NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்

This entry is part 17 of 24 in the series 9 ஜூன் 2013

 

“ காமனோ மற்றும் மக்குயூ ஆகிய இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே, பள்ளத்தாக்கின் வழியே ஒரு நதி ஓடியது. ஹோனியா என்பது நதியின் பெயர். ஹீனியா எனில்  நோய்க்கு மருந்து அல்லது உயிரை மீட்டல் என்பது பொருள், கடும் வறட்சி, தட்ப வெப்ப மாறுதல்களினிடையேயும் அது வற்றியதே இல்லை . இரு குன்றுகளையும் இணைத்தது ஹோனியா நதிதான். மனிதர்கள், கால்நடைகள், காட்டு விலங்குகள், மரங்கள் என் அனைத்துமே இந்த வாழ்க்கை நதியால் இணைந்திருக்கின்றன”  கூ வா தியாங்கோ அவர்களின்  “ இடையில் ஓடும் நதி”  என்ற நாவல் இப்படித்தான் தொடங்குகிறது.அப்பகுதி மக்களின்  வாழ்வை இதில் சித்தரித்திருந்தார்.

 

அவிநாசி திருச்சி சாலை நெடுஞ்சாலைகளுக்கிடையே அமைந்து இருக்கும் ஊர்தான் இருகூர். இந்த இருகூர் பகுதி மக்களின் வாழ்க்கையை கொஞ்சம் பதிவு செய்திருக்கிறார் இளஞ்சேரல்  “ அவிநாசி திருச்சிசாலை சித்திரங்கள்  ” சிறுகதைத்த்தொகுதியில்… இருங்கு என்னும் ஒருவகை சோளப்பயிர் மிகுதியாக விளைந்த ஊர் இது. இருங்கூர் நாளடைவில் இருகூர் ஆனது. இருவன் என்னுன் இருளன் பெயரால் இருவனூர் ஆகி இருகூர் ஆனதாகச் சோழன் பூர்வபட்டயம் கூறுகிறது. இருகூரின் சங்ககாலப் பெயர் பொன்னூர் என வழங்கப்பட்டிருக்கலாம். பொன்னூரம்மன் கோவில் இருகூரின் மிகப்பழமையான கோவிலாக இன்றும் உள்ளது. முழுமையும் செங்கல்லால் ஆன கோவில் இது. எட்டுக்கை உள்ள அம்மன் சிலை இங்குள்ளது. இருகூரின் மேற்குப் பகுதியில்  பொன்னூரம்மன் கோவிலுக்குச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏராளமான பெருங்கற்காலச் சின்னங்கள் கிடைத்துள்ளன.வழியில் புலிக்குத்துக் கோவில் உள்ளது ( சூலூர் வரலாறு )

   வறண்ட அப்பூமியில் அம்பாரைப் பள்ளம் முதல் அருகாமையிலான ஏரோப்பிளான் காடு, ரயில்ஸ்டேசன் வரை பலபகுதிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.இந்த பகுதி நகரத்தின் பாதிப்பில் இன்னும் கிராமிய அடையாளங்களோடு மிளிர்ந்து கொண்டிருக்கும் ஊராகும். அரசியல்வாதி ஆகி காசு சம்பாதிக்கிற எத்தனத்தில் செய்ல்படும் இளைஞர்கள். வயதான காலத்தில் வாட்ச் மேன் டூட்டியாவது பார்த்து சம்பாதிக்க ஆசைப்படுகிறவர்கள். வீட்டை விட்டு ஓடிப்போய் மறைந்து திரிகிற நடுத்தர வயதுக்காரர்கள். பொதுவுடமைக் கட்சியும் அதன் பாதீப்பும்தரும் அனுபவங்களூடே குட்டி பூர்ஷிவா ஆகிறவர்கள். பொம்பளெ வாலிபால், கேரம் போர்டு ஆடும், வேடிக்கை பார்க்கும் சாதாரண விளிம்பு நிலை மக்களான தொழிலாளிகள். காவடி பண்டு சேர்த்து காவடி எடுப்பதை திருவிழாவாக்குபவர்கள், இடம் பெயர்ந்து வந்த வட நாட்டு மனிதர்கள், கிழவர்களின் சித்திரங்கள், தெலுங்கு பேசும் தலித் மக்கள். சிறுதெய்வ வழிபாட்டினூடே சக மனிதர்களின் வாழ்க்கை என்று தான்  வாழும் களத்தைப்பற்றிய் நேர்மையான பதிவாய் இக்கதைகள்  அமைந்திருக்கின்றன. ஆண் பெண் உறவில்  காமம்  ததும்பி ஓய்ந்த வேளைகள் தன் உடம்பை காசுக்காக பார்ப்பதை எண்ணி ரத்தம் உறிஞ்சும் பெண்ணும் இருக்கிறாள். காமம் உறவுகளை மீறி போட்டியாக பலி போடுவதும் உள்ளது. இவ்வகைக்கதைகளை வெகு குரூரத்தன்மையுடன் சித்தரித்திருத்திருக்கிறார்.இதன் மறுபுறமாய் பகல் பொழுதை இரண்டாக மடித்தல் போன்ற கதைகளின் நளினமான மொழி அவரின் வெவ்வேறு வகை எழுத்துப்பாணியை முன் வைக்கிறது.  கேரம், பொம்பளெ வாலிபால் விளையாட்டுகளை ரசிக்கும் மனிதர்கள் அதனூடே மனிதாபிமான உணர்வாய் கொள்ளும் நெகிழ்ச்சியில் கொங்கு நாட்டின் பலம்    தெரிகிறது.இந்த விளிம்பு நிலை மனிதர்களை எந்தப்பகுதியிலும் காணலாம். இதில் தென்படுபவர்கள்  வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தீவிரமானக் குரூரத்தையும்  கடந்து போகிறார்கள்.அவற்றை தலையில் வைத்து சுமந்து திரிவதற்கு அவர்கள் தயாராயில்லை, சாதாரண விளிம்பு நிலை மக்கள் ஆனால் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்கள்.

 

  இப்பகுதி நகரமாயிருந்தாலும் கிராமிய அனுபவங்களில் கொங்கு பகுதியின் மரபில் ஊறிப்போயிருப்பதை நுணுக்கமாகச் சித்தரிக்கிறார்.  அதுவும் சிறு தெய்வ வழிபாடுகள், விழாக்கள் சம்பந்தமானவற்றைக் குறிப்பிடலாம். நாத்திகனாக இருந்து நான் அந்நியமான தளங்களை  இளஞ்சேரல் காட்டி அந்த வகை அனுபவங்களிலிருந்து நான் அந்நியமாகியிருப்பது சார்ந்த குற்ற உணர்வு இக்கதைகளைப் படிக்கிற போது   ஏற்பட்டது. பின்நவீன இலக்கியம் கைவரப்பெற்ற போது இடதுசாரி இயக்கங்களுடன்  இருந்து விலக நேர்ந்ததை  இக்கதைகளில் சில காட்டுகின்றன.  அப்கோர்ஸ் மிஸ்டர் காந்தி , நாய் வாலு தள்ற காயின் போன்று தலைப்புகளிலும் வித்யாசம். இருகூர் மக்கள் முதல் காந்தி யின் வாழ்வு வரை பல பரிமாணங்களில் இக்கதைகள் உலாவுகின்றன. “ ஒரு குறிப்பிட்ட ச்சுழலுக்குப் பிறகு தமிழ் நவீன இலக்கியத்ஹ்டில் சரத்ப்பாபு, சந்திரசேகர், நிழல்கள் ரவி, மேஜர் சுந்தர்ராஜன், டெல்லி கனேஷ் ரோல்களை செய்து கொண்டிருக்க்க் கூடாது அல்லது செய்யவும் முடியாது என்பதை உணர்த்திய  இந்தோ அய்ரோப்பிய இலக்கிய விமர்சகர்களுக்கு நன்றி “ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். கிராமிய மனிதர்களில் இவர்கள் அதிகம் இருப்பார்கள். இவர்களைத் தவிர்த்து   விட்டு கதைகளுக்கும் சாதாரண மக்களை கொண்டு வருவதில் கவனம் தென்படுகிறது.

இதில் காணப்படும் கொங்கு நாட்டு வார்த்தைப்பிரயோகங்களும் கொங்கு லொள்ளும் கிண்டலும் இளஞ்சேரலின் உரைநடையை உயிர்ப்பிக்குகிறது. இவ்வகை எள்ளலை சமீபத்தில் நான் படித்துணரவில்லை.இதில்  கொங்கு மக்களின் பேச்சு, நடைமுறை உரை நடையில் காணப்படும் எள்ளல் அசாத்தியமாக பல இடங்களில் தென்படுகிறது.  கொங்கு மொழியின் லாவகத்தை உச்சமாய் ரசிக்கிற வைக்கிற  தளங்கள் அவை.

 

  ஒரே மாதிரியான மனநிலையுடன் கால் நூற்றாண்டாக இருப்பது என்பது ஒரு மாதிரியான நவீன மன நோய்தான்  என்று நம்புகிற  இளஞ்சேரல் இந்த மன நோயிலிருந்து தப்ப எடுக்கும் எத்தனங்கள் பாராட்டப்பட வேண்டியவை.கொட்டம் என்ற 2002ம் ஆண்டின் கவிதைத் தொகுப்பு அனுபவங்களை முழுக்க விலக்கிவிட்டு 2011 ஆண்டின் இரு கவிதைத் தொகுப்புகளை  ( எஸ்.பி.பி. குட்டி, நீர்மங்களின் மூன்றடுக்கு ) வேறு பாணியில் நவீன மனிதனின் சமூக வாழ்வில் திரைக்கதைகளின் பாதிப்புகளை வெளிபடுத்திய  விதத்தை சிலாகித்து ஆபூர்வமான பதிவுகளே  தென்பட்டது  சங்கடமே..தற்காலத்தின் திரைக்கதைகளின் மொழி பற்றி விரிவாக அவர் எழுதுவது அவரின் பார்வையில் குறிப்பிடத்தக்கப் பதிவாக அமையும்.  . இதற்கெல்லாம் மேலாக கோவை இலக்கியச் சந்திப்பு என்ற மாதந்தோறும் நடத்தும் நவீன இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் சமீபத்திய   சாதனைகளாகக் கொள்ளப்பட வேண்டியவை.நாற்பது வயதுக்காரனின் துடிப்பும் ஆர்வமும் கோவை இலக்கியவளத்திற்கு பெருமைச் சேர்த்து வருகிறது.

 

இந்நூலின் அட்டைப்படத்தில் இரு சிறுவர்கள் சிரிக்கிற புகைப்படம் இருக்கிறது.. அவர்களின் காலடியில் புதிதாய் போட ஆயத்தமான செம்மண்  பரப்பும், தார் போடப்பட்ட இன்னொரு பகுதியும் நீண்டு கொண்டிருக்கிறது.இளஞ்சேரலின் படைப்பு மனமும் இது போன்ற நீட்சிகளுக்கு தயாரனதுதான் என்பது ஆரோக்கியமானது.

(  விலை ரூ 100 / அகத்துறவு, 19 அய்ந்தாவது தெரு, சிவசக்தி நகர், இருகூர், கோவை 641 103  )

Series Navigationமதுரையில் ஆடிய குரவைக்கூத்துவால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *