ஜென்

This entry is part 26 of 30 in the series 28 ஜூலை 2013

ஜென் ஊஞ்சல்

 

காலி ஊஞ்சல்

காற்றில் ஆடுகிறது

முன்னும் பின்னும்

 

சத்தமிடாதீர்கள்

அவன் கல்லறையிலாவது

நிம்மதியாக உறங்கட்டும்

 

ஆயுளில்

ஒரு முறையாவது

ஆணியில் அறையப்படுகிறோம்

 

விரிசலடைந்த சுவரில்

ஆணி இறங்குகிறது

கையை காயப்படுத்தி

 

கிளிஞ்சல்கள்

பொறுக்கும் முன்பு

கடலைப் பாருங்கள்

 

யாருமற்ற அறையில்

காற்று புரட்டுகிறது

புத்தகங்களின் பக்கங்களை

 

எப்படி

குடை பிடித்தாலும்

நிழல் நனைகிறது

 

கடக்க கடக்க

தொலைவு குறைகிறது

நடக்க நடக்க

கால்கள் நோகிறது

விழுதுகள் தானே

மரத்தினைத் தாங்குகிறது

 

நீல வானம்

சிற்றலைகள்

கடலோரத்தில்

கிளிஞ்சல்கள்

பொறுக்கும்

சிறுவர்கள்.

 

 

 

 

ஜென் மயில்

 

நள்ளிரவு

அடுக்களையில்

பாத்திரத்தை உருட்டும் பூனை

 

அந்தகார இருளில்

கொல்லை பொம்மையின்

வெள்ளை உடை

பளிச்சிடுகிறது

 

விடிந்ததும் தான் தெரிந்தது

கொல்லை பொம்மையின் மீது

மின்னல் விழுந்தது

 

இன்னொரு விடியல்

நேற்று பார்த்த

அதே வானம்

 

காலணி

சேற்றில் பதிய

எதிர்பார்க்காத

கோடை மழை

 

இலையுதிர் கால மாலை

தனித்திருப்பது

ஏக்கத்தைத் தருகிறது

அவளை எங்கே தேடுவது

 

அவள்

கூந்தலை அலங்கரிக்க

தவமிருந்ததா ரோஜா

 

இம்சிக்க வேண்டாம்

கவனமாய்க் கடந்து செல்லுங்கள்

விலங்குகள் பசித்தால் மட்டுமே

வேட்டையாடும்

 

அனுமதியின்றி

உனைத் தீண்ட

மழையாக இருந்திருக்க

வேண்டும்

 

திரும்பிப் பார்

நான் உன் நிழலுக்கு

குடை பிடிப்பதை

 

தேவாலயத்தில்

உன்னைப் பார்த்தேன்

உனக்கு கூட

வேண்டுதல் இருக்குமா?

 

 

 

ஜென் தோட்டம்

 

படுக்கை அறையில்

பொம்மை

கேட்பாரற்று கிடக்கிறது

பள்ளியைவிட்டு வரும்

குழந்தை

முதலில் தேடுவது

பொம்மையைத் தான்.

 

கனியை

சுவைக்கும் போதெல்லாம்

விதையின் ஞாபகம்.

 

மெல்லிய ஓசை

தூக்கத்தைக் கலைக்கும்

நங்கூரம் போட்டபடி

நிற்கும் நேரம்.

 

நத்தை கூட்டை

சுமப்பதைப் போல

சுமக்கிறேன்

அவளின் நினைவுகளை.

 

கொலுசு சப்தம்

கவனத்தைச் சிதறடிக்கும்

சலங்கை தேடுது

பார்வதியின் பாதத்தை.

 

உடைவாள்

யோசிக்காது

எத்தனை வீச்சுக்கு

உயிர் போகுமென்று.

 

ஒருமுறை இறந்தால்

புரிந்துவிடும்

மரண பயமும்

மாய உலகமும்.

 

உச்சி வெயில்

உலர்ந்த நாக்கு

எதற்கும் காசு.

 

 

 

 

ப.மதியழகன்

Series Navigationமாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…குளம் பற்றிய குறிப்புகள்
author

ப.மதியழகன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  இரா. கண்ணன் says:

  படித்து மகிழ்ந்தேன்.
  திரு. மதியழகன் அவர்கள் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும்.
  வாழ்த்துக்கள்.

 2. Avatar
  தேமொழி says:

  “நத்தை கூட்டை
  சுமப்பதைப் போல
  சுமக்கிறேன்
  அவளின் நினைவுகளை.”

  அருமையான வரிகள். நன்று.

  ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *