பெரியவன் என்பவன்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

 

வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மா” என்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு புளியங்கன்று விரல்நீளத்துக்கு பச்சைப்பசேலென நின்றிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதன் வேர்ப்பகுதியில் கோழிகளால் சீய்க்கப்பட்ட பள்ளங்களை காலாலேயே மண்ணை இழுத்துத்தள்ளிச் சரிப்படுத்தினேன். வேகவேகமாக அது வளர்ந்து திசையெங்கும் கிளைவிரித்தபடி அடர்ந்து நிற்கிற காலம் விரைவில் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ”கைகால கழுவறதுக்கு எவ்வளோ நேரம்டா? சட்டுசிடுக்குனு வர தெரியாதா? வெளக்கு வைக்கற நேரத்துல அனுப்பாதன்னு எத்தன தரம் சொன்னாலும் புத்தி வராதா ஒனக்குனு அவருகிட்ட திட்டு வாங்கவைக்கறதே ஒனக்கு வேலயா போச்சி. ஒரு தலச்சம்புள்ளயாட்டமா நீ நடந்துகிற?” என்று உச்சத்துக்குச் செல்லும் அம்மாவின் குரல் மண்ணுலகத்தைநோக்கி என்னை இழுத்தது. ”தோ, வந்துட்டம்மா” என்றபடி வேகவேகமாகத் திரும்பி, ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு கடைக்குக் கிளம்பினேன்.

“என்ன வாங்கியாரணும்னு தெரியுமில்ல?” ஆணியில் மாட்டியிருந்த பையை எடுத்துக் கொடுத்தபடி கேட்டாள் அம்மா. “தெரியும்மா. எட்டணா குடுத்தா நொய். ஒரு ரூபாய் குடுத்தா அரிசியும் காய்கறியும். அஞ்சணா ஆறணான்னு குடுத்தா கெழங்கு” சிரித்துக்கொண்டே பாடம் ஒப்பிப்பதுபோலச் சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. நான் கடையைநோக்கி ஓடினேன். பிள்ளையார்கோவில்பக்கம் ஒரு திருப்பம். அப்புறம் சினிமா தியேட்டர்பக்கம் மற்றொரு திருப்பம். டயர் கடைபக்கமாக இன்னொரு திருப்பம். பிரதான சாலையில் கண்ணபிரான் ஸ்டோர்ஸ் தாண்டி அப்பாவின் கடை வந்த பிறகுதான் நின்றேன்.

பச்சை நிறத்தில் ஒரு கால்சட்டையை அப்பா தைத்துக்கொண்டிருந்தார். கடையில் வேலை செய்துகொண்டிருந்த அண்ணன் ஒரு ஜாக்கெட்டுக்கு பொத்தான் கட்டிக்கொண்டிருந்தார். மிஷினுக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுவயதைக் கடந்த அம்மா ஒருவர் அப்பாவை பேர்சொல்லி அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

“பாக்கும்போதே தெரியுது ஒன் வேலத்தெறம. கண்ணளவிலயே சரியா இருக்கும்ன்னு தோணுது. நல்ல வேலக்காரன்தான் நீ. விழுப்புரம் பாண்டிச்சேரினு கட வச்சிருந்தா நல்லா கொழிக்கலாம். இந்த குப்பகாட்டுல கட வச்சி பொழைக்கணும்னு அந்தக் கடவுள் ஒன் தலையில் எழுதிட்டான்போல…..”

“பொறக்கும்போது எழுதன எழுத்த இனிமேதான மாத்திடமுடியும்மா? நமக்கு விதிச்சது அவ்ளோதான். எதுவரைக்கும் ஆயுள் உண்டோ, அதுவரைக்கும் வாழ்ந்து கணக்க தீத்துட்டு போய்கினே இருக்கவேண்டிதுதான்..”

”ஏன்டா பலராமா அப்படி சொல்லற? ஒலகம் எப்பவும் ஒரே சீரா போயிடறதில்ல. பள்ளம்னு ஒன்னு இருந்தா மேடுன்னு ஒன்னு இருக்கத்தான் செய்யும். எல்லாருக்கும் நல்லகாலம்னு ஒன்னு வரும்டா…..”

“வரட்டும் வரட்டும் மெதுவாவே வரட்டும், அதுவரைக்கும் இந்த ஒடம்புல உயிர் ஒட்டிகினு இருக்கணும்…”

“பொழுது சாயற நேரத்துல என்ன வார்த்தை சொல்றடா பலராமா?  புள்ளைங்களாம் வளர்ந்து பெரிசாயி செழிச்சி மரமா  நிக்கறத பாக்கவேணாமா? எந்த காலத்துலயும் மனசு தளர்ந்துபோயிடக் கூடாதுடா…”

அப்பா பதில் பேசாமல் தைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். இருட்டத் தொடங்கிவிட்டால் அவருடைய பார்வை மங்கத் தொடங்கிவிடும். அப்புறம் வேலை செய்ய முடியாது. வேலையை முடிப்பதில் அவர் வேகத்தைக் காட்டினார். அவர்கள் உரையாடலின் நடுவில் நுழைய முடியாமல் பணம் கேட்டுப் பெற எது உகந்த நேரமாக இருக்கும் என்று தயங்கித்தயங்கி இருவரையும் மாற்றிமாற்றிப் பார்த்தேன்.

“சரி, இந்த நாலு ஜாக்கெட்டுக்கும் எவ்வளவு தரணும்னு சொல்லுடா பலராமா. குடுத்துட்டு நானும் கெளம்பறன்……” மிஷின் ஓரமாக இருந்த உருப்படிகளை மடித்துச் சுருட்டி கைப்பைக்குள் வைத்துக்கொண்டார்.

“நீங்க போங்கம்மா. நாளைக்கோ நாளன்னிக்கோ ஐயரு இந்தப் பக்கமா வந்தா நான் கணக்கு சொல்லி வாங்கிக்கிறேன்…..” விரல் நகத்தால் துணியின் விளிம்புகளைக் கீறி மடித்தபடி அப்பா சொன்னார்.

“இந்தக் கதையில அவர இழுக்காத பலராமா, கடைக்கு போனா ரெண்டு கூறு காய எடுத்து பையில போட்டுண்டு மூணு கூறுக்கு கணக்கு பாத்து பணம் குடுக்கற மனுஷன் அவரு. இந்த ஜாக்கெட் கூலிய நானே குடுத்துடறேன். எவ்வளவு வேணும்னு சொல்லு….”

“என்னம்மா நீங்க, ஒங்களுக்குத் தெரியாதா? எப்பவும் குடுக்கறத குடுங்கம்மா…”

“நீ உன் மனசுல படறத நேரா சொல்லு பலராமா. கூட குடுக்கறதயும் கொறச்சி குடுக்கறதயும் அதுக்கப்பறமா நான் பார்த்துக்கறேன்.”

“நூல் வெல, பட்டன் வெலலாம் ஏறிடுச்சிம்மா. கைக்கும் இடுப்புக்கும் கைத்தையல் வேற போட்டு தச்சிருக்கன். ஜாக்கெட்டுக்கு நாலணா போட்டுக்குங்க. நாலு உருப்படிக்கும் ஒரு ரூபா குடுத்துடுங்க…”

“என்ன பலராமா இந்த மாதிரி கூலி கேக்கற? போற போக்க பாத்தா நானே ஒரு மிஷின போட்டுண்டு ஒக்கார்ந்துடலாம்போல. சரியா சொல்லு பலராமா..”

”நான்தான் ஐயருகிட்ட வாங்கிக்கறேன், நீங்க போங்கம்மான்னு சொல்றேன். அதயும் வேணாம்ங்கறிங்க. நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். அப்பறம் நீங்க குடுக்கறத குடுங்க..”

”போனதரம் மூணணா மேனிக்கு கணக்குபாத்து குடுத்ததான் ஞாபகம்.  இப்ப நாலணான்னா எப்படி?”

ஊசியின் கீழே நகரும் துணியையே பார்த்தபடி சில கணங்கள் அமைதியாக இருந்தார் அப்பா. பிறகு மெதுவாக “அரிசி வெல, வெறவு வெலயெல்லாம் ஏறும்போது நானும் கொஞ்சம் ஏத்தினாதானம்மா பொழைக்கமுடியும்?” என்று அந்த அம்மாவைப் பார்த்துச் சொன்னார்.

“அதுக்காக இப்படியா ஏத்தணும்?” அந்த அம்மாவும் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். கடைசிவரைக்கும் தன் நிலைபாட்டிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக இருந்து, மூன்றணாவுக்கு கணக்குப் பார்த்து பன்னிரண்டணாவை எடுத்துவைத்தார்.  ஒரு எட்டணா நாணயம். ஒரு கால்ரூபாய் நாணயம். அப்பா ஒன்றும் பேசாமல் அந்த நாணயங்களை எடுத்து இழுப்பறைக்குள் போட்டார்.

அப்போதுதான் என்னைப் பார்த்தவர்போல “இவன்தான் மூத்தவனா?” என்று அப்பாவிடம் கேட்டார்.  “ஆமாமாம். இங்கதான் ஹைஸ்கூல்ல படிக்கறான்” என்றார் அப்பா. “இவ்வளோ பெரிய பையன் இருக்கும்போது ஒனக்கென்ன கவல பலராமா? இன்னும் கொஞ்சகாலம் பல்ல கடிச்சிண்டிரு. அவன் பாரம் சொமக்க ஆரம்பிச்சாட்டா போதும், நீ காலம்பூரா காலாட்டிண்டு சாப்டலாம்” என்றாள் அந்த அம்மா. அப்பா பதில் எதுவும் பேசாமல் தலையாட்டியபடி சிரித்தார். “சரி வரன்டா பலராமா” என்றபடி அந்த அம்மா கிளம்பிச் சென்றார்.

எனக்குக் கிடைக்கப்போகிற தொகையின் அளவு எனக்கு அந்தக் கணத்தில் புரிந்துவிட்டது. பன்னிரண்டணா கிடைக்கும். அல்லது எட்டணா மட்டும் கிடைக்கும். இரண்டில் ஒன்று. இழுப்பறைக்குள் போய்விழுந்த  நாணயங்களையே நினைத்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்பாவின் பக்கம் நகர சற்றே அச்சமாக இருந்தது. அவரோ நிமிராமலேயே தைத்தபடி இருந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த வேலையை முடித்து, துணியை ஒரு உதறு உதறி கடைஅண்ணனிடம் கொடுத்துவிட்டு, கைவிரல்களை மடித்து சொடக்கு எடுத்துக்கொண்டார். அப்போதுதான் என்னைப் பார்த்தார்.  உடனே நினைவுக்கு வந்தவராக “ஓ, ஒனக்கு இன்னும் தரலையா?” என்று தனக்குள் பேசிக்கொண்டார்.  மிஷின் டிராயரைத் திறந்து, நூல்கண்டுகள், பாபின்களையெல்லாம் சீய்த்துத் தள்ளி, நாணயங்களை எடுத்து மேசையில் வைத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஒரு எட்டணா. இரண்டு நாலணா. மொத்தத்தில் ஒரு ரூபாய். ஆச்சரியத்தில் என் கண்கள் விரிந்தன. நம்பமுடியாதபடி அவரையே பார்த்தேன். அரிசிக்குப் பணம் கிடைத்துவிட்டதில் நிம்மதியாக இருந்தது.

சின்னபடி அரிசி. பத்தணா. பருப்பு, புளி, காய்கறிகள், பொட்டுக்கடலை எல்லாம் ஆறணா. அதில் அரையணா மிச்சம் பிடித்து, ஒரு மாங்காய் வாங்கிக் கடித்துத் தின்றபடி வீட்டைநோக்கி நடந்தேன்.

 

 

****

 

அம்மா அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்தாள். நானும் தம்பிகளும் தங்கையும் கூடத்தில் சிம்னி விளக்கைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தோம். அடுத்த வாரம் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுக்காக நான் பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.

“நீ பாட்டுக்கு நீ உண்டு ஒன் படிப்பு உண்டுனு போயிடாதடா. பெரிய பையனா இருக்கறவனுக்கு  தம்பிங்க மேலயும் ஒரு கண்ணு இருக்கணும். படிச்சன் படிச்சன்னு சொல்லிட்டு போனமாசம் பரீட்சயில நூத்துக்கு இருபது, இருபத்தஞ்சினு வாங்கிவந்து நின்னான் நல்லுவன். அவன அப்பப்ப கண்காணிச்சிகினே இரு. மறந்துடாத” ஊதாங்குழலால் ஊதி அடுப்புக்குள் எரியாமல் இருந்த விறகை எரியவைத்தபடி அம்மா சொன்னாள்.

வேகமாக என் பாடங்களைப் படித்துமுடித்துவிட்டு தம்பிக்கு கணக்குச் சொல்லிக்கொடுத்தேன். கழித்தல் குறி இருக்கிற இடத்தில் கூட்டினான். கூட்டல் குறி இருக்கிற இடத்தில் கழித்தான். அவனுக்கு அந்தக் குறிகளைப் புரியவைப்பதில் சிரமமாக இருந்தது. ஏராளமான மாதிரிக்கணக்குகளைச் செய்துகாட்டியபோதும் அவன் மனத்தில் ஏறவில்லை. எதைச் சொன்னால் அவன் மனத்தில் பதியும்படி சொல்லமுடியும் என்று யோசித்தபடி அக்கம்பக்கம் திரும்பி சில கணங்கள் வேடிக்கை பார்த்தேன். சிம்னிவிளக்கினால் உருவான நிழல் சுவர்மீது ஒரு சித்திரம்போலக் காணப்பட்டது. துணிக்கொடியில் பழைய துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. அடுப்பு எரியும் வெளிச்சத்திலேயே அம்மா முருங்கைக்காயை நறுக்கி ஒரு தட்டில் போடுவதைப் பார்த்தேன். அப்போதுதான் சட்டென்று என் மனத்தில் ஒரு எண்ணம் உதித்தது.

“இங்க பாருடா. இந்தக் கழித்தல் குறிய நல்லா பாரு. நறுக்கிவச்ச முருங்கக்காய் துண்டுமாதிரி இருக்குது.  இந்தக் கூட்டல் குறிய பாரு. ரெண்டு துண்டுங்க ஒன்னுமேல ஒன்னு கெடக்குறமாதிரி இருக்குது. ஒரு துண்டு இருக்கற எடத்துல கழிக்கணும். ரெண்டு துண்டு இருக்கற எடத்துல கூட்டணும். புரியுதா?” இந்த எடுத்துக்காட்டு நான் எதிர்பார்த்தமாதிரியே உடனே வேலை செய்யத் தொடங்கியது. சிலேட்டில் போட்டுக்கொடுத்த மாதிரிக்கணக்கை ஒருசில நிமிடங்களிலேயே போட்டுமுடித்தான். உற்சாகத்தோடு நான் சொன்ன ”சபாஷ்” அவனை உடனே ஊக்கப்படுத்தியது. எழுதியதை அழித்துவிட்டு வேறொரு கணக்கைப் போட்டுக்கொடுத்தேன். அதையும் உடனே செய்தான். என் திட்டம் வெற்றியைநோக்கிச் செல்வதைப் பார்த்து எனக்கு மிகுந்த மனநிறைவாக இருந்தது. கழித்தல் குறியை மாற்றி கூட்டல் குறியைப் போட்டு, இன்னொரு கணக்கை எழுதிக் கொடுத்தேன். அதையும் விரைவிலேயே சரியாகப் போட்டுமுடித்தான். கழித்தல், கூட்டல் என்று மாற்றிமாற்றி எல்லா விதங்களிலும் அவனைச் சோதித்தேன். ஒருமுறைகூட தவறு செய்யாமல் எல்லாக் கணக்குகளையும் போட்டு முடித்தான். கழித்தல், கூட்டல் என்பவை அவனைப் பொருத்தவரை ஒரு முருங்கைக்காய் அல்லது இரண்டு முருங்கைக்காய். அவ்வளவுதான். அடுப்பில் குழம்பைக் கிளறியபடி அம்மா சிரிப்பதைப் பார்த்தேன். “சரியான சாப்பாட்டு ராமன்டா, சாப்படற பண்டம்ன்னதும் எப்படி டான் டான்னு போடறான் பாரு…..” என்றாள். மேலும் சில மாதிரிக் கணக்குகளைப் போட்டுக்கொடுத்துவிட்டு, எனது புத்தகத்தைப் படிக்கலாம் என்று பைக்குள் கைவிட்டேன்.

“டேய் பெரியவனே, அப்படியே அவளுக்கும் நாலு எழுத்து கத்துக்குடுத்துடுடா.  அவளுக்கு தமிழ் தகராறு. இங்கிலீஷ் இழுப்பு……” அம்மாவின் குரல் கேட்டு, எடுத்த புத்தகத்தை பைக்குள்ளேயே வைத்துவிட்டேன்.

விசித்திரமான பெண் அவள். தனித்தனி எழுத்துகளாகச் சரியாகச் சொல்வாள். ஒரு சொல்லாக அவற்றையெல்லாம் சேர்த்துச் சொல்லும்போது குழப்பிக்கொள்வாள். மயில் மாயிலாகிவிடும். ரயில் ராயிலாகிவிடும். பூட்டு புட்டாகிவிடும். தனியெழுத்துக்கு வாயை எந்த அளவுக்குத் திறப்பது, கால்வைத்த எழுத்துக்கும் கொம்புவைத்தன் எழுத்துக்கும் எந்த அளவுக்கு வாயைத் திறப்பது என்பதில்தான் உச்சரிப்பின் சூட்சுமமே உள்ளது என்று எங்கள் கண்ணன் தமிழ்ஐயா சொன்னதை நினைவுபடுத்திக்கொண்டேன். அவளுக்கு அதைப் புரியும்படி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக்காட்டிச் சொல்லிமுடித்தேன். அதற்குப் பிறகு பெரிய அளவுக்குப் பிழைகள் எதுவும் இல்லாமல் சின்னச்சின்ன சொற்களைப் படிக்கத் தொடங்கினாள். அடுப்பில் சாம்பார் கொதிக்கும் மணம் வீசி பசியை கிளறிவிட்டது.

“அந்த சின்னவனயும் அப்படியே வெரல புடிச்சி நாலு எழுத்த எழுத வச்சிடுப்பா. தோ கொதி வந்ததும் கொழம்ப எறக்கிடலாம். சங்கு ஊதற நேரத்துக்கு சாப்ட்டுடலாம்” என்றாள் அம்மா.

சிலேட்டில் பெரிய அளவில் எழுத்தை எழுதி, அதன்மீது அவன் விரலைப் பிடித்து எழுத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டே பத்து முறை எழுதவைத்துப் பழக்கினேன்.

எல்லாவற்றையும் முடித்து என் புத்தகப்பையை இழுத்தேன். ஏதோ வேலை சொல்வதற்காக என்னைப் பார்த்தபடியே “பெரியவனே…” என்று என்னமோ சொல்லத் தொடங்கினாள். அதற்கிடையில் கெஞ்சுவதைப்போல நான் அவளைப் பார்த்து ”படிக்கற வேல நெறயா இருக்குதுமா. எல்லா வேலயயும் செஞ்சிகினே இருந்தா நான் எப்பம்மா படிக்கறது?” என்று மெதுவாகச் சொன்னேன். அதற்குள் அம்மாவின் முகம் சுண்டிவிட்டது. என்னமோ சொல்லவந்து நெஞ்சுக்குள் அப்படியே தள்ளி விழுங்கிவிட்டாள். பார்ப்பதற்கு எனக்கே கஷ்டமாக இருந்தது. தாங்கமுடியாமல் “என்னம்மா?” என்றேன்.  ”ஒன்னுமில்ல ஒன்னுமில்ல நீ படி” என்று சொல்லிவிட்டு சில நிமிடங்கள் சும்மா இருந்தாள். பிறகு மெதுவாக எழுந்து வெளியே சென்று சுவரோரமாக அடுக்கிவைத்திருந்த எருமுட்டைகளிலிருந்து நாலு எருமுட்டைகளை எடுத்துவந்தாள். எந்தப் பக்கமும் திரும்பாமல் பதில்களை மனப்பாடம் செய்வதில் கவனத்தைக் குவித்தேன்.

படித்துமுடித்து பைகளை எல்லாம் ஓரமாக எடுத்துவைத்துவிட்டு சிம்னி விளக்கை எடுத்து சுவரில் அடிக்கப்பட்டிருந்த ஆணியில் மாட்டி தொங்கவிட்டேன். அம்மா கூடத்தை ஒருமுறை பெருக்கி அடுப்பங்கரைவரைக்கும் தள்ளிச் சென்று ஒதுக்கிவைத்தாள். பிறகு, பொதுவாகச் சொல்கிறமாதிரி, “பெரியவனே, நீ மட்டும் படிச்சா போதாது. ஒனக்கு கீழ உள்ளவங்களயும் படிக்கவச்சி காபந்து பண்ணனும் புரியுதா?. அதுதான் ஒரு நல்ல புள்ளைக்கு அழகு”   என அடங்கிய குரலில் சொன்னாள்.

 

***

 

அப்பாவுக்கு எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இரண்டுமாதங்களுக்கும் மேல் மருத்துவமனையில் தங்கியிருந்து மருத்துவம் பார்க்கவேண்டியிருந்தது. சின்னச்சின்ன நகைகளையும் வீட்டிலிருந்த வெள்ளி, வெண்கலப் பாத்திரங்களை அடகுவைத்துக் கிடைத்த பணத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளித்தாள் அம்மா. மருத்துவமனையிலிருந்து திரும்பிவந்த அப்பா வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. மருத்துவமனை ஊழியர் ஒருவரோடு பழகி நண்பராக்கிக் கொண்டிருந்தோம். அப்பாவின் மருத்துவச் சீட்டு அவரிடமே இருந்தது. மாதத்துக்கு இரண்டுமுறை அப்பாவுக்காக அவர் மருந்து வாங்கி ஊருக்கு அனுப்பிவைத்தார். அவர் செலவுக்காக அவ்வப்போது கொஞ்சம் பணம் அனுப்பவேண்டியிருந்தது. பல செலவுகளைக் குறைத்துக்குறைத்து சமாளித்துவந்தாள் அம்மா. தெரிந்தவர்கள் யாராவது திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு பத்திரிகை கொண்டுவந்து வைத்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் அம்மாவால் எந்தத் திருமணத்துக்கும் செல்ல முடிந்ததில்லை. “போவலாம், கண்டிப்பா போவலாம்” என்று  கடைசிவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பாள். ஆனால் அந்தக் குறிப்பிட்ட தினம், மற்ற எல்லா நாட்களைப்போலவே எங்களைக் கடந்துபோகும். அந்த ஊருக்குப் போனால் ரொம்ப நாட்களாகப் பார்க்காமல் இருந்த சொந்தக்காரர்களைப் பார்க்கலாம், விளையாடலாம், அங்கே இருக்கிற பூங்காக்கள், ஆறு, குளம், கோயில்களையெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்துக் கட்டும் மணல்கோட்டைகள் சரிந்துபோய்விடும். அந்த வருத்தமெல்லாம் கொஞ்ச நேரம் நெஞ்சை அழுத்துகிறமாதிரி இருக்கும். பிறகு எல்லாம் மறந்துபோய்விடும்.

மாத்திரைகள் வாங்கி அனுப்புவதில் மருத்துவமனை நண்பருக்கு ஏதோ சிக்கல் உருவாகிவிட்டது. அவருடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவரைப்பற்றி மேல் அதிகாரிக்குப் புகார் செய்துவிட்டார். அரசாங்க மாத்திரைகளை எடுத்து வெளியே விற்றுப் பணம் சம்பாதிப்பதாக ஒரு பொய்ப்புகார் எழுதி அனுப்பிவிட்டார். அப்பாவின் பெயர் எழுதப்பட்ட சீட்டு அவர்வசமே இருந்ததால் விசாரணையில் அவர் தப்பமுடிந்தது. சம்பந்தப்பட்ட நோயாளியே வாங்குவதுதான் முறை, ஓர் அரசு ஊழியராக இந்த வேலையச் செய்வது சரியல்ல என்று அவரை எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்கள். விவரங்களை ஒரு கடிதமாக எழுதி, அந்த மருத்துவச் சீட்டைத் திருப்பி அனுப்பிவிட்டார் நண்பர்.

அப்பா மிகவும் தவித்துப் போய்விட்டார். எல்லா மாத்திரைகளையும் கடையில் வாங்குவது என்றால் செலவு கூடுதலாகும். மாத்திரை சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. எங்களுக்குச் சொந்தக்காரர் ஒருவர் அந்த ஊரில் இருந்தார். அவரைச் சந்தித்து விவரங்களைச் சொல்லி, உதவும்படி கேட்டுக்கொண்டோம். அப்படி சில மாதங்கள் கடந்துசென்றன. அதிலும் பிரச்சினை வந்தது. தொடர்ச்சியாக அவரால் அனுப்ப முடியாமல் போனது. நடுநடுவில் சில வாரங்கள் மருத்துவமனைக்கே செல்ல முடியாதபடி ஏதேனும் வேலைகள் குவிந்துபோகும். அவரைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. அவருக்கு நினைவூட்டவும் முடியாது. மாத்திரை இல்லாமல் அவர் உடல்சிக்கல்கள் கூடுதலாகும். கடைப்பக்கம் போகமுடியாதபடி அவர் படுக்கையிலேயே இருப்பார். அந்தமாதிரி சமயங்களில் கடையில் வேலை செய்த அண்ணனே ஏதாவது வேலை செய்து, கிடைக்கும் பணத்தைக் கொண்டுவந்து தருவார். அதைவைத்து செலவுகளைச் சமாளிக்க கற்றுக்கொண்டாள் அம்மா.

நெருக்கடியான சமயங்களில் அப்பா தனக்குரிய மாத்திரைகளை எங்கள் ஊரிலேயே இருந்த மருந்துக்கடையில் வாங்கத் தொடங்கினார். பெரும்பாலும் தூக்க மாத்திரைகள். ஒரு சமயத்தில் ஒன்றுதான் கொடுப்பார் அவர். ஒவ்வொரு முறையும் அதை வாங்குவதற்கு அப்பா நேரில் சென்று பார்த்துப் பேசி வாங்கிவருவார்.

அப்படித் தொடங்கிய பழக்கம் அவர்களுக்குள் நட்பாக மாறிவிட்டது. ஒருமுறை அப்பாவுக்குத் துணையாக நானும் கடைக்குச் சென்றிருந்தேன். பேச்சு எங்கெங்கேயோ சுற்றியலைந்துவிட்டு என்மீது வந்து நின்றது.

“பதினொன்னு முடிக்கப் போறான். வர சித்திரயில பரீச்ச முடிஞ்சிடும். அதுக்கப்பறம்தான் வேலைக்கு எங்கனாச்சிம் பாக்கணும். எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சுல பதிஞ்சிவச்சா வேல கெடச்சிரும்” அப்பா மழிக்காத தன் தாடியைச் சொரிந்தபடி சொன்னார்.

“ஒலகம் புரியாத ஆளாட்டம் பேசறியே பலராமா. இன்னிய தேதிக்கு விழுப்புரம் எக்சேஞ்சில ஒரு லச்சம் பேரு பதிஞ்சிவச்சிருக்கான் தெரியுமா?. அரசாங்கம் எக்சேஞ்ச் நடத்தறது நமக்கு வேல குடுக்கறதுக்கில்லப்பா, அவனுங்க வேல செஞ்சி பொழைக்கறதுக்காக. புரியுதா?” கடைக்காரர் சிரித்துக்கொண்டே பக்கத்தில் செங்கல் அளவுக்கு வைத்திருந்த பெட்டியை இழுத்து ஒரு பச்சை வெற்றிலையை எடுத்து வேட்டிமீதுவைத்து முன்னும் பின்னும் தேய்த்தார்.

அப்பா அதிர்ச்சியில் உறைந்துபோய் அவரைப் பார்த்தார். “அப்படின்னா அவனுங்கமூலமா வேல எதுவும் கெடைக்காதுன்னு சொல்றிங்களா?” என்று கேட்டார்.

 

“கெடைக்கும். ஆனா எப்ப கெடைக்கும்னு அந்த அரசாங்கத்துக்கே தெரியாது. பி.ஏ. எம்.ஏ. படிச்சவன்லாம் பதிஞ்சிவச்சிட்டு நாலு வருஷமா அஞ்சு வருஷமா நடயா நடந்து தேயறானுங்கன்னு பேப்பர்ல அப்பப்ப போடறானே, பாக்கறதில்லயா?”

அப்பா பதில் எதுவும் பேசாமல் வாகனங்கள் பறக்கும் சாலையையே சில கணங்கள் வேடிக்கை பார்த்தார்.

சிறிதுநேரத்துக்குப் பிறகு கடைக்காரரே தொடர்ந்தார். “அவன் மூலமா வேலயே கெடைக்காதுன்னு சொல்லலை. கெடைக்கும். ஆனா அதுவரைக்கும் அது ஒன்னயே நம்பி நாம கெடக்கவேணாம்னு சொல்றேன்…..”

அப்பா குழப்பத்தோடு அவரைப் பார்த்தார். “நீ எதுக்கும் கவலப்படாத. பரீச்ச முடிஞ்சதும் பையன நம்ம கடைக்கு அனுப்பு. மாசம் முன்னூறு ரூபா  குடுக்கறேன். போதுமா? ஓய்வு நேரத்துல இங்க்லீஷ் டைப்பிங், தமிழ் டைப்பிங்னு எதயாச்சிம் கத்துகிடட்டும். அவனுக்கும் எதிர்காலத்துல பயன்படும். வேல கெடைக்கற வரைக்கும் இருக்கட்டும், அதுக்கப்பறமா தாராளமா விட்டுட்டு போவட்டும். என்ன சொல்ற?”

அப்பாவுக்கு அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவர் கண்கள் ஒருகணம் பிரகாசத்தில் விரிந்ததைப் பார்த்தேன். ”சரி, அப்படியே செஞ்சிடலாம்” என்று உடனே ஒத்துக்கொண்டார். என் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் தலைகுனிந்து நின்றேன். அந்தக் கடைக்காரர் என் அருகில் வந்து தோளைத் தொட்டு, “பெரிய பையனா தோள் ஒசரத்துக்கு வளந்துட்ட பையன் நீ. அவனால இப்ப முடியலை. அவனுக்கு நீதான் இப்ப தொணைக்கு பொறுப்பா தாங்கலா இருக்கணும்”  என்றார். என் கண்களில் நீர் முட்டியது. குனிந்தவாக்கில் தலையை அசைத்துக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும் மருந்துக்கடைக்காரர் சொன்னதை அம்மாவிடம் சொன்னார் அப்பா. அதைக் கேட்டு எவ்விதத்திலும் எதிர்வினை காட்டாத அம்மாமீது வருத்தம் கொண்டார் அவர்.

”எந்த பதிலுமே சொல்லாம இருந்தா எப்படி? ஒன் மனசுல என்ன இருக்குதுனு சொன்னாதான தெரியும்?” வெளிப்படையாகவே கேட்டார் அப்பா.

“சித்தரமாச பரீச்சைக்கு இன்னும் எவ்வளோ நாள் கெடக்குது. அப்ப பாத்துக்கனா போச்சி. இப்ப எதுக்கு அந்த யோசனை?” அம்மா ஏதோ ஒரு கைவேலையைச் செய்துகொண்டே சொன்னாள்.

“கஷ்டப்படறமேன்னு ஒரு வழி சொல்றாரு. அத பாராட்டாம குத்தம் கண்டுபுடிச்சா எப்பிடி?” அப்பா இடைவிடாமல் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

“நல்லா படிக்கற புள்ளை அவன். கணக்குல நூத்துக்கு நூறு வாங்கறான். அதும் மதிப்பு நமக்கு தெரியவேணாமா? இன்னும் மேல படிச்சான்னா, பெரியபெரிய வேலைக்கெல்லாம் போவலாம். என்னமோ கிளிய புடிச்சி கூண்டுல வச்சாப்புல அவன இந்த மருந்துக்கடயில தள்ளிடவேணாம்..” அம்மா நிதானமாகத்தான் சொன்னாள். ஆனால் அவளையறியாமல் வார்த்தைகளில் அழுத்தம் அதிகமாக விழுந்துவிட்டது.

“அப்ப மாசம் முந்நூறு ரூபா சின்ன பணமா?”

“சின்ன பணமோ பெரிய பணமோ, அது எனக்கு தெரியாது. இன்னிக்கு இது கெடைக்குதேன்னு நெனச்சி, அவன் எதிர்காலத்த நாமளே வீணாக்கிட வேணாம்….”

“அவன்பாட்டுக்கு படிச்சிகினே போனா, நமக்கு பொழைக்கறதுக்கு என்ன வழி?”

“இவ்வளோ காலமா எந்த வழியா போனமோ அந்த வழியிலயே போவவேண்டியதுதான்.”

***

 

அப்பாவின் யோசனைகளை அம்மா கடைசிவரைக்கும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. எல்லா வசைகளையும் சங்கடங்களையும் அவள் சகித்துக்கொண்டாள். மேல்படிப்புக்காக வீட்டைவிட்டு வெளியேறவேண்டியிருந்தது. தாத்தா வீட்டில் தங்கிக்கொள்ளவும் மாமா வீட்டில் சாப்பிட்டு்கொள்ளவும் அம்மா பேசி ஏற்பாடு செய்திருந்தாள். துணிமணிகளோடும் சான்றிதழ்களோடும் கிளம்பவேண்டிய கடைசி நாளில் காதிலும் கழுத்திலும் மிச்சம்மீதி இருந்த நகைகளைக் கழற்றி விற்றுக் கிடைத்த முந்நூற்றுச் சொச்ச ரூபாயை என் கையில் கொடுத்து, “இதுக்குமேல குடுக்கறதுக்கு என்கிட்ட ஒன்னுமில்ல. இத வச்சி பொறுப்பா படிச்சி மேல வந்துடு” என்று சொல்லியனுப்பினாள்.

அன்று இரவு மனப்போராட்டத்தால் தவித்தேன். அப்பாவை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது. காலம்முழுக்க அவர் தன் நோயைப்பற்றியும் மருந்துகளைப்பற்றியும் மட்டுமே யோசிக்கக்கூடிய நிலையில் இருந்தார். அவர் அனுபவித்த வேதனைகளும் வலிகளும் வேறு எந்த சிந்தனையையும் நோக்கிச் சென்றுவிடாதபடி தடுத்துக்கொண்டே இருந்தன. நானும் தம்பிகளும் வகுப்பறைகளிலும் மற்ற இடங்களிலும் பெற்ற மதிப்புகளும் பெருமைகளும் அவர் மனத்தைத் தொடவே இல்லை. அந்தப் பெருமைகளில் பங்கே இல்லாதவர்போலவே அவர் வேறொரு உலகத்தில் இருந்தார். அவரால் படமுடியாத கவலைகளையும் சுமக்கமுடியாத சுமைகளையும் அம்மா தனிமையில் சுமந்து தள்ளாடிக்கொண்டிருந்தாள். அவள் வளர்த்துக்கொண்டிருந்த ஆசைகள் எல்லாம் மனத்துக்குள்ளேயே வெந்து கரிந்து சாம்பலாகிவிட்டன,

மறுநாள் கல்லூரியில் சேர்ந்தேன். முற்றிலும் ஆங்கிலத்திலேயே நடத்தப்படும் புதிய பாடங்கள். புதிய சூழல். தொடக்கத்தில் சற்றே தடுமாறினாலும் வெகுவிரைவில் அந்த வேகத்துக்குப் பழகிவிட்டேன். பாடங்களும் படிப்பும் புத்தகங்களும் என் கவனத்தை இழுத்தன.

அம்மாவிடமிருந்து எப்போதாவது வரும் கடிதங்கள் ஆறுதலாக இருக்கும். அப்பாவின் உடல்நிலைபற்றி அவள் எழுதியிருக்கும் வரிகள் மன பாரத்தை அதிகரிப்பதாக இருக்கும். உடனே ஒரு குற்ற உணர்வு எழுந்து என்னை துக்கத்தில் ஆழ்த்திவிடும்.

**

 

மொழிப்பாடப் பிரிவில் எங்கள் தமிழ் ஐயா ஒருநாள் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றையும் திருக்குறள் ஒன்றையும் இணைத்துச் சொல்லி அதை விளக்கிக்கொண்டிருந்தார். ’ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே’ என்று தொடங்கும் புறநானூற்றுச் செய்யுளும் ‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் எனும்சொல்’ என்னும் திருக்குறளும் கரும்பலகையில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக எழுதப்பட்டிருந்தன.  மகனாக ஒருவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமைகளும் இளைஞனாக சமூகத்துக்குச் செய்யும் கடமைகளும் ஒரே தன்மையுடையவையா அல்லது வேறுவேறு தன்மையுடையவையா என்பதுதான் கேள்வி. மாணவர்களும் மாணவிகளும் மனத்துக்குத் தோன்றிய எண்ணங்களைச் சொன்னோம். எல்லாவற்றையும் ஐயா குறித்துக்கொண்டார். இறுதியாக அவர் எல்லாவற்றையும் தொகுத்துச் சொல்லத் தொடங்கினார்.

”பொறுப்புணர்ச்சி என்பது மிகமுக்கியமான குணம். குழந்தைப்பருவத்திலிருந்து வளரவளர நம் பொறுப்புணர்வு வளரவேண்டும். நாம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வது பொறுப்புணர்வு. நம்மிடமிருந்து ஒரு சூழல் எதை எதிர்பார்க்கிறதோ, அதை அறவழிக்கு உட்பட்டு செய்துமுடித்தல் பொறுப்புணர்வு. எதிர்காலத்தில் ஐயோ, இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டோமே என்று வருந்தி மனம்நொந்துகிறமாதிரி எதையும் அவசரப்பட்டு செய்யாமல் இருப்பது பொறுப்புணர்வு. பெரியவனாக வளர்வது என்பதே பொறுப்புணர்வு வளர்வது என்பதுதான். குடும்பத்தில் பொறுப்புணர்வு. கல்லூரியில் பொறுப்புணர்வு. படித்துத் தேர்ச்சி பெறுவதில் பொறுப்புணர்வு. அலுவலகத்தில் பொறுப்புணர்வு. உறவுகளிடம் பழகுவதில் பொறுப்புணர்வு. சமூகவாழ்வில் பொறுப்புணர்வு. ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. பொறுப்புணர்வோடு செயல்படும்போது மகனாக ஒருவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமைகளும் இளைஞனாக சமூகத்துக்குச் செய்யும் கடமைகளும் ஒரே தன்மையுடையவையாக கண்டிப்பாக இருக்கும்” அமைதியான குரலில் சொல்லிக்கொண்டே சென்றார் எங்கள் ஐயா. வகுப்பே அவர் பேசிய சொற்களில் கவனத்தைக் குவித்திருந்தது. ”இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு காந்தியின் மகன் மணிலால் காந்தியின் வாழ்க்கை.” என்று சொல்லி முடித்தார் ஐயா.

மதிவாணன் சில கணங்கள் தயங்கி மெதுவாக எழுந்து நின்று, “அப்படியென்றால் ஹரிலால்….?” என்று ஏதோ சொல்லத் தொடங்கினான். ஐயா புன்னகையோடு அவனைப் பார்த்து, “மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளை முன்வைத்துத்தான் நாம் நம்மை வளர்த்துக்கொள்ளவேண்டும். விதிவிலக்குகளைப் பேசுவது விவாதத்துக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் நம் இலட்சியக் கனவுக்கு அது துணைசெய்யாது” என்று சொல்லி அன்றைய வகுப்பை முடித்துவைத்தார்.

பெரியவனாக வளர்வது என்பதே பொறுப்புணர்வு வளர்வது என்பதுதான் என்ற ஐயாவின் சொற்கள் அன்று இரவு முழுக்க என் செவியருகே ஒலித்தபடி இருந்தது. பெரிய படிப்பனுபவம் எதுவுமே இல்லாமல் எங்கள் அம்மா அடிக்கடி சொன்ன அதே சொற்கள்.

 

**

(மதுமிதா தொகுத்து, சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘பருவம்’ என்னும் தொகுப்புக்காக எழுதப்பட்ட கட்டுரை )

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *