வேற என்ன செய்யட்டும்

author
0 minutes, 1 second Read
This entry is part 7 of 17 in the series 1 பெப்ருவரி 2015

-மோனிகா மாறன்
வனீ”எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னும் எப்சியின் குரலில் அதே அன்பு.ஊர்ல இருந்து வந்திருக்கேன்டீ.
எப்சி என் கல்லூரி நாட்களையும்,விடுதி வாழ்வையும் ஆக்ரமித்த இனிய தோழி.என் இளமை நினைவுகள் அவளன்றி
தனித்து எதுவுமில்லை.

         பெரிதாக எந்த அனுபவங்களுமின்றி சின்னஞ்சிறு ஊரிலிருந்து நகரத்திற்குப் படிக்க வந்த எனக்கு கல்லூரியும் விடுதியும் மிரட்சியாக இருந்த பொழுதில் கண்களில் பொங்கும் உற்சாகத்துடன் கிடைத்த அறைத்தோழி எப்சி.
பதின் பருவ கனவுகள் எப்பொழுதும் பிரம்மாண்டமானவையே.எப்சி எனக்கு நிறைய ரசனைகளை சொல்லித்தந்தாள்..அவள் கனவுகள் எப்பொழுதும் உயரத்தில் பறப்பவையே.பறவைகளின் பூஞ்சிறகுகளையேத் தன் மனதாகக் கொண்டவள்.
தமிழ் சினிமாவின் காதலி,ஏன் சினிமாவையே சுவாசித்தாள் என்றே சொல்லலாம்.அவள் வாழ்வில் எல்லா தருணங்களையும் சினிமாவுடனே இணைத்துப் பார்த்தாள்.
திடீரென ஒரு விடுமுறை நாள் காலையில் தலைக்குக் குளித்து தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு சேலையை இழுத்துச் சொருகி  நெற்றியில் குங்குமம் விபூதி எல்லாம் இட்டுக்கொண்டு எங்களுக்கெல்லாம் ட்ரேயில் காபி கொண்டு தந்தாள்.இப்டி தானடீ ஹீரோயினுங்க எல்லாம் கல்யாணம் ஆனா வராளுங்க.
கஜோல் இப்டித்தான ஆடறா என்று ஜீன்ஸ் போட்டுக் கொண்டு பூப்பூக்கும் ஓசை என்று ஆடுவாள்.இந்த விஜய் ஏண்டி சிம்ரன் கூட நடிக்கறான் அக்கா மாறி இருக்கறா என்று கவலைப்படுவாள்.கவுண்டமணி விவேக் வடிவேலு எல்லாம் ஏதோ சொந்தக்காரங்க மாதிரி நெனைப்பா.லெக்சரர் சீரியசா பாடம் எடுக்கும்போது உலகத்த நெனச்சேன் சிரிச்சேன் என்று எங்களை சிரிக்க வைப்பாள்.வாயில எப்பவும் சினிமா டயலாக் தான்.
உங்க கடம உணர்ச்சிக்கு அளவே இல்லயா என்று கூட்டத்துல பிரின்சிபாலயே ஓட்டியவள்.எல்லாருக்கும் சினிமா சார்ந்தே பெயர் வைப்பாள்.
பள பள சுடிதார் போட் ட சீனியருக்கு வெற்றி கொடிகட்டு வடிவேலுவின் பெயரான சுடலை என்று வைத்திருந்தாள்.பணத்தை இஷ்டத்துக்கு செலவு பண்ணும் வினோவிற்கு அருணாச்சலம்,சித்தி சீரியல பாத்து அழும் பவித்ராவுக்கு மகாநதி கமல் பேர் கிருஷ்ணசுவாமி, நல்லா பவுடர் பூசி கண்ணுக்கு மை போட்டு வரும் சியாமளா மேம்க்கு மயில் என்று பெயர் வைத்து மேம் நீங்க சின்ன வயசுல  ஷரீதேவி மாதிரி தான இருந்தீங்க என்று தைரியமாய் கலாய்ப்பாள.
நான் படிச்சி முடிச்சி வேலைக்கெல்லாம் போக மாட்டேண்டீ,கல்யாணம் பண்ணிக்கிட்டு கொழந்த பெத்து வளத்துகிட்டு,சமையல் பண்ணி சாயங்காலம் அவர் ஆபீஸ்ல இருந்து வருவார்னு பாத்துகிட்டு ஜாலியா கவிதையா லைப் இருக்கனுண்டீ என்பாள்.
வயிற்றில் தலையணையை வைத்து கட்டிக்கொண்டு நடந்து காட்டுவாள்.பார்பி பொம்மையை மடியில் போட்டுக்கொண்டு ‘கற்பூற பொம்மை ஒன்று’எனத் தாலாட்டுப் பாடுவாள்.
எனக்கு நிறைய சொல்லித்தருவாள்.ஸ்கூல் பொண்ணு மாறி துப்பட்டாவை பின் பண்ணாத.சும்மா அப்டியே போடு.கை நெயில ரெண்டு ஓரத்துலயும் லேசா வெட்டு ,நல்ல ஓவல் ஷேப் வரும்.கலர் இல்லாத க்யூட்டக்ஸ் போடு.சும்மா ஊர்ப்புறம் மாறி நெயில் பாலிஷ்னு சொல்லாதடீ,அது க்யூட்டக்ஸ்.ஜட்டினு சொல்லாத இங்க சிரிப்பாளுங்க பேண்டீஸ்..சாரி கட்னா முன் பக்க ப்ளீட்ஸ லேசா காலால முன்னால உதைச்சிகிட்டே நட அப்ப தான் அழகா இருக்கும்.இது தான் மஸ்கரா, போட்டா கண்ணு அட்ராக்டிவ் ஆயிடும் இப்படி ஒவ்வொன்றாய் சொல்லித்தருவாள்.
பௌர்ணமி இரவுகளில் ஆஸ்டல் மொட்டை மாடியில படுத்துகிட்டு வைரமுத்து கவிதைய சொல்லுவா
உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும்
மறக்காது
கண்மணியே……
கடைசியில் அழுத
>        கண்ணீர் கையில்
>         இன்னும் ஒட்டுதடி…
> எனக்கு வரவன் கூட இப்டிதான்டி நிலவொளியில எனககாக உருகனும் என்பாள்.
இவ்ளோ ரசனை இருந்தா காதல் வராம இருக்குமா? கல்லூரியின் கருப்பழகி வேறு.எங்கள் சீனியர் மேத்யூ அவளைப்பார்த்துமே இருவருக்கும் காதல்.காதலிப்பவர்களின் நண்பர்களாக இருப்பது உண்மையில் தமிழ் சினிமா நண்பர்களை விடக் கொடுமைானது.எப்சிக்கு நாளும் பொழுதும் மேத்யூ புராணம் தான்.
அவனும் பிரசாந்த் சாயலில் மீசையில்லாம நல்ல நிறமா இருப்பான்.இவ ஐஸ்வர்யா ராயாகவே மாறி ஹைர ஹைர ஹைரப்பா என்று டூயட் பாடுவாள்.எனக்கு மேத்யூ மாறியே நல்ல கலரா கொழந்த பொறக்கும் இல்லடீ என்பாள்.அம்மா தாயே ஆள விட்றீ என்று ஓடுவோம்.
உணர்வுப்பூர்வமான காதல்.அவளின் காதல் அனுபவங்களை கற்பனைகளை அவள் சொல்லும் விதத்தில் நானே ஒரு கட்டத்தில் என்னடி  ஆச்சு என்று சுவாரசியமாய் கேட்குமளவிற்கு அவள் காதல் வளர்ந்தது.
அப்போது காதல் படங்களின் காலம். காதல் கோட்டை முதல் காதலுக்கு மரியாதை வரை எல்லா காதலர்கள் போலவும் வாழ எப்சி விரும்பினாள்.
காதல் கவிதைல பிரசாந்த் மாறி அவன் கவிதை சொல்லனுண்டீ என்பாள்.பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலை எத்தனை முறை கேட்டிருப்பாள் என்றே தெரியாது.
ரோஜா படத்துல வர மாதிரி ஹனிமூன் போகனும் என்பாள்,கல்யாணத்துக்குப் பின்னாடி தேவயானி மாறி தலை சீவிக்கட்டுமா என்பாள்.
சேது படத்த தியேட்டர்ல பாத்துட்டு இவ தேம்பித்தேம்பி அழுது மூஞ்சி வீங்கி வெளியில வந்தத பாத்த மேத்யூ நொந்துபோய்  இனிமேல் உன்ன சினிமாவுக்கே கூட்டிட்டு போகமாட்டேன் எனறு சொன்னது கல்லூரி முழுக்க ஒரு வாரம் சிரிப்பாய் ஓடியது.
மேத்யூவிற்கு கேம்பசில் வேலை கிடைத்ததுமே இருவரும் திருமணம் பற்றி திட்டமிட்டார்கள்.மேத்யூவை  வார இறுதிகளில் பெங்களூருக்கும் சென்னைக்குமாய் அலைய வைத்தாள்.மேத்யூவும் இவள் மீது பைத்தியமானான்.உருகினார்கள்.அலைபேசிகள் எல்லாருக்கும் அறிமுகமாகாத காலமது.எனவே எப்சி விடுதியின் போன் அருகிலேயே கிடப்பாள்.
எஸ் டீ டி யில் அவள் பேசும்பொது உடனிருக்கும் எனக்கே சில சமயம் பொறாமையாக இருக்கும்.அத்தனை சண்டைகள் கண்ணீர்கள் கொஞ்சல்கள்.
சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், பூ வாங்கித்தராமல் போய்விட்டான் என இவள் போனில் சண்டை போடவும் அடுத்த பஸ்ஸிலேயே பெங்களூரிலிருந்து வந்து ஆஸ்டலில் மல்லிகைப்பூவை இவள் கையில் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் ஐந்து மணி நேரம் பயணித்து திரும்பிப்போய் இரவு பதினோறு மணிக்கு ட்யூட்டிக்கு போனான் மேத்யூ.எப்சிக்கு சொல்லிச்சொல்லி தீரவில்லை.
எங்கள் படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் முடிந்து சிங்கப்பூர் சென்றனர்.அவ்வப்போது போனில் சம்பிரதாயமாய் பேசுவாள்.அங்கிருந்து அமெரிக்கா சென்றனர். நடுவில் இரு குழந்தைகள். எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகே இந்தியா வந்திருக்கிறாள்.
என்னடீ குண்டம்மா ஆயிட்ட என்றவாறே என்னை தழுவியவள் முன்பை விட ஒல்லியாக சோர்வாக
இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து கேட்டேன் எப்டி  இருக்க எப்சி படம் பாக்கறப்ப உன்னத்தாண்டி நினைப்பேன்.விஜய விட்டுட்டு சிவகார்த்திகேயனுக்கு மாறிட்டயா?ஊதா கலரு பாட்ட பாக்கறப்ப உன்னையும் மேத்யூவையும் தான் நெனச்சேன்.அப்டித்தானடி லவ் பண்ணீங்க.இப்ப அமெரிக்காவுலயே இருக்கீங்க நீ டூயட் பாட நெனச்ச எடத்துக்கெல்லாம் போனியா?
………….
என்ன எப்சி அமைதியாயிட்ட.இப்ப சந்தானம் ஜோக்க சொல்லுவ அப்டிதான.நீ என்ன பாத்ததும் நண்பேன்டானு கட்டிக்குவன்னு நெனச்சேன்.
வனீ என்னை எறிட்டு பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தன.நான் சினிமாவே பாக்கறதில்லடீ.நம்பவே முடியல தான.மேத்யூவ ஆச ஆசயா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.மொதல்ல நல்லாத்தான் இருந்தான். ஆபீஸ் பார்ட்டிகள்ல குடிக்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமா ஹி பிகேம் அன் அடிக்ட்.குடின்னா சாதாரணமா நெனக்காத.காலைல எழுந்ததுமே வேணும்.குடிக்கலன்னா கையெல்லாம் ஒதறும்.யார் கால்ல வேணும்னாலும் விழுவான் காசு கேட்டு.குடிச்சிட்டு கண்டபடி என்னை பேசறது.அப்பறம் கொஞ்சறது.நானும் எவ்வளவோ போராடினேன்.அழுதேன்,சண்ட போட்டேன் ஏன் சாகறதுக்கு கூட போனேன்.ஒரு ரெண்டு நாள் சரியாகும். அவ்ளோதான்.
என் கவிதை கனவுகள் எல்லாமே  குடியால அழிஞ்சிடுச்சி.கல்லூரியில உற்சாகமா,அப்பாவியா,பெருங்காதலோட,உலகத்தையே நேசிச்சு,வானத்துலயே பறந்துகிட்டு இருந்த எப்சி செத்து போயிட்டா…
குழந்தைங்க தான் பாவம் அப்பான்னாலே மிரள ஆரம்பிச்சாங்க.மோசமான தகப்பனுக்கு பொறந்தது அதுங்க தலையெழுத்து.என்ன செய்யறது.நான் தான் அதுங்களஅரவணைச்சுக்கறேன்.அமெரிக்காவுல  வேலையும் போச்சி.எப்பவும் குடியிலயே இருந்தா யாரு வேல குடுப்பாங்க.பிரண்ட்ஸ்,சொந்தக்காரங்க எல்லாரும் இவன தவிர்க்க ஆரம்பிச்சாங்க.அதுக்கப்புறம் நான் தான் வேலைக்கு போயி சம்பாதிக்கிறேன்.குடிச்சிட்டு வீட்லயே இருக்கான்.ட்ரீட்மெண்ட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போனேன் கொஞ்ச நாள்தான்.எங்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு  அன்ப அப்டியே பொழிவான்.அப்புறம் தொடங்கிடுது.எனக்கு எல்லாம் விட்டு போச்சுடி.அதல்லாம் மனசுல வலிமை வேணும்.அவன் மிருகமா மாறிட்டான்.என் வாழ்க்கையை என் கொழந்தைங்க எதிர்காலத்தஅழிச்சான்.
நான் அனுபவிக்க புதுசா இன்னும் எந்த துன்பமும் இல்ல.எத்தனையோ முறை மேத்யூ கண்ணெல்லாம் ரெட்டா வேர்வ  வழிய விஸ்கி ஸ்மெல்லோட கெட்ட வார்த்த பேசறப்ப மனசொடஞ்சி சீ இவனையா அப்டி லவ் பண்ணேன்,செத்துடலாம்னு போயிருக்கேன்.எங்கொழந்தைங்க ரெண்டும் அநாதயா நிக்குமேன்னு தான்டி இன்னும் இருக்கேன் எப்சியின் கண்ணீர் பெருகுகிறது.
ஒரு விதத்துல சொன்னா என்னோட சினிமா பயித்தியமே நிலம இப்டி மோசமாக காரணம்.அவன் மொத மொதல்ல குடிச்சிட்டு வந்தப்ப நான் அத பெரிசா எடுத்துக்கல சினிமால எல்லா  ஹீரோவும் தான குடிக்கறாங்க.அதுவும் ஒரு பேஷன்னு தான் நெனச்சேன்.அவன கிண்டல் தான் பண்ணேன்.
வனீ இப்ப நீ சொல்ற எந்த
ஹீரோவும் எனக்குத் தெரியாது.படமெல்லாம் பாக்கற மாதிரியா என் லைப் இருக்கு.எப்பவாச்சும் பசங்க டிவி பாக்கறப்ப ,ஆபீஸ் டூர்ல படங்கள் பாக்கறதுண்டு.எல்லா படமுமே பார்ல தானடீ எடுக்கறான்.குடி குடி இதே தான, ஹீரோவுல இருந்து காமெடியன் வரைக்கும் பொண்ணுங்கள திட்றாங்க குடிக்கறாங்க இதுதான சக்சஸ் சினிமா.எனக்கு அப்டியே கொமட்டிட்டு வருது.எல்லாரையும் நிக்க வச்சி கேக்கனும் நீங்கல்லாம் குடிக்கறீங்க உங்க குடும்பம் என்னாகுண்டானு.
இங்க தான் அரசாங்கமே டாஸ்மாக்ல லாபம் காட்டுங்கன்னு டார்கெட்  வெக்கறாங்களாமே.
என்னால் பேசவே முடியவில்லை.
வனீ ஒரு காலத்துல என்னையும் மேத்யூவையும் பாத்து காலேஜே பொறாமப் பட்டாங்க.அப்டி என்ன லவ் பண்ணான்.இப்ப எனக்கு அவன் மூஞ்சிய பாக்கக்கூட புடிக்கல நாத்தம்,அழுக்கு,சாராய  வெறி….,எப்சி டார்லிங்னு போதையில அழுவான்.கழுத்த நெறிச்சி கொண்ணுடலாம்னு கூடத் தோணும்…
அவன் மொகத்த பாத்துட்டே வாழ்ந்துடலாம்னு கனவு கண்டேன்.அவன் எப்சிம்மா செல்லம்னு கொஞ்சனதுல மயங்கினேன்.இப்ப கண்ணுல போதையோட தேவ்டியானு கொழந்தைங்க முன்னாடி கத்தறப்போ செத்துப்போறேன்டீ.நரகம்னு பைபிள்ல வரும் அத உண்மையிலயே எனக்கு காட்டிட்டான்.
.        டைவர்ஸ் பண்ண கூட முடிவு பண்ணேன்.எங்க மாமியார் அழுதாங்க நீயும் கை விட்டுட்டா அவன் செத்துடுவாம்மா.எப்டியாவது திருந்துவான்,கர்த்தர் கருணை காட்டுவார்னு கெஞ்சனாங்க.சரி எவ்ளோ  வரைக்கும் போகுதுன்னு பாப்போம்னு விட்டிருக்கேன்.இப்ப அவங்கூட பேசறதே இல்ல.பணம் மட்டும் தறேன்.
உன்ன மாறி பழைய பிரண்ட்ஸை பாக்கும்போது தான் அவன எத்தன எதிர்பார்ப்போட கல்யாணம் பண்ணியிருப்பேன்னு ஞாபகம் வருது.என்ன செய்யட்டும்….

          என் பையன  நீயாவது அப்பா மாறி இல்லாம ஒழுங்கா  இருடான்னு சொல்றேன்.வேற என்ன செய்யட்டும் சொல்லு…

Series Navigationசிறு ஆசுவாசம்பொன்பாக்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *