ஆனந்த பவன் நாடகம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 22 in the series 16 நவம்பர் 2014

வையவன்

காட்சி-13

இடம்: ஆனந்த பவன்

நேரம்: மத்தியானம் மூன்று மணி

உறுப்பினர்: சுப்பண்ணா, ரங்கையர், சாரங்கன்.

(சூழ்நிலை: ரங்கையர் கடையடைப்புக்காகச் சாத்தப்பட்டிருக்கிற இரும்புக் கதவுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஹோட்டல் வெறிச்சோடியிருக்கிறது. தெருவைப் பார்த்து அமர்ந்திருக்கும் ரங்கையரிடம் பேச வருகிறார் சுப்பண்ணா)

சுப்பண்ணா: கடையடைப்பு ஆறு மணியோட முடிஞ்சுடுமா அண்ணா?

ரங்கையர்: (திரும்பிப் பார்த்து) இப்பவே முடிஞ்சாப்லதான்! மாருதி கேப்ல, உப்புமா கெடைக்கறதுண்ணு தெருவிலே பேசிண்டு போனா…

சுப்பண்ணா: பெரியண்ணாவுக்கு இதெல்லாம் பிடிக்காதேண்ணா.

ரங்கையர்: ஓ, நாம கடை தொறக்கறதைச் சொல்றியா? நமக்கெதுக்கு வெவகாரம்… வழக்கப்படி ஆறு மணிக்கு நாம் தொறந்தா போறும்.

சுப்பண்ணா: ரெண்டு படி உளுந்து அரைச்சுடுவோமாண்ணா?

ரங்கையர்: எதுக்கு?

சுப்பண்ணா: வடைக்கு

ரங்கையர்: மூணு படியா அரைச்சுடச் சொல்லு… கிச்சடியும் உளுத்த வடையும் போட்டுடலாம். காலைல வரவேண்டிய பாலை நிறுத்தியாச் சோல்லியோ?

சுப்பண்ணா: மிந்தா நேத்திக்கே சொல்லிட்டோமே! இன்னும் கால் மணி நேரத்திலே சாயங்காலப் பால் வந்துடும். காயவச்சு காப்பிக்கு ரெடி பண்ணிடறேன்.

ரங்கையர்: ஆட்கள்ளாம் வெளியே போயிருக்காளோ?

சுப்பண்ணா: உள்ளே ஒரு கேங் உட்கார்ந்து வம்பளந்துண்டிருக்கு. ரெண்டு மூணு பேரு வெளியே போயிருக்கா. எல்லாரும் அஞ்சு மணிக்கு வந்து சேர்ந்துடணும்ணு சொல்லியனுப்பிச்சிருக் கேண்ணா.

ரங்கையர்: அப்ப சரி.

சுப்பண்ணா: அண்ணா!

ரங்கையர்: என்ன சுப்பு?

சுப்பண்ணா: காலைலேர்ந்து நானும் பாக்கறேன். என்னமோ யோசனைலயே இருக்கேள்! பம்பரமாச் சுத்திண்டிருப்பேள். இன்னிக்கு என்னமோ ஒரு அமைதி.

ரங்கையர்: ஹோட்டல் அடைச்சுருக்கோன்னோ.

சுப்பண்ணா: சுப்புவை ஏமாத்த முடியாதுண்ணா!

ரங்கையர்: மனசுதானே சுப்பு! சில சமயம் சஞ்சலமாகும், போகும்.

சுப்பண்ணா: இல்லேண்ணா, அதெல்லாம் எங்களுக்கு! நீங்க அப்படி இல்லே. நாங்க சோர்ந்துட்டா தட்டிக் கொடுத்து எழுப்பி விடுவேள். இப்ப நீங்க இப்படி ஒக்காந்திருக்கறது. நேக்கு சூன்யமா இருக்கு.

ரங்கையர்: எல்லாம் ஜமுனா விஷயம்தான்.

சுப்பண்ணா: என்னண்ணா?

ரங்கையர்: அவளுக்கு வயசாயிண்டே போறது. சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா ஒரு பெரிய பாரம் இறங்கிடும்.

சுப்பண்ணா: வரன் கெடைச்சிருக்கு. கிலாஃபத் கிருஷ்ணய்யா ஒரு நல்ல வரனை இன்னிக்குக் கொண்டு வந்தார் (பெருமூச்செறிகிறார்)

சுப்பண்ணா: அப்பறம் என்னண்ணா?

ரங்கையர்: அவளுக்குப் பிடிக்கலே!

சுப்பண்ணா: பிடிக்கலேண்ணா விட்டுட வேண்டியதுதான். பிடிச்ச எடமாப் பார்த்துப் பண்ணுங்கோ. பெண் கொழந்தை ஒண்ணே ஒண்ணு. ராகவனை விடுங்கோ. அவனுக்குத் தலை மேலே வெள்ளம் போல நான் நீண்ணு போட்டி போட்டுண்டு வருவா. ஆனா ஜம்னாவுக்கு கொஞ்சம் நிதானிச் சாலும் நல்ல எடமாப் பண்ணிடனும்ணா!

சாரங்கன்: (வெளியேயிருந்து படிக்கட்டு ஏறி வருகிறார்) அண்ணா!

ரங்கையர்: சுப்பு சாரங்கன் வர்றார், அந்த கேட்டைத் தொறந்து
விடு.

சுப்பண்ணா: (சாவியுடன் வருகிறார்) ஐயா எங்க போயிருந்தாப்ல, எப்படா லீவு கெடைக்கும்? தெருச் சுத்தலாம்னு கௌம்பிட்டயோ!

சாரங்கன்: சும்மா அளந்து விடாதீங்கோ மாமா ஒய்.எம்.சி.ஏ விலே எங்க ஊர்க்கார பையன் ஒர்த்தன் ஹாஸ்டல்லே தங்கியிருக்கான். அவனைப் பார்த்துட்டு வரப் போனான்.

(கதவுக்குப் பூட்டு திறந்து, மடிப்புக் கதவு ஓர் ஆள் வருமளவு பிரித்து விடப்படுகிறது)

சாரங்கன்: (உள்ளே பிரவேசித்தவாறு ரங்கையரைப் பார்த்து) அண்ணா, ஒங்களை ஒய்.எம்.சி.ஏ. செக்ரட்டரி ஜான்ஸன் கையோட கூட்டி வரச் சொன்னார்.

ரங்கையர்: என்னையா?

சுப்பண்ணா: யாரு, இங்கிலீஷ்காரரா? வேட்டியும் சட்டையுமா, எப்பவாவது நம்ம ஹோட்டலுக்கு வருவாரே அவர்தானே?

சாரங்கன்: அவரேதான்!

ரங்கையர்: அவருக்கு என்னண்டே பேச என்ன இருக்கு? விவரம் ஏதாவது சொன்னாரோ?

சாரங்கன்: ஏதோ ராகவன் விஷயம்… ஒடனே அர்ஜண்டா கையோட கூட்டி வான்னாரு.

ரங்கையர்: ராகவன் விஷயமா… சரி தோ கௌம்பறேன்.

சுப்பண்ணா: (சாரங்கனிடம்) ஹோட்டல் சைக்கிள் உள்ளே நிறுத்தி வச்சிருக்கு. வெளியே எறக்கு. (ரங்கையரிடம்) சைக்கிள்ளே போய்ட்டு வாங்கோண்ணா! நானும் வரட்டுமா?

ரங்கையர்: நீ எதுக்கு சுப்பு? உளுந்தை ஆட்டச் சொல்லு, வடைப்பதம் வர்றாப்பிலே! கணபதி இருக்கானோ?

சுப்பண்ணா: இருக்கானே.

ரங்கையர்: சரி கவனிச்சுக்கோ… ஒருவேளை பெரியண்ணா வந்தா, நான் ஒய்.எம்.சி.ஏ. வரைக்கும் போயிருக்கேண்ணு சொல்லு! வர்றேன்.

(திரை)

[தொடரும்]

Series Navigationபூசைஅந்திமப் பொழுது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *