“கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”

This entry is part 12 of 19 in the series 31 ஜனவரி 2016

Copy of ushadeepan 1 002

னக்கு ஒரு கீப் உண்டு என்று நண்பன் மனோகரன் சொன்னபோதுதான் எனக்கே அது தெரிய வந்தது.

அடப்பாவீ…இப்டி ஒரு நெனப்போடயா இருந்திருக்கீங்க எல்லாரும்…என்றேன். கூடவே, யாரடா சொல்ற? என்று கேள்வியை வீசினேன். என் முகத்தில் சுத்தமான சந்தேகம் இருந்ததா என்று தெரியவில்லை. மனோ என்னைக் கூர்ந்து பார்த்த விதம் என்னை அசடாக்கிவிடுமோவென்று தோன்றியது.

பார்த்தியா, இதுதான வேணாங்கிறது…? எங்ளுக்குத் தெரியும்டா…சும்மா சீன் போடாத…! என்றான் மனோ. அவனின் வார்த்தைகள் எனக்குப் புதியவை. அவைகளை எங்கே அவன், அவர்கள் கற்றுக் கொண்டார்கள் ? அவர்களின் கூற்றுப்படி இப்போது சீனைக் க்ரியேட் பண்ணியவர்களே அவர்கள்தானே?

இல்லடா…உண்மைலயேதான் கேட்கிறேன்….யாரச் சொல்றீங்க அப்டீ…?

டேய்…சேர்த்து வச்சு சாத்துங்கடா இவன….என்றான் ராகவ். அவர்கள் எல்லோர் மனதிலும் என் சார்பாக யாரோ ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாள் என்று தெரிந்தது. எந்த இருட்டில் யாரோடு பார்த்தார்கள்? அப்படி இருக்கவே வாய்ப்பில்லையே? குருட்டுப் பயல்கள்…. அவள் குறித்து அவர்களுக்குப் பொறாமை இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. யாரென்று தெரிந்தால்தானே அந்தப் பொறாமை நியாயமானதுதான் என்பதை நான் நிர்ணயிக்க முடியும்? நானே இன்னும் கல்யாணம் பண்ணாதவன். கல்யாணம் முடிச்சவங்க வச்சிக்கிறதுதானே கீப்பு. இவங்ஞ இதுக்கும் இந்தப் பேரச் சொல்றாங்ஞ…மத்தவங்களுக்குத் தெரியாம வச்சிக்கிட்டாலே அதுக்குப் பேரு கீப்பு போல்ருக்கு…இருக்கட்டும், இருக்கட்டும்…தப்பு செய்றதுக்கு எந்தப் பேரு இருந்தா என்ன…?

மண்டையைக் குடைய ஆரம்பித்தது. ஒரு வேளை திருச்சியிலே ஜோடி சேர்த்தார்களே…அந்த ராமலட்சுமியைச் சொல்கிறார்களோ….அவளோடு தொடர்பு விட்டுப் பல வருடங்கள் ஆயிற்றே…இந்நேரம் அவளுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருப்பாள்…? ஆனால் அடிக்கொருதரம் இந்த ஊருக்கு அவள் வந்து செல்கிறாள் என்பது மட்டும் உண்மைதான். அங்கேயே இருந்திருந்தால் வேண்டுமானால் கல்யாணம் பண்ணி வைத்திருப்பார்களோ என்னவோ…அப்படித்தான் பேச்சுக்களெல்லாம் போய்க் கொண்டிருந்தன. அவளே கூட இவள் எதற்கு வருகிறாள் என்று தோன்றும்படியாகத் தேவையில்லாமல் நான் தங்கியிருந்த லாட்ஜ் பக்கம் வர ஆரம்பித்தாளே….அவள் வீட்டுக்குப் பக்கத்தில் எத்தனையோ கடைகள் இருக்க, என் தங்குமிடத்தோடு இணைந்த அந்த உணவகத்திற்கு எதற்கு வலிய அத்தனை தொலைவு வர வேண்டும்? பொதுவாக ஆண்கள்தான் அலைவார்கள். இவள் ஏன் இப்படி? அதுவும் சரியாகக் காலை எட்டரை மணிக்கு முதல் இலை ஆளாய் நான் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருக்கும்போது கன கச்சிதமாய்த் தலையை நீட்டுவாளே? உள்ளே வந்ததும் இன்றைக்கு என்ன ஸ்பெஷல் என்றுதானே அவள் பார்வை போக வேண்டும்? ஸ்டாலில் புதிதாக என்ன ஸ்வீட் அடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்காமல் சுற்று முற்றும் அதென்ன பார்வை ஓட்டம்? ஒரு பெண்ணுக்கு இது ஆகுமா? ஒரு பொம்பளை வேண்டுமானால் அப்படிப் பார்வையை ஓட்டலாம். இவள் பெண் ஆயிற்றே? இந்த வயசுக்கு இப்படி அதி சீக்கிரம் இங்கே வந்ததே தப்பு. பின்னும் இந்த நோக்கு நோக்கினால்? பரவிக் கிடப்பவர்களில் யாருக்கேனும் நோங்கி விட்டால்?

டேய் தம்பீ…யார்ரா அது…? நேர் கோட்டில் என்னை நோக்கி வந்த கேள்வி. மெய்யப்பன் அண்ணனைத் தவிர வேறு யாரால் இத்தனை துல்லியமாகக் கணிக்க முடியும்?

யாரண்ணே சொல்றீங்க…?

ட்ட்ட்ட்ட்டாய்….பார்த்தீல்ல….என்கிட்டயே டபாய்க்கிறியே….அதாண்டா உங்க டிபார்ட்டுமென்ட்லதான் வேல பார்க்குதாமே….

எனக்குத் தெரியாதண்ணே….நானே இப்பத்தான் இந்த ஊருக்கே வந்திருக்கேன்….

எப்ப….? நேத்தா…? இல்ல முந்தா நாளா…? ஏண்டா, வந்து ரெண்டு வருஷம் ஆச்சு…என்ன கத விடுறியா…?

இல்லண்ணே….எனக்குத் தெரியாது…அவ்ளவுதான்….

பெரிய கள்ளன்டா நீ…..பார்த்து இருந்துக்கடா…இந்த ஊரு ஒரு மாதிரி…ஆம்ம்மா….ஏதாச்சும் உண்டுன்னா எங்கிட்ட சொல்லிப்புடுறா…அப்புறம் நாந்தான் வந்து காப்பாத்தணும். அத மனசுல வச்சிக்க…

ல்லாரும் சொல்லிச் சொல்லியே உங்க மேல எனக்கு ஒரு கவனத்த ஏற்படுத்திட்டாங்க…சந்துருங்கிற உங்க பேரைக் கேள்விப்பட்டவுடனே பிடிச்சுப் போச்சு எனக்கு…மனசுல அப்டி ஒரு நெருக்கம்….நா வலியத்தான் வந்திருக்கேன்…இல்லன்னு சொல்லலை…என்னவோ ஒரு ஈர்ப்பு…அது எல்லாரும் தூண்டி விட்டு வந்திச்சா…இல்ல தானா வந்ததா தெரில…ஒரு பொண்ணு (நல்ல வேளை அவள் தன்னைப் பொம்பளை என்று சொல்லிக் கொள்ளவில்லை. அந்த வார்த்தைக்கு அங்கே வேறு அர்த்தம் புழக்கமாய் இருந்ததே…!) என்னடா இப்படி வாலன்டிரா… வந்து நிக்கிறாளேன்னு கூட உங்களுக்குத் தோணலாம்….இப்டி வந்திட்டதுனாலயே நா மோசமானவன்னு நீங்க தயவுசெஞ்சு நெனச்சிடக் கூடாது….வாழ்க்கைல பீஸ்ஃபுல்லா செட்டில் ஆகணும்னு எல்லாரும் நினைக்கிறதுதான்…அதையேதான் நானும் மனசில வச்சிருக்கேன்…எங்க அப்பா அம்மா வசதியில்லாதவங்க…ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பம். அவர் ஒருத்தரோட சம்பாத்தியத்துலதான் எங்க ஆறுபேரோட வண்டியே ஓடுது…எனக்குக் கீழ ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி உண்டு….அவன்தான் கடைசி….எல்லாரும் அடுத்தடுத்து குறுகின இடைவெளில பிறந்தவங்க…பையன் வேணும்ங்கிற ஆசைல நாங்க மூணும் பொட்டையாப் போயிட்டோம்னு அம்மா சொல்லுவாங்க….அப்பா உடம்பு முடியாதவரு…ஒரு லாரி ஆபீசுல வேலை பார்த்தாரு…சின்ன வயசுல வேலைக்குப் போனவரு அப்டியே இருந்திட்டாரு…அவுக கொடுக்கிற சம்பளம்தான் எங்க வீட்டுக்கு…நல்ல வேளை நா வேலைக்கு வந்திட்டேன்…இல்லன்னா எங்க குடும்பம் சீரழிஞ்சு போயிருக்கும்….இங்க நா உறாஸ்டல்லதான் இருக்கேன்…நீங்களும் நம்ம ஊருதான்னு கேள்விப்பட்டேன்…அதுலயும் ஒரு கவனம் வந்திடுச்சி….வெக்கமில்லாம இப்டிப் பேசுறனேன்னு கூட உங்களுக்குத் தோணலாம்….உங்களப் பார்த்தா யதார்த்தமானவராத் தோணிச்சு….ஆபீஸ்ல நீங்க இன்ஸ்பெக் ஷனுக்கு வந்திருந்தப்போ உங்களக் கவனிச்சேன்….யாருக்கும் தெரியாது…என் மனசுல ஏதோ நல்லபடியாத் தோணிச்சு….அதுனாலதான் நீங்க பேசற முன்னாடி நானே எல்லாத்தையும்…. தயவுசெய்து தப்பா எடுத்துக்காதீங்க…..

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தது போலல்லவா     கடகடவென்று அடுக்கி விட்டாள். இதுபற்றியெல்லாம் எந்தச் சிந்தனையுமே இல்லாமல் நான் இருக்க, இதே சிந்தனையாய் அலைந்தவள் போலல்லவா பேசுகிறாள். என்ன பதில் சொல்வது? அந்த அளவுக்கு என்னிடம் அப்படி என்னதான் உள்ளது? எதை, எதனால் அதீதமாக ஈர்க்கப்பட்டு இப்படி வந்து நிற்கிறாள்?

என்னங்க நீங்க…இப்டி திடீர்னு முன்னால வந்து என்னென்னமோ சொல்றீங்க? இந்த ஊருக்கே நா புதுசு…எங்க ஆபீசுக்கும் புதுசு…நம்ம டிபார்ட்மென்ட் ஆபீசுக எத்தனையோ இருக்கு இங்க…யாரையும் தெரியாது எனக்கு. இனிமேதான் பழகணும்…அப்டியிருக்கைல நீங்க என்னையே குறிப்பா குறி வச்சாப்போல வந்திருக்கீங்களே? அவ்வளவு அவசரமா உங்களுக்கு? என்னங்க இது? ஒரு பொண்ணு போயி இப்டி அவசரப்பட்டுக்கிட்டு? உங்களுக்கே இது நல்லாயிருக்கா? எனக்கு என்ன சொல்றதுன்னே தெரிலிங்க…..

ஒண்ணும் அவசரமில்ல….மெதுவாவே சொல்லுங்க…ஆனா நல்ல முடிவா சொல்லுங்க…இப்டி நா தைரியமாப் பேசுறனேன்னு உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக் கூட இருக்கலாம்…சினிமால வர்றா மாதிரி யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் நிஜத்துலயும் அப்டி இருக்கலாமில்லியா…அப்டி நினைச்சுக்குங்களேன் …இந்த ஊருக்கு நீங்க வந்து ரெண்டு வருஷம் இருக்குமில்லியா…உங்களப்பத்தி எல்லாரும் சொல்றாங்க….ஆனா உங்களுக்குத்தான் மத்தவங்களப்பத்தி எதுவும் தெரில…பொதுவா தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருக்கிறவங்களுக்கு மத்தவங்களப் பத்தியும், ஊரு உலகத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்தான்… அதுதான் அவுங்களோட ஒழுக்கத்தோட அடையாளம்னு குறிப்பா எத்தனைபேர் புரிஞ்சிப்பாங்க…நா அப்டித்தான் புரிஞ்சிக்கிட்டேன்னு வச்சிக்குங்களேன்…..நா வர்றேன்…..இந்த மந்த் என்டுல ரிவ்யூக்காக வருவீங்கல்ல…அதான் எங்க ஆபீசுக்கு….டேட் கொடுத்திருக்கீங்களே…அப்போ நாம சந்திக்கலாம்….. – போய்விட்டாள்.

படபடவென்று பட்டாசு வெடித்தது போல் பொறிந்து தள்ளிவிட்டு, என்ன ஏது என்று நின்று, நினைத்து, நிலைப்பதற்குள் பறந்து விட்டாளே…?

எந்த வேகத்தில் என்னிடம் எல்லாவற்றையும் கொட்டினாளோ அதே வேகத்தில்தானே அந்த யக்ஞராமனைக் கல்யாணம் செய்து கொண்டாள். பெயருக்கேற்ற மாதிரியா அவன் இருந்தான்?

இந்த அணைக்கட்டு, பார்க், போன்ற சுற்றுலாத் தலங்களில் திரியும் காதலர்களுக்கு யார் சொல்லித் தருகிறார்கள் இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்று? இவர்கள் காதலிக்கும் முறை இவர்களின் சொந்த அனுபவத்தில் வந்ததா? அல்லது சினிமாக்கள் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பதை, கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து அப்படியே செய்கிறார்களா? யாரும் எளிதில் பார்த்து விட முடியாது என்பதான இடங்களை இவர்கள் எவ்வாறு அங்கே தேர்வு செய்கிறார்கள்? இலக்கியத்திலிருந்து இவைகளைக் கற்றுக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் அவைகளை நிச்சயம் இவர்கள் படித்திருக்க மாட்டார்கள். கல்விச் சாலைகளிலும் அவை நயத்தோடு கற்பிக்கப்பட்டிருக்க நியாயமில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், பண்பாடும் வாழ்வில் இரண்டு இடங்களில் இருந்துதான் நிச்சயம் வந்து சேர முடியும். ஒன்று கல்விக் கூடங்கள். இன்னொன்று வீடு. வாழ்வின் அடிப்படை ஒழுக்கங்களை வீட்டிலே சொல்லிக் கொடுத்தால்தான் ஒருவனின் வளர்ச்சியில் அன்றாட நியமங்களாக அவை படிந்து அவனை ஒழுக்க விதிகளிலிருந்து மாறாததொரு நல்ல பிரஜையாக உருவாக வைக்கும். இதை விட்டால் கல்வி கற்கும் பள்ளிக் கூடங்கள் இவற்றையெல்லாம் போதித்து, ஒருவனை தலை சிறந்த மாணவனாக உருவாக்குவதன் மூலம், அது அவனின் சொந்த வாழ்க்கைக்கும், அவன் வீட்டுக்கும், இந்த நாட்டுக்கும் பயனுள்ள ஒருவனாக வளர்ந்து தலை நிமிர்ந்து நிற்றல் என்கிற பயன்பாடாக அமையும்.

இந்த விதிகளினின்று முரண்பட்டதாகத்தானே இந்தக் காட்சிகளெல்லாம் கண்களுக்குத் தெரிகின்றன. பாழாய்ப் போன அவளின் காதல் இவன் கண்களுக்குப் பட வேண்டுமா? அன்று அந்தப் பேச்சுப் பேசினாளே? அப்படியானால் அது அப்படியெல்லாம் சொல்லி என்னை மடக்கிப் போடவா? இன்று இங்கே மடங்கி இப்படிக் கிடக்கிறாளே…இது இவளாக மடங்கியதா? அல்லது அவன் இவளை மடக்கினானா? இந்தப் பக்கம் என்னோடு பேசிக் கொண்டு அந்தப் பக்கம் அவனோடு படுத்துக் கொண்டிருந்தால் எப்படி?

ராமலட்சுமி, அப்படியென்னடீ உனக்கு அவசரம்? உன் குடும்பப் பிரச்னை உன்னை அப்படி விரட்டுகிறதா? அங்கிருந்து விடுபட்டால் போதும் என்பதாக நிற்கிறாயா? ஏன் இத்தனை அவசரப்படுகிறாய்? அதற்குள் இவனை எப்படிப் பிடித்தாய்? என்னோடு பேசுவதற்கு முன் பிடித்ததா? அல்லது என்னோடு பேசிக்கொண்டே இவனையும் கைவசம் வைத்திருந்தாயா? இரண்டில் எது சிக்குகிறதோ அது படியட்டும் என்று ஆப்ஷன் கொடுத்துத் காத்திருந்தாயோ? ராமலட்சுமி உன்னை நாமலட்சுமியாக அவன் ஆக்காமலிருந்தால் சரி. நல்லவேளை கண்டேன் சீதையை என்பதைப் போல் கண்டேன் உண்மையை.

இன்று இந்த டேம் பக்கம் வரும் எண்ணமே இல்லை. சரியாகச் சொல்லப் போனால் நான் இந்த நேரத்தில் எனது அறையில் படுத்துக் கிடக்க வேண்டும். எது என்னை இழுத்து வந்து இங்கே நிறுத்தியது? எந்த நண்பன் வரவேமாட்டான் என்று நினைத்தேனோ அவன் திடீரென்று பிரசன்னமாக, அவனோடு நானும் ஊர் சுற்றக் கிளம்ப, அது இந்த அணைக்கட்டாக இருக்க, அங்கே நீ இப்படி அவன் மடியில் சயனித்திருக்க, அது என் கண்களில் பட, என்னே இறைவனின் கருணை…! என்னே இறைவனின் கருணை.

குட் பை ராம லட்சுமி…குட்பை….

நீ என்னடா எனக்கு குட் பை சொல்வது? நானே சொல்லி விட்டேனே…இந்தா பிடி என் கல்யாணப் பத்திரிகையை….

நீங்க அவசியம் மறக்காம என் கல்யாணத்துக்கு வரணும் சார்….ஏன்னா மொத மொதல்ல என் மனசு மனசார விரும்பினது உங்களைத்தான் சார்….உங்களைத்தான் நா தெய்வமா நெனச்சிருந்தேன்….அதுக்குள்ளதான் எங்க வீட்ல இப்டிப் பண்ணிட்டாங்க…..அவுருக்குக் கொஞ்சம் கால் ஊனம்….ஆனா நிறையச் சொத்து இருக்கு…காரு…பங்களா….எனக்குக் கூட அவுங்க வீட்லருந்து நூறு பவுன் நகை போடுறாங்க….நானே எதிர்பார்க்கல….எங்க வீட்ல எதுவும் செய்ய முடியாது…பொண்ண மட்டும்தான் அப்டியே கட்டுன சேலையோட அனுப்ப முடியும்னுட்டாங்க….. இது நாவரைக்கும் நா சம்பாரிச்ச காசக்கூடச் செலவு பண்ண முடியாதுன்னுட்டாரு எங்க அப்பா…ஏன்னா நிறையக் கடன் இருக்கு அவுருக்கு….அத்தோட மாசா மாசம் சம்பளத்துல பாதி கண்டிப்பா வேணும்னுட்டாரு….எல்லாத்துக்கும் சம்மதிச்சிட்டாங்க அவுங்க…அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு….இருந்தாலும் எங்க குடும்பம் கஷ்டத்துலேர்ந்து மீண்டாப் போதும்ங்கிற ஒரே எண்ணத்துல நா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன்….நீங்க மறக்காம வரணும்……

அப்படி வலிய வந்த ஸ்ரீதேவியுடனேயே கைகோர்க்காதவன் நான். சட்டுப் புட்டென்று மடக்கிப் போடத் தெரியாதவன். நானாவது கீப் வைத்திருப்பதாவது? என்ன உளறுகிறார்கள் இவர்கள்?

சென்ட் த ஜீப் என்று தந்தி கொடுப்பதற்குப் பதிலாக சென்ட் த கீப் என்று தந்தி கொடுத்தார்களாம். ஒரு எழுத்து மாறிப் போனால் அர்த்தமே எவ்வளவு பாழ்பட்டுப் போகிறது?

Send the report regarding flood position. இங்கே flood – food ஆகி விட்டது. அதுபோல் ஸ்ரீதேவி பூதேவி ஆன கதைக்கே அதிராதவன், இவர்களின் சலம்பல்களுக்கெல்லாமா அரளப் போகிறேன்?

ரவு நான் அந்தத் தியேட்டரின் முதல் வகுப்புக் கடைசி வரிசையில். என் அருகில் அவள். ம்ம்ம் தப்பு…தப்பு…அருகிலல்ல. மடியில். என்னடா இவன் இந்தப் போடு போடுகிறான் என்று நீங்கள் நினைக்கலாம். அந்தத் தியேட்டரைத் தேர்ந்தெடுத்தது நான்தான். ஊருக்கு வெளியே உல்லாசமான திரையரங்கு. நகருக்குள் இருக்கும் மால்களின் தரத்திற்குக் கிஞ்சித்தும் குறைந்ததல்ல. ஆனால் கூட்டம்தான் இன்னும் வர மறுக்கிறது. அவர்களோ விடுவதாயில்லை. இன்றில்லாவிட்டால் நாளை வரும் என்கிற நம்பிக்கைதான். காசை எங்கே கொண்டுபோய் ஒளிப்பது என்று தெரியாமல் இஷ்டத்திற்குக் அள்ளிப் போட்டு காற்றாட விட்டு விட்டார்கள். அடிக்கிற காற்று கட்டடத்தையே அலேக்காகத் தூக்கி அரை மைல் தள்ளி வைத்து விடும்போல். யாரோ மத்திய அமைச்சரின் பினாமி என்றார்கள். வெறும் அய்ம்பது கிராம் பாப்கார்ன் இருபத்தஞ்சு ரூபாய் என்றால் பாருங்களேன். அவர்கள் தரத்திற்கு அங்கு பாப்கார்ன் விற்பதே கூடச் சற்றுக் கேவலம்தான். இருந்தாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளின்படி பத்து ரூபாய் டிக்கெட் கண்டிப்பாக வைத்தே தீர வேண்டும் என்று உள்ளதல்லவா? திரைக்கு நாலடி தள்ளி அந்த இருக்கையிலும் உட்கார்ந்து படம் பார்த்திருக்கிறேன்தான். இன்று அப்படி முடியுமா?

அருகிலே என் அஞ்சலி. என்னடா ஒரு அதிர்ஷ்டம். இன்று இந்த முதல் வகுப்பிற்கு என்னைத் தவிர வேறு யாருக்குமே டிக்கெட் இல்லையென்று விட்டார்களா? நான் ஒன்றும் மொத்த டிக்கெட்டையும் புக் பண்ண வில்லையே? அது சினிமாவில்தானே வரும். சுற்றியிருக்கும் இருட்டு சற்று பயத்தை உண்டு பண்ணினாலும், என் தேவதை மடியிலிருக்கையில் எந்த இருட்டு என்ன செய்யும்? எந்த பயம் என்னை எப்படி நெருங்கும்? ச்சூ…ச்சூ…

வீட்டுல சொல்லிக்கவேயில்ல…நா பாட்டுக்குக் கிளம்பி வந்திட்டேன். தேடுவாங்க….எங்கன்னு தேடுவாங்க…அதுலதான் சிக்கல்…

ஃபோன் அடிச்சாங்கன்னா…?

அதுக்கு பயந்துதான் சிம்மைக் கழற்றி வச்சிட்டேன். தொடர்பு எல்லைக்கு வெளில வெளிலன்னுதானே வரும்…

அதத் தொடர்பு எல்லைக்கு வெளியாக்கிட்டு, இங்க உள்ளே ஆக்கிட்டியாக்கும்…? ஏண்டீ அப்டின்னு சந்தேகப்படமாட்டாங்களா…?

அது அப்டி வந்திச்சின்னா அதுக்கு நா என்னம்மா பண்றதும்பேன்….

வேறே ஏதாச்சும் யார்கூடவும் பேச வேண்டி வந்தா?

இப்பப்போய் அப்டிப் பேசினா, தேவையில்லாம வம்புலதான் மாட்டிக்கணும்…

ஏன் அப்டிப் பயப்படுறே?

எப்டியாவது ஏரியாவக் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா? எப்டியானாலும் உங்க ஃபோன்தான் இருக்கே…

அது இன்னும் வம்பாச்சே….

பேசினாத்தானே…..!

கையிலிருக்கும் என் மொபைலை இணுக்கிக் கொண்டே சர்வ சுதந்திர பாத்தியதையாய் என் மார்பில் தவழ்ந்தாள் அஞ்சலி. சே…கொஞ்சம் கூடப் பயம் கிடையாதா? இதென்ன தியேட்டரா? லாட்ஜ் ரூமா? அட…அட…உலகத்துல வேற என்னய்யா சொகம் வேணும்….இந்த நிமிஷ சொர்க்கம் வேறே யாருக்கும் கிடைக்குமா? என்ன ஒரு அதிர்ஷ்டம்?

இவபாட்டுக்கு இப்டிப் பொறளுறாளே…வேர்வை நாத்தம் அடிக்கலையா…? ஏ.சி. யை மீறி எனக்கே நாறுது? பிடிச்சிடுச்சின்னா எல்லாத்தையுமா மனசு பொறுத்துக்கிடும்?

ன்ன படம் பார்த்தேன்….எதுவுமே மனசிலில்லை. அவள்தான் சொல்லிக் கூட்டி வந்தாள். ஏதோ லவ் சப்ஜெக்ட் என்று…அப்படிச் சொல்லி கூட்டி வந்தது தியேட்டருக்குத்தானே…படத்திற்கல்லவே…? அப்படித்தான் ஆகிப் போனது. பையில் வைத்திருந்த ஐநூறில் ஏதோ கொஞ்சம் சில்லரை தட்டுப் பட்டது. வீடு போய்ச் சேருமட்டுமாவது வண்டியில் பெட்ரோல் மிஞ்சுமா? வழியில் பஞ்ச்சர், கிஞ்ச்சர் ஆகிப் போனால்? ஏதேனும் பைசா வைத்திருக்க மாட்டாளா?

டார்லிங்….ஏதாச்சும் பணம் வச்சிருக்கியா கைவசம்…?

எதுக்குக் கேட்குறீங்க…?

இல்ல, சும்மாத்தான்….

அதான் நீங்க இருக்கீங்களேன்னு வந்திட்டேன்….பர்ஸே எடுத்திட்டு வரல்லியே….வெறும் ஐநூறோடவா வந்தீங்க…கஞ்சப் பிசினாறி…..

அடிப்பாவீ…! இவள் என் மீது பிரியமாகச் சுற்றுகிறாளா? அல்லது என் பர்சைக் காலி பண்ணவா? இப்போதைக்கு இவன், ஓடுமட்டும் ஓடட்டும் என்று வந்திருக்கிறாளோ…? நான்தான் ஏமாளியா…? இந்தப் போடு போடுகிறாள்?

பலத்த சிந்தனையில் மாடியில் இருந்து கீழ் நோக்கிக் காலடிகளைப் பதித்த வேளையில் வாயிலில் அவன். அவனைச்சுற்றி யாரோ சில அவர்கள்.

அடக் கடவுளே…..தப்பிப்பதற்கு வேறு வழியும் இல்லையே….

வலப் புறமாக அவளை இழுத்துக் கொண்டு சற்றே இருட்டான பகுதியைப் பயன்படுத்தி சரசரவென ஒதுங்கினேன்.

அதே பாணியில், அந்தக் குறிப்பிட்ட ஒதுங்கு இருட்டிலிருந்து பூனையாய் வெளி வந்தான் அவன்.

நிமிடத்தில் நெருங்கிய அந்தக் கணம் மின்னலாய் அஞ்சலியின் கன்னத்தில் ஒரு பளேர். வெளியேறிக் கொண்டிருந்த அனைவரது பார்வையும் சடேரெனத் திரும்பியது. ஓடுகாலிக் கழுதை….ஆள் கிடைச்சாப் போதுமே……

ரொம்பவும் பழைய வசை. உள்ளுரிலேயே திரும்பக் கிடைத்து விட்டவளைப் போய் இவன் ஏன் இப்படிச் சொல்லித் திட்டுகிறான். கோபத்தில் எதுவும் பொருந்தாதோ?

என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. தரதரவென்று அவளை இழுத்துக் கொண்டு கூட்டத்தை இடித்துப் பிடித்துப் பிளந்து முன்னேறிக் கொண்டிருந்த அந்த அவன் மனோகரன். கூடப் பின் தொடர்ந்தார்கள் அந்தப் புது முகங்கள்.

நான் பின் தங்கி யோசித்து நின்றேன்.

அப்படியானால் அன்று மனோ சொன்ன அந்த அவள் யார்? வேறு யாராயிருக்கலாம்? அது சரி, ஆள் கிடைச்சாப் போதுமே என்றானே…அதற்கு என்ன அர்த்தம்?.

—————————–

 

 

உஷாதீபன்,                                                          8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு,                                     மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014.                                                             —————————

 

Series Navigation‘கலை’ந்தவைஇந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *