க்ருஷ்ணகுமார்
அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி*
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை*
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை
என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே
4. க்ரிடிகல் எடிஷன் முயற்சியும் இந்த முயற்சியில் ஈடுபட்ட பதிப்பாசிரியர் குழுவின் பார்வைகளும்.
வால்மீகி ராமாயணத்தின் க்ரிடிகல் எடிஷன் ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் (Oriental Institute), பரோடா என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டது. இந்த முயற்சி 1960 ம் வருஷம் துவங்கி 1975ம் வருஷம் நிறைவு பெற்றது. பதினைந்து வருஷ கால முயற்சியில் பதிப்பாசிரியர் குழு (Board of Editors) மற்றும் நடுநிலையாளர்கள் குழு (Board of Refrees) என்ற இரு குழுவாக இயங்கி அறிஞர்பெருமக்கள் இந்த Critical Edition பதிப்பை ப்ரசுரம் செய்வதற்கு கடும் உழைப்பை நல்கினர்.
பதிப்பாசிரியர் குழுவில் டாக்டர்.ஜி.எச்.பட் (Dr.G.H.Bhatt), டாக்டர் பி.எல்.வைத்யா (Dr.P.L.vaidya) ,பி.ஸி.திவான் ஜி, (P.C.Divanji), டி.ஆர்.மன் கட் (D.R.Mankad), ஜி.ஸி.ஜலா (G.C.Jhala) மற்றும் டாக்டர் யு.பி.ஷா (Dr.U.P.Shah) போன்ற அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர்.
டாக்டர் ஜேக்கபி (Indologist) வால்மீகி ராமயண நூலுக்காக க்ரிடிகல் எடிஷன் என்ற முயற்சி எடுக்கப்படவேண்டும் என்று தன் அவாவினைத் தெரிவித்திருந்தார். இந்த Critical Edition முயற்சியில் அன்னாரது Das Ramayana நூலும் டாக்டர் எஸ்.என்.கொஸால் (Dr.S.N.Ghosal) அவர்களால் வடிக்கப்பட்ட அதன் ஆங்க்ல மொழியாக்கமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
க்ரிடிகல் எடிஷன் முயற்சிக்காக இந்தக் குழுவினர் கிட்டத்தட்ட நூறு கைப்ரதிகள் / ஓலைச்சுவடிகளை ஹிந்துஸ்தானத்தின் பல பகுதிகளிலும் இருந்து சேகரம் செய்தனர். சேகரம் செய்த ப்ரதிகளில் தொன்மை, தூய்மை மற்றும் முழுமை போன்றவற்றை அலகீடுகளாகக் கொண்டு 29 – 41 ப்ரதிகளைத் தேர்வு செய்தனர். நேபாள பீர் நூலகத்தைச் சார்ந்த ப்ரதி எண் : 934 என்ற ப்ரதி மிகவும் தொன்மை வாய்ந்ததாகச் சுட்டப்படுகிறது. இது பொதுயுகம் 1020 ஐ ச்சார்ந்ததாக சொல்லப்படுகிறது.
சேகரம் செய்யப்பட்ட மூல வால்மீகி ராமாயண ஏட்டுச்சுவடிகள் மட்டுமின்றி ராமானுஜாசார்யர், மஹேசதீர்த்தர், கோவிந்தராஜர், கடகர், நாகேச பட்டர் போன்றோருடைய வ்யாக்யானங்களையும் (விரிவுரைகள்) ஆய்வாளர்கள் தங்கள் முயற்சியில்கு கையாண்டுள்ளனர். இந்த வ்யாக்யானங்களெல்லாம் தக்ஷிண பாரதத்தைச் சேர்ந்தவை. இவை பொ.யு. 1250 க்கும் 1700 க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவை.
இவை தவிர வால்மீகி ராமாயண நிகழ்வுகள் பற்றி மற்ற நூற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட ராமாயண கதைகளும் இந்த முயற்சியில் கையாளப்பட்டன. பல புராணங்களில் சொல்லப்பட்ட ராமகதை, மஹாபாரதத்தில் ஆரண்யக பர்வத்தில் சொல்லப்பட்டுள்ள ராமோபாக்யானம், காஷ்மீர கவி க்ஷேமேந்த்ரரால் இயற்றப்பட்ட ராமாயண மஞ்சரி போன்ற நூற்கள் இந்த முயற்சியில் கையாளப்பட்டுள்ளன. மூல ராமாயணத்தில் சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு புறச்சான்றாக இந்த நூற்கள் எடுக்கப்பட்டன. மூல நூலில் வடிக்கப்பட்ட வார்த்தைகளைச் சரிபார்க்குமுகமாக இவை எடுத்துக்கொள்ளப்படவில்லை .
பௌத்த ஜைன ராமாயணங்கள் வேறு கட்டமைப்பில் வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டுள்ளதால் அந்த ராமாயணங்கள் இந்த முயற்சியில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை
மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். உத்தர மற்றும் தக்ஷிண (Northern, Southern). இந்த இரண்டு பாடாந்தரங்களும் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறு பட்டாலும் தங்களிடையே பொதுவிலான ராமாயண கதையை பாதுகாத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த பொதுமையான குணாதிசயம் தான் மூலராமாயணம் (Ur-Ramayana) என்ற நூல் இந்த பாடாந்தரங்களின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்ற முக்யமானதொரு முடிபை எட்ட ஆய்வாளர்களுக்கு ஹேதுவாக இருந்தது என்றால் மிகையாகாது.
ராமகதை தூய கங்கை நதியைப் போன்று வடக்கிலிருந்து தெற்கிற்கு தனது மூல மற்றும் முழுமையான வடிவில் வந்தது எனச் சொல்லலாம். ஆயிரத்து சொச்சம் வருஷ முன்னமேயே தெற்கிலே இந்த வால்மீகி ராமாயண காவ்யம் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவதானிக்கத் தக்கது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலின் மீது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து எழுதப்பட்ட விரிவுரைகள் இந்த நூல் ப்ரதி மாறாது பாதுகாக்கப்பட ஹேதுவாக இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம் மூலராமாயணம் என்று கருதப்படும் நூலினை அதனுடைய மூல மற்றும் தொன்மையான வடிவில் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளது என்ற டாக்டர் ஜேக்கபி அவர்களின் கருத்தை பதிப்பாசிரியர் குழுவினர் வழிமொழிகின்றனர்.
அதே சமயம் வடக்குப் பாடாந்தரம் அதன் வடிவு மற்றும் உள்ளடக்கங்களில் பெரும் மாறுதலைச் சந்தித்துள்ளது என்றும் கருதுகின்றனர். உத்தர பாரதத்தில் சம்ஸ்க்ருத புலமை பெருமளவில் விகஸிதமாக இருந்தபடியால் உத்தரபாரதத்துப் பண்டிதர்கள் மொழித்தூய்மையுடன் ராமாயண காவ்யத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர் என்பது அவதானிக்கத்தக்கது. இவ்வாறு மொழித்தூய்மையை உத்தேசித்துப் பாதுகாக்கப்பட்ட ராமாயண காவ்யமாகிய இதனை காவ்ய லக்ஷணம் என்ற அலகீட்டுக்கு கொணர வேண்டி பன்முறை சீர்திருத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாடாந்தரங்கள் உத்தரம் தக்ஷிணம் என்று இரண்டாக அங்கீகரிக்கப்பட்டாலும் இவற்றிலும் கிளைகள் இருந்தமையையும் கவனிக்க வேண்டும்.
உத்தர பாடாந்தரம் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் மேற்குப் பாடாந்தரங்களைக் கிளைகளாகக் கொண்டிருந்தது. இந்தக் கிளைகளும் இவற்றினிடையே தனித் தன்மைகளைக் கொண்டிருந்தன. நேபாளி, மைதிலி, பாங்க்ளா (வங்காள), சாரதா மற்றும் தேவநாகர லிபியில் எழுதப்பட்ட சுவடிகளில் உத்தர பாடாந்தரங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.
தக்ஷிண பாடாந்தரங்கள் முறையே தெலுகு, க்ரந்தம் மற்றும் மலயாள அக்ஷரங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தன என்பதும் மூன்று வெவ்வேறு வரிவடிவங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பினும் மூன்றும் கிட்டத்தட்ட ஒரே வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் தெற்கத்திய பாடாந்தரத்தின் சிறப்பு. ஆகவே தான் டாக்டர் ஜேக்கபி அவர்களும் க்ரிடிகல் எடிஷனின் பதிப்பாசிரியர் குழுவினரும் தெற்கத்திய பாடாந்தரமானது மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் மூல வடிவினை அப்படியே பாதுகாத்து வந்துள்ளது என்ற முடிபினை எட்ட ஹேதுவாக இருந்திருக்கலாம் எனத்தெரிகிறது.
பாலகாண்டத்தை பதிப்பிக்கும் பதிப்பாசிரியர் பொறுப்பிலிருந்த ஸ்ரீ பட் அவர்கள் (பொது பதிப்பாசிரியரும் கூட) பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் மூல ராமாயணத்தின் பகுதிதானா என்ற பரிசீலனையில் கூட இறங்காது சர்வ சாதாரணமாக இவ்விருகாண்டங்களும் பொதுவில் பிற்சேர்க்கை என்று தானே கருதப்படுகின்றன என்று முதலில் கருத்துப் பகிர்ந்தார். ஆனால் இந்த விஷயம் மிகவும் உயர்தர பரிசீலனைக்கான விஷயம் என்றும் முதல் க்ரிடிகல் எடிஷன் என்ற படிக்கு நம்பகமான தொன்மையான தூய்மையான முழுமையான ஏட்டுச்சுவடிகளை சேகரம் செய்வதிலேயே எங்களது பெரும் கவனமும் சென்றது என்பதால் இப்படிப்பட்ட ஒரு உயர்தர பரிசீலனையை இப்போது செய்ய இயலவில்லை எனக் கருத்துப்பகிர்ந்துள்ளார்.
யுத்தகாண்டத்தை பதிப்பிக்கும் பொறுப்பிலிருந்த பதிப்பாசிரியரான ஸ்ரீ ஷா (பொது பதிப்பாசிர்யரும் கூட) அவர்கள் கேரள பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ப்ரதி எண் L652 மற்றும் கோரேஸியோ எடிஷன் (Gorresio edition) என்ற இந்த இரண்டையும் கணக்கிலெடுத்து இவை யுத்தகாண்டத்துடன் நிறைவுறுவதால் அப்படியும் ஒரு பாடாந்தரம் இருந்திருக்கிறது எனத் தெரியவருகிறது என்றும் ஆகையால் உத்தரகாண்டம் என்பது பிற்சேர்க்கையாக இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு என்ற கருத்தைச் சொல்லியுள்ளார். இப்படி இருப்பினும் கூட உத்தரகாண்டத்தின் பதிப்பாசிரியர் என்ற படிக்கு உத்தரகாண்டத்தின் சர்க்கங்கள் 1-42 பிற்சேர்க்கை என்றுகருதப்பட வாய்ப்புள்ளது என்றாலும் மற்றைய சர்க்கங்கள் காவ்ய கர்த்தாவான வால்மீகி மகரிஷியாலேயே அனுபந்தமாகப் பின்னால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அஸ்வமேத யாக சமயத்தில் ராமபிரானுடைய ராஜசபையில் அரங்கேறியிருக்க வேண்டும் என்றும் அபிப்ராயப்படுகிறார்.
தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது இந்த அறிஞர்கள் இந்த பதிப்புப் பணியைச் செய்துள்ளார்கள் என்பது சில பதிப்பாசிரியர்கள் தாங்கள் பால காண்டம் அல்லது உத்தரகாண்டம் மூல ராமாயணத்தின் பகுதி என்று கருதாவிட்டாலும் பதிப்பாசிரியர் குழுவின் பொதுக்கருத்து மற்றும் ப்ரதிகளின் நம்பகத்தன்மை இவற்றை அனுசரித்து இவற்றை இந்தப் பதிப்பில் ஏற்ற சம்மதித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் கூற்றின் படி, நாங்கள் அந்தந்த பாடாந்தரங்களின் தூய்மையை அவ்வப்படியே காக்க விழந்தோமேயல்லாது ஒரு புதிய பாடாந்தரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது நோக்கத் தக்கது. நாங்கள் பதிப்பித்துள்ள ராமாயணம் மூல ராமாயணத்தின் தூய பதிப்பு என்பதும் இப்பதிப்பு பெரும்பாலும் தெற்கத்திய பாடாந்தரத்தைச் சார்ந்து பதிப்பிக்கப்பெற்றுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பதிப்பாசிரியர் குழுவினர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தக்ஷிண பாடாந்தரத்திலிரிந்தும் இடைச்செருகல்கள் என்றுகருதப்படும் பகுதிகள் களையப்பட்டுள்ளன எனவும் கருத்துப் பகர்ந்துள்ளனர்.
இந்த Critical Edition முயற்சியில் எங்களுக்குக் கிடைத்த சுவடி ஆதாரங்களின் மூலமும் எங்கள் பரிசீலனைகளின் மூலமும் தக்ஷிண பாடாந்தரங்கள் தான் மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் தூய்மையை உள்ளது உள்ள படி பாதுகாத்துள்ளது எனக்கூற முடியும் என அறுதிக்கருத்து தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ மன்கட் அவர்கள் ராமாயண காவ்யம் எப்படி எழுத்தில் வந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் அனுமானம் :-
1. முதல் நிலையில் மூலகாவ்யமான ராமாயணம் வால்மீகி முனிவரால் அதிகமான அழகுபடுத்தல்கள் இல்லாது ஒரு குறுங்காவ்யமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப்படைக்கப்பட்ட காவ்யத்தின் சுவடி ஏதும் இன்று நமக்குக் கிட்டவில்லை.
2.அதன் பின் இந்தக் காவ்யம் பல நபர்களால் பல முறை மாறுபாடுகள் செய்யப்பட்டிருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும் இந்த மாறுபாடுகள் இந்த ராமாயண காவ்யம் தக்ஷிண பாரதத்தை அடையுமுன் வரையிலும் மட்டிலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மூல நூல் தக்ஷிண பாரதம் வந்தடைந்ததும் மாறுதல்கள் மேற்கொண்டு நிகழவில்லை என்பது நோக்கத் தக்கது.
ஸ்ரீ பட் அவர்கள் தெரிவிப்பதன் படி, பொதுயுகத்தின் முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளின் வாக்கில் ராமாயண காவ்யம் தக்ஷிண பாரதத்தை வந்தடைந்த சமயம் ஆழ்வார்களின் காலமாதலாலும் இந்த காவ்யம் வைஷ்ணவர்களுக்கு முக்யமான காவ்யம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாலும் அவர்களது பங்களிப்புடன் ராமாயண காவ்யத்தின் தக்ஷிண பாடாந்தரத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர் குழுவினர் எண்ணுகிறார்கள். இது ஒரு ஹேஷ்யமே அன்றி அறுதியாக நிர்த்தாரணம் செய்யப்பட்ட கருத்து அன்று என்பது நோக்கத் தகுந்தது.பதிப்பாசிரியர் குழுவின் பரிசீலனையின் படி ராக்ஷசர்கள் பற்றிய குறிப்புகள் மாறுதல்களால் ஏற்பட்ட குறிப்புகள் எனக்கண்டடைந்து அதன் படி தக்ஷிண பாடாந்தரத்திலிருந்து இவை நீக்கப்பட்டுளன என பதிப்பாசிரியர் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நமக்குக் கிடைத்த புராதனமான ஏட்டுச்சுவடி ப்ரதி பொ.யு. 1020 என்ற தொன்மையுடையது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலுக்கான வ்யாக்யானங்கள் இதற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் படைக்கப்பட்டன. ஆனால் மூல காவ்யம் இதற்கு சற்றேறக்குறைய 1500 வருஷங்கள் முன்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொன்மையான ப்ரதிக்கும் முந்தைய ப்ரதி ஏதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படியேதும் ஒரு ப்ரதி இருக்குமானால் அது அடுத்த க்ரிடிகல் எடிஷனில் கையாளப்பட வேண்டும் என பதிப்பாசிரியர் குழுவினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். பதிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கையில் மேற்கொண்டு கிட்டிய சுவடிப்ரதிகளையும் – அது நம்பகத்தன்மையும் முழுமையும் வாய்ந்ததாகக் கருதப்பட்டால் – அவை பதிப்புப்பணியில் கையாளப்பட்டன என்பதனை சில உதாரணங்களுடன் விளக்குகின்றனர்.
அறுதியாக தக்ஷிண பாடாந்தரமே மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் வடிவத்தை அப்படியே பாதுகாத்துள்ளது என்பதாலும் மாறுதல்களுக்கு உட்படாததாலும் பஹு சம்மதமான (பலராலும் ஏற்கப்படும்) ப்ரதி (Vulgate) எனக்கொள்ள வேண்டும் எனவும் ஒருமனதாகப் பதிப்பாசிரியர் குழுவினர் கருதுகின்றனர்.
அதே சமயம் உத்தர பாடாந்தரம் குறைந்த நம்பகத் தன்மையுடையது என்று கருதலாகாது என்ற முக்யமான கருத்தையும் தெரிவிக்கின்றனர். உத்தர பாடாந்தரங்களில் பெருமளவு மாறுதல்கள் மொழிசார்ந்தவையே அல்லாது வடிவு அல்லது உள்ளடக்கம் சார்ந்தவை அன்று என்றும் பகிரப்பட்ட கருத்து நோக்கத் தக்கது.
டாக்டர் ப்ராகிங்க்டன் அவர்களுடைய பார்வையையும் இந்தப் பார்வைகள் பொதுவிலே நமக்கு உணர்த்துவது யாது என்பதனையும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்!*
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ!*
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!*
எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே! தாலேலோ.
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3
- அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது
- “மணிக்கொடி’ – எனது முன்னுரை
- தொடாதே
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 6
- இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு
- ”புள்ளும் சிலம்பின காண்”
- தினம் என் பயணங்கள் – 1
- உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழா
- தாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !
- கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
- அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2
- திருக்குறளும் தந்தை பெரியாரும்
- படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி
- தூதும், தூதுவிடும் பொருள்களும்
- மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- கமலா இந்திரஜித் கதைகள்
- நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!
- முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை
- மருமகளின் மர்மம் – 12
- நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 42
- நீங்காத நினைவுகள் – 30
- திண்ணையின் இலக்கியத் தடம் -18
- ‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு