இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 24 of 30 in the series 28 ஜூலை 2013

இராஜா வரதராஜா,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி,
தஞ்சாவூர் – 613 005.

நாம் வாழும் இவ்யுகமே ஒரு விளம்பர யுகமாகும். எங்கு நோக்கினாலும் கேட்டாலும் விளம்பரங்களைத் தான் காண முடிகின்றது. தனி மனிதன் ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரச் சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பது மறுக்க – மறைக்க முடியாத உண்மையாகும்.
இதழ்களில் விளம்பரங்கள்:
விளம்பரங்கள் இல்லையென்றால் இதழ்களை நடத்த முடியாத சூழ்நிலையைக் காலந்தோறும் இதழ்கள் பல நின்று போனதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். விளம்பரமே இல்லாமல் ஓரிதழை நடத்திக் காட்டுகிறேன் என்று கூறிவரும் இலட்சியவாதிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கின்றனர். அந்த அளவிற்கு விளம்பரங்கள் இதழ்களின் முதுகெலும்பாக மூச்சுக் காற்றாக – வளர்ச்சிக்குரிய இரத்த ஓட்டமாக இருக்கின்றன. “நாளிதழ் என்ற பறவைக்கு ஓர் இறகு செய்தியென்றால் மற்றது விளம்பரமே ஆகும்” என்ற எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் கருத்து இங்கு நினைவுக் கூறத்தக்கது.
விளம்பர வகைகள்:
நாட்டின் நான்காம் தூணாக இதழ்கள் விளங்குகின்றன. அவ்விதழ்களுக்குத் தூணாக விளம்பரங்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் இதழ்களைப் பொறுத்தே அமைவதுபோல, ஓர் இதழின் முன்னேற்றம் அவ்விதழின் விளம்பரங்களை வைத்தே அமைகின்றன.
இதழ்களில் வரும் விளம்பரங்களைப் பொதுவான முறையில் பலவகைகளாகப் பிரித்துள்ளனர். இங்கு வேறொரு கோணத்தில் பகுத்துப் பார்க்கப்படுகின்றது.

விளம்பர அமைப்பினர் அடிப்படையில்:
இதழ்களுக்கு விளம்பரங்களைக் கொடுப்பவரைக் கொண்டு அரசு விளம்பரங்கள், அரசுசாரா விளம்பரங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
அரசின் திட்டங்கள், பணிகள், அறிவிப்புகள், ஒப்பந்தப் புள்ளிகள் போன்றவை அரசு விளம்பரங்கள் ஆகும். இவை வணிகக் கண்ணோட்டத்துடனும், சேவை அடிப்படையிலும் வெளிவருகின்றன.
அரசு அல்லது அரசு நிறுவனங்கள் தவிர்த்த மற்ற விளம்பரங்கள் அனைத்தும் அரசுசாரா விளம்பரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நிற அடிப்படையில்:
இதழ்களில் வெளிவரும் விளம்பரங்களை நிற அடிப்படையில் கறுப்பு – வெள்ளை விளம்பரங்கள், வண்ண விளம்பரங்கள் எனப் பிரிக்கலாம்.
பொருளின் வளர்ச்சி அடிப்படையில்:
ஒரு பொருளை உற்பத்தி செய்கின்றவர், அப்பொருளின் ஒவ்வொரு நிலையிலும் வெளியிடும் விளம்பரங்களைக் கொண்டு முன்னோடி விளம்பரங்கள், போட்டி விளம்பரங்கள், நினைவுபடுத்தல் விளம்பரங்கள் என மூன்றாகப் பகுக்கலாம்.
ஒன்றை வெளியிடுவதற்கு முன்னரே, மக்களிடம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், என்ன விளம்பரம்? என்பதைச் சொல்லாமலே விளம்பரப்படுத்துவது முன்னோடி விளம்பரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரே பயன்பாடு கொண்ட பொருள்களின் போட்டிகளைச் சமாளிக்கும் விதமாக வருவது போட்டி விளம்பரங்களாகும்.
ஒரு பொருளின் விற்பனை குறைகின்றபோது, பொருளின் பல தன்மைகளை மாற்றி, மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக வருவது நினைவுபடுத்தல் விளம்பரங்கள் என்று கூறப்படும்.

 
பக்க அடிப்படையில்:
இதழ்களின் பக்கங்களில் இடம்பெறும் விளம்பரங்களைக் கொண்டு முன்பக்க விளம்பரங்கள், நடுப்பக்க விளம்பரங்கள், பின்பக்க விளம்பரங்கள் என்று ஒரு வகையாகவும், முழுப்பக்க விளம்பரங்கள், அரைப்பக்க விளம்பரங்கள், கால்பக்க விளம்பரங்கள், சில களங்கள் (பத்திகள்) விளம்பரங்கள் என்று மற்றொரு வகையாகவும் பிரிக்கலாம்.
பொருள் அடிப்படையில்:
விளம்பரங்களின் பொருள் சார்ந்த நிலையில் பொருள்சார் விளம்பரங்கள், நிறுவனம்சார் விளம்பரங்கள் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
அங்காடியில் கிடைக்கும் பொருள்களையும் அதன் பயன்களையும் சிறப்புகளையும் தெரிவிப்பதாக அமைவது பொருள்சார் விளம்பரங்கள் எனப்படும்.
ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிக் கூறாமல், ஒரு நிறுவனம் அல்லது அந்நிறுவன பொருள்களின் சிறப்பைப் பேசுவதாக அமைவது நிறுவனம்சார் விளம்பரங்கள் ஆகும்.
இட அடிப்படையில்:
விளம்பரதாரர் கொடுக்கும் விளம்பரங்கள் செல்லும் இடம் நோக்கி உலக விளம்பரங்கள், தேசிய விளம்பரங்கள், மாநில விளம்பரங்கள், வட்டார விளம்பரங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
கால அடிப்படையில்:
விளம்பரங்களை அவை வெளிவரும் காலம் நோக்கி எக்காலத்திற்கும் ஏற்ற விளம்பரங்கள், காலத்திற்கேற்ற விளம்பரங்கள் என இருவகைப்படுத்தலாம்.
காரண அடிப்படையில்:
இதழ்களில் வரும் விளம்பரங்கள் காரணத்;தின் அடிப்படையில் வரி விளம்பரங்கள், காது விளம்பரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

 

உத்தி அடிப்படையில்:
விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் உத்திகளின் அடிப்படையில் செய்திவடிவ விளம்பரங்கள,; படக்கதை விளம்பரங்கள் எனப் பகுத்துக் கூறப்படுகின்றன.
விளம்பரங்களைச் செய்திகளைப் போலவும் வெளியிடுவர். அதனைப் படித்தால்தான் விளம்பரம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அது விளம்பரம் என்பதைக் குறிக்க ‘‘ADVT’’ என்ற சுருக்கத்தை அச்சிட்டிருப்பர்; அச்சிட வேண்டும்
பயன்பாட்டு அடிப்படையில்:
இதழ்களில் வரும் விளம்பரங்களின் பயன்பாடு மற்றும் அது மக்களில் யாருக்காக வெளியிடப்படுகின்றது என்பதைப் பொறுத்து நுகர்வோர் விளம்பரங்கள், வாணிப விளம்பரங்கள், தொழில் விளம்பரங்கள், சேவை விளம்பரங்கள், தன் விளம்பரங்கள், அரசியல் விளம்பரங்கள், அறிவிப்பு விளம்பரங்கள், கல்வி விளம்பரங்கள், மருத்துவ விளம்பரங்கள், சட்ட விளம்பரங்கள், வாழ்த்து விளம்பரங்கள், நன்றி அறிவிப்பு விளம்பரங்கள், ஒப்பந்தப்புள்ளி விளம்பரங்கள், திரைப்பட விளம்பரங்கள் என்று பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
முடிவுரை:
இவ்வாறு இதழ்களில் வரும் விளம்பரங்கள் நாளும் வளர்ந்து வரும் சூழலில், மேலை நாடுகளில் ‘விளம்பர இதழ்கள்’ (ADVERTISING JOURNAL) என விளம்பரத்திற்கென்றே தனி இதழ்கள் வெளிவருகின்றன.

Series Navigationமேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
author

Similar Posts

Comments

  1. Avatar
    Chellappa Yagyaswamy says:

    தமிழகத்தின் எல்லாப் பெருநகரங்களிலும் விளம்பரத்திற்கென்றே வார இதழ்கள் வெளியாகின்றன. சென்னையில் ஒவ்வொரு முக்கிய வட்டாரத்திலும் அம்மாதிரி வார இதழ்கள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. (‘மாம்பலம் டைம்ஸ், அடையார் டைம்ஸ்’ போன்றவை). நல்ல ஆய்வு. இன்னும் விரிவான தளத்தில் பெரிய அளவில் தொடர இராஜா வரதராஜா யோசிக்கவேண்டும். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *