விழியாக வருவாயா….?

author
0 minutes, 10 seconds Read
This entry is part 17 of 20 in the series 4 செப்டம்பர் 2016

என்.துளசி அண்ணாமலை

 

புதுவீடு கட்டி முடித்தாகிவிட்டது.  இன்னும் சாயப்பூச்சு வேலைகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

அம்மாவின் நினைவு நாளன்று புதுமனைபுகு விழாவை நடத்த முடிவு செய்திருந்தான் முரளி. ஆனால், மாமியார், மாமனார் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதைக்கு அவர்கள்தானே வீட்டுக்குப் பெரியவர்கள். மனைவி வேறு ஒரு பக்கம் உம்மென்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள். இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, வண்ணப்பூச்சு வேலை செய்யும் ஆட்களை விரட்டிக் கொண்டிருந்தான்.

பகலெல்லாம் வீட்டைப்பற்றிய வேலைகளில் மூழ்கியிருந்தாலும், இரவில் படுத்திருக்கும்போது மட்டும் அம்மா, அப்பாவின் நினைவு அவனைப் பெரிதும் ஆக்கிரமித்து, அலைக்கழித்தது. புதுவீடு கட்டுவதற்காக, நிலத்தின் ஈசானிய மூலையில் தற்காலிகமாக பலகை வீடொன்று கட்டப்பட்டிருந்தது. அருகிலேயே ஓங்கி வளர்ந்திருந்த பூவரசுமரம், தன்னுடைய வலிய கிளைகளைத் தாராளமாக விரித்திருந்தது. அதன் கீழே போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்தவாறு வானத்தைப் பார்த்தான்.

கருநீலம், பால்வெள்ளை, வெளிர் நீலம் என்று வானம் தன் விருப்பத்திற்கு வண்ணக்கலவையை அள்ளிக் கொட்டியிருக்க, ஒன்பதாம் நாள் வளர்பிறைச் சந்திரனோடு போட்டியிட முடியாமல் ஓரிரு நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னிக்கொண்டிருந்தன.

தான் சிறுவனாக இருந்தபோது, இதே போன்றதொரு பால் நிலவொளியில், அம்மா தன்னைக் கொஞ்சியும் கெஞ்சியும் மிரட்டியும் விரட்டிப் பிடித்தும் பால் அன்னம் ஊட்டிய இனிய நினைவலைகள் நெஞ்சுக்கூட்டை நிரப்பி மூச்சுத் திணறலை ஏற்படுத்தின.

இதேபோல, செம்பனைத் தோட்டத்தில் வேலைகளை முடித்த அலுப்பில், கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாவின் பரந்த மார்பின்மீது அமர்ந்து கொண்டு, அவர் மார்பில் விளந்திருக்கும் கருநிற முடிகளைத் தன் பிஞ்சு விரல்களால் அளைந்ததும், அதே மார்பில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு அவருடைய இருதயத் துடிப்பை அறிய, அங்கே காதைப் பொருத்திப் பார்த்ததும், அவ்வளவு அலுப்பிலும் அப்பா முரளியின் முதுகை வருடிக் கொடுத்ததும், முத்தமிட்டுக் கொஞ்சியும் மகிழ்ந்த அந்த இனிமையான கணங்கள், இதயப் பேழைக்குள் இன்பப்புதையலாய் பத்திரப்படுத்தப்பட்டு, இப்போது நினைத்தாலும் நெஞ்சில் இனிக்கின்றதே!

 

 

பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியபிறகு,  ஒருநாள் இரவு.  தான் உறங்கி விட்டதாக எண்ணிக் கொண்டு அப்பா அம்மாவிடம் கூறினாரே!

“குமுதா, நம்ம முரளி படிப்பில் ரொம்பவும் கெட்டிக்காரனாம். இன்று அவனுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்த்தேன். அவர்தான் சொன்னார். நம்ம முரளியை ரொம்பவும் பாராட்டிப் பேசினார். அதைக் கேட்டு நான் எப்படிப் பூரிச்சுப் போனேன் தெரியுமா?  எங்கப்பா அடிக்கடி சொல்லுவார், ‘ஒரு மகன் தன் தகப்பனுக்கு ஆற்றக்கூடிய கடன் என்னவென்றால், ஆகா, இப்பேர்ப்பட்ட  மகனைப் பிள்ளையாய்ப் பெற என்ன தவம் செய்தேனோ’ என்று மற்றவர்கள் பாராட்ட வேண்டுமாம்! ஆனால் அதற்கும் முன்னர் பெற்றவர்களாகிய நமக்கும் ஒரு கடமை இருக்கிறது, குமுதா.”

“என்னங்க அது? இன்று உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் உங்களுடைய இளம் வயதில் படித்ததை எல்லாம் நினைவு கூர்கிறீர்களா? இல்லை, மனப்பாடம் செய்த திருக்குறள் நினைவுக்கு வந்து விட்டதா?”

“ஆமாம் குமுதா. அந்த ஆசிரியரிடம் பேசியதிலிருந்து என் மனம் மகிழ்ச்சியால் பூரித்துப் பொங்கிக்  கொண்டிருக்கின்றது. இப்போது நம்முடைய கடமை என்ன தெரியுமா? நாம் பெற்ற பிள்ளை இந்த உலகத்தில் ஒரு சிறந்த குடிமகனா, எல்லா வகையான நற்பண்புகளிலும் உயர்ந்தவனா, நம் குலம் தழைக்க வந்த கோமகனா…..இன்னும் நல்லதமிழ் பேசி நாளும் தமிழுக்கு நலம் சேர்க்கும் தமிழ்மகனா, வியாபாரமோ, உத்தியோகமோ, எதை எடுத்தாலும் அதில் வெற்றியாளனா வரவேண்டும். தாய், தந்தையின் கடமை என்ன? தன் மகனை அவையத்தில் முந்தி இருக்கச் செய்வது தானே? அதை நாம் மறவாமல் கடமை ஆற்றினால், முரளியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லலாம் என்று ஆசிரியர் சொன்னாரே!”

“மெய்யாகவா? எனக்குக் கேட்கவே ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்குங்க..”

“ஆமாம் குமுதா. ‘பையனை நல்லா படிக்க வையுங்க’ என்று மிகவும் வற்புறுத்திச் சொன்னார். நம்ம முரளி கவனமாப் படித்து பெரிய உத்தியோகத்தில் உட்காரனும். மூத்த மகனைத்தான் கவனமில்லாமல் காலனுக்குப் பறி கொடுத்து விட்டோம். ஆனால், இனிமேலும் நாம் அப்படி இருக்கக்கூடாது……செம்பனைத்தோட்ட வேலைகளை நான் பார்த்துக் கொள்வேன். பழம் பொறுக்கிப் போடவும் கூட நான் ஆள் வைத்துக் கொள்வேன். நீ நம்ம முரளியை ஒருகணங்கூட கண்ணை மூடாமப் பார்த்துக் கொள்ளனும், ஆமாம் சொல்லிட்டேன்!”

“சரீங்க, என் கண்ணுக்குள்ளே வைத்துப் பார்த்துக் கொள்வேன்! நீங்க கவலையை விடுங்க!”

 

 

 

அம்மா உண்மையிலேயே முரளியைக் கண்ணுக்குள் வைத்துத்தான் வளர்த்தாள். வளர்ந்து, பெரியவனாகி, ஒரு உத்தியோகத்தில் அமரும் வரையிலும் அம்மா உறங்கி அவன் பார்த்ததில்லை. எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பாள். மதிய வேளைகளில் உறங்குவது, அண்டை அயலாரிடம் அநாவசியமாக வம்புக்கதைகள் பேசுவது என்றெல்லாம் பொன்னான நேரத்தை வீணாக்கியதில்லை. இரவில் அவன் கண்விழித்துப் படிக்கும்போது, அவளும் ஏதாவதொரு கதைப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பாள். தேர்வுக்குப் படிக்கும் காலங்களில், நேரமறிந்து சுடச்சுட தேநீர் தயாரித்துத் தருவாள்.

தன்னை அறியாமலேயே புத்தக மேசையின்மீது உறங்கி விழுந்து விட்டாலோ, கவனமாக அவனை எழுப்பிப் படுக்கச் செய்வாள்.

பதினெட்டு வயதில் தேர்வை முடிக்கும்போது, அப்பா காலமானார். அந்தப் பிரிவின் தாக்கத்தை அம்மா யாரிடமும் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதே இல்லை.

ஆனால் தனக்கென்று ஒரு மனைவி வந்த பிறகுதான் அம்மா எத்தகையதொரு இழப்பைத் தாங்கி வந்திருக்கின்றாள் என்பதை உணர முடிந்தது.

அம்மாவின் விருப்பம் போலவே வைதேகியை மணம் முடித்தான். முதல் நாளே மனைவியிடம் உத்தரவு போல ஒரு கோரிக்கையை வைத்தான்.

‘’எந்தக் காரணத்தை முன்னிட்டும், எந்தக் காலத்திலும் என் தாயின் கண்களிலிருந்து துன்பத்தினால் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட நான் பார்க்கக் கூடாது!” என்பது தான் அந்த உத்தரவு.

ஆனால் குமுதாவின் கண்கள் அடிக்கடி கண்ணீர் விடத் தொடங்கின. கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினான்.

“நல்லவேளையாக இப்போதே அழைத்து வந்தீர்கள். உங்கள் தாயாரின் விழி இமைகளுக்குள் சிறு சிறு கொப்புளங்கள் தெரிகின்றன. சில சமயம் நம்முடைய சோகங்களை வெளிப்படுத்தாமல் மனதுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தாலோ, அந்த சோகத்தின் வடிகாலான கண்ணீரை வெளியேற்றாமல் இருந்தாலோ, இம்மாதிரியான கண்ணீர்க் கொப்புளங்கள் உண்டாகும். இதைக் கவனிக்காமல் விட்டு விட்டால் புதுப்பிரச்னைகள், கண்கோளாறுகள் பலவும் தோன்றும். உங்கள் தாயாரின் மனதில் என்ன ஏக்கம் தேங்கிக் கிடக்கின்றது என்பதை அறிந்தால், மேற்கொண்டு சிகிச்சை செய்ய உதவியாக இருக்கும். இப்போதைக்கு நான் தரும் மருந்துகளைத் தவறாமல் உட்கொண்டு வரட்டும். கண்களுக்குக் களிம்பும் தருகிறேன். இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் அழைத்து வாருங்கள்.”

 

 

 

 

 

மருத்துவரின் பேச்சு முரளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், தன் தாயின் மனதில் புதைந்து கிடக்கும் இரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலே மிகுந்திருந்தது. அதற்கான தருணத்த எதிர்பார்த்திருந்தான்.

அந்தத் தருணம் வந்தபோது…….

“மாப்பிள்ளை, என்ன இங்கே வந்து படுத்து விட்டீர்கள்? உடம்புக்கு முடியலையா, என்ன?” மாமனாரின் குரல் அவனை உலுக்க, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.

“வந்து…மாமா…” தடுமாறியவனைக் கையமர்த்திவர், தோழமையோடு அருகில் அமர்ந்தார்.

“மாப்பிள்ளை, உங்களுக்கு மனசில என்ன கவலை? வெளியில் சொன்னால்தானே தெரியும்? இத்தனை நாட்களும் வெளியூரில் வேலை செய்தீர்கள். உங்கள் விருப்பப்படியே இந்த வீட்டைக் கட்டினேன். நம்ம *கம்பத்திலேயே இதுதான் பெரிய வீடு இப்போது! கம்பமே பார்த்து வியந்து போயிருக்கு. ஆனால் உங்கள் முகத்தில் மட்டும் முழுமையான மகிழ்ச்சியைப் பார்க்க முடியவில்லையே….ஏன் மாப்பிள்ளை? ஏன் இப்படி இருக்கின்றீர்கள்? புது வீட்டுக்குக் குடிபோகும் நாளை, உங்க அம்மாவின் நினைவு நாளில் வைச்சிருக்கீங்க. அதுவும் திதியும் சேர்ந்து வந்திருக்கின்றது!….எங்களுக்கெல்லாம் மனசுக்கு சங்கடமாக இருந்தாலும், உங்கள் விருப்பத்த மீறி எதையும் செய்யப்போவது இல்லை. அப்படி இருந்தும் நீங்கள் இப்படி சோர்ந்து போய்க் கிடப்பதும், சதா யோசனையில் ஆழ்ந்து கிடப்பதும் ஏன் என்றுதான் விளங்கவில்லை!”

மாமனாரின் குரலில் இழையோடிய வருத்தம் மனதை என்னவோ செய்தது. தன்னை அறியாமலேயே அவரை வருத்தம் அடையச் செய்து விட்டோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

“மாமா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக வீட்டைக் கட்டி முடித்து, இன்று நான் பார்த்துப் பார்த்துப் பூரிக்கும் அளவுக்கு எந்தக் குறையும் இல்லாமல் செய்திருக்கின்றீர்கள். எனக்குத்தான்…. இதையெல்லாம் இருந்து பார்க்க, இந்தப் புது வீட்டில் மகாராணி போல வாழ என்னைப் பெற்ற தாய் இப்போது உடன் இல்லையே என்ற ஏக்கம் மனதைப் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருக்கின்றது.  இந்த உலகத்தின் பார்வையில் நான் உயர்ந்த மனிதனாக வாழவேண்டும் என்று கனாக் கண்ட என் அன்பான அப்பா இப்போது அந்த உயர்வைப் பார்க்க என்னோடு இல்லையே! அந்தத் துன்பம் மனசுக்குள் பள்ளத்தை ஏற்படுத்திவிட்டது. அதான்….. வேறொன்று மில்லை, மாமா.….நீங்கள் எதையும் நினைத்து வருந்தவேண்டாம்.”

 

 

“அம்மா, அப்பாவை நினைத்தா வருத்தம்? நான் கூட என்னவோ, ஏதோ என்று நினைத்து விட்டேன். சரீங்க மாப்பிள்ளை, அதிகமாக் கவலைப்பட்டு உடம்பை வருத்திக்க வேண்டாம். உங்க தாயார் நல்ல பெண்மணி. தகப்பனாரும் உயர்ந்த மனிதர்தான். நல்லாப் படிச்சவர். வாழற காலத்தில் நல்ல சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்பதை ஒதுக்கிவைத்து விட்டுப் பார்த்தால், அவர்களுக்கு வேறு என்ன குறை இருந்திருக்க முடியும்? அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம். தெய்வமாக இருந்து அவர்கள் எப்போதும் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும், மாப்பிள்ளை. மனதை அலைபாய விடாதீங்க. புதுமனை புகுவிழாவுக்கு இன்னும் ஆறு நாட்கள்தான் இருக்கின்றன. இரண்டு நாட்களில் வண்ணப்பூச்சு வேலைகளை எல்லாம் முடித்துவிட வேண்டும். அதன்பிறகுதான் மின்சார விளக்குகளை பொருத்துவார்கள். வெளிவாசல் மதிலில் அலங்கார விளக்குகளையும், முகப்பில் வெள்ளை யானை பொம்மைகளையும் பொருத்தச் சொல்லியிருக்கிறேன். நான் ஒருவனே ஓடியாட ரொம்பவும் சிரமமாக இருக்கின்றது. நீங்களும் ஒரு கை கொடுத்தால் நன்றாக இருக்கும். நீங்கள் இப்படி சோர்ந்து இருந்தால் உடல் நலம் கெட்டுப் போகாதா? போய் சீக்கிரமாப் படுத்துத் தூங்குங்க!”

மாமனார் அன்போடும் கண்டிப்போடும் கூறிவிட்டுப் புறப்பட்டார். அவர் சென்றபிறகு மனக்குரங்கு, தாய்ப்பசுவைத்தேடும் கன்றுக்குட்டியாய் மீண்டும் அம்மாவிடமே ஓடித் தஞ்சம் அடைந்தது. அந்த நினைவுகள் தன்னைப் பாடாய்ப் படுத்துவதைப் புறந்தள்ள முடியாமல், எழுந்து பலகை வீட்டுக்குள் வந்தான். வைதேகியும் மூன்று பிள்ளைகளும் ஒற்றைக் கட்டிலை ஆக்கிரமித்திருந்தனர்.

மகள் தன் பாட்டியிடம் தஞ்சமடந்திருந்தாள்.

தலைக்கு ஒரு தலையணையை அணையாகக் கொடுத்தபடி கட்டாந்தரையில் படுத்தான். ஆனால், உறக்கமோ அவனை நெருங்க மறுத்தது.

அம்மாவின் மஞ்சள் முகம் கண்முன்னே தோன்றி அலைக்கழித்தது. உடல் நலம் குன்றத் தொடங்கியபோது, தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏக்கத்தை வெளியிட்டாளே! அந்த வார்த்தைகள் இப்போதும் காதுகளில் ரீங்காரமிடுகின்றனவே!

மாளிகை போன்ற வீட்டுக்குத் தான் மருமகளாக வந்தது, நிறைய நிலபுலன்களுக்குச் சொந்தக்காரனான அப்பாவுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்தது, சொத்துக்கு ஆசைப்பட்ட நெருங்கிய சொந்தங்களின் கபட வார்த்தைகளில் அத்தனை சொத்துக்களையும் இழந்து, சாதாரண வீட்டுக்குக் குடிபெயர்ந்தது, கணவரின் மனநிலை பாதிக்கப்பட்டது, மூத்த மகன் நோய்வாய்ப்பட்டு போதிய மருத்துவ வசதி இன்றி எமனுக்கு இரையாகிப் போனது,

 

 

 

நம்பிக்கையுடன் கணவனைத் தேற்றி, அவர் உடல் நலம் தேறி வந்தது என்று ஒரு மாபெரும் சோகக் காவியத்தையே அல்லவோ அவனிடம் ஒப்புவித்து விட்டாள்! அவள் கூறிய ஒவ்வொரு சொல்லும் கல்லில்  செதுக்கிய கல்வெட்டு போல இதயத்தில் செதுக்கப்பட்டு, அவனை ஒவ்வொரு கணமும் பாடாய்ப் படுத்தியதை யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது?

அன்றொருநாள்……மஞ்சள் முகத்தில் இடப்பக்கமாக ஒற்றை சிகப்புக்கல் மூக்குத்தி பளிச்சிட, பொடிப்பொடியாக வியர்வைத் துளிகள் கன்னங்களிலும் கழுத்தோரங்களிலும் வைரக் கற்களைப் பழித்தாற் போல மின்னும் அழகோவியமாக அம்மாவின் அன்பு முகம் அவனை உற்று நோக்க, வெற்றிலைச் சாறு படிந்த இதழ்கள் அசைந்தன.

“முரளி! நீ உன் அப்பாவைப் போல வாழ்ந்து காட்டவேண்டும். அவர் மனதில், சொந்த பந்தங்கள் ஏற்படுத்திய காயம் கடைசிவரை ஆறவே இல்லை. இறக்கும்போது கூட வாழ்ந்த வீட்டையும் இழந்த நிலபுலன்களைப் பற்றியுந்தான் பேசினார். அவரோட காலத்தில் அவற்றை எல்லாம் மீட்கமுடியவில்லை. அவை மீண்டும் கிடைக்குமா என்பதும் சந்தேகந்தான். நான் கண்ணை மூடும் முன்பாகவாவது அந்த வீட்டைத் திரும்பவும் வாங்கி விடலாம் என்று கனவு கண்டேன். அந்த சொத்துக்கு இணையாக இந்த வீட்டைப் பெரிதாகக் கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டேன். எல்லாம் நினைவிலேயே  நிற்கிறது. நினைவு நெசமாகுமா, முரளி?”

அம்மா இறுதியாகக் கூறிய வார்த்தகள்! அந்த வீட்டை வாங்க முடியுமா? அது மாளிகையாயிற்றே! முடியாது! ஆனால், தற்போது குடியிருக்கும் வீட்டைப் பெரிய பங்களாவாகக் கட்ட முடியும். அம்மா, உன் கனவை நிச்சயமாக நனவாக்குவேன்! அன்று மனதுக்குள் சங்கல்பம் செய்தான்.

அம்மா தன் கடைசி மூச்சை அவன் மடியில்தான் விட்டாள். அம்மாவின் ஆசையை நிறைவேற்றவே இளம் மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து கப்பலில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் கற்ற கல்வி அவனுக்கு உயர்ந்த சம்பளத்தைப் பெற்றுத் தந்தது. மாதாமாதம் அவன் அனுப்பிய தொகையில் வீட்டுச் செலவு போக, மீதித்தொகையைச் சேமித்து மாமனார் நல்ல முறையில் அழகிய பங்களாவைக் கட்டினார். பெற்ற தந்தையைப் போல அவன்மீது பாசம் வைத்திருக்கின்றார். அவருடைய கடமை உணர்வும் உதவியும் இல்லாது இருந்தால் அவன் கண்ட கனவு பலிதமாகியிருக்காது என்பது நிதர்சனமான உண்மை.

முரளிக்கு உறக்கமும் விழிப்புமான ஒரு திரிசங்கு நிலை. அம்மாவைப் பற்றிய நினைவு மேலும் மேலும் பெருகியது. உயிர்விடும்போது அம்மாவுக்கு என்ன வயதிருக்கும்? நாற்பத்தைந்து? வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள், இன்பதுன்பங்கள், குடும்ப உறவுகள், அவர்களால் ஏற்படும் சுகதுக்கங்கள், வாழ்க்கைத் துணையோடு இணைந்து, இயைந்து வாழும்

 

 

 

 

கனவு சொர்க்கங்கள் என்று அனைத்து நல்லது, கெட்டதுகளையும் பார்த்து, கேட்டு, உண்டு, மகிழ்ந்து, உறவு கொண்டாடி, இன்புற்று, சலித்து, சோர்ந்து, காலம் ஒரு நிதானத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் வயதல்லவா இந்த வயது? ஒரு மனிதன் உண்மையாக அனுபவித்து வாழும் காலமிது அல்லவா? வாழ்க்கையின் பொற்காலம் என்றுகூடச் சொல்லலாமே!

ஆனால் இதையெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே தொலைத்துவிட்டு, அம்மா தனி பறவையாகவே வாழ்ந்து விட்டாளே? அவளுடைய இழப்பை எப்படி, எதைக் கொண்டு, யாரால் ஈடு செய்யமுடியும்?

அவனை அறியாமலேயே விழியோரங்களில் கண்ணீர் பெருகியது. மூச்சும் திணறியது. வெகு சிரமப்பட்டே உறங்கினான்.

இன்று அம்மாவின் நினைவு நாள். காலையிலேயே கோயிலுக்குச் சென்று ஆத்மஜோதி ஏற்றினான். மனம் ஓரளவுக்கு சமாதானமடைந்தது.

புது வீட்டில் புதுமனைபுகு விழாவுக்கான ஏற்பாடுகள்          யாவும் வெகுசிறப்பாக செய்யப் பட்டிருந்தன. பட்டாடை, பாவாடை சட்டைகளில் இளஞ்சிறுமிகளும், சிறார்களும் கலகலவென்று வெள்ளி நாணயங்களை அள்ளி இறைத்தாற் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். பசுவும் கன்றும் அலங்கார மாலைகள் அணிந்து வீட்டுக்குள் செல்லத் தயாராக நின்றிருந்தன. கன்றுக்குட்டியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி செல்லமாக அசைந்து சிணுங்கியது.

பட்டு வேட்டியில் மாமனாரும், சிவப்பும் பச்சையுமான பட்டுச்சேலையில் மாமியாரும் வாசலில் நின்று வரும் விருந்தினருக்கு இன்முகம் காட்டி வரவேற்றபடி நின்றிருந்தனர். மாமனார் சற்று பரபரப்புடனேயே காணப்பட்டார். அடிக்கடி மேல் துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.

‘நல்ல நேரமெல்லாம் போய்க்கொண்டிருக்கிறதே! மாப்பிள்ளை இன்னும் யாருடைய வருகைக்காக நேரத்தைக் கடத்துகிறார்?’ என்று தனக்குளேயே கேட்டுக் கேட்டு மனம் சலித்துப் போனார்.

சுமார் அரைமணி நேரம் கடந்தது. வெளிப்புற வாசலில் ஒரு வாஜா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இளம்பெண்ணும், அவளைத் தொடர்ந்து இறங்கிய வாலிபனும் பதின்ம வயதில் இளைஞன் ஒருவனும் அவருடைய கவனத்தை ஈர்த்தனர்.

‘இவர்கள்…யார்?’ சில நிமிடங்களைச் செலவழித்து மூளையைக் கசக்கி ஒருவாறாகத் தெளிந்தார்.

 

 

 

 

‘இந்தப் பெண், முரளியின் தாய் குமுதாவின் விழிப்படலங்களைத் தானமாகப் பெற்ற அபிராமி!…அவர்? குமுதாவின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்ற மனோகர். அதோ….அவன், குமுதாவின் இருதயத்தைத் தானமாகப் பெற்ற திருவரசு!….ஓகோ, மாப்பிள்ளை இவர்களுக்காகத்தான் இவ்வளவு நேரமும் காத்துக் கொண்டிருந்தாரா?… சரி, சரி…’

மாமனார் தன் மனைவியையும் வைதேகியையும் அருகில் அழைத்து விபரத்தைச் சொன்ன அதே தருணத்தில், முரளி அந்த மூவரையும் நெஞ்சு கொள்ளா உவகையுடன் வரவேற்றான். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் உடலின் ஒவ்வொரு உரோமத் துவாரங்களும் உணர்ச்சிப் பெருக்கில் பொங்கிப் பரவசமடைய, தன் தாயே நேரில் வந்துவிட்டாற் போலத் தவித்தான். கரைந்தான். மகிழ்ந்தான்.

“வாங்கம்மா,… சார்,….தம்பி…. வாங்க!” என்று அன்பும் பாசமும் குறையாமல் அழைத்தவன், தனக்குள் ‘ வாம்மா…வந்து நான் கட்டியிருக்கும் வீட்டைப் பார். உன் கனவை நனவாக்கி விட்டேன். உன் இதயம் இப்போது குளிர்ந்ததா? என்னையும் என் மனைவியையும் என் குடும்ப மக்களையும் நீ ஆசீர்வதிக்க வேண்டும்.’ என்று உள்ளுக்குள் இறைஞ்சினான்.

அதேவேளை, மாமனாரும் அருகே வந்து கைகளைக் கூப்பினார்.

“வாங்கம்மா…இது உங்க வீடு..வாங்க…” என்று மன நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவர் அவ்வாறு அழைத்த விதத்திலேயே முரளியின் தேகம் சிலிர்த்தது. உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. மாமனாருக்கு தன்னுடைய உள்ளம் யாதென்று புரிந்து விட்டது. அதனால் தான் அவர், அவர்கள் மூவரையுமே ‘வாங்கம்மா’ என்று ஒரே வார்த்தையில் விளித்தார் போலும்.

அதேபோல, அவன் மனைவி வைதேகியும், கணவனின் உளப்பாங்கைப் புரிந்து கொண்டவளாக முன்னால் வந்து அவர்கள் மூவரையும் வணங்கினாள்.

பசுவும் கன்றும் வீட்டுக்குள் செல்ல, அதனைத் தொடர்ந்து பால்மணம் மாறா சிறார்களும் மகிழ்ச்சியுடன் பின்தொடர்ந்தனர். மங்களப் பொருட்களுடன் ஏனையோர் வீட்டுக்குள் செல்ல, அபிராமி வைதேகியின் கரம் பற்றி நடக்க,  மனோகரும் திருவரசும் முரளியை சகோதர வாஞ்சையுடன் அணைத்தவாறு பின்தொடர்ந்தனர்.

வெகு நாட்களுக்குப்பிறகு உள்ளத்தில் அமைதியும் நிறைவும் ஏற்படுவதை உணர்ந்தான் முரளி.

*கம்பம் = கிராமம்

எழுத்து

சித்தா Dr.என்.துளசி அண்ணாமலை,BSc,SMP,PMC.

சிரம்பான்

No: 484, Jalan Kemboja, Taman Marida

70450 Senawang, N.S.

Series Navigationவேழப் பத்து—11சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *