனக்கும் அவனுக்கும் தட்டுகளை எடுத்து வைத்துப் பரிமாறினாள்.

“நீ ஏம்மா இப்படிக் கொலைப் பட்டினி கிடக்குறே? படிச்சுப் படிச்சுச் சொல்லியாச்சு –  நீ சாப்பிட்டுறுன்னு.  கேக்க மாட்டேன்றே!,” என்று சலித்தவாறு அவன் சாப்பிட அமர்ந்தான்.

இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

“அப்பா எங்கேம்மா?”

“என்னமோ வாக்கிங் போயிட்டு வறேன்னு போயிருக்கா உங்கப்பா. உடம்புக்கு நல்லதாம். எல்லாரும் அவாவா உடம்பை நன்னாத்தான் பாத்துக்கறா. உன்னையும் என்னையும் தவிர!”

சங்கரன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிடலானான்.

“சங்கர்! இத பாரு. நான் சொல்றேனேன்னு கோவிச்சுக்காதே.. நீ எவ்வளவு கொண்டுவந்தாலும் இந்த வீட்டு தரித்திரம் தீரப் போறதில்லே. அதனால புதுசா இன்னைக்கு ஏத்துண்டிருக்கிற பார்ட்-டைம் வேலையை விட்டுடுப்பா!”

“முடிஞ்சுதுன்னா தொடர்ந்து போறேன். முடியாட்டா விட்டுர்றேம்மா..”

“உங்கப்பா கூட ஏதோ பார்ட்-டைம் வேலைக்குப்  போகப் போறாளாம்..”
“அட! நிஜமாவா?”

“ஆமா. பக்கத்துப் போர்ஷன்காரர்  கதிர்வேலு ஏற்பாடு பண்றேன்னிருக்காராம். டைப்பிஸ்ட் வேலை. தினமும் மூணு மணி நேரமாம்.”

“இத்தனை வயசுக்கு மேல என்னத்துக்கும்மா?”

“போகட்டுண்டா. வேலை பாத்த நாள்லே பாதிச் சம்பளந்தான் குடுத்திட்டிருந்தா உங்கப்பா. எத்தனை தரம் தப்புத் தண்டாப் பண்ணி மாட்டிண்டுட்டு சஸ்பெண்ட் ஆயிருக்கா உங்க அப்பா! என்னமோ பெரிசாப் பரிஞ்சுண்டு வறான்! . . . இன்னும் கொஞ்சம்  சாதம் போடட்டுமா?”

“சரி, போடு. ஒரு  எலுமிச்சங்காயளவு. . ..  . . என்னம்மா இது! எலுமிச்சங்காய் அளவுன்னு சொன்னா சாத்துக்குடி அளவுக்குப் போட்றே!”

“நன்னாச் சாப்பிடணுண்டா.”

“ராத்திரி வேளையில பிச்சைக்காரன் மாதிரி சாபிடணும்மா.”

“எனக்கும் தெரியுண்டா. அதெல்லாம் மத்தியானம் மகாராஜா மாதிரி சாப்பிட்றவாளுக்குத்தாண்டா.  நமக்கு இல்லே. எப்பப்ப எவ்வளவு கிடைக்கிறதோ அப்பப்ப சாப்பிட்டுக்ணும்.  .  . அது சரி, நேத்து யாரோ ஒரு பையன் உன்னைத் தேடிண்டு வந்தானே? எதுக்கு? நீ உடனே கெளம்பி வெளியில போயிட்டியா? ராத்திரியும் சீக்கிரம் படுத்துண்டுட்டே. அதான் இப்ப கேக்கறேன்.”

“ஆ·பீஸ் விஷயம்மா.  அது ஒரு ரகசியத் தபால். நாங்க ‘கான்·பிடென்ஷியல்’ னு  சொல்லுவோம். அவசரம் வேற. அதான் வீட்டுக்கே குடுத்து அனுப்பிட்டாங்க. ”

“உங்கப்பா என்னமோ உன்மேல சந்தேகப் பட்றா. கொஞ்ச தூரம் வரைக்கும் அவனைக் கூட்டிட்டுப் போய்த் தள்ளி நின்னு அவன் குடுத்த கவரைப் பிரிச்சியாமே?”

சங்கரனுக்கு முகம் சிவந்தது. “அதுக்கு என்ன இப்போ? திண்ணையில அப்பாவைத் தவிர குடித்தனக்காரா ரெண்டு பேரு இருந்தால்ல? அவா முன்னால அதைப் பிரிக்கணுமா நான்?”

சங்கரன் தேவைக்கு மேல் படபடத்ததாய் ராமலட்சுமிக்குத் தோன்றியது. ஆனால், பேசாமல் இருந்தாள்.

“என்னம்மா பேசாம இருக்கே? அப்பா ஏதானும் சொன்னாரா என்ன?”

“ஆமா. ‘லவ் லெட்டரா யிருக்கணும்’ அப்படின்னாடா உங்கப்பா. ‘அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காது’ ன்னேன். ‘லவ் லெட்டரை யாரானும் வீட்டுக்குக் குடுத்து அனுப்புவாளா? ஆ·பீஸ்ல பாத்துக் குடுக்க முடியுமே’  ன்னேன். உங்கப்பா ஒத்துக்கல்லே.  ‘சங்கர் அப்படியாப்பட்ட பிள்ளை இல்லே. கலியாணத்துக்கு ரெண்டு தங்கைகள் இருக்கிறப்ப அப்படியெல்லாம் தப்புவழிக்குப் போக மாட்டான்’ னேன்.”

தன் பொறுப்பு உணர்வின் மீது அம்மாவுக்கு நம்பிக்கை இருந்தாலும், உள்ளூற அவளும் சந்தேகப் படுவதாய் அவனுக்குப் பட்டது.  அவன் ஒன்றும் சொல்லாது, தட்டின் மீது பார்வையைப் பதித்தவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

“என்னடா, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறே?”

“அதான் சொல்லியாச்சே, ஆ·பீஸ் விஷயம்னு? இன்னும் என்ன சொல்லச் சொல்றே?”
“கோவிச்சுண்டுட்டியா என்ன?”

“சேச்சே! .  .  அப்படியே ஏதானும் இருந்தாலும், ஜானகிக்கும் பவானிக்கும் ஒரு வழி பண்ணாம நான் கலியாணம் பண்ணிண்டு போயிட மாட்டேம்மா. என்னை நம்பு . . . குறைஞ்ச பட்சம் ஜானகிக்காவது பண்ணிட்டுத்தான்!”

அவனது முகத்துச் சிவப்பு ராமலட்சுமியின் கவனத்துக்குத் தப்பவில்லை. ‘ஏதோ விஷயம் இருக்கிறது’ என்று அது அவளை எண்ண வைத்தது. அது அவளை ஒரு வகையில் மகிழ்ச்சியில்தான் ஆழ்த்தியது.

ஆனால், அவ்வாறு சொல்லி முடித்த மறு கணமே, சங்கரன் நாக்கைக் கடித்துக்கொண்டான். ‘இப்படிப் பேசிவிட்டேனே? அதன்படி நடக்க முடியுமா? தயாவின் கலியாணத்துக்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையில்  –  அவள் சொன்ன வழியை ஏற்க வேண்டிய கட்டாயம் வந்தால்  –   இப்போது நான் சொன்னதெல்லாம் சுத்தப் பொய் என்றல்லவா ஆகிவிடும்? அது எவ்வளவு பெரிய மானக்கேடு!’

“என்னடா யோசனை?”

“ஒண்ணுமில்லேம்மா. மோரை விடு. சாப்பிட்டுட்டுப் போய்ப் படுக்கணும்.”
அதன் பிறகு இருவரும் அது பற்றி எதுவும் பேசவில்லை.

சாப்பிட்டு முடித்துக் கை கழுவிய பின் அவன் மொட்டை மாடிக்குகுப் போய்ப் படுத்துக்கொண்டான். தரையை மோந்ததும் அவனை ஆட்கொள்ளும் உறக்கம் இன்று வருவேனா என்றது. அவன் நீண்ட நேரம் புரண்டுகொண்டே இருந்தான். விளையாட்டுத்தனமாய்த் தான் சொன்ன ராமகிருஷ்ண பரமஹம்சர் –  சாரதா தேவியின் வாழ்க்கை முறைப்படி நடத்தல் மட்டுமே தங்கள் பிரச்சினை தீரும் வழியோ என்று அவன் நினைக்கத் தலைப்பட்டான். சற்று முன்னர் அம்மாவிடம் சொன்ன பொய் அவனை அலைக்கழிக்கலாயிற்று. ‘உண்மையைச் சொல்லி யிருந்திருக்கலாம். ‘ஒரு பெண்ணை நான் கலியாணம் செய்துகொள்ள இருக்கிறேன். ஆனால் இப்போது இல்லை. நம் வீட்டுப் பெண்களில் ஒருத்திக்கேனும் முடித்த பிறகுதான்’ என்று சுருக்கமாகச் சொல்லி யிருக்கலாம். எப்படியும் சொல்லியாக வேண்டிய நிலை வரத்தான் போகிறது. அப்போது என் முகத்தில் டன் டன்னாக அசடு வழியப் போகிறது!.  .  . இப்போது புலம்பி என்ன செய்ய?’

.  .  . வெகு நேரத்துக்குப் பிறகு அவன் தூங்கிப் போனான்.

பத்தரை மணிக்கு மேல் வீடு திரும்பிய தரணிபதி மனைவியிடம் எடுத்த எடுப்பில் கேட்ட கேள்வி, “சங்கரன் வந்துட்டானா?” என்பதுதான்.

“ம். . . மொட்டை மாடிக்குத் துங்கப் போயாச்சு.”

“மொட்டை மாடியில படுத்தா உடம்புக்கு ஆகாதுன்னு எத்தனை தரம் சொல்றது அவனுக்கு?”

“ஆ. . . மா! ஆடு நனையறதேன்னு ஓநாய் அழுதத¡ம்! இன்னும் ஒரு பார்ட் டைம் வேலைக்கு அவனைத் தொரத்தி யடிச்சுட்டு எதுக்கு இந்த வேஷம் ? பாவம், கொழந்தை! எது சொன்னாலும் கேட்டுண்டு!  என்ன பாவம் பண்ணிட்டு என் வயித்துல வந்து பொறந்தானோ!”
“சரி, சரி. ராத்திரிக் கந்தாயக்கு ஆரம்பிக்காதே!”

“நானே ஆரம்பிச்சேன்? நீங்கதான் ஆரம்பிச்சேள்!”

“சரி, சரி. நிறுத்து.”

“நீங்க ஆரம்பிப்பேள்.. ஆனா, நீங்க நிறுத்தச் சொன்னதும் உடனே நான் நிறுத்திறணும்! இல்லே?”

தரணிபதி அவளை முறைத்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டார். முந்திய நாள் ஒரு பையன் சைக்கிளில் வந்து சங்கரனிடம் ஓர் உறையைக் கொடுத்துவிட்டு ஏதோ பேசிச் சென்றதைப் பற்றிய ஐயம் அவனை அனுப்பிவிட்டுத் திரும்பிய சங்கரனின் முகத்தைக் கவனித்ததுமே அவருக்கு வந்து விட்டது. பிற்பகலில் அவன் எங்கோ வெளியில் போனதையும் அந்தப் பையனின் வருகையையும் அவர் முடிச்சுப்போட்டுப் பார்த்து ஏதோ சிக்கலான விஷயம் என்பதாக ஊகித்தார். அன்று மாலை அதைப் பற்றி அவனிடமே அவர் கேட்கவும் செய்தார். ‘ஆ·பீஸ் விஷயம்’ என்று ‘ உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்?’ என்கிற தொனியில் சுருக்கென்று பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டான். ஆனால், அவரது ஐயம் தீரவில்லை. சங்கரன் எதையோ மறைப்பதாக அவருக்கு உறுதியாய்த் தோன்றியது.

அன்று மாலை நேரு பூங்கா அருகே உள்ள பேருந்து நிலையத்தில் மிகவும் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்த சங்கரனையும் ஒரு பெண்ணையும் பார்த்ததும் அவருடைய ஐயம் மேலும் உறுதிப்பட்டது. அவருக்கு உடனேயே திக்கென்றது. ‘இவன் பாட்டுக்குக் காதல் கத்திரிக்காய் என்று சொல்லிக்கொண்டு தனியாகப் போய்விடுவானோ? அப்படிப் போய்விட்டால் இந்தக் குடும்பத்தின் கதி என்ன ஆவது?’ என்பதுதான் அவருக்கு உடனே வந்த கவலை!

அந்தப் பெண்னை அதற்கு முன்னால் எங்கும் பார்த்ததாக அவருக்குத் தோன்றவில்லை. அவனுடன் வேலை பார்க்கும் பெண்ணாகத்தான் இருக்கும் என்று ஊகித்தார். மறு நாள் காலையில் அவனை அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணியபடி தூங்கிப் போனார்.

.  .  .  மறு நாள், அதற்கென்றே காத்துக்கொண்டிருந்த தரணிபதி, சங்கரன் சமையற்கட்டில் காப்பி குடித்துக்கொண்டிருந்த போது, “என்னடா! எவ்வளவு தூரத்துக்கு வந்திருக்கு?” என்றார் இடக்காக.

“எதுப்பா?” என்று விழிகள் விரிய வினவினாலும், உள்ளுணர்வாய் அவனுக்கு அவரது கேள்வியின் உட்கிடை புரிய, மனம் திடுக்கிட்டது.

“உன்னோட . . . அதாண்டா, காதலா, கத்திரிக்காயா, அது!”   –   இவ்வாறு கேட்டபோது  அவரது பார்வையில் தெரிந்த கேலி அவனை அருவருப்படையச் செய்தது.

“என்னப்பா சொல்றேள்?”

“தெரியாத மாதிரி கேளு! .  .  . நேத்து பஸ் ஸ்டாப் அண்டை ஒரு பொண்ணோட நீ பேசிட்டிருந்ததைப் பாத்தேண்டா. யாரு அவ? எத்தனை நாளா இது நடக்கிறது? .  .  . என்னடி பாக்கறே? என்னமோ பெரிசா ஒரு சத்புத்திரனைப் பெத்து வெச்சிருக்கிறதா நினைச்சிண்டிருக்கியே, அவனோட யோக்கியதை தெரியுமா? கலியாணத்துக்கு ரெண்டு தங்கைகள் இருக்கிறப்ப இவரு லவ் பண்றாரு லவ்வு!”  என்று நக்கலாய்க் கூறிவிட்டு, தரணிபதி வெற்றிவீரத்தனமாய் மனைவியைப் பார்த்தார்.

“கணபதி ஸ்டோர்ஸ்லே நான் கூடத்தான் உங்களைப் பாத்தேன். நீங்க என்னைக் கவனிக்கல்லே!” என்ற சங்கரன் அவரை அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்தான்.

தரணிபதி எச்சில் விழுங்கினார். அக்கம் பக்கம் பார்க்காமல் கணபதி பலசரக்குக்கடையில் அந்த் ‘மூன்றெழுத்துச் சமாசாரம்’ வாங்கியதற்கு வருந்தினார். அவரது முகம் வெளிறிப் போயிற்று.

ஓர் ஆத்திர ஆவேசத்தில் இவ்வாறு சொல்லிவிட்டாலும், சங்கரன் கழிவிரக்கப்பட்டான். அப்பா என்கிற மரியாதையை மீறியதும், என்ன இருந்தாலும் அம்மாவுக்குக் முன்னால் தான் அப்படிப் பேசியிருந்திருக்கக் கூடாது என்னும் வருத்தமும் அவனை ஆட்கொண்டன.
“கணபதி ஸ்டோர்ஸ்லே என்னடா நடந்தது?”

“உனக்கு ஒண்ணும் இல்லேம்மா!  .  .  .  சாரிப்பா! . . .நீங்கதான் அதைப் பத்தி என்னைப் பேச வெச்சேள். அப்பா! நான் சாதுதான். அப்பாங்கிற மரியாதை யுள்ளவந்தான். ஆனா சாது மிரண்டா காடு கொள்ளாது. அதை என்னிக்கும் நெனப்பு வெச்சுக்குங்கோ!”

சங்கரனின் வாயிலிருந்து இப்படி அப்பட்டமாய்ச் சொற்கள் தெறித்து வந்து விழும் என்பது அவரது கற்பனையை மிஞ்சிய ஒன்றாக இருந்ததால், தரணிபதி சிறுமைப்பட்டுப் போனார்.  தாழ்ந்துவிட்ட பார்வையுடன் உடனே அங்கிருந்து அகன்றார்.

“கணபதி ஸ்டோர்ஸ்ல என்னடா சங்கர் நடந்தது?”

“உனக்கு ஒண்ணு மில்லேன்னு சொன்னேனில்ல?”
“சரி. நான் கட்டாயப் படுத்தல்லே.. .  . அது, சரி, உங்கப்பா என்னமோ சொல்லிட்டுப் போறாரே, யாருடா அந்தப் பொண்ணு? அப்ப, நான் நினைச்சது சரிதானா? .  .  .  என்னடா, பதிலே சொல்ல மாட்டேங்கறே?  டேய், சங்கர்! நீ யாரை வேணா லவ் பண்ணு. அவளையே கல்யாணம் பண்ணிக்கோ. என்னைப் பொறுத்த மட்டில நான் குறுக்கே நிக்க மாட்டேன். ஆனா, நம்மாத்துல ஒரு பொண்ணுக்காவது கலியாணத்தைப்  பண்ணி வெச்சுட்டு நீ பண்ணிக்கோ. இல்லேன்னா, ரெண்டு பேருமே கலியாணமாகாம தங்கிப் போயிடுவா. ஏன்னா, உன்னோட குடும்பம் பெருக ஆரம்பிச்சுறும்.”

“அம்மா, அம்மா! நீ பாட்டுக்குப் பேசிண்டே போகாதே. நான் அப்படிப்பட்ட சுயகாரியப் புலி இல்லே. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். அப்புறமா, எல்லாத்தையும் ஒரு நாள் சமயம் வர்றப்போ, சொல்றேன். அது வரைக்கும் என்னை எதுவும் கேக்காதே!.” என்ற சங்கரன் காப்பித் தம்ப்ளரை வைத்துவிட்டு இரண்டு வேளைகளுக்கான இட்டிலிப் பொட்டலங்களுடன் கிளம்பிப் போனான்.
.  .  .  அன்று மாலையும் அவளும் அவனும் கடற்கரையில் சந்தித்து வெகு நேரம் பேசினார்கள். அவர்களது பேச்சு முந்திய நாளைப் போன்றே ஒரே வழித்தடத்தில் சுற்றிச் சுற்றி வந்து அதே இடத்தில் நின்றது.

“இருட்டத் தொடங்கிடுத்தே! ஆனா, லேட்டாகும்னு வீட்டுல சொல்லியிருக்கேல்ல?”

“ஆமா.”

“சரி.  நம்ம பேச்சில எந்த முன்னேற்றமும் இல்லே. அதே இடத்திலயே நிக்கறது. அப்ப நாளைக்கும் பாப்போமா?” என்று சங்கரன் எழ, தயாவும் எழுந்தாள்.

. .  . புதிதாய்ச் சேர்ந்திருந்த பகுதி நேர வேலைக்கு இரண்டாம் நாளே மட்டம் போட விரும்பாத சங்கரன் அதன்  பிறகு அங்கும் சென்று  ஒன்பதரை வரை வேலை செய்த பிறகு கிளம்பினான். அவனுக்கு முன்னால் அந்த இடத்தில் வேலை செய்துகொண்டிருந்தவன் சராசரிக்கும் கீழானவன் என்றும், தப்புத் தப்பாய்த் தட்டெழுதுவான் என்றும் அதனாலேயே அவனை நீக்கியதாகவும் அவன் முதலாளி அவனுக்குச் சொல்லியிருந்தார். பழைய ஆள் மீது ஏற்கெனவே கோபத்தில் இருந்த அவரைத் தனது இரண்டாம் நாளிலேயே அதிருப்திக்கு உட்படுத்த அவன் விரும்பவில்லை.

அவன் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது, பைக்கில் வந்து இறங்கிய எவனோ ஒருவன் குண்டாந்தடி ஒன்றால் சங்கரனைப் பின்புறத்திலிருந்து திடீரென்று தாக்க, காலில் ஊர்ந்த கரப்பான் புச்சியைத் தவிர்ப்பதற்காக அதை உதறியவாறு  அந்தக் கணத்தில் சங்கரன் கொஞ்சம் நகர்ந்ததால், அவன் தலை மீது விழுந்திருக்க வேண்டிய அந்த வலுவான அடி தோள் மீது விழுந்தது. அவன், “அய்யோ! அம்மா!” என்று அலறியபடி கீழே சாய்ந்தான். இரண்டாம் அடி விழுவதற்குள், அவனது கூக்குரல் கேட்டுச் சிலர் அங்கு ஓடி வர, அடித்த ஆள் தன் பைக்கில் தாவி ஏறி உடனே விரைந்து மறைந்து போனான்.

அவனது கைப் பையிலிருந்து முகவரி அறிந்த பின், அவனை அருகே இருந்த மருத்துவ விடுதிக்கு ஆட்டோவில் வைத்து அவர்கள் எடுத்துப் போனார்கள்.

தொடரும்
jothigirija@live.com

Series Navigationஅக்னிப்பிரவேசம்-37புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *