பொழுது விடிந்தும் விடியாதது போல இருந்தது. முருகன் எழுந்திருக்க மனமின்றி படுத்துக் கிடந்தான். உடலோடு உள்ளமும் சோர்வாக இருந்தது. அம்மா வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் சேவல் குரலெடுத்துக் கூவியது. காகங்கள் கரையும் சத்தம் தெளிவாகக் கேட்டது.
முருகன் எழுந்து வாசலில் திண்ணையில் உட்கார்ந்தான். அம்மா கோலம் போட்டுவிட்டுப் பால் கறக்கப் போய்விட்டாள். அம்மா போடும் கோலம் மிக அழகாக இருக்கும். இனி அவள் உலகம் தொடங்கி விட்டது. நான்கு மாடுகளில் பால் கறந்து அதைக் கொண்டுபோய்ப் பல வீடுகளில் கொடுத்துவிட்டு வந்து இவனைப் பள்ளிக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள். சமையலை முடித்து முருகனுக்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு மாடுகளையும் ஆடுகளையும் மேய்க்கப் போய்விட்டாளானால் இவன் பள்ளிவிட்டு வருவதற்குள் வந்து விடுவாள்.
பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தவள் முருகனைப் பார்த்து ”ஏன் தம்பி ஒக்காந்துகிட்டு இருக்கே, போய் பல்லு வெளக்கிட்டு வா, காப்பித் தண்ணி வச்சு குடுக்கிறேன்” என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.
முருகன் எழுந்து தோட்டத்திற்குப் போனான். அங்கே வீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் வெள்ளை அடிக்க வேண்டியதுதான் பாக்கி. கிணற்றிலிருந்து நீர் இறைத்துப் பல் தேய்த்து முகம் கழுவியபின் சற்றுப் புத்துணர்ச்சி வந்ததுபோல் இருந்தது.
முருகா, ”காப்பியைக் குடி, பாலைக் கொண்டுபோய்க் குடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அம்மா போவது தெரிந்தது. பள்ளிக்குப் போகவேண்டுமே என்று முருகன் கவலைப் பட்டான். முதல் நாள் பள்ளிக்குப் போனபோது இருந்த புத்துணர்ச்சியெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை.
தான் படித்த பள்ளியிலேயே அதுவும் படித்த தலைமையாசிரியர் கீழேயே வேலை பார்ப்பது என்பது முருகனுக்கு முதலில் மிகவும் உற்சாகமாக இருந்தது. அந்தத் தனியார் உயர்நிலைப் பள்ளி அந்த வட்டாரத்திலேயே மிகவும் புகழ் பெற்றது. படிப்பிலும் விளையாட்டிலும் முதன்மையாய் இருந்த பள்ளி அது. ஓரிருவர் தவிர அனைவருமே உள்ளூர் ஆசிரியர்கள்தாம். அதனால் முருகனைப் பற்றி எல்லார்க்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அதுவே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது.
தமிழாசிரியாரகப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளிலேயே அவனது ஆளுமையால் முருகன் அனைவரையும் கவர்ந்து விட்டான். ஒவ்வொரு நாளும் இறைவணக்கத்தில் ஒவ்வோர் ஆசிரியர் மாணவர்க்கு அறிவுரை கூறி உரையாற்றும் வழக்கம் அங்கிருந்தது. முருகன் பேசுகிறான் என்றால் அனைவரும் கூர்ந்து கவனித்து வந்தனர்.
இருந்தாலும் உள்ளூர் ஆசிரியர்கள் சேதுமாதவன், கோபாலன் போன்றவர்களின் போக்கு இன்னமும் அவனுக்குப் பிடிபடாத புதிராகவே இருந்தது. முதல் நாளே மதிய இடைவேளையில் சாப்பிடும் போது கோபாலன் கேட்டான். “பால்காரர் என்னா சாப்பாடு கொண்டாந்திருக்காரு?”
பெரும்பாலும் எல்லாருமே மதிய உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடுவது வழக்கமாக இருந்தது. அதுவும் முருகனின் அம்மா ஆடு மாடு மேய்க்கச் செல்வதால் அவன் காலையில் வரும்போதே எடுத்து வந்து விடுவான்.
காதில் விழாதவாறு முருகன் இருக்க கோபாலன் அதே கேள்வியை மறுபடியும் கேட்டான். வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட முருகன், ”என்பேரு முருகங்க, அதைச் சொல்லிக் கூப்பிடுங்க” என்றான். ”சரி, வெளையாட்டுக்குச் சொன்னேம்பா. என்னா கொண்டாந்திருக்கே? சொல்லு”
”தயிர் சோறுதான்”என்றான் முருகன் வருத்தமான குரலில்.
பதிலுக்கு அங்கே உட்கார்ந்திருந்த சேதுமாதவன் ”அதானே பார்த்தேன், ஒங்க வீட்ல பாலுக்கும் தயிருக்கும் பஞ்சமா? தெனம் பால் தயிர்தானே?” என்றார் கிண்டல் குரலில். முருகன் பதில் சொல்லிப் பிரச்சினையை வளர்த்த விரும்பாமல் சாப்பிட்டு முடித்தான்.
”இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா” என்று முருகன் நினைத்தான். அவன் நினைத்தது சரிதான் அந்த மனிதர்கள் மறைமுகமாக பல பிரச்சனைகளை உருவாக்கினார்கள். முருகன் சும்மா இருந்தாலும் சீண்டிப் பார்த்தார்கள். அவனது வளர்ச்சியை அவன் பெரும் புகழைப் பார்த்துப் பொறமைப் பட்டார்கள். நேற்றுதான் அவனுக்குத் தெரியாமல் அந்த விஷ விருட்சம் மிகப் பெரியதாக வளர்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான்.
வகுப்பில் நுழையும்போது யாரோ ஒரு மாணவனின் குரல் ”டேய், பால்கார வாத்தியாரு வராருடா” என்று சொன்னது முருகன் காதில் விழுந்தது. அவனுக்குக் கோபம் வரவில்லை. இச் சூழலின் வேர் எங்கிருக்கிறது எனத் தெரிந்து கொள்ள விரும்பினான். எனவே சிரித்துக் கொண்டே ”யார்ரா அது சொன்னது” என்று கேட்டான். யாருமே பதில் பேசவில்லை.
”பயப்படாமே சொல்லுங்கடா, ஒண்ணும் செய்ய மாட்டேன், தைர்யமா சொல்லுங்கடா” என்று முருகன் மீண்டும் கேட்க ,”ஐயா, கண்ணாயிரம்தான் சொன்னான்” என்றான் ஒரு மாணவன். உடனே சிரிப்பு மாறாமல் முருகன் கண்ணாயிரத்தைப் பார்த்து, “என்னா கண்ணாயிரம்” என்றான்.
எழுந்து நின்ற கண்ணாயிரம் பேசாமல் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் அழுது விடுவான்போல் இருந்தது. முருகன் அவனைப் பார்த்து ”ஏம்பா தமிழ் வாத்தியார்னு சொல்லியிருக்கலாம்ல” என்றான்.
”இல்லிங்கய்யா தவறிப் போய் வந்திட்டுது” என்று அவன் பதில் சொல்ல வேறொருவன் எழுந்து ‘இல்லிங்கய்யா, கணக்கு வாத்தியார் சொல்லச் சொல்ல அதுவே பழக்கமாயிடுச்சி” என்றான். ”கணக்குக்கு யாரு,சேதுமாதவனா?” என்று கேட்டான் முருகன். கண்ணாயிரம் சொன்னான் ”ஆமாங்கய்யா, தெனமுமே தமிழ் வகுப்புக்கு முன்னாலே கணக்குதாங்கய்யா, அவர் கெளம்பிப் போகச்சே “அடுத்த வகுப்பு யார்ரா? பால்கார வாத்தியாரா”ன்னு கேட்டுட்டுதான் போவாரு.
முருகனுக்கு முகத்தில் அறைவதுபோல் இருந்தது. மனம் மிகவும் கனமாகியது. ஆத்திரமும் கோபமும் சேர்ந்து வந்தன. தலைமை ஆசிரியரிடம் போய்ச் சொல்லலாமா, சொன்னால் என்ன ஆகும்? மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா” என்றெல்லாம் நினைத்தான். அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டான். ஒரு நொடிதான், அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு முகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து விட்டான். “சரி செய்யுள் பகுதியை எடுங்கள்” என்று கூறினான். ”என்னடா தம்பி ரெண்டு இட்லியைப் பாத்துக்கிட்டே ஒக்காந்துக்கிட்டு இருக்கே? காலையிலேந்தே ஒரு மாதிரியாயிருக்கே?” என்றாள் அம்மா. பதில் பேசாமல் ஒரு இட்லியை எடுத்து விண்டு வாயில் போட்டுக் கொண்டான். ”என்னடா முருகா,ஒடம்பு கிடம்பு சரியில்லியா?” என்று கேட்ட அம்மாவிடம் முருகன் பட்டென்று கேட்டான். “ஏம்மா நீ இந்த பால் வியாபாரத்தை உட்டுட்டா என்னா?”
அவன் அம்மாவுக்கு இந்தக் கேள்வி ஆச்சரியமாக இருந்தது. ”என்னடா திடீர்னு இப்படிக் கேக்கறே?” சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள். ”இல்லம்மா, எனக்கும்தான் கை நெறய சம்பளம் வருது. பின்னால ஊடும்தான் ஓரளவிற்கு முடிஞ்சு போச்சு, இன்னும் ஏம்மா நீ கஷ்டப்படணும்தான். நானும் ரொம்ப நாளா நெனச்சிகிட்டுதான் இருக்கேன்.” என்று வருத்தமான குரலில் சொன்னான் முருகன்.
”இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்கோ” என்று கூறியவாறே இட்லியை வைத்துவிட்டுப் பேசாமல் இருந்த அம்மாவிடம் மேலே என்ன பேசுவதென்றே தெரியவில்லை முருகனுக்கு. சற்று நேரம் ஏதும் பேசாமல் இட்லிகளைத் தின்று முடித்த அவன் தட்டில் கை கழுவிக்கொண்டே “என்னம்மா ஒண்ணுமே பேசலே” என்றான். அவன் அம்மா பதிலுக்கு, ”எனக்கு என்னடா கஷ்டம் வழக்கமா செய்யறததுதானே? நீயும் பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் நான் இங்க குந்திகிட்டு என்னா செய்யப் போறேன். சும்மா மோட்டுவளையைப் பாத்துகிட்டு ஒக்காராமே மாடு கன்னை மேய்ச்சுட்டு வரேன் வேறஎன்னா?” என்றாள்.
சட்டையை மாட்டிக் கொண்டே, ”இல்லம்மா, வாணாம் இந்த பால் வியாபாரம் உட்டுடு” என்றான் முருகன். ”என்னாடா அதையே புடிச்சுகிட்டிருக்கே, என்னாச்சு ஒனக்கு? ஏன் இந்தப் பால் வியாபாரம் செய்யறதுல்ல ஒனக்கு என்னா நஷ்டம்” என்று அழுத்தமாகக் கேட்டாள் அம்மா. ”இல்லம்மா நாமதான் இப்ப கொஞ்சம் நல்லா வந்துட்டம்ல” என்று அவன் தொடங்கியதுமே அம்மா குறுக்கிட்டாள்.
”என்னடா நல்லா வந்துட்டோம், ஊடு கட்டிச்சுன்னா ஆச்சா,என்னும் எவ்வளவோ இருக்குடா. அது மட்டும் இல்லடா, இது ஒரு ஒதவி மாதிரி; நல்ல பாலை எல்லாருக்கும் கொடுக்கிறோம்ல?”
”நாம இல்லாட்டா வேற யாராவது கொடுக்கப் போறாங்க”
”என்னா நீ முடிவு செஞ்சுட்ட மாதிரி பேசறே? யாராவது ஏதாச்சும் சொன்னாங்களா?
அம்மா இதைக் கேட்டதுதான் அவன் காதில் விழுந்தது. உடனே அவன் உள்ளில் இருந்தது பட்டென்று வெளியில் வந்துவிட்டது.
அம்மாவைப்பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிச் சொன்னான் முருகன்.
’ஆமாம்மா எல்லாரும் பால்கார வாத்தியாருன்னு மட்டம்மா பேசறாங்கம்மா”
”அதானே பாத்தேன் இன்னிக்கி ஒருநாளும் இல்லாத திருநாளா அதையே பேசிகிட்டு இருக்கியேன்னு நெனச்சேன்”. என்று சிரித்த முகத்துடன் பேசினாள் அவன் அம்மா.
”இல்லம்மா, எல்லாரும் பேசச்சே மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கும்மா”. அவனுக்கு அழுகை வருவது போல இருந்தது. மனம் மிகவும் கனத்தது. தலைவலி வரும்போல இருந்தது. இன்று பள்ளியில் எப்படிப் பாடம் நடத்தப் போகிறோம் என நினைத்தான். அதைவிட இந்த அம்மாவுக்கு எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என நினைத்தான்.
ஆனால் அவன் அம்மா மிகவும் தெளிவாகப் பேசினாள். ”முருகா, இந்த உலகம் பொல்லாதது. நாலுபேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க, அதையே நெனச்சுகிட்டு ஒக்காந்தா வாழவே முடியாது. நான் கேக்காத பேச்சா, பாக்காத மனுசங்களா? பேசறவங்களா நாளைக்கு வந்து ஒதவப்போறாங்க, ஒங்கப்பா ஒன்னை அஞ்சு வயசுல உட்டுட்டு அல்பாயுசில போனபோது ரெண்டு ஆடும் ரெண்டு மாடும் தான் இருந்தது. நானோ வீட்டை உட்டு வெளியே போகாத ராசாத்தி மாதிரி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சம்மா பழகிகிட்டு இதுங்களை மேச்சு பெரிசாக்கி ஒன்னையும் வளத்து ஆளாக்கினேன். ஏதோ நாமும் இப்ப கொஞ்சம் மனுசங்க மதிக்கிற மாதிரி வர்றதுக்கு இதுங்கதான்பா காரணம். போ, மனசைக் கொழப்பிக்காதெ, வேலையைப் பாரு”
அம்மா சொல்லி விட்டுப் போய்விட்டாளே தவிர முருகன் மனம் இன்னும் நிலைக்கு வரவில்லை. ஊர் முழுதும் சுற்றி விட்டு வந்தால்தானே தேர் நிலைக்கு வரும். அவன் மனம் இன்னும் சுற்றிக் கொண்டே இருந்தது. முதல் இரண்டு பிரிவுகளும் பாடம் கற்பிக்கவே முடியவில்லை. மாணவர்களுக்கு எழுத்து வேலை அதிகமாகக் கொடுத்து சமாளித்தான். இடைவேளையின்போது தலைமை ஆசிரியர் அழைப்பதாகத் தகவல் வந்தது.
அவரிடம் போனபோது ”முருகா, நாளை இறைவணக்கத்தின் போது நீதான் பேசவேண்டும், அதற்குத்தான் வரச்சொன்னேன் என்று கூறினார். உரையாற்றக் கூடிய மனநிலையில் அவன் இல்லை என்றாலும் அவர் சொல்லை மீற முடியாமல் அவன் ஒப்புக் கொண்டான். அவன் பேசினான்.
”இன்று அன்னையர் தினம். நாம் அறியும் முதல் தெய்வம் தாய்தான். அதனால்தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார்கள். ஒவ்வொரு தாயும் தனது பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தருவதோடு அவனை அல்லது அவளை வளர்த்து ஆளாக்கி ஒரு நல்ல வாழ்வு உண்டாக்கித்தர படாத பாடு படுகிறாள். அது அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எனக்கு அந்த அநுபவம் உண்டு ஏனென்றால் என் தாய் என்னை அப்படித்தான் மாடு மேய்த்து பால் வியாபாரம் செய்துதான் வளர்த்துப் படிக்க வைத்தாள். அதனால் என் அம்மாவின் பெயரே எல்லாருக்கும் மறந்துபோய் பால்காரம்மா என்றாகி விட்டது. என்னையும் இப்போது பால்கார வாத்தியாரு என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது அது குறித்து எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ”பால்கார வாத்தியாரு” என்று என்னை அழைக்கும்போது என் அம்மாவின் உழைப்பை மதிப்பதாகவும் கௌரவப் படுத்துவதாகவும்தான் நான் நினைக்கிறேன். அப்படி உழைத்த அம்மாவுக்கு நான் மரியாதை செலுத்த வேண்டாமா”
இப்போது முருகன் பேச்சை சற்று நிறுத்தினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்று யாருக்குமே தெரியவில்லை. சட்டென்று பள்ளிக் கட்டிடத்தின் பக்கம் திரும்பி “அம்மா இங்கே கொஞ்சம் வாங்க” என்று சத்தமாகக் கூவினான். அப்போதுதான் அவன் அம்மாவும் வந்திருப்பது அனைவர்க்கும் தெரிந்தது. மரங்களுக்கிடையில் மறைந்து இருந்தவர் வெளியில் வந்தார்.
சாதாரண கிராமத்துப் பெண்மணியாக ஒரு நூல் புடவை கட்டியிருந்த அவர் தலை குனிந்துகொண்டே கூச்சத்துடன் வந்தார். அடுத்து முருகன் செய்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.
”இவங்கதான் என் பால்கார அம்மா” என்று கூறிக் கொண்டே அவர் காலில் அனைவர் முன்னிலையிலும் நெடுங்கிடையாய் விழுந்தான். “தம்பி என்னா இது எழுந்திரு’ என்று கூறியவாறே அவன் அம்மா அவனைத் தூக்கினாள். மாணவர்களின் கைத்தட்டல் வானைப் பிளந்தது. தலைமை ஆசிரியர் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
————————— ———————————-
- நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
- “சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்
- முடிவை நோக்கி !
- நெருப்புக் குளியல்
- இயற்கையின் மடியில்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 17
- நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
- ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1
- நிழல்
- சீதை, அமுதா, நஞ்சா, தீயா?
- தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
- வாழ்க்கை ஒரு வானவில் 16
- தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
- பாவண்ணன் கவிதைகள்
- வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’
- எலிக்கடி
- உம்பர் கோமான்
- பால்கார வாத்தியாரு
- வேல்அன்பன்
- தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை
- உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி