கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……

This entry is part 3 of 23 in the series 11 அக்டோபர் 2015

kavithaaயாழ்ப்பாணத்துக்காரரான கவிதா தற்போது வசிப்பது நோர்வேயில். இவர் நாட்டியத் தாரகையாகவும் தன் கலைப் பயணத்தைத்
தொடர்கிறார். ‘ பனிப்படலத் தாமரை ‘ இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ; இது இரண்டாவது, இதில் 40 கவிதைகளுக்குமேல் உள்ளன.
அழுத்தமாகச் சுயம் பேசும் நடை ! பல இடங்கள் கருத்து வெளிப்பாடாக நின்றுவிடுகின்றன. கவிமொழி கூடி வரவில்லை.
‘ சகலமும் நான் ‘ என்ற கவிதையில் சுயம் முன் நிற்கிறது. தன்னம்பிக்கையின் வீச்சாகக் கவிதை தொடுக்கப்பட்டுள்ளது. சூரியனாக ,
பறவையாக , காற்றாக , மேகமாகத் துணையை முன் வைக்கிறார் கவிதை சொல்லி.
நீ சூரியனா
இருந்து கொள்
தூரம் என்றாலும்enetentotam
உன் கதிர்கள் என்னை
உரசிக்கொண்டுதானிருக்கும்
நான் பூமி
…… என்று கவிதை தொடங்குகிறது. துணை மீதான காதல் ஆளுகை முதலிலேயே குறிப்பிடப்படுகிறது.
நீ பறவையோ
தூரம் போவாயோ போய்வா
நீ நிச்சயம் வருவாய்
உன் கூடு என் விரல்களில்
நான் மரம்
……… புதிய படிமம் நன்றாக இருக்கிறது. குறியீடு பொருத்தமாக உள்ளது. காற்றானால் சுவாசமாவதும் , நதியானால் கடலாவதும்
பேசப்படுகிறது.
எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த பாடல் காட்சி நினைவில் வருகிறது. ‘ நீ மண்ணானால் நான் மரமாவேன் ‘ என்ற பாடல்தான்
இக்கவிதையில் சற்று வித்தியாசமாகக் கையாளப்பட்டுள்ளது.
‘ அந்த ஒரு சொல் மட்டும் ” என்ற கவிதையும் காதலைப் பேசுகிறது.
ரணங்களைக் கிள்ளி
விளையாடுகிறாய் என்னோடு
…….. எனக் கவிதை திறக்கிறது.

விளையாடிக்கொண்டிரு நீ
எனக்குள்ளே
இறுகி இறுகி
ஆகிவிட்டேன்
உன் கைப்பொம்மை போல நான்
…….. என்ற வரிகளில் காதலர்களின் ஊடல் பதிவாகிறது. ஊடலின் உக்கிரம் வழியும் சொற்கள் இவை.
உயிரைப் பிழிந்து
கசக்கி எறிவதென்பது
இதைத்தானோ
இதயத்தில் அறைந்து
பாராமல் போவதென்பதும்
இதுதானோ
………. என்ற வரிகள் பெண் மனத்தின் உதிரக் கசிவை உணர்த்திவிடுகின்றன. ‘ நீயுமா ? ‘ என்ற முத்தாய்ப்புச் சொல் கவிதையைச் சரியான
இடத்தில் முடித்து வைக்கிறது. கவிதையின் தலைப்பு புதிர்த்தன்மையுடன் அமைந்துள்ளது.
‘ என் ஏதேன் தோட்டம் ‘ —- புத்தகத்தின் தலைப்புக் கவிதை ! நேசிப்பவர் அருகில் இருந்தால் எந்தக் கஷ்டத்தையும் தங்கிக்கொள்ளத்
தயாராக இருக்கும் காதல் மனத்தின் பேச்சாக இக்கவிதை அமைந்துள்ளது.
என் வானம்
உடைந்து விழுகிறது
…… என்று தொடங்கும் கவிதை உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது.
என் ஏதேன் தோட்டத்து
மரங்களெல்லாம்
பிடுங்கியெறியப்படுகின்றன.
உன் அலட்சியக் கண் வீச்சில்
…….. கவிதை சொல்லியின் முன் நகரத்தின் வாசல் கூட கதவு திறக்கிறதாம்.
நான் இருந்துவிடுகிறேன்
இத்தனைக்கும் நடுவில்
நீ என் அருகில் இருப்பதாய்ச்
சொல்லும் ஒரு வார்த்தையில்
இத்தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகம். ‘ செய்வது அறியாமல் ‘ என்றொரு கவிதை. படித்துப் பார்க்கலாம். விமர்சிக்க ஏதுமில்லை.
பெருவிரலில்
கோலம் போட்டு
கதவின் பின்
ஒளிந்து நின்ற
கைவிரலில்
காற்றலையும்
வெட்கமெல்லாம்
எனக்கு வந்ததில்லை
என்று புதுமைப் பெண்ணாகத் தன்னை முன்னிலைப்படுத்துகிறார்.
இருந்தும்
உன் வருகையின்
போது மட்டும்
ரகசியத்தில் பூத்துவிடுகிறது
சின்ன வெட்கமும்
மெலிதான புன்னகையும்
…….. இவ்வாறே தொடரும் கவிதை பெண் மனத்தவிப்பை பதிவு செய்துகொண்டே நகர்கிறது.
” கறுப்பு தேசம் ‘ என்ற கவிதை யாழ்ப்பாணத் துயரங்கள் பற்றிப் பேசுகிறது. மனத்தைத் தொடும் வரிகள்…..
தினமும் பிறப்பவர்களுக்காக
அழுவதா
இறப்பவர்களுக்காக அழுவதா
……. அடுத்து வரும் வரிகள் , மனிதம் மதிப்பில்லாமல் போன் சோகத்தைச் சொல்கின்றன.
உயிர்களைக் கூட்டி அள்ளி
குப்பையில் போடுவது
ஒன்றும் புதிதில்லை
இவர்களுக்கு
……. எண்ண எண்ணப் பெருகும் சோகம் அல்லவா இக்கொடுமை !
கவிதாவின் கவிதைகள் இன்னும் செம்மைப்பட வேண்டும். காதல் தவிர வேறு பேசு பொருளைக் கையாண்டால் கவிதைகள் அடுத்த
கட்டத்திற்கு நகரும் !

Series Navigationமிதிலாவிலாஸ்-17பொன்னியின் செல்வன் படக்கதை – 8
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *