முனைவர் ந. பாஸ்கரன்,
தமிழாய்வுத்துறை,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்.
உ.வே.சா-வின் மாயவரம்(மயிலாடுதுறை) பயணம்:
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க செல்வது என்ற தீர்மானத்தை உறுதி செய்துகொண்டதிலிருந்து அங்கு செல்வதற்கான நல்ல நாளினை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டார் உ.வே.சா. ஒரு நல்ல நாளில் தந்தையுடன் மாயவரம் பயணம் செய்தார். தெய்வத்தைக் காண்பதுபோல் மகாவித்வானை நேரில் கண்டார். உ.வே.சா-வின் தந்தையார் மகாவித்வான் அவர்களிடம் வந்ததற்கான காரணத்தைச் சொல்லி வேண்டுதலையும் வைத்தார். மகாவித்வானார் உ.வே.சா- விடம் கற்றலுக்கான ஆர்வமும் தகுதியும் இருக்கிறதா என்பதை சில கேள்விகளைக் கேட்டு திறனறிந்தார். நைடதம் என்ற நூலிலிருந்து ஒரு பாடலைச் சொல்லச் சொன்னார். இதுபோன்ற பல கேள்விகளுக்கும் மகாவித்வானார் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாகவே பதிலிறுத்த உ.வே.சா-வின் திறமையைக் கண்டு வியந்தார். உ.வே.சா-விற்கு இசைப்பயிற்சி எந்த அளவிற்கு உண்டு என்பதையும் அவரின் பாடுதல் திறனையும் விசாரித்து அவரது இசைப்புலமை குடும்பப்பாரம்பரியத்தாலும், பயின்ற ஆசிரியர்களாலும் அடைந்துள்ளதை அறிந்து மகிழ்ந்தார். மாயவரத்தில் வசித்து வரும் கோபாலகிருஷ்ண பாரதியாரைப் பற்றிய அறிதல் உண்டா என்பதையும் விசாரித்து அவரின் அறிமுகம் உ.வே.சா-வின் தந்தை அவர்களுக்கு இருந்ததைக் கேட்டு மகிழ்ந்தார். மேலும், கற்றலை எக்காரணம் கொண்டும் இடையில் நிறுத்திவிட்டு சென்றுவிடக்கூடாது என்பதையும் உறுதிமொழியாகப் பெற்றுக்கொண்டார். திருவாவடுதுறைக்குப் போன பிறகு உணவும் பாதுகாப்பும் தாமே அளிப்பதாகவும் மாயவரத்தில் இருக்கும் வரை அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும்படியும் சொன்னார். மிகுந்த மன நிறைவோடு உ.வே.சா-வின் தந்தை அதனை ஏற்றுக்கொண்டார்.
மூத்த மாணவரிடம் பாடம் கற்றல்:
உ.வே.சா-வின் தந்தை மறுநாள் தற்செயலாக கோபாலகிருஷ்ண பாரதியாரைச் சந்தித்து எல்லா செய்திகளையும் சொல்லி இடையிடையே உ.வே.சா-விற்கு சங்கீதத்தையும் கற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால், இச்செய்தியை மகாவித்வானாரிடம் உ.வே.சா- தெரியப்படுத்தவில்லை. ஆனாலும், ஒரே நேரத்தில் இருவரிடமும் பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தார். உ.வே.சா-வினுடைய கற்றலுக்கான ஏற்பாட்டை செய்து முடித்த அவரது தந்தை மனநிறைவுடன் சொந்த ஊருக்குத் திரும்பி சென்றார். உ.வே.சா-வின் கல்விகற்றல் அடுத்த நாளிலிருந்து தொடங்கியது. மகாவித்வானிடம் அச்சமயத்தில் கிருத்துவ மதம் சார்ந்த சவேரிநாதப்பிள்ளை என்பவர் பாடம் படித்துக் கொண்டிருந்தார். மகாவித்வானாரது வீட்டுப்பணிகளையும் அவரே கவனித்து வந்தார். அவரை அழைத்து உ.வே.சா- விற்கு நைடதத்தைச் சொல்லிக்கொடுக்குமாறு கூறினார். அதன்படி, அவர் சொல்லிக்கொடுத்ததில் உ.வே.சா- நிறைவு அடையவில்லை. அவரின் முழு எதிர்பார்ப்பும் மகாவித்வான் பக்கமே நின்றது. அவரிடம் பாடம் கேட்கவே அவரின் மனம் தவம் கிடந்தது.
ஆசிரியரிடம் அன்பாய்ப் பழகுதல்:
மகாவித்வானரின் அன்பைப் பெறுவதற்கு வழிகளைத் தேடினார். மகாவித்வானார் தினமும் தமது தோட்ட்த்தில் வளர்த்து வரும் செடிகளை அவலுடன் கவனித்து வருவார். செடிகள் வாடினால் வாடுவார், வளர்ந்தால் ஆனந்தம் அடைவார். இதனை கவனித்து வந்த உ.வே.சா- ஆசிரியரின் மனம் கவர அவரின் மனதுக்குப் பிடித்தபடி அதனையே வழியாக பயன்படுத்திக்கொண்டர். ஆசிரியர் தோட்டத்திற்கு சென்று எதையெல்லாம் கவனிப்பாரோ அதையெல்லாம் உ.வே.சா- வும் கவனித்து அவருக்கு சொல்லலானார். வளர்ந்துவரும் ஒவ்வொரு தளிரையும் காட்டி அவரை மகிழ்ச்சி அடைய செய்தார். இதனால், அவருடன் நெருக்கத்தை சம்பாதித்தார். நேரம் பார்த்து அவரிடம் நேரடியாக பாடம் படிக்க தாம் கொண்டிருக்கும் ஆவலை எடுத்து இயம்பினார். சவேரியிடம் தொடங்கிய நைடதம் முடிந்தவுடன் தாம் பாடம் நட்த்துவதாக கூறினார். அதைக்கேட்ட உ.வே.சா-வின் மனம் பேரானந்தம் அடைந்தது. சவேரிநாதப்பிள்ளையை அவரே அறியாவண்ணம் அவசரஅவசரமாக நைடதத்தை முடிக்கவைத்தார். அச்செய்தியை உடன் சென்று ஆசிரியரிடம் தெரிவித்து அடுத்தபாடத்தை மகாவித்வானார் ஆரம்பிப்பதற்கானக்கும் சூழலை ஏற்படுத்தி வைத்தார். அதைப்போலவே அடுத்த நாள் உ.வே.சா-விற்கு தாம் இயற்றிய “திருக்குடந்தை திரிபந்தாதி”யைப் பாடம் சொல்லத்தொடங்கினார். ஒரே நாளில் 48 1
பாடல்களைப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அந்தாதி, பிள்ளைத்தமிழ் என்று பல சிற்றிலக்கியங்களைப் பாடம் நடத்தியுள்ளார்.
ஆசிரியரின் நுண்மான்நுழைபுலம்:
மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் தம்மிடம் பாடம் படிக்கும் மாணவர்களுக்குப் படித்த பாடத்தில் எந்தெந்த இடங்களில் சந்தேகமும் தெளிவின்மையும் உள்ளது என்பதை அவர்களிடம் கேட்காமலேயே உணர்ந்து அதனை மீண்டும் சொல்லி விளக்கியுள்ளார். உ.வே.சா- இதனை, “நமக்கு இது தெரியாது என்பதை இவர் எப்படி இவ்வளவு கணக்காக தெரிந்து கொண்டார்” என வியந்து கூறுகிறார். தம் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிசொல்லிப் பழகியிருந்த பழக்கத்தால் ஒவ்வொருவருடைய அறிவையும் விரைவில் அளந்தறிந்து அவர்களுக்கு ஏற்ப பாடம் சொல்லும் வல்லமை மகாவித்வானிடம் இருந்துள்ளது. கற்பிப்பவர்க்கு இருக்க வேண்டிய நுட்பமான அறிவுத்திறனில் இவ்வறிவு முதன்மையானதாக கருத இடமுள்ளது. அவர் காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது வாழ்நாள் முழுமையும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். மகாவித்வனார் மிக அதிகமான அறிவுசெல்வங்களைக் குவியலாகப் பெற்று விளங்கியுள்ளார். அதனால் தம்மிடம் கற்க வரும் மாணவர்களுக்கு அறிவுசெல்வங்களைக் கிள்ளித்தராமல் அள்ளித்தந்துள்ளார். உ.வே.சா- தமக்கு இதற்கு முன் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களான அரியலூர் சடகோபையங்கார், அமிர்த கவிராயர் போன்ற ஆசிரியர்களை ஈண்டு மகாவித்வனாருடன் ஒப்பிட்டு நோக்கி இவருக்கிருக்கும் உயர்வை மலைக்கும் மடுவுக்குமானதாக எண்ணி வியக்கிறார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட நூல்களை அவர்களே போதிக்கும் ஆசிரியராய் இருந்து நடத்துகின்ற ஓர் அரிய வாய்ப்பைத் தாம் பெற்ற பெரும் பேறாக உ.வே.சா- எண்ணி வியக்கிறார். பாடம் சொல்லும் போது கையில் நூல்கள் ஏதுமின்றி அனைத்தையும் மனப்பாடமாக மகாவித்வான் சொல்லுவார். பாடல்களைச் சொல்லும் போது நயத்துடனும் ஏற்றஇறக்கத்துடனும் கேட்கும் போதே மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்லுவார் என்கிறார். காலையிலிருந்து மாலை வரை பாடம் சொன்னாலும் சலிப்பின்றி பாடங்களை சொல்லக்கூடியவராகவும் இருந்துள்ளார். நூலாசிரியர் வரலாறு,நூலுக்கானப்பொருள்,நூல்விளக்கம்,நூலோடு தொடர்புடைய செய்திகள் போன்ற பலவற்றையும் ஆசிரியர் சொல்லவேண்டும் என்பதை மகாவ்த்வனார் கற்றலின் வழி வெளிப்படுத்துவார். எல்லாவற்றிற்கும் மேலாக பாடம் கேட்கும் மாணவர்களின் உட்ல்நலம், உணவு போன்றவற்றிலும் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தி அன்புடனும் அக்கரையுடனும் விசாரிப்பார். ஒருமுறை உ.வே.சா- வின் முகம் சற்று சோர்வாக இர்ந்த்தைக் கவனித்த மகாவித்வானார் “உன் முகம் ஏன் சோர்வாக இருக்கிறது? கண்கள் வழக்கத்திற்கு மாறாக சிவப்பாகவும் சோர்வாகவும் உள்ளது. நீ உடனே சென்று எண்ணெய் தேய்த்து குளித்துவிடு வா” என்று அன்ப்பி வைத்து அதன் பின் அவாறு குளித்து வந்தவுடன் பகத்தில் இருந்தவரிடம் அவரது முகத்தைக்காட்டி இப்பொழுது முகம் தெளிவாக இருக்கிறது பாருங்கள் என்று சொல்லி பாடம் நடத்தியுள்ளார். ஆசிரியரின் இதுபோன்ற நற்செயல்களால் தாய் தந்தையரைப் பிரிந்து கல்வி கற்கும் மாணவர்கள் மனவருத்தமின்றி பாடம் பயின்றுள்ளனர்.
ஆசிரியரின் விருப்பமே மாணாக்கர் விருப்பம் :
ஆசிரியரின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உ.வே.சா- தமது கொள்கையாக ஏற்று படித்த ஒவ்வொரு நாழிகையிலும் ஏற்று நடந்து வந்தார். ஆசிரியர் கேட்காமலேயே அவருக்கான உத்விகளை செய்வதிலும் கவனம் செலுத்தி வந்தார். ஆசிரியரின் வீடில் ஓடு மாற்றிய போதும், தோட்ட்த்தில் கிணறு தோண்டிய போதும் ஆசிரியர் செய்த வேலைகளைப் பார்த்து மனம் பொறுக்காமல் தாமே ஓடோடி சென்று எல்லாஉதவிகளையும் செய்து முடித்தார். ஒரு நாள் ஆசிரியர் மகாவித்வனார் உ.வே.சா- வை அழைத்து உனக்கு ஏன் வெங்கட்ராமன் என்று பெயர் வைத்தார்கள் ?, என்றார். தங்கள் வீட்டு குலதெய்வம் வெங்கடாசலபதி என்பதால் இப்படி வைத்துள்ளார்கள் என்றார். ஆசிரியர் எமக்கு இப் பெயர் உடன்பாடில்லை. உனக்கு வேறுஏதேனும் பெயர் உண்டா? என வினவ : சாமா என்று வீட்டில் செல்லமாக அழைப்பார்கள் என்றார். சாமிநாதன் என்று பொருள், இனி அப்பெயரே உனக்கு வழங்கப்படும் என்று கூற, உ.வே.சா- வும் அதனை ஏற்க அன்றிலிருந்து அழைக்க நிலைக்கப்பெற்றதே உ.வே.சாமிநாதையர் என்ற பெயராகும். இப் பெயர் மாற்றம் நிகழ்ந்த போது உ.வே.சா- விற்கு வயது 17. ஆசிரியரின் மனமகிழ்வே முதன்மையானது என்ற எண்ணமே இப்பெயர் மாற்றத்திற்கு முக்கியமாகும். அன்றைய நாள்படி மகாவித்வானார் சைவத்தில் மிக அதிகமான கால்கோழ்பட்டிருந்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைகுருவாக இருந்துள்ளமை ஒன்றே அதன் ஆகச்சிறந்த சான்றாக அறியகிடைக்கிறது. மேலும், உ.வே.சா- வின் மீது அதிகப் பற்று ஏற்பட்டதும், அதன் காரணமாக உ.வே.சா- வை பெயர்ச்சொல்லி அடிக்கடி அழைக்க நேர்ந்ததும் பெயர் மாற்றத்திற்கான முக்கிய காரணமாக அறிய வாய்ப்புள்ளது.
ஆசிரியர் அறிவுரையே வேதம்:
உ.வே.சா- தமது படிப்பை மகாவித்வானிடம் குருகுல வாசமாக செய்தார். இடையிடையே தமது தந்தையார் சொல்லிசென்ற அறிவுரையின்படி கோபாலகிருஷ்ண பாரதியாரிடமும் இசை பயிற்சியையும் தொடர்ந்தார். இதனை அறிந்த மகாவித்வானார் இயலைக் கற்பதற்கு இசைப் பயிற்சி ஒரு தடையாக இருக்கும் என்று அறிவுறுத்தினார். இதனை ஏற்று உ.வே.சா- பாரதியாரிடம் இசைபயிற்சிக்கு செல்வதை தவிர்த்துவிட்டார். உ.வே.சா-விற்கு சங்கீதத்தில் இயல்பாகவே ஒரு நாட்டம் இருந்தது, இருப்பினும் ஆசிரியர் சொல்வதை மீறக்கூடாது என்பதற்காகவே இசைக் கற்றலை நிறுத்திவிட்டார். ஒருகலையை பயிலும் போது அதில் முழு கவனத்தை செலுத்துவதற்கு அதை தவிர்த்த வேறு சிந்தனைகளின் குறுக்கீடுகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஆசிரியரி வாக்கின் உயர்வை கற்றலின் போது ஏற்பட்ட அனுபவங்களாலும் தெளிந்துள்ளார்.இதனை உ.வே.சா- தமது ஏட்டுச்சுவடிகளைப் பற்றிய ஆய்வின் போது அனுபவமாக உணர்கிறார். இதனை,“என் கவனத்தை எரண்டு திசைகளில் பகிர்ந்து செலுத்தாமல் ஒரே திக்கில் செலுத்தியது நல்லதுதான் என்ற எண்ணமும் வர வர உறுதியாயிற்று” என்பதினால் உணர்த்துகிறார். அதைதவிர, அக்காலகட்டத்தில் மாயிலாடுதுறை பகுதிகளில் வாழ்ந்த இசை மேதைகள் சிலர் ‘மகாவித்வான் சங்கீதக் கலையின் எதிரி’ என்று கூறி வந்த கூற்றிலும் உண்மை இல்லை என்பதையும் உணர்ந்தார்.
ஆசிரியர் அருகிலேயே இருப்பது:
ஆசிரியரின் அருகிலேயே இருந்து பாடம் கேட்பது என்பது அறிவுச் சுரங்கத்திற்குள்ளேயே வாழ்வதற்கு சமம். கற்கும் நேரத்திற்கு வரையரை இல்லை. ஆசிரியர் சொல்வது மட்டும் பாடம் இல்லை. ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு பாடம் என்னும் உண்மையை உ.வே.சா- உணர்ந்தார். உ.வே.சா- பாடம் படிக்கும் நேரம் முடிந்தும் ஆசிரியரின் அருகிலேயே இருந்துள்ளார். இதனால், மகாவித்வானைப் பார்க்க வரும் பிற பல்துறை வல்லுநர்களுக்கும் அவருக்குமிடையே நிகழும் அறிவுசார் விவாதங்களையெல்லாம் கேட்டும் உ.வே.சா- தமது அறிவைக் கூர்மைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால், ஆசிரியர் நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது.
உறங்கா மாணவன்:
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற பொன்மொழியை மார்க்ஸின் மொழியாகப் படித்ததாய் ஞாபகம். அதைப் போன்ற ஒரு நிகழ்ச்சி உ.வே.சா- வின் கற்றல் காலங்களில் நிகழ்ந்தது. சீர்காழிக்கோவை என்னும் நூலை பாடம் சொல்வதாக ஒருமுறை மகாவித்வானார் அவர்கள், உ.வே.சா- விடம் கூறினார். ஆனால், அப்பிரதி கூறைநாட்டு கனகசபை ஐயர் என்பவரிடம் உள்ளது என்றும், அதனை அவ்வளவு சீக்கிரம் அவர் தரமாட்டார் என்றும் கூறி வேறு யாரிடமாவது அதனை வாங்கி சீக்கிரமே அப்பாடத்தைத் தொடங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டு மதிய நேரத்திற்கான சிறு உறக்கத்திற்கு மகாவித்வானார் சென்று விட்டார். பாடத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் உ.வே.சா- வை உலுக்கத்தொடங்கிவிட்ட்து. அமைதி இழந்த உ.வே.சா- செய்வதறியாமல் சில கணம் மயங்கி உடனே ஒரு முடிவினை எடுத்தார். இரண்டுமூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கனகசபை ஐய்யரிடம் சென்று எப்படியாவது அப்பிரதியை வாங்கி வந்துவிடுவது என்று முடிவெடுத்து உடனே ஓட்டமும் நடையுமாக அவரின் வீடு நோக்கி விரைந்துள்ளார். எதற்கும் கரையாத கனகசபை ஐயரை கரைத்து பிரதியை வாங்கிக்கொண்டு ஆசிரியர் எழுவதற்குள் மிகவிரைவாக ஓட்டமும்நடையுமாய் திரும்ப வந்துவிட்டார். மகாவித்வானார் எழவும், உ.வே.சா- பிரதியுடன் வரவும் சரியாக இருந்துள்ளது. வியர்வை வழிய வந்துநின்ற உ.வே.சா- வைப் பார்த்த ஆசிரியர் காரணம் வினவி விவரம் அறிந்தார். உ.வே.சா- வின் கற்றல் தாகத்தை உணர்ந்தார். அக்கணமே அப்பாடத்தை நடத்தவும் தொடங்கிவிட்டார்.
அதனை முடித்த பிறகு பெரியபுராணத்தைப் பாடம் நடத்தியுள்ளார். இரவு பன்னிரெண்டு மணியையும் கடந்து பல தினங்கள் பெரியபுராணத்தைப் பாடம் கேட்டுள்ளார். அவ்வாறு நடத்திய போது இடையில் பலபாடங்கள் விடுபட்டு இருப்பதை ஆசிரியர் தமது அனுபவத்தால் கண்டறிந்து கூறியுள்ளார். அதன்பின் வேறுவேறு பிரதிகளுடன் ஒப்பிட்டு குன்றக்கூறுதலின்றி நடத்தியுள்ளார். இந்நிகழ்வெல்லாம் உ.வே.சா- வின் மனதில் மிக ஆழமாக பதிவாகி இருந்தது. பின்னாட்களில் அவராற்றிய பதிப்பு பணிக்கு இவையெல்லாம் விதையாகியுள்ளது.
குரு போற்றும் சீடன் :
மாயவரம் என்னும் மயிலாடுதுறையிலிருந்து மகாவித்வானார் புறப்பட்டதால் உ.வே.சா-வின் கற்றலுக்கான அடுத்த களமாக திருவாவடுதுறை அமைந்தது. திருவாவடுதுறையில் மிகஉயர்ந்த சைவமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்கச் செய்துகொண்டிருந்தது. மகாவித்வானார் அம்மடத்தில் அவைக்களப் புலவரைப்போல் கோலோச்சிக் கொண்டிருந்தார். அங்கு தனக்குப்பின் தமிழ்ப்பணி செய்யும் தகுதி உள்ளவன் தன் மாணவன் உ.வே.சா-வே என்பது அவரது உட்கிடக்கையாக இருந்துள்ளது. அதனை வெளியில் சொல்லாமல் அதற்கான அகச்சூழலை ஏற்படுத்திய வண்ணமாகவே இருந்துள்ளார். மடத்தின் மடாதிபதிகளிடம் தமிழால் நெருங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். இவரின் இசைத்தமிழ் மடாதிபதியை மயக்கியுள்ளது. மடாதிபதி தண்டியலங்காரம் குறித்த சில கலந்துரையாடல்களை மகாவித்வானிடம் நிகழ்த்தியபோது உ.வே.சா- வைத் தன்னுடன் இருக்கும்படி ஆசிரியர் செய்துள்ளார். சித்திரக்கவிதை எழுத மடாதிபதி, மகாவித்வனாரிடம் கேட்டுக்கொண்டபோது ஆசிரியர்க்கு முன்பாகவே உ.வே.சா- அக்கவியைப் புனைந்துவிட்டதை கண்ட ஆசிரியர் வெகுவாகப் பாராடினார். மேலும், உ.வே.சா- வின் கற்றலின் நுட்பத்தைப் பாராட்டி மடாதிபதி உ.வே.சா- விற்கு பலதமிழ் நூல்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டியது. பின்னர், திருவிடைமருதூர், கும்பகோணம், பட்டீஸ்வரம் என்று பல ஊர்களுக்கும் மாணவனை அழைத்துக்கொண்டு ஆசிரியர் சென்றுள்ளார். கல்லூரிப்பேராசிரியர் தியாகராசச்செட்டியாரிடம் உ.வே.சா-வை அறிமுகப்படுத்தி அவரிடம் பாடம் நடத்தச்சொல்லி பெருமைப் பட்டிருக்கிறார். பேராசிரியர் வாய்விட்டு பாராட்டவில்லை என்றாலும் உ.வே.சா-வின் திறமையை உள்வாங்கியுள்ளார். உ.வே.சா-விடம் , “ நீ மிகப்பெரிய ஆளுமையிடம் பாடம் படிக்கின்றாய். கர்வம் கொள்ளாமல் படித்துக்கொள்ளவேண்டும். இவரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கற்றலைப் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிடக்கூடாது.” என்றெல்லாம் பல அறிவுரைகளைக் கூறியுள்ளார். இந்த அறிவுரை மிக ஆழமான உள்ளர்த்தங்களைத் தாங்கியது என்பதும், தன்னுடைய அடுத்தக்கட்ட நுழைவுக்கான திறக்கப்படாத கதவு என்பதையும் உ.வே.சா- உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
(கற்றல் தொடரும்)
- நெஞ்சு பொறுக்குதில்லையே…..
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2
- தினம் என் பயணங்கள் – 7
- பொறுமையின் வளைகொம்பு
- காத்திருப்பு
- தொடுவானம் 5.எங்கே நிம்மதி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பாலு மகேந்திராவின் சிறந்த பத்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.
- படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை
- வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’
- ”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]
- தமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…
- திண்ணையின் இலக்கியத் தடம்- 24
- சீதாயணம் நாடகப் படக்கதை – 22
- மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
- மருமகளின் மர்மம் 18
- நீங்காத நினைவுகள் – 36
- கொலு
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி
- புகழ் பெற்ற ஏழைகள் – 48
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
- விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு